அவ்வப்போது என்னைத்தான் போட்டு படுத்துவாள். அவள் சொல்வதற் கெல்லாம் தலையாட்டுவதுதான் காரணம். , ' ஓடில்லாம் வர மாட்டேன்,இங்கியேதான் படுத்திருப்பேன்' என்ற எனது நிபந்தனை களுக்குட்பட்டு விளையாட்டை அமைத்துக்கொள்வாள். அதுவும், இந்த கதை நாடகம் ஒவ்வொரு சீசனுக்கும் மாறும், அவள் கேட்கும்/பார்க்கும் கதைகளைப் பொறுத்து. மேலும் சொந்த சரக்கும் சில நேரங்களில்.
சில சமயங்களில், ராணி கதைகளில் நான் தான் பிரின்சஸ். ஒரே ராணி. அது அவள்தான். 'எனக்கு பர்தே டே பார்ட்டி' என்றும், என்னை பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு அவள் 'ஆபீஸ் செல்லும் விளையாட்டு' (அந்த விளையாட்டில் நான் அழவேண்டும், அவள் "பை" "பை" என்று சந்தோஷமாக ஆபீஸ் செல்வாள், அவளை தொடர்ந்து வரும் என்னை விட்டுவிட்டு.) என்னை போர்வை அல்லது பெரிய துண்டு போட்டு மூடி அலங்கரித்து என்று ஒரு களேபரம் செய்வாள். "ஆச்சி, இப்போ என்ன விளையாடப் போறோம்?பிரின்சசசசசஸ்" என்று அவள் சொன்னாலே படுக்கையை விட்டு எழுந்து ஓடிப்போய் எங்காவது ஒளிந்துக்கொள்வேன். அந்த அளவுக்கு பிரின்சஸ் விளையாட்டு என்னை பயமுறுத்திவிட்டது. ஆனாலும், சளைக்காமல், அவள் பிரின்சஸ் விளையாட்டுக்கு மார்க்கெட்டிங் செய்வாள். 'இந்த கேம்ல, அது இருக்கும், இது இருக்கு, அடுத்த பார்ட்ல மாடில பிரண்ட்ஸ்...' பார்ட் 1 பார்ட் 2 என்றாலே கிலி!!

சில சமயங்களில், ஜங்கிள் அனிமல் விளையாட்டு. அதுவும் புலி/சிங்கம், குருவி கதை. தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தின் மீது குருவி விளையாடி எழுப்பி விடும். கோபம் வந்த குருவி அதன் பிடியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிவிடும். இதுதான் கதை. நான் தான் தூங்கிக்கொண்டிருக்கும் புலி/சிங்கம். என்மேல் வந்து விழுந்து விளையாடும் குருவி துரத்தி மிரட்ட வேண்டும். அதற்கு அவள் பயந்து ஓட வேண்டும். ஸ்ஸ்ப்பா!!
கொஞ்ச(ரொம்ப!!) நாட்களாக காணாமல் போயிருந்த இந்த விளையாட்டு நேற்று நினைவுக்கு வந்துவிட்டது,பப்புவுக்கு. திடீரென்று இந்த சதிவலையில் மாட்டிக்கொண்டேன். தூங்கவிடாமல், மேலே விழுந்து விழுந்து "கா" "கா" என்று கத்திக்கொண்டிருந்தாள் . 'ஹேய், அது காக்காவா? " என்று நான் சிரித்ததும், "இல்ல நான் மைனா..." என்று சொல்லிவிட்டு "மை மை " என்று கத்த ஆரம்பித்தாள். நான் சிரிப்பதை பார்த்ததும் அவளுக்கும் புரிந்துவிட்டது போல..சிரிப்பில் சேர்ந்துக்கொண்டாள். அப்புறம், பெரிம்மாவிடம் சென்று, 'ஆயா, மைனா எப்படி கத்தும்" என்று கேட்டுக்கொண்டிருந்தாள். :-)))