Tuesday, December 04, 2012

மசாலா தோசையும்,குற்றவுணர்ச்சியும்....

ஊரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம்.

இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என்ற யோசனை. எப்போதும் 'கை கொடுக்கும் கை'யான இட்லி மாவும் இல்லை. சமையலறையில் புகுந்து உப்புமா கிண்டுமளவுக்கும் தெம்பில்லை. சரி, வழியில் எங்காவது ரெஸ்டாரண்டில் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவாகியது.

பல இடங்களிலும் கடைகளை வியாபித்திருக்கும் ஒரு பவனின் கிளையில் நுழைந்தேன். ஞாயிறு மாலை. கூட்டம்....கூட்டம்..எங்கு நோக்கினும் கூட்டம்.  ஒரு வழியாக பார்சலுக்கு பில் வாங்கிக்கொண்டு சாப்பாடு கவுண்டரின் வரிசையில் இடம் பிடித்தேன்.

இட்லி காலி. இடியாப்பமும் இல்லை.

மசாலா தோசைக்கு சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்.

கவுண்டரிலோ , பரபரவென்று ஆட்கள் இங்குமங்கும் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள். இட்லியை கட்டுவதும், தட்டுகளில் சட்னி,சாம்பாரை நிரப்புவதுமாக - ஒரு நொடி கூட யோசிக்காமல்..வேறு யோசனை இல்லாமல் எதிரிலிருப்பவர்களின் ரசீதை பார்ப்பதும், அதற்கேற்றவாறு குரல் கொடுத்தவாறு தட்டுகளை கொடுப்பதுமாக. 'கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க' குரல்களுக்கும் பதில் கொடுத்தவாறு!

இதில் இரண்டு முகங்களைத் தவிர, மற்றவையெல்லாம் வட இந்திய/வடகிழக்கு இந்திய முகங்கள். 'இவர்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் இருக்கும்? நின்று நின்று வேலை செய்தால் இரவில் கால்கள் வலி பின்னுமே? இளவயதாக இருப்பதால், இப்போது தெரியாமல் இருக்கலாம். ஆனால்,  சில ஆண்டுகள் போனால்?  'என்றெல்லாம் எனக்குள் ஓட ஆரம்பித்திருந்தது. பார்வையை இந்தப்பக்கமாக திருப்பினேன்.

டேபிள்கள் எல்லாம் நிறைந்து இருந்தன. குழந்தைகளோடு குடும்பமாக சாப்பிட வந்தவர்கள், நண்பர்களோடு சாப்பிட வந்தவர்கள், பார்ட்டி கொடுக்க வந்தவர்கள்....இதனிடையே, அருகிலிருந்த பார்ட்டி ஹாலில் ஒரு குழந்தையின் இரண்டாம் பிறந்தநாள் விழா.  குர்தா,ஜிப்பாவுடன் அப்பாவானவர் பவ்யமாக நடை பயின்றுக்கொண்டிருந்தார்.

இதன் நடுவே ஒரு இளைஞர் பட்டாளம். ஆர்டர் தூள் பறந்துக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில், ஆர்டர் எதுவும் இல்லாமல், எல்லாரும் கவுண்டரில் நின்றனர் அவர்களுக்குள்ளாக சிரிப்பும் கும்மாளமும் லேசான குற்றவுணர்ச்சியுமாக. வேலையில்லாமல் சும்மா நின்றால் சூப்பர்வைசரின் பார்வைக்கு உள்ளாவோமோ என்ற குற்றவுணர்ச்சியாக இருக்கலாம் அது.

அதற்கேற்றவாறு, ஒரு சூப்பர்வைசர் ஒருவர் வந்து ஒருவரை அழைத்தார். 
'நீ இங்க வந்து நில்லு. வெளில பாத்துக்கோன்னா நிக்காம இங்க வந்து இருக்க இல்ல. இந்த டெலிவரிய பாரு. மூணு பிளேட் இட்லி கட்டு" என்றார். அந்த குறிப்பிட்ட இளைஞன் வெட்கமும் மாட்டிக்கொண்ட உணர்ச்சியோடும் அவர் சொன்ன  இடத்தில்  வந்து நின்று தட்டுகளை நிரப்பத்தொடங்கினான். 'நீங்கள்லாம் ஏன் சும்மா நிக்கிறீங்க, சட்னி, சாம்பாரை கட்டி வைங்க' என்றார் சூப்பர்வைசர். ஓரிருவர் பாலித்தீன் பைகளை எடுத்து நிரப்பத்தொடங்கினர்.

இதன் நடுவில், எனக்குரிய மசாலா தோசை வந்தது. வாங்கிக்கொண்டு  திரும்பினேன். டேபிள்கள் நிறைய பிளேட்டுகள் வழிய குடும்பங்கள் சிரிப்பும், கூச்சலுமாக உண்டுக்கொண்டிருந்தனர்.

ஆப்பத்துக்கு தனி கவுண்டர்.

ரசீதை பார்த்ததும், ஓரமாக நின்றிருந்த இளைஞன் அடுப்புக்கருகில் வந்தான்.  ஆப்பம் என்பது என்னை பொறுத்தவரை ஆயாக்கள்/வயதானவர்களோடு அசோசியேட்டட். அதாவது அவர்களுக்குத்தான் பொறுமையாக பக்குவமாக வரும் என்பதோடு அவர்கள் சுட்டுத்தான் கண்டிருக்கிறேன்.இங்கு வடகிழக்கு இளைஞனொருவன் வாணலியில் துணியால் நெய்யைத்தடவி மாவை ஊற்றி
லாவகமாக‌ சுற்றி, அடுப்பில் வைத்து இட்லி பானை மூடியால் மூடினான். 
பிளாஸ்டிக் தட்டை எடுத்து குருமாவை ஊற்றினான். ஒரு பாலித்தீன் பையில் தேங்காய் பாலை ஊற்றிக் கட்டினான். இட்லி மூடியை எடுத்துப்பார்த்துவிட்டு வாணலை சற்று சாய்த்து வைத்தான். சில நொடிகளில், வெந்துவிட்ட ஆப்பத்தை கையாலேயே சுழற்றி எடுத்து தட்டில் வைத்து மூடினான். பார்சல் ரெடி.

வீட்டுக்கு வந்து நெடுநேரம் ஆகியும், மனம், அந்த பவனின் பரபரப்பான இளைஞர் பட்டாளத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது.  நான் மட்டுமல்ல, அந்த டேபிளில் அமர்ந்திருந்த‌ குடும்பங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது  வாங்கிய இட்லி - தோசையை மட்டுமல்ல, எங்கிருந்தோ வந்த அந்த இளைஞர்களின் உழைப்பையும்தான்!  கவுண்டருக்கு இந்தப்பக்கமாக பளபளக்கும் வாட்சும், மொபைலும், லீவைஸ் ஜீன்சுமாக நின்றுக்கொண்டிருப்பது வெறும் திறமையினால் மட்டுமல்ல‌, அந்த இளைஞர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பையும் சேர்த்துத்தான்!!  இந்த குற்றவுணர்ச்சியின்றி அந்த மசாலா தோசையை அன்றிரவு என்னால் உண்ண‌ முடியவில்லை.

8 comments:

இனியா said...

Super!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நானும் அதைப் போல மன வேதனை பட்டதுண்டு...என்ன செய்வது?:((

குறை ஒன்றும் இல்லை !!! said...

இப்படியே ஃபீல் பண்ணா !

1. டீ, காபி குடிக்க குற்ற உணர்ச்சி வரும் ஏன்னா எஸ்டேட்டில் இருக்கும் கூலி தொழிலாளர் நிலை நினைச்சு !

2. சாப்பாட்டில் கைவைக்க ஃபீல் பண்ண வேண்டி வரும்.. விவசாயிகள் படும் கஷ்டம் நினைச்சு !

3. சரவணா ஸ்டோர் போன்றவைகளில் எதையும் வாங்க முடியாது !

எப்போ ரஷ்யா விண்வெளி பயணத்துக்கு ஆள் அனுப்பறாங்கன்னு பார்க்கணும் :)

Anonymous said...

\\வீட்டுக்கு வந்து நெடுநேரம் ஆகியும், மனம், அந்த பவனின் பரபரப்பான இளைஞர் பட்டாளத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. நான் மட்டுமல்ல, அந்த டேபிளில் அமர்ந்திருந்த‌ குடும்பங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது வாங்கிய இட்லி - தோசையை மட்டுமல்ல, எங்கிருந்தோ வந்த அந்த இளைஞர்களின் உழைப்பையும்தான்! கவுண்டருக்கு இந்தப்பக்கமாக பளபளக்கும் வாட்சும், மொபைலும், லீவைஸ் ஜீன்சுமாக நின்றுக்கொண்டிருப்பது வெறும் திறமையினால் மட்டுமல்ல‌, அந்த இளைஞர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பையும் சேர்த்துத்தான்!! இந்த குற்றவுணர்ச்சியின்றி அந்த மசாலா தோசையை அன்றிரவு என்னால் உண்ண‌ முடியவில்லை.\\

அதையே நினைத்து ஒரு வாரத்திற்கு சாப்பிடாமல் இருக்கலாமே..:)

ஆகா, எப்பேர்ப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பான பதிவு' அப்படின்னு அல்லாரும் பாராட்டுவாங்கன்னு எழுதின மாதிரி இருக்கு.

அவர்கள் வாய்ப்பை இழக்க வில்லை; தான் இருக்கும் இடத்தில் கிடைக்காத வாய்ப்பை வேறு இடங்களில் தேடி முன்னேற முயற்சிக்கிறார்கள்.

தமிழத்தின் பன்னாடை இளைஞர்களைப் போல சினிமாவிலும் பாமக,தாமக,கூமக என்று கட்சிகளின் பின்னாலும் தலைவர்கள் பின்னாலும் மூளைச்சலவை செய்யப்பட்டுச் செல்லும் ஆடுமாடுகளாக இல்லாதிருக்கிறார்கள்..

சந்தோசப்படுங்கள் அதற்கு !

Anonymous said...

அனானி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. அவங்க ஊரிலே அவங்க இந்த கூலியை நினைத்து கூட பார்க்க முடியாது. இங்கு நல்ல வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள். இதிலே குற்ற உணர்ச்சிக்கு என்ன வேலை??

மதுரை சரவணன் said...

ungkal unarvai mathikkiren..

மதுரை சரவணன் said...

ungkal unarvai mathikkiren..

துளசி கோபால் said...

உள்ளூர் இளைஞர்கள் யாரும் இந்தமாதிரி வேலைகளுக்கு வர்றதில்லையாம். எங்கே போனாலும் வடகிழக்கு இந்தியர்கள்தான் சென்னை உணவகங்களில்.

வயசுகூட அண்டர் ஏஜாக இருக்க வாய்ப்புண்டு. குழந்தைத் தொழிலாளர்களாக்கூட இருக்கலாம்.

பொதுவா இதைப்பற்றிக் கேட்டபோது, இலவசமா அரிசி எல்லாம் கிடைக்கும்போது என்னத்துக்கு டேபிள் துடைக்கும் வேலைக்குப் போகணும் என்கிறார்களாம்.

எந்த வேலை செஞ்சாலும், உழைச்சு சம்பாரிச்ச சொந்தக்காசில் சாப்புடறோம் என்ற தன்னம்பிக்கை வரும் இல்லையா?

டிக்னிட்டி ஆஃப் லேபர் என்று சொல்வது அந்தக்காலமா?

என்னவோ போங்க.........