எனது உறவினருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது. அவர் ஒரு அதலெடிக் வீராங்கனை. உயர்நிலை பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாகவும் வேலை செய்கிறார். இயற்கையாக பிரசவம் ஆகுமென்று நாங்கள் நினைத்திருக்க, சிசேரியன் செய்ய வேண்டியதாகிவிட்டது. இதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது அவரது அம்மா விவரித்தது ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இன்னும் என்னவெல்லாமாகவோ இருந்தது. டாக்டர் அந்த பெண்ணிடம் 'உனக்கு நார்மல் வேண்டுமா அல்லது சிசேரியனா' என்று கேட்டிருக்கிறார். இவர், நார்மலுக்கு முயற்சி செய்யப் போவதாகச் சொன்னதும், குறித்த தேதியில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துவிடுமாறு சொல்லியிருக்கிறார்.'முதலில் நார்மலுக்கு முயற்சி செய்வோம், அப்படி இல்லையெனில் ஆபரேஷன்தான் செய்ய வேண்டியிருக்கும்' என்றும் அவர் முதலில் சொன்ன சேர வேண்டிய நாள் செவ்வாய்க்கிழமையாக இருப்பதால் புதன்கிழமை அன்று சேரச்சொல்லியிருக்கிறார். 'புதன் மற்றும் வியாழனில் பிறந்து விட்டால் நலம். ஆனால், வெள்ளிக்கிழமை எனக்கு இரண்டு ஆபரேஷன்கள் உள்ளன. ஆனால் வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது? நீங்கள் யோசித்து சொல்லுங்கள்' என்றும் கேட்டிருக்கிறார். வெள்ளிக்கிழமை பொறந்துட்டா என்ன பண்றது, தூக்கியா போட்டுட முடியும்? அப்புறம் அவளுக்கு ட்ரிப்ஸ் ஏத்தி வலி வரலை...எட்டு மணி நேரம் பார்த்துட்டு 'கர்ப்பப்பை விரியலை, குழந்தை ஹார்ட்பீட் குறையுது' என்று வெள்ளிக்கிழமை மதியத்துக்கு மேல் ஆபரேஷன் நடந்ததாக அவரது அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.
மேலும், பிறந்தநேரம், நட்சத்திரம் குறித்து பேசுகையில், 'நல்லவேளை கொஞ்சம் கழிச்சு பிறந்திருந்தா மூலம் நட்சத்திரம், பெண்ணுக்கு ஆகாது' என்றெல்லாம் அவரது அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு சுத்தமாக இதில் ஆர்வம் இல்லாததால் அவர் சொன்ன அந்த நட்சத்திர விவரங்கள் புரிபடவில்லை. 'வெள்ளிக்கிழமை பையன் பொறந்தா என்ன பிரச்சினை ஆன்ட்டி?' என்றதற்கு 'ஆகாதுன்னு சொல்லுவாங்க' என்றார். 'அத்தனவாட்டி ஸ்கேன் பண்ணாங்க, ஆணா பொண்ணான்னு சொல்லலை.. அப்புறம், நல்லவேளை வெள்ளிக்கிழமை பொண்ணாப் போச்சு..' என்றும் சொல்லிக்கொண்டார். இத்தனை விபரங்களையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்குத்தான் நாம் எந்த கிரகத்தில் வசித்துக்கொண்டிருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது.
நேரம் பார்த்து, குறித்து ஆபரேஷன் செய்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தளவு மூடநம்பிக்கைகளுடன், நட்சத்திரம் பார்த்து குழந்தை பிறப்பை செய்கிறார்கள் என்பதை கண்கூடாகக் கண்டது அன்றுதான். இதிலிருந்து ஆரம்பிக்கும் இந்த 'நாள் நட்சத்திர சடங்குகள்', அதன்பிறகு தீட்டு கழித்தல், குழந்தைக்கு கண் பட்டது என்று ஏராளம் இருக்கும். இவ்வளவு பேசும் என்னாலேயே, மற்ற தீட்டு கழித்தல் போன்ற மூடநம்பிக்கைகளை தடுத்து நிறுத்தினாலும், என் அம்மாவும், மாமியாரும் சேர்ந்து எனது மகளுக்கு திருஷ்டி சுத்தியதையோ அல்லது திருஷ்டி பொட்டு இட்டதையோ குறைந்தது ஒரு வருடத்திற்கு தடுக்கமுடியவில்லை. இதில் மட்டும் என்றில்லை.. நம்மையறியாமலேயே நாம் இவ்வித பழக்கங்களுக்கு ஆட்பட்டு போயிருக்கிறோம்.
ஒரு மருத்துவர் முதலில் என்ன வகையான பிரசவம் வேண்டும் என்று கேட்பதே குற்றம். அதிலும் எப்போது பிறக்கும் என்று தெரியாதபோது அதற்கு நேரமும் காலமும் குறிப்பது என்ன வகையான லாஜிக்? இவற்றை ஊக்குவிப்பது எந்த விதத்தில் சரி? ஆனால், அந்த கைனக்காலஜிஸ்டை மட்டும் குறைசொல்லிவிட முடியுமா? அவரிடம் வரும் பலர் இது போன்ற நம்பிக்கைகளுடன் இருக்கக்கூடும். அந்த அனுபவம் தந்த பாடத்தால் முன்கூட்டியே இதனை சொல்லியிருக்கவும் கூடும். தொழில்முறை தர்மம் என்று இதனை அவர் நம்பியுமிருக்கலாம். ஆனால், பெண்களும் சரி, ஆண்களும் சரி இவ்வளவு மூடநம்பிக்கைகளுடன் இருக்க வேண்டுமா?
கொஞ்சம் நம்மை சுற்றியிருப்பவர்களைப் பார்த்தால், இதற்கு படித்தவர்கள் - படிக்காதவர்கள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது என்பது தெரிய வரும். கிளி ஜோசியத்தை கிண்டலடிக்கும் படித்தவர்கள் வாஸ்துவிடமும் ஃபெங்க் சூயிடமும், சீன வாஸ்துவிடமும் சரணடைகிறார்கள். பாரம்பரிய உணர்வு மிக்கவர்கள் நாடிஜோதிடத்தை, ஓலைச்சுவடிகளைத் தேடிச்செல்கிறார்கள். தனது பகுத்தறிவினால் இவற்றை மறுக்கும் சிலருக்கு இருக்கவே இருக்கிறது எண் கணித ஜோதிடம். இதில் எதுவுமே இல்லையென்றால் சன் சைன்/மூன் சைன். அறிவியல் உண்மைகளை கொண்டு போலித்தனமாக விளக்கப்படும் ஜெம்மாலஜி முதல் ஜோதிட பரிகாரங்கள் வரை - அவரவர் வசதிக்கும் வர்க்கத்திற்கும் ஏற்ற வகையில் இருக்கிறது பாதுகாப்புக் கவசங்கள்/குறுக்கு வழிகள். இருந்தாலும் இவை எல்லாம் லாப நோக்குக்காகவே, தங்களை மயக்கி பணம் பிடுங்கவே என்பதை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.
என்னதான் படித்து நாசாவில் வேலை செய்தாலும் பழனி மலை கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடித்தால்தானே நமக்கு திருப்தி.! உங்கள் ஜாதகத்துக்கேற்ற வண்ணத்தை சுவர்களுக்கு அடித்தால் தம்பதிகளுக்கிடையில் சமாதானம் நிலவுமாம் - எனில், இரு வேறு ஜாதகங்கள் இருந்தால் அறைக்கு எத்தனை வண்ணங்களை எப்படி அடிப்பார்கள்? இதைத்தாண்டி இன்னும் பல மூடநம்பிக்கைகள் இருந்தாலும், பெண்கள்தான் இம் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு போயிருக்கிறார்களென்றும் பெண்களை வைத்து மட்டுமே இந்த பிசினஸ் நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் என்றாலே நகை, ஷாப்பிங், அழகு பொருட்கள், கைவினை பொருட்கள் என்று ஸ்டீரியோடைப் செய்வது போலத்தான் இதுவும். நக்மா கிறிஸ்துவ மதத்தைத் தழுவுவதும், ஷில்பாஷெட்டி யோகா ஆசிரியராவதும் செய்திகளாகின்றன. இந்த தத்துவங்களை போதிப்பவர்கள்/ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள், நான் பார்த்த வரையில்.
ஆடி மாதமோ அல்லது ஏதோவொரு மாதத்தில் (ஆங்கில ஆகஸ்ட்/செப்டம்பர்) பல கோயில்களில் பெண்கள் வரிசை வரிசையாக அமர்ந்து எலுமிச்சை விளக்குகள் ஏத்தி குத்துவிளக்குடன் பூஜை செய்வதை பார்க்கலாம். ஒரு ஐயர் மைக்செட்டில் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருப்பார். மாங்கல்யம் நிலைக்கவோ/கணவனின் நலனுக்கோ/குடும்ப நலனுக்கோ ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு காரணம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும், அதே அளவுக்கு ஆண்களும் இந்த மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டுதான் இருக்கிறார்கள்.
ஒரு முறை ரயிலில் எனக்கு முன்னால் இருந்த இரண்டு பெண்கள் பேசிக்கொண்டிருந்ததில் முக்கிய விஷயமே இந்த ஜோதிடம்தான். பேசிக்கொண்டிருந்த ஒருவரின் மகளுக்கு 2011 இல் சுக்கிரன் நடக்கிறது, 2012 விட்டால் 2018இல்தான் கல்யாணத்திற்கு வரன் பார்க்க முடியும் என்பது போல. அதில் அவர் தனது மகளைக் குறித்து சொன்னது, "வெரி பயஸ்". மணமகள் ஆக பெண்ணுக்குரிய குடும்ப லட்சணங்களிலொன்று "பக்தியாக" இருப்பது. ஆன்மீக நாட்டம் பெண்களுக்கு இருக்கவேண்டிய முக்கியமானதொன்று என்றுதான் கற்பிக்கப்படுகிறது. 'பையனுக்கு கடவுள் பக்தி அதிகம்' என்று சொல்லி பொதுவாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புத்தாண்டை முன்னிட்டு, சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிரிக்கும் புத்தர் சிலைகளை பார்சல் அனுப்புகிறார்கள்.. வீடு கட்டும் பில்டர்கள் வாஸ்து மூலை பார்த்தே பீரோ வைக்கும் இடத்தையும் கழிப்பறையையும் தீர்மானிக்கிறார்கள். மீன்தொட்டிகள், குட்டி நீருற்றுகள், சீனத்து சுவர்சித்திரம், சமையலறையில் தொங்கும் திராட்சை கொடிகள், குபேரப் பூக்கள் என்று ஏராளம் இருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் ஒரு மிகப்பெரிய நிறுவனமே இதில் இயங்கி வருவது புலப்படும். இதில் எந்த நாட்டு கலாச்சாரத்தை புகுத்தினாலும் நமது மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரான மனநிலையிலேயே இருப்பது மற்றுமொரு சுவாரசியம். அதிலும் இதனை நம்புவர்கள் எல்லோரும் பாமரர்களும் அல்ல. சினிமா நடிகர்களிலிருந்து சயின்டிஸ்ட் வரையில் பரந்து விரிந்திருக்கிறார்கள். திருப்பதியில் சாமிக்கு தாலிக்கயிறு கழன்று விழுந்ததென்று தனது தாலிக்கொடியை மாற்றிக்கொண்டு வந்தார் எனக்குத் தெரிந்த அறிவியலாளர் ஒருவர். மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் உயர்பதவி வகிக்கும் பலரும் வருடாவருடம் திருப்பதிக்குச் சென்று வருபவர்கள்தான்.
அதுவும் பிரச்சினைகள் எதனால் என்று ஆராயும் மனநிலை போய் 'எம் சீல்'/ 'க்யிக் ஃபிக்ஸ்' போல எதை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்ற மனநிலைதான் அதிகரித்திருக்கிறது. அதற்காக எத்தனை ஆயிரங்களை செலவழிக்கவும், எதனை சொன்னாலும் நம்புகின்ற மனநிலையும் இருப்பது என்னதான் அறிவியல் வளர்ந்து பிரபஞ்சத்தை விளக்கினாலும் திரும்பவும் பூமி தட்டை என்பதுபோலத்தான் இருக்கிறது. அதிலும் இவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் எனர்ஜி, பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி, காஸ்மிக் எனர்ஜி என்று நாம் படித்த அறிவியலையே கேள்விக்குள்ளாக்குகிறது. (எனர்ஜிக்கு பாசிடிவ் - நெகடிவ் இருக்கிறதா?)

அறிவியலையும், ஆன்மீகத்தையும் போட்டு குழப்பி உணர்ச்சி ரீதியான தாக்குதலைத் தொடுக்கிறார்கள். 'வேவ்லெந்த்' என்றும் 'சக்ராஸ்' என்றும் அறிவியலையும், மதநம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் சாட் மசாலாவாக சேர்த்து கலக்கி விற்பனை செய்வதைக் காணலாம். அதிலும் இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்களைக் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டும். இல்லையேல் அதுவும் துரதிருஷ்டத்தையே கொண்டு வரும். அடுத்தவர்களுக்கு தயிர் கொடுப்பதிலிருந்து, பணத்தை எந்த நாளில் கொடுக்க வேண்டுமென்பதிலிருந்து... கிழிந்த துணியை தைப்பதற்குக் கூட நேரம் காலம் வகுத்து வைத்திருக்கும் நம்மக்களிடம் இதெல்லாம் விற்பனையாவது கடினமா என்ன? கோள்களையும், திசைகளையும் பற்றி அறிய ஜோதிடம் வழியல்ல, முறையுமல்ல என்பதை படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள்.
ஒரு நண்பர் வீட்டில் எங்கு திரும்பினாலும் ஒரு பொம்மையோ பூவோ கொடியோ ஏதோவொன்று இருந்தது. எதற்கு இதெல்லாம் என்றதற்கு, "அவருக்கு உட்கார்ந்த இடத்துலேயே பணம் வரணும். நம்ம பணம்தான், கஷ்டப்படாம வரணும்" என்று தன் கணவரது நம்பிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். எல்லோரும் புத்தர் சிலைகளையும், சீன எழுத்துகளையும், குட்டி குட்டி சிலைகளையும் வைத்துக்கொண்டால் போதுமே.. நாட்டில் அனைவரும் பசி பட்டினி இன்றி வளமாக இருப்பார்கள்தானே! உழைக்காமல் காசு வரவேண்டும் என்பது என்ன விதமான எண்ணம்? ஜோதிடம் மனித உழைப்பை கேவலப்படுத்துகிறது.! சோம்பேறியாக்குகிறது.!
வான அறிவியல் என்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் வழிமுறையல்ல, கோள்களை பற்றி அறியும் அறிவியல் நமது அன்றாட வாழ்க்கையில் அவற்றின் கதிர்வீச்சை குறித்ததும் அல்ல. முக்கியமாக பணம் சம்பாதிக்கும் வழி ஜோதிடத்தை நம்புவதிலோ பின்பற்றுவதிலோ அல்ல. (அதை பின்பற்றுவதால் ஜோதிட சிகாமணிகள் வேண்டுமானால் பணம் சம்பாதிக்கலாமே தவிர) அவற்றால் ஒரு பயனும் இல்லை - தங்கள் குடும்பத்து நலனோ குழந்தை பிறக்கும் நேரமோ, நாளோ எதையும் தீர்மானிப்பது இல்லை என்பதை நாம் அறிய வேண்டும். மதமும், மூடநம்பிக்கைகளும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்று உணர வேண்டும். (மனைவியின் நலனுக்காக ஏதேனும் விரதங்கள் கணவனுக்கு இருக்கிறதா?)
அன்பினால்தான் உறவுகள் கட்டமைக்கப்பட வேண்டுமேயன்றி பூஜை புனஸ்காரங்களாலோ அல்லது பரிகாரங்களாலோ அல்ல. வெற்றிகள் உழைப்பினால்தான் ஈட்டப்பட வேண்டுமேயன்றி ஜோதிடத்தை பின்பற்றுவது போன்ற குறுக்கு வழியால் அல்ல.
குறிப்பு: பொங்கல் தினத்தன்று தனது பயணத்தை துவக்கியிருக்கும் அதீதம் இணையஇதழில் வெளியானது.