Wednesday, January 12, 2011
உயிரைப் பணயம் கேட்கும் மெட்ரோக்கள்
ஒரு நாள் காலை, எட்டு மணி இருக்கும். பலநூறு அடிகள் மேலே, தூணின் ஓரத்தில் அமர்ந்தபடி வெல்டிங் வேலை செய்துக்கொண்டிருந்தார் ஒருவர். கண்களில் கருப்புக்கண்ணாடி. அதைத்தாண்டி வேறு எந்த பாதுகாப்பு கவசங்களோ உடைகளோ இல்லை. குறைந்தபட்சம் தலைக்குக் கூட ஹெல்மெட் போன்ற கவசங்களை அவர்கள் அணிந்திருக்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் மிகவும் சாவதானமாக ஏதோ சொன்னபடி அவரருகே உதவி செய்ய வந்தார். அவரும் எந்த விசேஷ பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை. பாதுகாப்பு குறித்த எந்த அச்சமும் இல்லாமல், ஒருவர் கம்பிகளை பிடித்துக்கொள்ள இன்னொருவர் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். பார்க்கும் யாருக்கும் வயிற்றில் சொரேர் நிச்சயம்!
ஒருநிமிடம், அவர்கள் நழுவினாலோ அல்லது சறுக்கினாலோ பிடித்துக் கொள்ளவோ, தடுக்கவோ ஏதுமில்லை. கீழே தார்சாலை. அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற தொப்பி வெயில்/மழையைத்தவிர வேறு எதற்கும் உதவாது.கரணம் தப்பினால் மரணம் போல்தான்.
அடுத்த சில வாரங்களில், அவர்கள் வெல்டிங் வேலையை இன்னும் சில தூண்களுக்கப்பால் நகர்த்திச் சென்றிருந்தார்கள். எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் கீழே இருந்தவர்களிடம் உரையாடிய போது, இந்த வேலை அவர்களுக்கு பழக்கமானது என்றும் அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்றும் அலட்சியமாக சிரித்துக்கொண்டே கூறினார். அந்த பீகார்/ஒரிஸ்ஸா இளைஞர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டம் இருக்குமா? அவர்களது அடிப்படை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாமல் நடக்கும் அசம்பாவிதத்தை விபத்தென்று சொல்ல முடியுமா? சிலியின் சுரங்கத்தில் நிகழ்ந்ததை, நோக்கியாவில் அம்பிகாவுக்கு நிகழ்ந்ததை விபத்தென்றுதானே சொல்கிறார்கள்!
அந்த பட்டியலில் கடந்த ஞாயிறன்று மும்பை- மாதுங்காவில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடத்தில் நிகழ்ந்த லிஃப்ட் 'விபத்தையும்' சேர்த்துக்கொள்ளலாம். ஐந்து தொழிலாளிகள் பலியாகி இருக்கிறார்கள். ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டிய நகராட்சி தலைவரும், பொதுப்பணித்துறையினரும், SRA அதிகாரியும் ஒருவரையொருவர் கைக்காட்டியபடி இருக்கிறார்கள். இதில் கொடூரம் என்னவென்றால், அது தற்காலிக லிஃப்ட் தொழிலாளிகள் உபயோகிக்க மட்டும். கட்டிடத்திற்குச் சொந்தமான லிஃப்டில், அங்கேயே வேலை செய்யும் தொழிலாளிகள் செல்லக்கூடாது போல!
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் செலவுகளில் மிச்சம் பிடிக்கலாம் என்ற முதலாளிகளின் லாபநோக்கும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதான அலட்சியம்தானே போபால் படுகொலைக்கு மூலக்காரணம்? அதே லாபவெறியும், அலட்சியமும்தான் மாதுங்கா கொலைக்கும் காரணம்.
இது எங்கோ யாருக்கோ நடந்ததுதானே என்று எண்ண வேண்டாம். இது போன்ற செய்திக்கு வராத 'விபத்துகளும்' மரணங்களும் எண்ணற்றவை. புதிது புதிதாக கட்டிடங்கள் முளைக்கும் நமது ஊரில் கூட கயிறால் கட்டிய ஏணிகளில் அமர்ந்துக்கொண்டு சுவர்களில் தொங்கியபடி வண்ணமடிக்கும் இளைஞர்களை பார்த்திருக்கலாம். மேலே இருப்பவர் அந்த கயிற்றினாலான ஏணியை பிடித்துக்கொள்ள நடுவில் இருக்கும் கட்டையில் எந்த பிடிமானமும் இல்லாமல் அமர்ந்துக்கொண்டு வண்ணமடிப்பார், இன்னொருவர். வண்ணமடிக்கும் பிரஷ் கூட தொழிலாளியே வாங்கிக்கொள்ள வேண்டிய நிலைதான் பெரும்பாலும் - இதில் அவரது பாதுகாப்பு குறித்து என்ன யாருக்கு என்ன கவலை? முறையான பாதுகாப்பு இல்லாமல்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளிகளை பிழிந்தெடுக்கும் இதற்குப் பெயர் "சுரண்டல்" என்றும் அழைக்கலாம் அல்லது "நகரமயமாக்கல்" என்றும் அழைக்கலாம்.
இப்படி உழைப்பை, உயிரை உறிஞ்சியெடுத்த பாலங்கள் மீதுதான் மெட்ரோக்கள் ஓடுகின்றன. சாலைகள் இணைக்கப்படுகின்றன.கட்டிடங்கள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன. நகருக்குப் பெருமையைத் தருகின்றன.
மலிவாகக்கிடைக்கும் மனித வளத்தின் வியர்வையில் நகரங்கள் ஜொலிக்கின்றன. வேலைவாய்ப்பென்று வருபவர்களை விட்டில்பூச்சிகளாய் கொல்கின்றன!
Monday, January 10, 2011
பப்பு டாக்(கீ)ஸ்
பப்பு. “ஆமா, சாப்பிடலைன்னா ஆக்டோபஸ் வரும், சின்ன வயசிலே சகுந்தலா ஆயாவுக்கு அப்படிதான வந்துச்சு..இல்ல ஆயா” என்றதும் சகுந்தலா ஆயா, ஜெர்க்காகி ‘எனக்கு ஏன் வருது, சாப்பிடாதவங்களுக்குதான் அப்டி வரும்!”

யார் கையை கட்டினாலும் ஆயாவும், பெரிம்மாவும் சொல்வது, ‘கைய கட்டாம பேசு’ என்பதுதான்.
பள்ளிக்குச் செல்ல துவங்கிய சில நாட்களில் பப்புவும் கைகளைத் கட்டத்தொடங்கினாள். ஆயாவின் தொடர் உபதேசத்தில் மறந்தும் போனாள். தற்போது பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நடப்பாள், எப்போதாவது. கேட்டால்,’ பிரேயர் முடிஞ்சி அப்படிதான் நடப்போம்’ என்பாள். உடற்பயிற்சி போல இருக்கிறது என்று நானும் விட்டுவிட்டேன். பிறகு, பெரிம்மா சொன்னது இது, ’ப்ரேயர் முடிஞ்சி போகும்போது ஒன்னை ஒன்னு ஏதாவது சீண்டிக்கிட்டு...கையை இழுக்கிறது, ட்ரெஸ்சை பிடிச்சு இழுக்கிறதுன்னு அட்டகாசம் பண்ணுவாங்களாம். அதுக்காக, இந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்லே இப்படி கையை பின்னாடி கட்டிக்கிட்டு க்ளாஸ் ரூம்க்கு போகச் சொல்லுவாங்களாம்’.

”ஆச்சி, எனக்கு பிஸ்கெட் எடுத்துக்குடேன்.”
”பப்பு, நான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன் இல்ல, நீயே போய் எடுத்துக்கோ!”
”ஏய், சிங்கம் எங்கியாவது நடந்து போய் பிஸ்கட் எடுத்துக்குமா?”
அப்போதுதான் கவனித்தேன், கட்டிலின் ஓரத்தில் நாலுகாலால் நடந்துக்கொண்டிருதாள்.
போர்வையை மூடியபடி எல்லா மிருகங்களும் அதனுள் இருந்தது. ஓ...எல்லா மிருகங்களையும் வரச்சொல்லி அடித்துச் சாப்பிடும் சிங்கம், பிஸ்கட் கொண்டு வரச்சொல்கிறது!

வெள்ளிக்கிழமை வீட்டுப்பாட புத்தகத்தை வேனிலேயே விட்டுவிட்டாள். ’ஏன், பப்பு, வேன்லே ஏன் நோட்டை எடுக்கறே, பையிலே வைக்க வேண்டியதுதானே’ என்றதற்கு ‘வெங்கடேஷ்தான் என் நோட்டை கேட்டான்’ என்றாள். ‘பார்த்துட்டு திரும்ப பையிலதான் வைச்சிருக்கணும், சரி, மண்டே, ஆண்ட்டிக்கிட்டே சொல்லு, வேன்லே நோட்டை விட்டுட்டேன், அதான் ஹோம் ஒர்க் எழுதலன்னு’ என்றேன்.
“ஹேய், எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு...மண்டே என்னை வேற ஸ்கூல்ல சேர்த்திடுப்பா!!”

பப்பு ஆயா..:-)

ஆச்சி, நான் மாடிலே ப்ளைட் பார்த்தேன்..அதுல ஆஃபிரிக்கா, ஜப்பான்னு எழுதியிருந்துச்சு...
!
யாராவது பார்த்திருக்கீங்களா?!
(அஃப்கோர்ஸ், அம்மாவுக்கு இது ஆச்சரியம் இல்லதான், ஏன்னா அம்மா, பப்பு வயசுலே இருந்தப்போ, ஏரோப்ளேன்ல போனவங்க, கயிறை மேலேருந்து தூக்கிப்போட்டு ஜன்னல் வழியா ஏறிவா, எங்க ஊருக்கு போகலாம்-னெல்லாம் கூப்பிட்டிருக்காங்களே!)
Thursday, January 06, 2011
லாஸ்ட் வாய் சாப்பிடறவங்களுக்கு...
கடைசியா மீதி இருக்கிறதை காலியாக்கணும்னறதுக்குதான் இந்த ஐடியாவை யாரோ கண்டுபிடிச்சிருக்கணும். தின்பண்ட மூட்டையை பிரிச்சாலோ இல்ல யாருக்காவது விசிட்டர்ஸ் வந்திருந்தாலோ - காக்காங்களை மிஞ்சிடுவோம் நாங்க எல்லோரும், பாசத்துல. ஹாஸ்டல்ல இருந்தவங்களாலே இதை நல்லா புரிஞ்சுக்க முடியும். ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீன்னதும் ஒரே சமயத்துலே தட்டுலே கையைவிட்டு என்ன கிடைக்குதோ பகிர்ந்து உண்ணறதை பார்த்தா காக்காங்க என்ன - அண்டங்காக்காங்களே பயந்து ஓடிடும். ஆனாலும், கடைசிலே மீதி இருக்கிற ஒருவாயை மட்டும் சாப்பிட ஆள் இருக்காது. ஏதோ ஒரு படத்துல. நண்பன் சாப்பிடட்டும்னு சீன் போடுவாங்களே அது மாதிரிதான். நீ எடுத்துக்கோயா இல்ல நீ எடுத்துக்கோயான்னு பாசம் நிக்கமுடியாம தட்டுத் தடுமாறிக்கிட்டிருக்கும்.
’லாஸ்ட் வாய் சாப்பிடறவங்களுக்கு நல்ல ஹஸ்பண்ட்'ன்னு ஒரு பழமொழிய கண்டுபிடிச்சதுலேருந்து இந்த லாஸ்ட் வாய்க்குத்தான் செம போட்டி. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குதே சென்டீ சீன்லாம் அதுக்கப்பறம் காலி. எல்லோரும் விளையாட்டுக்காகவாவது, 'எனக்குதான் நல்ல ஹஸ்பண்ட்'ன்னு சொல்லி கடைசியா இருக்கறதை சாப்பிடத்தான் செம போட்டி போட்டாலும் யாரும் ஹஸ்பண்டைப் பத்தி பெரிசால்லாம் கவலைப்படலை - எம்சிஏ கடைசி வருஷம் வரைக்கும்.
அதுக்கு அப்புறம்தான் நிறைய பேருக்கிட்டே நிறைய மாற்றங்கள்...ஹீரோ 'நீயெல்லாம் ஒரு பொண்ணா பொண்ணா லட்சணமாவா நடந்துக்கறேன்னு' பளார்ன்னு ஒரு அறை விட்டதும் அடுத்த நிமிஷமே ஹீரோயின் புடவை, பூ, பொட்டு சகிதம் குடும்பக் குத்துவிளக்கா மாறி நிப்பாங்களே! (கனவு சீன்/பாட்டுலதான் மட்டும்தான் குத்துவிளக்குக்கு குத்து அலவுட்!)அதே மாதிரிதான். புடவை கட்டி போட்டோ எடுத்துக்கிறது,விரதம் இருக்கிறது,சாமி போட்டோக்கு பொட்டு வைக்கிறதுன்னெல்லாம், சமையலறையில பூந்து ரணகளம் பண்றதுன்னு. எல்லாம் கல்யாணத்தை முன்னிட்டு... அடக்க ஒடுக்கமா மாறும் வைபவம்! அதுவரைக்கும் புர்க்காவே போடாம இருந்த ஷாஹினும் புர்க்கா போட ஆரம்பிச்சதும் அப்போதான். எவ்ளோ ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாலும்...நமாஸ் சத்தம் கேக்கும்போது மட்டும் துப்பட்டாவை தலைக்கு மேலே இழுத்துவிட்டுப்பா, ஷாஹின்.
ஷாஹின் தமிழ் முஸ்லிம். திண்டுக்கல் பக்கத்துலே ஒரு குட்டி ஊர் அவங்களுக்கு. அவங்க ஊர் பத்தி சொல்ல ஆரம்பிச்சாலே ரொம்ப சுவாரசியமா இருக்கும். அவங்க ஊர்லே யார் வீட்டுலேயும் கேபிள் டிவி கிடையாது(இப்போவும் அப்படியான்னு தெரியாது). இதுவரைக்கும் போலீஸே அவங்க ஊருக்குள்ளே நுழைஞ்சது இல்லே. அவங்க ஊர் முழுக்க இவங்க உறவினர்கள்தான். பொண்ணுங்க, காலேஜ் வந்து படிக்கறது ஒன்னு ரெண்டு பேருதான்.கண்டிப்பா புர்க்கா போடனும்னெலாம் இல்ல. புர்க்கா போட்டாலும் அது முழுசா கவர் பண்ற இருக்கமாதிரி இருக்காது.. அவங்க அக்கால்லாம் போட்டது இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க அம்மா மாதிரி வெள்ளை துணியை மேலே போர்த்திப்பாங்க. அவ்ளோதான். ஷாஹினோட அண்ணாதான் அதிகமா படிச்சவங்க. ஐஐடிலே மாஸ்டர்ஸ். அதோட ஒரு கம்பெனி ஆரம்பிக்கற ஐடியாலேயும் இருக்காங்க. அதனாலே கெமிஸ்ட்ரி படிச்ச ஷாஹினை இஷ்டம் இல்லாட்டியும் எம்சிஏ படிக்க சொல்லியிருக்காங்க. அப்படின்னெல்லாம்.....
காலேஜ், ஹாஸ்டல்னாலே நல்லா ஊர் சுத்தறதுதானே....அப்படி சுத்தும் போது ஷாஹின் புர்க்காவோடதான் வர ஆரம்பிச்சா. 'male gaze'-க்காகத்தான்னு ஆரம்பத்துலே நாங்களும் நினைச்சோம். ஆனா,இல்ல. அது, ’நற்குடி’ புர்க்கா. கேட்டப்போ, இந்த மாற்றம் எல்லாம் கல்யாணத்தை முன்வைச்சுதான்ற மாதிரி பதில் கிடைச்சது. சிலருக்கு பக்தியா...விரதமா...இருந்தது ஷாஹினுக்கு புர்க்காவா இருந்துச்சு.அவ்ளோதான்! ஒரு கட்டத்துலே இந்த வைரஸ் என்னையும் தாக்கினப்போ, அது ’தலைமுடி’யா இருந்துச்சு.யாராவது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்கன்னா, அம்மா முதல் நாள்லே இருந்தே ஆரம்பிச்சுடுவாங்க...’தயவு செஞ்சு தலைமுடிய க்ளிப் போட்டு கட்டு’-ன்னு. ஏம்மான்னு கேட்டா, எல்லாம் என்னோட நல்லதுக்காம்.
ஆறேழு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த நிலைமைன்னாலும் இப்போவும் பெரிசா மாறிடலைன்னு கல்யாணம் நிச்சயமான ஒரு நண்பர்கிட்டே பேசிக்கிட்டிருந்தப்போ - "கல்யாணத்துக்கு அப்புறம் நான் ஜீன்ஸ் போடமாட்டேன்னுதான் இவரே நம்புறாருன்னு' அவங்க சொன்னப்போதான் தெரிஞ்சது. "அவர் என்னை முதல்ல பார்த்ததே இப்படிதான்...ஜீன்ஸும் குட்டை முடியோடவும்தான்...பாக்கறப்ப மட்டும் நல்லா மாடர்னா பார்த்துப்பாங்க, அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களை பழங்காலத்துக்கு மாத்தவேண்டியது, இந்த தமிழ்நாட்டு பசங்களே இப்படிதான்." ந்னும் சொன்னப்போ என்னால ஒன்னும் சொல்ல முடியலை. பொமரேனியன் நாய்க்குட்டியை நினைச்சுக்கிட்டேன்.
ஆச்சர்யம் என்னன்னா அவங்க கல்யாணம் பண்ணிக்கப்போறது இதே சென்னையை சேர்ந்தவரைதான். இங்கேயே செட்டிலானவங்களைதான்.நானும் அபியும் என்ன நினைச்சுக் கிட்டிருந்தோம்னா, சிட்டில செட்டிலான குடும்பம்னா நம்மளை புரிஞ்சுப்பாங்க, இப்படில்லாம் நச்சு பண்ண மாட்டாங்கன்னு, நாமதான் தெரியாம தப்பு (!) பண்ணிட்டோம்னு. ஆனா, திவ்யா சொன்னதை கேட்டப்போ அதெல்லாம் மாயைதான்னு தெளிஞ்சுடுச்சு. அர்பிதா சொன்னது ஞாபகத்துக்கு வந்துடுச்சு. அர்பிதாவும் முரளியும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அர்பிதா மகாராஷ்டிரா. முரளி சென்னை பையன். ஒரே டீம். கல்யாணமாகிட்டா ஒரே டீம்ல இருக்க முடியாது, அந்த கம்பெனிலே.
ஒருநாள் அர்பிதா முழு நீள பாவாடை போட்டிக்கிட்டு வந்திருந்தா. அந்த கம்பெனில மாடிதான் நல்லா இருக்கும். பெங்களூர் வானிலை - மாடில காபி- ஃப்ரெண்ட்ஸ் கூட அரட்டை. அப்படி நாங்க ஒருநாள் பேசிக்கிட்டிருக்கும்போது அர்பிதாவும் எங்களோட இருந்தா. முரளி அவளை முறைச்சுக்கிட்டு பக்கத்துலே வந்து ஏதோ சொல்லிட்டு போனார். அவர் போனதும், அர்பிதா முகத்துல அப்பளம் சுட்டு எடுக்கலாம் போல இருந்தது. 'கல்யாணம் வரைக்கும் நாம என்ன போட்டாலும் நல்லாருக்கு நல்லாருக்குன்னு சொல்லுவாங்க. இந்த ட்ரெஸ் போட்டுட்டு வா, அந்த ட்ரெஸ் போட்டுட்டு வான்னு...உனக்கு ஷார்ட் ஸ்கர்ட் நல்லா சூட் ஆகுதுன்னு. கல்யாணத்துக்கு அப்புறம், these guys will start showing their true colors"ன்னு சொன்னப்போதான் அவர் என்ன சொல்லியிருப்பார்னு புரிஞ்சது. 'ஸ்கர்ட் போடாதேன்ன்னு சொன்னா கேளு, அப்படியும் போட்டுட்டு வந்தா இப்படி வெளிலே எல்லார் முன்னாடியும் வந்து நிக்காதேன்னு'-தான் சொல்லிட்டு போயிருக்கார்! (என்னதான் மோனிகா பெலூச்சியையும், நிகோல் கிட்மேனையும் ரசிச்சாலும், குடும்பம்னு வந்தா...)
கலாச்சாரத்தைக் காப்பாத்தவேண்டிய மந்திரக்கோல் எப்பவும் பொண்ணுங்க கையிலே - அதுவும் அவளோட நடை, உடை, பாவனைகளை பொறுத்துதான் இருக்கு. பெண்கள் உடுத்தற உடைலே கூட குடும்ப கவுரவம், மானம், வளர்ப்பு எல்லாம் கலந்து இருக்கு.பொண்ணுங்களுக்கு கல்யாணம்கிறது ஒரு அடையாளமான்னு தெரியலை..ஆனா, கல்யாணம் பொண்ணுங்களுக்கு பல அடையாளங்களை வழங்குது. தன்னோட ஐடன்டிடிக்காக இல்லாம கலாச்சார காரணங்களுக்காக மாறுதலை ஏத்துக்கிறது உண்மையான அடையாளமா? இது மாதிரி உடை விஷயத்துலேருந்து இன்னும் நிறைய விஷயத்துலே தன்னை மாத்திக்கிறவங்க நிஜமா விருப்பப்பட்டுதான் மாறுகிறார்களா? இல்லே, நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்டே எதுக்கு பிரச்சினைன்னு அமைதியா விட்டுக்கொடுத்துடறாங்களா?
கல்யாணமாகி விருந்துக்கு போறப்போ கண்டிப்பா புடைவை கட்டிட்டு போகணும்ன்ற சம்பிரதாயமே இருக்கு இல்லையா, பொதுவா! (கோயிலுக்கு போகும்போது புடைவை,தாவணியிலே போறமாதிரி. கோயிலுக்கும் புடைவைக்கும் என்ன சம்பந்தம்? பாரம்பரிய கலாச்சார லுக்தான் கடவுளுக்கு உகந்ததா?!)கல்யாணம்கிற நிறுவனத்துக்கு மட்டும் இது சொந்தம் இல்ல..பள்ளி, கல்லூரி நிறுவனங்களிலேயும் இது இருக்கே. சில வருடங்களுக்கு முன்னாடி அண்ணா யுனிவர்சிடிலே பொண்ணுங்க ஜீன்ஸ் டீ சர்ட்ல்லாம் போட்டுக்கிட்டு வரக்கூடாதுனெல்லாம் சொன்னாங்களே! டீச்சர்ங்கன்னா புடவைதான் கட்டணும்.ஏன்னா, புடவைதான் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு, மரியாதை, லட்சணம்...இதெல்லாம் ஆண்களுக்கு மியூச்சுவலி எக்ஸ்க்ளுசிவ்! ஏன் இந்த இரட்டைநிலை?
Monday, January 03, 2011
கிண்டர் ஜாயும் டாலர் ஷாப்பும்
கின்டர் ஜாய்.
இந்த பெயரை கேட்டதுமே இது என்னவென்று உங்களுக்கு புரிந்து விட்டதெனில் உங்கள் வீட்டில் ஒரு சுட்டி இருக்கிறதென்று அர்த்தம்.
கிண்டர் ஜாய் மட்டுமில்லை...சீட்டோஸ்,குர் குர்ரே, யம்மீஸ், லேஸ், ஹனி லூப்ஸ், சாக்கோஸ், நம்கீன்ஸ், ஃப்ராரோ ரோஷர், பிரிங்க்ல்ஸ் என்று ஏராளம் இருக்கின்றன. அதனோடு இவற்றை வாங்க வைக்க குழந்தைகளை கவரும் வண்ணம் பல விளையாட்டு பொருட்களும் - பிச்சுக்கு, கார்ட்டூன் கேரக்டர்கள், பென் 10 சீரிஸ், டெலி டப்பீஸ் சீரீஸ்....
நாம் வாங்கிக்கொடுக்காவிட்டாலும் பள்ளியில், வெளியில் என்று எப்படியாவது இந்த நொறுக்குத் தீனிகள் அறிமுகமாவதை தடுக்க முடிவதில்லை. குழந்தைகளுக்கான ஏதாவது நிகழ்ச்சி அல்லது பிக்னிக் என்று சென்றால் உணவு இடைவேளை என்றதும் எல்லாக் குழந்தைகளும் பையிலிருந்து எடுப்பது இவற்றில் ஏதாவது ஒரு பாக்கெட்டைத்தான்.பெற்றோர்களுக்கும் வேலை சுலபம். கடையில் வாங்கிக்கொடுத்தால் முடிந்தது. அதனோடு ஒரு தண்ணீர் பாட்டிலை விட ஃபான்டா, பெப்சியை கொண்டு வரும் குழந்தைகளே அதிகம். இந்த காட்சிகளை சர்வ சாதாரணமாக ஒரு சிறுவர் பூங்காவிலோ கடற்கரையிலோ பார்க்கலாம்.
ஆயாவின் மொழியில் சொல்வதென்றால் 'நாலு வாய்க்குக் கூட காணாத' அளவில், காற்றடைத்த பையில் போட்டு விற்பார்கள். விலை 5 ரூ பாக்கெட்டு முதல்.இவர்களின் டார்கெட்டுகள் விளம்பரத்தைப் பார்த்து அழுது அடம் பிடிக்கும் குழந்தைகள், அவர்களின் மத்திய தர பெற்றோர்.
முதன்முதலில் பப்பு சொல்லித்தான் கிண்டர் ஜாய் எனக்குத்தெரியும்.
விளம்பரங்களின் மகிமை!!
டாம் அண்ட் ஜெர்ரி
கிறிஸ்மஸ் மேரி
மேரா ஹா - ஹஹ்ஹா
மேரா ஜி - ஜிஜி
மேரா ஹா மேரா ஜி
கோகோ கோலா பெப்சி - என்ற பாடலை பப்பு பாடியபோது, அவளுக்கு பெப்சியும் தெரியாது, கோக்கும் தெரியாது என்று சொன்னால் நம்புவீர்களா? கோகோ கோலா பெப்சி என்று சொல்லும்போது குடிப்பது போல அபிநயித்துக்காட்டினாள். நான்கு வயதுக்குழந்தை ஸ்கூட்டி விளம்பரத்தில் வரும் மேட்ச்சிங் லிப்ஸ்டிக் போல - தனது உடைக்கு மேட்சிங்காக லிப்ஸ்டிக் வேண்டுமென்று கேட்டதைப் பார்த்தால் விளம்பரங்களின் தாக்கமும் எவ்வளவு விரைவாக குழந்தைகளை கவர்ந்துவிடுகின்றன என்பதும் புரியும்!
கிண்டர் ஜாயின் விலையை முதலில் பார்த்துவிட்டு, '30 ரூபாய்க்கு இதுல என்ன இருக்கு? இதை போய் யாராவது வாங்குவாங்களா' என்றுதான் நினைத்தேன். விரைவில் நான் நினைத்தது எவ்வளவு தவறு என்று புரிந்தது. விளம்பரத்தை பப்பு மட்டும் பார்க்கவில்லையே!
இந்த முட்டையை இரண்டாகப் பிளந்தால் ஒரு பக்கத்தில் கன்டென்ஸ்ட் மில்க் போல கொழகொழாவென்று ..அதனுள் சாக்லேட். மறுபக்கம் சிறு பிளாஸ்டிக் பாகங்கள். அவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வழிமுறைகள். எப்படியும் சூப்பர் மார்க்கெட்டுக்கு குழந்தைகளுடன் வரும் யாரும் இதை வாங்காமல் தப்பிக்க முடியாதளவுக்கு குழந்தைகளை தமது பிடியில் வைத்துள்ளனர் இந்த பன்னாட்டு வியாபாரிகள். (குழந்தைகளை அழைத்துவராவிட்டாலும் வாங்கிச்செல்லும் பெற்றோர் ஒருபுறம்.) இந்த கிண்டர் ஜாய் ஐரோப்பியத் தயாரிப்பு. உணவுபொருள் பற்றிய கட்டுப்பாடுகள் நிமித்தம் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதாக ஒரு வருடத்திற்கு முன்பு இணையத்தில் வாசித்தேன். ஆனால் இந்தியாவில் சூப்பர் ஹிட்.இந்த கிண்டர் ஜாயின் வெற்றியைப் பார்த்து, தற்போது ஜெம்ஸும் இதே வடிவத்தில் வருகிறது. உங்களுக்குத் தெரியாவிட்டாலும் உங்கள் குழந்தைக்குத் தெரிந்திருக்கக்கூடும். அதே 30 ரூ விலையில் பந்து வடிவத்தில் உள்ளே பொம்மையுடன். கிண்டர் ஜாயை பார்த்து சன்ஃபீஸ்ட் பிஸ்கட்டுகளின் உள்ளேயும் பொம்மைகள்.
அது மட்டுமா..குழந்தைகளுக்கு பிடித்த உணவு லிஸ்டில் முதலில் இடம்பிடிப்பது நூடுல்ஸ், ஃபுடுல்ஸ், கெல்லாக்ஸ் கார்ன் ப்லேக்ஸ்,ஹனி லூப்ஸ்,அமெரிக்க பாப்கார்ன் பொட்டலங்கள் என்று பல பண்டங்கள். குக்கரிலேயே செய்யலாம் என்றும் அப்பாவே சமைத்துத் தர முடியும் என்று பாப்கார்னுக்குக்கூட எத்தனை விளம்பரங்கள்! இப்போதெல்லாம், கடைகளில் எங்கும் நாம் சாப்பிட்டு வளர்ந்த மக்காச்சோளத்தை பார்க்கவே முடிவதில்லை. அடுக்கி வைத்திருக்கும் அத்தனை சோளங்களும் 'அமெரிக்கன் கார்ன்'. அது பத்தாதென்று வெளியில் ஆங்காங்கே ஸ்டால் போட்டு விதவித சுவைகளில் இதே சோளம். நாம் சாப்பிட்டு வளர்ந்த அந்த மக்காச் சோளத்தைப் போல இதில் மெல்வதற்கு அவசியமே இல்லை. அத்தனை மிருதுவாக இருக்கிறது.
அவர்கள் விளம்பரப்படுத்துவதைதான் நாம் வாங்க வேண்டும். உண்ண வேண்டும். குடிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக நம்மைக்கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன இந்த தீனிப்பண்டங்களின் சந்தை. பொழுதுபோக்கிற்காக வெளியில் செல்லும் ஒரு குடும்பம் குறைந்தது 20 ரூ 7 அப் பாட்டிலாவது வாங்காமல் திரும்புவதில்லை. சுண்டல், முறுக்கு, கடலை போன்ற உணவுகளை குழந்தைகளின் டப்பாவில் பார்க்கவே முடிவதில்லை. குழந்தைகள் நொறுக்குத்தீனியும், உணவு பண்டங்களும் இந்தியாவில் ஒரு பெரிய சந்தையை பிடித்து வைத்திருக்கின்றன. அதுவும், நமது குழந்தை மற்ற குழந்தைகளைவிட ஊட்டமும் அரை இன்ச்சாவது உயரமாகவும் இருக்க வேண்டும் என்ற பெற்றோர்கள் இவர்களின் பலியாடுகள். 90களின் நீங்கள் வளர்ந்தவர்களாக இருந்தால் போர்ன்விட்டாவிற்கும் (தன் கி சக்தி - மன் கி சக்தி!) பூஸ்ட்க்கும் (சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!) இடையில் நடந்த போட்டியை மறக்க முடியாது. தங்கள் குழந்தைகளை உயர்தட்டு குழந்தைகள் போல வளர்க்க வேண்டும் என்று விரும்பும் மத்தியவர்க்க பெற்றோர்கள், இவர்களைப் பார்த்து ஏங்கும் கீழ்தட்டு மக்கள் என்று சந்தைக்கு கொள்ளை லாபம்தான்.
அதைவிடுத்தால் இருக்கவே இருக்கிறது கேஎப்சி, மெக் டோனால்ட்ஸ், டோமினோஸ், பீட்ஸா ஹட் பீட்ஸா கார்னர்,மேரி பிரவுன் ,காஃபி டே. இதில் டிக்கா பீட்ஸா செட்டிநாடு பீட்ஸா வகையறாவெல்லாம் கூட கிடைக்கும். ஆனால் விலையை மட்டும் கேட்டுவிடாதீர்கள்...ஒரு பீட்ஸா தோராயமாக 350 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும். பர்கர், சான்ட்விச் 75 ரூபாயிலிருந்து, தோராயமாக. குடிக்க தண்ணீர் கொடுப்பார்களாவெனத் தெரியாது. ஆனால் குடிக்க கோக்/பெப்ஸி தான் சிறந்தது என்று உங்கள் வீட்டு வாண்டு கூட சொல்லும். அது மட்டுமா, கூட அதிகப்படியான டாப்பிங்ஸ், அதற்கு முன்னால் உண்ண, பின்பு உண்ண என்று ஏராளம் இருக்கிறது, பர்சுக்கு வேட்டு வைக்க.
வேளச்சேரியில் எஃப்சியும் மெக்டோனால்ட்ஸும் வந்ததிலிருந்து வாரம் ஒரு முறை இங்கு ஏதாவதொன்றிற்கு சென்று வருவது நடுத்தர வர்க்கத்தினரிடையே ஃபேஷனாக இருக்கிறது. 'இந்த சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று உணவருந்தினோம்' என்று சொல்வது பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஊருக்குப்போனால் அல்லது தவிர்க்க இயலாத நேரத்தில்தான் வெளியில் சாப்பிடுவது என்று வளர்ந்த தலைமுறை, இன்று சாப்பிடுவதற்காக வெளியில் செல்கிறது.செலவு என்றும் 'அதே காசுக்கு வீட்டுலயே அழகா செஞ்சு சாப்பிடலாம்' என்றும் அலுத்துக்கொள்ளும் பெற்றோர் ஒரு சிலர்தான்.
குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இதுபோன்ற உணவகங்களில் நடத்துவது அடுத்தது. தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று பல்வேறு திட்டங்களில் உணவுகளை வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தருகிறது இந்நிறுவனங்கள். குழந்தைகள் சறுக்கி விளையாட, பந்துகளில் குதித்து விளையாட சாதனங்கள், சமயங்களில் ஏதாவதொரு கார்ட்டூன் கேரக்டர் வேடமணிந்த ஒருவர் என்று ஒவ்வொரு குழந்தையும் தனது பிறந்தநாளை இங்குதான் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை/ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது, இந்த உணவகங்கள்.
இவை எல்லாமே நமது நலனையோ குழந்தைகளின் நலனை நோக்கமாகக் கொண்டு இயங்குவதல்ல. லாபமே நோக்கு. மொத்த சந்தையும் தன் கையில் இருக்கவேண்டும் என்ற அராஜகம். இதற்கு ஒவ்வொரு கம்பெனியும் தனது தயாரிப்பைச் சந்தைப்படுத்துமுன் தெளிவாக திட்டமிட்டு, உழைத்து, சர்வேக்கள் நடத்தி, போட்டி கம்பெனிகளை அவதானித்துதான் இறங்குகின்றன. அதாவது, இவ்வளவுதான் உற்பத்தி செய்யவேண்டுமென்று நினைப்பதில்லை. இருக்கும் மொத்த சந்தையையும் கையகப்படுத்துவதுதான் இவர்களின் முழுநோக்கம். குழந்தைகளும் தங்களை அறியாமலேயே இந்த நுகர்வு கலாச்சாரத்திற்கு ஆட்படுகின்றனர் என்பதுதான் மிகப்பெரிய சோகம்.நமது குழந்தைகள் சந்தையின் பொம்மைகளாக மறைமுகமாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனபதும் நாமறியாத உண்மை.
தாராளமயமாக்கலும், சந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டதன் பலனும் நமது அன்றாட வாழ்க்கையில் எதிரொலிப்பதை உணர வேண்டும்.ஏதோவொரு கான்ஃப்ரன்ஸ் அறைகளில் அமர்ந்துக்கொண்டு நாமும் நமது குழந்தைகளும் என்ன உண்ண வேண்டும் என்றும் அருந்த வேண்டும் என்று தீர்மானிப்பது அன்னியர்கள். இதில் எதுவுமே இந்திய தயாரிப்பு கிடையாது. பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள்.
இந்நிறுவனங்களின் அசுரப்பசிக்கு பலியாவது குழந்தைகளும்,வெளிநாட்டு மோகத்தில் வளர்க்க ஆசைப்படும் பெற்றோர்களும்தான். முதலில், விளம்பரங்களின் மூலம் நம்மைக் கவர்வது (பெற்றோராக) அதில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துகள். அடுத்து அதன் அளவு. பின்னர் அதனோடு வரும் இலவசம் அல்லது என்ன லாபம். (பைசா வசூல்!) குழந்தைகளுக்கோ, சாக்லேட் அல்லது நொறுக்கு சுவை, பிடித்த வண்ணத்தில்...அதனோடு ஒவ்வொரு முறையும் வாங்க வைக்க அவர்கள் தரும் விதவிதமான பொம்மைகள். ஏன் அவர்கள் ஒரே பொம்மையைத் தருவதில்லை? கிண்டர் ஜாயை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு முட்டையிலும் ஒரு பொம்மை இருக்கிறது. ஒரே பொம்மை இரண்டு முறை பெரும்பாலும் கிடைப்பதில்லை. (90களின் பிக் ஃபன்னின் ரன் அட்டைகளும் - எவ்ரிடே பேட்டரியின் கவரை அனுப்பினால் அவர்கள் அனுப்பும் சிவப்பு நிற கழுத்தணி!)
சென்னையில் தற்போது தொடர்ச்சியாகத் துவங்கப்படும் 'டாலர் ஷாப்'களை பற்றிய அறிவிப்பு பலகைகளை அங்கங்குக் காணலாம். எந்த பொருளை எடுத்தாலும் ஒரு டாலரின் விலை..அதாவது ஐம்பது ரூபாய் மற்றும் வரி.ஜூஸ் பாட்டில்களை, சாக்லேட் சிரப்புகளை அடுக்கி வைத்திருப்பார்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். சமயங்களில் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம். எப்படி கட்டுபடியாகிறது? அந்த டப்பாக்களின் இறுதித்தேதியில் இருக்கிறது விடை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றால் அதன் இறுதித் தேதிக்கு ஒரு மாதம் இருக்கிறது என்று பொருள். இரண்டு இலவசம் என்றால் இன்னும் ஒரு வாரமே இருக்கிறது என்று பொருள். தங்கள் நாட்டில் செல்லுபடியாகாததை, விற்காததை இங்கு திணிப்பதற்கு பெயர் என்ன? யாரும் வாங்கவில்லையெனில் தூக்கிப்போடாமல் அதையும் சந்தைப்படுத்தி லாபம் பார்ப்பதற்கு நமது அரசும் உடந்தையாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
Saturday, January 01, 2011
வேளச்சேரி டைம்ஸ் : ஹாப்பி நியூ இயர்
எங்கள் வீட்டிற்கு எதிரிலேயே புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் இடைவேளை இல்லாமல்..விடுமுறைகள் இல்லாமல்...நேரங்காலம் இல்லாமல். பகலில் சுவர்கள் எழுப்பப்படுமென்றால் இரவில் சில பல விநோத மெஷின்கள் வரும். அல்லது ட்ரில்லிங் ஆரம்பித்திருக்கும். ஜல்லிகள் வந்து இறங்கும். ஓய்வில்லாமல் இயங்கும் ஒரு பேக்டரி போல கட்டிட வேலைகள் நடந்துக் கொண்டேயிருக்கும். நேற்றிரவும், புத்தாண்டுக்கு முதல் நாள் இரவும் லைட்கள் வெளிச்சத்தை உமிழ ஆந்திராவிலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வந்த அம்மக்கள் தலையில் துண்டை கட்டியபடி வேலை செய்தவண்ணம் இருந்தனர். அவர்களுடன் சாலையை அங்குமிங்கும் விரையும் வாகனங்களை வெறித்துப் பார்த்தபடி சிறு பிள்ளைகள்...அவர்களது குழந்தைகளாக இருக்க வேண்டும். வானத்தில் பூவாய் விரியும் வண்ணப்பட்டாசுகளை பார்க்க கூச்சலுடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.
மொபைலில் சில மெசேஜ்கள் வந்த சப்தம். 2011....புத்தாண்டு வாழ்த்துக்கானவைகளாக இருக்கக்கூடும்.ஹாப்பி,ப்ராஸ்பரஸ்,புதிய துவக்கம்....இன்னபிற!
காம்பவுண்டுக்குள் நுழைந்த போது கேட்டை திறந்து வெளியேறினார் அண்ணாமலை அண்ணா. எங்கள் காம்பவுண்டிலேயே இயங்கும் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்பவர். "என்னண்ணா, வீட்டுக்கா, நாளைக்கு லீவா? என்றேன். "ஆமாம்மா, நாளைக்கு எதுக்கு லீவு. ஞாயித்துக்கிழமை கூட இருக்கே, லீவு போட்டா சம்பளம் புடுச்சிக்குவாங்க" என்றார். அவர் வாங்கும் இரண்டாயிரத்து இருநூறில் ஒருநாள் சம்பளம் கட்டானால்....
அந்த இரண்டாயிரத்து இருநூறுக்கு இந்த நகரத்தில் எப்படி வாழ்ந்துவிட முடியும்? அல்லது என்ன வாங்கிவிட முடியும்? வானில் பார்த்த வாணவேடிக்கைகள் ஒருவேளை அவரது சம்பளத்தின் மதிப்பிருக்கலாம்.
அப்போதுதான் எனக்கு காய்கறிகளை நிறுத்து போட்ட அக்காவிடம் புத்தாண்டைப் பற்றி விசாரித்திருந்தேன். "என்ன அக்கா, நியூ இயர்ல்லாம் வந்துடுச்சா?" என்றதற்கு "நமக்கெல்லாம் என்ன நியூ இயர், அதெல்லாம் காசு இருக்கவங்களுக்குதான்!" என்றார் எடுத்துவைத்த காய்கறிகளை எடை போட்டபடி.
இந்த வருட பங்குசந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம், 120 புள்ளிகள் உயர்ந்து. மேலும், ஆசியாவிலேயே சிறப்பாக செயல்பட்ட பங்குசந்தை நமது மும்பை பங்கு சந்தைதானாம். இது இந்திய வளர்ச்சியை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறதாம். (செய்தி)
ஆம், வளர்ச்சிதான். கடந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 17368. சென்னையில் மட்டும் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை 40500 என்று ஒரு தொண்டு நிறுவனம் கணித்திருக்கிறது. இங்குதான் பலநூறு குடும்பங்களுக்கு ஒரு கழிவறை இருக்கிறது. ஆப்பிரிக்காவை விட இந்தியாவில்தான் பட்டினி சாவுகள் அதிகம்.தாமிரபரணி தண்ணீரை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து குடிநீருக்கு அலையும் மக்களும் இங்குதான் அதிகம். 43% (5 வயதிற்குக் குறைந்த) குழந்தைகள் வயதிற்கேற்ற எடையில் இல்லாமல் எடை குறைந்து காணப்படுகின்றனர். இந்தியாவில் குழந்தை இறப்பில் 50% ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. எல்லாமே வளர்ச்சியின் பெயரால்தான்.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதும் எனக்குப் பின்னால் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது வெடிச்சத்தம்.
43% என்பவர்கள் யார்? 50% என்பவர்கள் யார்?

ஒன்றரை லட்சம் செலவு செய்து உயர்ரக நாய் வாங்கி வளர்க்கும் குடும்பங்களின் மத்தியில் இதே வேளச்சேரியில்தான் அந்தக் குழந்தைகள் வாழ்கின்றனர். என்ன, நமது கேட்களை தாண்டி....நின்றுக் கொண்டிருக்கின்றனர். இதுவும் ஒரு "வளர்ச்சிதான்"
ஹாப்பி நியூ இயர், மன்மோகன்...ஹாப்பி நியூ இயர், சிதம்பரம்...
Friday, December 31, 2010
பொண்ணும் பொன்னும்
”என் பொண்ணு உடம்புலே ஒரு பொட்டு தங்கம் பட விட மாட்டேன்’ என்று பெரிம்மாவையும் அம்மாவையும் வளர்த்தாரம் தாத்தா. ஒரு கட்டத்தில் உறவினர்களின் 'நை நை' தாங்காமல் பியூசியின் போது குத்த வேண்டியிருந்திருக்கிறது.
அதனால்தானோ என்னவோ, என்னையும் அப்படி வளர்க்க ஆசைப்பட்டார் பெரிம்மா.கல்யாணி கவரிங் விளம்பரம் பார்த்து அதிலிருக்கும் டிசைன்களை வரைந்துக் கொடுத்து அது போலவே நகை செய்துப் போட்டுக்கொள்ளூம் உறவின அக்காக்களுக்கு மத்தியில் இப்படி வளர்வது கொஞ்சம் சிரமம்தான். ஏன் காது குத்தவில்லை என்று கேட்பவரிடம் ‘இந்திரா காந்தி மாதிரி நானும் காது குத்திக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறேன்.பெரிம்மாவின் கவசத்தால் காது குத்திக்கொள்வதிலிருந்து தப்பித்திருந்தேன். அதோடு, "ஆச்சிக்கு குட்டி காது, தாங்காது" என்றும் ஒரு சாக்கு இருந்தது.
மேலும் நகை மீது ஆசை எல்லாம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஃபேன்சியான பொருட்கள் மீது பிரியம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும், கவுனில் கொலுசின் சலங்கைகளை பின் குத்தி 'சலங் சலங்' ஓசையுடன் நடக்க ஆசைப்பட்டிருக்கிறேன்.சுஜா அக்காவுடன் சேர்ந்து ’கிரிஸ்டல் கொலுசு’ (அப்போது அது ரொம்ப ஃபேமஸ்) நாங்கள் மட்டும் கடைக்குப் போய் வாங்குவது என்றெல்லாம் திட்டம் தீட்டியிருந்தோம். அதைத்தாண்டி பெரிதான ஆசைகளெல்லாம் இல்லை. இத்தனைக்கும் எனக்கு கொலுசெல்லாம் அணிவித்ததும் இல்லை. அணிந்தது இல்லை. "எல்லோரும் காது குத்தியிருக்காங்க, ஏன் எனக்கு குத்தலை" என்றும் வீட்டில் கேட்டதில்லை.
தீபாவளி லீவுக்கு வடலூர் சென்றிருந்த போது பெரிய மாமா சண்டை போட்டு கொல்லரிடம் என்னை அழைத்துச் சென்று காது குத்தி அழைத்து வந்தார். நான் காது குத்தாமல் இருந்தால் மாமாவுக்கு இழுக்கு போல.
கல்லூரியில் என்னைத்தவிர எல்லோரும் செயின் அணிந்திருந்தனர். வாணி, முதல் செமஸ்டர் முழுதும் செயின் அணியச் சொல்லி பலவித அட்வைஸ் செய்வாள். “நாம செயின் போடலைன்னா நம்ம அம்மா அப்பாக்குதான் இழுக்கு” - "கல்யாணம் ஆனா செயின் போடாமயே மொட்டையா(!) இருக்கப் போறியா” - “செயின் போட்டாதான் ரிலேஷன்ஸ்கிட்டே நம்ம அம்மா அப்பாவுக்கு மரியாதை இருக்கும்” என்றெல்லாம். அப்போதெல்லாம் எனது பதில், ‘நானே சம்பாரிச்சு வாங்கி போட்டுக்குவேன்’. இதே வாணிதான், “நான் திடீர்ன்னு செத்துட்டா செயினை மட்டும் எப்படியாவது எடுத்துட்டு போய் எங்கம்மாக்கிட்டே சேர்த்துடுவேன்” (இப்பொது நினைத்தால் - எகொசஇ!!) என்றும் சொல்லுவாள்.
எனது முதல் சம்பளத்தில் ஒரு மெல்லிய செயினும், அதனினும் மெல்லிய பிரேஸ்லெட்டும் வாங்கி தந்தார் பெரிம்மா. ஆனால், நகை மீது பெரிய ஈர்ப்பெல்லாம் இல்லை. கல்யாணத்தின்போது அம்மா நகைகள் வாங்கிய போது அந்த காசை என்னிடம் கொடுத்து விடுமாறு நச்சரித்தேன். ஆனால், யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
இப்போ இந்த பேகான் ஸ்ப்ரேவுக்கெல்லாம் என்ன அவசியம் என்றால்..... எல்லாம் பப்புதான் காரணம்.
இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டதென்றாலும் நான் எதிர்கொண்ட அதே கேள்விகளை என் மகளும் எதிர்கொள்கிறாள். 'அதெல்லாம் ஒரு விஷயமா' 'இதுக்கு இவ்ளோ இம்பார்டன்ஸ் இருக்குமா' என்று எண்ணி, மாறியிருக்கும் என்று பார்த்தால், காது முழுக்க குத்திக்கொள்வதுதான் இப்போது ஃபேஷனாக இருக்கிறது. சிறு இடத்தைக் கூட விட்டுவைக்காமல்...இதற்கும் வாஸ்து இருக்கும் போல!
அதற்கேற்றவாறு வைரம் வைத்து கூட வளையங்கள், கம்மல்கள் வருகின்றன.
ஏற்கெனவே பப்புவுக்கு காது குத்திய காதையை இங்கு என் அம்மா எனக்கு செய்ததில்... , காது குத்திய காதை!! எழுதியிருக்கிறேன். சற்றே பெரிய கம்மல்களை யாராவது அணிந்திருப்பதைப் பார்த்தால் காது வலிக்கும் என்று அவளாகவே சொல்லிவிடுகிறாள். ;-)
ஏன் இன்னும் காது குத்தலை என்று அவளை புதிதாக பார்ப்பவர்கள் கேட்கும் போதெல்லாம் நான் சொல்லும் பதில் யாருக்கும் உவப்பாக இருப்பதில்லை..
பப்புவை கேட்டாலோ, "காது குத்தினா எனக்கு வலிக்குது" என்று சொல்லிவிடுகிறாள். சமயங்களில் "ஏன் எனக்கு காது குத்த மாட்டேங்கறே" என்று எங்களிடம் கேட்பாள். பிறகு மறந்துவிடுவாள்.
அதற்காக பப்புவுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லையென்று இல்லை. மேக்கப்,நெய்ல்பாலிஷ் போடுவதில், ஃபேன்சி வளையல்கள், மாலைகள் மாட்டிக்கொள்வதில் மிகவும் ஆர்வம்.நானும் வாங்குவதில்லை என்றாலும் இரு பக்கத்து ஆயாக்கள், மாமாக்கள்,சித்தப்பா அவளுக்கு வாங்கித் தருவதை அணிவதை தடுப்பது இல்லை. அவளாகவே உணர வேண்டும் என்பதுதான் நினைக்கிறேன். நகை ஆசை இல்லாமல் வாழ வேண்டுமென்பதுதான் நோக்கம்.
இன்றைக்கு நான் பார்க்கும் பல பெண்களும் கல்யாணத்துக்கு முன் ஃபேஷனுக்காக வளையல் அணிவதில்லை. பிளாஸ்டிக் ஃபேன்சி காதணிகளை அணிகிறார்கள். ஆனால், கல்யாணத்துக்குப் பின் முற்றிலும் தலைக்கீழ்.
சில வருடங்களுக்கு முன்பு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது, மூன்றாவது படிக்கும் அவரது மகளின் விருப்பத்திற்காக அவளது ஆசைக்காக விலையுயர்ந்த காதணிகளை வாங்கியிருந்தார்கள்.ஆச்சரியமாக இருந்தது. பெண்ணை ஏன் நகை ஆசையுடன் வளர்க்க வேண்டும் அல்லது அவ்வாறு ஆசைப்படுவதை ஏன் கண்டிக்கவில்லை என்று தோன்றியது.கேட்கவில்லை. பொதுவாக, 'தங்கம் என்னைக்குன்னாலும் வேணும்' - 'கல்யாணம் காட்சிக்கு ஆகும்' என்பதுதான் சொல்லிக்கொள்ளும் சமாதானம், இல்லையா?
அதுவும் நகைக்கடைகளில் மாதம் இவ்வளவு சேமித்தால் ஒரு வருடம் கழித்து சலுகைகளுடன் வாங்கிக் கொள்ளலாம் என்பது இன்னொரு தூண்டில். இதை நம்பி இதிலெல்லாம் இன்வெஸ்ட் செய்வார்களா யாராவது என்றெண்ணினால் உண்மை வேறாக இருக்கிறது. பல பெண்கள் மாத தவணைகளில் அதில்தான் சேமிக்கிறார்கள்.நகைகள் வாங்குகிறார்கள். தி.நகரின் கடைகளிலும், வேளச்சேரியின் கடைகளிலும் நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்படி பணம் கட்டுபவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கம்தான். நடு மத்தியதர வர்க்கம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.மாதம் முழுதும் உழைத்து பெற்ற தொகையில் மூச்சை இழுத்து பிடித்து 'என்றாவது ஆகும்' அல்லது 'எப்போதாவது ஆகப்போகும் மகளின் திருமணம்' என்ற காரணங்களுக்காக.....வெற்று ஜம்பத்துக்காக.
இதில் நகைக்கடைகளுக்கும் கொள்ளை லாபம். முன்கூட்டியே வரவு வைக்கப்படும் தொகை வட்டியில்லாத வரவுதானே!
அப்படி ஏன் நமக்கு நகை மீது ஆசை இருக்க வேண்டும்? நுகரும் ஆசையை நாமே உண்டாக்க வேண்டும்? மருத்துவ காரணங்களுக்காக அல்லது நரம்பு தூண்டலுக்காக என்று நம்பினால் காது குத்துவதோடு மட்டும் விட்டு விடலாமே! நமது மதிப்பு நிச்சயம் நாம் அணியும் நகையில் இல்லை என்பதை உணர வேண்டும்.
Saturday, December 25, 2010
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

கடந்த மார்ச் 8 - உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி தங்கள் படைப்புகளை அனுப்புமாறு பதிவர்களிடம், வினவு தளம் அழைப்பு விடுத்திருந்தது. வினவு தளத்தில் வெளியான அந்த படைப்புகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட இருக்கிறது.
வரும் ஞாயிறு மாலை கீழைக்காற்று பதிப்பகத்தின் சார்பில் நடைபெறும் வினவு, புதிய கலாச்சாரம் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தாங்கள் வருகை தருமாறு அன்புடன் கோருகிறோம். கூட்டத்தில் தோழர் மருதையன் சிறப்புரையாற்ற இருக்கிறார்.
எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.
விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)
எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அனைத்தும் மொத்தமாகவும், தனியாகவும் 30% தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வருக!
Saturday, December 11, 2010
மழைக்கால பாடல் ஒன்று - பப்பு பாடியது....
(பாடல் வரிகள், இசை - பப்பு)
ஜன்னல் வழியாக மழையை பார்த்துக்கொண்டிருந்தாள், பப்பு . லேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை பலத்து பெய்யத் துவங்கியது. "Oh, my god, this rain sooooing' (soooo - 'ச்சோ') என்று ஆச்சர்யப்பட்டு, மழையிடம் இந்த பாடலைப் பாடினாள்.
Friday, December 10, 2010
வேளச்சேரி டைம்ஸ் : பத்துக்கு பத்தில் ஒரு கனவு இல்லம்
ஒன்றிரண்டு பைகள், அதில் துருத்திக்கொண்டிருக்கும் துணிகள்,போர்வை மற்றும் பாய், கட்டப்படாத ஜன்னல்களை மூடியிருக்கும் பிளாஸ்டிக் சாக்கு, சமைக்கும் பகுதியில் சில சாமான்கள் - இதுதான் ஒவ்வொரு குடும்பத்தின் சொத்து.
'குடும்பமா இருக்கிறதால இங்கே தங்கிக்கலாம். தனியா இருந்தா அங்கே பின்னாடி இருக்கிற குடிசையிலே தங்கிக்கணும்' என்று தனராஜ் காட்டிய திசையில் சில குடிசைகள் தென்பட்டன. எல்லாருக்கும் சேர்த்து ஒரு பொதுக்கழிப்பறை. குளியலறை. தேங்கியிருக்கும் மழைத்தண்ணீர் - கத்திக்கொண்டிருக்கும் தவளைகளின் சத்தம் மற்றும் குண்டு பல்பின் ஒளி. அந்தக் குடிசைகளில் தங்கியிருப்பவர்கள் விஜயநகரத்திலிருந்து வந்திருக்கும் பெண்களும் ஒரிஸாவிலிருந்து வந்திருக்கும் ஆண்களும்.
அறைச் சுவர்களையும்,தூண்களும்,மேல்தளங்களுமாக அந்த புத்தம் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். இந்த இரண்டு மாடிக்கட்டிடம் என்றில்லை, சென்னையில் பத்து மாடி, பன்னிரெண்டு மாடி கட்டிடங்களை கட்டி எழுப்புபவர்களும் அவர்கள்தான். பெண்கள் கல்லையும், மணலையும் சுமக்க ஆண்கள் கட்டுவதும், கலப்பதுமாக வேலை செய்வார்கள். அவர்களைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகள். பலகணியோ அல்லது அடித்தளமோ, போர் போடும் வேலையோ தினமும் ஏதாவதொரு ஒரு புதிய வளர்ச்சியை/ மாற்றத்தைக் அக்கட்டிடம் கொண்டிருக்கும். இது நம் அனைவருக்குமே மிகவும் பரிச்சயமான காட்சிதான் இல்லையா?
ஏறத்தாழ எல்லாத் தெருக்களிலும் ஏதாவதொரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரிவு மக்களும் ஏதாவதொரு ஊரிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து கட்டிக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.மற்றொரு பிரிவு மக்களின் குடும்பங்கள் வந்து குடியேற.பெய்கின்ற மழையோ அல்லது தூறலோ - எதுவும் அவர்களது வேலையை தடை செய்துவிட முடியாது. சிலமாதங்களாக உருப்பெற்று வரும் அந்த கட்டிட வேலை, கடந்த வாரத்தில் 18 மணி நேரங்களாக பெய்த மழைக்காக மட்டுமே நிறுத்தப்பட்டது.
'இங்கே வேலை முடிஞ்சா, அடுத்து மேஸ்திரி எங்கே சொல்றாரோ அங்க போணும்", என்கிறார் பலராம் அவ்வீட்டின் ஆண்களுக்காக போடப்பட்டிருக்கும் மரபெஞ்சில் அமர்ந்தபடி. தரையில் அவரது மனைவி பார்வதி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, அவர்களின் இருவயது குழந்தை ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.
"ஊரில பச்சரிசிதான் சாப்பிடுவோம். இங்கே ஒரு ரூபா அரிசிய, நாலு ரூபான்னு கடையில விக்கிறதை வாங்கி சாப்பிடறோம். வேகவே மாட்டேங்குது, ஒரு அவர், ஒன்றரை அவர் ஆகுது" என்றார் பலராமின் மனைவி. சொந்த ஊர் ஆந்திராவிலிருக்கும் குண்டூர். ஊரில் விவசாயம் செய்துக்கொண்டிருந்தார். விவசாயம் கட்டுபடியாகாததால் தெரிந்த மேஸ்திரி வழியாக குடும்பத்துடன் இங்கு வந்திருக்கிறார்.
"கால்கிலோ தக்காளி பதினாறு ரூபா விக்குது. சாப்பாட்டுக்கே சரியா இருக்கு. ஒன்னும் மிஞ்சாது. ஊருக்கெல்லாம் ஒன்னும் கொண்டு போக முடியாது . தனியா இருக்கிற பசங்க கையிலியாவது நாலு ரூபா தங்கும் போலிருக்கு, எங்களுக்கு செலவுக்கே சரியா இருக்கு" என்று பலராம் கூறியபோது அவரது முகத்தில் தெரிந்தது வேதனையை எப்படி சொல்ல? பக்கத்து ப்ளாட்டில் தேங்கியிருந்த தண்ணீரிலிருந்து கொசுக்கள் படையெடுக்க ஆரம்பித்திருந்தன.
காலையில் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு வேலையை ஆரம்பித்தால் மதியம் ஒரு மணிநேரம் உணவு இடைவேளை. மதியம் தொடங்கி மாலை ஐந்து அல்லது ஐந்தரை வாக்கில் வேலை முடியும். வாரக்கூலி.ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் சம்பளம் கட். ஆண்களுக்கு நானூறு ரூபாய் மற்றும் பெண்களுக்கு 250லிருந்து 300 ரூபாய் வரை - ஒருநாள் சம்பளம். ஞாயிறு விடுமுறை. எந்த பண்டிகை அலல்து விசேஷ தினங்களுக்கோ விடுமுறை இல்லை. 'இப்ப பொங்கலுக்கு ஊருக்கு போவோம். பத்துநாள் இருந்துட்டு வருவோம். ஒரு பொங்கலுக்கு போனா அப்புறம் மறு பொங்கலுக்குத்தான்' என்றார் பார்வதி.
'மேஸ்திரி புது பொடவை, வேஷ்டி, கொடுப்பாரு. ' எனும் தனராஜ்தான் அங்கிருந்தவர்களிலேயே கொஞ்சம் பெரியவர். பல வருட அனுபவங்கள் கொண்டவர். 'நாங்க நெறைய கட்டிடம் கட்டியிருக்கோம், அம்பத்தூர், அண்ணா நகர், திருவான்மியூர்..... வீடுங்க, ஆஸ்பத்திரி, பெரிய ஆபீஸ் எல்லாம் கூட. எல்லாம் வித்து போகுது. இது கூட, எல்லா வீடும் புக் ஆயிடுச்சு. தெனம் வந்து பார்த்துட்டு போறாங்களே " எனும் தனராஜுக்கு சந்தேகம் இவ்வீடுகளை யார் வாங்குகிறார்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் 'பத்துக்கு பத்து கூட நம்மால வாங்க முடியலயே' என்பதுமே. முக்கியமாக, 'எங்கேருந்து இவ்ளோ காசு வருது?"
செய்திதாள்களின் சின்ன கட்டங்களிலிருந்து எக்ஸ்குஸிவ் இதழ்கள் வரை, ப்ளக்ஸ் பேனர்கள், ஏன் பேருந்தின் பின்னால் கூட விட்டு வைக்காத அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தனிவீடுகளுக்கான விளம்பரங்கள். ஏரியின் நடுவில் கட்டினால் கூட புக் ஆகிவிடும் வீடுகள், ப்ளாட்டுகள்.
இட்டாலியன் கிச்சன், மாடுயூலர் கிச்சன், யூரோப்பியன் டாய்லெட், ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் உருவான ஸ்ட்ராங்க் கம்பிகள் என்றும் நெடிதுயர்ந்த வீடுகள் ஒருபுறம் ஒருசாராருக்கு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் நாடோடிகளாக அலைந்து திரிந்துக்கொண்டிருக்கும் ஒரு சாரார்....
கல்லூரி முடித்ததும் குறைந்தது மூன்று அல்லது நான்கு லட்சத்திலிருந்து ஆரம்பிக்கும் சிடிசி ஒரு புறம்....ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் கூலி பெறும் கூட்டம் ஒருபுறம்...முன்னூறு ரூபாய் பிட்ஸாவை வாங்கும் கூட்டம்.....விற்கும் விலைவாசியில் ஒருநாளை ஓட்டுவதற்கு முழி பிதுங்கும் கூட்டம்...
போக்குவரத்து நெரிசலை (குறைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும்) அதிகரிக்கும் மேம்பாலங்களும்,மெட்ரோ ரயில்களும் போடப்படும் சென்னையில் - வேளச்சேரியில்தான் மழையிலும் குளிரிலும் அவதிப்பட்டு குடியிருக்க வீடின்றி அல்லலுறும் மக்களும் வாழ்கிறார்கள்.
ஒரு பில்லியன் டாலரில் கட்டப்பட்ட வீடு இருக்கும் நாட்டில்தான் - பத்து குடும்பங்களுகொரு கழிப்பறை இருக்கிறது.
ஆன்டிலியா மாளிகை, முகத்திலறைவதற்குப் பதில் நம்பிக்கையை, எதிர்காலத்தை பற்றிய நல்லெண்ணத்தை , தாங்களும் எட்ட முடியும் என்று வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருப்பதாக - இளைஞர்கள் கருதுவதாக ஒரு கட்டுரை கூறியது.
அம்பானியின் ஆன்டிலியா மாளிகைக்கும், தனராஜின் 'பத்துக்கு பத்து வீடு' கனவுக்கும் இடையில்தான் பொருளாதார வளர்ச்சியும், பிரதமரின் வளர்ச்சித் திட்டங்களும் எங்கோ மறைந்திருக்க வேண்டும். அப்படியே தனராஜின் கேள்விக்கான விடையும் கூட.
"இவ்ளோ காசு எங்கேருந்து வருது? எங்கே இருக்கு இவ்ளோ காசு? " என்ற தனராஜின் எளிய கேள்விக்கு விடையளிக்க எனக்குத் தெரியவில்லை.
தற்போது நாங்கள் குடியிருக்கும் வீடு கூட தனராஜால் கட்டப்பட்டிருக்கக் கூடும். புழுதி படிந்த அந்தக் குழந்தைகள் இங்கும் ஓடியாடி விளையாடி இருக்கக்கூடும்.
தனராஜின் இருப்பிடத்தை விட்டு வெளியேறும்போது, ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது "சென்செக்ஸ் 195xxx புள்ளி 45 புள்ளிகளுடனும், நிஃப்டி ஐந்தாயிரத்து .... புள்ளி 54 புள்ளிகளுடன்மும் முடிவடைந்தது. விப்ரோவின் பங்குகள் நான்காயிரம், இன்ஃபோசிஸின் பங்குகள் மூன்றாயிரத்து...."
Wednesday, December 08, 2010
பப்பு டைம்ஸ்
”நீ எழுதி தா-ப்பா”
”ஆ, குட்டிக்கு எழுதினது பத்தாது இப்போ நீயா? ஹோம் ஒர்க்லாம் அவங்கவங்கதான் செய்யணும்.”
அவ்வளவுதான் கோபம்...கண்களில் நீர்..
"நீ ஏன் குட்டி மாமாவுக்கு எழுதி தந்தே? எனக்குதான் நீ எழுதி தரணும். நான் உன் ஃப்ரெண்டே இருக்க மாட்டேன்"
அவ்வ்வ்!
"இல்ல, பப்பு. குட்டி மாமாவும் இதே மாதிரி கேட்டப்போ எழுதி கொடுத்தேனா..அவங்க ஆன்ட்டி செம திட்டு. ஏன் இவ்ளோ அசிங்கமா எழுதி இருக்கே....அழகா எழுதணும்...உன் ஹேன்ட் ரைட்டிங் மாதிரி இல்லையே..இதுன்னு குட்டி மாமாவை செம திட்டு. அதுலேருந்து மாமா ஹோம் ஒர்க் மாமாவேதான் எழுதுவாங்க..நீயும் உன் ஹோம் ஒர்க் நீயே எழுது..."
#ஸ்ப்பா!! மூச்சு விடாம சொன்ன இந்த டயலாக்கு ஏதோ லேசா பலனிருந்தது.

பப்பு, வீட்டுக்கு விளையாட வந்த நண்பனிடம், "ஹேய், உனக்கு தெரியுமாப்பா, ஃபேன் சுத்தும்போது பேன்லே ஏறி உட்கார்ந்தா ஆஃபிரிக்காவுக்கு போகலாம்"
#டிக்கெட் வாங்கணும்னா... சாரி.....வேணும்னா எங்க வீட்டுக்கு வாங்க...

"ம்ம்ம்....அம்மா வேணும்..ம்ம்.." சும்மாதான், அழற மாதிரி ஆக்டிங், என்னை ஏமாத்தறதுக்கு.
அதாவது கொஞ்சினது பத்தாதுன்னு சிக்னலிங்!
நானும், "பப்பு வேணும்..ம்ம்..பப்பு வேணும்"
"ஹேய், நான் என்ன உனக்கு அம்மாவா?!"ன்னு நிஜமாவே அழுகை...
#பாப்பாங்க மட்டும்தான் அம்மாவுக்காக அழுவாங்களா என்ன? அவ்வ்வ்வ்
க்ளோப்-லே விரலால ட்ரேஸ் செஞ்சு கண்டங்களைச் சொல்லி விளையாடிக்கிட்டிருந்தப்போ,”ஹை, பப்பு எப்படி தெரியும் உனக்கு?”
”எப்படி தெரியாம இருக்கும்?!!” - பப்பு
#பவ்வ்வ்வ்வ்

இதுதான் சமீபமா பப்புவுக்கு பிடிச்ச புத்தகம். ஆங்கில எழுத்துகள் அறிமுக புத்தகம். என்ன ஸ்பெஷல்னா, A is for ZebrA, B ன்னா craB....u..gnU...விலங்குகள் பெயரா இருக்கிறதாலே பப்புவுக்கு ஆர்வமா இருக்கு. Worth reading.
Monday, December 06, 2010
ஏழு நிறப்பூ மேனியா
ஏழுநிறப்பூ வைச்சு என்ன பண்ணுவேன்னு கேட்டதுக்கு, பாட்டை (பற்ப்பாய்..பற்ப்பாய்..பூ இதழே) பாடிட்டு
1."ரெயின்போவை கீழே வர வை"
திரும்ப பாட்டை பாடிட்டு,
2. "நான் இப்போவே பீச்சுக்கு போகணும்" ன்னு சொன்னதும் பீச்சுக்கு போய்டுவாங்களாம்.
அப்புறம், இன்னொரு தடவை பாட்டு,
3."எனக்கு விங்ஸ் வேணும்"
அப்புறமும்.....திரும்ப பாட்டு...
4."வர்ஷினி, மெரில், வெங்கடேஷ், அர்ஷித் கைலாஷ், லஷ்மி கார்த்திகா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் மேஜிக் ஸ்டிக் வேணும்..."
ம்ம்..நான் அந்த புக்கை படிச்சப்போ உலகத்துலே இருக்கிற எல்லா விளையாட்டு சாமானும் என்கிட்டே வரணும்னு ஆசையயிருந்துச்சு. (அதுவும் ஷேன்யாவோட ஆசையிலேருந்து காப்பியடிச்சதுதான் - உபயம் : நந்தலாலா)
பளிச்சுன்னு ஒரு க்ளிக் எனக்குத்தான்...ஹிஹி..
"நாம செடி வளர்க்கலாமா பப்பு, விதையெல்லாம் போட்டு "
பப்புவும் செம குஷியாகிட்டா.
அப்போ, உப்பு-மிளகா தூள் சகிதம் மாங்காய் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். "ஆச்சி, இந்த மாங்கா சீட் வளர்க்கலாமா" - பப்புதான்.
வீடு தாங்காதுன்னு, உன்னோட விளையாட்டு சாமான்லே வளர்க்கலாம்னு சொன்னேன்.
பப்புவே, ஒழுங்கா இருக்கிற விளையாட்டு சாமானைத் தேடி எடுத்துட்டு வந்ததும், 'பெயின்ட் பண்ணிட்டு காஞ்சதும் மண் போட்டு சீட் போடலாம்'னு ஐடியா பண்ணோம். ஒரு மணி நேரம் - பப்புவுக்கு நல்ல டைம் பாஸ். எனக்கும் லேப்டாப்.
அடுத்த நாள் (டிச 3) காலையில எழுப்புறதுக்கு நல்ல சாக்கு இருந்துச்சு. மண்ணு போட்டு விதை போடலாம்னு சொன்னதும் பப்பு துள்ளி குதிச்சு எழுந்தாச்சு.ஆனா, அன்னைக்கு நேரம் இல்லாததாலே (ஹிஹி...எவ்ளோ பெரிய தொட்டி!!) முடியலை. சாயங்காலம் வந்து மண்ணை நிரப்பிட்டு கடுகு, வெந்தயம் (அகெய்ன்..ஹிஹி) எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். மண் - கடுகு-மண் போட்டு மூடியாச்சு.
சூரிய வெளிச்சம் வேணும்னு ஜன்னல்கிட்டேயும் வைச்சோம். மூன்லைட்லே வளருமா, இல்லே மூன்லைட் பட்டுச்சுன்னா குட்டியாகிடுமான்னு அடுத்தக் கேள்வி....
'எப்போ வரும், எப்போ வரும்'ன்னு ஒரு மணிநேரத்துக்கு ஒரு தொணப்பல்.
'மூணு நாளைக்கு அப்புறம்தான்'னு சொல்லி வைச்சேன்.
என்ன முக்கியமான விஷயம்னா, அதுலே ஏழு நிறப்பூ பூக்கப் போகுதுன்னு பப்பு நினைச்சுக்கிட்டிருக்கிறதுதான். 'செடி வந்துடுச்சா'ன்னு செடியை பத்தி பேசியே சாப்பாட்டு நேரமெல்லாம் ஓடுச்சு.
நேத்து காலையிலே பார்த்தா ஒரு தொட்டிலேருந்து கொஞ்சமா வெள்ளையா தலையை நீட்டி எட்டி பாக்குது - கடுகு செடிகள்.
(இன்று காலை)
எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தாங்கலை. ஏன்னா, கடுகெல்லாம் முளைக்குமான்னு ஒரு சந்தேகம்..ஆயாக்கிட்டே கேட்டா என்னை ஏதாவது நக்கல் பண்ணுவாங்களோன்னு வேற...சரி, இது வரலேன்னா பச்சைபயறு போட்டு அடுத்த முயற்சி செய்யலாம்னு மனசுக்குள்ளே திட்டம் போட்டு வைச்சிருந்தேன். நல்லவேளையா..கடுகே முளைச்சுடுச்சு.
இந்த அஞ்சு நாளும் காலையிலே எழுந்துக்க, பப்பு மூடை மாத்த இந்த ஆக்டிவிட்டி உபயோகமா இருந்துச்சு. அதுலே ஏழு நிறப்பூ வராதுன்னு தெரியும்போது பப்புக்கு ஏமாற்றமா இருக்குமேன்னு தோணினாலும் தினமும் கொஞ்சமா தண்ணியை தெளிக்கிறது, அதை கவனிச்சுக்கிறதுன்னு நல்ல அனுபவமா இருந்துச்சு.
ஒரு ஏழு நிறப்பூ இருந்தா, அந்த செடியிலே ஒரு ஏழுநிறப்பூ பூக்கணும்னு கேக்க ஆசையாயிருக்கு. :-)
Saturday, December 04, 2010
ஆழம் இது ஆழமில்ல....ஆழம் இது அய்யா…
அதேபோல, டாக்டர் ஆன்ட்டியின் புடவைகளை மாடியில் காய வைக்கும் அங்கிளை பற்றியும் பெரியவர்கள் மத்தியில் இதே தொனியிலான கிண்டல் இருந்தது.
'பிங்க்' நிறத்தில் அல்லது கொஞ்சம் பூ வேலைப்பாடுகள்/டிசைன்கள் கொண்ட சட்டை/குர்தாக்களை ஆண்கள் அணிந்திருந்தால் நண்பர்கள் மத்தியில் 'கேர்லிஷா இருக்கு' என்றோ 'என்ன, பொண்ணுங்க ட்ரெஸ் மாதிரி இருக்கு' என்று நிச்சயம் ஒரு வரி கமெண்டாவது இருக்கும். கோலம் போடும் ஆணையோ அல்லது கிரிக்கெட் விளையாடும் பெண்ணையோ/சுவர் ஏறும் பெண்ணையோ அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.
"பெண்மனசு " என்ற தொடர்பதிவு இடுகைகள் சிலவற்றை தமிழ்மணத்தில் கணடதும் இதெல்லாம் ஞாபகம் வந்தது.
பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்படுத்தும் பாடல்கள் கொண்ட தொடர்பதிவு என்று சொல்லியிருந்தாலும், ஸ்டீரியோடைப் போன்றுதான் பார்த்ததும் தோன்றியது. "பெண் மனசு" என்றால் அது ஏதோ கடல், ஏரி, ஆழமான குளம்,சுரங்கம், புரிந்துக்கொள்ள முடியாதது என்பது போன்ற வசனங்கள் /ஆட்டோ வாசகங்களால் கூட இருக்கலாம். மேலும், மனம் என்பது மனிதர்கள் எல்லாருக்கும் பொதுவானதுதானே. (இந்த தொடர்பதிவை யார் ஆரம்பித்தார்கள் என்று தெரியாது. நல்ல நோக்கத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த இடுகை யாரையும் புண்படுத்த அல்ல. )
பெண்களுக்கான செருப்புகளை பார்த்திருக்கிறீர்களா? செருப்பிலிருந்து ஆரம்பிக்கும் இந்த ஸ்டீரியோடைப்பிங் எல்லாவற்றிலும் இருக்கிறது. மிகவும் ஸ்லீக்காக, நெளிவுகளுடன் பூ வேலைப்பாடுகளுடன் இருக்கும் செருப்புக ளெதுவும் எனக்கு ஒத்து வந்ததில்லை. அவர்கள் செய்து வைத்திருக்கும் அளவுகளுக்குள் என் கால்கள் எப்போதும் பொருந்தியதில்லை. செருப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் பெருங்குழப்பம் வந்து நேரும். அதுவும், பெண்களின் கால்கள் நெளிவாக ஸ்லீக்காக இருக்கும் என்பது செருப்பு உற்பத்தியாள்ர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை போல. (என்னைப் போன்ற அகன்ற பாதமுடையவர்களைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள். )
அதே போல, பெண்கள் 'இப்படித்தான் இருப்பார்கள்' அல்லது பெண் மனசு 'இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று வரையறைகள் இருக்கிறது. அதைத்தாண்டி ஒரு பெண் அப்படி இல்லாமல் போய்விட்டால் 'பையன் மாதிரி' இல்லேன்னா 'டாம்பாய்' அதையும் தாண்டினால் இருக்கவே இருக்கிறது 'பொம்பளையா அவ". பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவார்கள். மெல்லியல்பானவர்கள். வல்னரபிள். சாட்டர்பாக்ஸ். பல்லி கரப்பான்பூச்சிக்கு பயப்படுவார்கள். அப்புறம், வலிமையானவர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அதே மாதிரி பையனுக்கும். குழந்தையாக இருக்கும்போது மையிட்டு லிப்ஸ்டிக் போட்டு புகைப்படம் எடுத்து ரசிப்பவர்கள் அதே குழந்தை வளர்ந்த பின் அதையே செய்தால் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது தாலியை ஆண் அணிந்தால்? இப்படியிருந்தால் அவமானம் என்றுதான் எல்லோர் மனதிலும் இருக்கிறது.
தமிழ் சினிமா பாடல்களும் இதே ரகம்தான். உண்மையில் பல தமிழ் சினிமா பாடல்கள் பரிச்சயமானது கல்லூரி ஹாஸ்டலில்தான். பெரும்பாலும் 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' மாதிரி பெண்மையின் மென்மை டைப் பாடல்கள். ஓக்கே..அவற்றைப் பற்றி இன்னொரு இடுகையில். இப்போது ,இன்னொரு தொடர் இடுகை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.
இந்த ஸ்டீரியோடைப்பிங்க்கு மாறாக/அவற்றிற்கெதிராக நாம் நடந்துக் கொண்டவை பற்றி பகிர்ந்துக்கொள்ளவது தான் அது.
1. நகைகள் மேலோ அல்லது பட்டுபுடைவைகள் மீதோ பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. சிறுவயதில் (ஆறாம்/ஏழாம் வகுப்பு?) கொஞ்சநாட்கள் மட்டும் கொலுசு அணிந்திருக்கிறேன். வளையல்கள் ஒருநாளும் அணிந்ததில்லை. இன்லாஸ் விருப்பத்திற்காக கொஞ்ச நாட்கள் பிரேஸ்லெட் அணிந்தேன். மேக்கப் மேல் ஆர்வம் இருந்ததில்லை. தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளின் போது மட்டும் மேக்கப் போட்டுக் கொண்டிருகிறேன்.மற்றபடி, பவுடர் கூட பூசுவதில்லை.தலைக்குப் பூ....நோ வே!
2. எம்ப்ராய்டரி, நடனம், நிட்டிங், க்ரோஷா,தஞ்சாவூர் பெயிண்டிங்,,கோலம் போன்ற நுண்கலைகளில் சூனியம். சமையல் செய்வதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. செய்ததும் இல்லை. இதுக்காக எத்தனையோ பேர்கிட்டே விதவிதமா திட்டு /அட்வைஸ் வாங்கியிருக்கேன்.
3. பிங்க் கலர் அப்படியெல்லாம் எனக்குப் பிடித்தது இல்லை. அதேபோல டெடிபேர், க்பியூட்,லேஸ், ஃபிரில்கள்....பிடித்ததும் இல்லை. சாக்லேட் பிடிக்கும். ஆனா, அது கேர்லியா? ;-)
4. சகோதரி என்று என்னை யாரும் அழைத்தாலொழிய யாரையும் அண்ணா என்று நானாக அழைத்தது இல்லை.
5. பெண்களுக்கென்று தனி கட் வைத்து வடிவைக் காட்டும் ஜீன்ஸை தவிர்ப்பதற்காக ஆண்களுக்கான ஜீன்சை அணிந்திருக்கிறேன்.
.
.
.
.
.
இந்த இடுகைக்கு மறுமொழி எழுதும் முதல் ஐந்து பேரை இத்தொடர் பதிவுக்கு அழைக்கிறேன். :-)
Tuesday, November 30, 2010
Word power made easy
Wrong X no Wrong
hot X no hot
படத்தைப் பார்த்து வார்த்தையை எழுத வேண்டும். வார்த்தையைச் சொல்லி விட்டு ஒவ்வொரு phoneticஆக சொல்லிச் சொல்லி எழுதுவாள்.
அதில் crow ஆனது - cro
monkey ஆனது - muncey
flash cards வாசித்துக் கொண்டிருந்தோம்.
gift -க்கு விளக்கம்:
whose birthday all of you give
whose dipavali all of you give
grab
படத்தைப் பார்த்துவிட்டு மேடம் சொன்ன கதை :
he is holding book. his book. he is saying "this is mine" and getting from him.
he is telling liiiiieee.
ஸ்ப்பபா!
டைட்டில் காப்பிரைட் : காலேஜில் சீன் காட்ட உதவிய சிவப்பு நிற அட்டை போட்ட குண்டு புக்குக்கு
Monday, November 29, 2010
வேளச்சேரி டைம்ஸ் : ரமாவின் சிப்ஸ் கடை
அம்மாவுக்கு நெஞ்சுவலி வந்திருப்பதாகவும் , ஆஸ்பத்திரியில் சேர்த்தி ருப்பதாகவும் கூறிய மாமா, ரமாவை அழைத்து வந்திருந்த இடமோ ஒரு உறவினர் வீடு. அங்கு ரமாவின் அம்மாவும் இருந்தார். ஆஸ்பத்திரியில் பெட் சார்ஜ் அதிகமாக இருப்பதால் இங்கு தங்கியிருப்பதாகவும் காலையில் செல்லலாமென்று கூறுகிறார் அம்மா. சிறிது நேரத்தில் ரமாவின் அப்பாவும் வந்துவிட அதன்பிறகு நடந்தவை அனைத்தும் ஒரு நாடகம் போலவே இருந்திருக்கிறது ரமாவுக்கு.
மாமாவின் மகனை கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டுமென்று கூறுகிறார் அப்பா. பத்தாவது படித்து தேர்வு எழுதிவிட்டால், மாமாவின் படிக்காத பையனை கல்யாணம் செய்துக்கொள்ள ரமா மறுத்துவிடுவாரென்று பயப்படுகிறார்கள் ரமாவின் பெற்றோர். 'நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கோ இல்லேன்னா எங்க மானம் போய்டும்' என்று வற்புறுத்துக்கின்றனர். மன்றாடுகின்றனர். 'வாசலில் ஒரு லாரி சொந்தக்கார ஜனம் நிக்குது, அம்மா-அப்பா தல குனிஞ்சுடக் கூடாதேன்னு' தனது அம்மாவின் அண்ணன் மகனை கல்யாணம் செய்துக் கொள்கிறார் ரமா.
சொத்து போய்விடக்கூடாதென்று ரமாவின் மாமா கொடுத்த நெருக்கடியால் இந்த திருமணத்தை நடத்தினார் அவரது அம்மா.புகுந்த வீட்டு கொடுமைகள்/ அடி,உதைகள், கணவனின் உண்மை சுபாவம் எல்லாம் வெளிவர பல பஞ்சாயத்துகள் நடந்திருக்கிறது. இதற்குள் ரமாவுக்கு மூன்று பிரசவங்கள் - இரண்டு பெண்கள் ஒரு பையன். சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துக் கொண்ட ரமாவின் கணவன், இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள 'நம்ம புள்ளைங்களை நாமதான பாக்கணும்' என்று உழைக்க வந்திருக்கிறார் சென்னை - வேளச்சேரிக்கு.
'உழைப்பு இருந்தா எங்கே வேணா பொழைச்சுக்கலாம்' எனும் ரமாவின் அன்றாட வேலைகள் - சிப்ஸூக்கு சீவுவது, சமோசாவுக்கு மசாலா செய்து மடிச்சுக் கொடுப்பது, கடையில் வியாபாரத்தைக் கவனிப்பது, பாக்கெட் போடுவது, கையிருப்பு பற்றி கணக்கெடுப்புகள்/, வேலையாள் வராத நாட்களில் சிப்ஸ் போடுவது இன்னபிற. காலையில் ஒன்பதரை மணிக்கு வேலைக்கு வரும் ராமாவிற்கு இரவு பத்து மணி வரை வேலையிருக்கும். நாள்முழுதும் வேலை செய்தாலும், வரும் வருமானத்தில் ஒரு மாதத்தை ஓட்டுவதென்பது சிரமமாகவே இருக்கிறது ரமாவிற்கு - இந்தநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களைப்போலவே.
ரமாவின் ஊரில் நிறைய பேருக்கு இதுதான் வேலை. சிப்ஸ் போடுவது, கடைகளில் வேலை செய்வது....முன்பெல்லாம் விவசாயம் இருந்தது. அப்போதெல்லாம் ஊர் மிகவும் செழிப்பாக இருக்கும். இப்போது அவரது மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகிவிட்டது. விவசாயத்தில் என்ன வருகிறது? வீடும், ஒரு துண்டு நிலமும் இருக்கிறது. ஆனால் அதை வைத்து ஒன்றும் பிழைக்க முடியாது. ஊரில், கணவருடன் நடத்திய சிப்ஸ் கடையும் அதிகக் கடனால் மூடும்படியாகிவிட்டது.
மணலியில் வசிக்கும் ரமாவின் சித்தப்பா, இங்கு கடை வைக்க உதவி செய்திருக்கிறார். இதற்கு முன்பணமாக நிலத்தை அடகு வைத்து எண்பதாயிரம் கொடுத்திருக்கிறார் ரமா. ஒரு கிமீ தொலைவிலேயே அவரது சித்தப்பாவின் உறவினரின் கடை ஒன்று உள்ளது. அவரது தயவால் இங்கு கடை நடத்துகிறார் ரமா. வருவாயில் கணிசமான பங்கை இருவருக்கும் ரமா கொடுத்து விடவேண்டும். இது தவிர கடை வாடகை, ஈபி பில், வேலைக்கு வைத்திருக்கும் பையனுக்கு சம்பளம், வீட்டு வாடகை எல்லாம் போக கையில் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரை நிற்கும். இதில்தான் ஊரில் ஏற்பட்ட கடன், அப்பாவின் செலவு, மகள்களின் படிப்பு, செலவு.....
ரமாவின் முதலாவது பெண் திருநெல்வேலியில் ஹாஸ்டலில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது பெண்ணை தனது தங்கையிடம் விட்டிருக்கிறார். அவர்களுக்குப் பிள்ளையில்லாததால், தங்கள் பிள்ளையைப் போல பார்த்துக் கொள்வார்கள். பெண்ணை அவர்கள் பார்த்துக்கொள்வதால் ரமா அவ்வப்போது தங்கையை கவனிக்க வேண்டும். அவர்கள் கேட்கும்போது தங்கைக்கு பணம் கொடுத்துதவ வேண்டும். 'தத்துக் கொடுத்த மாதிரிதான், அவங்க பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க' எனும் ரமா, பெண்ணை வேறு பள்ளியில் இந்த வருடம் சேர்த்தபோது தனது பெயருக்குப் பதில், அவரது தங்கை மற்றும் தங்கை கணவரின் பெயரையே பெற்றோரின் பெயராக கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.
நான்காம் வகுப்பு படிக்கும் தனது மகன் மற்றும் கடையில் வேலை செய்யும் பையனுடன், ரமா ஆதம்பாக்கத்தில் ஒற்றை அறை வீடொன்றில் வசிக்கின்றார். வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதோடு, அவர்களுக்கு ஆகும் செலவுகள்...பேஸ்ட்,பிரஷ் முதற்கொண்டு எல்லாமும் கடைக்காரர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். அதோடு தங்குமிடமும். தனியாக எங்கு தங்க வைப்பதென்று அவர் தங்கியிருக்கும் வீட்டிலேயே அறையைத் தடுத்து தங்க வைத்திருக்கிறார். 'எப்போ என்னா நடக்கும்னு சொல்ல முடியாது, ரெண்டுகெட்டான் வயசுலே இருந்தா யாரையும் நம்ப முடியாது. அதுவும் இல்லாம நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க.அதனாலே, தெரிஞ்ச பசங்க, சின்ன பிள்ளைங்கன்னாதான்" எனும் ரமா தெரிந்த பையன்களாக இருந்தாலும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்வதில்லை.
'படிப்பும் இல்ல, வீட்டுவேலைக்கிலாம் போனா மூணாயிரம் நாலாயிரம் கிடைக்கும், ஆனா அது வயித்துக்கே சரியா இருக்கும். இது நாள் முழுக்க வேலைன்னாலும், ரெண்டாயிரமாவது கையில நிக்குது. அதுலதான் கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்கணும்' எனும் ரமா ஊரிலிருக்கும் அப்பாவுக்கு மீதமிருக்கும் பணத்தை அனுப்புகிறார். கடனை அடைத்த பிறகே ஊருக்குச் செல்ல முடியும். எப்படியும் அதற்கு குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும். 'நம்மளைவிட கீழெ எவ்வளவோ பேரு இருக்காங்க, அவங்களைப் பார்த்துக்கிட்டு நாம வாழ்ந்திரலாம் ' என்று தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறார். தனக்கு விதித்தது இதுதான் என்று சமாதானம் கொள்கிறார்.
' என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்ற கவலையிலேயே அம்மா போய் சேர்ந்துட்டாங்க. அவங்க இருக்கிற வரைக்கும் கவலையே இல்லாம வளத்தினாங்க' என்று தனது இளமைக் காலத்தை நினைவுகூரும் ரமாவுக்கு - சொந்த ஊரைவிட்டு, உறவுகளை விட்டு நாட்களை கடத்தும் ரமாவுக்கு - எந்த பண்டிகைகளும் இல்லை. விசேஷங்களும் இல்லை.
தனக்கு திருமணமான அதே வயதில் தற்போது இருக்கும் மகளை, கல்லூரி வரை படிக்க வைக்க வேண்டுமென்று நினைக்கிறார்.
கடைப்பையனை ஊருக்கு அனுப்பிவிட்டு, தனியாக சிப்ஸூம், சமோசாவும் போட்டுக்கொண்டிருந்த ரமாவை தீபாவளி அன்று கூட பார்க்க முடிந்தது.
'இங்க வேற தொல்லைங்கல்லாம் இருக்கும்னு சொன்னாங்க, இங்கே வந்து ஏழு மாசம் ஆகுது, தெரிஞ்சவங்க பக்கத்துலே இருக்கிறதால வேற எந்த தொல்லையும் இல்ல. இல்லேன்னா இவ்வளவு தைரியமா இருக்க முடியாது.' என்று கூறும் ரமா "கடவுள் என்னைக்காவது ஒருநாள் கண்ணை திறப்பார். அன்னைக்கு எல்லாத்துக்கும் வழி பிறக்கும்" என்று நம்புகிறார். ஞாயிற்றுக் கிழமையானால் காலையில் சர்ச்சுக்கு செல்கிறார். வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் உபவாச ஜெபம் செய்கிறார்.
************************
படிக்காத பெண் 'சிப்ஸ் கடை முதலாளி'யாகி தனியாக கடையை நடத்துகிறாரே, விடாமுயற்சியுடன் வாழ்கிறார்,அவரது தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும், இந்தியா ஒளிர்கிறது என்றெல்லாம் தோன்றுகிறதுதானே!
ரமாவின் திருமணம் முடிந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில், பாதிக்குமேல் குழந்தைத் திருமணங்கள் என்று சமீபத்தில் எடுத்த சர்வே கூறுகிறது.
குழந்தைத் திருமணங்களில், இந்தியா பதினோராவது இடத்தில் இருக்கிறது.
முப்பத்திமூன்று வயதான ரமாவின் வாழ்க்கை - குழந்தைத் திருமணம், படிப்பறிவின்மை, திருமணத்தால் பாழான வாழ்க்கை, பெற்றோர் மற்றும் உறவினர்களின் சமூகக் கடமைகள் மற்றும் சொத்து மாறிப் போய்விடக் கூடாதென்ற எண்ணம், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள்.... என்றெல்லாம் பாதிக்கப் பட்டிருக்க, விதியென்று வெறுமனே கூறிவிட முடியுமா?
Saturday, November 27, 2010
அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!
- மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?
- ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?
- நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?
- ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?
- 1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?
- கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?
- அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?
- 1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?
- 1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?
- 500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?
- அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?
- இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?
- அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?
கேள்விகளுக்கு விடை காண வாருங்கள்…
நிகழ்ச்சி நிரல்:
அரங்கக்கூட்டம்
தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.
கருத்துரை :
”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.
“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.
“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
விவாத அரங்கம் :
வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!
நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி
இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.
தோழமையுடன் அழைக்கும்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்
தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506
Wednesday, November 24, 2010
ஆபரேஷன் ஓப்பன் டே
தினமும் காலையிலே பப்புவை எழுப்புவது ஒரு கலை. இந்த 'டயமாச்சு', 'வேன் வந்துடும்', 'தண்ணி ஆறுது' இல்லேன்னா 'எவ்ளோ நேரம் சொல்லிக்கிட்டே இருக்கேன், சீக்கிரம் எழு' இதெல்லாம் வேலைக்கே ஆகாது.
என்னைப்போல, தூக்கத்திலிருந்து கண் விழித்ததும், அந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், இந்த பக்கம் திரும்பி கொஞ்ச நேரம், ஜன்னலைப் பார்த்துகொண்டு கொஞ்ச நேரம்....லேசாக சாய்ந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம்...இந்த மாதிரி துயில் கலையும் விஷயமெல்லாம் பப்புவிடம் அறவே கிடையாது. லிரில் புத்துணர்ச்சிதான். பெரும்பாலும் லஷ்மி கார்த்திகா, ஸ்ருதி லயா, அத்தி ஆண்ட்டி நினைப்புதான். எனவே, எனக்கும் தினமும் ஏதாவது ஒன்று கிடைத்துவிடும்.
'இன்னைக்கு யோகாவா' என்ற மொக்கையான கேள்வியிலிருந்து 'ஆம்பூர்/ வடலூர் ஆயா வர்றாங்களா இன்னைக்கு' 'இன்னைக்கு என்ன சிடி பாக்கலாம்' ..இப்படி ஏதாவது கேள்வியில் தொக்கி நிற்க வேண்டும். வெள்ளிக் கிழமைகள் போனான்ஸா. அன்றைக்கு ஆம்பூர்/வடலூர் ஆயா விசிட் இருந்தால் டபுள் போனான்ஸா. திங்கள் காலையில் எழுப்புவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு எளிது வெள்ளிகாலை எழுப்புவது.
மிக முக்கிய காரணம், வெள்ளிக்கிழமைகளில் யோகாவும் இல்லை. கராத்தேவும் இல்லை. ப்ளே க்ரவுண்ண்ண்ண்ண்ட்.
சிறிது நாட்களாக அதுவும் மழை ஆரம்பித்த நாளிலிருந்து பப்பு ப்ளே க்ரவுன்டில் வந்த விஷபாம்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறாள்.'ப்ளே க்ரவுண்டுக்கு இப்பல்லாம் ஆன்ட்டி எங்களை அனப்ப மாட்றாங்க' என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். பள்ளியின் மைதானம் அவ்வளவு பெரிதெல்லாம் இல்லை. ஏதோ கொஞ்சம் விளையாட்டு சாதனங்கள் இருக்கும். ஆனால், காம்பவுண்டைச் சுற்றி இருக்கும் காலி இடம்...மரங்கள்... தேங்கியிருக்கும் தண்ணீர்...எல்லாம் சேர்ந்து 'க்ரவுண்டில் வந்த விஷப்பாம்பை' கொஞ்சம் படமெடுக்கத்தான் செய்தது.
ஓபன் டேவுக்குச் சென்றிருந்த போது, ஆன்ட்டி ட்ரைனாமியல், பைனாமியல், ஜ்யாமெட்ரிக் ட்ரே என்று பப்புவின் புலமையை பறைச்சாற்றிக்கொண்டிருக்க என் மனமோ விஷப்பாம்பையே சுற்றிக்கொண்டிருந்தது. எப்போடா முடிப்பாங்க என்று ஆண்ட்டி ரிப்போர்ட் கார்டை முடித்ததும் கையெழுத்திட்டுவிட்டு, 'ஆன்ட்டி (ஆமா, அங்கே பெரியவங்களை எல்லாம் பெரியவங்கஆன்ட்டின்னுதான் கூப்பிடுவாங்க..சில ஸ்கூல்லே சித்தின்னு கூப்பிடுவாங்களாம்..அதுக்கு இது எவ்வளவோ பெட்டர்தானே!) க்ரவுண்டில பாம்பு வந்துச்சு, ஓட்டையிலே கல்லு வைச்சு மூடி வைச்சிருக்காங்க ந்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. பாம்பு வந்துச்சா... க்ரவுண்டுக்கு அனுப்பினா கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க...' என்று ஆரம்பிக்க....
"மழை வந்ததுலேருந்து ப்ளே க்ரவுண்டுக்கு கொஞ்ச நாளா அனுப்புறதில்லை. பாம்பெல்லாம் வரலை. இங்கே வர்றதுக்கு சான்ஸே இல்லை. ஆனா, வெள்ளிக் கிழமையானா ப்ளே க்ரவுண்ட் ஆன்ட்டி எல்லாரும் கேப்பாங்க. நாங்கதான் நிறுத்தி வைச்சிருக்கோம். அந்த கோவத்துலே சொல்லியிருப்பாங்க, நீங்க பயப்படாதீங்க.." என்றார் சிரித்துக்கொண்டே.
பப்புவை நம்புவதா ஆன்ட்டியை நம்புவதா என்ற குழப்பத்தில் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை. ரொம்ப நீளமாக இருந்த அந்த விஷப்பாம்பு, பப்புவும் அவளது நண்பர்களும் கல்லெல்லாம் வைத்து சுவரின் ஓட்டையை அடைத்தாலும் தள்ளிவிட்டு வந்த அந்த பாம்பு மட்டும், வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் நினைவுக்கு வந்துவிடுகிறது.
"ஆச்சி, நான் கீழே இருக்கிற வொர்க்கெல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டேன்னு ஆன்ட்டி என்னை மாடிக்கு அனப்பிட்டாங்க, வர்ஷினி, பி.ஹர்ஷினி, தனுஷ், நானெல்லாம் மாடிக்குப் போயிட்டோம். மாடிக்கு அனுப்பிட்டா சீனியர் மான்ட்டிசோரி, நாங்க சீனியர் மான்ட்டிசோரிக்கு போயிட்டோம், ஆச்சி"
இது மூன்று வருட கோர்ஸ். பப்புவின் பள்ளியில் இந்த கோர்ஸின் பெயர் எம்1.இதை முடித்த பின்னர்தான் சீனியர் மான்ட்டிசோரி - ஒன்றாவது, இரண்டாவது எல்லாம்.... கீழே இருக்கும் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார்களா, பப்புவும் கற்று முடித்துவிட்டாளா, மாடிக்கு அனுப்பிவிட்டார்களா டபுள் ப்ரமோஷனெல்லாம் ஆயா காலத்தோட சரியாச்சே...என்றெல்லாம் சந்தேகம்.ஏனெனில், மாதாந்திர சந்திப்பின்போது, 'குறிஞ்சியும் வர்ஷினியும் இங்கேயிருக்கும் மெட்டீரியல்ஸை எல்லாம் முடித்த பின்பே சாப்பிடக் கிளம்புவார்கள்' என்று சொல்லியிருந்தார். ஆன்ட்டியிடம் கேட்டபோது, ' டெய்லி எங்களை மாடிக்கு அனுப்புங்க ஆன்ட்டி, நாங்க இந்த வொர்க்கெல்லாம் முடிச்சுட்டோம்.' என்று நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அந்த பூமராங்தான் என்னிடமும் வந்திருக்கிறது.
அடுத்த வருடம்தான் மாடிக்காம். :-)
ஓபன் டேவுக்கு கொஞ்சம் சீக்கிரம் சென்றுவிட்டேன் போல. பிள்ளைகள் எல்லாரும் வேனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். நானும் வராண்டா விலிருந்து அவர்களது வகுப்பறையை எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பப்புவையும் அவளது நண்பர்களையும் பார்க்க.
பப்புவைத் தவிர மற்ற குட்டீஸெல்லாம் எட்டி எட்டி என்னைப் பார்த்து 'குறிஞ்சீஸ் மதர்' என்றும் 'ஆன்ட்டி ஹாய்' என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனக்கோ பயம். பப்பு இதை பார்த்தால் அவ்வளவுதான்...எவ்வளவு கிள்ளுகள அடிகள் எனக்கு இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். ஆயாவுக்கு ஊசி போடுவதற்காக நர்ஸ் வந்திருந்தார். அவரது குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். அந்தக் குழந்தையைக் கொஞ்சப் போக அந்த வினையே தீர்ந்த பாடில்லை. தூங்கப்போகும் சமயம், சரியாக இது அவளது நினைவுக்கு வந்து விடும். இப்போது இவர்களுக்கு ஹாய் சொல்லி பேசிக் கொண்டிருந்தால்.... அதை பப்பு பார்த்துவிட்டால்.....நினைக்கவே பயமாக இருந்தது.
கடைசியாக பப்புவும் வந்தாள். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு ஓடி விட்டாள்.
வீட்டிலும் கூட இதைப் பற்றி எதுவும் பேசவில்லை.
ஆன்ட்டியை பார்த்தது பற்றி நானாக ஆரம்பித்தபோது, "ஹேய், என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் பார்த்தியா, அவங்கதான் என் ஃப்ரெண்ட்ஸூங்க..." என்று யார் வேதஸ்மிருதி, அக்ஷயா, பி.ஹர்ஹினி, மெரில் என்றெல்லாம் பெருமையாக சொல்ல முற்பட்டாள். பொறாமையற்ற அந்த பப்புவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
மற்ற ரிமார்க்ஸ் : சொற்களுக்குகிடையில் இடைவெளி விடுவதை அறிந்து எழுதுகிறாள். கதை சொல்வதில் ஆர்வம் இருக்கிறது.
ஆன்ட்டி சொல்லாமல் விட்டது : நான் கூட உட்கார்ந்து எழுத வைக்கும் நேரங்களை விட அவளாகவே ஹோம் ஒர்க் செய்தால் அழகாக எழுதுகிறாள்.
Tuesday, November 23, 2010
குட்டீஸ் பத்திரிக்கைகள்
அவற்றில் தேறியவை,
1. Magic Pot
2. Kids punnagai
மேஜிக் பாட் : மாதமிருமுறை வருகிறது. விலை 15 ரூ
பெரும்பாலும் ஆக்டிவிட்டிகள்தான். ஆக்டிவிட்டிகளும் பப்புவுக்கு போரடித்துவிட்ட காலகட்டம்தான் இது.(ஜம்போ ஆக்டிவிட்டிஸ், 501 ஆக்டிவிட்டிஸ், 1000 ஆக்டிவிட்டீஸ்.....இது இல்லாம தனியா டாட் டூ டாட், கலரிங், ஸ்டிக்கர் புக்..பாதிக்கு மேல் வீணாகி கிடக்கும்..எங்கே போய் முடியுமோ!). புள்ளிகளை இணைத்தல், 5 வித்தியாசங்கள், மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடித்தல், வழி காட்டுதல்,சரியான நிழலை கண்டுபிடித்தல் என்று....போனால் போகிறதென்று இரண்டு படக்கதைகள் இருந்தன. நீதிக்கதையாக இல்லாமல் ஒரு குட்டி கதையும் இருந்தது. மற்றவை அனைத்தும் நீதிக்கதைகளே.... நீதிக்கதைகளைக்....அதுவும் என் வாயால் கேட்கும் பாக்கியம் பப்புவுக்கு இன்னும் வராததால் கதைகள் தப்பித்தன!
கிட்ஸ் புன்னகை: மாதமொருமுறை வருகிறது. விலை 25 ரூ
பெயரைப் போலபே பைலிங்குவல்.இதிலும் பெரும்பாலும் ஆக்டிவிட்டிகள்தான். அதே மாதிரியானவை. கொஞ்சம் விடுதலை போராட்ட வீரர்கள் பற்றிய படக்கதைகள், தமிழில் விடுகதைகள், விலங்குகள்,இடங்கள் பற்றிய பொது அறிவு தகவல்கள்...இதில் வெரைட்டி இருந்தது போல இருந்தது. முதல் புத்தகத்திற்கு பப்புவிற்கு எனது அருகாமை தேவைப்படவில்லை. இதற்கு அப்படி இருக்கவில்லை.
இரண்டையும் தொடர்ந்து வாங்கிப்பார்க்கலாமென்று இருக்கிறேன். கலரிங் சுத்தமாக பப்புவுக்கு விருப்பம் இல்லை. அவளாக வரைந்து கலரிங் செய்யவே விருப்பம். குரங்கு கபீஷ், சுப்பாண்டி, பலமுக மன்னன் ஜோ, வேட்டைக்காரன் வேம்பு முதலிய கதாபாத்திரங்களை நம்மால் மறக்க முடியுமா?! அது போல சுவாரசியமாக இப்புத்தகங்களில் எதிர்பார்த்தேன்... சுப்பாண்டி காமிக்ஸாக, தனி புத்தகமே வருகிறது. பப்புவுக்கு காமிக்ஸ் புரிபடவில்லை. படக்கதைகள், எளிய கதைகள் இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஐந்து (5-7) வயதினருக்கான குட்டீஸ் பத்திரிக்கைகள், தமிழில்/ஆங்கிலத்தில் ஏதாவது இருந்தால் பகிர்ந்துக்கொள்ளவும். தமிழில், இப்போதைக்கு சிறுவர்மணி ஓக்கே.. அதிலும், படக்கதைகள், புதிர்கள்,சில உலக நாடோடிக்கதைகள் மட்டுமே பப்புவின் விருப்பம்.
உங்க வீட்டுலே வாங்குகிற குட்டீஸ் பத்திரிக்கைகள் என்ன?
Monday, November 22, 2010
bak.. bak.. bakwas
செய்றதுக்கு எக்கசக்க வேலை இருக்கும்போது, 'நீ என்ன சொல்றது, நான் என்ன செய்றது'ன்னு அதை எல்லாத்தையும் தூக்கி அப்படியே போட்டுட்டு, போஸ்ட் போடறதுதான் வழக்கம்.
ஆனா, நான் இன்னைக்கு :-( (ஐயோ,சோகமெல்லாம் இல்ல..வெட்டினு சொல்ல வந்தேன்!) அதனாலே, நீங்க இன்னைக்கு...:-)