Saturday, March 29, 2014

பப்பு டைம்ஸ்

நேற்று இரவு, படுக்கையில் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருந்தாள், பப்பு. அவளது பள்ளியில் பழங்கள் தினம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பழங்கள் கொண்டு வந்து அவர்களே தோல்நீக்கி, வெட்டி, விதைகள் நீக்கி கலவை செய்யவேண்டும். நடந்த கலாட்டாக்களை சொல்லிக்கொண்டிருந்தவள், அவளது வகுப்பு தோழர்களுக்கிடையிலான பாலிடிக்சையும் சொல்ல ஆரம்பித்தாள். அது வழக்கமான ஒன்றுதான். கேட்டு கேட்டு எனக்கே அத்துபடி. ஆனால்,யார் எப்போது கட்சி மாறுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாததுதான் அதன் சுவாரசியம்.அப்படி, எல்லோரும் ஒரு குழுவாகி ஒரே பையனை மட்டும் டார்கெட்டாக்கியதை சொல்லிக்கொண்டிருந்தாள். இதற்கெல்லாம், பப்புவும் விதிவிலக்கல்ல என்றாலும் மற்றவர்கள்  தவறு செய்யும் போது நாம் புனிதர்கள் ஆகி தத்துவங்கள் உதிர்ப்பதில் குறைந்தவர்க‌ளல்லவே! ;-) அப்படி, பப்பு உதிர்த்த தத்துவம்

"we can even live without brother or sister. But, can we live without friends?""

:-)

 என் கால்களை பிடித்து ஆடிக்கொண்டிருந்தபோது, பப்பு சிந்தித்தது

"ஆச்சி, நம்ம‌ காலை முன்னாடி மடக்க முடியாது, கையை பின்னாடி மடக்கமுடியாது....இல்ல‌ ஆச்சி? "

#வில்லேஜ்_விஞ்ஞானி ;-)


 

                                                        "ஆச்சி......நான் முஸ்லீம்ப்பா!" 

பப்புவும் பொன்மொழிகளும்

பப்பு, எப்போது தத்துவங்களையும், பொன்மொழிகளையும் வீசுவாள் என்று கணிக்கவே முடியாது. 'கடையில பொருள் வாங்கிவிட்டு எப்போவும் பில் வாங்கணும்' என்று சொல்லியிருப்பேன். என்றைக்காவது காசை கொடுத்துவிட்டு பேச்சு சுவாரசியத்தில் திரும்புகையில் "இந்தாங்க பில்" என்பார் கடைக்காரர். அதை சுட்டி காண்பித்த, அடுத்த நொடிகளில் ஒரு பொன்மொழி தயாராக இருக்கும். 'நாம செஞ்சுட்டுதான் அடுத்தவவங்களுக்கு சொல்லணும்" என்பதாக!

"மேக் ஹே வென் த சன் ஷைன்ஸ் என்றால், நிறைய பேர், 'சன் வந்ததும் "ஹேய்"ன்னு கத்துறதுன்னு' நினைச்சுக்கிறாங்க. ஆனா அது இல்ல. சன் வரும்போது, நாம பயிரிட்டு ஹே செய்யணும்" என்றெல்லாம் பொன்மொழிகளும் விளக்கங்களும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும்.

 எனக்கோ, இந்த பொன்மொழிகள் எல்லாம்  எதிர்பாராத நேரங்களில் வீசப்படும் பந்து போல...சிலது நேராக நம் கைக்கு வந்துவிடும். பலது, மூக்கை பதம் பார்த்துவிட்டு போகும். இன்று அப்படியான ஒரு நாள். ஒன்றை சரியாக கேட்ச் பிடித்தாலும், இன்னொன்றுக்கு எனது மூக்கை கொடுத்தேன்.

பள்ளிக்கூடத்துக்கு கிளம்பியாகிவிட்டது. ஆனாலும், ஊரிலிருந்து வந்திருந்த மாமாவுடன் ஒரே கதை. பப்புவின் பள்ளியில் டீச்சர்களை "ஆன்ட்டி" என்று அழைக்கும் முறை பற்றி மாமாவும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். கதவை திறந்து வெளியே வருவதும்ம, பின்னர் திரும்பி உள்ளே சென்று மாமாவை கிண்டல் செய்வதுமாக இரண்டுமூன்று முறை நடந்துவிட்டது.  இந்தமுறை, வெளியே வந்தவள், என்னை நிமிர்ந்து பார்த்து, சொன்னாள்.

 "Parents are the first teachers; teachers are the second parents."

"நீ வந்தா வா , இல்லேன்னா போ, நான் ஸ்கூலுக்கு போறேன்"(!) என்று வண்டியை துடைக்கலானேன். பேசி முடித்து, வண்டியில் வந்து ஏறிக்கொண்டவள், கேட்டாள்,

"ஆச்சி, படிப்பு முக்கியமா, உயிர் முக்கியமா?"

நேரமாகிவிட்ட‌ அவசரத்தில்,  எதை தேர்ந்தெடுத்து சொல்வது என்று தெரியாமல், பொதுவாக‌ "ரெண்டுமே தான்" என்று சொல்லிவிட்டு, "நம்ம கண்ணு மாதிரி" என்றேன். நல்லவேளையாக தப்பித்தேன் என்று என்னை நானே மனதுள் மெச்சிக்கொள்ளவும் செய்தேன். ஆனால், இதற்குமுன் இப்படி ஒரு பொன்மொழியை கேள்விபட்டதும் இல்லை!

"கரெக்ட்" என்று பாராட்டும் கிடைத்தது. அடுத்ததாக, "எப்படிப்பா உனக்கு தெரியும்?", என்று ஒரு கேள்வியை வீசினாள், ஏதோ பொன்மொழிகளுக்கெல்லாம் தானே காப்புரிமை வைத்திருப்பதுபோல்.

"அதுக்குதான் எதையும் சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்", என்று நானும் எனக்கு கிடைத்த‌ வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். ;)

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை...

"உயிர்  இருந்தாதானே படிக்க முடியும்? இல்லேன்னா எப்படி படிக்க முடியும்? ஆனா, படிச்சாதானே வாழ முடியும்? இல்லேன்னா எப்படி வாழ முடியும்?" என்று விளக்கம் கொடுத்தவள், சற்று நேர அமைதிக்குப்பின்,

"நாலெட்ஜ் முக்கியமா? உயிர் முக்கியமா? என்று அடுத்த ஆயுதத்தை வீசினாள். திரும்பவுமா....இந்தமுறை நீயே ஜெயிச்சுக்கோ என்பது போல, "தெரியலையே" என்றேன்.

கையில் காசு;வாயில் தோசை என்பதுபோல், கை மேல் விளக்கம்.... 'தெரியாது' என்றதும் உற்சாகக்குரலில் விளக்கம், "போத் ஆர் லைக் டூ ஐஸ். உயிரோட இருந்தாதானே நாலெட்ஜை ப்ராக்டிஸ் பண்ண முடியும். நாலெட்ஜ் இருந்தாதானே உயிரோட வாழ முடியும்"

:‍)  

மன்னிப்பும் கூடவே ஒரு ஞானமும்

வெளியில் கிளம்ப வேண்டும். நேரமாகியும், அதைப்பற்றிய அக்கறை கொஞ்சமும் இன்றி விளையாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தாள்.  "முகம் கை கால் கழுவு" "பையை எடுத்து வை" "பாட்டில்லே தண்ணி எடுத்து வை" ம்ஹூம்! காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அட்வைஸ் கலந்த திட்டுகளோடு சில பல மிரட்டல் கலந்த அடிகளோடு ஒருவழியாக கிளம்பியாயிற்று.

எவ்வளவு நேரம்தான் உர்ரென்று இருப்பது. அவளுக்கு பேச வேண்டும்.  ஏதோ சொன்னாள். எனக்கு சரியாக கேட்கவில்லை. "என்ன சொன்னே" என்று திரும்ப கேட்டேன். "நீயே யோசிச்சு பாரு. நீ செஞ்சதுலே என்ன தப்பு இருக்குன்னு" என்றாள். அவ்வ்வ்வ்...'எங்கேயோ கேட்ட குரல் மாதிரி என் டயலாக் எனக்கேவான்னு' நினைத்தபடி "என்ன" என்றேன். அப்புறம்தான் புரிந்தது, அவள் முதலில் முணுமுணுத்தது, "சாரி கேக்கணும்னு தெரியாதா" என்பது. 'சாரி' என்றேன். நொடிகளில் சகஜமாகி கதையளக்க ஆரம்பித்துவிட்டாள்.

வீட்டுக்கு திரும்பி வரும்வழியில்தான் எனக்கு இந்த சந்தேகம் தலைதூக்கியது. பப்பு என்னைப் பற்றி நினைக்கும்போது அவளது மனதில் உடனடியாக  நினைவுக்கு வரும் என்னைப்பற்றிய பிம்பது எது?கோபமான ஆச்சியா அல்லது ஃப்ரெண்ட்லியான ஆச்சியா? அவளிடமே அதை கேட்க முடிவு செய்தேன்.

"என்னை பத்தி  நினைச்சா உனக்கு என்ன தோணும்?"

...... பதிலில்லை.

"நீ என்னை பத்தி திங்க் பண்ணுவே இல்ல‌...அப்ப உனக்கு எப்படி ஞாபகத்துக்கு வருவேன்?"


"நீ கோவ மூட்ல இருந்தா இது என்ன லூசு அம்மா?  நினைச்சுப்பேன்.நீ ஜாலியா எனக்கு ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா சொல்லிக்கொடுக்கும்போது, "நல்லவேளை.... இது எனக்கு அம்மாவா வந்துச்சு...ப்பா..நான் இதுகூட வாழ்ந்துக்கறேன்ன்னு நினைப்பேன்."

:-)

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, உனக்கு தெரியுமா ? அ  தி மு கா"

"அப்படின்னா என்னப்பா...எனக்கு தெரியாதே?!"

"தி மு கா மாதிரி அ  தி மு கா...ஜெயலலிதா கட்சி...நேத்து வீட்டுக்கு வந்துச்சு"


"வீட்டுக்கு வந்துச்சா?எப்போ? எனக்கு தெரியாதூ!!"

"வீட்டுக்குன்னா வீட்டுக்கு இல்ல...பாஸ் பண்ணி போனாங்க..ரோட்ல எல்லாருக்கும் லெட்டர்ஸ்.."

"நீ வாங்கினியா?  உனக்குதான் ஜெயலலிதா புடிக்குமே.."

"இல்லே....ஜெயலலிதா கொண்டு வந்து குடுத்தா வாங்கிக்கலாம். அதுதான், தூத்துக்குடி போயிருக்காங்களே!"

!!!





"ஆச்சி,ஒரு கேம்.யெஸ் ஆர் நோ?" - பப்பு

"யெஸ்" - பலியாடு

"யெஸ் சொல்லலாம்..ஒரே ஒரு நோ அலவுட்" -பப்பு

"ம்ம்ம்" - அதே பலியாடு

"ஜனவரி ஐ பீட் யூ?"-பப்பு

ஙே...."யெஸ்"

"பிப்ரவரி ஐ பீட் யூ?" -பப்பு

"யெஸ் "

"மார்ச்சு ஐ பீட் யூ" -பப்பு

"யெஸ்"

ஏப்ரல் மாதத்துக்கு ஏதோ இருக்கும் போல இருக்கு...கவனமாக இருக்கும்.

"ஏப்ரல் ஐ பீட் யூ"

எதுக்கும் யெஸ் சொல்லி வைப்போம்.

"யெஸ்"

"மே ஐ பீட் யூ?"-பப்பு

"ஓ நோஓஒ"

ஆகா...நல்லவேளை தப்பிச்சேன்!



 I had a wife
Her name is life
In my life,
I stay with my wife!

 -  பப்புவுக்கு உதித்த தத்துவம்

#ஆர்டரின்_பேரில்_இங்கு_கவிதைகள்_செய்து_தரப்படும்:)

டெரரா இல்ல இருக்கு!!

 கடையிலிருந்து வெளியில் வந்தோம். வழியில், ஆங்காங்கே சிலர் கும்பலாக நின்றுக்கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். வழி, குறுகலாக இருந்ததால், நாங்கள் கடக்கும்போது அவர்கள் சிரித்தது மிக சத்தமாக கேட்டது.

"ப்பா....ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க!காதே வலிக்குது"  என்றேன்.

"ஏன்னா, கேர்லும் கேர்லும் நடந்துபோனா அப்படிதான்" - பப்பு

என்ன்னாது?? இதெல்லாம், அதுக்குள்ளே உனக்கு தெரியுதா என்று மனதுள் நினைத்தபடி....ஆர்வக்குட்டியாகிவிட்டேன்.

"ஓ! அப்படி சிரிப்பாங்களா என்ன?" என்றேன்.

"இல்லல்ல...சும்மா சொன்னேன்."  - பப்பு

"அப்போ பாயும் பாயும் போனா நீங்கள்ளாம் சிரிப்பீங்களா"  - நாந்தான்.

"இல்ல...பாயும் கேர்லும் போனாதான் நாங்க சிரிப்போம்! தே போத் ஆர் இன் லவ்னு"  - பப்பு

அவ்வ்வ்வ்! அராஜகமா இல்ல இருக்கு இது!

"அப்போ கேர்லும் கேர்லும் போனா?"  - மீ தி அப்பாவி

"அவங்க ஃப்ரெண்னட்ஸ்"  - பப்பு

"பாயும் பாயும் போனா?" - நாந்தான்.

"அவங்க எனிமீஸ்"  - பப்பு

"அப்புறம், பாயும் கேர்லும் இப்படி பார்த்துகிட்டா சிரிப்போம் ஆச்சி... க்ளாஸ்லே, இங்கே பாரு,  ‍‍ ஒரு பையன் மற்றும் இன்னொரு பெண்ணின் பேரை சொல்லி, அவங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அப்போ, நாங்க சிரிப்போம். அப்புறம், வெட்னஸ்டே வெட்டிங்டேன்னு சொல்லுவோம்"  - பப்பு

அவ்வ்வ்வ்வ்வ்!எகொச‌!!

" வேற யார் யாரை அப்படி சொல்லி சிரிப்பீங்க?"  - நேரடியா கேக்கமுடியாத சோகம் எனக்கு!

இன்னொரு பையன் மற்றும் பெண் பெயரை சொல்லி,  எப்படி பார்த்துக்கொள்வது என்றும் டெமோ.

"அப்புறம், உனக்கு? நீ யாரை அப்படி பார்த்து சிரிப்பே?"  - மீ

"நான் (இன்னொரு பையன் பெயரை சொல்லி) அவனும் அப்படி பார்த்துக்கிட்டோம். அவன் இல்ல ஆச்சி, இப்படி பார்த்தான் (கொஞ்சம் ஸ்டைலாக கழுத்தை எல்லாம் திருப்பி காட்டி) அப்போ, எல்லாம் சிரிச்சாங்க. வெட்ன்ஸ் டே வெட்டிங் டே!"  - பப்பு

எனக்கு எப்படி இருந்திருக்கும்!!  :-)))

ஆச்சரியமாகவும்,  ரொம்ப சிரிப்பாக இருந்தது. நான் சிரிப்பதை பார்த்து, அவளே தொடர்ந்தாள்.

" இங்க பாரு ஆச்சி, ஸ்னாக்ஸ் ஷேர் பண்ணுவோம் இல்ல..அப்புறம், ஏதாவது திங்க்ஸ் தொலைச்சுட்டா குடுக்கும்போது பார்த்து சிரிப்பாங்க இல்ல...அப்போ, எல்லாரும் சிரிப்போம்!"

டெரரா இல்ல இருக்கு!!

பப்பு டைம்ஸ்

இரண்டு நாட்களுக்கு முன், ரத்த பரிசோதனைக்கு செல்ல வேண்டியிருந்தது. காலையிலேயே செல்ல வேண்டியிருந்ததால், இரவே பப்புவிடம் தயார்படுத்த ஆரம்பித்தேன்..

"பப்பு, நீயேதான் காலையில ரெடியாயிருக்கணும். நான், காலையிலேயே டெஸ்ட்க்கு போணும். உனக்கு கிளம்ப ஹெல்ப் பண்ண முடியாது. எழுப்புனவுடனே எழுந்துக்கோ...நான் வந்ததும், நீ ரெடியா இருந்தாதான், ஸ்கூலுக்கு போக சரியா இருக்கும்..இல்லேன்னா, நீ லீவ்தான்..அப்புறம், ஸ்கூலுக்கு போக முடியாது"

.......

மாலையில், பரிசோதனை ரிப்போர்ட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தேன். அந்த ரிப்போர்டுகளை கையில் வைத்து புரட்டியபடி,  பெரிம்மா கேட்டவற்றிற்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். என் கைகளில் இருப்பதை பார்த்துவிட்டு ஓடிவந்தவள், மூச்சிரைக்க கேட்டாள்..

"ஹேய், ரிசல்ட் வந்துடுச்சாப்பா....எவ்ளோ நாள் உயிரோட இருப்பே?"

அவ்வ்வ்வ்வ்வ்!

 
"ஆச்சி,இங்க பாருப்பா... மாடு, டாக்ல்லாம் இருக்குல்லப்பா.... அது கண்ணுக்குல்லாம் கலர்சே தெரியாது. எல்லாம் பிளாக் &ஒயிட்டாதான் தெரியும். தெரியுமா? குடையெல்லாம் அது முன்னாடி நாம ஓபன் பண்ணா அதுக்கு எப்படி தெரியும்? கருப்பாக தெரியும் இல்ல ஆச்சி!ஆனா,மாடு க்கு ரெட் கலர் பார்த்தால் எப்படி முட்ட வரும்... அதுக்குதான் கலர் தெரியாதே? எப்படி ஆச்சி?"

??

இப்போ பப்புவோட டர்ன்னு நினைக்கிறேன்... #இது_கூடவா_உனக்கு_ தெரியாது?

"ஆச்சி,நானே ஒரு proverb உருவாக்கியிருக்கேன்ப்பா.சொல்லட்டா..

A kite without its tail can't fly.
Meaning-
A man without knowledge can't work."

#அவ்வ்வ்வ்வ்

"bye Pappu! Have a good day! I laaave you!  - Me

"I can not say anything now because I Love you and I hate you"  - Pappu

#அவ்வ்வ்வ்வ்



ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். நேற்றைய இரவில் நடந்த கொடூரமான விபத்தை பற்றி சொல்லி அப்போதுதான் சொல்லிமுடித்திருந்தார் , ஆட்டோக்காரர். கொஞ்ச தூரம் தள்ளி வந்துவிட்டாலும், அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, "என்னா பப்பு" என்று என்னையறியாமலேயே சொல்லிவிட்டேன். அவள் பாட்டுக்கு வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், "ஏன் ஆச்சி? ஏன் 'என்னா பப்பு'னு சொன்னே?" என்று குடைய ஆரம்பித்தாள். ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தேன்.

சமாதானமாகாமல், 'ஏன் அப்படி சொன்னே?' என்று இழுத்தவள், "நான் நினைக்கிறது உனக்கு தெரிஞ்சுடுச்சா?அது ஆ- லே ஆரம்பிக்கும்தானே" எனக் கேட்டாள்.

பல்ப்!! இந்த விளையாட்டு நல்லா இருக்கே!

ஆமாம் என்பது போல தலையாட்டினேன்.

"என்ன நினைச்சேன் சொல்லு" - பப்பு

"நான் சொல்ல மாட்டேனே?" -  நான்

"அப்போனா உனக்கு தெரியாதுன்னு அர்த்தம்"  - பப்பு

"சரி, நீயே சொல்லு, என்ன நினைச்சேன்னு"  - நான்

"அந்த லாரியிலே ஒரு ஆடு இருந்துதே, அதை பத்தி நினைச்சேன், எல்டர்ஸ் பண்ணலாம் இல்ல, அந்த வேலையை. ஏன் அந்த குட்டி பையன்தான் ஆட்டுக்கு வைக்கோல் எடுத்து ஃபீட் பண்ணிக்கிட்டிருக்கான்"

#அவ்வ்வ்வ்

"ஆச்சி, எனக்கு வரும் இல்ல...அடுத்த பர்த்டே, அதுக்கு நாம இங்லேண்ட் போலாமா?"

#அவ்வ்வ்வ்வ்



புரந்தர் கோட்டை முகவரி தெரியுமா உங்களுக்கு?

காலையில தட்டுல இட்லியை வைச்சுட்டு, 'நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள சாப்பிட்டுட்டு ரெடியா இருக்கணும்"னு சொல்லிட்டு போறேன்.

"சிவாஜீஈஈஈ...வீ ஹாவ் கேப்சர்ட் யுவர் புரந்தர் ஃபோர்ட்"

"ஏய்...இப்ப நிறுத்த போறியா இல்லையா? என்ன சொன்னேன் உன்கிட்டே?"

"யெஸ், ஐ நோ! ஐ ஹாவ் டூ திங்க் அபவுட் இட்.சம்பாஜிஈஈஈ..."

"நிறுத்து...அஞ்சு நிமிசத்துல வருவேன்...தட்டு காலியா இருக்கணும்"

......

#ஸ்ப்ப்ப்பா


இது முடிஞ்சுதுன்னு ஸ்கூலுக்கு போய்க்கிட்டு இருக்கோம்.

"ஆச்சி, சிவாஜியும், அக்பரும் ஒரே காலத்துல இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?யாரு வின் பண்ணியிருப்பா?" - பப்பு

"...சிவாஜிதான்!"

"எப்படி சொல்றே?" - பப்பு

"சும்மாதான்...சிவாஜி clever இல்ல.அதான் அப்டி தோணுச்சு"

"ஹிஹிஹி...இல்ல,ஆச்சி..ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருப்பாங்க." - பப்பு

'அட.... இது எனக்கு தெரியாம போச்சே லுக் '

"சிவாஜி மவுடெய்ன் ராட்- னாலும்,  அக்பர்தான் வின் பண்ணியிருப்பார்.   அக்பர், வெறும் கையாலயே வாளை எல்லாம் உடைச்சிடுவார். ஔரங்கசீப்பை புடிக்கவே புடிக்காது. உனக்கு?" -  பப்பு


#இதுவேறையா...ஸ்ப்பாஆஆஆஆ

ஆமா, புரந்தர் ஃபோர்ட் எங்க இருக்கு?
போகணுமாம்!!

பப்பு டைம்ஸ்

மின்சார ரயில் நிலையத்தில் அவள் கைகாட்டிய ஹல்திராம்ஸ் பாக்கெட்டுகளை மறுக்காமல் வாங்கி கொடுத்திருந்தேன்.  ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்தபிறகு, மூன்று பாக்கெட்டுகளையும் ஒருதரம் பார்த்து, ஒன்றை தேர்ந்தெடுத்தபின், "

"ஆச்சி, நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம். நாம ஃப்ரெண்ட்ஸ்.  எல்லா அம்மாவும், "அம்மா"னு கூப்பிடுன்னுதானே சொல்றாங்க....நீ? நீ என்னை ஃப்ரெண்ட் மாதிரிதானே வைச்சுக்கறே. you give me freedom right! "

அட! ஆமாம், அவளை ஒருநாளும் அம்மான்னு கூப்பிடுன்னு சொன்னதேயில்லை!! :‍-) :-)

அது இருக்கட்டும்! ‍வாங்கியதும், "உனக்கு - எனக்கு" என்று அடித்து பிடித்து - எடுத்துக்கொள்வதுதானே நமது குடும்ப கலாச்சாரம்! அவளிடம்,  "நீயெல்லாம் ஒரு அம்மாவா?" என்று திட்டு வாங்கினால்தானே, எனக்கு நிம்மதியாக இருக்கும்! இன்னைக்கு என்ன ஒரே ஃபீலிங்ஸ்!! ;-)

அதைவிட, எல்லா பாக்கெட்டுகளையும் தீர்த்தபிறகு, சொன்னதுதான் ஹைலைட்!

"ஆச்சி, இனிமே இதெல்லாம் வாங்க வேண்டாம்ப்பா! வாங்கவே கூடாது!!புரிஞ்சுதா!"

 
நூற்றாண்டுகள் என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இப்போதுவரை, முழு ஆண்டையும் 'ஒன் தவுசண்ட் அன்ட் ..' அல்லது 'டூ தவுசண்ட் அன்ட் ...' என்று சொல்லிதான் பழக்கம். பல்லவர்களைப் பற்றி வேறு சமீபத்தில் பேச்சு வந்திருந்தது. அவர்கள் 8ஆம் நூற்றாண்டு என்றதும்,

"ஆச்சி, எனக்கு ரொம்ப புடிச்ச கிங்க்ஸ் அக்பரும், சிவாஜியும்தான். ஏன் ஆச்சி, நாம இயர்சை அக்பர் இயர்ஸ், ஜோதா இயர்ஸ், சிவாஜி இயர்ஸ், நர்சிம்ம பல்லவா இயர்ஸ்ன்னு வைச்சிக்கலாம் இல்ல. அப்போ 1350ன்னு சொல்றதை விட நல்லா இருக்கும் இல்ல. இதை, அப்படி வைச்சிக்கலாம்னு யாரும் யோசிக்கலையா?" -  பப்பு

"சொல்லுவாங்களே, 'அக்பர் காலத்துலே' இல்லேன்னா 'பாண்டியர்கள் காலத்துலே'ன்னு சொல்லுவாங்களே...அப்பன்னா என்ன அர்த்தம்...அவங்க இருந்த இயர்ஸ்ன்னுதானே அர்த்தம்."

"அது இல்ல ஆச்சி...இயர்சே இல்லாம, அப்படியே மாத்திட்டா நல்லா இருக்கும் இல்ல...ஈசியா"  - பப்பு

#நாட்டாம_தீர்ப்பை_மாத்து





 வேளச்சேரி ரயில் நிலையம். ஓடிப்போய் வரிசையில் இடம் பிடித்தவளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு ஆன்ட்டி "ம்ம்...ஸ்மார்ட்டா நடந்துக்கறே" என்று சிரித்து, அவளையே முன்னால் நிற்க சொன்னார்.

சிரித்தபடி, பப்புவை பின்னுக்கு இழுத்து, 'நீங்க வாங்கிக்கோங்க' என்று அவரிடமும், "அவங்கதானே முன்னாடி வந்தாங்க' என்று பப்புவிடமும் சொல்லிவிட்டு, டிக்கெட் எடுத்து பெட்டியில் அமர்ந்தோம்.

எப்பவும்,வேகமா போய் இடம் பிடிக்க சொல்லும் ஆச்சி ஏன் இன்னைக்கு  ரொம்ம்ம்ப நல்லவளாட்டாம் ஆக்ட் பண்ணுது (?!)என்று குழம்பிய பப்பு கேட்டாள்,

"யூ குட் யூஸ் தட் ஆர்ப்பசுனிட்டி, ரைட்?"

;-))) 

'சம்பவக்கதை'

'அதை செய்யாதே, இதை செய்யாதே. செய்யக்கூடாது" என்றெல்லாம் சொன்னால் நானே கேட்டதில்லை. இதில், பப்பு மட்டும் எப்படி கேட்பாள். அப்படியே சொன்னாலும், பூமராங்காய் திரும்பி வரும் 1008 கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பை யார் சுமப்பது! அந்த மாதிரி சமயங்களில், அவளிடம்  சிலபல "பகீர் கதைகளை" எடுத்து விடுவதுண்டு.

பபுள்கம் சாப்பிட்டு, பெரிய முட்டை விட்டு, அது தொண்டையில்   மாட்டிக்கொண்ட சிறுமியின் கதை, பெரியவங்க இல்லாதப்போ கிச்சனில் நுழைந்து குறும்பு செய்த சிறுவனை போலீஸ் பிடித்த கதை, ஊற வைத்த அரிசி சாப்பிடும் பழக்கம் கொண்ட‌ ஒரு பெண்ணுக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த கதை, சாப்பிடும்போது பேசிக்கொண்டே இருந்த சிறுமிக்கு காற்று போகும் பாதையில்உணவு மாட்டிக்கொண்ட கதை   என்று திகில் கதைகள் பல ரூபத்தில் வரும்.  எனக்குத்தான் கதைகளே தவிர, பப்புவை பொறுத்த வரை, இவையெல்லாம் எப்போதோ யாருக்கோ  நடந்த சம்பவங்கள்!!

இப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், என்னையே திடுக்கிட வைத்தது ஒரு  'சம்பவக்கதை'.

வாஷ்பேசினில், முகம் கழுவிக்கொண்டிருந்த பப்புவிடம், 'வாஷ்பேசின் பக்கத்துலே,  எப்பவுமே ஃபேஷ் வாஷ் இருக்கும்னு நினைச்சுக்க கூடாது பப்பு, அது ஹேண்ட் வாஷா கூட இருக்கும். நம்ம வீட்டுலன்னு இல்ல, எங்க போனாலும், நீ இத நோட் பண்ணனும்' என்று சொல்லி வைத்தேன். முகம் கழுவிக்கொண்டு, தலை பின்னிக்கொள்ள வந்த பப்பு லைட்டாக ஆரம்பித்தாள்.

"ஆமா, ஆச்சி, ஒரு பொண்ணு வாஷ்பேனில் முகம் கழுவ போச்சு. அங்க இருந்த பாட்டிலை, எடுத்து பார்க்காம, முகத்துல போட்டு முகம் கழுவுச்சு. தேச்சப்பறம்தான் அதுக்கு தெரியுது, அது சோப் இல்லன்னு...அது என்னது? அவங்க அம்மா சர்ஃப் எக்சலை வைச்சிருக்காங்க..அதை எடுத்து போட்டுக்கிச்சு. அதுக்கு எப்படி இருக்கும்? ஒரே அழுகை!வேணுமா? (தேவையா? என்பதன் பொருள்)"

அவ்வ்வ்வ்வ்!!

இந்த பொண்ணு நெஜமாத்தான் சொல்லுதா இல்ல என்னை கிண்டல் பண்ணுதா?

#இனிமே_ஏதாவது_சம்பவத்தை_சொல்லுவியா?_சொல்லுவியா? ;‍-)



காலையில் அரக்க பரக்க எழுப்பினாலும், ஆற அமர, ஏழு மணிக்கு குறைந்து எழவே மாட்டாள். அப்படியே எழுந்தாலும், அரைக்கண்ணை மட்டும் திறந்து, 'நைட்லாம் நான் தூங்கவே இல்லப்பா. இப்போதான் தூங்கவே ஆரமிச்சேன்' என்று யோசிக்காமல் சொல்லுவாள்.
 பல் துலக்க நிற்கும்போதுதான், 'ஆச்சி எனக்கு ஒரு பயங்கரமான கனவு. என்னா தெரியுமா' என்று ஆரம்பிக்கும்போதே, எனக்கு பிபி ஏறும். ஈவு இரக்கம் பார்க்காமல்,  'கட் கட்'  சொன்னால்தான், நேரத்துக்கு கிளம்ப முடியும். ('இதெல்லாம் வழியில சொல்லு. இப்போ என்ன பண்ணனுமோ அதை பண்ணு')

இன்றும், அப்படியான ஒரு நாள்.

'ஒரு பயங்கரமான கனவுப்பா' என்று ஆரம்பித்தாள். நேற்று இரவு, நாய்கள் குரைத்த சத்தத்தில் நடு இரவில் விழித்துக்கொண்டவள் கொஞ்ச நேரம் தூங்கவில்லை. 'தட்டி குடு,ஆச்சி' என்று சொன்னபடி புரண்டு கொண்டிருந்தாள்.  (நாமே தட்டி கொடுத்தால், 'என்னை என்ன, பேபின்னு நினைச்சியா' என்று சண்டைக்கு வருவாள்!!ஸ்ப்ப்பா!)

தூக்க கலக்கத்தில், வழக்கம்போல, 'தவுஸன்ட் ஆடுங்க‌  வேலியை தாண்டி குதிக்குமே, அந்த ஆடுங்களை ஒன்னொன்னா கவுண்ட் பண்ணு' என்று சொல்லிவிட்டு திரும்பி தூங்கிவிட்டேன்.

பேய் கனவைத்தான், அவ்வப்போது, பயங்கரமான கனவு என்பாள்.சரி, நாய்கள் குரைத்ததால் விழிக்கவில்லை போல, பேய் கனவால்தான் பயந்து விழித்திருக்கிறாள்... கேட்போம் என்று லேசாக‌ அசந்துவிட்டேன்.

"கொடி ஏத்தணும். ஓகே! அது ரொம்ப ஹைட். அது வரைக்கும் ஏத்தணும். அதை நான் தான் ஏத்தணும்னு பிரபா ஆண்ட்டி சொல்லிட்டாங்க. மாஸ்டருக்கு கூட எப்படி ஏத்தணும்னு தெரியல. நாங்க ஏத்த ட்ரை பண்ணிக்கிட்டிருக்கும் போது ஒரு பேய் வந்துடுச்சு." ‍ - பப்பு

.....

(இப்படி கேப் விட்டிருக்கும்போதே சுதாரிச்சு இருக்கணும்!)

"ம்ம்ம்" ‍ - மீ

"வந்து, என்னை எழுப்பி விட்டுடுச்சு அந்த பேய்."  - பப்பு

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்  

 #நானாதான்_வாலண்டியரா_வந்து_ஏமாந்துட்டேனா?! 

Sunday, March 23, 2014

பப்புவும் அலமாரியும்

எவ்வளவுதான் ஹேர்பேண்ட், ரப்பர் பேண்ட், தலைமுடிக்கு போடும் கிளிப்புகள்  இருந்தாலும், நேரத்துக்கு ஒன்றும் கிடைக்காது. கையில் இருக்கும் கிளிப்பின் இணையை இங்கேதான் எங்கேயோ பார்த்தோமே என்று இருக்கும். ஆனால், சரியான நேரத்துக்கு அதுவும் கிடைக்காது. சோபாவிலும் புத்தக அலமாரியிலுமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும். சரி, இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று இறங்குவேன். பப்புவிடமும், சொல்லி வைப்பேன். இனிமே, ஸ்கூல்லேருந்து வந்ததும் ஒழுங்கா எல்லாத்தை ஒரு இடமா வைக்கணும். எல்லாம் ஒரு நாள் மட்டுமேதான். திரும்பவும் அதே கதை! இன்று சோபாவின் மேல் கிடந்த ஹேர்பேண்டையும், ஒற்றை கிளிப்பையும் பார்த்தவுடன் அதே வீரம் வந்தது. (அவ்வப்போது இந்த ஆவேசம் வந்தாலும் ஓரிரு நிமிடங்கள் பொறுமை காத்தால் போதும்..அந்த ஆவேசத்தை கடந்துவிடலாம். )

சரி, அதை மட்டும் தேடி தேடி ஒரு டப்பாவில் வைப்பதோடு, பப்புவின் அலமாரியையும் சேர்த்தே சுத்தம் செய்துவிடலாம் என்று திடீர் ஐடியா. ஓகே! முதலில் அந்த அலமாரியை சுத்தம் செய்யலாம். பிறகு இந்த ஹேர்பேண்டையும், கிளிப்பையும் வைத்துக்கொள்ளலாம் என்று தோன்ற, அலமாரியை டார்கெட் செய்தேன். 



அந்த அலமாரி, பப்பு பிறக்கும் சமயம் செய்தது. மூன்று அடுக்கு கொண்ட ஒரு சிறிய அலமாரி. கிட்டதட்ட,  பப்புவின்  தற்போதைய உயரம் இருக்கும்.  பப்பு பிறந்த சமயத்தில், ஹக்கீஸ், ஜட்டிகள் வைக்க உபயோகப்பட்டது. சற்று வளர்ந்ததும், அவளது உடைகளை அடுக்கி வைத்திருந்தேன். அவளது உடைகள் வளர்ந்து பெரிதாகி, இடம் கொள்ளாமல் போனதும், புத்தகங்கள் அந்த இடத்தை வந்தடைந்தது. கொஞ்ச காலம் கழித்து புத்தகங்களும் வேறு இடத்துக்கு மாறின. அதே காலத்தில்தான் பப்பு ரகசியங்களையும், பொக்கிஷங்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்துக்கு வந்திருந்தாள். சரி, இதுதான் சரியான சமயம் என்று அந்த அலமாரியை பப்புவின் பெயருக்கு மாற்றினேன்.

அவ்வளவுதான். அதற்குபிறகு, அந்த அலமாரியை தொடுவதற்கு கூட யாருக்கும் உரிமையில்லாமல் போயிற்று. சீவி சீவி குட்டியாகிப்போன பென்சில்கள், பலூன்கள், பிய்ந்து போன பலூன் துண்டுகள், உடைந்து போன க்ரேயான்கள், பென்சில் சீவல்கள், ஸ்கெட்ச் பேனாக்கள், கோலிகள், காந்த துண்டுகள், அவளது டப்பாக்கள்,பெரிய உண்டியல் ஒன்று, காசு வைக்க தனி கைப்பைகள்  என்று சகலமும் நோவாவின் கப்பல் போல அடைத்து வைக்கப்பட்டிருந்தன.விட்டுவிட்டேனே அதோடு, சிறு சிறு விளையாட்டுப்பொருட்களும்.

அந்த அலமாரிக்கு அருகே நின்று கொண்டு என்ன செய்வாளோ தெரியாது...உள்ளே எதையாவது வைப்பதும், திணிப்பதும், அது கீழே விழுவதும், பின்னர் திணிப்பதும்...என்று ஒரே ரகசிய பெட்டகமாக இருக்கும். ஒரு அலமாரி என்பது பப்புவின் முக்கியமான இடமாக சில நாட்களில் மாறிப்போனது. பப்புவுக்கு தான் பொக்கிஷமாக நினைக்கும், தனக்கு மட்டுமேயான ரகசியங்களை அடைகாக்கும் கூண்டை கொடுத்தது நல்லதாக போயிற்று என்று எனக்கும் ஒருகட்டத்தில் புரிந்தது. அதாவது, இந்த வீடே பப்புவுடையதாக, அவளது பொருட்களால் நிரம்பியிருந்தாலும், மற்றவர்கள் யாரும் உபயோகிக்காத ,அவளுக்கு மட்டுமேயான ஒரு இடம் ஒரு கட்டத்தில் அவளுக்கு தேவைப்படுகிறது என்பதை யதேச்சையாக நான் புரிந்துக்கொண்டது எவ்வளவு நல்லது!

"பப்பு, இன்னைக்கு உன்னோட கப்போர்டை நாம சுத்தம் செய்யலாம்ப்பா...நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். நீ எதெது எங்கெங்க  வைக்கலாம்னு சொல்லு." என்று லைட்டாக அடி போட்டேன். முதலில், "அதெல்லாம் நானே பார்த்துக்கறேன் " என்று முரண்டு பிடித்தது. அதனால், திட்டத்தை மாற்றினேன். முதலில் அவளது உடை வைக்கும் அலமாரியை சுத்தம் செய்யலாம் என்றேன்.  ஆடு சிக்கி விட்டது.  ;-) வீட்டுக்கு அணிந்து கொள்பவை, வெளியில் அணிந்து கொள்பவை, சிறியதாகிப்போனவை என்று பிரித்து அடுக்கினோம். அவளே மடித்து கொடுத்தாள். சொல்ல சொல்ல அடுக்கியும் வைத்தாள். இப்போது லைட்டாக ஆரம்பித்தேன். "இங்கியே எவ்வளவு தூசி இருக்கு, உன்னோட அந்த கப்போர்டையும் அடுக்கிடலாம்ப்பா...இதே மாதிரி நீயே அடுக்கு..நியூஸ் பேப்பர் மட்டும் நான் போட்டு தர்றேன்..சாப்பிட்டுட்டு பண்ணலாம்" என்றதும் முழு மனதுடன் அனுமதித்தாள்.

அவள் சாப்பிட்டுவிட்டு, நான் சாப்பிடும்போது, பாயை எடுத்து விரித்து அலமாரியிலிருந்த பொருட்களை அதில் பரப்பினாள். சாப்பிட்டு முடித்து நானும் போய் சேர்ந்துக்கொண்டேன். முதல் அடுக்கிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. பிங்க் கலர் பென் ஹோல்டர், அழுக்கேறிய ஒரு நீல டப்பா, உண்டியல், மரத்தினாலான புதிர் விளையாட்டு, ஒற்றை ஒற்றையாக ஹேர்பின்கள், ரப்பர் பேண்ட்கள், ஜிகினா பொட்டலங்கள், ஒரு ஸ்டாப்ளர், அட்டைப்புதிர் பாகங்கள், வண்டி வண்டியாய் பென்சில் சீவல்கள் விதவிதமான கலர்களில் மற்றும் சிறிய சிறிய நோட்டுகள்... இன்னபிற!  ஒவ்வொரு டப்பாவாக கவிழ்த்து பின்னர் அவற்றையே அதில் அடுக்கினோம். இதற்கு மேலும் சிறியதாக பென்சில்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கும் அளவின் பென்சில்கள் சீவப்பட்டு இருந்தன. 

அடுத்த அடுக்கில், கோலி குண்டுகள், வளையல்கள், புதிர் பாகங்கள், மேலும் புதிர் பாகங்கள்,  செஸ் காய்கள், அதன் பெட்டி ...ஆ..இதென்ன.... பித்தளை டபரா செட் இரண்டும் இங்கிருந்தன! கும்பகோணம் பயணத்தில், ஞாபகமாக வாங்கியது. அதற்கு பிறகு அதனை காணவே இல்லை என்பது அவற்றை பார்த்தபிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது. டபராக்களை பார்த்தபின் ஏற்பட்ட, எனது அதிர்ச்சிக்கு பப்புவின் "ஹிஹி " என்ற சிரிப்பே பதிலாக கிடைத்தது. என்ன செய்வது. சுத்தம் செய்து பின்னர் அதே பொருட்களை அங்கேயே வைத்தோம். சுத்தம் செய்வது என்பது இங்கு அலமாரியின் அடுக்கில் 'பேப்பரை மாற்றுவது மட்டுமே'  என்று பொருள் கொள்க!

அதற்கு அடுத்த அலமாரிக்கு வந்தோம். அங்கு அடுக்கடுக்காக அட்டை டப்பாக்கள்! ஒவ்வொன்றாக எடுத்து கவிழ்த்தோம். சற்று நேரத்தில் பாய் முழுக்க வெவ்வேறு வடிவங்களில் க்ரேயான்களும், வண்ண பென்சில்களும். ஒவ்வொன்றாக பிரிக்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தோம். க்ரேயான்களை தனி டப்பாவிலும், பென்சில்களை தனி டப்பாவிலும் பிரித்தாகிவிட்டது. தற்போது மீதம் இருந்தவை ஸ்கெட்ச் பேனாக்கள், கற்கள், கிளிஞ்சல்கள், கலர் பேனாக்களின் மூடிகள்! ஸ்கெட்ச் பேனாக்களை பார்த்தேன்...ஓ மை காட்.அதில் பேனா முனை என்ற ஒன்று இல்லவே இல்லை. அதை எடுத்து குப்பையில் போடபோனேன்.

"ஹேய், அது எனக்கு வேணும்ப்பா..." வாங்கிக்கொண்டாள். எதற்கு என்றதற்கு, அதற்கு உள்ளிருப்பதை எடுத்து விளையாடுவாளாம்.  ஐயோ! ஸ்கெட்ச் உள்ளிருக்கும் பஞ்சு போன்ற பொருட்களையும் பார்த்தேன். ம்ம்... அவற்றையும் சேர்த்து பென்சில் டப்பாவில் 'வைத்தோம்'. அடுத்த டப்பாவை கொட்டினேன். அய்யய்யோ! புதிர் பாகங்களுக்கு கீழே ஒரே மாவாக கொட்டியது!!


எதிலிருந்து இப்படி கொட்டுகிறது? சப்பாத்தி மாவை எடுத்து வைத்திருக்கிறாளா? டப்பாவை சுத்தம் செய்துவிட்டு புதிர்களை அதில் அடுக்கி வைத்தோம். அப்போது அகப்பட்டது...இதுதான் அந்த மாவுக்கு காரணம்! சப்பாத்தி உருட்டும் கட்டை ஒன்று! கொண்டபள்ளி சொப்பு சாமான்! உளுத்து கொட்டியிருக்கிறது. அதை பற்றி கொஞ்சம் லெக்சர் பப்புவுக்கு கொடுத்து விட்டு அடுத்த டப்பாவுக்கு வருகிறேன். சிறு சிறு கற்கள்...கடலிலிருந்து மேடம் கொண்டு வந்த பொக்கிஷங்கள். சில சிப்பிகளில் வண்ண‌ங்கள் அடிக்கப்பட்டிருந்தன. சில கிளிஞ்சல்களில் நூல் கோர்க்கப்பட்டு கழுத்தில் போட்டுக்கொள்ளும் மாலை போன்று இருந்தது. உடைந்த பறவை, எங்கோ குடித்த ஜூசின் மேல் செருகியிருந்த சின்னஞ்சிறு குடை!   வேறு வழியின்றி எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன்.

இதையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, அலமாரியை பார்த்தேன்.
இந்த புதிர்பாகங்களை எல்லாம் எதற்கு எடுத்து வைத்தோமென்றே தெரியவில்லை. சிலதெல்லாம், பப்பு இரண்டரை வயதில் வார்த்தைகளை கற்றுக்கொள்ள ப்ளென்ட் கார்ட்ஸ் போன்றவை. அவைகளில் சில உடைந்தும் இருந்தன. எல்லா புதிர்களும் முழுமையானவையாகவும் இல்லை. இவற்றை வைத்து அவள் விளையாடுகிறாள் என்றும் சொல்லமுடியாது. ஆனால், தூக்கிப்போட மனமில்லை.

சொல்லப்போனால், எல்லாம் குப்பையே! ஆனாலும், அவரவர் குப்பை அவரவருக்கு முக்கியம்! ஊரில், பெரிய ஹோல்ட் ஆலிலும், ட்ரங்கு பெட்டியிலும் நான் சேமித்து வைத்திருக்கும் குப்பைகள் போலவே!அது ஏன்,  நமது குப்பை நமக்கு பொக்கிஷமாகவும்  அடுத்தவரின் பொக்கிஷங்கள் நமக்கு குப்பையாகவும் தோன்றுகிறது?!

இதையெல்லாம் முடித்து, பாயை எடுத்து தட்டுகிறேன்... அதிலிருந்து சிதறும் குப்பைகளையும் பொறுக்குகிறாள் பப்பு. காலியான பவுடர் டப்பா எதற்கு என்று எடுத்து வைக்கவில்லை. அது அவளது மைக்காம்! ஆமாம், பவுடர் டப்பாவின் கழுத்தில் அலங்காரங்கள் செய்து வைத்திருக்கிறாள்.  என்ன சொல்வது! 

நமக்கு அல்பமாக தோன்றும் ஒன்று பப்புவின் கண்களில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.  இறுதியாக, தூசியை மட்டும் தட்டிவிட்டு பாயை அலச போடுகிறேன். அதற்குள் , அந்த இடத்தை பெருக்கி வைத்திருக்கிறாள் பப்பு. அப்போதுதான் கவனித்தேன், அந்த அலமாரியில், அவளது ஹேர்பேன்டுகளையும், பின்களையும் வைக்கவில்லை என்பதையும் அதில் வைக்க அங்கு  இடமேயில்லை என்பதையும்!

Thursday, March 06, 2014

வடக்கு பக்கம் தெற்கு


 காலையில், பள்ளிக்கூட பையை எடுத்து மாட்டும் போதுதான் கவனித்தேன். பையின் ஜிப்பிலிருந்து, ஒரு கீ செயின் ஆடிக்கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால் காம்பஸ்.

"காம்பஸை ஏன் ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போறே?"  - நாந்தான். ('ஒன்னு புதுசா வாங்கிடக்கூடாது. உடனே ஸ்கூல்ல எடுத்துட்டு போய் காட்டி, அதை ரிப்பேராக்கிட்டு வரணும்!' ‍-  மைண்ட்வாய்ஸ்)

" மாஸ்டர் கேட்டாருப்பா" - பப்பு

"என்னது, காம்பஸையா? எதுக்கு கேட்டாரு?"   நாந்தான். (இந்த இடத்துலே டவுட் வரணுமே!)  ;‍)

"இல்லப்பா,  நான் நார்த் சவுத் பார்த்துக்கிறதுக்கு" - பப்பு

"அதுக்கு எதுக்கு, இது இப்போ?..எடுத்து வை..நாம ஊருக்கு எங்கியாவது போகும்போது எடுத்துக்கிட்டு போலாம். சொன்னா கேளு" - மீ

"இல்லப்பா, நான் எங்கே இருக்கேன், எந்த டிரக்ஷன்லே போறேன்னு பார்த்துக்கிறதுப்பா..ஸ்கூல்ல எங்கே இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாம் இல்ல‌" - பப்பு

"நீயே யோசிச்சிக்கோ! இது கண்டிப்பா ஸ்கூலுக்கு வேணுமான்னு! ஸ்கூல் போற வரைக்கும் உனக்கு டைம்" -
என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டேன்.

 மாஸ்டர் காம்பஸை ஏன் கேட்டார்? அதான், எப்படியும் ஸ்கூல் போற வரைக்கும் டைம் இருக்கே!

"சரி, ஸ்கூல் வந்ததும் காம்பஸை எடுத்து குடுத்துடு, வீட்டுல பத்திரமா வைக்கிறேன். காம்பஸ் கிடைக்காம எங்கெல்லாம் தேடினோம்...கஷ்டப்பட்டு வாங்கினதுதானே!" - மீ

"இல்லப்பா..மாஸ்டர் நார்த் எதுன்னு கேட்டா எனக்கு தெரியலை...அதான்.." பப்பு

ஓ!! அதுதானா விஷயம்!..ம்ம்...அதுக்கு காம்பஸ்!

"என்னது...உனக்கு தெரியாதா? நீதான் படிச்சிருக்கே இல்ல...மறந்துட்டியா? சொல்லு...சூரியனை பார்த்து நில்" - மீ

"எனக்கு தெரியும்...எங்க ஸ்கூல்ல இருக்கு"  - பப்பு

"ம்ம்..சொல்லு" - மீ

"சூரியனை பார்த்து நில்...உன் இரண்டு கையையும் இரண்டு பக்கம் நீட்டு" - பப்பு

"ம்ம்.."  - மீ

"உன் இடக்கு பக்கம் வடக்கு..
வடக்கு பக்கம் தெற்கு"  - பப்பு

"ம்ம்?? என்னது?" - அதிர்ச்சியுடன் மீ!

"ம்ம்...தேற்கு?"  - பப்பு (சரியா சொல்றாங்களாம்!)

"ம்ம்ம்ம்?"  - மீ

"வடக்கு பக்கம் தேற்கு?" - பப்பு (கான்ஃபிடன்ட்டாக வந்தது பதில்)

"என்னப்பா சொல்றே?"  - மீ ( 'கன்ட்ரோல் த கோவம்...இப்போ கோவப்பட்டு பிரயோசனம் இல்ல...' - மைண்ட்வாய்ஸ்)

ரொம்ப கஷ்டப்பட்டு, வந்த துக்கத்தை தொண்டைக்குள்ளேயே  அழுத்தி முழுங்கினேன்.

"போப்பா..எனக்கு தமிழ்லே சொல்லவே தெரில... இங்கிலீஷ்லே சொல்லித்தா..அதை"  - பப்பு

"அதை எப்படி இங்கிலீஷ்லே சொல்லுவாங்க...நீதான் புரிஞ்சுக்கணும்.  நார்த்னா என்ன" -  மீ

"அதை ஃபுல்லா எனக்கு இங்கிலீஷ்லே சொல்லு..."  - பப்பு

"சூரியனை பார்த்து நில், உன் இரண்டு கைகளையும் இரண்டு பக்கம் நீட்டு..இதெல்லாம் நீயே இங்கிலீஷ்லே சொல்லிக்கோ. ரைட் ஹான்ட் எது? அதுதான் வலது. வலது பக்கம் தெற்கு. லெஃப்ட் ஹாண்ட் தான் இடது. இடது என்ன?   - மீ

"இடக்கு பக்கம் வடக்கு"  - பப்பு (திரும்ப...திரும்ப...)

"இடக்கு இல்ல..இடக்கை பக்கம் வடக்கு"  - மீ

.....

"இதுகூட தெரியலையா உனக்கு? ஏன் மாஸ்டர் கேட்டப்போ சொல்லலை?"  - மீ

"மாஸ்டர் கிளாஸ் ரூம்லே கேட்டாருப்பா..அங்கே எப்படி எனக்கு ஈஸ்ட் வெஸ்ட்ல்லாம் தெரியும்? சூரியனை பார்த்தாதானே தெரியும்"  - பப்பு

ஓ!!

ஒருவழியாக, பள்ளியும் வந்துவிட்டது. வாசலிலியே, காம்பஸை எடுத்து என்னிடம் தருமளவு மனம் மாறிவிட்டாள்.

"இரு, நான் பார்த்துட்டு குடுத்துடறேன்" என்று காம்பஸை எடுத்து நேராக நின்று பார்த்தாள். அது சவுத்வெஸ்ட் என்று காட்டியது.   :‍))

காம்பவுண்டிற்கு, உள்ளே சென்று பார்க்கலாம் என்று அவளது வகுப்பறை இருக்கும் திசையில் நிற்க வைத்து, திசைகளை பார்த்துக்கொண்டோம். நார்த்தை மட்டுமே அவள் கவனித்தாள். மீதி கவனமெல்லாம், குழந்தைகளை விட்டுச்செல்லும் பெற்றோர்கள் இதை கவனிக்கிறார்களா என்றுதான்!  அடக்கமட்டாமல், "இதான் உங்க கிளாஸ்லேருந்து நார்த், இது ஈஸ்ட்" என்று மீதியை நாந்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.

உடனே, காம்பஸை தன் கைகளால் பொத்தி என் கைகளில் புதைத்துவிட்டு,

 "சரி சரி...எனக்கு தெரியும்...ஈஸ்ட் ஆர் வெஸ்ட்..ஹோம் ஈஸ் த பெஸ்ட்...நீ இப்போ வீட்டுக்கு போ!" என்று சொல்லிவிட்டு படிகளில் ஏறத்துவங்கினாள்!!

Sunday, February 16, 2014

I'll always Love you!

"if I spill some drops of coffee on the floor, would you still love me?"- Pappu

"yes, Pappu! I will love you always!" - Me

"Achi, If I fell from Bed when sleeping, Will you still love me?" - Pappu

"Yes, Pappu, I will love you forever and ever!" - Me

"Achi, If I broke the chair, Will you still love me?" - Pappu

"Yes Pappu, I will love you! " - Me

"Achi, If I take time to bath, Will you still love me?"- Pappu

"grrrrrrrrrrrr" - Meee!

காலங்காத்தாலே, பாத்ரூம்லே இருந்து இந்த ராகம். நான் கூட, சின்ன வயசு புத்தகத்துலே படிச்சதை 'திரும்பி பார்த்திருப்பா'ன்னு நினைச்சு,  நானும்   சேர்ந்து ராகம் போட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, கடைசி கேள்விக்கு ஒரு லுக் விட்டதும், அடக்க ஒடுக்கமா குளிக்க போய்ட்டாங்க மேடம்!

பின்குறிப்பு: சோப்பை கரைச்சு கரைச்சு குளிக்கிறதுக்கு கண்டிப்பா அரைமணி நேரமாவது ஆகும்.  அப்போதான் நான் ரொம்ப டென்சனாவேன்னு தெரிஞ்சுக்கிட்டே, எப்படில்லாம் கேள்வி வருது பாருங்க!!


பப்பு டைம்ஸ்

மாமாவுக்கு திருமண‌ம் நிச்சயமாகியிருப்பது பப்புவுக்கு பிடிக்கவேயில்லை.  'நான் அக்செப்ட் பண்ண மாட்டேன்ம்ப்பா' என்று சொல்லிக்கொண்டிருப்பாள். மாமாவை  கல்யாணம் செய்து வேறு வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என்று பயம்.

'நான் கல்யாணத்தை நிறுத்த போறேன். அதுதான் என் ப்ளான்' என்று வருவோர் போவோரிடம் எல்லாம் சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். அதில் சிலர் பப்புவுக்கு ஐடியா தருவதாக எண்ணி,  'நீ கல்யாணத்தப்போ மாமாவோட சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுடு.' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். பப்பு அதையே பிடித்துக்கொண்டாள்.

நச்சு தாங்காமல்  'சீப்பை எல்லாம் ஒளிச்சு வைப்பாங்களா? அது கிண்டலுக்கு சொன்னது பப்பு' என்றதும், அவளது திட்டத்தை என்னிடம் விவரிக்கத் தொடங்கினாள்.

 'எல்லா சீப்பையும் ஒளைச்சு வைச்சுட்டா என்ன ஆகும்? மாமா சீவ முடியாது. அப்போ, மாமாவோட தலை எப்படி இருக்கும்? அதை பார்த்துட்டு பிரைட்(bride) !!!    "ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆ...யார்றா இந்த பையன் பேய் மாதிரி இருக்கான்னு"ன்னு சொல்லிட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லிடுவாங்க'

;-)



இரவு தூங்கும் நேரத்தில் "கதை சொல்லு கதை சொல்லு" என்ற கேட்டு சலித்த பிறகு பப்பு 'சரி, நானே ஒரு கதை சொல்றேன்" என்று தன் கையே தனக்குதவியாக ஆரம்பித்தாள்.

"ஒரு ஊர்ல தில்லையர்க்கரசின்னு (தில்லைக்கரசியை அப்படிதான் சொல்றா!) ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த குட்டி பொண்ணு வளர்ந்து டீச்சர் ஆகிடுச்சாம்.அதுக்கு ஒரு டாட்டர் வந்துச்சாம். அந்த டாட்டர் பேரு சந்தனமுல்லையாம். அந்த டாட்டருக்கு குட்டி டாட்டர் வந்துச்சாம். அந்த பொண்ணு பேரு குறிஞ்சி மலராம். அது எப்போவும் கதை கேட்டுக்கிட்டே இருக்குமாம். அப்போ அவங்க ஆயா ஒரு கதை சொன்னாங்களாம்.

ஒரு ஊர்லே ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணு செம வாலாம். ரொம்ப குறும்பு பண்ணுமாம். எல்லாரையும் ஹர்ட் பண்ணிடுமாம். அதுக்கு வால் முளைச்சுக்கிச்சாம். அது அவங்க ஆயாகிட்டே போய் எனக்கு ஏன் வால் முளைச்சுச்சுன்னு கேட்டுச்சாம். நீ வால்த்தனம் பண்றதால உனக்கு வால் முளைச்சுடுச்சுன்னு சொன்னாங்களாம். அப்போ அவங்க அப்பா,   நீ யாரைல்லாம் ஹர்ட் பண்றியோ அப்பல்லாம் இந்த சுவரிலே ஒரு ஆணி அடின்னு சொன்னாராம். அது கொஞ்ச நாள்லே ஆணி அடிச்சு அடிச்சு சுவரே ஃபுல்லாயிடுச்சாம். அப்போ அவங்க அப்பா ஆணியெல்லாம் எடுத்துட்டு சொன்னாராம். அங்கே நெறைய ஓட்டை இருந்துச்சாம், ஆணி அடிச்ச இடத்துலே. 'நீ ஆணி அடிச்சுட்டு எடுத்தாலும் ஹர்ட் பண்ணது பண்ணதுதான்'னு சொல்லிட்டு ஒரு கதை சொன்னாராம்.

இப்படிதான் ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு ஒரு வால் இல்ல...பல வாலுங்க இருந்துச்சாம். 20 30 வாலு. ஏன்னா அந்த பொண்ணு செம வால்த்தனம் பண்ணுமாம். அப்போ..."

அதுக்குள்ளே நான் தூங்கிட்டதாலே கதை எப்போ முடிஞ்சதுன்னு தெரியலை!

#நெவர்_எண்டிங்_வால்  ;-)
 
 
நேத்துலேருந்து பப்புவுக்கு என் மேலே  ரொம்ப ஃபீலிங்ஸ்!!  ஒரு கிளாசுக்கு கொஞ்சம் லேட்டா போயிட்டோம். 2 நிமிஷம்தான். வீட்டுக்கு வந்ததும், "கிளாஸ் ஆரம்பிச்சுடுச்சா நீ போறதுக்குள்ளே" ந்னு கேட்டேன். அது அவளுக்கு ரொம்ப டச் ஆகிடுச்சு.

"எல்லாரும் அப்போதான் போய் உட்கார்ந்திருந்தாங்க. ஆரம்பிக்கல்லாம் இல்ல. நீ எப்படி கேக்கிறே...பாரு !! ..அதுலேருந்து  தெரியுது. உனக்கு என் மேல அவ்ளோ அக்கறைன்னு. நீ எது சொன்னாலும் நான் செய்வேன் ஆச்சி!" என்றெல்லாம் ஒரே  லவ்ஸ்! நானும், இதான் சான்சுன்னு, "காலையில நான் எழுப்பும்போது மட்டும் எழுந்துடு" என்று காதில் போட்டு வைத்தேன்.
(அதற்கு முதல் நாள்தான் 'உன்னை தவுஸண்ட் இயர்ஸுக்கு புடிக்கும், ஆனா, எல்லா டேஸ்லெயும் மார்னிங் மட்டும்தான் புடிக்காது'ன்னு ஒரு பல்பு குடுத்திருந்தா!)

அதுலேருந்து,  "ஐ லவ் யூ ஆச்சி ‍," நீதான்ப்பா என் லைஃப்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவள், ஒரு படி மேல் போய், அவளது அன்பை நிருபிக்க வேண்டி - ஒரு உதாரணத்தை சொன்னாள்.

'நான் தாட் ஃபார் த டேவுல என்ன எழுதினேன்..?.An intelligent son makes a father glad;  But a foolish son makes his mother sad"  ந்னு இருந்ததை, நான் எப்படி எழுதுனேன். An intelligent daughter makes her mother glad, but foolish daughter makes her father sad. எல்லாம், உனக்காகதான்..ஆச்சி!"

நேரமோ எட்டரை. அங்கே,ஆட்டோ வேற வெயிட்டிங்!

இதுக்கெல்லாம் 'என்ன கைமாறு செய்ய போகிறேன்' லுக்கோட,  ஈஈஈஈன்னு சிரிச்சு -   'தேங்க் யூ'ன்னு சொல்லிட்டேன்!

#வீ_வான்ட்_மோர்_எமோசன்

Saturday, February 15, 2014

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, அக்பர்க்கு தலைல கட்டிட்டு போனேன் இல்ல.... அந்த ஷாலை கேட்டாருப்பா மாஸ்டர்" என்று கடந்த சில நாட்களாக ஒரே "ஆத்தா வையும்...." டயலாக்.

ஷாலை எல்லாம் எடுத்து வைத்தபின், 'ஆனுவல் டேவுக்கும் அந்த ஷாலுக்கு என்னப்பா சம்பந்தம்' என்று திடீரென்று மூளையில் பல்பு எரிந்ததும், 'ஓகே, இன்னைக்கு மாஸ்டர்கிட்டே  நானும் கேட்டுக்கறேன். நாளைக்கு எடுத்துக்கிட்டு போ" என்று சமாதானக்கொடியை காட்டினேன்.

மாஸ்டர்கிட்டே கேட்டா, "இல்லையே,அதெல்லாம் வேணாம். செப்பல்தான் கொஞ்சம் டிசைனா இருக்கிற மாதிரி கேட்டிருந்தேன். ஷால் எல்லாம் வேணாம். " என்றவர், சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ,"ஒருவேளை அவங்களுக்கு தலையில அதை கட்டிக்கிட்டா அழகா இருக்கும்னு நினைச்சிருப்பாங்க. அவங்களுக்கு அப்படி ஆசையா இருந்திருக்கும்" என்று ஸ்டூடன்டுக்கு வக்காலத்து வேறு!! :-)

இதையே, எங்க ஸ்கூலில் நான் செய்திருந்தால்  ‍ டீச்சரிடமும்/வீட்டிலும் என்று இரண்டு பக்கமும் செமையா வாங்கி கட்டியிருந்திருப்பேன், "பொய் சொல்றியா?சொல்லாததை சொல்றியா" என்று!
ஹ்ம்ம்ம்!

"மாஸ்டர், அவ கொஞ்சம் பொறுமையா வரைஞ்சா நல்லாருக்கும்." என்று பப்புவின் 'பார்ட்ஸ் ஆஃப் த‌ ஹென்னை' குறிப்பிட்டு, சிலநாட்கள் முன்பு சொன்னபோது, "குழந்தைங்கதானே, இப்போதானே கத்துக்கறாங்க. பார்க்க ஹென் மாதிரி வரைஞ்சா போதும்" என்று சொல்லி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்டர்தான் இவர்!  :-)  (அப்போது,  அவள் வரைந்திருந்த  ஹென் சிட்டுக்குருவி மாதிரியே இருந்தது.)

இந்த இடத்தில் மரியா மான்டிசோரிக்கு நன்றி சொல்லலைன்னா என் மனசாட்சி என்னையே மன்னிக்காது! #நல்ல_டீச்சர்_நல்ல_ஸ்டூடன்ட்  #ThanksToMariaMontessori

 

தூங்கும் நேரத்தில் ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தோம்.சாப்பிட்ட ஆம்பூர் பிரியாணி, பொங்கல்,சாய்பாய் இன்னபிற. சாய்பாய் என்றால் என்ன என்று  எனக்கு புரியாததால் கண்டுக்கொள்ளவில்லை.

திடீரென்று, "நான் ஏன் கேர்லா பொறந்தேன்னு இருக்கு.அதுவும், ஏன் இப்போ போய் பொறந்தேன்னு இருக்கு. நான் இப்போ கேர்லாவே பொறந்துருக்கவே கூடாது" என்று பப்பு சொன்னதும் பகீர்ன்னு ஆகிவிட்டது.சீரியாசாக வேறு சொன்னாள்.  சொல்லும்போது குரல் வேறு தழுதழுத்தது. அதோடு, லேசாக கண்ணீரும்! கேட்கும் போது எப்படி இருக்கும்??

'என்னடா நடந்தது, நல்லாதானே போய்க்கிட்டிருக்கு, இவ்ளோ கவலைபடற மாதிரி என்ன ஆகிடுச்சு ' என்றும் குழப்பம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள எப்படி  நைச்சியமாக கேட்பது? மண்டையை உடைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கேப் விட்டாலே அவளே தொடர்ந்து சொல்லுவாள்.

"நான் பாயா பொறந்து இருக்கலாம். அதுவும் ஔரங்க்சீப் சிவாஜி காலத்துலே நான் வீர சிவாஜியா பொறந்து இருக்கனும். எப்படி இருந்திருப்பேன் நான்?"

அவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை விடுங்கள்! நான் எப்படி இருந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!

(இப்போ பொறந்ததுதான் சூப்பர்ன்னு சமாதானப்படுத்த, கொஞ்சம் மார்ஸுக்கு போன மங்கள்யான்,  கொஞ்சம் கேன்டிக்ரஷ், கம்ப்யூட்டர் இன்டர்நெட், பஃப்ஸ் என்று பேல்பூரி கிண்டினேன். கூட சேர்ந்து, அவளும் சப்புவது போல பாவனை காட்டினாள். ஐஸ்க்ரீமாம்!ஸப்பாஆஆஆ!)

 "ஐஸ்க்ரீம் கிடைச்சிருக்காது இல்ல!" என்று குரல் தெளிவாக ஒலித்ததும் கேட்டேன், "சாய்பாய்னா என்ன? " வீர சிவாஜியோட வைஃப் ஆம்!

#வீர_சிவாஜி_நான்_ஆனேன்_பஜ்ஜி! ;‍)

நிலாவுக்கு வந்த சோதனை!!

 பீச் இல்லன்னா சாலையோரத்துல நடக்கும்போது 'கால் வலிக்குது' கம்ப்ளெயின்ட் வராம இருக்க இந்த விளையாட்டை விளையாடுவோம். மேலே வானத்தை பார்த்து ஆளுக்கொரு மேகக்கூட்டத்தை தேர்ந்தெடுத்துக்கிறது; அதையே நோக்கி பார்த்து அந்த மேகக்கூட்டத்தை கலைக்கிறது. அதாவது, நாம அதை கான்சென்ட்ரேட் பண்ணி பார்த்துக்கிட்டேயிருந்தா டிஸ்அப்பியர் ஆகிடும்கிறது நம்பிக்கை. இல்லேன்னா, இன்னும் கொஞ்சம் நல்லா கான்சன்ரேட் பண்ணனும்கிறதுதான் டெக்னிக்...(கான்சன்ட்ரேசனை வளக்கிறேனாம்)..ஹிஹி...இல்லேன்னாலும் மேகம் கலைஞ்சுடும்கிறதை இன்னும் பப்பு கண்டுபிடிக்கலை. அவ கான்சன்ட்ரேட் பண்ணிதான் கரைக்கறான்னு இப்போ வரைக்கும் நம்பிக்கிட்டிருக்கா.

பப்பு வளர வளர, நானும் இன்னொரு ஆயாவாகிட்டேன்கிறதை நானே நம்பலைன்னாலும் அதுதான் உண்மை. அதுலே, ஆறரைக்கே எழுந்து 'பப்பு, ஏழு மணியாகிடுச்சு;ன்னு அலறி அவளை பயமுறுத்தலேருந்து, 'நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணா எதையும் சீக்கிரமா செஞ்சுடுவே' ங்கிறதுலேருந்து...'உன்னை விட சூப்பரா புத்திசாலியா இந்த உலகத்துலே வேற யாருமே இல்ல'ன்னு பப்புவை நம்ப வைக்கிறது வரை அடக்கம்.இப்படியே  ஆயாவோட சின்ன வெர்சனாகிட்டேன். அதுலே, 'நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி....'  ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி சொல்லிட்டேன்றதை நேத்துதான் உணர்ந்தேன்.

சாயங்காலம் காலார நடந்துபோய் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு திரும்ப வரோம்... பப்பு ஒரு இடத்துலே நின்னுட்டு வரவே இல்ல.' வா வா'ன்னு கூப்பிட்டாலும் அண்ணாந்து பார்த்துகிட்டு நிக்கறா. எங்களை பார்த்து எதிர்லே பைக்லே வந்த ஒரு பேமிலேயே அண்ணாந்து வானத்தை பார்த்துட்டு வேற போனாங்க. எதிர்லே நடந்து வந்தவங்க எங்களை ஒரு மாதிரி பார்த்துட்டு போனாங்க. இதெல்லாம் பார்த்து அலெர்ட் ஆகி கூப்பிட்டதும், பப்பு , 'ஹேய், ஆச்சி, இரு, நான் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி நிலாவை அழிச்சுட்டு வந்துடறேன்'ன்னு சொன்னதும் பகீர்னு  ஆகிடுச்சு.  

"வானவில் பறவையின் கதை" from Chennai storytelling festival 2014

முன்பொரு காலத்தில் நடந்தது இந்த கதை. அப்போது, சென்னையே இல்லை. பெங்களூரு  இல்லை. ஹைதராபாத்தும் இல்லை. ஏன், இந்தியாவும் இல்லை. ஆஸ்திரேலியாவும் இல்லை. சைனாவும் இல்லை. அமெரிக்காவும் இல்லை. ஜப்பானும் இல்லை. உலகமே ஒரு பெரிய காடாக இருந்தது. அந்த காட்டில் எல்லா மிருகங்களும் வசித்து வந்தன. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்த காடு.

 காலையில் சூரியன் தகதகவென்று மின்னியபடி கிழக்கில் உதிக்கும். பறவைகள் கீச்சு கீச்சு என்று கத்தியபடி காட்டையே சுற்றி வரும். விலங்குகள் இரை தேடி கிளம்பும். ஆறுகளில் சலசலப்பு. எல்லா மிருகங்களும், பறவைகளும் அந்த ஆற்றில் தண்ணீர் அருந்தும். இப்படி, ஒவ்வொரு நாளும் கழிந்தது. ஒவ்வொரு நாளாக.....ஒவ்வொரு வாரமாக....ஒவ்வொரு மாதமாக...ஒவ்வொரு வருடமாக! ஒவ்வொரு நாளும், சூரியன் எழும்பும். பின்பு மாலையில் மறையும்.

ஒரே விஷயம் திரும்ப திரும்ப ஒரே மாதிரி நடந்தால் என்ன நிகழும்? ஒரு சலிப்பு வரும், அல்லவா? சூரியனுக்கு அப்படி ஒரு சலிப்பு வந்தது. ஒருநாள் காலையில், அது சொல்லிக்கொண்டது, "இனிமேல் நான் வர மாட்டேன். வீட்டிலேயே இருக்கப் போகிறேன்.ரொம்ப போரடிக்குது".

காட்டில் எப்போதும்போல் பறவைகள் எழும்பின. கீச்சு கீச்சு என்று கத்தியபடி பறந்தன.மிருகங்கள் இரைதேடத் துவங்கின. யாருக்கும் சூரியன் வராதது பெரிதாக தெரியவில்லை. மாலையில், தண்ணீர் அருந்த மிருகங்கள் ஆற்றுக்கு வந்தன. தண்ணீர் அருந்த முடியாதபடி அவ்வளவு சில்லென்று இருந்தது. அடுத்ததடுத்த நாட்களில், காடே மிகவும் குளிராக, இருட்டாக மாறிப் போய் இருந்தது. பறவைகளாலும் மிருகங்களாலும் வசிக்கவே முடியவில்லை.

யானை, எல்லா மிருகங்களையும், பறவைகளையும் அழைத்தது."இப்படியே இருந்தால் நாம் எப்படி வசிப்பது? சூரியன் வரவே இல்லையே. நம்மில் யாராவது சூரியனிடம் சென்று பேச வேண்டும்" என்று சொன்னது. எல்லா மிருகங்களும் ஒப்புக்கொண்டன. ஆனால், யார் சென்று பேசுவது? யாரால் முடியும்? எல்லா மிருகங்களின் கவனமும் பறவைகள் பக்கம் திரும்பின. யானை, நாரையை அழைத்தது. நாரை சொன்னது

"முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது".

அடுத்ததாக, சிட்டுக்குருவியை கேட்டது யானை. சிட்டுக்குருவியும்,  "முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது" என்றது.

ஹம்மிங் பேர்ட், புறா, கௌதாரி, இரட்டை வால் குருவி, கொக்கு,மயில் என்று எல்லா பறவைகளும், "முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது"  என்று மறுத்து விட்டன.

கடைசியாக, யானை, கழுகிடம், வந்தது. "நீதான் உயரத்தில் பறப்பாயே, உன்னால் சூரியனிடம் போக முடியுமே" என்றது. கழுகும், "எனக்கும் போக ஆசைதான். ஆனால், சூரியனின் வெயிலில் நான் கருகிவிடுவேன். உங்களுக்காக நான் மட்டும் ஏன் உயிரை விட வேண்டும்" என்றது. சூரியனிடம் செல்ல, எந்த பறவையும் முன்வரவில்லை.

இறுதியாக, ஒரு பறவை முன்னால் வந்தது. அது, வானவில் பறவை.

வானவில் பறவையின், சிறகுகள் வானவில் நிறத்தில் இருக்கும். சிறகுகளை விரித்து அது பறந்தால் காண அவ்வளவு அழகாக இருக்கும். அதன் உடலோ பாலைவிட வெண்மையான நிறம். உடல், பஞ்சு போல! அதன் குரலோ கேட்கவெவெ வேண்டாம். அது பாட பாட நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை. அந்த பறவையின் அழகே அழகு! வானவில் பறவை, யானையிடம் வந்து சொன்னது, "நான் போய் சூரியனிடம் பேசுகிறேன்".

காட்டில் எல்லாரிடமும் விடைபெற்று வானவில் பறவை மேலே பறக்கத் தொடங்கியது.  கீழே எல்லா பறவைகளும், மிருகங்களும் ஆரவாரத்துடன் விடை கொடுத்தன. வானவில் பறவையின் சிறகுகள், மேலே செல்லும்போது பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. காட்டைத் தாண்டியதும் வானவில் பறவைக்கு களைப்பாக இருந்தது. ஆனாலும், நண்பர்களுக்காக உயரே உயரே பறந்தது.

"பறக்க வேண்டும் தூரமாக..இன்னும் தூரமாக" என்று தனக்குள் பாடிக்கொண்டது. சூரியனை நெருங்கும்போது  அதன் வெப்பம் தாங்காமல் அதனால் பறக்கவே முடியவில்லை.

பின்னால் திரும்பி பார்த்தது. குளுமையான காடும் அதன் நண்பர்களும். பின்னால் திரும்பி விடலாமா என்று ஒரு நிமிடம் எண்ணியது. ஆனால், சூரியனுக்காக ஏங்கும் அதன் நண்பர்கள் நினைவுக்கு வந்ததன. "பறக்க வேண்டும் தூரமாக..இன்னும் தூரமாக" என்று பாடியபடி,   முன்னால் சூரியனை நோக்கி முன்னேறியது.

அதன் வானவில் சிறகுகள்... அய்யோ...அதன் பால் போன்ற வெண்மையான உடலோ கருகி விட்டது. அதன் இனிமையான குரலையும் இழந்துவிட்டது.  சூரியனை நெருங்க நெருங்க, அது தனது சிறகுகளையும் இழந்துவிட்டது.  இறுதியாக, சூரியனின் வீட்டை அடைந்தது, வானவில் பறவை.

வானவில் பறவையை கண்ட சூரியனுக்கு அப்போதுதான் தான் செய்தது எவ்வளவு மோசமானது என்று தெரிந்தது. தீய்ந்து போன உடலையும், வறட்டுத்தனமான அதன் குரலையும் கண்டு மனம் வருந்தியது. "என்னால் தானே உனக்கு இதெல்லாம், நான் எவ்வளவு சுயநலமாக இருந்துவிட்டேன்" என்று வருத்தப்பட்டது.

"என்னால் உன்னுடைய இனிமையான குரலையும், வானவில் சிறகுகளையும், வெண்மையான உடலையும் திருப்பிக் கொடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், என்னிடம் அந்த சக்தி இல்லை" என்று சொன்னது.

"திருப்பிக்கொடுக்கும் சக்திதான் இல்லையே தவிர, உனக்கு மூன்று வரங்களை என்னால் கொடுக்கமுடியும்" என்றது. ஒன்று, உன்னை எந்த வேடனும் வேட்டையாட மாட்டான். இரண்டு, உன்னை சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள். மூன்று, உனது சிறகிலிருந்து விழுந்த இறகை எடுத்து சூரியனைப் பார்த்தால் அதில் வானவில் வர்ணங்கள் தெரியும். அந்த வானவில் பறவையைதான் நாம் இன்று என்ன பெயர் சொல்லி அழைக்கிறோம்? காக்கா என்று அழைக்கிறோம்.

அதனால்தான், காகத்தை எந்த வேடனும் இன்றுவ்ரை வேட்டையாடுவதில்லை.  எல்லா பறவைகளும் தனியாக அமர்ந்து இரை உண்டாலும், நமது காக்கையார் நண்பர்களுடன் எப்போதும் விருந்துண்பார். அதோடு, காக்கையின் சிறகை எடுத்து பார்த்தால் நமது கண்களுக்கு வானவில் தெரியும்!

‍‍‍‍‍**************************

பிப். 7 முதல் 9 வரை நடைபெற்ற‌, சென்னை கதைசொல்லும் விழாவில், பெங்களூரிலிருந்து வந்திருந்த அமீன் ஹக் சொன்ன கதை. ரம்மியமான மாலைவேளையில், ஐந்து பேர் சொன்ன விதவிதமான கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இது. வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில், நிகழ்வைப் பற்றி பேசும்போது பப்புவை கவர்ந்த கதை எதுவென்று கேட்டேன். (அவள் எந்த கதைகளையும் கவனித்திருக்கவே இல்லை என்றுதான் நினைத்தேன். தனது, பழைய ஸ்டோரிடெல்லிங் நண்பர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்த உற்சாக மிகுதியில் திளைத்துக்கொண்டிருந்தாள். )ம்ம்ம்.... பப்புவை மிகவும் கவர்ந்த கதையும் இதுதானாம்! குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு இந்த கதை பிடித்துபோவதில், ஆச்சர்யமேதும் இல்லைதானே! ;‍-)

மனம் ஒரு குரங்கு (அ) Parental anxiety

ஒரு பயிற்சி வகுப்பில் உங்கள் மகளை கொண்டு போய் விடுகிறீர்கள். ஆசிரியர் வந்து ஏதோ சொல்கிறார். உடனே எல்லா குழந்தைகளும் எழுந்து ஓடி வந்து வரிசையில் நிற்கிறார்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு வரிசையில் நிற்க முண்டியடிக்கின்றன, குழந்தைகள். ஆனால், உங்கள் குழந்தை மட்டும், 'எல்லாம் அடங்கி முடியட்டும்' என்பது போல இறுதியில் நின்று கொள்கிறாள்.  'ஏன் இவள் எல்லாரோடும் போட்டி போட்டு நிற்கவில்லை' என்று கவலை கொள்கிறீர்கள்.

உங்களுக்கு ஒன்றை கவனத்தில் கொண்டு வருகிறேன், குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு அல்ல, குழு மனப்பான்மையோடு வளர வேண்டும் என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

ஒரு கதை படிக்கும் (ஸ்டோரி ரீடிங்) நிகழ்ச்சியில் வாசிப்பாளர் புத்தகத்தில்  ஒரு படத்தை காட்டி அது என்ன என்று கேட்கிறார். யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், உங்கள் குழந்தைக்கு அது தெரியும் என்று. ஏனெனில், அந்த பறவையை பார்க்க வட கர்நாடகம் வரை சென்றிருக்கிறீர்கள். அந்த பறவையை மிக நெருக்கத்தில் அவள் பார்த்திருக்கிறாள்.

விடை தெரிந்து,அவள் கையை உயர்த்துகிறாள். அதற்குள், பெற்றோர் பக்கத்திலிருந்து விடை வந்துவிடுகிறது. ஆனாலும், அவள் ஏன் டக்கென்று சொல்லவில்லை என்று மறுகுகிறீர்கள்.   வெளியில் வந்து 'கேட்டவுடனே ஏன் சொல்லல' என்று உங்கள் குழந்தையை விசாரிக்கிறீர்கள்.

'நம்ம டர்ன் வந்தாதான் சொல்லணும். பார்த்தவுடனே கத்தக்கூடாது.' என்கிறாள் மகள். எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.  நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் 'குட் மேனர்சின்' கீழ்  அல்லவா அது வருகிறது!

ஆட்டோவில் பையை தொலைத்துவிடுகிறாள், உங்கள் மகள். அப்படி என்ன கவனமின்மை என்று கடிந்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகம் கடுமையாக மாறுகிறது. அவளோ, அதைப் பற்றி கிஞ்சித்தும் பாதிப்படைய‌வில்லை.  'பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சி கூட இல்லையே, இது எப்படி எதிர்காலத்தில்...' என்று அதற்கும் சேர்த்து கவலை கொள்கிறீர்கள். எந்த பாதிப்பும் இல்லாமல், "ஆச்சி, கோவமா இருக்காதே,சிரி...சிரி" என்று உங்கள் தாடையை பிடித்து கன்னங்களை இழுத்து சிரிப்பது போல வைக்கிறாள், அவள்.

இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறேன், 'எந்த சூழலாக இருந்தாலும், அவள்  செய்த தவறைக் குறித்து பதற்றமடையாமல் தன்னியல்பு மாறாமல் கூலாக/நிதானமாக‌ இருக்க‌ வேண்டும்' என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வேறு ஊரில் இருக்கிறீர்கள். இரவுணவுக்காக, வெளியில் சாப்பிட செல்கிறீர்கள். உணவு விடுதியின் முன்னால், வண்டிகள் செல்வதற்காக கூம்பு வடிவ தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றை காற்று சாய்த்து விட்டிருக்கிறது. அங்கேயேதான் விடுதி காவலரும் இருக்கிறார். ஆனாலும், உங்கள் மகளால் விழுந்துவிட்ட தடுப்பை பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை. உங்கள் கையை உதறிவிட்டு ஓடுகிறாள். அந்த தடுப்பை நிமிர்த்து அதன் இடத்தில் வரிசையில் வைக்கிறாள். பின்னர், வரிசையை பார்த்து புன்னகையொன்று புரிந்துக்கொள்கிறாள், அதில்பாதியை உங்களை நோக்கி வீசுகிறாள். வேறு வழியின்றி, நீங்களும் புன்னகைக்கிறீர்கள்.

கார் ஒன்று வேகமாக அந்த பக்கம் செல்கிறது.  'கார்ல்லாம் வேகமா போகுது, அது கீழேயே இருந்தாதான் என்ன? எத்தனை பேரு போறாங்க வர்றாங்க...செக்யூரிட்டி வேற இருக்காருல்ல. இது ஏன் இப்படி இருக்கு' என்று, அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுள் குமைகிறீர்கள்.  உடனே, இதுபோன்ற கடந்தகால சம்பவங்கள் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது, புத்தக சந்தையில் நடந்தது எல்லாம் உங்கள் நினைவுக்கு வருகின்றன. அவளது எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்து போகிறீர்கள்.

புத்தக சந்தையில், ஸ்டால் நுழைவாயில் நெரிசலாக இருக்கிறது என்று எக்சிட்டில் நுழைகிறீர்கள்.  'அது எக்சிட், இதான் ஆச்சி, என்ட்ரி.எக்சிட்லே போகக் கூடாது'  என்று உங்களை திருத்தி, செல்லவிடாமல் தடுக்கிறாள். இறுதியில், உங்கள் கையைப்   வலுக்கட்டாயமாக பிடித்துக்கொள்கிறாள், அப்படி செல்லக்கூடாது என்பதுபோல.பிறகென்ன, 'என்ட்ரி'யிலேயே நெரிசலாக இருந்தாலும் செல்ல நேர்கிறது.

'என்ன இது, இதெல்லாம் எப்படி பொழைக்க போகுது? எல்லா இடத்திலெயும் ரூல் ஃபாலோ பண்ண முடியுமா?' என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால், இதை சொல்லி அவளை கெடுத்துவிட வேண்டாம் என்று அவள் சொல்படியே நடக்கிறீர்கள்.

உங்கள் கவனத்துக்கு  கொண்டு வருகிறேன்,'பயம் காரணமாக  பள்ளியில் மட்டும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது, பள்ளிக்கு வெளியிலும்   ஒழுக்கத்தை தன்னுள் பேண வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி யோடாவது அவள் வளர வேண்டும்.', என்று  நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வெளியிலாவது இப்படி இருக்கிறாளே என்று சந்தோசப்படும் அதே நேரம், வீட்டில் அவள் செய்யும் அட்டகாசங்களை எண்ணி  'வளர்ந்து விட்டாளே, இன்னுமா இப்படி இருப்பது' என்று புலம்புகிறீர்கள்.   பென்சீலை சீவித்தள்ளி, அதன் வண்ண வண்ண சீவல்களை, அலமாரி முழுதும் நிரப்பி வைத்திருப்பது, விளையாட்டு சாமான்களை கலைத்து போட்டு ஹாலை குப்பையாக்கி வைப்பது எல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

:-)

Friday, January 24, 2014

ஐஸ் கோலா, டெல்லி அப்பளம் , பஞ்சு மிட்டாய் இவற்றுடன் ...

பப்புவுக்காக புத்தகங்கள் வருடம் முழுவதும் வாங்கிக்கொண்டேதான் இருப்போம். அதனால், புத்தக கண்காட்சியில் வாங்கியது பற்றி பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.  G+ ல் - ரதியும், சுந்தரியும் 'கைய புடிச்சு இழுத்ததாலே'...இந்த லிஸ்ட்! :‍) 

வசந்தா பதிப்பகம்:-

இவை நான் வாங்கியவை (பப்புவுக்காக)

1.தமிழில் எழுதுங்கள் ‍ - புலவர்.ராச கோபாலன் - ரூ 20

2.ஏட்டுச்சுரைக்காய் (பள்ளிச் சிறுவர்கள் நடிப்பதற்கேற்ற நாடகங்கள்) கரிகாலன் - ரூ 20

3.கள்ளனுக்குப் பாதி
 குள்ளனுக்குப் பாதி - முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் - ரூ 30

நேஷனல் புக் ட்ரஸ்ட்:-

(தமிழில் இருப்பவை நாங்கள் வாங்கியவை.  ஆங்கிலத்தில் இருப்பவை பப்பு  தேர்வு செய்தவை)

நம் நதிகள் ‍-  அழ.வள்ளியப்பா - ரூ 16
(ஏற்கனவே, ஸ்கூல்ல யமுனாவை பத்தி சொல்லிகுடுத்து ஒரு பெரிய செலவு வைச்சாங்க! "ஆச்சி, நான் ஸ்கூல்ல பார்த்தேன்ப்பா, யமுனா எப்படி பெருசா வருது தெரியுமா...அதை பார்க்க போலாமாப்பா?")

வீரர் கதைகள் ‍-  ராஜேந்திர அவஸ்தி -  ரூ 13

கடற்புரத்து கிராமம் ‍- அனிதா தேசாய் - ரூ 35

இளவரசனும் பவழக் கடலும் ‍- டைசாகு இகேடா - ரூ 45

புத்திசாலிப் பெண்  கமலா ‍ - தினேஷ் புரோகித் - ரூ 13

என் வெள்ளைக் குதிரை - அமரேந்திர சக்ரவர்த்தி - ரூ 11

Neelu and Peelu  - Rs.25

Maharaja Ranjit Singh -  Rs.14

The best thirteen - Collection of the best stories from 13 languages of India)  Rs.70

Jungle Fun - Rs 85

Bhakta Salbega - Rs 25

Sona's Adventures - Rs.30

SriRatna Kim Suro - The legend of an Indian princess in Korea- Rs.110

Mysteries of the Past Archaeological sites in India - Upinder Singh - Rs.45

Test your word power -  New student book agency - Rs. 60

Fairy tales 2  - NavNeet

புக்ஸ் ஃபார் சில்ரன் :-

ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம் சோவியத் சிறார் கதைகள் யூமா.வாசுகி -- ரூ 80

பூப்பூவாய் ஒரு உலகம் - டிரினா பாலஸ் -  ரூ 30

*************************

குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு எங்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் :-

http://www.uread.com/ - http://www.penguinbooksindia.com/
http://www.zubaanbooks.com/ (young zubaan)
http://www.mangobooks.net/
http://www.nbtindia.gov.in/
http://www.tarabooks.com/ - 'சுனாமி பேரலை தந்த கதை' அருமையான புத்தகம்
Tulika - Only Fact & Fiction
Pratham books

பெரும்பாலும், ஆன்லைனில்தான் வாங்குவது.. ரெவ்யூ கிடைக்கிறதோட, புத்தகத்தோட சில பக்கங்களையும் அமேசானில் பார்க்க கிடைக்கும்! (இல்லைன்னா, வெறும்  ஹைப் னாலே டைட்டில் மட்டும் பார்த்து வாங்கிட்டு, கையை சுட்டுக்கிறதோட, பப்பு, முன்னாடி பெரிய‌  பல்பாகிடுமே!) :)

Monday, January 20, 2014

புத்தகக் கண்காட்சியில் ஒரு பொ.அ

* ஒருவழியாக, பப்புவுடனும், பெரிம்மாவுடனும் நேற்று புக் ஃபேருக்குச் சென்றேன். நுழைவாயிலிருந்தே,சாரி சாரியாக‌ ஊர்வலமாக சென்றோம். அவ்வளவு கூட்டம்! பார்த்ததும், பப்பு, "இது புக் ஃபேரா, என்ன ஃபேர் இது,ஆயா?" என்றாள்.

"ஏன், புக் ஃபேர்தான்", என்றதும், "இல்ல, இது பீபிள் ஃபேர்", என்றாள்.

* வரிசையாக சென்ற கூட்டம் ஓரிடத்தில் கொஞ்சம் குழப்பமடைந்தது போல இருந்தது. எல்லோரும் நடப்பதை நிறுத்திவிட்டு அந்த அதிசயத்தை காணத் துவங்கினோம்.  ஒருவர் பைக்கை கழுவிக்கொண்டிருந்தார். பிறகுதான் புரிந்தது, பைக்கை கழுவுவது அதிசயம் அல்ல, ஏதோ ஒரு சாதனம் கொண்டு பைக் மீது ஸ்ப்ரே பண்ணுகிறாரே! யெஸ், திரும்பி வரும்போது, ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும்!! #மைண்ட்_வாய்ஸ்

* நுழையும்போதே நல்ல சகுனம். "விஜயராகவன் என்னும் வாசகர் ஆம்பூரிலிருந்து வந்திருக்கிறார். அவர், எங்கிருந்தாலும் ..." அடடா...யாரந்த வாசகர்!!ஆம்பூரிலிருந்து....தெரிந்தால், ஸ்டார் பிரியாணி கடைக்காரரிடம் சொல்லியிருக்கலாமே...ரெண்டு பிரியாணி பார்சல் கொடுத்துவிட்டிருப்பாரே!! இது மைண்ட் வாய்ஸ் இல்லை...ஒரு ஆதங்கம். (ஒரு பிரியாணி பிரியையோட‌ மனசை இன்னொரு ....ஹூம்!)

* ஒரு சில பதிப்பகங்களை மேய்ந்தோம். பப்புவுக்குரியது எதுவும் வரவில்லை. "என்னப்பா....எல்லாமே பெரியவங்களோடதா இருக்கு?" என்று அலுத்துக்கொண்டு சில பதிப்பக வாசல்களில் உள்ளே வராமல் ஸ்ட்ரைக் செய்தாள். அகநி பதிப்பகத்துக்கு சென்று சில புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தோம். வரலாற்று தொகுதி. தாட்களை புரட்டிக்கொண்டிருக்கையில், உமாயூன் என்றெல்லாம் வந்தது. ஒரு பக்கத்தில் இருந்த உருவத்தை காட்டி, 'பப்பு, இது யாருன்னு சொல்லு?" என்றேன். "இவர் அக்பர் மாதிரி இருக்காரே"  என்றாள். அவர் அக்பர்தான்!

*ஒரு ஸ்டாலில் புத்தகங்களை வாங்கினோம். "என்னப்பா, தமிழா இருக்கு எல்லாம்" என்று அலுத்துக்கொண்டாள். "டைட்டிலையாவது படி" என்று ஒரு பொறுப்பான அம்மாவைப் (இனிமேல் பொ.அ) போல் நடந்துக்கொண்டேன்.

* அடுத்து, ஒரு ஆங்கில புத்தக ஸ்டாலுக்குள் நுழைந்தோம். கூட்டமாக இருந்ததால், பப்புவை உள்ளே அனுப்பிவிட்டு வாயிலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைப் போன்ற பொறுப்பான ஒரு அம்மா, ஒரு பையனிடம் "க்விஸ் புக் கேண்டுண்டிருந்தியே,அதோ இருக்கு பாரு" என்று ஒரு புத்தகத்தை காட்டிக்கொண்டிருந்தார்.  அந்த பையனோ "கெடைச்சிடுச்சி" என்று கூவியபடி ஒரு புத்தகத்தை எடுத்தான். இந்தியாவின் வரலாறு ஆங்கிலத்தில்தான். "இதான் கேட்டுண்டிருந்தியே" என்றார் அவனது அம்மா. அப்போது, அவர்கள் கூடவே இருந்த இன்னொரு பையன், "என்ன புக்" என்றான். டைட்டிலை சொன்னதும், "சரி, உங்க ஆத்துக்கு நான் வரும்போது இந்த புக்கை படிச்சுக்கறேன்" என்றான். "ம்ம்ம்ம்ம்" என்று இழுத்தான் புக்கை வாங்கிய பையன். திரும்பி பார்த்தேன், அந்த பையனின் நெற்றியில் நாமம் போட்டிருந்தது! "என்ன உம்ம்ம்ங்கறே? குடுக்கறேன்னு சொல்லு" என்று தன் கடமையை செவ்வனே செய்தார் அந்த பொ.அ.

* தமிழில் சிறுவர் கதை புத்தகங்கள் வாங்கினார் பெரிம்மா. பில் போடுமிடத்தில் நின்று வேடிக்கை பார்த்த பப்பு, "ஆயா, இதெல்லாம் என்னால படிக்க முடியாது. நீங்கதான் படிச்சு காட்டணும்" என்று திட்டவட்டமாக கூறிவிட, கவுண்டரில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அவ்வ்வ்வ்!

* இறுதியாக, "இரு இரு , சின்ன பசங்க புக்ஸ் இருக்கிற கடைக்கு போலாம்" என்று சொன்னதற்கேற்ப, ஒரு கடை தென்பட்டது. அதில், தோண்டி துழாவி பப்பு, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். "நீயே பில் போட்டு
வாங்கிக்கோ, எவ்ளோன்னு கேட்டு" என்று சற்று தள்ளி நின்றேன். அவளும், புத்தகத்தையும் காசையும் அவரிடம் நீட்டியபடி "இந்த புக் எவ்ளோ இந்த புக் தாங்க "  என்றெல்லாம் கேட்டு பார்த்துவிட்டாள். அவரோ, பப்புவின் பக்கம் திரும்பாமல், பின்னால் வருகிறவர்களிடமெல்லாம் பில் போட்டு கொடுத்தபடி இருந்தார். கேட்டு கேட்டு அலுத்து போனவள், "இந்தா நீயே கொடு" என்றதும், அவளிடமிருந்து வாங்கி பணத்தை நீட்டினேன். உடனே, பில் போட்டு கொடுத்தார். "பாத்தியா, பெரியவங்க குடுத்தாதான் வாங்குறாங்க" என்று நொந்துக்கொண்டாள்.  :‍(

* ஒரு பாதையை முடித்ததும், பப்பு  "எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிதாப்பா... நடக்கவே முடியலை" என்றாள். பெரிம்மாவும், "குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடுத்து கூட்டிட்டு வா, நான் இந்த ஸ்டால்லே இருக்கேன்" என்றதும், கான்டீனை நோக்கி நடந்தோம். அரங்கே நிரம்பி இருந்தது. மைக்கில், "வாசகர் ஒருவர் ஐசிஐசிஐ க்ரெடிட் கார்டை விட்டுவிட்டு சென்றுவிட்டார்" என்ற அறிவிப்பு! "கார்டை கூடவா விட்டுடுவாங்க" பெரிய மனுஷி பப்புதான்!

* கூட்டத்தை பார்த்து பயந்து போன நான், திரும்பி எப்படி இந்த கூட்டத்தில் வந்து பெரிம்மாவை கண்டுபிடித்து....என்று மலைத்து போனேன். "நீ எதுக்கு வந்தே?புக் வாங்க வந்தியா இல்ல...சாப்பிட வந்தியா" என்று ஒரு பொ.அவை  போல் கேட்டேன். அவளும், பொ. பெண் போல், "நான் ஐஸ்க்ரீம் சாப்பிடதான் வந்தேன்" என்றாள் வெகு தீர்மானமாக!

புக் ஃபேருக்கு குழந்தைகளை கூட கூட்டிப்போவதன் வசதிகள் இரண்டு வகைப்படும்:-

1. ஐஸ்க்ரீம் வாங்கினால் "கொஞ்சம் ஒரு வாய்" என்று கெஞ்சி  நாமும் சுவைக்கலாம். அல்லது, பஞ்சுமிட்டாய் வாங்கிவிட்டு, "இது கொஞ்சம் நீ எடுத்துக்கிட்டு ஒரு வாய் எனக்கு ஐஸ்கோலா தாயேன்" என்று பண்டமாற்று செய்யலாம்.

2. "கீழே இருக்கிற செல்ஃப்லேருந்து ஒவ்வொரு புக்கா எனக்கு எடுத்து குடு"
 என நின்றபடியே புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்களுக்கும் , ஒரு நல்ல விளையாட்டாக இருக்கும். ஹிஹி ("ஆச்சி, இது வேணாமா? இந்த புக் வீட்டுல இருக்கே?")

*ஐஸ் கோலாவையும், பஞ்சுமிட்டாயையும் காலியாக்கிய பிறகு, பெரிம்மாவையும் கண்டுபிடித்துவிட்டோம். சோட்டா பீம் கடையில் பப்பு ஃப்ரீசாகிவிட்டாள். "இதெல்லாம் அதுலேயே வந்ததுதானாம்..." என்றாலும் நோ சமாதானம். "நைன்ட்டி ருபீஸ்க்கு நாம வேற புக் வாங்கலாம்" என்றதும் கண்களை வேறு பக்கம் திருப்பினாள்.
* "உன் வயசுக்கு படிக்கிறதா எடு...சின்ன பசங்களோடதெல்லாம் எடுக்காதே..அதெல்லாம், நீ சின்ன வயசுலேயே படிச்சு முடிச்சுட்டே "என்று அவ்வப்போது (டோரா, சோட்டா பீம் புத்தகங்களை என்று வாசிக்கவும்) சொல்லி  ஒரு பொ.அ வாக நடந்துக்கொண்டேன்.

*நவ்நீத் ஸ்டாலை பார்த்துவிட்டு, "இது குட்டி பசங்க புக்குப்பா" என்று ஓடிவிட்டாள். புத்தகங்களை எடுக்கு வேகத்தை பார்த்ததும், "படிச்சு பார்த்துட்டு, இன்ட்ரஸ்டிங்கா இருந்தா வாங்கலாம். டைட்டில் பார்த்து வாங்கிட்டு நமக்கு லாஸ்ட் டைம் என்ன ஆச்சு." என்று பொ.அவாக நடக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். பொறுத்து பொறுத்து பார்த்தேன். பப்பு, இடத்தை விட்டு நகருவதாக இல்லை. "படிச்சு பார்க்கலாம்.. ஆனா, ஃபுல்லா படிச்சு பார்க்கணும்னு இல்ல...கொஞ்சம் படிச்சுட்டு, இன்ட்ர்ஸ்டிங்கா இருந்தா எடுத்துக்கோ" என்று நிபந்தனைகளை, நானே மாற்ற வேண்டியதாகிவிட்டது.

 * இறுதியாக, பப்பு ஹேப்பி NBT. நானும் ஹேப்பி NBT. :‍)

 *. உமாநாத் செல்வனை,கார்த்திக்கை , சுகிர்த ராணியை, சந்தித்தோம்.  பப்புவுக்கு ,கார்த்திக்கை தவிர மற்றவர்கள் அறிமுகம் இல்லையாதலால் ஒரே ஙே!

* மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு வெளியில் செல்வதை நினைத்தாலே தலை சுற்றியது. வண்டலூர் ஜூ போல, உள்ளே பேட்டரி கார் விட்டால் நன்றாக இருக்கும். எதிர்பட்ட ஒரு போலீஸ்காரரிடம், "எந்த பக்கம் எக்சிட்" என்றதும், "நேரா போங்கம்மா" என்று நடுவில் இருந்த பாதையை காட்டினார்.  சொல்லும்போது, அவர் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. இந்த திருவிழா கூட்டத்தில் அந்நியமாக உணர்ந்திருப்பார் போல! அவர் கை காட்டிய திசையில் வெளியில் வந்தோம். வலது பக்கம் "சாப்பிட வாங்க"

* இன்னொரு ரவுண்ட்ட் ஐஸ்கோலாவும், பஞ்சுமிட்டாயும், இரண்டு அப்பளங்களையும் நொறுக்கிவிட்டு வெளியில் வந்தோம். ஆவேசமாக, ஒரு பெண்மணி பேசிக்கொண்டிருந்தார். இடையில், ஒரு குரல் குறுக்கிட்டது, கூட்டம் சிரித்தது. ஓ! சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போல!

* மீட்டர் போடும் ஆட்டோ, கிடைத்து வீட்டுக்கு வந்து புக்ஃபேர் பற்றி ஸ்டேட்டஸ் போட்டதும்தான், கடமையை செய்த திருப்தி கிடைத்தது!! ஹப்பாடா! :‍)ஆனாலும், ஒரே ஒரு குறை மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது!! கிளம்பும் அவசரத்தில், கேமராவை எடுக்க மறந்து தொலைத்துவிட்டேன்! ச்சே! இப்பொழுது நொந்து என்ன பயன்...ம்ஹும்!