ஒரு பயிற்சி வகுப்பில் உங்கள் மகளை கொண்டு போய் விடுகிறீர்கள். ஆசிரியர்
வந்து ஏதோ சொல்கிறார். உடனே எல்லா குழந்தைகளும் எழுந்து ஓடி வந்து
வரிசையில் நிற்கிறார்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு வரிசையில் நிற்க
முண்டியடிக்கின்றன, குழந்தைகள். ஆனால், உங்கள் குழந்தை மட்டும், 'எல்லாம்
அடங்கி முடியட்டும்' என்பது போல இறுதியில் நின்று கொள்கிறாள். 'ஏன் இவள்
எல்லாரோடும் போட்டி போட்டு நிற்கவில்லை' என்று கவலை கொள்கிறீர்கள்.
உங்களுக்கு
ஒன்றை கவனத்தில் கொண்டு வருகிறேன், குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு
அல்ல, குழு மனப்பான்மையோடு வளர வேண்டும் என்று நீங்கள்தான்
விரும்பினீர்கள்.
ஒரு கதை படிக்கும் (ஸ்டோரி ரீடிங்) நிகழ்ச்சியில்
வாசிப்பாளர் புத்தகத்தில் ஒரு படத்தை காட்டி அது என்ன என்று கேட்கிறார்.
யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், உங்கள் குழந்தைக்கு அது
தெரியும் என்று. ஏனெனில், அந்த பறவையை பார்க்க வட கர்நாடகம் வரை
சென்றிருக்கிறீர்கள். அந்த பறவையை மிக நெருக்கத்தில் அவள்
பார்த்திருக்கிறாள்.
விடை தெரிந்து,அவள் கையை உயர்த்துகிறாள்.
அதற்குள், பெற்றோர் பக்கத்திலிருந்து விடை வந்துவிடுகிறது. ஆனாலும், அவள்
ஏன் டக்கென்று சொல்லவில்லை என்று மறுகுகிறீர்கள். வெளியில் வந்து
'கேட்டவுடனே ஏன் சொல்லல' என்று உங்கள் குழந்தையை விசாரிக்கிறீர்கள்.
'நம்ம
டர்ன் வந்தாதான் சொல்லணும். பார்த்தவுடனே கத்தக்கூடாது.' என்கிறாள் மகள்.
எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் அடிக்கடி
வலியுறுத்தும் 'குட் மேனர்சின்' கீழ் அல்லவா அது வருகிறது!
ஆட்டோவில்
பையை தொலைத்துவிடுகிறாள், உங்கள் மகள். அப்படி என்ன கவனமின்மை என்று
கடிந்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகம் கடுமையாக மாறுகிறது. அவளோ, அதைப்
பற்றி கிஞ்சித்தும் பாதிப்படையவில்லை. 'பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சி
கூட இல்லையே, இது எப்படி எதிர்காலத்தில்...' என்று அதற்கும் சேர்த்து கவலை
கொள்கிறீர்கள். எந்த பாதிப்பும் இல்லாமல், "ஆச்சி, கோவமா
இருக்காதே,சிரி...சிரி" என்று உங்கள் தாடையை பிடித்து கன்னங்களை இழுத்து
சிரிப்பது போல வைக்கிறாள், அவள்.
இந்த நேரத்தில்
நினைவுப்படுத்துகிறேன், 'எந்த சூழலாக இருந்தாலும், அவள் செய்த தவறைக்
குறித்து பதற்றமடையாமல் தன்னியல்பு மாறாமல் கூலாக/நிதானமாக இருக்க
வேண்டும்' என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.
வேறு ஊரில்
இருக்கிறீர்கள். இரவுணவுக்காக, வெளியில் சாப்பிட செல்கிறீர்கள். உணவு
விடுதியின் முன்னால், வண்டிகள் செல்வதற்காக கூம்பு வடிவ தடுப்புகள்
வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றை காற்று சாய்த்து விட்டிருக்கிறது.
அங்கேயேதான் விடுதி காவலரும் இருக்கிறார். ஆனாலும், உங்கள் மகளால்
விழுந்துவிட்ட தடுப்பை பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை. உங்கள்
கையை உதறிவிட்டு ஓடுகிறாள். அந்த தடுப்பை நிமிர்த்து அதன் இடத்தில்
வரிசையில் வைக்கிறாள். பின்னர், வரிசையை பார்த்து புன்னகையொன்று
புரிந்துக்கொள்கிறாள், அதில்பாதியை உங்களை நோக்கி வீசுகிறாள். வேறு
வழியின்றி, நீங்களும் புன்னகைக்கிறீர்கள்.
கார் ஒன்று வேகமாக அந்த
பக்கம் செல்கிறது. 'கார்ல்லாம் வேகமா போகுது, அது கீழேயே இருந்தாதான்
என்ன? எத்தனை பேரு போறாங்க வர்றாங்க...செக்யூரிட்டி வேற இருக்காருல்ல. இது
ஏன் இப்படி இருக்கு' என்று, அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுள்
குமைகிறீர்கள். உடனே, இதுபோன்ற கடந்தகால சம்பவங்கள் குழந்தைகள்
மருத்துவமனையில் நடந்தது, புத்தக சந்தையில் நடந்தது எல்லாம் உங்கள்
நினைவுக்கு வருகின்றன. அவளது எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்து
போகிறீர்கள்.
புத்தக சந்தையில், ஸ்டால் நுழைவாயில் நெரிசலாக
இருக்கிறது என்று எக்சிட்டில் நுழைகிறீர்கள். 'அது எக்சிட், இதான் ஆச்சி,
என்ட்ரி.எக்சிட்லே போகக் கூடாது' என்று உங்களை திருத்தி, செல்லவிடாமல்
தடுக்கிறாள். இறுதியில், உங்கள் கையைப் வலுக்கட்டாயமாக
பிடித்துக்கொள்கிறாள், அப்படி செல்லக்கூடாது என்பதுபோல.பிறகென்ன,
'என்ட்ரி'யிலேயே நெரிசலாக இருந்தாலும் செல்ல நேர்கிறது.
'என்ன
இது, இதெல்லாம் எப்படி பொழைக்க போகுது? எல்லா இடத்திலெயும் ரூல் ஃபாலோ பண்ண
முடியுமா?' என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால், இதை சொல்லி அவளை
கெடுத்துவிட வேண்டாம் என்று அவள் சொல்படியே நடக்கிறீர்கள்.
உங்கள்
கவனத்துக்கு கொண்டு வருகிறேன்,'பயம் காரணமாக பள்ளியில் மட்டும்
ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது, பள்ளிக்கு வெளியிலும் ஒழுக்கத்தை
தன்னுள் பேண வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி யோடாவது அவள் வளர
வேண்டும்.', என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.
வெளியிலாவது
இப்படி இருக்கிறாளே என்று சந்தோசப்படும் அதே நேரம், வீட்டில் அவள் செய்யும்
அட்டகாசங்களை எண்ணி 'வளர்ந்து விட்டாளே, இன்னுமா இப்படி இருப்பது' என்று
புலம்புகிறீர்கள். பென்சீலை சீவித்தள்ளி, அதன் வண்ண வண்ண சீவல்களை,
அலமாரி முழுதும் நிரப்பி வைத்திருப்பது, விளையாட்டு சாமான்களை கலைத்து
போட்டு ஹாலை குப்பையாக்கி வைப்பது எல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.
:-)
4 comments:
Same Pinch :)same feelings.
Angelin
ஐயோ முல்லை!! ஒவ்வொரு வரியையும் நான் உணர்ந்திருக்கிறேன், மனதில் நினைத்திருக்கிறேன்! நம் குழந்தையால் இந்த உலகத்தில் பிழைக்க முடியுமா என்று நினைத்திருக்கிறேன்..இப்பொழுதும் சில சமயங்களில் நினைக்கிறேன்.. என் மனதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!
நன்றி செரூப்! உங்கள் பேப்பர் க்ல்லிங் வேலைப்பாடுகள் அழகு! எனக்கும் கற்றுக்கொள்ள ஆசை!!
ஆமா, தியானா! எனக்குள் அடிக்கடி தலைதூக்கும் எண்ணங்கள் அவை,பப்பு மேல் மிகுந்த நம்பிக்கை இருந்தாலும்! :)
Please try to get her this book
http://www.amazon.com/Rules-Kids-Wont-Learn-School/dp/031236038X
Post a Comment