Sunday, February 16, 2014

I'll always Love you!

"if I spill some drops of coffee on the floor, would you still love me?"- Pappu

"yes, Pappu! I will love you always!" - Me

"Achi, If I fell from Bed when sleeping, Will you still love me?" - Pappu

"Yes, Pappu, I will love you forever and ever!" - Me

"Achi, If I broke the chair, Will you still love me?" - Pappu

"Yes Pappu, I will love you! " - Me

"Achi, If I take time to bath, Will you still love me?"- Pappu

"grrrrrrrrrrrr" - Meee!

காலங்காத்தாலே, பாத்ரூம்லே இருந்து இந்த ராகம். நான் கூட, சின்ன வயசு புத்தகத்துலே படிச்சதை 'திரும்பி பார்த்திருப்பா'ன்னு நினைச்சு,  நானும்   சேர்ந்து ராகம் போட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, கடைசி கேள்விக்கு ஒரு லுக் விட்டதும், அடக்க ஒடுக்கமா குளிக்க போய்ட்டாங்க மேடம்!

பின்குறிப்பு: சோப்பை கரைச்சு கரைச்சு குளிக்கிறதுக்கு கண்டிப்பா அரைமணி நேரமாவது ஆகும்.  அப்போதான் நான் ரொம்ப டென்சனாவேன்னு தெரிஞ்சுக்கிட்டே, எப்படில்லாம் கேள்வி வருது பாருங்க!!


பப்பு டைம்ஸ்

மாமாவுக்கு திருமண‌ம் நிச்சயமாகியிருப்பது பப்புவுக்கு பிடிக்கவேயில்லை.  'நான் அக்செப்ட் பண்ண மாட்டேன்ம்ப்பா' என்று சொல்லிக்கொண்டிருப்பாள். மாமாவை  கல்யாணம் செய்து வேறு வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என்று பயம்.

'நான் கல்யாணத்தை நிறுத்த போறேன். அதுதான் என் ப்ளான்' என்று வருவோர் போவோரிடம் எல்லாம் சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். அதில் சிலர் பப்புவுக்கு ஐடியா தருவதாக எண்ணி,  'நீ கல்யாணத்தப்போ மாமாவோட சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுடு.' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். பப்பு அதையே பிடித்துக்கொண்டாள்.

நச்சு தாங்காமல்  'சீப்பை எல்லாம் ஒளிச்சு வைப்பாங்களா? அது கிண்டலுக்கு சொன்னது பப்பு' என்றதும், அவளது திட்டத்தை என்னிடம் விவரிக்கத் தொடங்கினாள்.

 'எல்லா சீப்பையும் ஒளைச்சு வைச்சுட்டா என்ன ஆகும்? மாமா சீவ முடியாது. அப்போ, மாமாவோட தலை எப்படி இருக்கும்? அதை பார்த்துட்டு பிரைட்(bride) !!!    "ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆ...யார்றா இந்த பையன் பேய் மாதிரி இருக்கான்னு"ன்னு சொல்லிட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லிடுவாங்க'

;-)



இரவு தூங்கும் நேரத்தில் "கதை சொல்லு கதை சொல்லு" என்ற கேட்டு சலித்த பிறகு பப்பு 'சரி, நானே ஒரு கதை சொல்றேன்" என்று தன் கையே தனக்குதவியாக ஆரம்பித்தாள்.

"ஒரு ஊர்ல தில்லையர்க்கரசின்னு (தில்லைக்கரசியை அப்படிதான் சொல்றா!) ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த குட்டி பொண்ணு வளர்ந்து டீச்சர் ஆகிடுச்சாம்.அதுக்கு ஒரு டாட்டர் வந்துச்சாம். அந்த டாட்டர் பேரு சந்தனமுல்லையாம். அந்த டாட்டருக்கு குட்டி டாட்டர் வந்துச்சாம். அந்த பொண்ணு பேரு குறிஞ்சி மலராம். அது எப்போவும் கதை கேட்டுக்கிட்டே இருக்குமாம். அப்போ அவங்க ஆயா ஒரு கதை சொன்னாங்களாம்.

ஒரு ஊர்லே ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணு செம வாலாம். ரொம்ப குறும்பு பண்ணுமாம். எல்லாரையும் ஹர்ட் பண்ணிடுமாம். அதுக்கு வால் முளைச்சுக்கிச்சாம். அது அவங்க ஆயாகிட்டே போய் எனக்கு ஏன் வால் முளைச்சுச்சுன்னு கேட்டுச்சாம். நீ வால்த்தனம் பண்றதால உனக்கு வால் முளைச்சுடுச்சுன்னு சொன்னாங்களாம். அப்போ அவங்க அப்பா,   நீ யாரைல்லாம் ஹர்ட் பண்றியோ அப்பல்லாம் இந்த சுவரிலே ஒரு ஆணி அடின்னு சொன்னாராம். அது கொஞ்ச நாள்லே ஆணி அடிச்சு அடிச்சு சுவரே ஃபுல்லாயிடுச்சாம். அப்போ அவங்க அப்பா ஆணியெல்லாம் எடுத்துட்டு சொன்னாராம். அங்கே நெறைய ஓட்டை இருந்துச்சாம், ஆணி அடிச்ச இடத்துலே. 'நீ ஆணி அடிச்சுட்டு எடுத்தாலும் ஹர்ட் பண்ணது பண்ணதுதான்'னு சொல்லிட்டு ஒரு கதை சொன்னாராம்.

இப்படிதான் ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு ஒரு வால் இல்ல...பல வாலுங்க இருந்துச்சாம். 20 30 வாலு. ஏன்னா அந்த பொண்ணு செம வால்த்தனம் பண்ணுமாம். அப்போ..."

அதுக்குள்ளே நான் தூங்கிட்டதாலே கதை எப்போ முடிஞ்சதுன்னு தெரியலை!

#நெவர்_எண்டிங்_வால்  ;-)
 
 
நேத்துலேருந்து பப்புவுக்கு என் மேலே  ரொம்ப ஃபீலிங்ஸ்!!  ஒரு கிளாசுக்கு கொஞ்சம் லேட்டா போயிட்டோம். 2 நிமிஷம்தான். வீட்டுக்கு வந்ததும், "கிளாஸ் ஆரம்பிச்சுடுச்சா நீ போறதுக்குள்ளே" ந்னு கேட்டேன். அது அவளுக்கு ரொம்ப டச் ஆகிடுச்சு.

"எல்லாரும் அப்போதான் போய் உட்கார்ந்திருந்தாங்க. ஆரம்பிக்கல்லாம் இல்ல. நீ எப்படி கேக்கிறே...பாரு !! ..அதுலேருந்து  தெரியுது. உனக்கு என் மேல அவ்ளோ அக்கறைன்னு. நீ எது சொன்னாலும் நான் செய்வேன் ஆச்சி!" என்றெல்லாம் ஒரே  லவ்ஸ்! நானும், இதான் சான்சுன்னு, "காலையில நான் எழுப்பும்போது மட்டும் எழுந்துடு" என்று காதில் போட்டு வைத்தேன்.
(அதற்கு முதல் நாள்தான் 'உன்னை தவுஸண்ட் இயர்ஸுக்கு புடிக்கும், ஆனா, எல்லா டேஸ்லெயும் மார்னிங் மட்டும்தான் புடிக்காது'ன்னு ஒரு பல்பு குடுத்திருந்தா!)

அதுலேருந்து,  "ஐ லவ் யூ ஆச்சி ‍," நீதான்ப்பா என் லைஃப்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவள், ஒரு படி மேல் போய், அவளது அன்பை நிருபிக்க வேண்டி - ஒரு உதாரணத்தை சொன்னாள்.

'நான் தாட் ஃபார் த டேவுல என்ன எழுதினேன்..?.An intelligent son makes a father glad;  But a foolish son makes his mother sad"  ந்னு இருந்ததை, நான் எப்படி எழுதுனேன். An intelligent daughter makes her mother glad, but foolish daughter makes her father sad. எல்லாம், உனக்காகதான்..ஆச்சி!"

நேரமோ எட்டரை. அங்கே,ஆட்டோ வேற வெயிட்டிங்!

இதுக்கெல்லாம் 'என்ன கைமாறு செய்ய போகிறேன்' லுக்கோட,  ஈஈஈஈன்னு சிரிச்சு -   'தேங்க் யூ'ன்னு சொல்லிட்டேன்!

#வீ_வான்ட்_மோர்_எமோசன்

Saturday, February 15, 2014

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, அக்பர்க்கு தலைல கட்டிட்டு போனேன் இல்ல.... அந்த ஷாலை கேட்டாருப்பா மாஸ்டர்" என்று கடந்த சில நாட்களாக ஒரே "ஆத்தா வையும்...." டயலாக்.

ஷாலை எல்லாம் எடுத்து வைத்தபின், 'ஆனுவல் டேவுக்கும் அந்த ஷாலுக்கு என்னப்பா சம்பந்தம்' என்று திடீரென்று மூளையில் பல்பு எரிந்ததும், 'ஓகே, இன்னைக்கு மாஸ்டர்கிட்டே  நானும் கேட்டுக்கறேன். நாளைக்கு எடுத்துக்கிட்டு போ" என்று சமாதானக்கொடியை காட்டினேன்.

மாஸ்டர்கிட்டே கேட்டா, "இல்லையே,அதெல்லாம் வேணாம். செப்பல்தான் கொஞ்சம் டிசைனா இருக்கிற மாதிரி கேட்டிருந்தேன். ஷால் எல்லாம் வேணாம். " என்றவர், சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ,"ஒருவேளை அவங்களுக்கு தலையில அதை கட்டிக்கிட்டா அழகா இருக்கும்னு நினைச்சிருப்பாங்க. அவங்களுக்கு அப்படி ஆசையா இருந்திருக்கும்" என்று ஸ்டூடன்டுக்கு வக்காலத்து வேறு!! :-)

இதையே, எங்க ஸ்கூலில் நான் செய்திருந்தால்  ‍ டீச்சரிடமும்/வீட்டிலும் என்று இரண்டு பக்கமும் செமையா வாங்கி கட்டியிருந்திருப்பேன், "பொய் சொல்றியா?சொல்லாததை சொல்றியா" என்று!
ஹ்ம்ம்ம்!

"மாஸ்டர், அவ கொஞ்சம் பொறுமையா வரைஞ்சா நல்லாருக்கும்." என்று பப்புவின் 'பார்ட்ஸ் ஆஃப் த‌ ஹென்னை' குறிப்பிட்டு, சிலநாட்கள் முன்பு சொன்னபோது, "குழந்தைங்கதானே, இப்போதானே கத்துக்கறாங்க. பார்க்க ஹென் மாதிரி வரைஞ்சா போதும்" என்று சொல்லி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மாஸ்டர்தான் இவர்!  :-)  (அப்போது,  அவள் வரைந்திருந்த  ஹென் சிட்டுக்குருவி மாதிரியே இருந்தது.)

இந்த இடத்தில் மரியா மான்டிசோரிக்கு நன்றி சொல்லலைன்னா என் மனசாட்சி என்னையே மன்னிக்காது! #நல்ல_டீச்சர்_நல்ல_ஸ்டூடன்ட்  #ThanksToMariaMontessori

 

தூங்கும் நேரத்தில் ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தோம்.சாப்பிட்ட ஆம்பூர் பிரியாணி, பொங்கல்,சாய்பாய் இன்னபிற. சாய்பாய் என்றால் என்ன என்று  எனக்கு புரியாததால் கண்டுக்கொள்ளவில்லை.

திடீரென்று, "நான் ஏன் கேர்லா பொறந்தேன்னு இருக்கு.அதுவும், ஏன் இப்போ போய் பொறந்தேன்னு இருக்கு. நான் இப்போ கேர்லாவே பொறந்துருக்கவே கூடாது" என்று பப்பு சொன்னதும் பகீர்ன்னு ஆகிவிட்டது.சீரியாசாக வேறு சொன்னாள்.  சொல்லும்போது குரல் வேறு தழுதழுத்தது. அதோடு, லேசாக கண்ணீரும்! கேட்கும் போது எப்படி இருக்கும்??

'என்னடா நடந்தது, நல்லாதானே போய்க்கிட்டிருக்கு, இவ்ளோ கவலைபடற மாதிரி என்ன ஆகிடுச்சு ' என்றும் குழப்பம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள எப்படி  நைச்சியமாக கேட்பது? மண்டையை உடைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கேப் விட்டாலே அவளே தொடர்ந்து சொல்லுவாள்.

"நான் பாயா பொறந்து இருக்கலாம். அதுவும் ஔரங்க்சீப் சிவாஜி காலத்துலே நான் வீர சிவாஜியா பொறந்து இருக்கனும். எப்படி இருந்திருப்பேன் நான்?"

அவள் எப்படி இருந்திருப்பாள் என்பதை விடுங்கள்! நான் எப்படி இருந்திருப்பேன் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!!

(இப்போ பொறந்ததுதான் சூப்பர்ன்னு சமாதானப்படுத்த, கொஞ்சம் மார்ஸுக்கு போன மங்கள்யான்,  கொஞ்சம் கேன்டிக்ரஷ், கம்ப்யூட்டர் இன்டர்நெட், பஃப்ஸ் என்று பேல்பூரி கிண்டினேன். கூட சேர்ந்து, அவளும் சப்புவது போல பாவனை காட்டினாள். ஐஸ்க்ரீமாம்!ஸப்பாஆஆஆ!)

 "ஐஸ்க்ரீம் கிடைச்சிருக்காது இல்ல!" என்று குரல் தெளிவாக ஒலித்ததும் கேட்டேன், "சாய்பாய்னா என்ன? " வீர சிவாஜியோட வைஃப் ஆம்!

#வீர_சிவாஜி_நான்_ஆனேன்_பஜ்ஜி! ;‍)

நிலாவுக்கு வந்த சோதனை!!

 பீச் இல்லன்னா சாலையோரத்துல நடக்கும்போது 'கால் வலிக்குது' கம்ப்ளெயின்ட் வராம இருக்க இந்த விளையாட்டை விளையாடுவோம். மேலே வானத்தை பார்த்து ஆளுக்கொரு மேகக்கூட்டத்தை தேர்ந்தெடுத்துக்கிறது; அதையே நோக்கி பார்த்து அந்த மேகக்கூட்டத்தை கலைக்கிறது. அதாவது, நாம அதை கான்சென்ட்ரேட் பண்ணி பார்த்துக்கிட்டேயிருந்தா டிஸ்அப்பியர் ஆகிடும்கிறது நம்பிக்கை. இல்லேன்னா, இன்னும் கொஞ்சம் நல்லா கான்சன்ரேட் பண்ணனும்கிறதுதான் டெக்னிக்...(கான்சன்ட்ரேசனை வளக்கிறேனாம்)..ஹிஹி...இல்லேன்னாலும் மேகம் கலைஞ்சுடும்கிறதை இன்னும் பப்பு கண்டுபிடிக்கலை. அவ கான்சன்ட்ரேட் பண்ணிதான் கரைக்கறான்னு இப்போ வரைக்கும் நம்பிக்கிட்டிருக்கா.

பப்பு வளர வளர, நானும் இன்னொரு ஆயாவாகிட்டேன்கிறதை நானே நம்பலைன்னாலும் அதுதான் உண்மை. அதுலே, ஆறரைக்கே எழுந்து 'பப்பு, ஏழு மணியாகிடுச்சு;ன்னு அலறி அவளை பயமுறுத்தலேருந்து, 'நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணா எதையும் சீக்கிரமா செஞ்சுடுவே' ங்கிறதுலேருந்து...'உன்னை விட சூப்பரா புத்திசாலியா இந்த உலகத்துலே வேற யாருமே இல்ல'ன்னு பப்புவை நம்ப வைக்கிறது வரை அடக்கம்.இப்படியே  ஆயாவோட சின்ன வெர்சனாகிட்டேன். அதுலே, 'நீ இன்னும் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி....'  ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி சொல்லிட்டேன்றதை நேத்துதான் உணர்ந்தேன்.

சாயங்காலம் காலார நடந்துபோய் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு திரும்ப வரோம்... பப்பு ஒரு இடத்துலே நின்னுட்டு வரவே இல்ல.' வா வா'ன்னு கூப்பிட்டாலும் அண்ணாந்து பார்த்துகிட்டு நிக்கறா. எங்களை பார்த்து எதிர்லே பைக்லே வந்த ஒரு பேமிலேயே அண்ணாந்து வானத்தை பார்த்துட்டு வேற போனாங்க. எதிர்லே நடந்து வந்தவங்க எங்களை ஒரு மாதிரி பார்த்துட்டு போனாங்க. இதெல்லாம் பார்த்து அலெர்ட் ஆகி கூப்பிட்டதும், பப்பு , 'ஹேய், ஆச்சி, இரு, நான் நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி நிலாவை அழிச்சுட்டு வந்துடறேன்'ன்னு சொன்னதும் பகீர்னு  ஆகிடுச்சு.  

"வானவில் பறவையின் கதை" from Chennai storytelling festival 2014

முன்பொரு காலத்தில் நடந்தது இந்த கதை. அப்போது, சென்னையே இல்லை. பெங்களூரு  இல்லை. ஹைதராபாத்தும் இல்லை. ஏன், இந்தியாவும் இல்லை. ஆஸ்திரேலியாவும் இல்லை. சைனாவும் இல்லை. அமெரிக்காவும் இல்லை. ஜப்பானும் இல்லை. உலகமே ஒரு பெரிய காடாக இருந்தது. அந்த காட்டில் எல்லா மிருகங்களும் வசித்து வந்தன. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்த காடு.

 காலையில் சூரியன் தகதகவென்று மின்னியபடி கிழக்கில் உதிக்கும். பறவைகள் கீச்சு கீச்சு என்று கத்தியபடி காட்டையே சுற்றி வரும். விலங்குகள் இரை தேடி கிளம்பும். ஆறுகளில் சலசலப்பு. எல்லா மிருகங்களும், பறவைகளும் அந்த ஆற்றில் தண்ணீர் அருந்தும். இப்படி, ஒவ்வொரு நாளும் கழிந்தது. ஒவ்வொரு நாளாக.....ஒவ்வொரு வாரமாக....ஒவ்வொரு மாதமாக...ஒவ்வொரு வருடமாக! ஒவ்வொரு நாளும், சூரியன் எழும்பும். பின்பு மாலையில் மறையும்.

ஒரே விஷயம் திரும்ப திரும்ப ஒரே மாதிரி நடந்தால் என்ன நிகழும்? ஒரு சலிப்பு வரும், அல்லவா? சூரியனுக்கு அப்படி ஒரு சலிப்பு வந்தது. ஒருநாள் காலையில், அது சொல்லிக்கொண்டது, "இனிமேல் நான் வர மாட்டேன். வீட்டிலேயே இருக்கப் போகிறேன்.ரொம்ப போரடிக்குது".

காட்டில் எப்போதும்போல் பறவைகள் எழும்பின. கீச்சு கீச்சு என்று கத்தியபடி பறந்தன.மிருகங்கள் இரைதேடத் துவங்கின. யாருக்கும் சூரியன் வராதது பெரிதாக தெரியவில்லை. மாலையில், தண்ணீர் அருந்த மிருகங்கள் ஆற்றுக்கு வந்தன. தண்ணீர் அருந்த முடியாதபடி அவ்வளவு சில்லென்று இருந்தது. அடுத்ததடுத்த நாட்களில், காடே மிகவும் குளிராக, இருட்டாக மாறிப் போய் இருந்தது. பறவைகளாலும் மிருகங்களாலும் வசிக்கவே முடியவில்லை.

யானை, எல்லா மிருகங்களையும், பறவைகளையும் அழைத்தது."இப்படியே இருந்தால் நாம் எப்படி வசிப்பது? சூரியன் வரவே இல்லையே. நம்மில் யாராவது சூரியனிடம் சென்று பேச வேண்டும்" என்று சொன்னது. எல்லா மிருகங்களும் ஒப்புக்கொண்டன. ஆனால், யார் சென்று பேசுவது? யாரால் முடியும்? எல்லா மிருகங்களின் கவனமும் பறவைகள் பக்கம் திரும்பின. யானை, நாரையை அழைத்தது. நாரை சொன்னது

"முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது".

அடுத்ததாக, சிட்டுக்குருவியை கேட்டது யானை. சிட்டுக்குருவியும்,  "முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது" என்றது.

ஹம்மிங் பேர்ட், புறா, கௌதாரி, இரட்டை வால் குருவி, கொக்கு,மயில் என்று எல்லா பறவைகளும், "முடியாது...முடியாது...என்னால் முடியவே முடியாது"  என்று மறுத்து விட்டன.

கடைசியாக, யானை, கழுகிடம், வந்தது. "நீதான் உயரத்தில் பறப்பாயே, உன்னால் சூரியனிடம் போக முடியுமே" என்றது. கழுகும், "எனக்கும் போக ஆசைதான். ஆனால், சூரியனின் வெயிலில் நான் கருகிவிடுவேன். உங்களுக்காக நான் மட்டும் ஏன் உயிரை விட வேண்டும்" என்றது. சூரியனிடம் செல்ல, எந்த பறவையும் முன்வரவில்லை.

இறுதியாக, ஒரு பறவை முன்னால் வந்தது. அது, வானவில் பறவை.

வானவில் பறவையின், சிறகுகள் வானவில் நிறத்தில் இருக்கும். சிறகுகளை விரித்து அது பறந்தால் காண அவ்வளவு அழகாக இருக்கும். அதன் உடலோ பாலைவிட வெண்மையான நிறம். உடல், பஞ்சு போல! அதன் குரலோ கேட்கவெவெ வேண்டாம். அது பாட பாட நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை. அந்த பறவையின் அழகே அழகு! வானவில் பறவை, யானையிடம் வந்து சொன்னது, "நான் போய் சூரியனிடம் பேசுகிறேன்".

காட்டில் எல்லாரிடமும் விடைபெற்று வானவில் பறவை மேலே பறக்கத் தொடங்கியது.  கீழே எல்லா பறவைகளும், மிருகங்களும் ஆரவாரத்துடன் விடை கொடுத்தன. வானவில் பறவையின் சிறகுகள், மேலே செல்லும்போது பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. காட்டைத் தாண்டியதும் வானவில் பறவைக்கு களைப்பாக இருந்தது. ஆனாலும், நண்பர்களுக்காக உயரே உயரே பறந்தது.

"பறக்க வேண்டும் தூரமாக..இன்னும் தூரமாக" என்று தனக்குள் பாடிக்கொண்டது. சூரியனை நெருங்கும்போது  அதன் வெப்பம் தாங்காமல் அதனால் பறக்கவே முடியவில்லை.

பின்னால் திரும்பி பார்த்தது. குளுமையான காடும் அதன் நண்பர்களும். பின்னால் திரும்பி விடலாமா என்று ஒரு நிமிடம் எண்ணியது. ஆனால், சூரியனுக்காக ஏங்கும் அதன் நண்பர்கள் நினைவுக்கு வந்ததன. "பறக்க வேண்டும் தூரமாக..இன்னும் தூரமாக" என்று பாடியபடி,   முன்னால் சூரியனை நோக்கி முன்னேறியது.

அதன் வானவில் சிறகுகள்... அய்யோ...அதன் பால் போன்ற வெண்மையான உடலோ கருகி விட்டது. அதன் இனிமையான குரலையும் இழந்துவிட்டது.  சூரியனை நெருங்க நெருங்க, அது தனது சிறகுகளையும் இழந்துவிட்டது.  இறுதியாக, சூரியனின் வீட்டை அடைந்தது, வானவில் பறவை.

வானவில் பறவையை கண்ட சூரியனுக்கு அப்போதுதான் தான் செய்தது எவ்வளவு மோசமானது என்று தெரிந்தது. தீய்ந்து போன உடலையும், வறட்டுத்தனமான அதன் குரலையும் கண்டு மனம் வருந்தியது. "என்னால் தானே உனக்கு இதெல்லாம், நான் எவ்வளவு சுயநலமாக இருந்துவிட்டேன்" என்று வருத்தப்பட்டது.

"என்னால் உன்னுடைய இனிமையான குரலையும், வானவில் சிறகுகளையும், வெண்மையான உடலையும் திருப்பிக் கொடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால், என்னிடம் அந்த சக்தி இல்லை" என்று சொன்னது.

"திருப்பிக்கொடுக்கும் சக்திதான் இல்லையே தவிர, உனக்கு மூன்று வரங்களை என்னால் கொடுக்கமுடியும்" என்றது. ஒன்று, உன்னை எந்த வேடனும் வேட்டையாட மாட்டான். இரண்டு, உன்னை சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பார்கள். மூன்று, உனது சிறகிலிருந்து விழுந்த இறகை எடுத்து சூரியனைப் பார்த்தால் அதில் வானவில் வர்ணங்கள் தெரியும். அந்த வானவில் பறவையைதான் நாம் இன்று என்ன பெயர் சொல்லி அழைக்கிறோம்? காக்கா என்று அழைக்கிறோம்.

அதனால்தான், காகத்தை எந்த வேடனும் இன்றுவ்ரை வேட்டையாடுவதில்லை.  எல்லா பறவைகளும் தனியாக அமர்ந்து இரை உண்டாலும், நமது காக்கையார் நண்பர்களுடன் எப்போதும் விருந்துண்பார். அதோடு, காக்கையின் சிறகை எடுத்து பார்த்தால் நமது கண்களுக்கு வானவில் தெரியும்!

‍‍‍‍‍**************************

பிப். 7 முதல் 9 வரை நடைபெற்ற‌, சென்னை கதைசொல்லும் விழாவில், பெங்களூரிலிருந்து வந்திருந்த அமீன் ஹக் சொன்ன கதை. ரம்மியமான மாலைவேளையில், ஐந்து பேர் சொன்ன விதவிதமான கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதை இது. வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில், நிகழ்வைப் பற்றி பேசும்போது பப்புவை கவர்ந்த கதை எதுவென்று கேட்டேன். (அவள் எந்த கதைகளையும் கவனித்திருக்கவே இல்லை என்றுதான் நினைத்தேன். தனது, பழைய ஸ்டோரிடெல்லிங் நண்பர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்த உற்சாக மிகுதியில் திளைத்துக்கொண்டிருந்தாள். )ம்ம்ம்.... பப்புவை மிகவும் கவர்ந்த கதையும் இதுதானாம்! குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு இந்த கதை பிடித்துபோவதில், ஆச்சர்யமேதும் இல்லைதானே! ;‍-)

மனம் ஒரு குரங்கு (அ) Parental anxiety

ஒரு பயிற்சி வகுப்பில் உங்கள் மகளை கொண்டு போய் விடுகிறீர்கள். ஆசிரியர் வந்து ஏதோ சொல்கிறார். உடனே எல்லா குழந்தைகளும் எழுந்து ஓடி வந்து வரிசையில் நிற்கிறார்கள். மற்றவர்களை முந்திக்கொண்டு வரிசையில் நிற்க முண்டியடிக்கின்றன, குழந்தைகள். ஆனால், உங்கள் குழந்தை மட்டும், 'எல்லாம் அடங்கி முடியட்டும்' என்பது போல இறுதியில் நின்று கொள்கிறாள்.  'ஏன் இவள் எல்லாரோடும் போட்டி போட்டு நிற்கவில்லை' என்று கவலை கொள்கிறீர்கள்.

உங்களுக்கு ஒன்றை கவனத்தில் கொண்டு வருகிறேன், குழந்தைகள் போட்டி மனப்பான்மையோடு அல்ல, குழு மனப்பான்மையோடு வளர வேண்டும் என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

ஒரு கதை படிக்கும் (ஸ்டோரி ரீடிங்) நிகழ்ச்சியில் வாசிப்பாளர் புத்தகத்தில்  ஒரு படத்தை காட்டி அது என்ன என்று கேட்கிறார். யாருக்கும் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும், உங்கள் குழந்தைக்கு அது தெரியும் என்று. ஏனெனில், அந்த பறவையை பார்க்க வட கர்நாடகம் வரை சென்றிருக்கிறீர்கள். அந்த பறவையை மிக நெருக்கத்தில் அவள் பார்த்திருக்கிறாள்.

விடை தெரிந்து,அவள் கையை உயர்த்துகிறாள். அதற்குள், பெற்றோர் பக்கத்திலிருந்து விடை வந்துவிடுகிறது. ஆனாலும், அவள் ஏன் டக்கென்று சொல்லவில்லை என்று மறுகுகிறீர்கள்.   வெளியில் வந்து 'கேட்டவுடனே ஏன் சொல்லல' என்று உங்கள் குழந்தையை விசாரிக்கிறீர்கள்.

'நம்ம டர்ன் வந்தாதான் சொல்லணும். பார்த்தவுடனே கத்தக்கூடாது.' என்கிறாள் மகள். எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறீர்கள்.  நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் 'குட் மேனர்சின்' கீழ்  அல்லவா அது வருகிறது!

ஆட்டோவில் பையை தொலைத்துவிடுகிறாள், உங்கள் மகள். அப்படி என்ன கவனமின்மை என்று கடிந்துக்கொள்கிறீர்கள். உங்கள் முகம் கடுமையாக மாறுகிறது. அவளோ, அதைப் பற்றி கிஞ்சித்தும் பாதிப்படைய‌வில்லை.  'பையைத் தொலைத்த குற்றவுணர்ச்சி கூட இல்லையே, இது எப்படி எதிர்காலத்தில்...' என்று அதற்கும் சேர்த்து கவலை கொள்கிறீர்கள். எந்த பாதிப்பும் இல்லாமல், "ஆச்சி, கோவமா இருக்காதே,சிரி...சிரி" என்று உங்கள் தாடையை பிடித்து கன்னங்களை இழுத்து சிரிப்பது போல வைக்கிறாள், அவள்.

இந்த நேரத்தில் நினைவுப்படுத்துகிறேன், 'எந்த சூழலாக இருந்தாலும், அவள்  செய்த தவறைக் குறித்து பதற்றமடையாமல் தன்னியல்பு மாறாமல் கூலாக/நிதானமாக‌ இருக்க‌ வேண்டும்' என்று நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வேறு ஊரில் இருக்கிறீர்கள். இரவுணவுக்காக, வெளியில் சாப்பிட செல்கிறீர்கள். உணவு விடுதியின் முன்னால், வண்டிகள் செல்வதற்காக கூம்பு வடிவ தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், ஒன்றை காற்று சாய்த்து விட்டிருக்கிறது. அங்கேயேதான் விடுதி காவலரும் இருக்கிறார். ஆனாலும், உங்கள் மகளால் விழுந்துவிட்ட தடுப்பை பார்த்துவிட்டு சும்மா இருக்கமுடியவில்லை. உங்கள் கையை உதறிவிட்டு ஓடுகிறாள். அந்த தடுப்பை நிமிர்த்து அதன் இடத்தில் வரிசையில் வைக்கிறாள். பின்னர், வரிசையை பார்த்து புன்னகையொன்று புரிந்துக்கொள்கிறாள், அதில்பாதியை உங்களை நோக்கி வீசுகிறாள். வேறு வழியின்றி, நீங்களும் புன்னகைக்கிறீர்கள்.

கார் ஒன்று வேகமாக அந்த பக்கம் செல்கிறது.  'கார்ல்லாம் வேகமா போகுது, அது கீழேயே இருந்தாதான் என்ன? எத்தனை பேரு போறாங்க வர்றாங்க...செக்யூரிட்டி வேற இருக்காருல்ல. இது ஏன் இப்படி இருக்கு' என்று, அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதுள் குமைகிறீர்கள்.  உடனே, இதுபோன்ற கடந்தகால சம்பவங்கள் குழந்தைகள் மருத்துவமனையில் நடந்தது, புத்தக சந்தையில் நடந்தது எல்லாம் உங்கள் நினைவுக்கு வருகின்றன. அவளது எதிர்காலம் குறித்து கவலையில் ஆழ்ந்து போகிறீர்கள்.

புத்தக சந்தையில், ஸ்டால் நுழைவாயில் நெரிசலாக இருக்கிறது என்று எக்சிட்டில் நுழைகிறீர்கள்.  'அது எக்சிட், இதான் ஆச்சி, என்ட்ரி.எக்சிட்லே போகக் கூடாது'  என்று உங்களை திருத்தி, செல்லவிடாமல் தடுக்கிறாள். இறுதியில், உங்கள் கையைப்   வலுக்கட்டாயமாக பிடித்துக்கொள்கிறாள், அப்படி செல்லக்கூடாது என்பதுபோல.பிறகென்ன, 'என்ட்ரி'யிலேயே நெரிசலாக இருந்தாலும் செல்ல நேர்கிறது.

'என்ன இது, இதெல்லாம் எப்படி பொழைக்க போகுது? எல்லா இடத்திலெயும் ரூல் ஃபாலோ பண்ண முடியுமா?' என்று எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால், இதை சொல்லி அவளை கெடுத்துவிட வேண்டாம் என்று அவள் சொல்படியே நடக்கிறீர்கள்.

உங்கள் கவனத்துக்கு  கொண்டு வருகிறேன்,'பயம் காரணமாக  பள்ளியில் மட்டும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க கூடாது, பள்ளிக்கு வெளியிலும்   ஒழுக்கத்தை தன்னுள் பேண வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்ச்சி யோடாவது அவள் வளர வேண்டும்.', என்று  நீங்கள்தான் விரும்பினீர்கள்.

வெளியிலாவது இப்படி இருக்கிறாளே என்று சந்தோசப்படும் அதே நேரம், வீட்டில் அவள் செய்யும் அட்டகாசங்களை எண்ணி  'வளர்ந்து விட்டாளே, இன்னுமா இப்படி இருப்பது' என்று புலம்புகிறீர்கள்.   பென்சீலை சீவித்தள்ளி, அதன் வண்ண வண்ண சீவல்களை, அலமாரி முழுதும் நிரப்பி வைத்திருப்பது, விளையாட்டு சாமான்களை கலைத்து போட்டு ஹாலை குப்பையாக்கி வைப்பது எல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

:-)

Friday, January 24, 2014

ஐஸ் கோலா, டெல்லி அப்பளம் , பஞ்சு மிட்டாய் இவற்றுடன் ...

பப்புவுக்காக புத்தகங்கள் வருடம் முழுவதும் வாங்கிக்கொண்டேதான் இருப்போம். அதனால், புத்தக கண்காட்சியில் வாங்கியது பற்றி பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.  G+ ல் - ரதியும், சுந்தரியும் 'கைய புடிச்சு இழுத்ததாலே'...இந்த லிஸ்ட்! :‍) 

வசந்தா பதிப்பகம்:-

இவை நான் வாங்கியவை (பப்புவுக்காக)

1.தமிழில் எழுதுங்கள் ‍ - புலவர்.ராச கோபாலன் - ரூ 20

2.ஏட்டுச்சுரைக்காய் (பள்ளிச் சிறுவர்கள் நடிப்பதற்கேற்ற நாடகங்கள்) கரிகாலன் - ரூ 20

3.கள்ளனுக்குப் பாதி
 குள்ளனுக்குப் பாதி - முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் - ரூ 30

நேஷனல் புக் ட்ரஸ்ட்:-

(தமிழில் இருப்பவை நாங்கள் வாங்கியவை.  ஆங்கிலத்தில் இருப்பவை பப்பு  தேர்வு செய்தவை)

நம் நதிகள் ‍-  அழ.வள்ளியப்பா - ரூ 16
(ஏற்கனவே, ஸ்கூல்ல யமுனாவை பத்தி சொல்லிகுடுத்து ஒரு பெரிய செலவு வைச்சாங்க! "ஆச்சி, நான் ஸ்கூல்ல பார்த்தேன்ப்பா, யமுனா எப்படி பெருசா வருது தெரியுமா...அதை பார்க்க போலாமாப்பா?")

வீரர் கதைகள் ‍-  ராஜேந்திர அவஸ்தி -  ரூ 13

கடற்புரத்து கிராமம் ‍- அனிதா தேசாய் - ரூ 35

இளவரசனும் பவழக் கடலும் ‍- டைசாகு இகேடா - ரூ 45

புத்திசாலிப் பெண்  கமலா ‍ - தினேஷ் புரோகித் - ரூ 13

என் வெள்ளைக் குதிரை - அமரேந்திர சக்ரவர்த்தி - ரூ 11

Neelu and Peelu  - Rs.25

Maharaja Ranjit Singh -  Rs.14

The best thirteen - Collection of the best stories from 13 languages of India)  Rs.70

Jungle Fun - Rs 85

Bhakta Salbega - Rs 25

Sona's Adventures - Rs.30

SriRatna Kim Suro - The legend of an Indian princess in Korea- Rs.110

Mysteries of the Past Archaeological sites in India - Upinder Singh - Rs.45

Test your word power -  New student book agency - Rs. 60

Fairy tales 2  - NavNeet

புக்ஸ் ஃபார் சில்ரன் :-

ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம் சோவியத் சிறார் கதைகள் யூமா.வாசுகி -- ரூ 80

பூப்பூவாய் ஒரு உலகம் - டிரினா பாலஸ் -  ரூ 30

*************************

குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு எங்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் :-

http://www.uread.com/ - http://www.penguinbooksindia.com/
http://www.zubaanbooks.com/ (young zubaan)
http://www.mangobooks.net/
http://www.nbtindia.gov.in/
http://www.tarabooks.com/ - 'சுனாமி பேரலை தந்த கதை' அருமையான புத்தகம்
Tulika - Only Fact & Fiction
Pratham books

பெரும்பாலும், ஆன்லைனில்தான் வாங்குவது.. ரெவ்யூ கிடைக்கிறதோட, புத்தகத்தோட சில பக்கங்களையும் அமேசானில் பார்க்க கிடைக்கும்! (இல்லைன்னா, வெறும்  ஹைப் னாலே டைட்டில் மட்டும் பார்த்து வாங்கிட்டு, கையை சுட்டுக்கிறதோட, பப்பு, முன்னாடி பெரிய‌  பல்பாகிடுமே!) :)

Monday, January 20, 2014

புத்தகக் கண்காட்சியில் ஒரு பொ.அ

* ஒருவழியாக, பப்புவுடனும், பெரிம்மாவுடனும் நேற்று புக் ஃபேருக்குச் சென்றேன். நுழைவாயிலிருந்தே,சாரி சாரியாக‌ ஊர்வலமாக சென்றோம். அவ்வளவு கூட்டம்! பார்த்ததும், பப்பு, "இது புக் ஃபேரா, என்ன ஃபேர் இது,ஆயா?" என்றாள்.

"ஏன், புக் ஃபேர்தான்", என்றதும், "இல்ல, இது பீபிள் ஃபேர்", என்றாள்.

* வரிசையாக சென்ற கூட்டம் ஓரிடத்தில் கொஞ்சம் குழப்பமடைந்தது போல இருந்தது. எல்லோரும் நடப்பதை நிறுத்திவிட்டு அந்த அதிசயத்தை காணத் துவங்கினோம்.  ஒருவர் பைக்கை கழுவிக்கொண்டிருந்தார். பிறகுதான் புரிந்தது, பைக்கை கழுவுவது அதிசயம் அல்ல, ஏதோ ஒரு சாதனம் கொண்டு பைக் மீது ஸ்ப்ரே பண்ணுகிறாரே! யெஸ், திரும்பி வரும்போது, ஒன்று வாங்கிக்கொள்ள வேண்டும்!! #மைண்ட்_வாய்ஸ்

* நுழையும்போதே நல்ல சகுனம். "விஜயராகவன் என்னும் வாசகர் ஆம்பூரிலிருந்து வந்திருக்கிறார். அவர், எங்கிருந்தாலும் ..." அடடா...யாரந்த வாசகர்!!ஆம்பூரிலிருந்து....தெரிந்தால், ஸ்டார் பிரியாணி கடைக்காரரிடம் சொல்லியிருக்கலாமே...ரெண்டு பிரியாணி பார்சல் கொடுத்துவிட்டிருப்பாரே!! இது மைண்ட் வாய்ஸ் இல்லை...ஒரு ஆதங்கம். (ஒரு பிரியாணி பிரியையோட‌ மனசை இன்னொரு ....ஹூம்!)

* ஒரு சில பதிப்பகங்களை மேய்ந்தோம். பப்புவுக்குரியது எதுவும் வரவில்லை. "என்னப்பா....எல்லாமே பெரியவங்களோடதா இருக்கு?" என்று அலுத்துக்கொண்டு சில பதிப்பக வாசல்களில் உள்ளே வராமல் ஸ்ட்ரைக் செய்தாள். அகநி பதிப்பகத்துக்கு சென்று சில புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தோம். வரலாற்று தொகுதி. தாட்களை புரட்டிக்கொண்டிருக்கையில், உமாயூன் என்றெல்லாம் வந்தது. ஒரு பக்கத்தில் இருந்த உருவத்தை காட்டி, 'பப்பு, இது யாருன்னு சொல்லு?" என்றேன். "இவர் அக்பர் மாதிரி இருக்காரே"  என்றாள். அவர் அக்பர்தான்!

*ஒரு ஸ்டாலில் புத்தகங்களை வாங்கினோம். "என்னப்பா, தமிழா இருக்கு எல்லாம்" என்று அலுத்துக்கொண்டாள். "டைட்டிலையாவது படி" என்று ஒரு பொறுப்பான அம்மாவைப் (இனிமேல் பொ.அ) போல் நடந்துக்கொண்டேன்.

* அடுத்து, ஒரு ஆங்கில புத்தக ஸ்டாலுக்குள் நுழைந்தோம். கூட்டமாக இருந்ததால், பப்புவை உள்ளே அனுப்பிவிட்டு வாயிலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைப் போன்ற பொறுப்பான ஒரு அம்மா, ஒரு பையனிடம் "க்விஸ் புக் கேண்டுண்டிருந்தியே,அதோ இருக்கு பாரு" என்று ஒரு புத்தகத்தை காட்டிக்கொண்டிருந்தார்.  அந்த பையனோ "கெடைச்சிடுச்சி" என்று கூவியபடி ஒரு புத்தகத்தை எடுத்தான். இந்தியாவின் வரலாறு ஆங்கிலத்தில்தான். "இதான் கேட்டுண்டிருந்தியே" என்றார் அவனது அம்மா. அப்போது, அவர்கள் கூடவே இருந்த இன்னொரு பையன், "என்ன புக்" என்றான். டைட்டிலை சொன்னதும், "சரி, உங்க ஆத்துக்கு நான் வரும்போது இந்த புக்கை படிச்சுக்கறேன்" என்றான். "ம்ம்ம்ம்ம்" என்று இழுத்தான் புக்கை வாங்கிய பையன். திரும்பி பார்த்தேன், அந்த பையனின் நெற்றியில் நாமம் போட்டிருந்தது! "என்ன உம்ம்ம்ங்கறே? குடுக்கறேன்னு சொல்லு" என்று தன் கடமையை செவ்வனே செய்தார் அந்த பொ.அ.

* தமிழில் சிறுவர் கதை புத்தகங்கள் வாங்கினார் பெரிம்மா. பில் போடுமிடத்தில் நின்று வேடிக்கை பார்த்த பப்பு, "ஆயா, இதெல்லாம் என்னால படிக்க முடியாது. நீங்கதான் படிச்சு காட்டணும்" என்று திட்டவட்டமாக கூறிவிட, கவுண்டரில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அவ்வ்வ்வ்!

* இறுதியாக, "இரு இரு , சின்ன பசங்க புக்ஸ் இருக்கிற கடைக்கு போலாம்" என்று சொன்னதற்கேற்ப, ஒரு கடை தென்பட்டது. அதில், தோண்டி துழாவி பப்பு, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். "நீயே பில் போட்டு
வாங்கிக்கோ, எவ்ளோன்னு கேட்டு" என்று சற்று தள்ளி நின்றேன். அவளும், புத்தகத்தையும் காசையும் அவரிடம் நீட்டியபடி "இந்த புக் எவ்ளோ இந்த புக் தாங்க "  என்றெல்லாம் கேட்டு பார்த்துவிட்டாள். அவரோ, பப்புவின் பக்கம் திரும்பாமல், பின்னால் வருகிறவர்களிடமெல்லாம் பில் போட்டு கொடுத்தபடி இருந்தார். கேட்டு கேட்டு அலுத்து போனவள், "இந்தா நீயே கொடு" என்றதும், அவளிடமிருந்து வாங்கி பணத்தை நீட்டினேன். உடனே, பில் போட்டு கொடுத்தார். "பாத்தியா, பெரியவங்க குடுத்தாதான் வாங்குறாங்க" என்று நொந்துக்கொண்டாள்.  :‍(

* ஒரு பாதையை முடித்ததும், பப்பு  "எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கிதாப்பா... நடக்கவே முடியலை" என்றாள். பெரிம்மாவும், "குழந்தைக்கு ஏதாவது வாங்கி கொடுத்து கூட்டிட்டு வா, நான் இந்த ஸ்டால்லே இருக்கேன்" என்றதும், கான்டீனை நோக்கி நடந்தோம். அரங்கே நிரம்பி இருந்தது. மைக்கில், "வாசகர் ஒருவர் ஐசிஐசிஐ க்ரெடிட் கார்டை விட்டுவிட்டு சென்றுவிட்டார்" என்ற அறிவிப்பு! "கார்டை கூடவா விட்டுடுவாங்க" பெரிய மனுஷி பப்புதான்!

* கூட்டத்தை பார்த்து பயந்து போன நான், திரும்பி எப்படி இந்த கூட்டத்தில் வந்து பெரிம்மாவை கண்டுபிடித்து....என்று மலைத்து போனேன். "நீ எதுக்கு வந்தே?புக் வாங்க வந்தியா இல்ல...சாப்பிட வந்தியா" என்று ஒரு பொ.அவை  போல் கேட்டேன். அவளும், பொ. பெண் போல், "நான் ஐஸ்க்ரீம் சாப்பிடதான் வந்தேன்" என்றாள் வெகு தீர்மானமாக!

புக் ஃபேருக்கு குழந்தைகளை கூட கூட்டிப்போவதன் வசதிகள் இரண்டு வகைப்படும்:-

1. ஐஸ்க்ரீம் வாங்கினால் "கொஞ்சம் ஒரு வாய்" என்று கெஞ்சி  நாமும் சுவைக்கலாம். அல்லது, பஞ்சுமிட்டாய் வாங்கிவிட்டு, "இது கொஞ்சம் நீ எடுத்துக்கிட்டு ஒரு வாய் எனக்கு ஐஸ்கோலா தாயேன்" என்று பண்டமாற்று செய்யலாம்.

2. "கீழே இருக்கிற செல்ஃப்லேருந்து ஒவ்வொரு புக்கா எனக்கு எடுத்து குடு"
 என நின்றபடியே புத்தகங்களை தேர்ந்தெடுக்கலாம். அவர்களுக்கும் , ஒரு நல்ல விளையாட்டாக இருக்கும். ஹிஹி ("ஆச்சி, இது வேணாமா? இந்த புக் வீட்டுல இருக்கே?")

*ஐஸ் கோலாவையும், பஞ்சுமிட்டாயையும் காலியாக்கிய பிறகு, பெரிம்மாவையும் கண்டுபிடித்துவிட்டோம். சோட்டா பீம் கடையில் பப்பு ஃப்ரீசாகிவிட்டாள். "இதெல்லாம் அதுலேயே வந்ததுதானாம்..." என்றாலும் நோ சமாதானம். "நைன்ட்டி ருபீஸ்க்கு நாம வேற புக் வாங்கலாம்" என்றதும் கண்களை வேறு பக்கம் திருப்பினாள்.
* "உன் வயசுக்கு படிக்கிறதா எடு...சின்ன பசங்களோடதெல்லாம் எடுக்காதே..அதெல்லாம், நீ சின்ன வயசுலேயே படிச்சு முடிச்சுட்டே "என்று அவ்வப்போது (டோரா, சோட்டா பீம் புத்தகங்களை என்று வாசிக்கவும்) சொல்லி  ஒரு பொ.அ வாக நடந்துக்கொண்டேன்.

*நவ்நீத் ஸ்டாலை பார்த்துவிட்டு, "இது குட்டி பசங்க புக்குப்பா" என்று ஓடிவிட்டாள். புத்தகங்களை எடுக்கு வேகத்தை பார்த்ததும், "படிச்சு பார்த்துட்டு, இன்ட்ரஸ்டிங்கா இருந்தா வாங்கலாம். டைட்டில் பார்த்து வாங்கிட்டு நமக்கு லாஸ்ட் டைம் என்ன ஆச்சு." என்று பொ.அவாக நடக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். பொறுத்து பொறுத்து பார்த்தேன். பப்பு, இடத்தை விட்டு நகருவதாக இல்லை. "படிச்சு பார்க்கலாம்.. ஆனா, ஃபுல்லா படிச்சு பார்க்கணும்னு இல்ல...கொஞ்சம் படிச்சுட்டு, இன்ட்ர்ஸ்டிங்கா இருந்தா எடுத்துக்கோ" என்று நிபந்தனைகளை, நானே மாற்ற வேண்டியதாகிவிட்டது.

 * இறுதியாக, பப்பு ஹேப்பி NBT. நானும் ஹேப்பி NBT. :‍)

 *. உமாநாத் செல்வனை,கார்த்திக்கை , சுகிர்த ராணியை, சந்தித்தோம்.  பப்புவுக்கு ,கார்த்திக்கை தவிர மற்றவர்கள் அறிமுகம் இல்லையாதலால் ஒரே ஙே!

* மூட்டை முடிச்சுகளை தூக்கிக்கொண்டு வெளியில் செல்வதை நினைத்தாலே தலை சுற்றியது. வண்டலூர் ஜூ போல, உள்ளே பேட்டரி கார் விட்டால் நன்றாக இருக்கும். எதிர்பட்ட ஒரு போலீஸ்காரரிடம், "எந்த பக்கம் எக்சிட்" என்றதும், "நேரா போங்கம்மா" என்று நடுவில் இருந்த பாதையை காட்டினார்.  சொல்லும்போது, அவர் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. இந்த திருவிழா கூட்டத்தில் அந்நியமாக உணர்ந்திருப்பார் போல! அவர் கை காட்டிய திசையில் வெளியில் வந்தோம். வலது பக்கம் "சாப்பிட வாங்க"

* இன்னொரு ரவுண்ட்ட் ஐஸ்கோலாவும், பஞ்சுமிட்டாயும், இரண்டு அப்பளங்களையும் நொறுக்கிவிட்டு வெளியில் வந்தோம். ஆவேசமாக, ஒரு பெண்மணி பேசிக்கொண்டிருந்தார். இடையில், ஒரு குரல் குறுக்கிட்டது, கூட்டம் சிரித்தது. ஓ! சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போல!

* மீட்டர் போடும் ஆட்டோ, கிடைத்து வீட்டுக்கு வந்து புக்ஃபேர் பற்றி ஸ்டேட்டஸ் போட்டதும்தான், கடமையை செய்த திருப்தி கிடைத்தது!! ஹப்பாடா! :‍)ஆனாலும், ஒரே ஒரு குறை மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது!! கிளம்பும் அவசரத்தில், கேமராவை எடுக்க மறந்து தொலைத்துவிட்டேன்! ச்சே! இப்பொழுது நொந்து என்ன பயன்...ம்ஹும்!

Saturday, January 18, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - IV

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் சுற்றியிருக்கும் கோயில்கள் பற்றிய விபரங்களை அச்சிட்டு தந்திருந்தார்கள். அதை சும்மா மேய்ந்துக் கொண்டிருந்த போது கண்களில் பட்டது 'சோழர் கால நெற்களஞ்சியம்'.

முடிந்தால், நேரமிருப்பின் பார்க்கலாம் என்று பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தேனுபுரீஸ்வரர் கோயிலிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் ஒரு கோயில் எதிர்பட்டது.அந்த கோயிலின் மதிலுக்கு வலப்பக்கம் கூம்பு போன்ற வடிவம் தென்பட்டது. 




அநேகமாக, இதுதான் அந்த நெற்களஞ்சியமோ என்ற சந்தேகம் வந்ததும் அருகில் என்று பார்த்தோம். அதே கோயில்தான். ஆனால், மணி 12 க்கு மேலாகி விட்டதால் கோயில் மூடியிருந்தது.வரும்போது பார்த்துகொள்ளலாம் என்று வெளியிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.


தஞ்சாவூரிலிருந்து திரும்பி வரும்போது, கோயில் திறந்திருந்தது. சற்று வெளிச்சமும் இருந்தது.


திருப்பாலைத்துறை.  சோழர்கள் காலத்து கோயில்.


இந்த நெற்களஞ்சியம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. 

மேலே சன்னல் போன்ற ஒரு திறப்பு காணப்படுகிறது. கீழேயும் ஒரு கதவு இருக்கிறது. பள்ளிக்கூட பாட புத்தகங்களில் 'தஞ்சாவூர் நெற்களஞ்சியம்' என்று படித்தது நினைவுக்கு வந்தது. ஆனால், இப்படி நெற்களஞ்சியங்களில் சேகரித்து வைத்திருப்பார்கள் என்று தோன்றியதில்லை. கோயில்கள்தான் அந்தகாலத்து பேங்க் போல! நகைகளிலிருந்து, நெல் வரை !!

கோயிலை சுற்றி வந்தோம். பப்புவுக்கு நெற்களஞ்சியம் பற்றியெல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லை. 

அவளது ஆர்வமெல்லாம் வழக்கம்போல தூண்களில் சிற்பங்களைத் தேடுவதில்தான். இருட்டாகிவிட்டதால் தூண்களில் எதுவும் புலப்படவில்லை. ஆனால், வெளி கோபுரத்தில் சில சிற்பங்கள் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரே தலையோடு மூன்று விதமான விலங்கு உடல்கள். குரங்கு ஒன்றும் மான் என்றும் ஆடு என்றும் நாங்கள் சண்டையிட்டு கொண்டிருந்தோம். :‍)


யானை ஒன்று மாலையுடன், கிளி ஒன்று மாலையுடன் என்று சிறு சிறு சிற்பங்கள்...ஆனால், வித்தியாசமாக!



இந்த சிற்பங்களை செதுக்கியவர்களை, பெயர் தெரியாத அந்த சிற்பிகளை,  நினைத்துக்கொண்டோம்!

அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்று இறங்கியது திருபுவனம்.

திருபுவனம் கோயில் பற்றி நேடிவ் பிலானட் பக்கத்தில் பார்த்திருந்தது உபயோகமாக போயிற்று. கலைநயமிக்க கோயில்.  நல்லவேளை, இந்த கோயிலை லூசில் விடவில்லை என்று எண்ணிக்கொண்டோம்.

நுழைவாயிலை கடக்கிறோம்...ஒரே கலகலவென சிரிப்பொலி! குரல் வரும் திசை நோக்கி பார்க்கிறோம்...மாடங்களில் பெண்கள் எங்களை ஒய்யாரமாக நின்று எங்களை வரவேற்கின்றனர்!! (ஹிஹி)



நுழைவாயிலிலேயே, பல சிற்பங்கள். தூண்கள் தூண்களாக செதுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தூண் போன்ற அமைப்பிலும், பலகனிகள்/மாடங்கள் அதில் ஒவ்வொன்றிலும் பெண்டிர் செடி கொடிகளை பிடித்துக்கொண்டும், ஒய்யாரமாக நின்றுக்கொண்டும்,இசைக்கருவிகளோடும், நடன அபிநயத்தோடும்! அவர்களது கொண்டைகளையும், உடையலங்காரத்தையும் ரசிக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை. அவர்களது கூந்தலை பார்த்து எவ்ளோ நீட்டு முடி என்றும் எவ்ளோ மொத்தம் என்றும் வியந்ததுதான் மிச்சம்!! :-)




 உள்ளே சென்று ஆராயத் தொடங்கினோம். இந்த கோயிலின் சிறப்பம்சமே தூண்கள்தான் என்று பேசிக்கொண்டோம். எந்தவொரு தூணும் வெறுமனே விடப்படவில்லை. ஒவ்வொரு தூண்களும் வெகு நுட்பமாக செதுக்கப்பட்டிருந்தன. அதை வார்த்தைகளில் புரிய வைக்கமுடியும் என்று தோன்றவில்லை.


தூண்களை பார்த்த பின்பு கோயிலின் உள்ளே சென்றோம். சுத்தமாக கூட்டமே இல்லை. எங்களைத் தவிர ஏதோ ஒன்றிரண்டு பேர்தான் இருந்தனர். இந்த கோயில் தஞ்சை பெரிய கோயிலின் அமைப்பை பிரதிபலிப்பதாக ஒருவர் கூறினார். எங்களை பார்த்ததும், அர்ச்சகர் வெளியே வந்தார். கோயிலைப் பற்றிக் கேட்டோம். வரகுண பாண்டியனின் பயத்தை/நடுக்கத்தை போக்கிய கோயிலாம் இது. இணையத்தில் இது சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசி கோயில் என்பது போல வாசித்திருந்தேன். சோழர்களின் கோயிலில் பாண்டியர்கள்...ம்ம்..சுவாரசியம்தான்!



உள்ளே, சாமி இருக்கும் இடம் பெரிதாக இருந்தது. மற்ற கோயில்களை விட, கர்ப்பகிருகம் பெரிதுதான் என்றார்,அர்ச்சகர். படிகளில் இறங்கி தும்பிக்கை போன்ற கைப்பிடியில் பப்பு விளையாடத் துவங்கினாள். சற்று நேரம் கழித்து, கோயிலை வலம் வரத்தொடங்கினோம்.








மிக சிறிய சிற்பங்கள்,வெகு  நுணுக்கமாக  செதுக்கப்பட்டிருந்தன. யானைகள் மீது வீரர்கள், நடன மங்கைகள், இசைக்கலைஞர்கள்......ஓரிடத்தில், யானைகள் பிரசவம் பார்க்கும் காட்சியை கண்டுபிடித்தோம். கண்டுபிடித்தது நாந்தான்!!  ;-)
வெளியில் வரும் சமயம், ஒரு யானை!  யானையையும் குதிரையையும் சட்டமிட்டு பாதுகாத்து வைத்திருந்தார்கள். அவர்களையும் கண்டுகொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். 



அடுத்த ஸ்டாப் கங்கை கொண்ட சோழபுரம்!!நாங்கள் எதிர்பார்த்திருந்ததைவிட அதிகமான வரலாற்று ஆச்சர்யங்களை சந்தித்தது இங்குதான். இந்த ஊர்சுற்றலில் 'கேக்கின் மீதான செர்ரியும்' அந்த பயணம்தான்!

Tuesday, January 14, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - III


 அடுத்ததாக, சென்று இறங்கிய இடம் பட்டீஸ்வரம். தாராசுரத்திலிருந்து வெகு அருகில் உள்ளது. கோயிலின் பெயர் தேனுபுரீஸ்வரர் கோயில்.  பாடல் பெற்ற தலம் என்பதால் நண்பர் லிஸ்டில் கொடுத்திருந்தார் போலும். மிகப் பழமையான கோயில். கோயிலின் முன்கோபுரம் வர்ண பூச்சுக்களுடன் இருந்ததால் பழமை தெரியவில்லை. கோயிலின் உள்ளிருந்து ஒரு குட்டி பெண்ணின் குரல் மைக்கில் ஒலித்தது.  ‍ "எம்பாவாய் " என்று ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்.

வாயிலிருந்து சற்று தள்ளி இட‌ப்பக்கத்தில் ஒரு பெரிய நந்தி. உள்ளே நுழைந்ததும், நந்தி அருகில் வயதான ஆண்களும் பெண்களுமாய் உள்ளே வருவோரிடம் காசு கேட்டக்கொண்டிருந்தனர். வலப்பக்கத்தில் ஒரு மண்டபம். திருப்பாவை  ஒப்புவிக்கும் போட்டி போலிருக்கிறது. கீழே சிறார்களும் ஆசிரியர்களும் அமர்ந்திருக்க மேடையில்தான் அந்த குட்டிப் பெண் திருப்பாவை சொல்லிக்கொண்டிருந்தாள். மேடையில் இருந்த பெரியவர்கள் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தனர். வரிக்கு வரி சரிபார்ப்பார்கள் போல. அடுத்த நுழைவாயிலில் நுழைந்து உள்ளே சென்றோம்.

கூட்டமாக இருந்ததால், சாமியை விட்டுட்டு, யாளிகளை சுற்றி கோயிலை வலம் வந்தோம். 
 
திரும்பவும் முன்வாயிலை வந்தடையும் இடத்தில் இன்னொரு குட்டி நந்தி இருந்தது. அதற்குள் கூட்டம் காணாமல் போயிருந்தது. உள்ளே சென்றோம்.பப்பு தூண்களை ஆராய தொடங்கியிருந்தாள். கருவறையில் இருந்த அர்ச்சகர் , மிகவும் இளையவராக இருந்தார்  கோயிலை பற்றி  கேட்டோம்.


சுட்டெரிக்கும் வெயிலில் வந்த திருஞான சம்பந்தருக்கு இறைவன் முத்துபந்தல் அனுப்பி அவருக்கு  அருள் பாலித்த கோயிலாம். அப்படின்னா என்ற பப்புவின் கேள்விக்கு முத்து பந்தல்ன்னா அதோ அது மாதிரி இருக்கும் என்று ஓரமாக இருந்த பல்லக்கை காட்டினார். பல்லக்கில் வந்த திருஞானசம்பந்தர் காணும் விதமாக நந்தியை விலகச் சொன்னாராம்.அதனால்தான் இந்த கோயிலில் நந்திகள் எல்லாம் நேராக இல்லாமல் சற்று விலகியிருப்பதாக முடித்தார். இந்த கோயிலைக்கட்டிய வரலாறு பற்றி அவருக்கு தெரியவில்லை.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

புராணக்கதைகளை  சொல்லுவது போல  கொஞ்சம் வரலாற்றையும் சொல்லலாம். கோயில்களில் பெரும்பாலும் புராணங்களைத்தான் சொல்கிறார்கள். யார் கட்டியது, நூற்றாண்டு, வழிபட்ட மன்னர்கள் பற்றியும் தகவல்கள் சொன்னால் சுவாரசியமாக இருக்கும்.

 தூண்களில் பெரிதாக எதுவும் பப்புவை ஈர்க்கவில்லை. ஆனால், கோயிலில் இருந்த ஒரு அக்காவை பார்த்து பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி சுற்றி வந்தாள். அவள் சுட்டிக்காட்டிய பின்னர், நானும் அந்த அக்காவின் அழகில் மயங்கி விட்டேன். அவரது கையில் ஒரு கையை யாரோ சேதப்படுத்தியிருந்தார்கள். 


அவரது கொண்டை, ஆடை, அணிகலன்களை ஆராய்ந்த பிறகு, அவரது கையில் இருக்கும் இசைக்கருவியின் பக்கம் கவனம் திரும்பியது. இப்போது வழக்கொழிந்து போன அந்த இசைக்கருவி என்னவாக இருக்கும் என்று பேசியபடி வெளியில் வந்தோம்.

இப்போது ஒரு சிறுவனின் குரலில் திருப்பாவை. நடுவில் ஒரு குரல் கேட்க, கொஞ்சம் இடைவெளிவிட்டு திரும்பவும் தொடங்கியது. முடியும்/ஆரம்பிக்கும் குறளை சொல்லு என்பது போல இதற்கும் தேர்வு போல!

அடுத்து எங்கு போகலாம் என்று திட்டம் எதுவும் இல்லாததால், அருகில் எந்த கோயில் இருக்கிறது என்று பார்த்த போது தஞ்சாவூர் 20 கிமீ என்ற தகவல் கிடைத்தது.

அடுத்த ஸ்டாப் தஞ்சாவூர். 

நேரம் கிட்டதட்ட ஒன்றரை. உயர்ந்து நின்ற கோயிலின் கோபுரம் எங்களை ஈர்த்தது. ஆனால், வயிற்றின் இருந்த ஒரு  நெருப்பு எரிந்துக்கொண்டிருக்கிறதே! ;‍) பசியை போக்க நல்ல உணவுவிடுதியை தேடினோம். ஞானம் ஒன்றொரு ஹோட்டல் இருந்தது. வழக்கம் போல பப்பு ஃப்ரெஞ்ச் ஃப்ரைசும், ஃப்ரெஷ் லைம் சோடாவும் அருந்த நாங்கள் ஃபுல் மீல்ஸ். பசியை போக்கிக்கொண்டு தஞ்சாவூர் பெரிய கோவிலை அடைந்தோம்.

கோயிலை சுற்றியுள்ள அகழியைப் பற்றி இருநாட்களுக்கு முன்னர்தான் செய்தித்தாளில் வாசித்திருந்தோம். பெரிய பெரிய மரங்களாக அடர்ந்திருந்தன.நுழைவு கோபுரத்தருகிலேயே விளக்கப்படங்கள் வைத்திருக்கிறார்கள். கோயிலின் வரைபடத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.நான்கு மணிக்குதான் உள்ளே திறப்பார்களாம்.  எதற்கு இந்த சம்பிரதாயம் என்று தெரியவில்லை.

உள்ளே திறந்திருந்தாலும் கட்டிடக்கலையை பார்க்க வந்திருக்கும் எங்களுக்கு கோயிலை சுற்றிபார்க்க என்ன இருக்கிறது. மெதுவாக நடக்கத் தொடங்கினோம். வெயில்!!  ஓடிப்போய், கோபுரத்தின் நிழல் விழுகிறதா என்று பார்த்தோம். விழுகிறதே! பள்ளிக்கூட பாட புத்தகங்களில் கூட நிழல் விழாது என்று படித்த நினைவு!! :‍)

நந்தி!! ஒரே கல்லாலான நந்தி! ஆனால், பக்தகோடிகள் நந்தியை பிசியாக வைத்திருந்தார்கள். அருகில் செல்ல முடியவில்லை. கோயிலை வலம் வரத் தொடங்கினோம். கோயில்தான் எவ்வளவு பெரிய வளாகம்!

சோழர்களின் கட்டிடக்கலையை புரிந்துக்கொள்ள அவர்களுக்கு முன்னும் பின்னுமான கட்டிடக்கலையை அறிந்துக்கொண்டால் நன்று. பல்லவர்கள் காலத்து சிற்பக் கலைநுணுக்கங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை யும் விஜயநகர சிற்பக்கலையின் மாறுபாடுகளையும் ASI புத்தகம் சற்று விளக்குகிறது. மேலும்,பல்லவர் கால கோயில்களைக் காணச் சென்றபோது   பல்லவர் காலத்து சிற்பக்கலை பற்றி துப்ரயீல் எழுதிய புத்தகத்தையும் முன்பு வாசித்திருந்தேன். 
தூண்களில் இருக்கும் வேலைப்பாடுகள், மற்றும் தோரண வாயில்களின் வேலைப்பாடுகளை கவனித்தால் பல்லவர் கால கட்டிடக்கலையிலிருந்து சோழர்களின் கலை வளர்ந்ததை காணலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்ததா என்று தெரியவில்லை. அவளது வயதுக்கு இது அதிகமாகவும் இருக்கலாம். அதனால், நாங்கள் துவாரபாலகர்கள், கோயில் சுவரில் இருக்கும் சிறு சிறு தூண்களின் அமைப்புகள், பூக்களின் வடிவங்கள், செடி கொடிகளின் அமைப்புகள், மிருகங்களை,பறவைகளை கண்டுபிடிப்பது, அதோடு முக்கியமாக ஆடல் பாடல் இசைக்கலைஞர்களை அடையாளம் காண்பது என்று கோயிலை ஆராய்ந்தோம்.  





  "ஏன் சில பேரு ப்ரைவேட் பார்ட்ஸ்க்கு நடுவில் இப்படி போட்டிருக்காங்க, சில பேருக்கு போடலை "என்று நடுவில் கேள்வி வேறு. அவள் காட்டிய சில சிலைக‌ளின் மார்புக்கு நடுவில் கச்சை போல கட்டியிருந்தது.

எனக்கும் தெரியவில்லை.


கோபுரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் தோரண வடிவத்தை பார்த்து மயிலின் தோகை போன்று இருப்பதாக சொன்னாள். எனக்கு அதை பார்க்கும் போதெல்லம் பல்லக்கு வடிவமாக தோன்றியிருக்கிறது. மயிலையும்,யானையும், சிங்க முகங்களையும் அதிகமாக கண்டோம்.

  நடுவில், கல்வெட்டு எழுத்துகளை கண்டதும் வாசிக்க தலைப்பட்டோம். பப்பு பாவம்....நானும் அவளுடன் சேர்ந்து திணறினேன்! சற்று நேரம்தான்...பிறகு ஒன்றிரண்டு வார்த்தைகளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சற்று ஊகத்திலேயே வாசித்தால் ஒன்றிரண்டு வார்த்தைகளை வாசித்து முடிக்கலாம். 

அதோடு, பப்புவுக்கு போட்டோ எடுக்கும் ஆசை வந்துவிட்டது. கோபுரங்களோடு, என்னையும் சேரத்து எடுத்து தள்ளினாள். மண்டபத்தில்தான் எத்தனை சாமிகள்...அவர்கள் எல்லோருக்கும் சிறு சிறு கோயில்கள்.வருண பகவான் மிகவும் கவலைகிடமாக இருந்தார். சுவர்களில்,  நாயக்கர் காலத்து படங்களும். படம் பார்த்து கதை சொல்லுதலை விளையாடினோம். புராணக்கதைகள் தெரியாவிட்டால் நீங்கள் சொல்லுவதுதானே கதை! 


சில இடங்களில், நந்திகளின் காதில் மக்கள் ரகசியங்களை கசியவிட்டபடி இருந்தனர். நந்தியின் இன்னொரு காதையும் பொத்திவிட்டனர். இல்லையென்றால், ரகசியத்தை நானும் கேட்டிருப்பேன்.;‍) மக்களின் நம்பிக்கை! 


அவர்கள் சொல்வதை பார்த்து, விளக்கம் கேட்டபிறகு பப்புவும் தன் ஆசைகளை நந்தியிடம் சொல்லிவிட்டு வந்தாள். கேட்டதற்கு, ரகசியம், சொன்னா நடக்காதே என்றாள். விட்டுவிட்டதும், அவளாகவே, "எனக்கு மெர்மெயிட் ஆகணும், எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் மெர்மெயிட் ஆகிட்டு அப்புறம் அம்மாகிட்ட வந்துடணும்னு சொன்னேன்" என்றாள். 

கால்கள் வலிக்க ஆரம்பித்தது. சொன்னால், பப்புவும் அதையே பிடித்துக்கொள்வாள். நல்ல கூட்டம். ஐயப்ப பக்தர்கள் ஒரு புறம் என்றால், மறுபுறம் மேல் மருவத்தூர் பக்தர்கள். கோயிலே கருப்பும் சிவப்புமாக‌ ஜெக ஜோதியாக  இருந்தது. அப்படியே சுற்றி பிராசதம் விற்கும் இடத்துக்கு வந்துவிட்டோம். அங்கும் வாங்கும்படி எதுவும் இல்லை. அதற்கு சற்று அருகிலேயே கல்படிகள் அந்த கோபுரத்துக்கு செல்ல வழிகாட்டின. ஆர்வத்தில் ஏறிவிட, பின்னாலே பப்புவும். அவளைத் தொடர்ந்து இன்னும் சிலரும்! 


அங்கிருந்து கீழே பார்க்கவும், கோபுரத்தை பார்க்கவும் அருமையாக இருந்தது.  நாங்கள் இறங்கவும், பிரசாதம் விற்கும் கடையிலிருந்து சிலர் வந்து எல்லோரையும் இறங்கச் சொல்லவும் சரியாக இருந்தது.

அதற்குள் கோயிலை திறந்துவிட்டிருந்தார்கள். அவ்வளவுதான்... விஸ்தாரமான அந்த படிகளில் முழுக்க மக்கள்! அதை பார்த்ததும்  செல்வதற்கு தைரியமில்லை. எல்லாருக்கும் பின்னால் கடைசியாக நின்றுக்கொண்டோம். ஆனாலும், பின்னால் சேர்ந்த கூட்டத்தை பார்த்து பயந்து விலகிவிட்டோம். துவாரபாலகருக்கருகில், அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். கூட்டம் சற்றே குறைந்துவிட, பப்புவை அழைத்தபோது வர மறுத்துவிட்டாள். 'உள்ளே போக வேண்டாம்' என்றும் "நான் வரலை நீ போ" என்றும் ஸ்ட்ரைக்! பிறகென்ன...உள்ளே செல்லாமல், சுற்றி சுற்றி படங்கள் எடுத்துவிட்டு திரும்பினோம். ஒரு பழமையான மரத்தை நன்றாக பராமரித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த கோயிலில் இசை எழுப்பும் தூண்கள் இல்லை. இதற்கு முன்பு, நாங்கள் சென்ற சில கோயில்களில் ஒலி எழுப்பும் தூண்களை கண்டிருந்தோம்.  சோழர்கள் காலத்தில் ராஜராஜனின் காலத்தில் அந்த தொழில்நுட்பம் வரவில்லையோ என்னவோ?!  அல்லது கோயிலின் உள்ளே இருந்ததோ?

எப்படியோ,தஞ்சாவூர் பிக் டெம்பில் பார்த்தாகி விட்டது. பப்புவின் இந்திய சின்னங்களில் இன்னொரு டிக். ஆனாலும், உள்ளே சென்று கோயிலின் உள்ளிருக்கும் ஓவியங்களை பார்க்காதது ஒரு குறைதான். அடுத்த முறை வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டுமே! ;‍)

குதுப் மினாரை பார்த்து மதி மயங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. அதை பார்க்கும்போதும் பிரமிப்புதான். தஞ்சையில், எங்கிருந்து கல் கிடைத்திருக்கும், எத்தனை மலைகளை கபளீகரம் செய்திருப்பார்கள் என்று பேசியபடி கும்பகோணம் வந்து சேர்ந்தோம்.  ஆச்சரியமாக, கும்பகோணத்தில் "கும்பகோணம் டிகிரி காபி" என்று எங்குமே இல்லை. ஆனால், காபியை பித்தளை டபரா தம்ளரில் கொடுக்கிறார்கள். வந்ததற்கு நினைவாக அதையாவது வாங்குவோம், மினியேச்சரில் கிடைத்தால் இன்னும் நல்லது என்று நினைத்து ஒரு பாத்திர கடையருகில் நிறுத்தினோம்.

மினியேச்சர் எல்லாம் இல்லை. சாதாரண சைசில் இரண்டு வாங்கிக்கொண்டோம். அங்கிருந்த குதிரை, யானைகளை பார்த்ததும் பப்புவுக்கு ஆசை! விலை கேட்டதும், "பள்ளி துட்டு/காலேஜ் மணி" என்று சொல்லிக்கொண்டாள். அதாவது, அதை வாங்கினால், அவளது காலேஜுக்கு என்று நான் வைத்திருக்கும் காசு போய்விடுமாம். (அப்படி ஒன்று இனிதான் நான் சேர்த்து வைக்கவேண்டும். விலையுயர்ந்த பொருட்களை கேட்கும்போது, 'காலேஜ் படிக்க காசு வேணும் இல்லப்பா..." என்று சீன் போடுவேன். அதுதான் இப்படி விளை(லை)ந்திருக்கிறது.)

ஆனால், எங்கு சென்றாலும் பப்புவுக்கு ஒரு பழக்கம். அவளது பள்ளிக்கு என்று ஏதாவது வாங்கிக் கொள்வாள். எஜுகேடிவாகத்தான் இருக்கும் என்பதால் நாங்களும் தடை சொல்வதில்லை. கன்னியாகுமரி சென்றபோது, விதவிதமான மணல் பாக்கெட்டுகள்,சங்குகள், தேக்கடி சென்ற போது பலவிதமான மசாலா/வாசனை பொருட்கள் பொட்டலம், தில்லி சென்ற போது பள்ளி லைப்ரரிக்கு ஒரு புத்தகம் என்று! இங்கு அவளைக் கவர்ந்தது, விதவிதமான நந்தா விளக்குகள். பள்ளிக்கு ஒன்றும், அவளுக்கு இரண்டுமாக வாங்கிக்கொண்டாள். 200ரு என்று சொன்னதும், ஒன்றை வைத்துவிட வற்புறுத்தினாள். செலவைக் குறைக்கிறாளாம்! எப்படியோ, நல்லபடியாக ஷாப்பிங் முடிந்துவிட தங்குமிடத்துக்கு திரும்பினோம்.

Monday, January 13, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - II


 தாராசுரத்துக்கு வழிகேட்டுக்கொண்டோம். 3 கிமீ தானாம்.  மிகவும் குறுகலான சாலைகள். ஒரு பஸ் சென்றால் எதிரில் இன்னொரு வாகனம் வருவது கடினம். பழையாறை,பட்டீஸ்வரம் செல்லும் பேருந்து எங்கள் முன்னால்.  இந்த ஊரின் பெயர்களை  நாவல்களில் படித்த நினைவு.  குறுகிய சாலை நெளிந்து வளைந்து சென்றது. சுற்றிலும் வீடுகள் மற்றும் கடைகள். இதற்குள்தானா அந்த புகழ் பெற்ற கோயில் இருக்கிறது என்று ஒருநிமிடம் சந்தேகமும் எட்டிப்பார்த்தது.ஏனெனில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலையோ அல்லது கற்களோ கிடையாது. எங்கிருந்து கற்கள் கொண்டு வந்து கோயில்களை அமைத்திருப்பார்கள்? கும்பகோணம், அதன் சுற்றுவட்டார கோயில்களை பார்க்கும்போது இந்த எண்ணம் எழாமலில்லை.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், யுனெஸ்கோ பராமரிக்கும் சின்னங்களுள் ஒன்று. கோயில் கோபுரங்களை வர்ணமடித்து இருக்க மாட்டார்கள் என்பதே ஆறுதல். பச்சையும், சிவப்புமாக கோயில் கோபுரங்களில் சிற்பங்களை பார்த்தால் அவை கற்சிற்பங்கள் என்ற எண்ணமே வருவதில்லை. ஏதோ பிளாஸ்டிக்கினால் அல்லது ப்லாஸ்டர் ஆஃப் பாரிசினால் செய்த உருவமாக தோற்றமளிக்கிறது.

கோயில் மதில் தெரிந்தது. மதில் மேல் நந்திகள் நமக்காக காத்திருக்கின்றன.  யுனெஸ்கோ பராமரிப்பின் அடையாளத்தை, பசும்புல் மெத்தை பறை சாற்றியது. நுழைவு சீட்டு அல்லது காமிராவுக்கு என்று டிக்கெட் எதுவும் வாங்க வேண்டியதில்லை.  செருப்புகளை விட்டுவிட்டு படிகளில் இறங்கினோம்.  தரையில் இருந்து இறங்கிதான் செல்ல வேண்டியிருக்கிறது. இறங்கியதும், ஒரு சிறு மண்டபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நந்தி.  உள்ளே நுழைந்தோம். கூட்டம் அதிகமில்லை.



இடப்பக்கம் திரும்பி நடக்கும்போதே நம்மை ஈர்க்கிறது - தேரை இழுக்கும் யானையும், குதிரையும் மற்றும் தேரின் சக்கரமும். இந்த கோயிலின்  முன் மண்டப அமைப்பே ஒரு பெரிய தேரை குதிரைகளும், யானையும் இழுப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தேர் போன்ற அமைப்பை கொண்ட கோயில் ஹம்பியில் இருப்பதாக இணையத்தில் வாசித்திருக்கிறேன். அதே போல், கோனார்க்கின் சூரிய கோயிலும். 

தேரை இழுக்கும் பாவனையில், யானையின் முன்னங்கால் சற்று மடக்கியிருப்பது போல வடிவமைத்திருப்பது சிற்பியின் அழகான கற்பனை. சக்கரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் அலங்காரங்களை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம். மண்டபத்தின் படிகளிலும் கூட ஆடலும் பாடலுமே!

இந்த பயணத்தின்போது, பப்புவுக்கு திடீரென்று குதிரை வாங்கும் ஆசை வந்துவிட்டிருந்தது.  அவள் இந்த கல் குதிரையை கவனித்துக்கொண்டிருந்ததோடு, அதில் எப்படியாவது ஏறிவிட முடியுமா என்று பார்த்த படியிருந்தாள்.பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,ஒவ்வொருவரும் அப்படி ஏறி அமர ஆசைப்பட்டால் இவ்வளவு நாட்கள் இந்த யானையும் குதிரையும் இருந்திருக்குமா என்றும் ஒரு குட்டி லெக்சர் கொடுத்தேன். 

யானையின் அணிகலன்களையும், சக்கரத்தின் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் ரசித்தோம். அங்கேயே போட்டோக்களையும் எடுத்துக்கொண்டோம். படிகளின் கைப்பிடியாக‌ யானையின் தும்பிக்கை! எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், வாழ்ந்து பெயர் தெரியாமல் மறைந்துபோன அந்த சிற்பிகளை நினைத்துக்கொண்டோம். மேலே மண்டபத்துக்கு ஏறிச் சென்று தூண்களை பார்வையிட்டோம். ஒவ்வொரு தூணிலும் அவ்வளவு நுணுக்கமான கலைநயமிக்க சிற்பங்கள்! ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை இருக்க வேண்டும். அதேபோல்,  எல்லா வெளிப்புற தூண்களும்  யாளியின் மீது செதுக்கப்பட்டிருக்கிறது.

அநேகமாக, இந்த சிற்பங்கள் எல்லாம் நாயன்மார்களின் கதையாக இருக்கலாம். நமக்குத்தான் ஒன்றிரண்டை தவிர மீதி எதுவும் தெரியாது என்று பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள், அர்ச்சகர் "வர்றீங்களா" என்று கேட்டு அழைத்துச் சென்றார். கோயிலின் வரலாறை சுருக்கமாக சொல்லி முடித்தார். 'இரண்டாம் ராசராசனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயில் அதன் சிற்பக்கலைக்காகவே மிகவும் பெயர்பெற்றது. ஐராவதம் என்பது இந்திரனின் வெள்ளை யானை. அந்த யானை இங்கு சிவனை வழிபட்டது என்பது ஐதீகம். கோயில் முழுக்கவே அற்புதமான சிற்பங்கள். ஒரு இன்சிலும் செதுக்கியிருப்பார்கள். அதே போல், பெரிதாகவும் செதுக்கியிருப்பார்கள்' என்று கூறி,  தூணில் ஒரு இன்ச் பிள்ளையாரைக் காட்டினார். கையை வைத்து பார்க்கவும் சொன்னார். உள்ளிருந்து கடைந்தெடுத்தது தெரிந்தது.

அடுத்து, உள்ளே சென்றோம். அங்கு படமெதுவும் எடுக்கக் கூடாது. பார்த்துவிட்டு வெளியே வந்தோம். ஒரு ஐயப்ப பக்தர் கூட்டம் வந்திருந்தது. யானை மீதேறி படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பப்புவுக்கு யானை மீது அமர ஆசை வந்துவிட்டது.ஏறி அமர்ந்துகொண்டாள். படமெடுக்கவும் ஆணையிட்டாள்.பின்னர். கோயிலின் சுவர்களில் இருக்கும் சிற்பங்களை பார்த்துக்கொண்டே நடந்தோம். மேலே மட்டுமில்லை, சுவரின் கீழே இருக்கும் இடத்தைக்கூட விடவில்லை. சொல்லப்போனால், அங்குதான் மிக அழகான சிற்பங்கள் இருக்கின்றன.



வெளிச்சுற்று மண்டபத்தில் முழுக்க தூண்கள். மேற்கூரைகளை கூட விடவில்லை. எல்லா இடத்திலும் சிற்பங்கள். பப்புவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நல்ல அனுபவமாக இருந்தது.  இது என்ன உருவமாக இருக்கும் என்றும் யாளியின் தும்பிக்கை என்றும் சிற்பங்களில் இருக்கும் மக்கள் கையிலிருக்கும் உபகரணங்களை கண்டுபிடிப்பதிலும் நேரத்தை கழித்தோம். 'அங்கே எல்லாரும் சண்டைக்கு ப்ராக்டீஸ் பண்றாங்க' என்றும் 'யானை மேல சிங்கம் உட்கார்ந்து இருக்கு' என்றும் ஆராய்ந்தாள். நெடுநேரம் யானையின் மீது சிங்கத்தின் தலை எப்படி இருக்க முடியும் என்று தடவி பார்த்துக்கொண்டிருந்தாள்.  இந்த மண்டபம் முடியும் இடத்தில் கல்லாலான ஜன்னல்கள்.சிற்பிகளின் திறமையை எண்ணி வியந்து போனோம்!


அங்கிருந்து, மீண்டும் எங்களின் "ஐ ஸ்பை " தொடங்கியது. ஒவ்வொருவரும் மற்றவரை அழைத்து அவரவர் பார்த்ததை கூற முற்பட்டோம். இறுதியாக, பப்புவையே தொடர்வது என்று முடிவாயிற்று. ஒரு தலை, நான்கு பக்கங்களிலும் நடன போஸ் கொடுத்த மங்கையை கண்டுபிடித்தோம். 
 
திடீரென்று, கோலாட்டம் ஆடும் சப்தம் வர‌ கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்த  மங்கையரை  வந்தடைந்தோம். அதன் தொடர்ச்சியான, இன்னொரு மண்டபத்துக்குச் சென்றோம்.   அங்குதான் 108 சிறு சிற்பங்கள் சுவரில் கடைந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களெல்லாம் சைவ சமய முனிவர்களாக இருக்கலாம்.

அந்த முனிவர்களோடு பப்பு கொஞ்சம் நேரம் செலவிட்டாள். எங்களுக்கு 108 ஆக எண்ணிக்கையில் இருந்தது பப்புவுக்கு மட்டும் 105 ஆக மாறிவிட்டது.அவர்களது இடையிலிருக்கும் உடை கூட மிக அருமையாக செதுக்கியிருக்கிறார்கள். தூரத்திலிருந்து பார்த்தால் நிஜமாகவே உடை உடுத்தியிருப்பது போல!  


அடுத்ததாக, ஒரே சிற்பத்தில் யானையும், காளையும் இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த உற்சாகத்தில் நாங்கள் கத்தியவுடன் அருகிலிருந்த இன்னும் சிலரும் யானையையும் காளையும் கண்டு களித்தனர்.




அடுத்ததாக, தொல்லியல் துறையின் சிறு அருங்காட்சியகம். கோயிலின் உதிரி/உடைந்த‌ சிற்பங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். ஒருவர், அனைவருக்கும் விவரிக்கிறார். அந்த மண்டபத்தின் மேலே பனிரெண்டு ராசிகளுக்குமான சிற்பங்கள் வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அதோடு, நாயக்கர் காலத்திய சுவர் ஓவியங்களையும். சிற்பங்களை காட்டி சிவன், விஷ்ணு என்று புராண கதைகளை சொன்னதால் மனதில் எதுவும் பதியவில்லை. அந்த காலத்து சந்தன கட்டையை (கல்லாலானது) காண்பித்தார். எவ்வளவு பெரிது!! 

இறுதியாக‌, ஒரு வள்ளி தெய்வானை முருகன் சிலையை காண்பித்தார். அதில் தெய்வானையின் உடையலங்காரத்தையும், வள்ளியின் உடையலங்காரத்தையும் விவரித்துச் சொன்னார். இருவரும் வேறு வேறு வர்க்க பெண்கள். வள்ளியின் ஆடை அணிகலன்கள் எளிமையாக இருப்பதாக சிற்பிகள் காண்பித்திருக்கின்றனர். அதோடு, வள்ளியின் மூக்கில்,காதில் அணிகலன் அணிய துவாரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். பப்புவுக்கு அது மிகவும் ஆச்சரியம்!


அந்த மண்டபத்திலேயே, சோழர்களின் வரலாறும்,தலைமுறை தகவல்களும் கிடைக்கிறது. அதோடு, அந்த கோயிலில் நாம் தவறவிடக்கூடாத சிற்பங்களையும் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.  அந்த சிற்பங்களை தவறாமல் பார்க்க சொன்னதோடு, அவரே இன்னொரு தகவலையும் கூறினார். ஒரு இன்ச் பிள்ளையாரோடு, ஒரு இன்ச் நடராசர், சிவன் எல்லாம் இருப்பதாக.

போட்டோவில், குறிப்பிட்டிருந்த சிற்பங்களில், இரண்டு சிற்பங்களை நாங்கள் கவனிக்காமல் விட்டிருந்தோம். ஒன்று ,வளையமாக‌ பெண்கள் இருவர், மாடு ஒன்று தானாக பாலை அபிஷேகம் செய்வது. தேடிப்பார்த்தும் கிடைக்காமல், அவரையே தேடிச் சென்றோம். அந்த மண்டபத்தின் கீழ் வரிசையிலேயே இருந்தது. தவறவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்! எங்களைத் தொடர்ந்து பின்னாலேயே இன்னும் சிலர் வர, மற்ற சிற்பங்களை பற்றியும் எங்களிடம் கேட்டனர். அவர்களுக்குச் சொல்லிவிட்டு மற்றொரு சிற்பத்தை காண சென்றோம். ஒரு வயதான தம்பதி, எங்களோடு வந்து மற்ற சிற்பங்களை காண்பிக்குமாறு கேட்டனர். கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்களாம். "நம்ம  பீபிள் அப்பவே இப்படி இருந்திருக்காங்க" என்று அவர்களுக்குள்
பேசிக்கொண்டனர்.

கோயிலினுள் ஒரு சிறு மதில் போல கட்டி அதிலும் சிறு நந்திகளை வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நந்திகளின் தலைகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.


போட்டோக்கள் எடுத்துக்கொண்ட பின்னர் வெளியில் வந்தோம். செருப்புகளை அணிந்துக்கொண்டு கோயில் மதில் மீதிருக்கும் நந்திகளை திரும்பி பார்த்தபடி நடந்தோம். 'பக்கத்துலதான் இருக்கு, ஹேண்ட்லூம் சாரி, சில்க் சாரி இருக்கு. டயம் இருந்தா வந்து பாருங்க‌' என்றார் ஒருவர். கார்டு இருந்தா தாங்க, வரோம் என்று அவரிடம் வாங்கிக்கொண்டோம். தாராசுரத்தின் தேர் அங்கேயே நிற்க எங்கள் தேரில் ஏறி  பட்டீஸ்வரம் செல்ல  ஆயத்தமானோம்.

  

Sunday, January 12, 2014

கிபி 2013 டூ கிபி 1000 - I

கடந்த டிசம்பர் 2013 இறுதியில், உறவினர்களை சந்திக்க ஒரு சுற்றுப்பயணம் சென்றோம். பப்புவின், இந்திய சின்னங்களை பார்க்கும் பட்டியலில் தில்லிக்கு அடுத்து மும்பை வந்துவிட்டிருந்தது. 'கேட்வே ஆஃப் இந்தியா' பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தாள். சிலநாட்களில், அந்த லிஸ்டில்  "அடுத்ததா பிக் டெம்பிள் பார்க்க போலாம்ப்பா!1000 இயர்ஸ் இல்ல‌" என்பதும் சேர்ந்துக்கொண்டது. இந்த விடுமுறையை சாக்கில் கொண்டு - இரண்டு நாட்கள் மட்டும் தஞ்சை மற்றும் கும்பகோணம் பயணம்.

பொதுவாக, எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூகுளை அலசி ஆராய்வதுண்டு. குறைந்தது, எங்கெங்கு செல்ல வேண்டும் என்றாவது ஒரு லிஸ்ட் இருக்கும் முக்கியமான இடங்கள், மியுசியம் என்பது போல! இந்த முறை,   எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அலுவலகத்தில் ஒரு நண்பரிடம் விசாரித்ததோடு சரி. 'எல்லாம் நம்ம ஊருதானே' என்ற அலட்சியமும் காரணமாக இருக்கலாம். கையில், ASI World heritage series  "Chola Temples" மட்டும் இருந்தது.  அலுவலக நண்பர் பல கோயில்களை,பாடல் பெற்ற தலங்களை தரிசித்தவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது   ஒரு சின்ன லிஸ்ட்  கொடுத்திருந்தார்.

கும்பகோணத்தை நாங்கள் எட்டும்போதே மணி ஐந்து. அருகில் இருக்கும் கோயில்களை பார்க்கலாம்  என்று கிளம்பினோம். லிஸ்டில் முதலில் இருந்த‌, சாரங்கபாணி கோயிலுக்குச் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் கோயில் முழுக்க சாத்தியிருந்தார்கள். எதற்கு சாத்தியிருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. அபிஷேகம் என்று கூறினர் அருகில் இருந்தவர்கள். சற்று நேரத்தில் கதவை திறந்து ஒரு பல்லக்கு போன்ற ஒன்றில் சாமியை எடுத்துச் சென்றனர். நாங்கள் உள்ளே சென்றோம். கூட்டமாக இருக்கும் கோயிலுக்குச் செல்வது பப்புவுக்கு இதுதான் முதல்முறை.

பொதுவாக நாங்கள் எந்த கோயிலுக்கும் சாமி கும்பிட என்று செல்வதில்லை. பழங்கால கோயில்கள், தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் கோயில்களுக்கு மட்டும் செல்வதுண்டு. மேலும், அந்த கோயில்களி லெல்லாம்  பெரிதாக கூட்டம்  ஒன்றும் இருக்காது.  வரும் ஒன்றிரண்டு பேரும் எங்களைப் போலவே கோயிலின் சிற்பக்கலையை, தொன்மையை பார்க்க வந்தவர்களாகவே இருப்பார்கள். அடித்துப்பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியதும் இல்லை. கோயிலில் இருப்பவரே,  நம்மை அழைத்து கோயிலைப் பற்றியும் அதன் சிறப்புகளையும் கூறிவிடுவார். இந்த கோயிலில்தான்  முதன்முதலாக கூட்டத்தையும், வரிசையில் சென்று பார்க்க வேண்டியிருப்பதையும் பப்பு பார்க்க நேரிட்டது. கோயிலை சுற்றி வரும்போது, ஒரு பெரியவர்/அர்ச்சகர் எங்களை அழைத்தார்.

அவர் அழைத்ததை பார்த்து  அவரை நோக்கிச் சென்றோம். படிகள் எங்களை தரைக்குக் கீழே அழைத்துச் சென்றன. திருப்பதி சாமி பாதாளத்தில் இருக்கிறார் என்றும் புத்தாண்டை முன்னிட்டு சில நல்ல வார்த்தைகளையும் கூறினார். கோயிலில் அந்த இடம் மட்டும்தான் கூட்டம் இல்லாமல் இருந்தது. பாதாள வெங்கடாசலபதியை பெரும்பானோர் கண்டுக்கொள்வதில்லை போலும். மெயின் டெயிட்டியைவிட இந்த இடம் அமைதியாக இருந்தது. நாயக்கர் காலத்து சிலையாக இருக்கலாம்.

கோயிலை விட்டு வெளியே வந்தோம். அடுத்ததாக, அருகில் இருக்கும் கோயில் என்னவென்று விசாரித்ததில், இங்கு தடுக்கி விழுந்தால் கோயில்கள்தானாம். எல்லாமே பழங்கால கோயில்கள்தானாம். சரி, கும்பகோணத்துக்கு பெயர்காரணமான கோயிலை பார்க்க முடிவாயிற்று. அடுத்த ஸ்டாப் - ஆதி கும்பேஸ்வரர் கோயில்.

இந்த கோயில் மதிலே மிகப்பெரிதாக இருந்தது. அதேபோல், கோயில் ஆக்கிரமித்திருந்த இடமும்.இந்த கோயிலின் முடிவில் மற்றொரு கோயிலின் ஆரம்பம். உள்ளே சென்றதும் யானை ஒன்று நின்றுக்கொண்டிருந்தது. ஒருவர், காசை கொடுக்க வாங்கிக்கொண்டு  யானை அவரை ஆசீர்வதித்தது. பப்புவை பொறுத்தவரை கோயில்களில் இப்படி யானையை நிறுத்துவது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. யானை, பறவைகள், முயல்களை இப்படி கூண்டுக்குள் அல்லது ஓரிடத்தில் அடைக்கக்கூடாது என்ற எண்ணமுடையவள், யானையைப் பார்த்து பரிதாபப்படலானாள். அதற்கு அதிக வாய்ப்பு கொடுக்காமல் உள்ளே நுழைந்தோம். இடதுபக்க சுவரில்,  கோயிலின் புராணம் "படம் பார்த்து கதை சொல்" பாணியில் வரையப்பட்டிருந்தது. பப்பு சற்றுநேரம் பார்த்துக்கொண்டு நின்றாள். ஐஸ் ஏஜ் மாதிரி என்று சொல்லிக்கொண்டாள். அதைத் தாண்டி உள்ளே சென்றோம்.

எந்த கோயிலுக்குச் சென்றாலும், அதன் சுற்று சுவர்களையும், தூண்களையும் பார்த்து அதில் இருக்கும் சிற்பங்களை பற்றி பேசிக்கொள்வோம். பப்புவுக்கும் அதே பழக்கம் வந்துவிட்டது. புத்தகங்களில் "ஐ ஸ்பை" விளையாடுவது போல சிற்பங்களிலும் விளையாடுவோம். இந்த கோயில்களில், பப்பு தானாகவே தூண்களையும், சுவர்களையும் ஆராயத்தொடங்கினாள். அதோடு, மேற்கூரைகளையும் உற்றுநோக்கத் தலைப்பட்டாள்.  "தூண்லியே பார்க்கறேன்னு மேலே பார்க்க மறந்துடாதே" என்று எனக்கு எச்சரிக்கை வேறு.

 வெளியில் வந்தோம். ஒரு சிறு கண்காட்சி இருந்தது. எதுவும் தேறவில்லை.
 வழியில் முராரி ஸ்வீட்ஸில் 'டிரை ஜாமுன்' வாங்கிக்கொண்டு தங்குமிடத்தை அடைந்தோம்.

ASI புத்தகத்தை புரட்டினேன். கூகுள் மேப், தாராசுரம் அருகில் இருப்பதாக காட்டியது. யுனெஸ்கோ பராமரிக்கும் இடம். சோழர்களின் சிற்பகலையை, வாசித்த பொன்னியின் செல்வனை பற்றி பேசிக்கொண்டே நித்திராதேவியை தழுவினோம். ;‍-)

Saturday, December 07, 2013

சிங்கம் - I

 
"ஆச்சி, சிங்கம் 2 பார்த்துட்டியான்னு கேக்கிறாங்கப்பா, என் ஃப்ரெண்ட்ஸ்" ‍- பப்பு

"அப்டின்னா?" ‍

"மூவி...சிங்கம் 1, சிங்கம் 2" - பப்பு

"ஓ..அது கிட்ஸ் மூவியா?"

"ஆமா ஆச்சி, ஜாலியா இருக்குமாம்" (!!) - பப்பு

"ம்ம்..."

"அதுல ஒரு சிங்கம்,  மேஜிக்கலா எப்படி புலியா மாறுது, அதான் ஸ்டோரியாம்" - பப்பு

"நெஜம்மாவா?"

"ஆமா ஆச்சி, விலாசினி குட்டிப்புலி பார்த்துட்டாளாம்" - பப்பு

"எங்கே?"

"மூவில ஆச்சி, அதும் ஜாலியா இருந்துச்சாம்! அமித் சிங்கம் 2 பார்த்துட்டானாம்" - பப்பு


"ம்ம்..நீ சாயங்காலம் ஸ்கூல்லேருந்து வருவே இல்ல, வழியிலே சிங்கம் 2 போஸ்டர் இருக்கான்னு பாரு. போஸ்டர்லே என்ன இருந்துச்சுன்னு சொல்றியா, எனக்கு."


"இப்போவே நான் பார்த்துட்டேன். அது பார்த்ததும்தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. " - பப்பு

"என்ன இருந்துச்சு போஸ்டர்லே?"

"ம்ம்..ஒரு சிங்கம், அப்புறம் 2 மனுசங்க" - பப்பு

"சிங்கம் இருந்துச்சா!!ம்ம்...ரெண்டு மனுசங்க யாரு, பாயா கேர்லா?"


"ஒரு பாய், ஒரு கேர்ல்" -பப்பு

அதுக்குள்ள நல்லவேளையா ஹெல்மெட் போடாத ஒரு அங்கிள் கிராஸ் பண்ணி எங்களை காப்பாத்திட்டாரு.

சிங்கம் 2 வந்தபோது நடந்தது. ஜி+ யில் எழுதியதை இங்கு சேமிக்க‌...

Friday, December 06, 2013

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, உன்கிட்டே ஒன்னு சொல்லணும்...ஆனா, நீ கேட்டா கோவப்படுவே..."

"ஹை,என்னப்பா சொல்லு..."

"ம்ஹூம்..நான் சொல்லமாட்டேன்"

"சொல்லேன்...நான் கோவப்பட மாட்டேன்"

"வந்து, இன்னைக்கு ஸ்கூல்ல நான் 'எங்கம்மா ரொம்ப புத்திசாலி...அவங்க க்யூட்டா இருப்பாங்க.'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போ,விக்ரம் வந்து 'நான் உங்க அம்மாவை லவ் பண்றேன்'ன்னு சொல்றான்.அவனை ஒரே குத்து!"

"....."

"நீ ஏன் என்னை பத்தி ஸ்கூல்ல சொல்றே?"

"ம்ம்..நீதான் வேர்ல்ட் சாம்பியன் அம்மா! நீ எவ்ளோ இன்ட்லிஜென்ட்டா இருக்கே..அதுக்குதான்."

அவ்வ்வ்வ்!

என்னை பார்த்து ....என்னை பார்த்து இன்ட்லிஜென்ட்டுன்னெல்லாம்  சொல்லிட்டாளேன்னு லைட்டா நெகிழ்ச்சி+மகிழ்ச்சியா இருந்தாலும், இந்த பேச்செல்லாம் நாங்க தூங்கப்போற டைம்ல நடந்ததால - எவ்வளவு அடிச்சுக்கிட்டாலும் அவளோட இந்த அன்கண்டிஷனல் அன்புக்கு நான் பாத்திரமா/ தகுதியான்னெல்லாம் ஃபீல் பண்ணிக்க‌ நேரம் இல்லாம போச்சு. அந்த கேப்புல, 'எனக்கு ஏன் கோவம் வரும்னு சொன்னேன்னு' கேக்க மறந்துட்டேன்.

எல்லா வீட்டிலேயும், அம்மாங்கதான் குழந்தைகளை "இன்டலிஜென்ட்" "க்யூட்"ன்னு சொல்லி பெருமைப்பட்டுப்பாங்க.  இங்கே, என்னன்னா....:‍))
 
 
 
 
"ஆயா, இந்த ஆச்சி எந்த ஸ்கூல்ல ஆயா படிச்சுது?இப்படி மேனர்ஸ் சொல்லிகொடுத்திருக்காங்க? எந்த ஸ்கூல்ல ஆயா படிச்சுது?" - பப்பு

"எங்க ஸ்கூல்லதாம்ப்பா!" - பெரிம்மா

:‍))  - மீ

பார்த்து பார்த்து எழுதறாங்களே மேடம்னு,  பப்பு எழுதின ஒரு பேப்பரை ரஃப் நோட்டுல இருந்து கிழிச்சதுதான் நான் செஞ்ச தப்பு!