Thursday, October 17, 2013
ஒரு ஷூ-வின் கதை
இவை பப்புவின் புது ஜோடி ஷூக்கள். பளபளக்கும் இந்த ஷூக்களை வாங்கியதிலிருந்து ஒரே கனவுதான்! "இதை நான் ஹவுஸ் ஷூவா வைச்சிக்கறேன்ப்பா" என்று வீட்டுக்குள்ளேயே அணிந்துக்கொண்டு நடக்க துவங்கிவிட்டாள். சற்று நேரத்தில், ஒரு நீண்ட கவுனை அணிந்துக்கொண்டு காலை தூக்கி தூக்கி வைத்து நடனமாடிக் கொண்டிருந்தாள். பாலே நடனம்!! அன்றிரவு தூங்கும்போது, படுக்கைக்கு அருகில் இருந்தன இந்த ஜோடி ஷூக்கள்!
காலையில், எழுந்து வந்து டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவளில் கால்களில் பளபளத்தன இந்த ஷூக்கள்!
"போய் பிரஷ் பண்ணு...பெரிய பொண்ணா ஆகிட்டே.இன்னும் உனக்கு சொல்லணுமா....நீயே செய்ய கத்துக்கோ" என்றதும், சுழன்று சுழன்று பாலே ஆடியபடி வாஷ்பேசின் அருகில் சென்றாள். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கொஞ்ச நேரம்!
"இப்படியே எவ்ளோ நேரம் நிக்கப்போறே" என்று அவளது பிரஷ்ஷில், பேஸ்டை வைத்து கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டேன்.
வந்து பார்க்கிறேன்! கையில் டூத் பிரஷ்ஷோடு, கால்களில் ஷூவுமாக படுக்கையில் அமர்ந்து ஒரே யோசனை! "இன்னுமா பிரஷ் பண்ணலை" என்று தள்ளிவிடாத குறையாக படுக்கையிலிருந்து எழுப்பியதும்,
"ஆச்சி, எனக்கு ஒரு டவுட்...பிரின்சஸ்ல்லாம் பிரஷ் பண்ணுவாங்களாப்பா?"
க்ர்ர்ர்ர்ர்ர்!!
இவ்வளவு நேரம் அதைத்தான் யோசனை செய்துக் கொண்டிருந்தாளோ என்று நினைத்ததும் சிரிப்பு வந்துவிட்டது!
"ஆமா, எல்லாருமே பிரஷ் பண்ணுவாங்க!"
"பிரின்சஸ்ல்லாம் பிரஷ் பண்ணுவாங்களா?ஆனா, அதெல்லாம் காட்ட மாட்டேங்கறாங்களே!! பிரின்சஸ் பிரஷ் பண்ணுவாங்களா" என்று அதிர்ச்சியோடு வாஷ் பேசினுக்குச் சென்றாள்!!
இன்று பார்க்கும்போது, அதே ஷூவோடு, குதிகாலை உயர்த்தி உயர்த்தி
நடந்துக்கொண்டிருந்தாள். வித்தியாசமாக பார்த்ததை, உணர்ந்து பதில் வந்தது,
"தெரியலையா? ஹீல்ஸ் போட்டுருக்கேன்!!"
Labels:
பப்பு,
பிரதிபலிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
வணக்கம்
பதிவு அருமையாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதையல்ல, கவிதை:)!
உங்க வீட்டிலேயும் இப்படித்தானா? முடியல முல்லை.. :))
அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்..அடிக்கடி எழுதுங்கள்!!
Post a Comment