Friday, May 29, 2015

Double Decker Living Root Bridges Trek - பயண அனுபவம்


காலையில், வழிகாட்டி சரியாக எட்டரை மணிக்கு வந்து நின்றார். காலையுணவு முடித்துக்கொண்டு,  பிக்னிக் உணவாக ப்ரெட் சான்ட்விச்சை பொதியிலடைத்துக்கொண்டு கிளம்பி நின்றோம். கைகளில் ஆளுக்கொரு உதவுகோல். பையில், மழையுடை, சில பல சாக்லெட்டுகள், பாதம் வால்நட் பருப்புகள். ஆளுகொரு தண்ணீர் குப்பி.

சாலை பயணமாக‌, முதல் 5 கீமீ வரை காரில் சென்று, பின் நடைபயணத்தை தொடர திட்டம். இதயத்தின் திக்திக்....ஆர்வம்...சாகசம்...என்று கலவையான உணர்வுகள்.  

இத்தனைக்கும், எவரெஸ்ட்  ஏறி ஆக்ஸிஜனுக்காக திண‌றும் பயணமோ அல்லது  வானத்திலிருந்து குதிக்கவோ போவதில்லை.  எங்களது சொகுசான வாழ்க்கையிலிருந்து சில மணிநேரங்கள் தள்ளி இருக்கப்போகிறோம். அவ்வளவுதான்! நினைத்த மாத்திரத்திலேயே அதுதான், எத்தனை கடினமாக இருக்கிறது!! :‍)

படிகள் தொடங்கும் கிராமத்தினருகில் வந்து இறங்கினோம்.  வழிகாட்டி பலகை,  பயணத்தை இனிதே தொடங்கி வைத்தது.அவரவர் உதவுகோல்களை, கைகளில் எடுத்துக் கொண்டோம். வெயிலே இல்லாவிட்டாலும்,  தொப்பியை அணிந்து கொண்டோம்.பையை பின்னால் மாட்டிக்கொண்டு, தேர்ந்த நடைபயணிகள் போல் நடையை துவக்கினோம்.

 படிகள் மிக நீண்டதாக, நாம் இரண்டு தப்படிகள் வைத்தே - அடுத்த படிக்கு செல்ல வேண்டிய அளவில் இருந்தது. 'ஃப்பூ இவ்வளவுதானா...இது போல் இருந்தால் 2500 என்ன? 25000கூட இறங்கிவிடலாமே' என்று தோன்றியது,அந்த நிமிடம்!.

சற்று கீழே, ஒரு 25 படிகள் இறங்கி, நிமிர்ந்தால், ஆகா! அற்புதம் என்பது இதுவல்லவா!!


 பச்சையை உடுத்திய‌ மலை, இடையில் அத்தனை அருவிகள், அவ்வப்போது மலையை போர்த்தும் பஞ்சுப்பொதிகள்....கை சும்மா இருக்குமா?

"எட்றா கேமிராவை' என்று படங்கள் எடுத்து தள்ள, கலவரமானார் வழிகாட்டி. 'மதியம் ஒரு மணிக்கு நாம் திரும்ப வேண்டும். சீக்கிரம் நடங்கள்' என்று சற்று மெல்லிய குரலில் சொன்னார்.

தொடர்ந்தோம். 



படிகள் குறுகலாக எப்போது மாறத்துவங்கியிருந்தது என்று தெரியவில்லை. ஒரு குறுகலான ஏணி போல, படிகள் கீழ் நோக்கி பாயத்துவங்கியிருந்தன. எங்களை அறியாமலேயே, லேசாக வியர்க்கத் தொடங்கியிருந்தது.  நேரம் போவதே தெரியாமல், படிகளில் இறங்கிக்கொண்டேயிருந்தோம்.  
 
பின்தங்கியிருந்த பெரிம்மாவுக்காக, காத்திருந்த கணத்தில், கால்கள் முட்டியிலிருந்து நடுங்குவதை உணர்ந்தேன். எங்களை விட சற்று வேகமாக நடந்துக்கொண்டிருந்த பப்பு, சீரான வேகத்தில் நடந்து, சற்று பின் தங்க துவங்கினாள். தரையே கண்ணுக்கு தெரியாமல், வெறும் படிகளாக தெரிந்ததில், அவளது பாதுகாப்புணர்வு தலையெடுத்திருந்தது.

அருகே வந்ததும் கவனித்ததில், அவளது கால்களும் நடுங்கத் துவங்கியிருந்தன. நடுங்கக்கூடாதெனில், தொடர்ந்து நடக்க வேண்டுமென கண்டுகொண்டிருந்தோம். உடல் வியர்க்க வியர்க்க இறங்கிக்கொண்டே இருந்தோம்.  

 

அருகில், ஏதோ ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் மட்டுமே கேட்டது. காண முடியவில்லை. அடர்ந்த காடு. பருவநிலை இதமாக இருந்தது. 

ஒரு இடத்தில், கம்பியினாலான கைப்பிடி தெரிய,  பிடித்துக்கொண்டு இறங்கினோம். 'கைப்பிடி வைத்த புண்ணியவான் வாழ்க' என்று சொல்லிக்கொண்டோம். வெயிலுமில்லை, குளிருமில்லை.  களைப்பும் தெரியவில்லை.

வழிகாட்டி எந்தவித கலவரத்துக்குள் உள்ளாகாமல், சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டிருந்தார். மூச்சிரைப்போ வியர்வையோ எதுவும் அவரை அசைக்கவில்லை. 'இதுவரை எத்தனை படிகள் இறங்கியிருப்போம்' என்று 
நமது உற்சாகத்துக்காவும் மனதிருப்திக்காகவும் கேட்டால், 'தெரியாது. எண்ணவில்லையே' என்று பதில் வந்தது.


'சரி ஒரு ஐநூறாவது இறங்கியிருக்கமாட்டோமா' என்று எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு நடையை தொடர்ந்தோம். தண்ணீர் குடிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை. வியர்வைதான் வழிந்து ஆறாக ஓடியது.   ஒரு இடத்தில் நின்று பார்த்தபோது, நாங்கள் சென்று சேர வேண்டிய அடிவாரம் தெரிந்தது.

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்!  இயற்கை, தனது அதி அற்புதமான காட்சிகளை,  குறுகலான, செங்குத்தான மற்றும் அபாயகரமான கோணங்களில்  ஒளித்து வைத்துள்ளது.  அந்த கோணங்களை, கண்டடையும் பாதைகளில் பயணிப்பவர்கள், பாக்கியவான்கள்!!

திரும்பவும் படங்கள்.

மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டோம். 'எவ்வளவோ பார்த்துட்டோம்' என்பது போல எங்களது இந்த அலப்பறைகளை பொறுமையாக சகித்துக்கொண்டு நின்றிருந்தார் வழிகாட்டி.

ஒருவழியாக தரையை அடைந்தோம். நடையை முடித்த ஒரு குழு, படிகளில் ஏறத்துவங்கியிருந்தனர்.

இங்கிருந்து சரியாக முப்பது நிமிடத்தில், இன்னொரு வேர்ப்பாலம் இருக்கிறது. 99 அடி நீளமுள்ள அந்த பாலம்தான், இதுவரையிருக்கும் பாலங்களில் நீளமானது. அதற்கு முதலில் செல்லலாமா என்று யோசித்து, 'வேணாம்! ஒன்லி டபுள் டெக்கர்" என்று முடிவில் உறுதியாக நடையை தொடர்ந்தோம்.

சிலபல வீடுகள் தென்பட்டன. மாங்காய்கள், ரோஜாக்கள் பறிப்பார் யாருமின்றி காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வீட்டின் வாயிலில் அமர்ந்து பாக்கை உறித்துக் கொண்டிருந்தார் ஒருவர்.


இங்கிருந்து, கிட்டதட்ட‌ ஒரு கிமீ வரை காட்டு வழியில் தரை பயணம். ஆங்காங்கே படிகள் இருக்கும். அவை கணக்கில் வராது. பெரிய பெரிய பாறைகள் அமர்ந்திருக்க, சுத்தமான காற்றை சுவாசித்தவாறு நடையை தொடர்ந்தோம். சில வித்தியாசமான குரல்கள். பறவைகளினுடையவைதாம். அவை தவிர, வேறு எந்த நடமாட்டமுமில்லை. மனிதர்கள் நாங்கள் மட்டும்தான்.

ஒரு ஊரில் அழகான இடம் இருக்கலாம். ஆனால், அழகே ஊரான இடம் இருக்க முடியுமா? அதுதான்  மேகாலயா!



அதன்பிறகு, கேட்டது ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் சப்தம். மழையில்லாத காலத்தில் வந்திருந்தால், வெறுமையான ஆற்றை கடக்க நேர்ந்திருக்கும். நீரில்லாத ஆற்றை காண சகிப்பதில்லை, எங்களுக்கு.

தண்ணீர் பொங்கி பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தாலே, மனம் பூரித்து சந்தோஷமாகிவிடுகிறது. அது உணர்ந்தவர்களுக்கே புரியும்.மகிழ்ச்சியாக நடைபோட்டோம்.

அந்த மகிழ்ச்சியை அசைத்துப்பார்க்கும் தருணமும் வந்தது. ஆம், தொங்கும் பர்மா பாலம்.

வழிகாட்டி ஜாலியாக முன்னே சென்றுவிட, பப்பு பின் தொடர்ந்தாள். 'போய்டலாமா பப்பு' என்று தயக்கத்தை மறைத்துக்கொண்டு கேட்க, "அப்புறம்? நான் போறேன்பா" என்று பதில் வந்தது. அவளை ஒட்டி, அடி வைக்க ஆரம்பித்தேன். 

பயமெல்லாம் மறைந்து, ஆச்சரியமும், பிரமிப்புமே மிஞ்சியது. காலுக்கு கீழே பெரிய பாறைகளின்  வழி வெள்ளமாக ஆறு! எதிரில், சுற்றும் முற்றும் என்று ஓங்கி வளர்ந்த அடர்ந்த மரங்கள். மேலே, பஞ்சு பஞ்சாய் மேகம். வாய்க்குமோ இந்த தருணம் மீண்டும்?!!

இரண்டு பக்கங்களிலுமுள்ள, கம்பிகளை பிடித்தபடி, லேசான ஊஞ்சலாக ஆடிய பாலத்தில் நடுவில் படமெடுத்துக்கொண்டு அக்கரையை அடைந்தோம். வந்த வழியை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டோம்.

'இந்த பாலம் சின்னதுதான். அடுத்து வரும் பாலம் சற்றே பெரிது' என்றார் வழிகாட்டி.

தலையை தலையை ஆட்டினோம். 'இன்னும் ஒரு பாலம். அப்புறம், அந்த இரண்டு நூற்றாண்டுகளாக இருக்கும் அதிசயத்தை காணப்போகிறோம்' என்ற எண்ணம் சற்று உற்சாகத்தை கொடுக்க, தண்ணீர் பருகி விட்டு, நடையை தொடர்ந்தோம்.



திரும்பவும் படிகள். பாறைகள்.

 ஏதோ ஒரு ஆங்கில படத்துக்குள் நுழைந்துவிட்டது போலவே தோன்றியது. வெயில் படாத இடமென்றால் இதுதான் போல. சூரியன் உதிக்கும் வேளையிலொரு மெல்லிய வெளிச்சம் பரவுமே...அந்த வெளிச்சமும் இளங்குளிரும்தான்  இங்கு ஆட்சி புரிகின்றன!

இரண்டாவது பாலத்தையும் நெருங்கிவிட்டோம்!

ஆம்! இந்த ஆறு பெரியதுதான். தண்ணீர் மண் கலந்து கலங்கலாக ஆனால், பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் இரைச்சல், அந்த வனத்தை நிறைத்திருந்தது. ஆபத்தான அழகு!



தொங்கு பாலம் இரண்டு பகுதிகளாக இருந்தது. முதல் பகுதியில், பாலத்தின் கீழ் தண்ணீர் அதிகம் இல்லை. ஆனால், பாறைகள்!! எங்கிருந்து அடித்து வந்திருக்கும் இவ்வளவு பெரிய பாறைகள்? பூமி உருவானபோதா? 1897யில் வந்த நிலநடுக்கத்தின்போதா?


பாலத்தின், இரண்டாம் பகுதிதான் நீளமானது.  ஆற்றின் குறுக்கே -இந்த பாலத்தின் மீது நடப்பதுதான் எவ்வளவு சாகசமானது. அதுவும், நம்மால் முடியாது என்று நினைத்ததை சாதிக்கும்போது உண்டாகும் உவகைதான் எத்தகையது!  இயற்கையை, அந்த ஆற்றை, பாலத்தை, மனிதத்தை தவிர  மனதில் - அந்த நிமிடம் - வேறெதுவும் ஆக்கிரமிக்கவில்லை.


பார்க்கவும், ரசிக்கவும், சுற்றித்திரியவும்தான் எத்தனை இருக்கிறது இந்த பூமியில் என்று தோன்றும் நிமிடம் அழகானது. அதனை உணரவே, நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கூட்டை விட்டு பறந்து திரிகிறோமோ?  

மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு, படிகள் ஏறத்துவங்கினோம். இந்த பாலம் முடிந்ததும், இரண்டடுக்கு வேர்ப்பாலம்தான் என்று சொல்லப்பட்டிருந்ததால், கண்கள் பாலத்தை தேடின. ம்ஹூம்!

சற்று நடந்தால், ஒரு சிற்றாறு. அதனை கடக்க ஒரு சிறிய வேர்ப்பாலம். மகிழ்ச்சியுடன் அடைந்து தொட்டு தடவி படங்களெடுத்து....

 பாலத்தை கடந்தால், மூங்கில் குடிலில் ஒரு டீக்கடை. காலி பாட்டில்களை கொடுத்துவிட்டு, புதிய தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு நடையை தொடர்ந்தோம். திரும்பவும், படிகள். கிட்டதட்ட, இன்னொரு மலையை ஏறிக்கொண்டிருக்கிறோம்.

பலாக்காய்கள் காய்த்து தொங்க, சில வண்டுகள் எங்களை சுற்றி ரீங்கரித்தன. காதுகளை மூடிக்கொண்டு, மூச்சு வாங்கியபடி மேலேறினோம்.

ஒரு பெட்டிக்கடை வரவேற்றது. பாக்கு மரங்களையும், கோழிகளையும் கடந்து சென்றால், அருவியின் கிணிகிணியும் ஆற்றின் சலசலப்பும் காதுகளுக்கு அவ்வளவு இதமாக இருந்தது. நுழைவுச்சீட்டு, கேமிரா அனுமதிச்சீட்டு அறிவிப்பு பலகையை கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட்டோம்.


பாலத்தின், இந்த பக்கத்திலிருந்து மேலேறி - அந்த பக்கமாக கீழடுக்கில் வந்து இந்த பக்கம் மேலேறி - பாலத்தை ஒருவழி செய்தோம். வேர்ப்பாலத்தின்  மீது நின்று, எதிரில் தண்ணீர் அருவியாக கொட்டுவதை, கீழே வழிந்து ஓடுவதை வேடிக்கை பார்த்தோம். செல்ஃபிக்கள் எடுத்துக்கொண்டோம். கேமிராவுக்கு இப்படியும் -அப்படியுமாக அழகு காட்டிவிட்டு வேர்களை ஆராய்ந்தோம். கீழேருந்து மேல், மேலிருந்து கீழ் என்று படமெடுத்து தள்ளினோம்.

ஓய்ந்து போய், அருவிக்கருகில் அமர்ந்து கால்களை தண்ணீரில் அலசினோம். சில்லென்ற அருவி நீர் குளிக்க அழைத்தது. குளிக்க ஆயத்தமாக, நாங்கள் வரவில்லை. அருவியின், குறுக்கும் நெடுக்குமாக நடந்து தண்ணீரின் வேகத்தை ரசித்தோம். படிகம்போன்ற நீருக்குள் கிடந்த கற்களுக்கு சாப விமோசனம் கொடுத்தோம். நினைவுக்காக, சில கூழாங்கற்களை சேகரித்து பத்திரப்படுத்தினோம்.  பாறைகளின் மீது, நடந்து சென்று அருவியிலிருந்து நேராக நீரைப் பிடித்துக் அருந்தினோம். 

யாருடனும் பேசிக்கொள்ளாமல் அவரவர் சிந்தனைகளூக்குள் சற்றுநேரம் மூழ்கினோம். இளைஞ இளைஞிகள் பட்டாளமொன்று நுழைந்து குதூகலக் குரல்களால் நிரப்ப, அவர்களை வேடிக்கை பார்த்தோம். நேரமாவதை வழிகாட்டி சுட்டிக்காட்ட, 'கடைசியாய் ஒருமுறை' என்று பாலத்தின் கீழடுக்கிலிருந்து மேலேறி வந்தோம்.
 

வேர்ப்பாலத்தை, இயற்கையின் மடியை, மேகாலயாவின் நாடித்துடிப்பை விட்டு அகல மனமில்லாமல் திரும்பி நடந்தோம். ஏக்கமாக திரும்பி ஒரு பார்வை பார்த்துக்கொண்டோம்.  அந்த காட்சியை கண்களிலும் மனதிலும்  நிறைத்துக்கொண்டோம்.  திரும்பி என்றாவது ஒருமுறை இங்கு வருவேன் என்று அவரவர் மனதுக்குள்ளும் ஒரு குரல் ஒலித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

படிகளில் இறங்கும் சமயத்தில், வேர் பாலத்துக்கு மேலும் சில விருந்தினர்கள்.  அதில் தமிழ்க்குரல்கள் ஒலிக்க, முகத்தை பார்த்ததும், 

'தமிழா?'

'தமிழா?"

புன்னகை. 

தொடர்நடை. பேசிக்கொள்ள எதுவும் இருக்கவில்லை. அல்லது, பேசி மனதுள் படர்ந்திருந்த ஏகாந்தத்தை கெடுத்த விரும்பவில்லை.

தொங்கு பாலத்தில் இந்த முறை கூட்டமிருந்தது. கூட்டமெனில், நான்கைந்து பேர். அவர்களின் முகத்தில் தெரிந்த கலவரத்தை இங்கிருந்து ரசிக்க முடிந்தது. அவர்கள், இந்த பக்கம் வர, வழிவிட்டு காத்திருந்து, நாங்கள் தொடர்ந்தோம். இம்முறை, மிகவும் அமைதியாக!



கிட்டதட்ட படிகளுக்கருகில் வந்து சேர்ந்ததும் வழிகாட்டி கேட்டார், 'இதுவே போதுமா அல்லது நீண்ட பாலத்துக்கு போக வேண்டுமா?'.

அடங்குவோமா நாங்கள்?

'கண்டிப்பாக போகணும்'

அதற்கு, தனியாக நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு திரும்பவும் படிகள். இவை ஒரு 150 200 இருக்கும். அமேசான் காடுகளுக்குள் நுழைந்தது போலவே இருந்தது. வெயில் புக கொஞ்சமும் வழியேயில்லை. பெரிய பெரிய பாறைகள், அவற்றை அடித்து மோதிக்கொண்டு செல்லும் ஆறு....அதில் குதித்து விளையாடும் சிறுவர்கள்.


நீண்ட பாலம்தான்.

இங்கிருந்து அங்கு, சில படங்கள், அங்கிருந்து இங்கு...சில படங்கள்...கடைசியாக பாலத்தை, வேர்களின் மீது உயிர்த்திருக்கும் சிறு செடிகளை....

ஆற்றின் கிளையொன்று தனித்து பிரிந்து கொட்டிக்கொண்டிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு வந்திருந்த சான்ட்விச்சை உண்டு, அருவி நீரை குடித்துவிட்டு சற்று இளைப்பாறினோம். பசித்த போது வயிற்றில் இறங்கிய உணவு, காட்டின் குளிர்ச்சி, அருவியின் ஓசை, ஆற்றின் இடைவிடாத ஓட்டம்....

ஏற வேண்டிய படிகளை, கண்டதும் மலைப்பாக இருந்தது. ஆனால், வந்தாயிற்று, திரும்பிச் சேர வேண்டுமே! முதலடியை எடுத்து வைத்ததுதான் தெரியும். கால்வாசி ஏறியபிறகு சற்று இளைப்பாறல். இப்போது வந்துவிடும், அப்போது வந்துவிடும் என்று ஆளுக்காள் உற்சாகப்படுத்திக்கொண்டோம்.

 சிறுவர்களின் உற்சாசக் குரல்கள்..என்னவொரு வாழ்க்கை! டென்ஷனாவது ஒன்றாவது...ம்ம்ம்!

 பாலம் நோக்கி போகும், புது விருந்தினர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் மெதுவாக ஒவ்வொரு அடியாக வைத்து நகர்ந்தோம். உள்ளுக்குள் தெப்பலாக நனைந்திருந்தோம். ஆனாலும், சோர்வாக இல்லை. மகிழ்ச்சியும் உற்சாகமுமே ஓங்கியிருந்தது.


ஒருவேளை,  முடியாதென்ற சந்தேகத்தை, சோதனையை தகர்த்து  நாம் சாதிக்கும்போது நம்மை பற்றியே உள்ளுக்குள் உயரும் மதிப்பு தரும் பூரிப்பா என்று தெரியவில்லை.   எங்களால் கடக்கமுடிந்த தூரத்தை கண்டுக்கொண்டதால் இருக்குமோ?

மகிழ்ச்சியாக உணர்ந்தோம்.

அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் கொண்டு வந்துவிட முடியுமா தெரியவில்லை. பயணம் தரும் சுதந்திரத்தை அனுபவத்தவர்களுக்கே புரியும்.

'பாலங்களை கடக்க பப்பு பயப்படுவாளோ? ' 'கடினமான பாதையில் நடக்க இயலவில்லையெனில் என்ன செய்வது? '- இந்த எண்ணங்களே எனது மூளையை கடந்த நாளிரவு வரை ஆக்கிரமித்திருந்தது. மாறாக,  சவால்களை, அவள் எதிர்கொண்ட விதம் மனதுள் நிறைவை தந்தது.

பொருட்களாக வாங்கிச் சேர்க்கும் மகிழ்ச்சியைவிட, செறிவான அனுபவங்களை முத்துகளாக கோர்ப்பதையே பயணங்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றன. அவற்றுள், இரட்டை பாலத்தின் நடை பயண அனுபவம், மதிப்பிடற்கரிய‌ முத்து!

இப்பசுமை நடையின் , சாகச அனுபவத்தின் தடம் எங்கள் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும், மேகாலயாவின் தனித்துவமான வேர்ப்பாலங்களை  போலவே!

ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் உண்டு. "வாழ்க்கையில் பின்னோக்கி பார்த்தால், நீங்கள் அடைந்ததைவிட அடையாத விஷயங்களுக்காகத்தான் வருந்துவீர்கள்."

நல்லவேளை, எங்கள் நங்கூரங்களை நாங்கள் கழற்றி வீசினோம்.  :-)

Thursday, May 28, 2015

நடையும், நடையின் நிமித்தமும்


அந்த நூதனமான பாலத்தை, 'எங்கே எப்போது பார்த்தேன் ' என்று நினைவில்லை. மேகாலயா என்று பெயரை எதிர்கொள்ளும் போதெல்லாம் அந்த  'இரண்டடுக்கு மரவேர் பாலம்'தான் நினைவுக்கு வரும்.  அப்போதெல்லாம், 'இந்த இடத்திற்கு ஒருநாள் நான் செல்வேனெ'ன்றோ அல்லது 'என் கண்களால் நேருக்கு நேர் பார்ப்பேனெ'ன்றோ - யாராவது ஆருடம் சொல்லியிருந்தால், நிச்சயமாக நம்பியிருக்கமாட்டேன்.

கடந்த, மே மாதத்தில் 'பிம்தல்' என்ற இடத்துக்கு சென்றோம். நைனிதால் மாவட்டத்தில் இருக்கும் ஊர். அந்த ஊரின், ஏழு ஏரிகளில் ஒன்றான  மரகத வண்ண ஏரிக்கு காட்டுப்பாதையில் பசுமை நடையாக பயணம் செய்தோம்.



 கிட்டதட்ட எட்டு டூ பத்து கிமீ வரையிலான அந்த நடை பயணமும், மரங்களடர்ந்த காட்டின் பசுமையும், ஏரி நீரின் தண்மையும், அமைதியும் மிகவும் கவர்ந்து விட, அதுபோன்ற நீண்ட 'ட்ரெக்கிங்' செல்ல  வேண்டும் என்று பப்பு நெடுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

'வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ்' அல்லது 'டார்ஜிலிங்கிலிருந்து சிக்கிமுக்கு 'ரங்கீத்' ஆற்றை கடந்து செல்லும் நடையைத் தான் - இந்த கோடைவிடுமுறைக்கு ஆலோசித்துக்கொண்டிருந்தேன். மனதுள் , அவ்விரண்டு இடங்களையும் நடைகளைப் பற்றி அசை போட்டுக்கொண்டிருந்தேனே தவிர, அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யவில்லை. அப்போதுதான் கையில் கிடைத்தது, 'அலெக்ஸாந்தர் கிரேட்டரின்' 'ச்சேஸிங் த மான்சூன்' புத்தகம்.  அந்த புத்தகத்தை வாசிக்கும்போது கூட, ச்சிராபுஞ்சியில் காலடி வைப்பேனென்று நினைக்கவில்லை.

"ச்சேஸிங் த மான்சூன்' புத்தகத்தை, வாசிக்க வாசிக்க அவ்வளவு வியப்பு. அந்த புத்தகம் ஒரு புதிய உலகத்தையே எனக்கு காட்டியது. இந்தியாவின், பருவகால மழையை தொடர்ந்து சென்ற அலெக்சாந்தரின் பயண நூல்தான் அது. கேரளாவிலிருந்து ச்சிராபுஞ்சி வரை கிட்டதட்ட‌ முப்பதாண்டுகளுக்கு முன்பே  மழையை துரத்தி சென்றிருக்கிறார்,அலெக்சாந்தர் ஃப்ரெட்டர். மேலும், அலுவலக நண்பரும் ஷில்லாங்கின் அழகை துதி பாட, எனக்கும் மேகலாயா ஜூரம் தொற்றிக்கொண்டது.

இணையத்தில் - ஷில்லாங்கைப் பற்றியும், ச்சிராபுஞ்சியைப் பற்றியும் தேடினால் , முதலில் அகப்படுவது  - இந்த வேர்களாலான பாலங்கள்தான். இந்த பாலத்தை, சென்றடையும் பயண விபரங்களை தெரிந்துக் கொண்டதும்,  'வேலி ஆஃப் ப்ளவர்ஸும்' 'ரங்கீத்' ஆறும்  சற்றும் காத்திருக்கட்டுமே என்று நினைத்துக்கொண்டேன்.

ச்சிராபுஞ்சிக்கு செல்ல, இன்னும் ஒருவாரமே இருக்கிறதென்ற நிலையில் தொடங்கியது எங்களது ட்ரெக்கிங் ஆயத்தங்கள். உலகின் ஈரமான இடத்தில் கிட்டதட்ட 6 மணிநேரங்கள் நடக்கப் போகிறோம்.அதுவும் மழைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது.

ஆர்வமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ள, ஆளுக்கொரு மழையுடை (ரெயின்கோட்), மழையில் நனையாத பை, பசுமை நடைக்கான‌ ஊன்றுகோல் என்று பார்த்து பார்த்து இணையத்திலும், வேளச்சேரியில் புதிதாக முளைத்துள்ள 'வைல்ட்க்ராஃப்ட்' கடையிலும்  வேட்டையாடினோம்.

இரண்டடுக்கு வேர்ப்பாலத்தை காணும் பயணத்தில், இரண்டு தொங்கு பாலங்களை கடக்க வேண்டும் என்று தெரிய வந்ததிலிருந்து மனம் உறுத்திக்கொண்டே இருந்தது.

இது மழைக்காலம். ஆற்றில் தண்ணீர் பொங்கி பிரவாகமாக வரும். பாலமோ, கம்பிகளால் பின்னப்பட்டது. பப்புவால் நடக்க முடியுமா? பயந்துவிட்டால் என்ன செய்வது? 

இணையத்தில், அந்த பாலங்களை அலசி ஆராய்ந்தேன்.   தைரியத்தை கொடுக்கக்கூடிய ஒரு வெளிச்சக்கீற்றுக்காக - பயணம் செய்தவர்களின் கருத்துகளை -தேடித்தேடி வாசித்தேன். 'சாகசமாக இருக்கும்' 'பயமொன்று மில்லை' என்ற கருத்துகளை வாசித்தபோது மகிழ்ந்தும், சில கருத்துரைகளில் 'கம்பிகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் குழந்தைகள் பத்திரம்' என்று கண்டபோதோ உள்ளூர பயந்தும் கிடந்தேன். 'ரிஸ்க் எடுக்கிறோமோ' என்று கூட ஒரு கட்டத்தில் நினைத்தேன். 

பப்புவிடம், மெல்ல மெல்ல இதைப்பற்றி சொல்லியும் வைத்தேன். பயந்துபோய்,  வேண்டாமென்று சொல்லிவிடுவாள் என்று மனதுள் ஒரு நப்பாசை இருந்தது. அவளோ,  'ஆ..சூப்பர்...நான் பாலத்துலே டான்ஸ் ஆடிக்கிட்டே நடப்பேன்' என்று துள்ளி குதித்தாள். பயத்தின் சிறு சாயல் கூட இல்லை.  இப்போது, பயத்தின் அளவு அதிகரித்து எனக்குத்தான் யாராவது தைரியம் சொல்ல வேண்டியிருந்தது.  

ஆற்றின் மீது நடக்கும்போது, கீழே ஓடும் நீரை பார்க்காமல் அடுத்த அடியை வைத்து கடந்துவிடு என்று மட்டும் தயார்பாடுத்தும் வகையில் சொன்னேன். அது அவளுக்கா அல்லது எனக்கா என்று தெரியவில்லை.

உண்மையில், பப்புவுக்கு  பாதுகாப்புணர்வு அதிகம். மிகைக்காக சொல்ல வில்லை. அவளை பற்றி நானறிவேன் இல்லையா! சரியான பிடிமானம் இல்லாமல் ஒரு சிறு இடைவெளியை கூட தாண்ட மாட்டாள். தாண்டிகுதிக்கக் கூட, அத்தனை ஆயத்தங்கள் செய்யவேண்டும்.  

சற்று சறுக்குகிற மாதிரி பாதை இருந்துவிட்டாலோ, அடுத்த அடி எடுத்து வைக்க மாட்டாள். சரியாக பாறையில் கால் வைத்து வழுக்கி விழுவாள். ஆழங்களை பார்த்துவிட்டால், அவளுக்கு கைப்பிடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகே நடப்பாள். எல்லா பாரத்தையும் தூக்கி தனியாக வைத்துவிட்டு, ' பாலம் வரும்போது கடக்கலாம். அதுவரை வருவதை எதிர்கொள்ளடா' என்று கிளம்பியாயிற்று.

ச்சிராபுஞ்சியில், நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இரண்டடுக்கு வேர்ப்பாலம் போக மட்டுமே பத்து கிமீ. முதல் ஐந்து கிமீ சாலை வழி பயணம். அடுத்த ஐந்து கிமீதான் உண்மையான பசுமை நடை. 

அதாவது, மலைவழிப்பாதை. முதலில் 2500 படிகள் கீழ் நோக்கி இறங்க வேண்டும். அதன் பின் சற்று கரடுமுரடான காட்டுப்பாதை. அதைக்கடந்தால், சிங்சாங் ஆறு. அந்த ஆற்றின் மீது ஒரு  தொங்கும் பர்மாபாலம். அதனை கடந்தால் மீண்டும் ஏறுமுகமான படிகள். மீண்டும் ஒரு காட்டாறு. அதன் மீதான பெரிய தொங்கு பாலம்.

அதன்பின், கிட்டதட்ட 2 கிமீ காட்டு வழிப்பயணம். அதில் சில இடங்களில் படிகள் உண்டு.இதில், ஒரு சிறு வேர்ப்பாலம் வரும். அந்த ஆற்றை கடப்பது கணக்கில் வராது. போக வர‌ மொத்தம் இருபது கிமீ நடை.

சிறிய அளவில், கிட்டதட்ட 3 முதல் 5 மணி நேரங்களாலான பசுமை நடை சென்ற அனுபவம் உண்டு. ஆனால், அவையெல்லாம், ஒரே மாதிரியான மலையேற்றம் அல்லது கரடுமுரடான சாலைகள் வழி. இதுவோ, ஏழு கடல் ஏழு மலை போல படிகள், ஆறுகள், பாலங்கள்...விடுதியில் கொடுத்திருந்த வரைபடத்தில், 'You are doing the trek at your own risk and responsibility' என்று வேறு போட்டிருந்தது.



இரவுணவுக்குப் பின், நானும் பப்புவும் விடுதியில் ஓய்வறையில் கேரம் ஆடிக்கொண்டிருந்தோம். தங்கியிருந்த பலரும் சேர்ந்துக்கொள்ள, பேச்சு 'டபுள் டெக்கர் ரூட் பிரிட்ஜ்' பற்றி திரும்பியது. 'நாளைக்காலை செல்லப் போகிறோம்' என்று சொன்னதும் மும்பையிலிருந்து வந்த அந்த அம்மா ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.  

அன்று காலையில், அவர்கள், அந்த நடைபயணத்தை மேற்கொண்டதாகவும், இறங்குமுகமான படிகளில் - கிட்டதட்ட 1000 படிகளை தாண்டியநிலையில் - தலைசுற்றியதால் திரும்பி வந்துவிட்டதாகவும், அவர் சொன்னபோது கிலி  பிடித்துக்கொண்டது.  இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்கவில்லை.

'சரி, அதற்காகத்தானே வந்திருக்கிறோம் - முயன்று பார்ப்போம், இயலவில்லை என்றால் திரும்பி வந்துவிடுவோம். அவ்வளவுதானே' என்று என்னை நானே சமாதானப்படுத்தியபடி உறங்கிப்போனேன்.

நடப்போம்...

Wednesday, May 27, 2015

கண்டுபிடிங்க‌....இது எந்த ஊர்?? :-)

"ஹைய்யய்யோ விடிஞ்சிருச்சே..எப்படி இவ்ளோ நேரம் தூங்கினோம்னு"  'தடக்'ன்னு தூக்கி வாரி போட்டு விழித்து, பல்துலக்கி,  நேரம் பார்த்தால் காலை நாலரை.  நான்கரைக்கே, விடிந்து நமது எட்டு மணி போல் பிரகாசிக்கும் ஊர் அது...

பார்த்துக்கொண்டிருக்கும்போதே,  சின்னஞ்சிறு  மேகத்திட்டு, ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நம்மை மூடிக்கொள்ளும். மேகங்கள் நாள்முழுக்க நம்மோடு கண்ணாமூச்சி விளையாடும்   ஊர் அது...

எதிர்பாராத நேரத்தில், கருமேகம் ஒன்று, முழுசாக‌ நம்மை நனைத்துவிட, மழை அடுத்த சில நிமிடங்களில் பெய்த தடயமே இல்லாமல் சூரியன் புதிதாக முளைக்கும், கதவருகில் ஒளிந்துநின்று செல்லமாய் பயமுறுத்தும் குழந்தையைப்போல்...

சிறு சிட்டுக்குருவிகளென பறந்து திரியும் அதிசய பட்டாம்பூச்சிகளின் சொந்த ஊர் அது... 

தாகமெடுத்தால் தண்ணீரல்ல, 'ரெட் டீ'தான் பருக...தேசிய பானமே அதுதான்!

பசித்த போதெல்லாம் நாங்கள் புசித்தது, விதவிதமான‌ 'ஃப்ரைடு ரைஸ்' மற்றும்  'ஹக்கா சௌ'. அந்த ஊரின் ஸ்பெஷல் உணவே 'மாமிசமும்' 'வெற்றிலையும் பச்சைபாக்கும்'தான்!

'பள்ளிக்குச் சென்று ஆங்கில வழியில் கற்றால்தான் தங்கு தடையின்றி ஆங்கிலம் பேசமுடியும்' என்ற கற்பிதத்தின் முகத்திலறையும் ஊர்....... பள்ளிக்கூடம் போகாவிட்டாலும், சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் கிராம மக்கள் நிறைந்த ஊர் அது...

நதிகளை, பொங்கி பிரவாகிக்கும் காட்டாறுகளை தாண்டிச்செல்ல மக்கள் பயன்படுத்துவது, நம்மைப்போல் காங்கிரீட் பாலங்களை அல்ல... இருகரைகளிலுள்ள‌, மரங்களின் பின்னி பிணைத்த  வேர்களே கரைகளை பிணைக்கும் பாலங்கள்!

கிரிக்கெட்டோ டென்னிசோ அல்ல, அந்த ஊரின் விளையாட்டுகள்  அம்பு விடுதலும், மீன் பிடித்தலுமே. குளங்களில், கூட்டம் கூட்டமாக அவரவர் மீன்பிடி கோலுடன், அமர்ந்து, பொறுமையாக காத்துக் கொண்டிருப்பதை காணலாம். அம்பு எறிதலுக்கோ, டிக்கெட் கவுண்டர்கள் ஆங்காங்கே முளைத்திருக்கும்.

'அப்பா காசை எண்ண முடியாது; அம்மா புடவையை மடிக்க முடியாது' என்ற புதிர் கேள்விப்பட்டிருப்போம். 'அருவிகளை எண்ண முடியாத ஊர் எது' என்ற புதிய புதிரையே இந்த ஊருக்காக‌ உருவாக்கலாம்.

முக்கியமாக, ஊர் பெயர்களெல்லாம் எங்கள் வாயிலேயே நுழையவில்லை. 'நோங்வார்' 'மாஸின்ட்ரொம்' ' மாஃபாலாங்' ' மாவலாய்' 'மாஸ்மாய்' 'லாட்டின்ஸ்க்யூ' 'உம்வார்' இவைதான் எங்களுக்கு எளிதாக இருந்தவை.

புடவை எட்டாத ஊர் இது. சுடிதார்,இந்த ஊரில் எடுபடவே இல்லை. அலுவலகத்தில் வேலை செய்பவரோ, வீட்டில் வேலை செய்பவரோ...ஏன், திருமண வரவேற்பு கொண்டாட்டமோ...பெண்கள் அனைவரும் உடுத்துவது இரு துண்டுகள் கொண்ட‌ 'ஜெயின்சம்'!

கண்டுபிடிங்க‌....நாங்க எந்த ஊர் போயிட்டு வந்திருக்கோம்னு?  :-)

Saturday, May 23, 2015

இரட்டை வேர்ப்பாலங்களை (Living Root Bridges) நோக்கிய எங்கள் நடைபயணம் - இன்றோடு சரியாக ஒருவாரம்


கீழ்நோக்கிச் செல்லும் 2500 படிகள்
முடிவேயில்லையா என தோன்ற வைக்கும்

திடீரென பார்த்தால் தலைசுத்த வைக்கும்...
குறுகிய மற்றும்  செங்குத்தான படிகள்
இதன் நடுவில்,
ஆங்காங்கே வளைவுகள்...
படிகளிலிருந்து நிமிர்ந்து பார்த்தால்,
இன்னொரு பசுமைமலைச்சரிவு...
அதிலிருந்து வீழும் அருவிகள்,
 

அருவிகளை மறைக்கும் மேகங்கள்...
நடந்து செல்லும் ஒன்றிரண்டு பேர்...
திரும்பிச் செல்லும் சிலர்...
குருவிகள் மற்றும் பெயர் தெரியாத பறவைகளின் குரல்கள்
இடையில் ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாத நதிகளின் சலசலப்பு

வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் காலங்காலமாக உறைந்துநிற்கும் பாறைகள்...

இடையில் வரும் படிகள் கணக்கேயில்லை
இருபது நிமிட இடைவெளியில் இரு ஆறுகள்

அவற்றின் மீது கட்டப்பட்ட தொங்கும் பர்மா பாலம்

வழிகாட்டியின் புன்னகை
பாலத்தின் கீழ் காட்டாற்று வெள்ளம்

ஏறுமுகமான படிகள்...
போகவும் வரவும் 5+5 கிமீ
வளைந்து நெளிந்து செல்லும் பாதையின் முடிவில் ஆரம்பிக்கிறது
வேர்களாலான தொட்டில்...  


 

Tuesday, April 14, 2015

நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம் ...

 ஹம்பியில், பார்க்க வேண்டிய இடங்கள் - அமைந்திருப்பதே வித்தியாசமானது. சொல்லப்போனால், 'பார்க்கவேண்டிய இடங்கள்' என்ற பட்டியலே தேவையற்றது. ஒருவருக்கு, முக்கியமாக படுவது மற்றொருவருக்கு தேவையற்றதாக இருக்கலாம். இருந்தாலும், நாங்கள் சென்று வந்த பாதையை - பதிவு செய்யவும், குறிப்புக்காகவும் எழுதி வைக்கிறேன்.

நதிக்கரை வழியாகவே 'கல்தேரு' (விஜய விட்டாலா) கோவிலுக்கு பழங்காலத்தில் எப்படி சென்றிருப்பார்கள் என்று அறிய விரும்பினோம். 'நதிக்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது' என்று படிக்கிறோமே...அதை நேரில் காண வேண்டாமா? :-)

விருபாஷா கோவில் டூ விட்டலா கோவில் ‍- வழி துங்கபத்திரா! ஆம், விஜயநகர மன்னர்களின் பாதையில் - நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம்! விருபாஷா கோவிலின், பெரிய நந்தியிடம் இருந்து, நடக்க ஆரம்பித்து துங்கபத்திரா வழியாக விஜய விட்டலா கோவிலை அடைவதே திட்டம்.

 பயணிகளுக்கு உதவியாக, ஆங்காங்கே  வழிகாட்டி கற்கள் இருக்கின்றன. இல்லையென்றாலும், ஹம்பியில்  வரலாற்று சின்னங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதால் பாதகமில்லை. வழிதவற வாய்ப்பும் இல்லை. 

பெரிய நந்தியின் இடப்புற வழியாக மலையடிவாரத்தை ஒட்டி நடந்தோம். வழியில் மக்கள், 'அபார்ட்மெண்ட்கள்' பலவற்றை கட்டியிருந்தார்கள்.


 
குகைகளின் வழியாக, புறப்பட்டு சென்ற அந்த வழித்தடத்தின்,  ஆரம்பத்தில் சக்கரத்தீர்த்தத்தில் கால் நனைத்தோம். அங்கிருந்து ஆரம்பிக்கும் படிகளில் மேலேறி, மண்டபத்தில் அமர்ந்தோம்.  எங்களுக்கு நேரெதிரில் துங்கபத்திரா. கோவிலுக்குப் பின்னால் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தவள், இங்கு வேறுமுகம் காட்டுகிறாள்.


நீர் அரித்த, பாறைகளை பார்த்தவாறே நினைவுகளில் தொலைந்து போனோம். பாறைகள், குடைந்தது போலவே அரிக்கப்பட்டிருந்தது. எத்தனை வருடத்து மழையும், வெள்ளமும்! 


தலைக்கு, மேலிருந்த மரத்தில், ஏதோ சலனத்தை உணர்ந்து திரும்ப , மந்திக்கூட்டம். குரங்கும் தொப்பிவியாபாரி கதை நினைவுக்கு வர,  தலையிலிருந்த  தொப்பியை, கவனமாக பிடித்தபடி நடையை தொடர்ந்தோம். 

அடுத்து வந்தது, கோதண்டராமர் கோவில். பூஜை நடைபெறும் கோவில் போலிருக்கிறது. பெரிய இரும்பு கதவு போடப்பட்டு, வர்ணங்களுடன் இருந்தது. பழைய கோவில் என்ற நினைப்பே வராததால் தவிர்த்துவிட்டு, அதையடுத்து இருந்த கடையில் இளநீர் அருந்தினோம்.

இளநீர் காய்கள் ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் இருந்தார் ஒரு வளையல் அம்மன். 

 

"Hampi is mythical landscape imbued with the presence of  Gods, godesses and heroes" என்பர் ஜான் ஃபிரிட்ஜ் மற்றும் ஜியார்ஜ் மிஷெல்  - அவர்களது 'ஹம்பி விஜயநகரா' என்ற புத்தகத்தில். கோயில்கள் தூண்களிலெல்லாம், வாயில் சுவர்களிலெல்லாம், மேற்கூரையில், இடிந்து விழுந்த தூண்களில் என்று எங்கும் கடவுளர் மயம்தான். அவையெல்லாம் போதாதென்று, இந்த வன்னி மரத்தினடியில் ஒரு அம்மன், அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

இளநீர் குடித்தபடி, அம்மனின் தலபுராணமும், தல விருஷத்தைப் பற்றியும் கேட்டபிறகு, நடையை தொடர்ந்தோம். டிசம்பர் மாத இறுதி. வெயில் அதிகமில்லை.  இதமான வெயிலுக்கு ஏற்ற சுகமான குளிர் காற்று. காற்றை அனுபவித்தபடி மேலும் நடந்தால், வழிகாட்டி பலகைகள் நேராக வராக கோவிலை காட்டியது.


 
மரத்தின் கீழமர்ந்து, மாணவர்கள்  சிலர் படங்கள் தீட்டிக்கொண்டிருந்தனர். பாறைககளுக்கிடையில் மிஞ்சியிருந்த கோபுரங்களும், கோவில் மண்டபங்களும் தத்ரூபமாக இருந்தது. வேடிக்கைப் பார்த்துவிட்டு, வராக கோவிலையும், அதன் தூண்களையும் சற்று நேரம் ஆராய்ந்தோம்.


 
நுழைவாயிலில் இருக்கும் ஹம்பியின் 'ராஜ முத்திரை' அழகு!  அம்புலிமாமா ராஜா கதைகளில் 'ஐம்பது வராகன், நூறு வராகன்' என்று படித்திருப்போமே! அந்த  'வராகன்' என்ற நாணயம் பிறந்தது இங்குதான் என்கிறார், நூனிஸ் 'விஜயநகர பேரரசு' புத்தகத்தில்.

வராக கோவிலுக்கு வலப்புறத்தில், எதிர்பட்ட‌  நீளநீளமான மண்டப  பாதைகளை பார்த்துவிட்டு, 'எதற்கு இப்படி கட்டியிருக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டு மலைப்பகுதிக்கு சென்றோம்.  மலைப்பகுதில் இருந்த சிதிலமடைந்த கோவில்களில், உள்நுழைந்து வெளியேறி மேலே மேலே சென்றுவிட்டோம். ஜைனக்கோவில்கள் போலிருந்ததைக் கண்டு, புத்தகங்களை துழாவி, அங்கேயே அமர்ந்து வாசித்தோம்..  

தூண்களிலும், மண்டபச்சுவர்களிலும் சிற்பங்களைத் தேடினோம். களைத்துப்போய், பையிலிருந்த பெரிய இலந்தம்பழங்களை உண்டோம். இதற்குமுன், இந்த இலந்தம்பழங்கள், இவ்வளவு ருசியாக இருந்ததேயில்லை.
பாதை ஓரத்திலிருந்த வேப்பமரத்தினடியில், பாறைமீது படுத்து காற்று வாங்கியபடி , தூரத்தில் தெரிந்த விருபாஷா கோவில் கோபுரத்தை ரசித்தோம்.

மேலே சென்று, பெயர் தெரியாத கோவில்களையும், மண்டபங்களையும் பராக்கு பார்த்தோம். உண்மையில், நாங்கள் அந்த இடத்தில், அச்சுதராயர் கோவிலை தேடி அலைந்துக்கொண்டிருந்தோம். மலையின் நட்டநடு சென்டரில், விண்ணை முட்டிக்கொண்டு நின்றது, கோயில் ஸ்தம்பம் ஒன்று. அந்த இடத்துக்கே, ஒரு அமானுஷ்யமான தோற்றத்தை கொடுத்தது அது.

அருகிலிருந்த, கோவிலின் படிகளில் ஏறும்போது, கீழே வந்தார் வயதானவர் ஒருவர். தலைப்பாகை, தார் பாய்ச்சி கட்டிய வேட்டி. 'உஜ்ஜயினி மாகாளி' என்று படத்தை என்னிடம் தந்துவிட்டு சென்றார். உஜ்ஜயினியிலிருந்து வந்திருப்பார் போலிருக்கிறது. உள்ளங்கையிலிருந்த‌ மாகாளியை ஒரு நிமிடம் உற்றுநோக்கிவிட்டு, எனை நோக்கி நீண்ட பப்புவின் கைகளின் திணித்தேன்.


இந்த கோயில், இருந்தது சற்று உயரத்தில். ஆனாலும், விடாமல், இரண்டடுக்கு மண்டபம் ஒன்றை கட்டி யிருக்கிறார்கள். லாங்ஹர்ஸ்ட் புத்தகத்தில், அது  ஜைனக்கோவிலென்று சொல்லப்பட்டிருந்தது.  திரும்பவும், வந்த வழியிலேயே திரும்பி நடந்தோம்.


 
வராக கோவிலுக்கு வலப்புறத்தில் தெரிந்த அந்த நீண்ட நெடிய பாதைதான் அச்சுதராயர் கோவிலுக்கு போகும் வழி.முன்பொருகாலத்தில் இங்குதான்  தேர் திருவிழா நடந்தது.  இடிபாடுகளுடன் இருமருங்கிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் இந்த மண்டபத் தொடர்தான் அச்சுதராயர் கோவிலின் 'சூலே பஜார்'. இந்த சூலே பஜாரில்தான் நாட்டிய நடன பெண்மணிகள், தங்கியிருந்ததாக எழுதுகிறார், லாங்ஹர்ஸ்ட்.   நாட்டிய பெண்களுக்கு  உபயோகமாக,அருகிலேயே ஒரு குளம்.  
 

 
குளத்தை சுற்றும் முற்றும், எட்டியும் பார்த்துவிட்டு, கோபுரத்தை நோக்கி நடந்தோம். குளத்துக்கு அடுத்தாற் போல் ஒரு யானை நின்றிருந்தது. கரும்பாறை.  திரும்பி கோவிலை நோக்கி நடந்தோம்.

சிதலமடைந்த கோபுரத்தை பார்க்கும்போது, இணையத்தில் அங்கோர்வாட்,இந்தோனேசியா பாலி படங்களில் பார்த்தது போல‌ இருந்தது. வாயிலில் அழகான மங்கையர். அழகான முன் மண்டபம். தூண்களில் செதுக்கப்பட்டிருந்த பெண் சிற்பங்கள் அழகு. 

அண்ணன் கிருஷ்ண தேவராயா, கட்டிய‌ விட்டலா கோவிலைப் போல கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு, தம்பி  அச்சுதராயர் கட்டிய கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தை ஏனோ நினைத்துக்கொண்டேன்.  அழகாக இருந்தாலும்,  தற்போது அதிக சேதங்களுடன் களை யிழந்து காணப்படுவதாலா என்று தெரியவில்லை. கோவிலை ஒட்டி மாதங்கா பர்வதம். எல்லாம் சரியாக இருந்த ஒரு காலத்தில்,  ஒரு நேர்த்தியான கலைநயமிக்க ஓவியம் போலிருந்திருக்கும் இந்த இடம்.

யாளிகளுடன் மறைந்து, ஒளிந்து விளையாடி, பின்னர் ஒருவரை ஒருவர் புகைப்படங்கள் எடுத்தபின்,  மீண்டும் ஜைனக்கோவில்களுக்கே வந்து சேர்ந்தோம்.

சற்று தூரம் செல்ல, யாருமற்ற மலைப்பகுதியானது வழி.  மலைமுகடுகளில் ஆங்காங்கே தெரிந்த வெளிநாட்டினரும் இப்போது சிறுத்துப்போயினர். அந்த மலைப்பகுதியே எங்களுக்கு சொந்தமாகிப்போக, பாடிக்கொண்டும், ஓடிப் பிடித்தும், சில இடங்களில் அமைதியாகவும் நடந்தோம். வனாந்தர வழிபோல் தோன்ற, கீழே ஓடிக்கொண்டிருந்தது , துங்கபத்திரா. சுக்ரீவா குகையில், வாயிலில் யாரோ, புல்லாங்குழல் ஊதும் ஒலி மட்டும்.

துணைக்கு, குருவிகளில் சிறுசப்தங்கள்.  பூக்கள் அடர்ந்த புதரொன்றில் அத்தனை பறவைகள். அவைகளை தொல்லைப்படுத்திவிடாமலிருக்க  அடிமேல் அடி வைத்து நடந்தோம். ஒருவரையொருவர், நடப்பதை பார்த்து கிண்டலடித்து, வெடித்து சிரித்ததில் பயந்து பறந்தன குருவிகள்!


 
கீழே, செதுக்கி வைத்திருந்த சரணாகதி சிற்பங்களையும், தூண்களின் சிற்பங்களையும் பார்த்தபடி நடைபயணத்தை தொடர்ந்தோம். தூரத்தில் கண்ணுக்குத் தெரிந்தவரை மலைகள், அதற்குக் கீழே தென்னைமரத்தோப்புகள், அதற்கும்  கீழே பச்சைபசேலென வாழைக்கன்றுகள். வெயிலுக்கு இதமாக மெலிய காற்று. விஜயநகர பேரரசின், பயணிகளுக்கு ஆங்காங்கே நிழற்குடையென மண்டபங்கள்.

அருகில் தெரிந்தது, இரண்டடுக்கு வாயில் போல ஒன்று. அநேகமாக, இந்த பக்கத்துக்கான விட்டலா கோவிலுக்கான நுழைவாயிலாக இருக்கலாம். நிழலின் அருமையை உணர்த்திய இடம் அது! பிரமாண்டமான பேரரசு ஒன்றின், நுழைவாயிலில் கால்நீட்டி அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டே, கோயிலைப்பற்றி வாசித்தோம்.



கொஞ்ச தூரம் சென்றதும், கண்களுக்கு புலப்பட்டது  ஒரு அமைப்பு. 'ஆஆ!! அரசர துலாபாரா' என்று கத்திக்கொண்டே ஓடினோம். புத்தகங்களில் பார்த்ததை, நேரில் கண்டு கொண்டதும் ஏற்படும் பிரமிப்பு அது. கோயிலை அடைந்து விட்டதற்கான அடையாளமும் அதுதான்.
 

 
துலாபாரத்தின் தரைப்பகுதியில், தம்பதியினராக, குடும்பமாக விழுந்து கும்பிடும் உருவங்கள் செதுக்கப் பட்டிருந்தன.  அவற்றிலும் ராஜகுடும்பத்தையும், சாதாரண மக்களையும் தேடினோம். 'துலாபார தூண்களுக்கு இடையில் நின்று, தூணில் சாய்ந்து நின்று, நடுவில் துள்ளி குதித்து என்று புகைப்படங்களாக‌ எடுத்துத்தள்ளி  'அரசர துலாபாராத்தை' டரியலாக்கினோம்.

சுக்ரீவ குகை மற்றும் புரந்தர மண்டபம் வழியாக, சாரி சாரியாக மாணவர்கள் வரத்துவங்கியிருந்தனர். ஜோதியோடு ஜோதியாக, நாங்களும் ஐக்கியமாகி விட்டலா கோவிலை ஆராயத்துவங்கினோம்.  ஹம்பியில் கைடு வைத்து பார்த்த ஒரே இடமும் இதுதான்.

விருபாஷாவிலிருந்து ஆரம்பித்து விட்டலா கோவில் வரை, நதிக்கரை வழியாக  நீண்ட இந்த  பாதையும், நடைபயணமும், நாங்கள் செலவிட்ட எங்கள் சந்தோஷமான கணங்களும் நீண்ட நாட்க‌ள் எங்கள் மனதில் தங்கியிருக்கும்.  
 

குறிப்பு: கோவிலைப்பற்றி இங்கு எதுவும் சொல்லப்போவதில்லை. திரும்பி வரும் பாதையை, சுக்ரீவன் குகை வழியாக -  சக்கரத்தீர்த்தத்தை அடையுமாறு வைத்துக்கொள்ளலாம். இல்லையேல், ஆட்டோ பிடித்து, 'தாலரி கட்டா'வை (நுழைவாயில்) பார்த்துவிட்டு தொடரலாம். இந்த தாலரி கட்டா, நமது தற்போதைய சுங்கவரி சாவடியின் முன்னோடி.  

Sunday, April 12, 2015

'அஞ்சாங்கல் காலம்' ‍ - உமா மகேஸ்வரி

அலுவலகத்திற்கு வந்துவிட்டாலும்,  காலையில் வேலையே ஓடவில்லை. 'ரேணுகா'வையும், 'சுமி'யையும் பற்றியே மாற்றி மாற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு முதல் நாளிலிருந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். 'லைட் ஆஃப் பண்ணு' என்ற தொணத்தலுக்காக வைக்க மனமில்லாமலிருந்தது. காலையில் பப்புவை பேக் செய்ததும்,நேரமாகிவிட்டாலும் கிளம்பாமல் சிறிது நேரம் வாசித்துக்கொண்டிருந்தேன்.


உமா மகேஸ்வரியின் எழுத்துகள், எப்பொழுதும் மனதுக்கு நெருக்கமானவைதான். அவரது 'யாரும் யாருடனும் இல்லை' என்ற நாவலுக்கு எனது விருப்பப்பட்டியலில் என்றும் இடம் உண்டு.  அவரது கதைமாந்தர்களின் பெயர் நினைவிலில்லா விட்டாலும் கூட, அவர்களது குணாதிசயங்களும், விவரணைகளும் என்றும் இன்றும் கூட மனதில் நிற்கிறது.

'அஞ்சலை' மற்றும் 'ஆனந்தாயி' வாசித்த போதெல்லாம்,மிகவும் பாதித்த கதாபாத்திரமாக அந்த மைய கதாமாந்தர்களே இருந்தனர் அஞ்சலை ஆனந்தாயி என்று. உமா மகேஸ்வரியின் நாவலில், அப்படி டக்கென்று என்னால் சொல்லிவிட முடியாது. அதற்கு காரணம், அவை நமது குடும்பத்தை , இயல்பை அப்படியே பிரதி பலிப்பதுதான் என்று நினைக்கிறேன்.

ஒற்றை மனிதனை/மனுஷியை மையமாக வைத்து அவரது நாவல்களோ கதையோ எப்பொழுதும், சுழன்றதில்லை.  எல்லாமே,  வீடு மற்றும் வீட்டை சுற்றி வலம் வரும்  குடும்பத்தினர் என்ற ஒரு பெரிய கான்வாஸ்தான்.

இந்த நாவலும் அப்படிதான்: வித விதமான‌ மனிதர்களாலும், குழந்தைகளாலும்  நிறைந்திருக்கிறது. அவர்களது உணர்வுகள்,பிரச்சினைகள், சந்தோஷங்கள், துள்ளல்கள்  என்று வாழ்வின் சகல பரிமாணங்களோடும் பயணிக்கிறது. ரேணுகாவில் ஆரம்பிக்கும் நாவல் ரேணுகாவில் வந்து முடிவதற்குள்  நாம்தான் எத்தனை கதாபாத்திரங்களை, அவர்களது உலகங்களை தரிசித்துவிடுகிறோம்.


' ரேணுகா' என்று அடிக்கடி நான் சொல்லிக் கொண்டிருந்தாலும், வாசித்தபின்னர்  சுகியை மறந்துவிட முடியுமா? அல்லது ஜகியைத்தான் மறக்க முடியுமா?  பவானியை, சிவனம்மாவை, தனசுந்தரியை அல்லது ரத்தினம் அம்மாளை, பரமுவை கிருட்டிணசாமியை... மகாவை..

'யாரும் யாருடனும் இல்லை'யில் கடைசியாக  இல்லாமல் போகும் அந்த வேலைக்காரப் பெண் சுப்பு  இன்றும் மனதில் வாழ்கிறாள். இப்படி அழுத்தமாக, அதே சமயம் சுவாரசியமாக கொண்டு செல்வதற்காகவே,  எனக்கு உமா மகேஸ்வரியை வாசிக்கப் பிடிக்கும்.

இன்னொரு காரணம், வலிந்து பிணைக்காமல் சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்களை நமது மற்றும் அக்கம்பக்கத்துவீடுகளில் இயல்பாக காணக்கிடைக்கும் குடும்பங்களை காட்சிப்படுத்துவதுமே. ஜன்னலை திறந்தால் மலைமுகடுகள் தெரியாவிட்டாலும் கூட,  'யாரும் யாருடனும் இல்லை'யை என்னால் வடலூர் வீட்டை கற்பனை செய்யாமல் வாசிக்க முடியாது.

வீட்டுக்குப் பின்னால் கொல்லை,முல்லை செடிகள்,குருவிகள், மருதாணி செடி, கிணறு, தென்னை மரம், மலைகள் என்று அவரது நாவல்களோ கதைகளோ  'தேனி'யையும்  ஒரு கதாபாத்திரமாக வைத்து வளர்ந்தாலும், எந்த ஊருக்கும், குடும்பத்துக்கும் பொருந்திப்போவதுதான் அவரது ஒரு நூலைக்கூட விடாமல் என்னை வாங்க வைக்கிறது போலும். (பொதுவாக ஊர்ப்பெருமை(யையும்) பேசுகிற நாவல்கள் எனக்கு அலர்ஜி!)

ஒரு கல்லூரி நடனமொன்று உண்டு. மேலிருந்து வண்ண வண்ணமாக  புடவைகள் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். அதன் மறுமுனையை  கையில் பிடித்தபடி சுழன்று  சுழன்று ஆடுவார்கள். ஆனால், தொங்கும் துணிகள் ஒருபோதும் சிக்கலாகி மாட்டிக்கொள்ளாது. "அஞ்சாங்கல் காலம்" நாவலும் கிட்டதட்ட அந்த மேடை நிகழ்ச்சி போலத்தான். நாவல் முழுக்க மனிதர்கள் இறைந்துகிடந்தாலும், வாசிக்கும்போது நமக்கு எந்த இடறலும் ஏற்படுவதில்லை.

நாவலை வாசிக்க வாசிக்க, கடந்தவார நீயாநானாவின் காட்சிகள் மனதுள் சுழன்றன. கோபி கொஞ்சம் மிகையுணர்ச்சி காட்டக்கூடியவர் என்றாலும் 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா' என்று அலுத்து சலித்துக்கொண்ட அந்த நொடி. 'கல்யாண வாழ்க்கைன்னா என்னன்னு உங்க பொண்ணுங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க' என்ற வரலாற்று சிறப்பான கேள்வியை கேட்டார் கோபி.

 அதற்கு பதிலளித்த எந்த அம்மாவுக்கும் வாழ்க்கை என்பது இதுதான் என்று அறுதியிட்டு கூற முடியவில்லையே, எல்லாம் அட்வைசாகவே இருக்கிறதே என்று  கோபி ரொம்ப‌ சலித்துக்கொண்டார். அம்மாக்களின் பதில்களைக் கேட்டு, உண்மையில் எனக்கு சலிப்புமில்லை, ஆச்சரியமுமில்லை.

அவர்கள் யதார்த்தமாக, அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அல்லது எதற்காக  வளர்க்கப்பட்டார்களோ அல்லது எப்படி வாழவேண்டுமென்று பயிற்றுவிக்கப் பட்டோர்களோ அதைத்தான் அப்படியே பிரதிபலித்தார்கள். அவர்களுக்கு சொல்லத் தெரியாமலெல்லாம் இல்லை. (சொல்வதற்கு இருந்தது அவ்வளவுதான்.) ஆனால், தங்களுக்கு தெரிந்ததைத்தான் மறைக்காமல் சொன்னார்கள்.

மேலும், அம்மாக்களோடு மகள்கள் முரண்பட்ட இடங்களில் ஒன்று சுவாரசியமானது. அதாவது, அம்மாக்கள்தான் தமக்கு தந்திரத்தையும், சூழ்ச்சியையும் கற்றுத்தருவது போலவும், மகள்களின் தூய உள்ளத்தை களங்கப்படுத்துவது போலவும் தோன்றும் இடம் அது.

ஒருவேளை , கோபி, மகள்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த அம்மாக்களை ஒரு முப்பது வருடங்களுக்கு முன்  சந்தித்திருந்தால்? ஒன்றுமில்லை, இன்று மகள்கள் சொன்னதையேதான் அவர்களும் சொல்லியிருப்பார்கள். (அல்லது இதே மகள்களை அவர்களது மகள்களோடு வரும்காலத்தில் நடத்திப்பார்கலாம்.) எனில், 'அப்படி இருந்த அவர்களை இப்படி மாற்றியது' எது? ஒருவர் மாறாமல் ஒற்றுமையாக ஒரே கருத்தாக அம்மாக்கள் சொன்னது எப்படி?

இதற்கான விடைகள் உமா மகேஸ்வரியின் நாவல்களில் கிடைக்கிறது. கூட்டுக்குடும்பம் என்றில்லா விட்டாலும், அருகருகே வசிக்கும் அண்ணன் தம்பி குடும்பங்கள். அவர்கள் குடும்பங்களின் நிகழ்வுகளே கதை.

தனராணி குழந்தைகளோடு கோயிலுக்க போயிருக்கிறாள். கடை வியாபார விஷயமாக‌ இடையில் வீட்டுக்கு வருகிறார்  செல்வமணி. கோயிலிருந்து திரும்பும் தனராணி,  கணவன் செல்வமணியை வேலைக்காரி செவனம்மாவுடம் பார்த்துவிட, குடும்பத்தில் ச.மு ‍ ச.பி ஆரம்பிக்கிறது.

குழந்தைகளின் மொழியில் 'சண்டைக்கு முன் - சண்டைக்கு பின்' அல்லது 'சிவனம்மா சண்டைக்கு முன் - சிவனம்மா சண்டைக்கு பின்'.

இந்த ஒரு நிகழ்வு, குடும்பத்தை, மூன்று குழந்தைகளின் சின்னஞ்சிறு மனதை, அவர்களது அன்றாட‌ வாழ்க்கையை, பொருளாதாரத்தை மாற்றுப்போடுகிறது என்பது ஒரு கதை.

கணவனை இழந்த ரேணுகாவை, குழந்தையில்லாத கிருட்டிணசாமி இரண்டாந்தாரமாக திருமணம் செய்துக்கொள்கிறார்.  வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அவர் பணக்காரராக இருப்பதால் , ரேணுகாவை மணமுடித்து தருவதில் அவளது அம்மாவுக்கும் தம்பிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ரேணுகா, அவளது மைத்துனனான மகாவை விரும்பி 'இருந்திருக்கிறாள்' என்பது  ஒரு கட்டத்தில் கிருட்டிணசாமிக்கு தெரிய வர, இவர்கள் வீட்டில் நடப்பது இன்னொரு கதை.

இன்னொரு அண்ணனது மகள் சுமி. தாயும் மகனுமாக இருக்கும் வீட்டில் மருமகளாக போகிறாள். சமையலறையிலிருந்து, படுக்கையறை வரை எல்லாமே தாய் ரத்தினத்தின் கைப்பிடிக்குள்தான். மகன் ராஜா,  தாயை மீறி எதையும் செய்துவிடவோ சொல்லிவிடவோ இயலாத கைதி.  இது மற்றொரு சுழல்.

தனராணியின் கதையில் வரும் நிகழ்ச்சி இது.  கணவன் விதி மீறி நடப்பதை பார்த்துவிட்டால் , மனைவி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் காதும் காதும் வைத்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறாள். வலியுறுத்தப் படுகிறாள். மீறி, நியாயம் கேட்க அவள் பெரியவர்களை அழைத்தபோது, 'நான் அப்படிதான் இருப்பேன்' என்று மீசை முறுக்குகிறது கணவனின் அகங்காரம்.

ஆனால், ரேணுகாவின் கதையிலோ, மகாவுடனான அவளது பழைய உறவு கணவனுக்கு தெரிய வரும்போது கணவன் நிலைகுலைந்து போகிறான். ஒரு ஓநாயைப் போல, இரவுகளிலும் பகல்களிலும் வீட்டிற்குள்ளேயே பழி வாங்க காத்திருக்கிறான். பழசை சொல்லிச் சொல்லியே அவள் மீது கை நீட்டுகிறான்.

நண்பனை வீட்டிற்கு அழைத்து வந்து மனைவிக்கு அறிமுகப்படுத்தி, அவர்களிருவரையும் தனித்து இருக்க வைத்து ஆழம் பார்க்கிறான். தன் மனைவிக்கு நண்பனை தொலைபேசச் சொல்லி வேவு பார்க்கிறான்.

இசைக்கப்படாத ராகம் என்று சொல்வது போல, இன்னொரு கதாபாத்திரம் பாவை. கிருட்டிணசாமியின் முதல் மனைவி. திருமணமாகி பதினேழு வருடங்களாக பிள்ளைக்கு ஏங்கி கோயில் கோயிலாக, மருத்துவமனை மருத்துவமனையாக தன்னை பலியாக்கிக் கொள்ளும் பூம்பாவை. கணவன் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறான் என்றதும் ஒரு மனைவிக்கு ஏற்படும் உணர்வுகளை, ஆற்றாமையை, தடுமாற்றங்களை பூம்பாவைக்குள் அழகாக காட்டியிருக்கிறார், உமா மகேஸ்வரி.

கணவனின், இரண்டாம் மனைவியை சந்திக்க செல்கிறாள், பூம்பாவை. பெருந்தன்மையாக அவள் சந்தித்து அளவளாவி பரிசுகள் கொடுத்துவிட்டு 'நீ சீக்கிரம் பிள்ளையை பெற்றுக்கோ' என்று சொல்லும்போது, 'அய்யோ பூம்பாவை, கிருட்டிணசாமிக்குதான் பிள்ளை பிறக்கும்  வாய்ப்பு இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்களே, உனக்கு இன்னும் தெரியலையே' என்று நமக்குதான் அடித்துக்கொள்கிறது.

முதலாளி செல்வமணியை, ஒன்றும் செய்யமுடியாத சிவனம்மாவின் கணவனுக்கு பலியாகிறாள்,அவனது மகள் சிறுமி ஜகி. அதிலிருந்து அவளுக்கு பேய்களும் பிசாசுகளும் பிடிக்கின்றன.  தலைமீது அடிக்கடி மணல் கொட்டுகிறது. வீட்டிற்குள்ளே அறைக்குள் பூட்டி வைக்கப்படுகிறாள். செல்வமணியின் வீட்டை பார்த்து கறுவிவிட்டு போகும் சிவனம்மாவின் கணவனை, இரண்டாம் பிள்ளை பேறுக்காக வீட்டுக்கு வரும் சுமி, ஜகியிடம் பழைய அக்காவாக அணுகும்போதுதான், நாம் பார்க்க முடிகிறது.

மனதுக்குள் ஒருத்தியை பார்த்து பொறாமைப்படும் பெண்கள், தங்கள் குடும்பத்தில் இன்னொரு பெண்ணுக்கு  பிரச்சினை என்று வரும்போது உதவிக்கொள்ள தயங்குவதில்லை. அது, பூம்பாவை :ரேணுகா உறவோ, அல்லது விஜிதாவும் மற்ற மூத்தாள்களுக்குள்ளான உறவோ அதை இயல்பாக அழகாக கதையில் சொல்லிச் சென்ற விதம், நாம் அதே சந்தரப்பங்களை நமது குடும்பங்களில் கண்டதை நினைவூட்டுகிறது.

நிகழ்வுகள், நாவலுக்குள்  தொடர்ச்சியாக சொல்லப்படாவிட்டாலும் கூட, அதன்  தொடர்கண்ணிகளை நமது கற்பனைக்கு விட்டுவிடுவது அழகாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லியிருந்தாலும் கூட வாசிக்கும்போது ஒருவேளை அலுப்பு தட்டியிருக்கும். 

ஆரம்பத்தில் தனித்தனியாக அறிமுகமாகும் கதாபாத்திரங்கள், போகப் போக ஒருவருக்கொருவர் உறவுகளாக இருப்பதை வாசிக்கும்போது நாம் அறிந்துக்கொள்வதுதான் ஒரு பெக் பசில் போல, ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த பின்னல் நடனத்தை காண்பது போல எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது!

 அதோடு, 'அஞ்சாங்கல் காலம்' நாவலை சுவாரசியப்படுத்துவது,  வாசகர்களுக்கு மட்டுமே வெளிச்சமாகியிருக்கிற கதைமாந்தர்களின் ரகசியங்கள்.  ரேணுகாவின் 'தற்கொலை'யும் அதில் அடக்கம்.

சற்று தொய்வாக உணர்ந்தது, இறுதியில் வரும் அத்தியாயங்களான‌ பவானியின் மீதான அழகேசனின் விடலைக்காதல். சில இடங்களின் எழுத்துப்பிழைகள். இவற்றை தவிர்த்தால், அஞ்சாங்கல் காலம், ஒரு
கலைடாஸ்கோப் போல, உள்ளிருக்கும் வளையல் துண்டுகள் மாறாவிட்டாலும் கோணங்கள் மாறும்போது வடிவங்கள் மாறுமே... அதுபோல், கதாபாத்திரங்கள் ஒன்றேயாயினும், அவர்களிடத்திலிருந்து பார்க்கும்போது மாறுகின்ற கோணங்கள்!

ஆணின் ஒரு சிறு செயலென்றாலும், அதனால் பாதிக்கப்படுவது பெண்ணின் வாழ்க்கையும், எதிர்காலமும்தான். யதார்த்தத்தில், இதனை பெரிதாக யாரும் கண்டுக்கொள்வதில்லையென்றாலும், எல்லாவற்றுக்கும் சேர்த்து பெண்ணே  கவனமாக இருக்க வலியுத்தப்படுகிறாள். பவானியின் பள்ளிவாழ்க்கை இதற்கு சரியான சான்று. சுமியின் குடும்பத்தில், ராஜாவின் இருதலைக்கொள்ளி நிலை இதன் மறுபக்கம். செல்வமணியின் மீது தவறிருந்தாலும், தனராணி 'அழுது ஆர்ப்பாட்டம்' செய்யாமல்'  அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்று சொல்கிறான். குடும்பமென்பது  ஒரு ஆக்டோபஸின் பல கைகள் போல. அதன் ஒவ்வொரு கையும், விதவிதமாக பெண்களின் கழுத்தையே இறுக்கியிருக்கின்றன என்பதை நாவல் போகிறபோக்கில் உணர்த்திச் செல்கிறது. 

உமா மகேஸ்வரியின் கவிதைகள் நீங்கலாக, பெரும்பாலான  அவரது (முதல் தொகுப்பு தவிர) சிறுகதைகளை,நாவல்களை வாசித்திருக்கிறேன். 'யாரும் யாருடனும் இல்லை'க்குப் பிறகு, எந்த தளத்தில் அவரது பெயரை பார்த்தாலும் அவரது எழுத்துகளை/புத்தகத்தை வாங்கி வாசித்திருக்கிகிறேன்.

முதல் நாவலில், ஓடிப்போன குணா சித்தப்பா போல, இங்கு மகா சித்தப்பா. தோட்டத்து முல்லைப்பூக்கள், குருவிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் பெண்கள். குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கும் வேலைக்காரர்கள். பெரிய வியாபார குடும்பங்கள். குழந்தைகளுக் கிடையிலான அதிக பிரசங்கித்தனமான உரையாடல்கள். இவையெல்லாம், ஒரு டெம்ப்ளேட் போல, இந்த நாவலிலும் தொடர்வதாக நான் உணர்வது எனது பலவீனமா அல்லது வாசிப்பின் பலனா என்று தெரியவில்லை.  :‍)

'அஞ்சாங்கல் காலம்' -   அஞ்சாமல் வாசிக்கலாம். :‍)

நாவல்: அஞ்சாங்கல் காலம்
உமா மகேஸ்வரி
வெளியீடு: வம்சி
பக்: 448
விலை: ரூ. 350

Saturday, March 28, 2015

சின்ட்ரெல்லா (2015) படத்தின் குறியீடுகளை கண்டுபிடிப்பதெப்படி?

"ஆச்சி, அந்த ஃபெய்ரி காட் மதர் வந்து ,ஃப்ர்ஸ்ட், எலா கிட்டா கேக்க மாட்டாங்க. ஃபர்ஸ்ட் அந்த ஸ்டெப் சிஸ்டர்ஸ்கிட்டே கேப்பாங்க. அவங்க குடுக்க மாட்டாங்க. அப்புறம்தான், ஃபெய்ரி காட்மதர், எலா கிட்டே கேப்பாங்க. " - பப்பு

"ஓ..இது எங்கே வந்துச்சு? நான் பார்க்கலையே? மிஸ் பண்ணிட்டேனா?"

"இல்லே..நான் சொல்றேன்..." - பப்பு

"ம்ம்..நீ முன்னாடியே பார்த்துட்டியா? யூ ட்யூப் ட்ரெய்லர்லே வந்துச்சா?"

(ஏன் அப்படி கேட்டேன்னா, அடுப்பு பக்கத்துலே படுக்கிற காட்சி வரும்போது, 'அவ மேலே சின்டர்லாம் படும். அதனாலேதான் அவ பேரு சின்டரெல்லாம்'ன்னு சொல்லியிருந்தா. அதனாலே டவுட். ):):)

"ம்ம்ம்...என் மைன்ட்லே வந்துச்சு...அதுக்குதான் உனக்கு சொல்லக்கூடாது. எங்க க்ளாஸ்லேயே, ஸ்கூல்லயே நாந்தான் இந்த மூவியை ஃப்ர்ஸ்ட் பார்த்துருக்கேன்" - பப்பு.

கட்.....

ஆட்டோவில் ஏறியதும்,

"ஆச்சி, ஆக்சுவலா அந்த ஸ்டெப் மதர் நல்லவங்கதான். க்ரூயல் கிடையாது. அவங்க ஃப்ர்ஸ்ட் அந்த வீட்டுக்கு வந்ததும், நல்லா எல்லார்க்கிட்டேயும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க இல்லே." - பப்பு

"ம்ம்..ஆமா..ஆனா, அவங்க எலாகிட்டே நல்லா நடந்துக்கலையே?"

"அதான்..அதுக்கு அடுத்து என்னா நடக்கும்? எலாவோட அப்பா ஊருக்கு போறதுக்கு முன்னாடி எல்லா சொல்வாரு? டோன்ட் ஃபுல்லி டிபென்ட் ஆன் தெம். அப்புறம், அவங்க அம்மாவையும்,வீட்டை பத்தியும்தானே சொல்றாரு.அதை ஸ்டெப்மதர் ஓவர்ஹியர் பண்றாங்க இல்லே? " - பப்பு

"ஆமா?"

"அப்போ, How would she feel? she will feel bad know? ஆக்சுவலா அப்போ கூட கெட்டவங்களா மாறலை"

"ம்ம்?"

"அவங்க அப்பா எலாக்கு மட்டும் அந்த பிராஞ்ச் குடுத்து அனுப்புவாரு இல்லே. அப்போ, அவங்க ஸ்பெட் சிஸ்டர்ஸ்,எனக்கு பேரசால்ன்னு கேப்பாங்கன்னு இல்லே. " - பப்பு

"ம்ம்ம்"

"அப்போ, அவங்க அம்மாவுக்கு எப்படி இருக்கும்? அதனாலேதான் அவங்க எலாக்கிட்டே அப்படி நடந்துக்கறாங்க. உனக்கு புரியலையா ?" -பப்பு

"ம்ம்..இல்லேப்பா...நீ சொன்னப்புறம்தான் புரியுது"

"இப்போ, நான் இருக்கேன். இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க. அப்போ, அவங்களுக்கு மட்டும் குடுத்துட்டு, எனக்கு நான் கேட்டது கொடுக்கலைன்னா உனக்கு எப்படி இருக்கும்?அதுமாதிரிதான்." - பப்பு

"ம்ம்..உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?  க்ளாஸ்லே டிஸ்கஸ்...  ஹேய்..ஸ்கூல்ல ஃப்ரென்ட்ஸ் கதை சொன்னாங்களா?"

"ம்ம்...உனக்கு சொல்லியிருக்கவே கூடாது. நீ புரிஞ்சுக்காமயே கிடன்னு விட்டிருக்கணும்." - பப்பு

கட்.....


"உனக்கு, ஏன் அந்த ஃபெய்ரி காட் மதர், பால் குடிக்கும்போது கீழேல்லாம் விழுந்துச்சுன்னு தெரியுமா?" - பப்பு

"வேகமா பசியிலே அவசரமா குடிச்சா அப்படிதான் விழும்."

"எல்லாருக்கும் அப்படிதான் விழுமா? நமக்கு அப்படிதான் விழுதா?" - பப்பு

"ஆமா,  நாம ரொம்ப தாகமா இருக்கும்போது தம்ளர்லே,பாட்டில்லேருந்து குடிக்கிறோம். மேலேல்லாம் கொட்டிக்கறோம் இல்லே...அதுமாதிரிதான்"

"இல்லே...அது உனக்கு புரியலை. Fairy god mother was not hungry. she was checking her kindness.  அதனாலேதான், அது வாயிலேருந்து விழுது" - பப்பு

"ஓ...ஆமா, பப்பு, இப்போதான் புரியுது. இதெல்லாம் யார் சொன்னா உனக்கு?"

அப்புறம், அவ பார்த்த பார்வையிலே வீடு வரைக்கும் யாருமே பேசிக்கலை. :))

வீட்டுக்கு வந்து இன்னொரு பல்பும் வாங்கினேன். எப்படி அந்த ஸ்டெப்மதர் கரெக்டா அவளோட ஷூவை எடுத்தாங்கன்றதை பத்தி. அதெல்லாம் இங்கு விலாவரியாக சொல்லப்படமாட்டாது.

*****

இதனால், அறியப்படும் நீதி,தற்போது வந்திருக்கும் "சின்ட்ரெல்லா"  புதிய‌ படத்தை உங்கள் ஏழு வயதுக்கு மேலிருக்கும் 'பெண்' குழந்தைகளோடு கண்டு களிக்கவும்.. பார்த்துவிட்டு, உங்களுக்கு புரியாத காட்சிகளை அவர்கள் விளக்கி னால், தயவுசெய்து ஒளிவுமறைவு இல்லாது அந்த பல்புகளை ப்ளஸ் விட்டு  பிரகாசமாக‌ எரிய வைக்கவும்.ஹிஹி

 

மற்றபடி, படத்தை பற்றி என்ன சொல்ல? தெரிந்த கதைதானே! 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பிய வாழ்க்கையின் அழகான தருணங்களை  மட்டும் நேரில் காண்பது போல இருக்கிறது. 'பால்' நடனத்தின் போதும் சரி,ட்யூக்கினுடனான பேச்சுகளும் திட்டங்களும் சரி, மாற்றாந்தாயின் பல்வித உணர்ச்சிகளை கண்டபோது, நான் புரிந்துக்கொண்டது, தற்கால அம்மாக்களின் குழந்தைகளைக் குறித்த பதட்டமும்,கவலையும் கொஞ்சமும் புதிதல்ல, அது  சின்ட்ரெல்லா காலத்து பழமையானது என்பதுதான். :‍)

Tuesday, March 24, 2015

H...A...M...P...I - வரலாற்றின் வீதிகளில் ஒரு பயணம்


'போய் இறங்கினவுடனே முதல்நாளில் அங்கே போகணும், இதை பார்க்கணும்' என்ற திட்டத்தோடுதான் போய் இறங்கினோம். ஆனால், அங்கே சென்றதும்  எங்கள் திட்டமெல்லாம் போன இடம்  தெரியவில்லை...எங்கு நோக்கினும் திரள் திரளாக குவித்து வைத்ததுபோன்ற‌ கற்பாறைகளையும், அந்த ஆற்றையும் பார்த்து பிரமித்து போனதில், முதல்நாள் திட்டமெல்லாம் காற்றில் பறந்தே போனது.


நினைவு சின்னங்களை பார்க்கவேண்டியதை விட, பார்த்து பார்த்து பருக வேண்டியது ஹம்பியின் நிலக்காட்சி என்று புரிய, ஹம்பிக்கு எங்களை ஒப்புக்கொடுத்தோம். ஹம்பியும், எங்களை தத்தெடுத்துக் கொண்டது.

திருவிழாவில் தொலைந்தவர்கள் போல முதல்நாள் முழுவதும் விருபாஷா கோவிலையும் ஆற்றையும், சூழ்ந்திருந்த மலைப்பாறைகளையும்  பார்த்து பார்த்து பிரமித்துபோனோம். 'இந்த பூமியில் என்ன நடந்திருந்தால், இந்த கற்பாறைகள் இப்படி ஆகியிருக்கும், எந்த விதியின் கீழ் இந்த பாறைகள் இப்படி ஒன்றன்மீது ஒன்று அமர்ந்திருக்கின்றன' என்று கிறுகிறுத்துபோனோம்.


தலைக்கு பத்து ரூபாய் கொடுத்து  படகில் ஆற்றைக்  கடந்து மறுபக்கம் போனோம். விருபாபூர் கட்டே (தீவு) வீதிகளில் அலைந்து திரிந்து  தெருவோர கடைகளை வேடிக்கை பார்த்தோம். இளநீர் குடித்தோம். பாறை உருண்டைகளும், ஆறும், காற்றும் பழகிய பின் மெல்ல எங்கள் இயல்புக்கு வந்தோம். அடுத்த ஆறு நாட்களும் ஏதோ ஒரு புராதன காலத்து ஊரில் அறுநூறு ஆண்டுகள் வசித்தது போல்தான் இருந்தது.

பொடிநடையாய் நடந்து மலைகளையும், கல்மண்டபங்களையும், பழங்கால சந்தைகள் நடந்த பஜார்களையும் கடந்தோம்.  ஆட்டோக்களையும், கைடுகளையும் கவனமாக தவிர்த்தோம்.

கைகளில் இருந்தவை, லாங்க்ஹர்ஸ்ட்டின் புத்தகம் ஒன்றும், நூனிஸின் 'விஜயநகரப் பேரரசு' மற்றும் தொல்லியல் துறையின் ஹம்பி கையேடு.  கேமிரா, புத்தகங்களை முதுகில் சுமந்துக்கொண்டு நாடோடிக் கூட்டத்தில் நாங்களும் சிறு புள்ளிகளானோம்.      

நதிக்கரை வழியாக நடந்தே விட்டலா கோவிலை அடைந்தோம். 'பழங்காலத்தில் குதிரைகள் வழியாக  மக்கள் இந்த வழியை கடந்திருப்பார்கள்' என்று கற்பனை செய்தபடி  பாறைகள், இடிபாடுகள் வழியாக இரண்டு கிமீ நடந்து தீர்த்தோம். 

விட்டலா கோவில், மண்டப தூண்களின் குதிரை மீதமர்ந்திருந்த வீரர்களின் முகங்களிலெல்லாம்  கிருஷ்ணதேவராயரை தேடினோம். தலையில் பெரும் கொண்டையிட்டு , கைகூப்பி நின்ற சிலைகளையெல்லாம் கிருஷ்ணதேவராக எண்ணி பூரித்தாள், பப்பு அவள் பங்குக்கு.  தெனாலிராமனை தேடியலைந்தவளுக்கு இதுதான் இலுப்பைப்பூ.

விட்டலா கோவிலின், கல்தேரின் சக்கரங்களின் அச்சை பிடித்து தேரை நகர்த்திவிட‌ கடும்முயற்சி(!) செய்தோம். இறுதியில், சுழற்றுவது போல் புகைப்படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு சக்கரத்தை விட்டுவிட்டோம். தார்வாடிலிருந்தும், பெல்லாரியிலிருந்தும், கிராமப்புற கர்நாடகப் பகுதியிலிருந்தும் வந்திருந்த மாணவர்களின் ஆசைக்கிணங்க போட்டோக்கள் எடுத்துத்தந்தோம். கொண்டு வந்திருந்த ஆரஞ்சு பழங்களை தீர்த்துவிட்டு, திரும்ப நடையை கட்டினோம்.

ஆற்றைக்கடந்து, உணவகங்களை தேடிச்சென்றோம். கவுதமி உணவகத்தில், பீட்சாவும், சிக்கன் லாஃபாவும் உண்டோம். திரும்பவும் படகு சவாரி.  கோவில் யானை லஷ்மி தண்ணீர் குடிக்க வந்திருந்தது. தண்ணீர் குடிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு அதன்பின்னாலேயே சென்றோம்.

ஹேமகுட்டா மலைப்பகுதியின் உச்சிக்கு ஏறி, சூரியன் ஒரு சிவப்புக்கோளமாக மறைவதைக் கண்டோம். தெரியாதவர்கள்,  தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. ஒரு சிறு புன்னகை மட்டுமே போதுமாக இருக்கிறது. கும்பலாக அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு அவரவர் வழி நடந்தோம்.

மிகவும் பிரசித்தி பெற்ற 'மேங்கோ ட்ரீ' உணவகத்தில் ஆலிவ் பீட்சாவும், கோபி மஞ்சூரியனும், சப்பாத்திக் கறியும் உண்டோம்.  தெருவோர லம்பாடிகளிடம் பேரம் பேசி கைக்கு சோழி மாலை, ஒற்றைக்காலுக்கு கொலுசு, கழுத்தணிகள் வாங்கி அணிந்துக்கொண்டோம். வீட்டுக்கு திரும்பும் வரை கழற்றாமல்,  பப்புவும் நானும்  ஒரு மினி லம்பாடி குடும்பமாகவே மாறிப்போனோம்.


காலையில் எழுந்து, சூரிய உதயத்தை பார்த்து, நேராக ஆற்றுக்கு சென்று  ஏதாவதொரு படியில் அமர்ந்துக் கொள்வோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஆறு உயிர் பெறுவதை காண்பதுதான் எவ்வளவு சுவாரசியமான காட்சி!  ஹம்பி பேருந்து நிலையத்தில் இறங்கும்  பயணியின் கால்கள் எப்படித்தான் ஆற்றுக்குச் செல்லும் வழியை தாமாக அறிந்துக்கொள்கின்றனவோ! வரிசையாக வரிசையாக மாணவர்களும், சுற்றுலா பயணிகளும்  ஆற்றை நோக்கி ஒவ்வொரு நாளும் வந்தபடி இருக்கின்றனர்.

"எரடு ப்ளேட் குண்ட்பங்கலா கொட்ரீ" "எரடு பூரி,  சாய் பேக்கு" "மிர்ச்சி எரடு கொட்ரீ" என்று ஏதோ கன்னடாவையே கரைத்துகுடித்தமாதிரி தெருவோரக்கடைகளில் சுடச்சுட குழிப்பணியாரமும், டீயும், பச்சைமிளகாய் பஜ்ஜியும் வாங்கி காலை உணவை சாப்பிட்டோம். காசு கொடுக்க எத்தனிக்கும்போது, அவர்களும் கன்னடத்திலேயே விலையை சொன்னபோது திருதிருவென்று விழித்து 'இங்கிலீஷ் மே போலியே' என்று அசடு வழிந்தோம்.


ஹேமகுட்டா மலைமீதுள்ள கோவில்களில் ஏறி இறங்கி, எங்கிருந்து பார்த்தாலும், முழு ஹம்பியும் தெரிவதை பார்த்து, ஆளுக்கொரு கேமிராவில் எல்லா கோணங்களிலும் புகைப்படங்களாக எடுத்து தள்ளினோம். கோயில் கோபுரம், அன்று எங்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டதை அந்த விருபாஷரே அறிவார்.

மலையின் மறுபக்கத்துக்கு இறங்கி, கடுகு கணேசாவை தரிசித்து சாலைக்கு வந்தோம். காணாததை கண்டது போல, தர்பூசணி பத்தைகளை வாங்கி தெரு வோரத்திலேயே  தின்று மலைப்பயணத்தின் தாகம் தணித்தோம். அடுத்து, கிருஷ்ணா கோவிலை அடைந்து தூண்களை ஆராய்ந்தோம்.

'இது கிருஷ்ண தேவராயா கட்டினது, இங்கேதான் அவர் நடந்து வந்திருப்பாரு' என்றும் 'இது ஒரிசா வார்லே ஜெயிச்சதுக்காக கட்டினது, இதுலே இருந்த கிருஷ்ணா ஒரிசாலேருந்து கொண்டு வந்து வைச்சது' என்றும் 'அந்த பால‌கிருஷ்ணர் சிலை இப்போ  சென்னை மியூசியத்திலே இருக்கு' என்றும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்து வாசித்ததை பரிமாறிக்கொண்டோம்.

கிருஷ்ணா கோவிலிருந்து வெளியேறினோம். செடியோடிருந்த பச்சை கொண்டை கடலைகளை   வாங்கிக்கொண்டு, உரித்து சாப்பிட்டபடி லஷ்மி நரசிம்மரைக் காண கரும்புவயல் வழியே நடந்தோம். எங்கள் கால்களுக்கு  அந்தப்பக்கம், பழங்காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் துங்கபத்திராவின் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது.


அச்சுதராயர் கோவில்,நெடிய  சூலே பஜார் மண்டபத்தில் தங்கமும், வைரமும் விற்பதாக கற்பனை செய்துக் கொண்டோம்.  ராணிகளும், இளவரசிகளும்  நகைகள் வாங்குவது போல,  ஏதோ நாங்களே வைரமும், வைடூரியமும் வாங்க வந்திருப்பதாக கருதிக்கொண்டோம்.  


அரண்மனை பகுதிகளை ஏதோ வரலாற்று ஆய்வாளர்களைப் போலவே அலசி ஆராய்ந்தோம்.  'இதோ ஆயிரங்கால் மண்டபம் இருந்த இடம்' '"அஷ்டதிக்கனா" க்களின் இடம்' 'இங்கதான் நவராத்திரி' 'வெளி நாட்டுக்காரர்கள் ராஜாவை சந்திச்ச‌து'  ' டைனிங் ஹால் இங்கே இருக்கு'  'அது சங்கமா டைனஸ்டி அரண்மனை'  என்று  நூனிஸும், பயஸும்,  நிக்கோலா காண்டியும் லாங்ஹர்ஸ்ட்டும் தடி எடுத்துக்கொண்டு ஓடிவரும் அளவுக்கு தேடித் தேடி ஆராய்ச்சி செய்தோம். இறுதியில், களைத்துப் போய், பிரமிடு போல இருந்த இடத்தில்  ராஜாக்கள் போல அமர்ந்து பாவனை செய்தோம். 


கொஞ்சம் இளைப்பாறியதும், ஒரு அஸ்திவாரத்தருகே ஓடிப்போய், 'இங்கதான் தெனாலிராமன் தொங்குனாரு' என்றாள் பப்பு. 'தொங்குனாரா' என்று நாங்கள் அதிர்ந்ததும், 'இல்லேல்ல..தூங்கனாருன்னு சொல்ல வந்தேன். அப்படியே, தங்குனாருன்னு வந்துச்சு..அதான் சேர்த்து சொல்லிட்டேன்' என்று சமாளித்தாள்.

ரகசிய அறையில் இறங்கி, இருட்டுக்குள் தட்டுத்தடவி நடந்து, படிகளை கண்டதும்'ஹப்பாடா' என்று ஓடிவந்து மேலேறினோம். 'வைரங்களும், விலைமதிப்பற்ற கற்களும் பதித்த நாற்காலி அங்கேதான் வைக்கப்பட்டிருந்தது' என்று  செட்டார் எழுதிய புத்தகத்தில் வாசித்ததை நினைவு கூர்ந்தோம். ராணிக்களின் அரண்மனைகளிலும், லோட்டஸ் மஹாலிலும் நிஜ ராணிகளைப்போலவே இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு நடைப்போட்டோம். ஹசாரே ராமா கோவிலில் ராமாயணத்தை கார்ட்டூன் போல பார்த்து கதை சொல்லிக்கொண்டோம்.

கோவிலுக்கு எதிரில் இருந்த பான் சுபாரி பஜாரில் வெற்றிலை கிடைக்குமா என்று தேடிச் செல்ல ஒரு தம்பதியினர் சண்டையிட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு  ஓசையில்லாமல் நழுவினோம். குதிரைகளும், யானைகளும் சென்று வந்த ராஜபாதையில், ஆட்டோவுக்கு காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் லெமன்  கோலிசோடா அருந்தினோம்.


மிஞ்சிய நேரங்களில், சைக்கிள் எடுத்து  ஹம்பி பஜாரை சுற்றினோம்.பப்புவுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லி அவளை திகிலடைய வைத்தேன். 'சைக்கிள் சைக்கிள் எனக்கு கியர் சைக்கிள்' என்று குதித்துக்கொண்டிருந்தவளை சைக்கிள் எடுக்கலாமா என்றாலே அவள் ஓடிப்போகும் அளவுக்கு  செய்ததுதான் என் சாதனை.  

மூன்று நாட்கள் ஹம்பி, ஒருநாள் பாதாமி, பட்டடக்கல், முடிந்தால் கோவா என்று மங்கலான திட்டம் வைத்திருந்தோம். ஆனால், ஹம்பி எங்களை முற்றும் முழுதுமாக ஆக்கிரமித்துக்கொண்டது. மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் என்று திட்டமிட்டு பார்க்க முடியாத இடங்களில் ஹம்பியும் ஒன்று. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்...ஹம்பியை அடைந்தால் போதும். பயணிக்க வேண்டிய பாதைகளை ஹம்பி பார்த்து கொள்ளும்.  ஒவ்வொருநாளும் வாசித்து வாசித்து, வாசித்த‌ இடங்களை நேரில் கண்டு உணர்ந்தது சுவையான அனுபவம்.

துங்கபத்திரா முழுவீச்சோடு  நடைபோடுவதையும், இன்னும் அதிகமாக ஹம்பியை அறிந்துக்கொள்ளவும் மீண்டுமொருமுறை, மழைக்காலத்தில் வர வேண்டுமென்று மனதை திடப்படுத்திக்கொண்டுதான் வேண்டியிருந்தது.