Thursday, November 18, 2010

வேளச்சேரி டைம்ஸ் : இது எங்க ஏரியா, உள்ள வராதே!!

பிரபலமான கால் சென்டர்களும், பிபிஒகளும், பிரபல ஐடி கம்பெனிகளுமாக உலகத்தின் சேவைப் பணித்தளம். NRI க்களின் சொர்க்கபூமி. இந்தியாவில் மிக மலிவாகக் கிடைக்கும் மனித வளத்திற்காக/உழைப்பிற்காக ஐடி கம்பெனிகள் கோட்டைகட்டியிருக்கும் இடம்.

வேளச்சேரி.

வேளச்சேரியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வீடு தேடினால் கிடைக்கும் அனுபவங்களோ முற்றிலும் வேறு.

கடந்த சில வாரங்களாக, எனது கல்லூரித் தோழி லலிதாவிற்காக வீடு தேடி அலைந்ததே சாட்சி. ஒரு தரகர் மூலமும், விளம்பரங்களின் மூலமும் இப் பகுதியில் இருந்த வீடுகளையும், பிஜிகளையும் பார்த்தோம். (பிஜி/ ஹாஸ்டல்களைப் பற்றி பிறிதொரு சமயம்)

வீட்டு வாடகைகளும், அட்வான்ஸ்களும் சொல்லப்பட்டதைப் பார்த்தபோது ஏடிஎம்மை கடத்தாமல் போனால் வேலை நடக்காது போல தோன்றியது. ஏழாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை வாடகை சொல்லப்படும் வீடுகளுக்கு ஐம்பதாயிரத்துக்குக் குறையாமல் அட்வான்ஸ் இல்லை.வாடகையைப் பொறுத்து, ஐம்பதிற்கும் எழுபத்தைந்திற்கும் இடையில் அட்வான்ஸ் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறது. ஒரே தவணையில், வீட்டை ஆக்கிரமிக்கும் முன்பே தர நேரிடலாம். அல்லது அதிகபட்சம் இரண்டு தவணைகளில் தரலாம். அது சில வீட்டு ஓனர்களைப் பொறுத்து மாறுபடும். மின்விசிறி மற்றும் விளக்குகள் எல்லாம் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை ஆக்கிரமிப்பதற்கும் முன்னால் சுத்தம் செய்துத் தருவதற்கும் காசு கேட்டனர் ஒரு சிலர். சமையலறைகள் பலகணி அளவே இருக்கின்றன. அதில் பாதி இருக்கிறது பாத்ரூம்கள். வெளிச்சம் எட்டிக்கூடப் பார்க்காத அறைகள். ஆனால், வாடகை மட்டும் பத்தாயிரத்துக்குக் குறையாமல்.

அது ஒருபுறமிருக்க, ஒரு சில அபார்ட்மென்ட்களின் ஓனர்கள், நாம் சாப்பிடும் மெனுவிலிருந்து, வீட்டில் எத்தனை பேர் வசிக்கலாம், கெஸ்ட்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வருகை நேரம் முதற்கொண்டு சகலத்தையும் தீர்மானிக்கிறார்கள். அதுவும், நீங்கள் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், குடும்பமற்று தனியாக இருக்கும் பட்சத்தில் தர்மசங்கடமான கேள்விகளை நுணுக்கி நுணுக்கி கேட்டு தகவலறிகிறார்கள். கணவர் வேலை பார்க்கும் கம்பெனி, கணவரது ஊர், அவரது உறவினர்கள் வந்து செல்வார்களா, நீங்கள் அவர்கள் வீட்டுக்குச் செல்வீர்களா என்பதில் தொடங்கி ஆயிரம் வாலா சரவெடிகளாக நீள்கிறது கேள்விகள்.

இந்தக் கேள்விகளிலிருந்து புரிந்ததெல்லாம் ஒன்றுதான். தனியாக வாழ விரும்பும் பெண்ணுக்கென்று நம் சமூகத்தில் சில நியதிகள் இருக்கின்றன. அவற்றை அவள் கடைபிடித்துதான் ஆகவேண்டும். தாமதமாக வீடு திரும்பக் கூடாது. விருந்தினர்கள் உங்கள் தந்தையாகவோ அல்லது தமையனாகவோதான் இருக்க வேண்டும்,ஏன் தனியாக இருக்க வேண்டும், பிரச்சினைக்கு என்ன காரணம் ...இன்ன பிற..

இவ்வளவும் தெரிந்துக் கொண்டு சரி, கஷ்டத்தை புரிந்துக் கொண்டு (!) வாடகையில் ஏதாவது குறைப்பார்களா என்றால் சொல்வதெல்லாம் அமெரிக்க டாலர்களை கணக்கில் கொண்டுதான் சொல்வார்கள் போல இருக்கிறது.

ஒரு சிலர், "வீட்டுலே நீங்க கண்டிப்பா பூஜா பண்ணனும்" என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்கள்.

நாங்கள் பார்க்கக் கிடைத்தவற்றில் பெரும்பாலும் அபார்ட்மென்ட்டுகள்தான். அதாவது, ஒரு கட்டிடத்தில்‍ ஆறு வீடுகள் அல்லது எட்டு வீடுகள் கொண்டவை. அதில் சில போர்ஷன்கள் ஒருவருக்கே சொந்தமாக இருக்கின்றன. தாய்-தந்தையின் பெயரில் ஒன்றும், அவர்களது மகனின் பெயரில் ஒன்றுமாக.அந்த மகன்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகியிருக்கிறார்கள். பக்கத்து போர்ஷனில் வசிக்கும் பெற்றோர், இந்த வீட்டை மெயிண்டெய்ன் செய்கிறார்கள்.

இதுபோன்ற அமைப்பில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வீடுகளைப் பார்த்தோம். வீட்டைப் பார்த்துவிட்டு, சம்பிரதாயப் பேச்சுகளின போது, ஓனர்கள் எல்லோருக்கும் ஒரே கேள்விதான், ’லலிதா ஏன் தனியாக வசிக்கப் போகிறாள், குடும்பம் இல்லையா?’

அமெரிக்காவிலிருந்து கணவனுடன் பிரச்சினை காரணமாக தனியாக வந்து விட்ட லலிதா, தற்போதுதான் கேரியரை ஆரம்பித்திருக்கிறாள். உண்மை நிலையைச் சொன்னதும் 'சாரி, ஃபேமிலிக்குத் தான் வீடு தருவோம்"' என்று வாசல் நோக்கி கை காட்டப்பட்டோம்.

படித்து பதவியில் இருந்து ரிடையர்டு ஆனவர்கள் போலத்தான் இருக்கிறார்கள். தங்களது மகன்களை படிக்க வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு அவர்கள் லிவிங் டு கெதராகக் கூட வாழலாம். இங்கு மட்டும், நமது லலிதா தனியாக வசிக்கக் கூடாது.

லலிதாவும் அவளது குழந்தையும் குடும்பம் இல்லாமல் வேறு என்ன?
கணவன் இல்லாமல் குழந்தை மட்டும் இருந்தால் அது ஃபேமிலி இல்லையா?

வீட்டு ஓனர்கள் எல்லாம் கெட்டவர்கள், வீடு தேடிச் செல்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. அவர்கள் டெனன்ட் ‍இன் பாதுகாப்பிற்காகதான் இதெல்லாம் அறிய விரும்புகிறார்கள் என்பதெல்லாம் கூட‌ ஓக்கேதான். பாதுகாப்புக்காக சில கேள்விகளை கேட்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டால் கூட, தனிப்பட்ட தகவல்களை கேட்பது எவ்விதத்தில் நியாயம்? அநாகரிமாக இல்லையா?

தனியாக வசிக்க வீடு தேடும் ஆணுக்கும் இதே பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் மீதும் சந்தேகக் கண்கள் பாயலாம்.

ஆனால், தனியாக வசிக்கும் பெண்கள் மீதான சந்தேகங்கள்,பிம்பங்கள் வேறு மாதிரியானவை.

வீட்டு ஓனர்கள் பெரும்பாலும் வயதான ஆண்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, ஆண் துணையில்லாமல் தனியாக வசிக்கப் போகும் பெண், அதுவும் கணவனை விட்டு வந்த பெண் சரியான கேரக்டர் கொண்டவளாக இருக்க முடியாது. அல்லது அவர்களால் பெண்கள் தனியாக வசிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஏனெனில், இந்திய கலாச்சாரத்தில் இதற்கெல்லாம் இடமில்லை.

அதுவும், கணவன் இல்லாவிட்டால் பெற்றோராவது அல்லது பெற்றோரில் ஒருவராவது உடன் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், அவர்கள் விதவைகளாக இருக்க வேண்டும். விவாகரத்தானவர்களுக்கோ அல்லது திருமணம் செய்யாமல் தனித்து வாழ விரும்பும் பெண்களுக்கோ வீடு கொடுகக் எந்த வீட்டு ஓனரும் தயாரில்லை. எந்நிலையிலும் ஒரு பெண் தனியாக இருந்துவிடக் கூடாது.

பாதுகாப்பு (!) நிமித்தம் என்று சொல்லிக்கொண்டாலும் ஒரு பெண் தனித்து வாழ இடம் கொடாத சமூகம், அது கட்டிக்காப்பாற்றும் கலாச்சாரம்.....

இது ஏதோ எங்களுக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவம் மட்டுமில்லை. ஆந்திராவிலிருந்து வந்து தங்கியிருக்கும் மீனு, வீடு தேடி அலுத்து போய் கிடைக்காமல் தற்போது ஹாஸ்டலிலே தங்கியிருக்கிறார்.

அவர் சொன்னது, “வீட்டு ஓனர்கள் கேட்கும் முதல் இரண்டு முக்கியமான கேள்விகள், குடும்பத்துடனா அல்லது தனியாக வசிக்கப் போகிறீர்களா? இன்னொன்று, சைவமா அசைவமா? இவற்றைப் பொறுத்துதான் வீடு கிடைக்கும். அதிலும், தனியாக வசிப்பதாக இருந்தால் வீடு நிச்சயமாகக் கிடைக்காது.”

வீட்டு ஓனர்கள்/அபார்ட்மெண்ட் கமிட்டியிலிருப்பவர்க்ள் கலாச்சார காவலர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதுதான் தனியாக தங்கியிருக்கும் பெண்களின் வாதமாக இருக்கிறது. இத்தனை மணி நேரத்திற்குள் வரவேண்டும் என்று ரூல் போடுகிறார்கள். சில சமயங்களில், திடீரென்று வீட்டிற்குள் புகுந்து, வந்திருக்கும் விருந்தினர்கள் யாரென்று அறிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். சுத்தமாக வைத்துக்கொள்கிறார்களா என்று இன்ஸ்பெக்‌ஷன் செய்கிறார்கள். மாடிகளைப் பூட்டி வைத்துவிடுகிறார்கள். 'பிறந்தநாள் கொண்டாட்டங்கள்/ பார்ட்டிகள் போன்றவற்றிற்கு இங்கு அனுமதி இல்லை' என்றும் கூறி விடுகிறார்கள்.

குறித்த தேதியில் வாடகைப் பணம் வந்தாக வேண்டும் என்று கட்டளையிடும் ஓனர்கள் கூட உண்டு. வருடாவருடம் வாடகையை ஏற்றுவது, வாடகை வீட்டிற்கு யூனிட்டிற்கு தனியாக மின்கட்டண சார்ஜ் வசூலிப்பது, அலுவலகத்திற்கு போன் செய்து அங்குதான் வேலை செய்கிறாரா என்று உறுதிபடுத்திக் கொள்வது என்று சொல்லப்படாத இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் நுழைய விரும்பவில்லை. ஒரு பெண் தனியாக வீடெடுத்து தங்குவதற்கு வரும் தடங்கல்கள் ,தனியாக வாழ முடிவெடுத்திருக்கும் பெண் குறித்து ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பங்கள் பற்றி தான்....

நாமிருப்பது வேளச்சேரிதானா அல்லது அமெரிக்காவின் ஏதாவது அவென்யூவா என்று குழப்பம் வருமளவிற்கு மெக்டோனால்டும், கேஎஃப்சியும், டோமினோஸ் பிட்ஸாவுமாக மிரட்டும் வேளச்சேரியில், தனியாக வாழும் பெண்ணிற்கு வீடில்லை என்பது ஏற்றுக்கொள்ள கொஞ்சமல்ல, நிறையவே கஷ்டமாக இருக்கிறது.

திருமணமோ, லிவிங் டு கெதரோ...வடிவம் எதுவாக இருந்தாலும் அடிமையாக இருப்பது/பாதிக்கப்படுவது என்னவோ பெண்தான். அதிலிருந்து விடுபட்டு தனியாக வாழ நினைக்கு பெண்ணுக்கும் நமது கலாச்சாரத்தில் இடமுண்டா?

திருமணமாகாத பெண்கள் ஒன்றாகவோ அல்லது ஆண்கள் ஒன்றாகவோ தங்கிக்கொள்வதற்கு இடம் கொடுக்கும் வேளச்சேரியும், இந்த சமூகமும்
தனித்து வாழ விரும்பும் பெண்களுக்கு சொல்ல வருவதெல்லாம் இதுதான்....

இது எங்க ஏரியா, உள்ள வராதே!!

(வேளச்சேரியில் மட்டுமல்ல, சென்னையில், ஏன் பல வெளியூர்களில் கூட இதுதான் யதார்த்தமாக இருக்கக்கூடும். வேளச்சேரியில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இது....)

Wednesday, November 17, 2010

அந்த "தாயை" சந்திக்க விரும்புகிறீர்களா?

உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் அம்மா வசதியாக சல்வார் அணிந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்களா? 'எதுக்கு இவ்ளோ கஷ்டபடறீங்க இந்த நீளமுடிய வைச்சுக்கிட்டு, கட் பண்ணுங்க‌' என்று சொல்லியிருக்கிறீர்களா? 'யாராவது ஏதாவது சொல்வார்கள்' என்பதற்காக சிரமம் கொடுத்தாலும் தலைமுடியை குறைக்காமல் இருப்பவரா உங்கள் அம்மா?

அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது.

பெரிம்மாவும், அம்மாவும் மாடர்னாக இருக்கவேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன். பெரிம்மா பொட்டு வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். நான் சைக்கிள் ஓட்டும் வயதில்,அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டவேண்டுமென்றும், ஸ்கூட்டி ஓட்டியபோது அவர்களும் ஸ்கூட்டி ஓட்டவேண்டுமென்றும் சண்டை போட்டிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது 'சைக்கிள் ஓட்டுங்க' என்று அம்மாவை நானும் குட்டியும் விழ வைத்து முழங்கையில் காயம் வர வைத்திருக்கிறோம். 'டீச்சர்னா கொண்டைதான் போடணுமா, குட்டி முடிலே கூட க்ரோக்கடைல் க்ளிப் வைச்சு கொண்டை போடலாம்' என்றெல்லாம் முடியை வெட்ட ஐடியா செய்திருக்கிறேன். 'ரிடையர் ஆகிட்டு என்கூடதானே இருப்பீங்க, அப்போ நான் சொல்றதைதான் கேக்கணும்' என்று அதிகாரம் செய்திருக்கிறேன்.

பெரிம்மா, எண்ணத்தில் எனது நண்பர்களின் அம்மாக்களைவிட, முற்போக்காக இருந்தாலும், தோற்றத்தில் பழமையானவரே. எந்த சமூகக்கட்டுபாடுகளையும், அதன் நிழல் கூட என்மேல் படாமல் வளர்த்த பெரிம்மா, நான் கல்லூரி முடிக்கும் தருவாயில்தான் பொட்டிடவும், தலைமுடியை சிறிதாவது வெட்டவும் முன்வந்தார். ஏனெனில், அப்போது அவர் 45 வயதை தாண்டியிருந்தார். 'வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு, இந்த அம்மா இப்படி ட்ரெஸ் பண்ணிக்குது' என்று அந்த வயசுக்கு, இதற்கு மேல் எந்த சமூகமும் எதுவும் சொல்லவிட முடியாதில்லையா!

தோற்றத்திற்கே, அதுவும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு பெண்மணிக்கே இவ்வளவு குழப்பங்கள் என்றால்....கடந்த நூற்றாண்டின் பெலகேயா நீலவ்னாவுக்கு எவ்வளவு உள்மனப்போராட்ட்ங்கள், குழப்பங்கள் இருந்திருக்கவேண்டும்? ஒரு புரட்சியாளரின் தாயாக அவர் தன்னை எத்தனை மாற்றிக்கொண்டிருந்திருக்க வேண்டும்?ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்ள எவ்வளவு கடந்து வந்திருக்க வேண்டும்? அந்த வலிநிறைந்த... இல்லை, பழமையை உதறிய வலிமை நிறைந்த போராட்டத் தருணங்களை, உணர்ச்சி ததும்பும் கதை சொல்லல் மூலம் நம்மையும் அந்த காலத்திற்குள் கொண்டு செல்கிறது மாக்சிம் கார்க்கியின் "தாய்" நாவல்.

கல்லூரி காலத்தில் ரயில்பயணத்திற்கு வழித்துணையாக வீட்டிலிருந்த 'தி மதர்' நாவலை எடுத்து வாசித்திருந்தாலும் முதல் ஒன்பது அத்தியாயங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்போது தாய் நாவலை என்னால் முழுமையாக ஏன் வாசிக்க முடியவில்லை என்று யோசித்து பார்க்கிறேன். அன்றைய இரஷிய சமூகத்தின் கொந்தளிப்பான காலத்தைப் போன்றது இல்லை நம் சூழல். கட்டுப்பெட்டியாக மட்டுமே வாழ சபிக்கப்பட்டிருக்கும் தமிழ் சமூகத்தில் ஒரு இளம்பெண் தாய் நாவல் படிப்பதற்கான மன எழுச்சி இங்கே இருக்காதோ?

தற்போது, 'தாயை'தமிழில் வாசித்தேன். அநேகமாக நாவல் முழுவதும் உண்மையாக நடந்தவையாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அல்லது அந்த காலத்தின் வரலாற்றுணர்வை மக்சிம் கார்க்கி தனது கலைப் பார்வையின் மூலம் மிகவும் நெருங்கியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.

பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்துக்கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.

ஒரு ஆலைக்குடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள் கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.

பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்பைக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமையை மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.

சிறிது சிறிதாக பாவெலில் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக்கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிகக் முடிந்தால்.....பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.

இதன்நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலில் நண்பரை கைதுச் செய்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். இது தாயை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளிகளுக்கிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்து சென்று விடுகிறது. தாய்க்குக் கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக் கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளுக்கிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை. தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால் செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் தான் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.

ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவிக்காக் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.

இதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதைக் அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப்போகும் முன், இயேசுவிடம் இந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்துக் கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறாள்.

மேநாள் நெருங்குகிறது.

மேநாள் பேரணியைப் பற்றிய வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப்போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால், சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக்கொள்கிறாள்.

பெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்கமுடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சிகொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.



இரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும் உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உண்ர்ந்துக்கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது. வாசிக்கும் நமக்கு, அநேக இடங்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த அநேக இளைஞர்கள்......புதிய உலகை கனவு கண்ட இளைஞர்கள்....

வாசித்துக்கொண்டிருந்த எனக்கு, ஒரு கட்டத்தில், நாந்தான் அந்த தாய் என்பது போல தோன்றியது. ஏனெனில், இதுநாள் வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையின் பிழைப்புவாதம் பின்னோக்கி இழுக்க, முற்றிலும் புதுமையான சத்தியமான கருத்துகள் நம்மை முன்னோக்கிச் இழுக்க நமக்குள் நடைபெறும் ஒரு சிறு போராட்டத்தைத்தான் தாயும் பிரதிபலிப்பதாகத் தோன்றியது.

இவை நடுவில், அந்தத் தோழர்களுக்கிடையிலான வாழ்க்கை முறை, அவர்களுக்கிடையிலான காதல், இசை எல்லாம் வெகு இயல்பாக வந்து செல்கிறது. உடல்நிலை சரியில்லாத ஒரு தோழரின் மரணம், அதன் பாதிப்புகள், உழைத்து ஓடாய் தேய்ந்த மனிதனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், தாய் ட்ரங்கு பெட்டியில் பிரசுரங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று முஜீக்குகளிடம் சேர்ப்பது, தாயை அவர்கள் இனம் கண்டுக்கொள்வது என்று இரண்டாம் பாகம் முழுக்க தாயின் புரட்சிக்கான பயணம் கண்முன் விரிகிறது. இவை நிச்சயம் உண்மை நிகழ்ச்சிகளாகத்தான் நடந்தேறியிருக்க வேண்டும்.

ஆச்சரியப்படுத்தியதென்னவெனில், மக்களனைவரும் பிரசுரங்களை வாசிக்க ஆர்வமாக இருப்பதும், பிரசுரங்கள் கிடைக்காதாவென்று ஏங்குவதும் படிப்பறிவில்லாதவர்களும் கூட தங்களின் அவல நிலைக்கான உண்மைக் காரண்னத்தை அறிந்துக்கொள்ள விரும்புவதும், புரட்சிதான் தீர்வென்று நம்புவதும்தான்.

இன்று, நாம் அந்நூற்றாண்டு மக்களைப் போல இல்லை. பலவகைகளில் முன்னே வந்துவிட்டோம். ஆனாலும், அவர்களை போன்ற சிந்தனைகளோ அல்லது சமூகமயமான தீர்வுகளை நோக்கியோ செல்லாமல் போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறோம்.

ஒருவேளை பாவெலும்,அவனது நண்பர்களும், தாயும் சேர்ந்து கஷ்டபடுபவர்களுக்கு உணவு கொடுத்தோ செய்தோ அல்லது செருப்பில்லாமல் கஷ்டபடுபவர்க்ளுக்கு செருப்பு வாங்கித்தந்தோ, வேலை வாங்கித்தந்தோ தங்கள் தொண்டுள்ளத்தை நிரூபித்திருக்கலாம். ஒன்றிரண்டு மாதங்களிலோ வருடங்களிலோ அந்த தொண்டும் அணைந்து போயிருக்கும். ஆனால், எதற்கும் சமரசப்படுத்திக்கொள்ளாமல் மனிதகுல விடுதலைதான் சமூகமயமான தீர்வு என்று ஏன் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க‌ வேண்டும்?எத்தனையோ ஆபத்துகள் இருப்பது தெரிந்தாலும் அச்செயல்களில் ஏன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்?

இன்றும் கூட, எண்ணற்ற தோழர்கள் கொள்கை மீது கொண்ட பற்றால் மனிதகுல வர்க்கவிடுதலைக்காக வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் கூட, சற்றும் அஞ்சாமல், சாதிய அடக்குமுறையை எதிர்த்து, அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாம் வசதி என்று கருதும் அனைத்தையும் அற்பமாக எண்ணி உதறி தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் ஹார்வார்டுகளிலும், ஆக்ஸ்போர்டுகளிலும் படித்து வந்த டாக்டரேட் மேதைகளோ நம்மை சுரண்டுகிறார்கள். நமது உயிரை பணயம் வைக்கிறார்கள். பள்ளியை/கல்லூரியைத் தாண்டாத தோழர்கள்தானே சமூகத்திற்காக/நமக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.

ஆனால், நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்? ஒன்றிரண்டு பேர்களுக்கு நம்மாலானதை பிச்சையிடுவதைப் போல செய்துவிட்டு தானப்பிரபு பட்டம் கட்டிக்கொள்கிறோம். புரட்சி செய்துவிட்டதைப் போல இறுமாந்து போகிறோம். நாம் சுயநலவாதிகளாக இருந்துக்கொண்டு, அந்த சுயநலத்திற்கும் காரணம் காட்டிக்கொண்டு தோழர்களை பிழைக்கத் தெரியாதவர்களென்றும், ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லையென்றும் அவர்களை இழிவுபடுத்தியத்தைத் தவிர?


புத்தகம் : தாய்

NCBH வெளியீடு

விலை : ரூ 200

நூல் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,

10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,

சென்னை – 600 002.

தொலைபேசி: 044-2841 2367

Tuesday, November 16, 2010

ஒரே கல்லுல...

1.பப்புவை எரிச்சலூட்டுவது எப்படி?

கடையில் ஜெல்லி பாக்கெட்டை எடுக்கும்போது, "ப்லக்...நானே உனக்கு ஜெல்லி செஞ்சு தரேன் பப்பு, செம சாஃப்ட்டா" என்று சொல்லவேண்டும். ஸ்ட்ராபெர்ரி ஃப்லேவர் ஜெல்லி பவுடரோடு வீட்டுக்கு வந்ததும், பரிசோதனையை ஆரம்பிக்க வேண்டும். 'ஜெல்லி சூப்பரா வரும்' என்று சொல்லிக்கொண்டே ஜெல்லியை தயாரிக்க வேண்டும். வேலை அதிகமில்லை, ஜென்டில்பீபிள்....சுடுதண்ணியில் பவுடரை கலக்கி ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டியதுதான். என்ன, ஸ்ட்ராபெர்ரி ஃப்லேவரென்றால் கொஞ்சம் ரத்தசிவப்பில் பார்க்க டெரராக இருக்கும்...கண்டுக்காதீங்க! செட் ஆச்சுன்னா சரி ஆகிடும் என்று சமாதானப்படுத்திக்கொள்ளுங்கள்...

ஜெல்லி பற்றிய கனவுகளுடனே மதிய உணவு, இரவு உணவு, பால்....பப்புவுக்கு!

நான்கைந்து மணிநேரங்களுக்குப் பிறகு ஜெல்லியை எடுத்துக்கொடுத்தாலே போதும்..முதல் பாயிண்டில் நீங்கள் பாஸ்!

2. எரிச்சலடைந்த‌ பப்புவை சமாதானப்படுத்துவது எப்படி?

சிம்பிள்,'ஜெல்லி வேணாம், நாம ஐஸ்க்ரீம் செய்யலாம்' என்று சொன்னால் போதும்.

உடனே செய்துவிடக்கூடாது.ஒரு சில நாட்கள் தள்ளிப்போட வேண்டும்.அப்படியே ஐஸ்க்ரீமை சாப்பிட வைக்க அடி போட வேண்டும். 'ஜெல்லி செஞ்ச‌ப்போ நீ சாப்பிடலை இல்ல' என்ற 'அம்மா' சீன் முக்கியம். எச்சரிக்கை, 'எனக்கு ஐஸ்க்ரீம் வேணாம்' என்று சொல்லிவிட வாய்ப்புகள் அதிகம். சொன்னாலும் பெரிது படுத்தக் கூடாது. 'ஐஸ்க்ரீம் சூப்பரா வரும்" என்று , எப்போடா ஐஸ்க்ரீம் செய்வாங்க என்ற எதிர்பார்ப்பையும் ஊட்ட வேண்டும்.

கடைசியாக, பரிசோதனையை ஆரம்பித்துவிடவேண்டும். இறுதி வடிவத்தை கொடுத்தாலே போதும். ஜெல்லியாவது ஒன்றிரண்டு ஸ்பூன்கள் உள்ளே சென்றிருக்கும்...ஐஸ்க்ரீம் பார்வையிலேயே ரிஜெக்டட்!

பிறகென்ன, ஏதாவது கடைக்குச் சென்று ஜெல்லி ஒரு பாக்கெட் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்த வேண்டியதுதான்.

மாங்காய் 1: 'குழந்தைக்கு நீ எதுவும் செஞ்சு தரமாட்டேங்கற' என்று யாராவது ஏதாவது இனிமேல் சொல்லுவார்கள்?

மாங்காய் 2: பப்பு உங்களை எதுவும் செய்ய சொல்லவே மாட்டாள்.

டிஸ்கி: தெனாலிராமன் பூனை வளர்த்த கதை நினைவுக்கு வந்தால்....ஜெல்லியே பொறுப்பு!

Monday, November 15, 2010

பப்பு டைம்ஸ்

பப்பு ரொம்ப நல்ல மூடில் இருந்தால் /அவளது வேலை ஆகவேண்டும் என்றால் மட்டுமே நான் 'அம்மா'. மற்ற நேரங்களில் 'ஆச்சி'தான்.

பப்பு பேச ஆரம்பித்தபோது , என்னை, பெயர் சொல்லியழைப்பதை பார்த்த ஒரு சிலர், 'இப்படி பழக்காதீங்க, அப்புறம் அம்மா யாருன்னே குழந்தைக்கு தெரியாது.' என்றதோடு, 'எங்க அக்கா இப்படிதான் குழந்தைய பாத்துக்கிறங்ககிட்டே விட்டுவிட்டு, இப்போ அது அவங்களை தான் அம்மான்னு கூப்பிடுது, எங்க அக்காவை பேர் சொல்லி கூப்பிடுது' என்றும் கிலி உண்டாக்க பெருமுயற்சி செய்தனர்.

இதற்கெல்லாம் அசர்றவங்களா நாம? 'யாராவது ஒருத்தங்களை அம்மான்னு கூப்பிடுதா, விடுங்க'னு சொல்லிவிட்டேன்.

அம்மா/மம்மி/மா/ஆச்சி பற்றி யார்பேசினாலும் பப்புவும் அவர்களுக்கேற்றது போல பேசுவாள். அந்த பெருமுயற்சி செய்தவர்களைத்தான் இப்போதுத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஓக்கே....சொல்லவந்தது...

பப்பு தானாக ஏதோ பாடிக்கொண்டிருதாள். சொந்த லிரிக்ஸ்....நோ அர்த்தம்...

"i want mummy..."

"பப்பு, கூப்டியா?"

"no. i singed......"

#பவ்வ்வ்வ்வ்
ஆயாவுக்கு மருந்து வாங்கக் கிளம்பினேன். சற்று தூரம்தான். கூட வருவேன் என்று ஆரம்பித்தாள் பப்பு.

'சரி, ரவுண்ட் போய்ட்டு கொண்டு வந்து விட்டுடறேன்' என்றதற்கு சரியென்று வந்தாள்.

வழக்கமான ரவுண்ட் அடித்துவிட்டு வீடு நெருங்கும்போது "நான் உன் கூடத்தான் வருவேன், வண்டிலேருந்து இறங்கமாட்டேன்" என்றாள்.

வேறுவழியில்லாமல் கடைக்கு அவளோடுக் கிளம்பினேன். பாதிவழியில் மேடத்திற்கு தூக்கம்.

"ஆச்சி, எனக்குத்தூக்கமா வருது. வீட்டுலே போய் விட்டுடு"

"சீக்கிரம் போய்டலாம்.தூக்கம் வந்துச்சுன்னா ஏன் வண்டிய விட்டு இறங்கமாட்டேன்னு சொன்னே, வீட்டுலே இருந்திருக்கலாம் இல்ல"

"நான் சும்மா சொன்னேன்!"

#டபிள் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெளியே செல்லக் கிளம்பினோம். அவளது கண்ணாடியைக் காணோம். செல்லும் அவசரம் வேறு. தேடினால், சட்டெனக் கிடைக்குமா?

"இதுக்குத்தான் எடுத்தத எடுத்த எடத்திலே வைக்கணும், எதையும் பத்திரமா வைச்சுக்கிறது இல்லெ" என்று எனக்குள் இருக்கும் ஆயாவின் ஜீன் வேலையை காட்டத்தொடங்கியிருந்தது.

பெட்டிகளில் குடைந்து பார்த்தாள். ம்ஹூம்....

பரிதாபமாக முகத்தை வைத்துக்கொணடு கேட்டாள்,

"ஆச்சி, அந்த ஏழுநிறப்பூ யார்க்கிட்டேயாவது இருக்குமா, ஆச்சி"

ஏழுநிறப்பூ புதிகாக பப்புவுக்கு அறிமுகமாகியிருக்கும் கதை. மேலும் அறிய..

Saturday, November 13, 2010

நட்புலகம்/BuddiesWorld



நண்பர் அன்புவின் முயற்சியால், சென்னையில் நாளை உதயமாகிறது குழந்தைகளின் "நட்புலகம்".

குழந்தைகளின் நட்புலகம் ஒன்றை சென்னையில் அமைக்க கனவு கொண்ட நண்பர்க‌ள் அன்புவிற்கும், தமயந்திக்கும்,அவரது சுட்டிப்பெண் எழிலுக்கும், வாழ்த்துகள். :‍-)

Friday, November 12, 2010

வேளச்சேரி டைம்ஸ் : ஜெனியின் யாத்திராகமம்

10,+2 படித்திருந்தாலும் ஜெனி இந்தியாவின் மிக நவநாகரிக‌மான பணியில் இருக்கிறாள். அல்லது அவ்வாறு நம்புகிறாள். அவளிடம் இரண்டு வகையான யூனிபார்ம்கள் உண்டு. வாரநாட்களில் ஒரு வண்ணமாகவும், வாரயிறுதிகளில் வேறொரு வண்ணமாகவும் அது மாறும். அன்றைய நாளுக்குரியதை எடுத்துக்கொண்டு சென்னையின் பஸ்களில் பயணித்து அவளது பெருமைக்குரிய பணியிட‌த்திற்கு வருகிறாள். பணியிடம், பார்ப்பதற்கு பகட்டானது என்றாலும் அவளது பணி அவ்வளவு மெச்சத்தக்கதாக‌ இல்லை. ஜெனி, வேளச்சேரியில்
இருக்கும் ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்கிறாள். ‍ வாக்ஸிங், பெடிக்யூர், ஹேர் கலரிங், ஆயில் மசாஜ் - அவளது அன்றாட வேலைகளில் சில.


'ஜென்ட்ஸோட உடலையா தொடுகிறோம், லேடீஸூக்குத்தானே' என்பதால் ஜெனிக்கு பிறரது உடல் பாகங்களை தொடுவது வித்தியாசமாக தோன்ற வில்லை. அதைக் குறித்து எந்த வெட்கமும் இல்லை. கடந்த மூன்று மாதங்களாகத்தான் இவ்வேலையைச் செய்தாலும், ஜெனி, இதற்கு முன் இரண்டு வருடங்களாக வேலை செய்தது ஒரு ஷோ ரூமில். ஜெனியின் ஊர்க்காரரான ரோமாவும் இங்கேதான் வேலை செய்கிறார்.அவரின் ரெக்கமண்டேஷனால் இந்த வேலைக்கு வந்துவிட்டாள்.

ஜெனி, ஆதம்பாக்கத்தில் அவளது அண்ணன்களுடன் தங்கி இருக்கிறாள். பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு சென்னையில் பஸ்களில் பயணிக்கிறாள். அலுவலகத்திற்கு வந்து யூனிஃபார்முக்குள் புகுந்து விட்டால், அவள் மணிப்பூரைச் சேர்ந்த கிராமத்துப் பெண் இல்லை. ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப்பட்ட முடியுடன், திருத்தப்பட்ட புருவங்களுடன், கருப்பு ஷூவுடன், கண்ணாடி பளபளக்கும் அறைகளுடனான அச்சூழலில், தனது வேலையை நேர்த்தியாக, முழுமையாக செய்யும் ஒரு ஃப்ரொபஷனலாக‌ பொருந்திவிடுகிறாள்.


ஒருநாளைக்கு எட்டு முதல் ஒன்பது வருகையாளர்களை ஜெனி அட்டென்ட் செய்ய வேண்டும். ஜெனியின் வேலைநேரம் பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை. என்றாலும், சரியாக எட்டு மணிக்கு முடிந்துவிடாது. வாரநாட்களில் ஒன்பது மணிக்கு மேலாகிவிடுவதுண்டு. சில வாரயிறுதிகள் காற்றாடுவதும் உண்டு. எப்படியானாலும், ஜெனிக்கு வாரயிறுதிகளில் கண்டிப்பாக‌ விடுமுறை கிடையாது.


மணிப்பூரில் காலநிலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மணிப்பூரை பற்றிய நினைப்பே ஜெனியை உற்சாகம் கொள்ள வைக்கிறது. சென்னை மிகவும் வெப்பமாக இருக்கிறது. இருந்தாலும் ஜெனி சென்னையிலேயே தொடர்ந்து வாழ விரும்புகிறாள். இங்கே, அனைவரும் ஃப்ரெண்ட்லியாக இருக்கிறார்கள், மொழி ஒன்றுதான் அவளுக்கு பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. ஜெனி, ஊருக்குச் செல்ல வேண்டுமானால் அவளது பாஷையிலேயே சொல்ல வேண்டுமானால், "இரவு பகலாக‌ ரயிலிலேயே உட்கார்ந்துக் கொண்டே பயணம் செய்ய வேண்டும் ‍கௌஹாத்தி வரை. அங்கிருந்து அடுத்த ரயில் மணிப்பூருக்கு. பயணக்காலம் மட்டுமே ஒரு வாரம் ஆகிவிடும்". ஜெனி சென்னைக்கு வந்த இந்த இரண்டரை வருடங்களில் ஒருமுறைதான் வீட்டிற்குச் சென்றிருக்கிறாள். அம்மா, அப்பாவெல்லாம் அங்குதான் வசிக்கிறார்கள். அவளது ஊரில், நிறைய கிராமங்கள் இப்படித்தான் சிறுகுழந்தைகள் மற்றும் முதியவர்கள் மட்டும் தங்குமிடமாக மாறிவிட்டன.



(pic courtesy : flickr)

ஜெனிக்கு சென்னையில் வீட்டு ஓனர்கள் வாங்கும் அட்வான்ஸ்தான் மிகுந்த வருத்தத்தையும் கஷ்டத்தையும் தருகிறது. ஐம்பதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் என்பது அதிகமான தொகை.அவளால் நினைத்துப் பார்க்க முடியாதத் தொகை. அதோடு, வசதியற்ற வீடு. நிறைய பேருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய சூழல். வாங்கும் சம்பளத்தில் பாதி வாடகை கொடுக்கவே சரியாக இருக்கிறது. அப்புறம் அலைபேசி. அதனால்தான் நண்பர்களுடன் பேசும் மகிழ்ச்சியாவது அவளுக்குக் கிடைக்கிறது. அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்க முடியவில்லை.கையில் எடுக்குமுன் விலையை பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டு நகர்ந்துவிட நேர்கிறது. இதில் மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்ப வேண்டும்.ஜெனிக்கு தீபாவளி இல்லை என்பதால் அன்றும் அவள் வேலைக்கு வந்தாள்.


ஜெனிக்கு வயது 21. ஜெனிக்கு, அவளது எதிர்காலம் பற்றியெல்லாம் பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. கிடைக்கும் வேலையைச் செய்து சம்பாரிக்க வேண்டும். செலவுகளை சந்திக்க வேண்டும். மணிப்பூரில் அதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. ஓரளவு வருமானம் வரக்கூடிய வேலை வேண்டுமானால் எல்லையைத் தாண்டிதான் வந்தாக வேண்டும்.இதைத்தாண்டி வேறு எதுவும் ஜெனிக்கு யோசனை இல்லை. திருமணம் குறித்தெல்லாம் யோசிக்கவே இல்லை. திருமணம் செய்துக் கொண்டாலும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்றே ஜெனி விரும்புகிறாள்.

மணிப்பூரிலும் பியூட்டி பார்லர்கள் உண்டென்றாலும் அங்கு இதுபோல கிடையாது. மிகவும் சிறியவை. இங்கு பியூட்டி பார்லர்கள் பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. ஆனால், சம்பளம்தான் போதவில்லை. மாதம்
ரூ5000 என்பது வாடகைக்கும், மற்ற செலவுகளுக்குமே சரியாக இருக்கிறது. சமயங்களில், பஸ் கிடைக்காத நாட்களில் ஆட்டோ பிடித்து வர நேர்ந்தால் ஒரு ட்ரிப்புக்கு ரூ 50 கொடுக்க நேர்கிறது. மழைநாட்களில்தான் திண்டாட்டம்.

வேறு நல்ல வேலை,இதைவிட அதிகமாக வருமானம் தரக்கூடிய‌ வேலை ஏதாவது இருந்தால் ஜெனிக்குச் சொல்வீர்களா?

அப்படியே, ஜெனிக்குள் எழும் சில கேள்விகளுக்கு விடைகளைத் தருவீர்களா?

ஜெனியும், அவளது அண்ணன்களும் பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்வி கற்க முடியாதது ஏன்? கோடிகள் புரளும் ஐபிஎல், பல்லாயிரம் கோடிகளில் விலைபோகும் அணிகள் இருக்கும் நாட்டில் , ஜெனிக்களும் ரோமாக்களும் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்காக ஏன் இரவும் பகலும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?

காமன்வெல்த் போட்டிகளை அடுத்து, ஒலிம்பிக் நடத்தும் தகுதி பெற்றுவிட்ட இந்தியாவில், வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே உழைத்து தேய வேண்டிய அவலம் ஏன்? சொந்த ஊரை விட்டு வந்து ஓயாமல் உழைத்தும் கைகளில் மிஞ்சுவது என்ன?

ரெஸ்டாரண்ட்கள் மற்றும் ஃபாஸ்ட் புட் கடைகளின் எடுபிடி வேலைக‌ள், பியூட்டி பார்லர்கள் எல்லாம் ஜெனி மற்றும் ரோமாக்களாலும், அவர்களது அண்ணன்களாலும் குறைவான சம்பளத்திற்கு இட்டு நிரப்பப்படுகிறதே, எதனால்?
எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போய் நின்றுக்கொண்டே பத்துமணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நேரிடுவது எதனால்? புதிய வேலை வாய்ப்பு என்பது இதுதானா?

நாற்கர சாலைகளாலும் மெட்ரோக்களாலும் சாலைவசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ள இந்தியாவில் ரோமா தனது ஊருக்குச் செல்வதற்கு மட்டும் ஒரு வார காலமாவது ஏன்?

(பி.கு : ஜெனியை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேளச்சேரியின் ஒரு பியூட்டி பார்லரில் கடந்த வாரத்தில் சந்தித்தேன். அவரிடம் உரையாடியதிலிருந்து...)

Thursday, November 11, 2010

மூஞ்சைப் பாரு...மூஞ்சைப் பாரு...

கொஞ்சநாளாவே....கிட்டதட்ட பத்துநாளாவே இதை பாடிகிட்டிருக்கா பப்பு.

இப்போதைக்கு நோ டிவி வீட்டுலே. எந்திரன் பாட்டுகளும் எனக்கு பரிச்சயமில்லை. ஏதோ திட்டறதைதான் ஸ்டைலா கத்துக்கிட்டு வந்திருக்கா போலிருக்குன்னு விட்டுட்டேன். அவங்க ஸ்கூல் பாட்டு வேற(வேன் பசங்களா சேர்ந்து லிரிக்ஸ் எழுதினது..) இதுமாதிரி ஒன்னு இருக்கு. அதுக்கு அடுத்த வெர்ஷன் போல-ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா “ஹ ஹ” வரும்போது மட்டும், என்னாலே சிரிப்பை அடக்கவே முடியாது. நேத்தும், ”ஹ ஹ” லே நான் சிரிக்க ஆரம்பிச்சதும் “அவ்ளோதான்”ன்னு சொல்லிட்டு கிளி கோச்சுக்கிட்டு போய்டுச்சு...:-)

வேன்லே வரும்போது ப்ரனேஷூம், வேதஸ்மிருதியும் பாடுவாங்களாம். கூட சேர்ந்து எல்லோரும் பாடுவாங்களாம்.......எல்லாரும் சேர்ந்து இதைப் பாடினா....அவ்வ்வ்வ்....நினைச்சு பார்க்கவே ரொம்ப கிலியா இருக்குல்ல!!!:-)

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, November 03, 2010

ஒரு கொலை, தண்டனையில்லாமல்...

ஞாயிறு எல்லோருக்கும் விடிவதைப்போலத்தான் விடிந்திருக்கும் ‍ - குடும்பத்தின் சம்பாதிக்கும் ஒரே நபரான அம்பிகாவிற்கும். தான் ஒரு படுகொலையை சந்திக்கப்போவது தெரியாமல் ,அடுத்தடுத்த நாட்கள் பற்றிய திட்டமிடல்களோடும், எதிர்காலம் பற்றிய எண்ணங்களோடும், ஏழேமுக்கால் முதல் பத்தேமுக்கால் வரையிலான ஷிப்டுக்கு வந்திருப்பார் அம்பிகா.

அம்பிகாவைப் பற்றி இணையத்தில் வந்திருக்கும் செய்திகளைப் படித்துத் தெரிந்துக்கொண்டிருப்பீர்கள். பல செய்தித்தளங்கள் கூறுவது போல ரோபோவால் தாக்கப்பட்டோ அல்லது மன உளைச்சலால் தற்கொலையோ அவர் செய்துக்கொள்ளவில்லை. முக்கியமாக அது எதிர்பாராமல் நடந்த விபத்துமில்லை.

திங்களன்று மதியம் செய்தியைக் கேள்விப்பட்டபின், அவரது உடல் அப்போலோவில் இருப்பதாக அறிந்து நேரில் சென்றேன். அவருடன் வேலை செய்யும் உடன் ஊழியர்கள் சிலரையும் சந்தித்தேன். சுமார் 50 முதல் 100 பேர் குழுமி இருந்தனர். சராசரியாக அவர்கள் வயது இருபது அல்லது இருபத்தியிரண்டுக்குள் தான் இருக்கும்.

வேலை செயும் இடமோ அல்லது கான்டீனுக்கோ, டாய்லெட்டுக்கோ எங்கு சென்றாலும் எந்நேரமும் கண்காணிக்கும் கேமராக்கள். உழைப்பை அட்டையைப்போல உறிஞ்சும், கொஞ்சமும் மனிதாபிமானமற்ற சூபர்வைசர்கள். வெளிநாட்டு முதலாளிகளின் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட உயரதிகாரிகள். கொத்தடிமைகளைப் போல வேலை செய்தும் ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் கூட கிடைக்காத நிலை. எப்போது வேண்டுமானாலும் துரத்தப்பட வசதியாக ஒப்பந்த முறையில் வேலை.

’பத்தாவது முடித்திருந்தால் போதும்,நோக்கியாவில் வேலை’ என்று சென்னையின் ‍- முக்கியமாக‌ புறநகர் பகுதிகளின் பள்ளிகளில் நோட்டீஸ் ஒட்டுவது; மொத்தமாக 500, 1000 என்று ஏழை மாணவர்களை அள்ளிக்கொண்டு வரவேண்டியது. முதலாளிகள் நியமித்த டார்கெட்டுக்கும் முன் அவர்களது உயிருக்கும் மதிப்பில்லை. உற்பத்தியை பெருக்க வேண்டிய மற்றுமொரு எந்திரங்களே.

'தீபாவளிக்கு அப் அப் அப்கிரேட்' என்றும் நமக்குப் பிரியமானவர்களுக்கு பரிசளிக்க உகந்தது என்றும் விளம்பரப்படுத்தப்படும் செல்போன்களும், கேட்ஜெட்டுகளும், குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்பட்ட இந்தக் கொத்தடிமைகளைத் தாண்டியே வருகின்றன. உயிரே போகும் அபாயகட்டத்தில் இருந்தாலும் நிற்க மறுக்கும் எந்திரங்களைத் தாண்டியும்...

உலகின் ஏதோ ஒரு மூலையில் விற்கப்படப்போகும் செல்போனின் மதர்போர்டை காப்பாற்ற முனைந்து
கட்டிங் மெஷினால் கழுத்தறுப்பட்டிருக்கிறார் அம்பிகா. பக்கத்திலிருப்பவர்கள் பார்த்துவிட்டு, கத்தியும் செக்யூரிட்டிகளோ சூபர்வைசரோ உதவவில்லை. 'எமர்ஜென்சி' மூலம் எந்திரத்தை நிறுத்த முயன்ற ஊழியர்களையும் செக்யூரிட்டி தடுத்து தள்ளிவிட்டிருக்கிறான். இதற்குள் நான்கு முறை அலறி தலைதொங்கியிருக்கிறார் அம்பிகா. ”அங்கிருந்து அப்போல்லோ வருவதற்கு பதிலாக வழியில் வேறு ஏதாவது மருத்துவமனையில் ஏன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலாவது சேர்ந்திருந்தால் பிழைத்திருப்பாளே” என்று அங்கலாய்க்கிறார்கள் அம்பிகாவுடன் அதே ஷிஃப்டில் வேலை செய்தவர்கள்.

கட்டிங்மெஷினின் சென்சார்கள் இடையூறு வந்தால் ஓடாமல் நிற்கவேண்டும். ஆனால், அப்படி நின்றால் உற்பத்தி பாதிக்கும். திரும்ப ஓடுவதற்கு பத்து நிமிடங்கள் ஆகும். இதற்குள், ஏற்படும் உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்கு இந்தியாவின் மிக மலிவாகக் கிடைக்கும் மனித உயிரை இழக்கலாமே! இதுதான் அங்கிருந்தவர்களின் மனநிலையாக இருந்திருக்கிறது.

’அம்பிகாவிற்கு ஏற்பட்ட அதே நிலைதான் எங்களுக்கும்’ என்று ஒரு பெண் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அடுத்த ஷிப்ட் வழக்கம் போல நடக்கும் என்பதாக.. அதை எங்களிடம் காட்டியபடி உடனிருந்தவர்களிடம் "அப்போவே அந்த மெஷினையெல்லாம் ஒடைச்சுபோட்டுட்டு வந்திருக்கணும் நீங்க" என்று பொருமுகிறார் அவர்.

அம்பிகா இறந்தபின் அடுத்த ஷிட் நடந்திருக்கிறது டெக்னீஷியன்களைக் கொண்டு.

க்ரூப் இன்ஷ்யூரன்சிலும் பெரிதாக எதுவும் கிடைக்காது. அம்பிகாவின் மரணத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக, பேச்சு வார்த்தையின் போது கிராஜூவிட்டித் தொகையை மட்டும் தருவதாக பேசியிருக்கின்றனர் நிர்வாகத்தினர். ஓய்வு பெறும்வரையிலான அவரது சம்பளத்தை கேட்டதற்கோ 'அது 52 லட்சம் வருது சார், எந்த கம்பெனி கொடுக்கும்' என்று பேசியிருக்கிறான் கம்பெனி ஹெச் ஆர். பேச்சுவார்த்தையை தற்போது எட்டாம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

எங்களை வைச்சு எவ்ளோ சம்பாரிச்சிருப்பான், ரெண்டு கோடி ரூபா மெஷினை எமர்ஜென்சிலே நிறுத்த முடியாம ஒரு உயிர் போயிருக்கு, 52 லட்ச ரூபாய் கொடுக்க முடியலையா என்று கொந்தளிக்கிறார்கள். 'ந‌டந்தது விபத்தல்ல;கொலைதான்' என்றும் உறுதியாக உணர்ந்திருக்கிறார்கள். 'திமுகவும் அதிமுகவும் வந்தாங்களே, என்ன நடந்தது, எங்களை பத்தி எந்த கட்சிக்கும் கவலையில்ல' என்று வெறுத்துப்போய் பேசுகிறார்கள்.

ஒபாமாவிற்காக நாடே விழாக்கோலம் பூண்டு பட்டாசு வெடிக்கும் ஒலியில் அம்பிகாவிற்காக ஒலிக்கும் நண்பர்களின் குரலை கேட்பவர்கள் யார்?

அம்பிகா தனது தம்பியை படித்து ஆளாக்கியபின்னரே திருமணம் செய்துக்கொளவதாக உறுதியாக இருந்திருக்கிறார். வரும் ஜனவரி எட்டாம் தேதி திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அவரது தம்பி தற்போது டிப்ளமோ இறுதியாண்டு படிக்கிறார். தற்போது அவரது தம்பிக்கு வேலை தருவதாக எது ஏதோ பெரிய உதவியாக நினைத்து வாக்களிக்கிறது நிர்வாகம். "ஊழியர்களின் பாதுகாப்பே தங்களுக்கு பிரதானமென்றும் இச்சம்பவத்தை கம்பெனியின் விதிமுறைகளுக்கேற்ப புலனாய்வு செய்வதாகவும்" அறிக்கை விடுகிறார்கள் கொலையாளிகள்.

அம்பிகாவின் இழப்பை எதுதான் ஈடு செய்ய இயலும், நியாயத்தைத் தவிர!

Thursday, October 28, 2010

5 octobers

5


4

3


2

1

0



5 வருடங்கள்

அழுகை

சிரிப்பு

ஆச்சர்யங்கள்

சாக்லேட்டுகள்

சண்டைகள்

பயங்கள்

வாக்கர்

சைக்கிள்

பயணங்கள்

மலைகள்

சன்ரைஸ்

கடற்கரை

மூன்வாட்ச்

ஊசிகள்

ஜூரம்

பாடல்கள்

கண்ணீர்

கதைகள்

மழை

நடனங்கள்

நம்பிக்கை

மூட்ஸ்விங்ஸ்

கொஞ்சல்கள்

அப்ளிகேஷன்கள்

..........
..........



குறிப்பு : பப்புவின் பிறந்தநாளன்றைக்கான இடுகை இது. (இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை. பப்புவும் பெரிதாக எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.) எதிர்பாராதவிதமாக, அவளுக்கு அன்றைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் எழுத மனமில்லாமல் விடுபட்டுவிட்டது. அப்படியே விட்டால், அடுத்த பிறந்தநாளும் வந்துவிடக்கூடும் என்பதால்...ட்ராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்.

Wednesday, October 27, 2010

We shall overcome .... - indianized

pappu.mp3



குறிப்பு : பப்புவின் பிறந்தநாளுக்கு முன் தினம் போட வேண்டியது. எதிர்பாராதவிதமாக அவளுக்கு ஜூரம் வந்துவிட விடுபட்டுவிட்டது. அதன் ஞாபகார்த்தமாக, அதே ட்ராஃப்ட் தேதியிலேயே...

மார்கரெட்டுக்கு ஒரு கடிதம்

டியர் டியர் மார்கரெட் வைஸ் ப்ரவுன்,

ஐ ஜஸ்ட் ஹேட் யூ....நோ நோ...ஐ ஹேட் ரன் அவே பன்னி(bunny)!

இதை சொல்றதுக்குத்தான் இந்த லெட்டர்.

முதல் காரணம், இன்னைக்கு பப்புவை நான் அடிச்சேன். Yes, I whacked her! அதுக்கு நீங்க ஒரு முக்கியமான காரணம். ரெண்டாவது, உங்களோட Run away bunnyயை படிச்சதுக்கு அப்புறம், பப்பு பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.

ஆமா, இப்போ கொஞ்சநாளா (15 நாளா?!) Run away bunny யைத்தான் தினமும் படிக்கறோம். திரும்ப திரும்ப. (இப்போதைக்கு) பப்புவுக்கு பிடித்தமான புத்தகங்கள் லிஸ்டில், Run away bunnyக்கு முக்கியமான இடம் இருக்கு.
சொல்லப்போனா, உங்களோட‌ 'குட் நைட் மூன்' எங்க ஆல் டைம் ஃபேவரிட். தூங்கப் போறதுக்கு முன்னாடினு இல்ல..காலையிலே எழுந்ததும் கூட குட் நைட் மூன் படிச்சிருக்கோம். கிட்டன் -‍ மிட்டன், ப்ரஷ் - மஷ், ஹவுஸ் - மவுஸ் எல்லாம் நல்லாதான் இருந்துச்சு...பப்புவுக்கு அலுக்கற வரைக்கும்.



அதே நினைப்போடதான் இந்த கதைபுக்கையும் எடுத்தோம், மிஸ். மார்கரெட் வைஸ் ப்ரவுன்! என்ன சொல்ல... எல்லா புக்கையும் போலத்தான் ஆரம்பத்துலே ஜாலியாதான் இருந்துச்சு....நான் சொல்றதை பப்பு கேட்டுக்கற வரைக்கும்!
(bunny, அம்மாகிட்டே எங்கியாவது போறேன்னு சொல்லும் போதெல்லாம் "நானும் பறந்து போறேன்" இல்லேன்னா " கடலுக்கு அடிலே போறேன்" பப்பு சொல்லுவா. நானும், bunnyயோட அம்மா மாதிரியே " நீ பறந்து போனா மரத்துலே நான் பெரிய நெஸ்ட் கட்டி வைப்பேன்", " நீ கடலுக்கு அடிலே போனா பெரிய ஷெல்லாகி வருவேன்", "போட் எடுத்துட்டு வந்து கூப்பிடுவேன்"னு, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடற மாதிரி நல்லாதான் போய்க்கிட்டு இருந்துச்சு...)அதுக்கு அப்புறம்தான் ஆரம்பிச்சது வினை!



(Pic courtesy : Google)

போனவாரம் வர்ஷினிக்கு பர்த்டே. "வர்ஷினி என்னை அவங்க வீட்டுக்கு வரச்சொன்னா", "பர்த்டேவுக்கு போகணும்"னு (சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும் மாடுலேஷன்லே கஷ்டப்பட்டு படிச்சுக்கோங்க, மிஸ் ப்ரவுன் ) ஒரு வாரமாவே இதே புராணம்தான். சாப்பிடச் சொன்னப்போ, கரெக்டா ஆரம்பிச்சாச்சு. "நான் இப்போவே வீட்டைவிட்டு போறேன், வர்ஷினி வீட்டுலேயே இருக்கப் போறேன்"னு சாவியை எடுத்துக்கிட்டு கதவை திறக்கிறா. கோவம் வந்தா, ஏதாவது பிடிக்கலேன்னா இல்ல ஏதாவது சாப்பிட சொன்னா இப்போல்லாம் உடனே அவ சொல்றது, "நான் இந்த வீட்டை விட்டு போறேன்".

நானும், " ஓக்கே, பை பப்பு, வர்ஷினி பர்த்டே அன்னைக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்"னு கண்டுக்காதமாதிரி, ஜாலியா சிரிச்சுகிட்டே சொல்லிட்டு கதவுகிட்டேயே நிக்கறேன் (எல்லாம் ஒரு ஜாக்கிரதைக்குத்தான்). பப்பு கதவை திறந்ததும், கொஞ்சம் மூளையை (ம்ம்..என்னோடதுதான்!) யூஸ் பண்ணி, "ஏதோ நரி வர மாதிரி இருக்கேன்னு" நைஸா சொன்னேன். அப்போ பார்த்து ரோடிலே போன யாரோ சத்தமா தும்மினாங்க. (பெயர் தெரியாத அந்த நல்ல மனிதருக்கு நன்றி!) நல்லவேளையா நரி மேல சந்தேகப்பட்ட பப்பு, என்னை பார்த்து கேட்டா,

"உனக்கு பாப்பா வேணுமா வேணாமா? உனக்கு பொண்ணு வேணும்தானே?" (இந்த இடத்துலே, நாம, லிட்டில் ரெட் ரைடிங் ஹீட்டுக்கு ரொம்ப ரொம்ப‌ கடமைப் பட்டுள்ளோம்! யாரது, அதிக பிரசங்கித்தனமா அது ஓநாய்ன்னு சொல்றது?)

"ஆமா, பப்பு,எனக்கு பாப்பா வேணுமே!"ன்னு சொன்னதும் "அப்போ கதவை சீக்கிரம் பூட்டு"ன்னு சொல்லிட்டு புள்ளிகளை சேர்க்க(Dot-to-Dot) ஆரம்பிச்சுட்டா. . நல்லவேளையா நரி மட்டும் வரலைன்னா என்ன ஆகியிருக்கும்?

நான், இந்த வயசுலேயும் நினைக்க முடியாததை, எங்க ஆயாகிட்டேயோ அம்மாக்கிட்டேயோ தைரியமா சொல்ல முடியாததை பப்பு இப்போவே சொல்றான்னா... அதுக்கு bunnyயும் ஒரு காரணம்தானே, சொல்லுங்க மிஸ் மார்கரெட் வைஸ் ப்ரவுன், சொல்லுங்க‌?

இதுவாவது பரவாயில்லை, காலையிலே கஷ்டப்பட்டு எழுப்பி, குளிக்க கூட்டிட்டு போனா, முரண்டு பிடிச்சதும் இல்லாம " வீட்டை விட்டு போறேன்"னு சொன்னா கோவமா வருமா வராதா? அதான்...வந்துச்சு, உங்க மேலே எனக்கு அவ்ளோ கோவம்!

சோ, பேரண்ட்ஸ், மிஸ் ப்ரவுனோட சம்மதத்தோட உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன்....Run away bunnyயை கையிலே எடுக்கிறதுக்கு முன்னாடி எனக்கு வந்த இந்த விபரீத சோதனைகளை ரீவைன்ட் பண்ணி பாருங்க....ரிஸ்கை எண்ணிப் பாருங்க‌...பயனடையுங்க!

டேக் ரெஸ்ட், மிஸ் ப்ரவுன்.

குட் பை!

from
Run away Mummy!!

Monday, October 25, 2010

விலைமதிப்பற்றவை - தீபாவளி பர்சேஸில் மட்டுமா?


மந்திரப்புன்னகை, உலகையே வென்றுவிட்ட மகிழ்ச்சி, ஜொலிக்கும் ஆபரணங்கள்.... சென்னையின் எந்த பிரதான சாலைகளிலும், தி.நகர் முழுவதும் ( பத்து மீட்டர்களுக்கொரு) நகைக்கடை விளம்பர பலகைகளைக் காணலாம்.
நகைகளை அணிந்துக்கொள்வதாலேயே தன்னம்பிக்கையும், சுதந்திரமும், சகல அதிகாரங்களும் பெற்றுவிட்டதாக கருத வைக்கும் கவர்ச்சிகரமான‌ இவ் விளம்பரங்கள் ஒருவேளை பெண்சிசுக்கொலைகள், வரதட்சிணை, பெண்களின் மீதான குடும்ப வன்முறைகள் - இவற்றை பேசும் விளம்பரப்பலகைகளாக மாறினால் எப்படி இருக்கும்?


விலைமதிக்கமுடியாத‌ வாழ்க்கையும் , சுதந்திரமும் அது தரும் பாதுகாப்பையும் விடவா அழகைக் கூட்டும் நகையலங்காரங்கள் முக்கியம்?


(pic courtesy : Google)

மணமகன் வீட்டாரின் அச்சுறுத்தலால் வரதட்சிணை கொடுக்க வேண்டியிருப்பின் அது குற்றமல்ல என்று தில்லி உய‌ர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்ட விபத்துகளை படமெடுத்து சிக்னல்களெங்கும் வைத்திருப்பது போல நகைகள் அணிவதால் உண்டாகும் பாதகங்களையும்/பெண்கள் மீதான வன்முறைகளையும் பேசினால் என்ன?

Thursday, October 21, 2010

hotchpotch

we shall overcome
we shall overcome

we shall overcome.... one day (somedayந்னு சொன்னதுக்கு, one day தான் சீக்கிரம் வருமாம்!)

deep in my heart i too(!) believe
we shall overkamyab....ek din

we shall overkamyab

we shall overkamyab
ek din
ohh man mey hai vishvaas

poora hai vishvaas

ham hongey kamyaam
ham hongey kamyaam
ek din

ohh man mey hai vishvaas

poora hai vishvaas

we shall overcome.... one day
அப்புறம்,onedayகன்டினியூ ஆகி

one w(d)ay ticket

one w(d)ay ticket..... ன்னு மாறிடுச்சு!

இப்போ கொஞ்சம் சரியான உச்சரிப்போட/வரிகளோட பாடினாலும், இதுதான் முதன்முதல்லே பாடின வரிகள். ஆடியோ ஃபைல் சீக்கிரம் போடறேன்.

(இந்த பாட்டு கேட்டாலே
என்சிசி நாட்கள்தான் ஞாபகம் வருது. இதுக்கு இந்தி, தெலுங்கு,மலையாளம் மற்றும் ஒரியா வெர்ஷன்ஸ் கூட இருந்தது. MTWU'ians.....please help!)

Wednesday, October 20, 2010

X X & X Y in IT

"இன்ட்ர்வுயூவிலே ஒரே மாதிரி - ஈக்வல் டாலன்டோட ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருந்தா, நான், பையனுக்குத்தான் ப்ரெஃபரன்ஸ் கொடுப்பேன்ப்பா" (ஓ நோ..அப்படி பாக்காதீங்க...நான் இந்தக் டாபிக்க இழுக்கலை...அதுவா வந்து விழுந்துச்சு.. அன்னைக்கு, நான் லிசனிங் மோடுலேதான் இருந்தேன்..நம்புங்க...ப்லீஸ்!)

ஏன்?

"ஏன்னா..சிம்பிள், பையனுக்கு வேலை கொடுத்தா ஒரு பேமிலியே பிழைக்கும். பொண்ணுக்கு வேலை கொடுத்தா அது எக்ஸ்ட்ரா மணிதான்."

கடந்த வாரத்தில், பழைய அலுவலகத்தில் வேலை செய்த‌ நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. ஒன்றாக ஒரே நாளில் அந்த அலுவலகத்தில் சேர்ந்தவர்கள். அந்த அலுவலகத்தை விட்டு வந்துவிட்டாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வது வழக்கம். ஆண்களும் பெண்களுமாக ஒரு ஆறேழு பேர் இருந்தோம். மெதுவாக பேச்சு வேலை, வீடு,குடும்பம், குழந்தைகள்,சினிமா என்று சுழன்று அப்புறம் கழுதை கெட்டால் குட்டி சுவராக அலுவலகம் மற்றும் வேலையில் வந்து நின்றது. அப்போது வந்து விழுந்ததுதான், இந்தக் கேள்வியும் அதற்கான பதிலும் .


(இன்டர்வியூவிலே பொண்ணுங்களுக்குத்தான் எப்போவும் வேலை கொடுப்பாங்கன்னு பொருமும் கோஷ்டி இல்லையென்றாலும்) Progressive minded என்று சொல்லிக்கொள்ளும் இவன் மட்டுமில்லை... இன்னும் சிலரும் இதே கருத்தை பிரதிபலிப்பதை கண்டிருக்கிறேன். ஆபத்தான கருத்துதான் என்றாலும் கேட்டுக்கேட்டு ஷாக்கிங் எல்லாம் ஒன்றும் இல்லை. இத்தனைக்கும், அங்கிருந்த எங்கள் நண்பர்களில் சிலர்( பெண்கள்) குடும்பப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டு தனியாக வாழ்பவர்கள்.


இந்த எண்ணம் தோன்ற என்ன அடிப்படைக் காரணம்?


திருமணமாகிவிட்டால் பெண்ணுக்கு தனது குடும்பத்தை அதாவது தனது தாய் தந்தையரை பேண வேண்டிய அவசியம் இல்லை. திருமணமான பெண் தனது கணவனைச் சார்ந்தவள். அதனால், அவளுக்கு முதல் கடமை குடும்பம்தான், கேரியர் என்பது இரண்டாம் பட்சமே என்ற எண்ணம்தான். சமூகமே ஒட்டு மொத்தமாக இப்போக்குடையதாக இருக்கையில் ஆணையோ பெண்ணையோ குறை சொல்வதில் அர்த்தமில்லை.

25 வயதுடைய ஒரு பெண்ணும் ஆணும் ஒரே நேரத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாகவே, ஒரு ஃப்ரெஷரையோ அல்லது இருவருடங்கள் அனுபவங்கள் இருப்பவரையோ வேலைக்கு எடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், 25 அல்லது 27 வயதுக்கு மேற்பட்ட மணமாகாத பெண்ணை (அவர் இனி ரிசோர்ஸ் எனப்படுவார்) வேலைக்கு எடுப்பதில் ஒரு தயக்கம் இருப்பதை எந்த மேனேஜருமே ஒப்புக்கொள்வார். ஏனெனில், அவரைப் பொறுத்தவரை, 'மைன்ஸ்வீப்பர் கேமில் வெடிக்கும் குண்டுபோல' அந்த ரிசோர்ஸ் எப்போது வேண்டுமானாலும் மணமாகிச் செல்லலாம். அதன்பின், அவர் அதே ஊரில் அதே கம்பெனியில் தொடர்வாரா என்பது சந்தேகமே. அதாவது திருமணமா கேரியரா என்று வரும்போது ரிசோர்ஸ்கள் பெரிதும் திருமணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். மணமகன் எந்த ஊரோ எந்த நாடோ அங்கு செல்ல வேண்டியது அவரது கடமை. ஒருவேளை அதே கம்பெனியில் நீடித்தாலும் அந்த ரிசோர்ஸை வைத்து ப்ராஜக்ட் திட்டங்களை தீட்டுமுன் இன்னொரு ரிஸ்க்கையும் 'ஃபோர்ஸீ' செய்யவேண்டும். மருத்துவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டபின் பெற்றோருக்கு அடுத்து செய்தியை பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மேனேஜரிடம் - ப்ராஜக்ட் திட்டங்கள்! பிரசவ கால விடுப்போடு, அந்த ரிசோர்ஸை குறைந்தது ஆறுமாதங்களுக்கு நம்ப முடியாது. அதனால், அவரை வைத்து பிளான் செய்வது கடினமானது. இப்போது நான் சொன்னவை எல்லாம் வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பொதுவாக அநேக கம்பெனிகளில் நடைமுறையில் உள்ளவையே. இதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும்போது, கர்ப்பமாக இருக்கும் பெண் வேலை தேடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.


வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருப்பதால், ஓரளவிற்கு பெண்களுக்கு வசதியாக இருந்தாலும் அதிலும் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மேலும், எல்லா கம்பெனிகளிலும் சாத்தியமாக இருக்காது. ‍அலுவலகத்திலும், வீட்டிலும். அதனை உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். இதற்கு நீங்கள் ஒரு மேனேஜராகத்தான் இருக்
க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.




மெட்டர்னிட்டி லீவு (டென்மார்க்கில் ஆறு மாதங்களுக்கு மேல்!) முடிந்தபின் அவர்க்ள் வேலையில் தொடர்வதும் சந்தேகத்துக்குரியதே. குழந்தையை பார்த்துக்கொள்ள யாருமில்லையெனில் முதலில் பலியாவது பெண்களின் கேரியர்தான். பெண்ணின் அம்மா அப்பா வீட்டோடு வந்து தங்க மாட்டார்கள். அவர்களுக்கோ அது அவமானம். இல்லாவிட்டால், அதற்குள்ளாக ஏதாவது சண்டை வந்து பெண்ணின் பெற்றோர் வந்தாலும் தங்க முடியாத நிலைக்கு உள்ளாகி இருப்பார்கள். இல்லையேல், பையனின் பெற்றோரோடு பெண்ணிற்கும் உரசல்கள் வந்து சேர்ந்திருக்கும். இல்லை, இருபக்கத்து பெற்றோருக்கும் உதவ முடியாத ப்ணிச்சூழல்....எது எப்படியோ, குழந்தை வந்துவிட்டால் இந்த மாதிரி நேரத்தில் பெரிதும் பலியாவது பெண்ணின் கேரியர்தான்.
இதைத்தாண்டி வேலைக்கு வரும் ரிசோர்ஸ்கள் பெரும்பாலும் டெஸ்டிங்கையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில், இப்போது அவர்களது முக்கியம் நேரமும், வேலையில் நீடித்திருக்க வேண்டிய தேவையும்தானே தவிர கேரியர் இரண்டாம் பட்சம்தான். இதற்கு நடுவில், உடல்நலம் சரியில்லை அல்லது தடுப்பூசி போட வேண்டியது, குழந்தையை ப் பார்த்துக்கொள்ளும் ஆயாம்மா எடுக்கும் எதிர்பாரா லீவுகள்....இன்னபிறவெல்லாம் சமாளித்து டெலிவரபிள்ஸ் காட்ட வேண்டும்.

இதில், ஓடியிருக்கும் ஒருவருட சைக்கிளில் ரிசோர்ஸ்களின் மூன்று மாத பிரசவ விடுப்புகள் போக, மேலதிக‌ லீவு ஏதேனும் எடுத்திருந்தால் அது கேரியர் வளர்ச்சியை கண்டிப்பாக பாதிக்கும். ஏனெனில், பிரமோஷன்களுக்கான தகுதியை இழந்திருப்பார்கள். ஒரு மாத ட்ரிப்கள் அல்லது கஸ்டமர் சைட் விசிட் போன்றவற்றில் டைனமிக்காக முன்பு போல இருக்க முடியாது. ஏனெனில், குடும்பச்சுமையை சுமந்தாக கட்டாயத்தில் இருக்கும் ரிசோர்ஸ்கள் 'வேலை' என்பது இருந்தால் போதும், மீதியை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருப்பார்கள். எதைக்கொடுத்தாலும் "வேல்யூ ஆடட்" என்பதைவிட, கொடுத்த வேலையைச் செய்வது என்ற நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பார்கள்.


இதே நிலைமை, ஆண்களுக்கு இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவு - சொல்லப்போனால் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு கூட இருக்காது. "உத்தியோகம் புருஷ லட்சணம்". மேலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் கூட்டமும் இதில் இருக்கும். இருவருமே வெளிநாடுகளில் வேலை செய்தால், அங்கு உதவிக்கு யாராவது ஒருவருடைய பெற்றோர் கண்டிப்பாக கூட இருப்பார்கள். அப்படி இல்லா விட்டால், மனைவி வீட்டிலிருப்பார். அப்படி இல்லாவிட்டாலும், வெளிநாடு சென்றபின், அங்கு வீட்டு வேலைகளை பகிர்ந்துக்கொள்வதை ஆண்கள் (விதிவிலக்குகள் இருந்தாலும்) பொருட்டாக கருதுவதில்லை. (அதே ஆண்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டால் நடந்துக்கொள்ளும் முறையே வேறு. )

இப்போது, அந்த ஆணிடம் வருவோம். சேர்ந்த ஆறுமாதங்களிலோ ஒரு வருடத்திலோ (தானாக வராவிட்டாலும், சண்டையிட்டாவது) லாங்டெர்ம் அசைன்மென்டாக அவர் ஆன்சைட் சென்றிருக்கலாம். அவருக்கும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்திருந்தாலும் எந்த பெரிய மாறுதலும் இருக்காது. திருமணமானதிற்கு ஒரு ட்ரீட் மற்றும் குழந்தை பிறந்தால் அதற்கு ஒரு ட்ரீட் என்ற அளவில் முடிந்து போயிருக்கும். பிரசவ விடுப்பாக மூன்று நாட்கள். சமயங்களில் ஊருக்கு போய்வர ஒரு வாரமாக நீடிக்கப்பட்டிருக்கலாம்.அவர் குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் கூட ஆன்சைட் செல்லலாம். நைட் கால்கள் நிமித்தம் தாமதமாக வீட்டிற்கு வரலாம். கேரியரை மாற்ற வேண்டிய, என்ன வருகிறதோ அதை எடுத்துக்கொள் என்ற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார். முக்கியமாக, No post-partum depressions! வீட்டிலும் வெளியிலுமாக சூழல்களை சமாளித்து அப்ரைசல் லெட்டர் வாங்கும்போது "முணுக்கென்று" கண்களில் தளும்பி நிற்க வேண்டிய நிலையும் இல்லை. முக்கியமாக எந்த பிரமோஷன்களையும் இழந்திருக்க மாட்டார். ரோல் மாற்றங்களில் சில படிகள் முன்னேறியும் இருக்கலாம்.


பொதுவாகவே, திருமணமாகி குழந்தைகளோடு பள்ளியில் செட்டிலாகி விட்ட பெண்கள் விரைவில் மாற்றங்களை விரும்ப மாட்டார்கள் என்ற எண்ணம் வெளியில் தெரியாவிட்டாலும் உள்ளூர உண்டு. ஏனெனில், ஒரு .5 புள்ளிகள் அப்ரைசல் குறைந்தாலே பேப்பர் போடும் ஆண்கள் உண்டு. ஆனால், (.5 என்ன 1 புள்ளி குறைந்தாலும் ) பெண்களுக்கோ, "அடுத்ததுலே பார்த்துக்கலாம்ப்பா, சென்னையிலே ஆப்சன்ஸும் கம்மி" என்றோ அல்லது "இதுதான் வீட்டுப் பக்கத்துலே இருக்கு, சாயங்காலம் சீக்கிரம் போய் தைகளை கூட்டிட்டு வரலாம்" என்பதோதான் முடிவாக இருக்கும்.


இதையெல்லாம் சமாளித்து ப்ராஜக்ட் லீடாகவோ மேனேஜராக வந்துவிடலாம். ஆக்சலரேட்டட் பிரமோஷன்கள் வாங்கி உயர்ந்தவர்களும் உண்டு. ஆனால், எத்தனை பேர் விபிகளாக ஜி எம்களாக, சீஇஓ ‍களாக‌ உயர்ந்திருக்கிறார்கள்?
உயர முடிந்திருக்கிறது? இறக்கைகள் பறக்க எத்தனித்தாலும் கால்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு இரும்பு குண்டு கீழ்நோக்கியல்லவா இழுக்கிறது?

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். ஒரே நிலையில் இருக்கும் ஆண், பெண் இருவரில் ஆணுக்குத்தான் குடும்பத்தைச் சுமக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று நினைப்பது சரியானதா? ஒரு கட்டத்தில், பார்த்தபோது என்னை சுற்றியிருந்த எனது நெருக்கமான நண்பர்கள் பலர் குடும்பப் பிரச்சினைகளால் பிரிந்திருந்தனர். பெற்றோர் சம்மதமில்லாமல் காதல் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு சென்றுவிட்ட செல்வியும் அவளது கணவரும் வேலை செய்தேயாக வேண்டிய நிர்பந்தத்தின் நிமித்தம் வெவ்வேறு மாநிலங்களில் வாழ்கிறார்கள். (So near, yet, so far.) கடன் வாங்கிவிட்டு ஓடிவிட்ட‌ அப்பாவுக்காக பர்சனல் லோன் வாங்கி தனது வருமானத்தில் அதை அடைத்து, தங்கையை படிக்க வைத்து, அம்மாவையும் கவனித்துகொண்ட லீமாவை பார்த்திருக்கிறேன். 'ஏடிஎம் கார்டை கொடுக்கவில்லையென்றால் உன் கணவனோடு உன்னை வாழவிடுகிறேனா பார்' என்று மகனை தன்னோடு கூட்டிக்கொண்டு சென்றபின், இருவருடங்கள் தனியாக வாழ்ந்த சுபா....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

படிக்கும் அனைத்து பெண்களுமே வேலைக்கு வந்துவிடுவதில்லை. ஐடி - யால், முன்பைவிட பெண்கள் அதிகமாக வேலைக்கு வருகிறார்கள். அதுவும் கூட பெண்கள் முன்னேற வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல...ஆள் பற்றாக்குறையால்தான் என்பதை மறுக்க முடியாது! எத்தனை அலுவலகத்தில் பாதிக்குப் பாதி பெண்கள் இருக்கிறார்க்ள்? அதிகபட்சம், 35 முதல் 40 சதவீத பெண்களே இருப்பார்கள். கல்யாண செக்போஸ்ட், குழந்தை செக்போஸ்ட் தாண்டி வருபவர்கள் அவர்களிலும் குறைவுதான். (புள்ளிவிவரங்கள் கேட்காதீர்கள்‍, எல்லாம் கண்ட, கேட்ட அனுபவம்தான்)


எனவே, வேலைக்கு வரும் பெண்கள் எல்லோரும் ஸ்பாவுக்கும், ஷாப்பிங் போவதற்கும் மட்டுமே சம்பாரிப்பவர்கள் இல்லை. ("உனக்கென்னப்பா, டபுள் இன்கம், ஹைக் வரலன்னாலும் பரவால்ல, நீ சமாளிச்சுப்ப, எங்கள மாதிரியா" - ‍ கணவனும் மனைவியும் வேலை செய்பவர்களாக இருந்தால், இந்த டயலாக் கண்டிப்பாக சொல்லப்படும், கிண்டலுக்காகவேனும்.)


கேரியர் மட்டும்தான் முக்கியம் என்றோ அல்லது வேலைக்கு செல்வது மட்டுமே பெண்களின் சுதந்திரம்/முன்னேற்றப்பாதை என்றோ நான் சொல்லவரவில்லை. வேலைக்குச் செல்வதோ செல்லாமலிருப்பதோ, எதுவாக இருப்பினும் தான் விரும்புவதை செய்வதில்தான் சுதந்திரம் என்பது இருப்பதாகக் கருதுகிறேன்.

இருந்தாலும்,பெற்றோரின் உடல் நலத்திற்காகவும், தனது குழந்தைகளுக்காகவும் சம்பாரிக்க வேண்டிய கடமை எப்படி ஆண்களுக்கிருக்கிறதோ அதே கடமை அவர்களுக்குமிருக்கிறது. சொந்தக்காலில் நிற்கவேண்டியது எப்படி ஆண்களுக்கு அவசியமாகிறதோ அதே அவசியம் அவர்களுக்குமிருக்கிறது.


அடுத்த முறை இன்டர்வியூவில் ஒரே தகுதிகள் கொண்ட ஆணையும் பெண்ணையும் சந்தித்தால் மேலே உள்ள வரிகளை நினைத்துக் கொள்ளுங்கள்!

பி.கு : அமுதா,பூங்குழலி, லஷ்மி, தீபா,ஹூசைனம்மா : ஹையயோ...ஓடாதீங்க...
No, you are not tagged, Juz share your thoughts - இங்கேயாவது இல்லே உங்க பதிவுலேயாவது!

Monday, October 18, 2010

Same same sweet....?

மோசமான நினைவுகளோடு பிணைந்திருந்ததால் அவ்வுடையை
தூக்கியெறிந்தேன். அழகிய உடைதான் அது.. அதில் நான் இன்னும் அழகுடன் மிளிர்வதாகத்தான் தோன்றியது. முதன்முதலில் அதை உடுத்திக்கொண்டபோது, வெறுக்கத்தக்கதான அனுபவங்கள் கொண்ட நாளொன்றைச் சந்திக்க நேர்ந்தது. அடுத்தமுறை உடுத்திக்கொண்டபோதோ, துயரமான முந்தைய நினைவுகளே நாள் முழுதும் என்னை ஆட்கொண்டன. கைக்கெட்டாத உயரத்தில், அலமாரியின் முடுக்கில், கண்ணுக்கெட்டாத இடத்தில் சுற்றியெறிந்தேன். என்றாலும், அது கண்ணுக்கினிய அழகிய‌ உடைதான்.....

Saturday, October 16, 2010

பப்பு டைம்ஸ்


கடந்த ஆறுமாதங்களாக ஆங்கில எழுத்துகளை எழுத ஆரம்பித்திருப்பது தெரியும். பள்ளியில் தமிழ்/இந்தி என்றதில் தமிழை தேர்ந்தெடுத்தோடு சரி. ஆன்ட்டியை கடந்த டெர்மில் சந்தித்தபோது தமிழ் விரைவில் ஆரம்பித்து விடுவோம் என்று சொல்லியிருந்தார். பழைய டைரிகளின் புதிய ஓனர் பப்பு எழுதிக்கொண்டே, 'ஔ, ஔஔ' எப்படி எழுதணும் ஆயா என்றாள். எட்டிப் பார்த்தால், மேடத்தின் கைவண்ணம்! ஆங்கில எழுத்துகளை கற்றுக் கொள்வதை விட தமிழ் கற்றுக்கொள்வதைப் பற்றித்தான் மிகுந்த கவலையாக இருந்தது. உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள்....ஆனால், ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொண்டதைவிட வேகமாக அ,ஆ கற்றுக்கொண்டது போல தோன்றியது. க ங ச....எப்போது எனது அடுத்த கவலை ஆரம்பம்..;‍-)

தங்கேஸ்வரி ஆன்ட்டிக்கு நன்றிகள்!




மூன்றெழுத்து ஆங்கில் வார்த்தைகளை எழுதுகிறாள். ஒலிக்கும் சத்தங்களைக் கொண்டு வார்த்தைகளை காயின் செய்வதுதான் பெரும்பாலும். மேலும், எழுதி எழுதி cat,mat,rat etc - மனதில் பதிந்து போயிருக்கிறது போல‌. வழக்கமாக அதை எல்லாம் முதலில் எழுதியபின், புதிதாக எழுத வார்த்தைகளை யோசிப்பாள். அதில், புதிதாக கண்டுபிடித்த வார்த்தைகள் சில.

ziro - zero
cit - kite
jue - zoo
jac -?
ist - ? (east or something, I forgot)
boji -bujji




எழுதும்போது தவறு வந்துவிட்டால் அதை அழிக்கவேண்டாம், அடித்துவிட்டு சரியாக எழுத வேண்டும், வீட்டிலும் எழுதும்போது அதேபோல பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆன்ட்டி சொல்லியிருந்தார். தவறை திருத்திக்கொள்ள உதவுமாம். ஹோம் ஒர்க் நோட்டிலும் இதையே எழுதி அனுப்பியிருந்தார். பப்பு,எழுதியது அழகாக வரவில்லை அல்லது தவறான உச்சரிப்பு என்று எண்ணினால் அழிப்பாள்."அழிக்கவேணாம் பப்பு, அடிச்சுடு, பக்கத்துலே எழுது" என்றேன் அவள் அழிக்க முற்பட்டபோது?

அவள் செய்ததுதான் ஹைலைட்.

ரப்பரை கீழே வைத்துவிட்டு, தவறாக எழுதியிருந்ததின் மேல் கையால் ஒரு அடி!!! (மெகா வாட் பல்பு!)

ஸ்ட்ரைக் அவுட், பப்பு என்றதும், சமாதானமாகாமல், அதனை அடித்துவிட்டு பக்கத்தில் திருத்தி எழுதினாள். அடுத்தநாள், மறக்காமல் ஆன்ட்டியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டுதான் ஓய்ந்தாள்.

இன்னும் என்னவெல்லாம் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வருமோ?


கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது கர்சர் காணாமல் போய்விடும். கர்சரை திரும்பக் கொண்டு வர வைக்கும் கீ பெயர் "இஸ்க்".

Esc கீதான் அது!

Friday, October 15, 2010

நவராத்திரி ‍ @ 360 டிகிரி

சாலையின் இருபுறங்களிலும் பொரி மூட்டைகளும் பழக்கடைகளும் அலங்காரப் பொருட்களுமாக நிரம்பியிருக்கின்றன. அநேகமாக எல்லா அலுவலகங்களிலும் இப்போது பூஜைக்கான ஆயத்தங்கள் நடந்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேலை நிமித்தம், நான் நேற்று சென்றிருந்த அரசு அலுவலகம் கூட இதற்கு விதி விலக்கில்லை. பெரும்பாலான பள்ளிகள், தசரா விடுமுறை அல்ல‌து பூஜா ஹாலிடேஸ் என்று கடந்த ஒரு வாரமாக விடுமுறை. உள்ளகரத்தில் இருக்கும் பியூட்டி பார்லரிலிருந்து அண்ணா நகரில் இருக்கும் கடைவரை ஃபெஸ்டிவல் ஆஃபர் - எல்லாம் நவராத்திரியை முன்னிட்டுதான்.

நவராத்திரி அல்லது ஒன்பது நாட்கள் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் / இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரும் கொண்டாடுகிறார்களா? இது எல்லாருக்குமான பண்டிகையா?

கொலு வைப்பது என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் வழக்கமாகத்தானே இருந்து வருகிறது. ஏன் சாமி கும்பிடுபவர்கள் எல்லோருமே கொலு வைப்பதில்லை?

நவராத்திரி அல்லது தசரா இந்துக்களின் பண்டிகையாக சொல்லப்பட்டாலும் பிராமணர்களின்/உயர்சாதியினரின் பண்டிகை. எனக்குத் தெரிந்து பெரும்பாலும் பார்ப்பனர்கள் மட்டுமே கொலு வைப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படியே பார்ப்பனரல்லாதார் வெகுசிலர் வைத்தாலும், 'ரொம்ப சுத்தமா இருக்கணும், தினம் பூஜை பண்ணனும்' என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.கொலு வைக்கும் பழக்கம் இல்லாமல் வளர்க்கப்பட்ட பலரும், இந்துத்வா பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்காக கொலுவை சும்மாவேனும் வைக்கிறார்கள்.

அதைத்தாண்டி, மற்ற சாதியினர் யாருக்கும் கொலு வைக்கும் வழக்கம் இல்லை என்பதுதான் இதுவரை நான் கண்ட உண்மை. ஆம்பூர்,வடலூர் போன்ற சிற்றூர்களில் கொலுவுக்கோ அல்லது நவராத்திரிக்கோ இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பார்த்ததில்லை. நகரங்களில் இதெல்லாம் எதுவும் இருக்காது என்று நினைத்துக்கொண்டிருந்ததில் ஏமாளியாகி போனேன். இங்குதான் கொலுவும், ஆவணி அவிட்டமும், அமாவாசையும், பௌர்ணமியும் பெரிதாக கொண்டாடப்படுகிற‌து.

நகர்ப்புறங்களுக்கு வந்துவிட்டாலும் சாதிகள் என்றும் மறைந்துவிடவில்லை.
நுணுக்கமாக வெளிப்படவே செய்கின்றன. சாப்பிடும் உணவு முறையிலிருந்து சாதிரீதியாக பண்பாடுகளும் வாழ்வும் வேறு வேறாகத்தானே இருக்கின்றன. சிலமாதங்கள் முன்பு #உணவு முறை ட்விட்டரில் ட்ரெண்டிங்காக இருந்தது . அதில் பலரும் பலவித உணவுகளை ட்வீட் செய்தனர்.

பால் சோறும் பக்கடாவும் #நாடார் இரவு உணவு,
வத்தக்குழம்பு, இன்னபிற..என்று ஒரு ஃபுல் மீல்ஸ் அளவுக்கு இருந்தது (என்று நினைக்கிறேன்) #ஐயர் உணவு
இதே போல நாயர் உணவு, கொங்கு உணவு,செட்டிநாடு,கொங்கனி இரவு உணவு என்று பலவித Tagகள் இருந்தன. இதிலெல்லாம் கலந்துக்கொள்ள ஆர்வம் இல்லையென்றாலும் நான் சொல்வதாக இருந்தால் என்ன சொல்லியிருப்பேன் என்று என்னால் கடைசி வரை முடிவுக்கு வரவே முடியவில்லை. மீதமிருக்கும் காலை மற்றும் மதிய உணவை வைத்து இரவை பார்த்துக்கொள்ளும் வழக்கம் தான். உணவு கிடைக்குமா என்ற நிலையில் இருப்பவர்களுக்கு? எனில், பாரம்பரிய அலலது ஸ்பெஷாலிட்டியான உணவு என்பது சாதிரீதியான உணவு என்றுதானே ஆகிறது?

ஊரிலெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக யாராவது சொல்வதோடு அல்ல‌து பூஜைக்கு அழைப்பதோடு முடிந்துவிடும். இப்போதோ, ரவராத்திரி சேல்ஸ் என்றும் ஆஃபர் என்றும் வியாபார‌ நோக்கத்திற்காக பார்ப்பனியத்தை, சாதியத்தை பறைசாற்றும் விழாவாகவே மாறி உள்ளது. ரம்ஜானுக்கு/மாற்றுமத பண்டிகைகளுக்கு லீவு விடாத பள்ளிகளிலும், கோவில்களிலும் கொலு வைப்பதைப் பார்த்து வீட்டிலும் கொலு வைத்து பூஜை செய்வது என்பது பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிப்பதாகத்தானே இருக்கிறது?

இந்த ஒன்பது நாள் கொண்டாட்டத்தில் பெரும்பாலும் எல்லோராலும் கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையுமே. 'உழைப்பே தெய்வம்' என்றும் செய்யும் தொழிலே தெய்வம்' என்றும் அன்றாட வாழ்விலிருந்து விடுபட - கொண்டாட்ட மனநிலைக்கு ஒருநாள் தேவை என்ற அளவில் ஆயுத பூஜையை புரிந்துக்கொண்டாலும் அது களையப்படவேண்டிய ஒன்றுதான். அதில் எந்த பண்பாடும் இல்லை.

கொலு வைக்கும் சாதியினர் ஆயுதபூஜையை கொண்டாடி பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. படியையும்,மரக்கால்களையும், கத்திகளையும் சுத்தம் செய்து கொண்டாடும் நாளில் கொலு வைக்கும் மக்கள் எந்த ஆயுதங்க்ளை வணங்குகிறார்கள்? ஏன் கொலு வைக்கும் மக்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடுவதில்லை?

மகாகாளி, மகாலஷ்மி, மகா சரஸ்வதி என்று சக்தியின் மூன்று அவதாரங்கள் இந்த 9 நட்களிலும் மூன்று மூன்று நாட்களாக பிரித்து கொண்டாடப்படுகின்றன. இதிலும் கூட சாதியின் அடையாளத்தைப் பார்க்கலாம். பார்ப்பனர்கள், சரஸ்வதியையும் (அறிவார்ந்த மேல் தட்டு), சத்திரியர்கள் காளியையும் (வீரமரபு) வைசியர்கள் லஷ்மியையும் (செல்வம்,வணிகம்) வழிபடுகிறார்கள். இதுதான் வர்ணாசிர‌ம் இந்தியாவில் நவராத்திரி கொண்டாடப்படும் விதம்.

சாமி என்றால் ஒரே வடிவத்தில் கொண்டாடலாமே...ஏன் வருணத்திற்கொரு வடிவமாக சக்தி எனும் தெய்வம் இருக்கவேண்டும்? நலம் விசாரிப்பதில் கூட வர்ணாசிரமத்தில், வருணத்திற்கு ஒரு முறையாக இருக்கிறது. சாமிகளும் கூட வேறு வேறுதான்.

'அசுரனை வதம் செய்த காளி சக்தியின் அவதாரம்' என்றும் 'பெண்மையை சக்தியாகவே வழிபடும் இந்து மதம்' என்றும் புனிதமாக பலவித விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும், சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் பெண்ணை அடக்கியும் ஒடுக்கியும் வைத்திருக்கும் இந்து மதத்தின் கோர முகத்தை மறைக்கவே இந்த முகமூடி உபயோகப்படுகிறது.

சூத்திரனுக்கு எந்த சமூக உரிமையும் கொடுக்காத, பெண்மையை வழிபடுகிறோம் என்று சொல்லும் இந்த இந்துச் சமூகத்தில்தான் தலித் பெண்கள் மானப்பங்க படுத்தப்படுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பாகக்கூட, ஒரு தலித் பெண்ணை கும்பலாக வன்புணர்ச்சி செய்து அந்த‌ வீடீயோவை மொபைலில் சுற்றுக்கு வேறு விட்டிருக்கிறார்கள், மகாராஷ்ட்டிராவை சேர்ந்த் சாதி இந்துக்கள். காவல்துறையினர் அவர்களை கைது செய்ததை செய்திகளில் கண்டிருக்கலாம்.

பெண்களை மதிப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தில் பெண்களின் நிலை என்ன?

சொத்துரிமையில் சம பங்கு கிடையாது. ஐயப்பனை கும்பிடுவதில் கூட வேண்டாம், சக்தி எனும் பெண் தெய்வத்தை வழிபடும் நவராத்திரி காலத்திலேயே மாதவிடாயான பெண்ணுக்கு அனுமதி உண்டா? இயல்பான ஒன்றுக்கே இந்து மதத்தில் இத்தனை ஒடுக்கு முறைகள் என்றால்.....தலித்துகளைப் பற்றியும் தலித் பெண்களைப் பற்றியும் கேட்கவே வேண்டாம். தலித்துகளுக்கென்று ஒதுக்கப் பட்ட நிதியிலிருந்துதானே இன்று காம்ன்வெல்த் போட்டிகள் ந்டைபெற்றது. பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு தலித் பெண்களை விமான பணிப்பெண்களாக நியமனம் செய்ய தடையாக இருந்தது எது? எந்தவொரு தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்தாலும், அது சாதி இந்துக்களால் கும்பலாகவே நடத்தப்படும் என்றும் ஒரு பத்திரிக்கையில் வாசித்த நினைவு.

90களில் நடந்த மண்டல் கமிஷனின் பிரச்சினை என்று நினைக்கிறேன். இடஒதுக்கீட்டுக்கெதிராக உயர்சாதியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். அதில் எதிர்ப்பு தெரிவித்த தில்லிப் பெண்கள் எழுப்பிய குரல் "நாங்கள் வேலையற்றவர்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா" என்றோ "உத்தியோகமற்ற கணவர்கள்தான் எங்களுக்கு கிடைப்பார்கள்" என்பது போலவோ இருந்தது. (அப்போது நான் சின்னப்பெண், சரியான பதங்கள் நினைவு இல்லை) ஆனால் அதன் பொருள் நன்றாக நினைவில் இருக்கிறது. அதாவது இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் படித்து முன்னேறி வந்து வேலை வாய்ப்பும் பெற்றுவிட்டால் எங்கள் சாதி ஆண்கள் வாய்ப்பிழந்துவிடுவார்கள். நாங்கள் அவர்களை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்பதுதான். எனில், இடஒதுக்கீட்டில் படித்து வேலைக்கு வரும் ஆண்களை திருமணம் செய்துக் கொள்ள அவர்களைத் தடை செய்தது எது?

கோத்திரங்கள் பார்த்து செய்யும் திருமணங்களும், இன்ன சாதியில்தான் நீங்கள் பிறக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் முறைகளுமாக சாதியை உயர்த்திப் பிடிக்கும் சனாதன மதத்தின் ஒரு முகம்தான் இது. இதன் கொண்டாட்டங்களை இன்னும் தொடரவேண்டுமா?

சட்டத்தின் முன் ஆணும் பெண்ணும் சிறுபான்மையினரும், பெரும் பான்மையினரும் சமம் என்று இருந்தாலும் பார்ப்பனரைத் தவிர வேறு சாதியினர் கோவில்களில் அர்ச்சகராக முடியாது.சாதியின் பெயரால் இரட்டைக் குவளை முறை இன்னமும் இருக்கத்தானே செய்கிறது. பாயி தூஜ் என்று உடன் பிறந்தவர்களுக்காக விரதம் இருக்கவும், கார்வா சௌத் என்று கணவன் உடல் நலத்திற்காக விரதம் இருக்கவும்தான் எத்தனை பண்டிகைகள்!அந்த காலத்தில் உடலுழைப்பு இல்லாத பார்ப்பனர்களுக்கு பொருளையும் உணவையும் வழங்குவதற்காகவே இந்த விழாக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். மனைவி உடல் நலத்திற்காக கணவனுக்காக் ஏதாவது விரதங்கள் இருக்கிறதா அல்லது தமக்கைகளின் நலத்திற்காக அண்ணன் தம்பிகளுக்குத்தான் ஏதாவது விரதங்கள்/நோன்புகள் இருக்கிறதா?

அமெரிக்காவில் கருப்பர்களும்,பாகிஸ்தானில் அஹமதியா முஸ்லிம்களும், ஆஸ்திரேலியாவில் பழங்குடியனரும் இந்த ஒடுக்குமுறையை பாலியல் ரீதியாக, இன ரீதியாக‌ பலவேறு வகைகளில் சந்திக்கிறார்கள். சாதி மற்றும் வகுப்பு ரீதியாக இருப்பதுதான் இந்தியாவின் தனித்துவம்.

மாயாவதியை எடுத்துக்கொள்வோம். மற்ற அரசியல்வாதிகளுக்கும் மாயாவதியின் தோற்றத்திற்கும்தான் வித்தியாசத்தையும் கவனித்திருப்பீர்கள்... சோனியா காந்தி, ப்ரதீபா பாட்டில்,சுஷ்மா, பிருந்தா காரத் என்று நம்முன் நிறுத்தப் படும் பெண் அரசியல்வாதிகள் அனைவரும் வெளிர் நிற புடவை கட்டி முந்தானையை போர்த்திருப்பார்கள். மாயாவதி, சல்வாரும் துப்பட்டாதான் அணிந்திருப்பார். அவரது குரலும், கம்பீரமாகத்தான் ஒலிக்கும்.

பத்திரிக்கைகளிலிருந்த் எல்லா ஊடகங்களும் மாயாவதியைப் பற்றி எழுப்பும் பிம்பம் என்ன? மற்ற உயர்சாதி இந்துபெண்களின் சாதனைகளாக பத்திரிக்கைகள் இடும் பட்டியலைவிட‌ மாயாவதி சாதித்தது அதிகம்தான் என்றாலும், அவரை பற்றிய நெகடிவ் பிம்பம்தான் அழுத்தமாக எழுப்பப்படுகிறது. சினிமா நடிகைகளில் விடுமுறையை, அழகி போட்டிகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கும் ஊடகங்கள் ஏன் மாயாவதியின் சாதனைகளை உரக்க பேசவில்லை? ("Women and politics" பத்தி பேசிக்கிட்டிருக்கும்போது, Perimma shared this particular view, sometime back.)

மாறாக, அவர் புகழை விரும்புவார், சிலைகளை அமைத்துக்கொள்வார் என்றும் அதிக பணம் சேர்த்திருக்கிறார் என்றும்......மற்ற கட்சிகளோடு ஒப்பிடும்போது மாயாவதியின் கட்சி சமீபத்தில் வளர்ச்சியடைந்தது எனில், காலங்காலமாக இருக்கும் காங்கிரஸுக்கும் மற்ற கட்சிகளும் எவ்வளவு பணம் சேர்த்திருக்கும்? அதைப் பற்றி யாரும் பேச மறுப்பதேன்?

கொலு வைப்பதால் பிள்ளைகளின் க்ரியேட்டிவிட்டி வளர்வதாகச் சொன்னாலும் அதன் உள்ளடக்கம் மாறுவதில்லை. மாறாக, பார்ப்பனியம் நம் வாழ்வில் பங்கெடுப்பதை பற்றிய விழிப்புணர்வை கொண்டுவருவதுதான் இன்றைய தேவையாக இருக்க முடியும். ஒருசில முற்போக்குக் கருத்துகள்,பொருளதார விடுதலை காரணமாக பெண்களின் மீதான மதத்தின் - பார்ப்பனியத்தின் பிடி ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், வெற்று கேளிக்கைகளுக்காக அந்த சடங்குகளை திருமப உயர்த்தி பிடிப்பது பழமையின் பிடியிலே நாமாகப் போய் விழுவதாகத்தான் முடியும்.