Saturday, April 06, 2013

ஒரு விளம்பரமும் சில நினைவுகளும்

ஒன்பதாம் வகுப்பில்தான், எங்கள் பள்ளியில் செக்ஷன் பிரித்து மாற்றுவார்கள். இரண்டு செக்சன்களே அப்போது இருந்தது. அப்படி எங்கள் 'ஏ' செக்சனில் வந்து சேர்ந்தாள் ரேணுகா. அவள் நன்றாக படிப்பாள் என்றும் எங்களுக்கெல்லாம் நல்ல போட்டி இருக்கும் என்றும் ஏதோ ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். அதிலும் அவள், இரண்டாவது ரோ‍வில்தான் அமர்ந்தாள்.சரி, இன்னொரு ஞானசௌந்தரி போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, எங்கள் அரட்டை கும்பலோடு அவளும் சேர்ந்து எல்லோரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

ரேணுகாவின் மீது  வகுப்பிலிருந்த எல்லாருக்கும் லைட்டாக பொறாமை இருந்தது என்று நினைக்கிறேன். அவள் அணிந்திருக்கும் வளையல், தலையில் மாட்டியிருக்கும் விதவிதமான ஹேர்கிளிப்புகள் மற்றும் உடனுக்குடன் ஃபேஷனுக்கு வரும் அத்தனை விதமான மிடிகள்/பாவாடை சட்டை என்று கலர்புல்லாக வருவாள். சுடிதார் அணிய மட்டும் அவளது வீட்டில் தடை. உடைகளைவிட, அவளது வளையல், ஹேர் க்ளிப்புகளே எல்லாரையும் ஈர்த்தன.'எங்கே வாங்கினே' என்ற கேள்விக்கு 'பெரிய‌அக்கா வாங்கி தந்தாங்க' என்றோ 'நடுஅக்கா  கொடுத்தாங்க' என்றோ 'சின்ன அக்கா ஆரணிலேருந்து வாங்கிட்டு வந்தாங்க' என்றோ சொல்லுவாள். காந்திமதி ஒரு பெருமூச்சோடு, 'இருந்தா ரேணுகாவோட‌ அக்காங்க மாதிரி இருக்கணும்' என்பாள்.

கால் பரீட்சை/அரை பரீட்சை லீவு வந்தால் நண்பர்களின் வீடு வீடாக போவது வழக்கமாகியிருந்தது. ஒரு நாள் சபீனா வீடு, ஒரு நாள் எங்கள் வீடு என்று.
அப்படி, ஒரு நாள் ரேணுகா வீட்டுக்கு போனபோது அவளது அப்பா மதிய உணவுக்கு வந்திருந்தார். ரேணுகா, எங்களை சத்தம் போட்டு பேச வேண்டாமென்றும், சத்தமில்லாமல் சிரிக்கவும் கேட்டுக்கொண்டாள். ஒன்றுமில்லாமலே நாங்கள் 'கெக்கே பிக்கே' என்று சிரிப்பதாக அப்போது எல்லாரிடமும் பேர் வாங்கியிருந்தோம். சிரிக்காமலிருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது, அப்போது. 


அவ்வப்போது, ரேணுகா, அவளது அப்பா ஸ்ட்ரிக்ட் என்று சொல்லியிருக்கிறாள்.  அது தெரிஞ்ச விசயம்தானே என்று நினைத்திருந்தேன். மேலும், எல்லார்  வீட்டிலுமே அந்த ஸ்ட்ரிக்டைதான் அனுபவித்  திருக்கிறோமே!   'இனிமே தெருவிலே விளையாடாதே!', 'நீ கடைக்கு போக வேணாம், தம்பி போகட்டும்', 'மாடிக்கு எதுக்கு அடிக்கடி போறே' என்று எல்லாருமே அனுபவிப்பதுதானே என்று!!  ரேணுகா அப்பாவின், அந்த ஸ்ட்ரிக்டின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது, அவளது பதட்டத்தையும் பயத்தையும் அப்போதுதான் நேரில் கண்டபிறகு. நாங்கள் மாடி அறையில் குசுகுசுவென்று  பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். ரேணுகாவோ, மாடிக்கும் கீழுக்கும் அலைந்து நாங்கள் பேசுவது கீழே கேட்கிறதா என்று டென்சனிலேயே இருந்தாள். ஒருவழியாக, அவளது அப்பா சென்றவுடன் சகஜமானாள். 'பெண்கள் சத்தமாக பேசுவதோ,சிரிப்பதோ கூடாதாம்,அவருக்கு'.

அதோடு, அவள் சொன்னதுதான் அதிர்ச்சி. அதாவது, பத்தாவதுக்குப் பிறகு அவள் படிப்பது சந்தேகம்தானாம். அவளது அக்காக்கள் எல்லோரும் ஏழாவது அல்லது எட்டாவதுதான் நின்று விடுவார்கள் என்றும், சில வருடங்கள் வீட்டிலிருந்தபின் கல்யாணம் செய்துகொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினாள். அப்புறம், வருடா வருடம் அக்காக்கள் யாரேனும் பிள்ளைபேறுக்காக வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். ரேணுகா அடம்பிடித்து சாப்பிடாமல் எல்லாம் இருந்து  சண்டைபோட்டு ஒன்பதாவது வகுப்புக்கு வந்திருக்கிறாள்.  அதாவது, அவர் சர்வீசிலிருக்கும்போதே எல்லாருக்கும் கல்யாணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் அவர் பாலிசி.இதையெல்லாம் அவள் இவ்வளவுநாட்களாக எங்களிடம் சொன்னதேயில்லை. இதைக்கேட்டதிலிருந்து நாங்கள் ரொம்ப சோகமாகிவிட்டோம்.


 அவரோடு இருக்கும் நண்பர்கள்தான் அவரை கெடுப்பது என்று ரேணுகா அவ்வப்போது பொருமுவாள். 'வேலையிலிருக்கும்போதே கல்யாணம் செய்து கடமையை முடித்தால்தான் நமக்கு கௌரவம்' என்று அவர்கள் அவரிடம் சொல்லுவார்களாம். 'பொண்ணுங்க படிச்சு கையில ஒரு வேலையை வைச்சுக்கணும்' என்று ஆயா என்னை சொல்லி சொல்லி வளர்த்திருந்ததால் 'ஏன் இன்னும் பழங்காலத்து மாதிரி இருக்காங்க' என்று மட்டும் தோன்றியது. ஆனால், ரொம்பவெல்லாம் ஆராயவில்லை, அப்போது.

பத்தாவது முடித்ததும், எப்படியோ ரேணுகா கெஞ்சிக் கூத்தாடி அப்பாவிடம் அனுமதி பெற்று ப்ளஸ் ஒன் சேர்ந்துவிட்டாள்.அதுவே எங்களுக்கு சந்தோஷம் மற்றும் ஆச்சர்யம். ப்ளஸ் டூ முடியும்போதோ, எல்லாருக்கும் எந்த காலேஜில் சேருவோம்? என்ன படிக்கலாம்? என்ற பேச்சுவரும்போது மட்டும் நிச்சயமாக சொல்லிவிடுவாள், 'ஏதோ இது படிக்கிறதே பெரிய விஷயம்!! இதுக்கு மேலல்லாம் வீட்டுல கேக்க முடியாது!" என்று. ரிசல்ட் வந்து எல்லாரும் காலேஜில் செட்டிலானபிறகு, அந்த வருட பூஜா ஹாலிடேஜில் எல்லோரும் சந்தித்தோம். காலேஜ் கதைகளை பேசிப்பேசி, பள்ளிக்கூடம்தான் பெஸ்ட் என்றெல்லாம் பீலா விட்டுக்கொண்டிருந்தோம். ரேணுகாவுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தோம். அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். 'இதுதான் லைஃப்' என்று தனது நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்கு அவளது  ஃபோட்டோ போயிருக்கிறதாம்.  விரைவில் அவர்கள் பார்க்க வருவார்களாம். அவளும் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டினாள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மலர்ச்சியுடன் அவள் எதிர்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.


சில மாதங்களில் ரேணுகாவும் திருமணமாகி வேறு ஊருக்கு போனாள். கல்லூரி விடுமுறைகளில் கல்லூரி நண்பர்கள் ஊர்களுக்குச் செல்வதும், ஊருக்கு வரும் நேரம் ரேணுகா சந்திக்க இயலாமலும் கிட்டதட்ட தொடர்பறுந்த நிலை. வெகுசமீபத்தில், பெரிம்மா கேட்டார், 'ரேணுகா உன்க்கிட்டே பேசுச்சா? ஃபோன் நம்பர் வாங்கிச்சு' என்று! ரேணுகாவின் கணவர் இறந்துவிட்டதாகவும், இரு பையன்களுடன் ஆம்பூருக்கே வந்துவிட்டதாகவும் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பெற்றோர்கள் இல்லாத நிலையில், தனியாக இருந்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். குடும்பத்துக்கான உலைக்காக அவள்தான் ஏதோ வேலைக்கு போவதாகவும், ஆனால் படிப்புக்கே பற்றவில்லையென்றும் சொன்னதை கேட்டபோது எனக்குள் இதயத்தை திருகுவதை போன்ற வலி!!

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தாள் ரேணுகா. ரொம்ப தூரம் அனுப்ப மனமில்லாவிட்டாலும், அரை மணித்தொலைவில் அமைந்திருந்த ஜெயின் கல்லூரிக்காவது அனுப்பியிருக்கலாம்.குறைந்தபட்சம், ஒரு டிகிரி படித்திதிருந்தாலாவது, ஏரியாவொக்கொன்றாக முளைத்திருக்கும் ஏதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக சேர்ந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.  


ச்சே, நல்லா படிக்கிற பொண்ணை அவங்க அப்பா இப்படி பாழாக்கிட்டாரே என்று கோபமாகவும் வந்தது. இப்படி அவர்கள் பாதுகாத்து பாதுகாத்து என்ன பெரிதாக சாதித்துவிட்டார்கள்? உங்கள் பாதுகாப்பினால் உங்கள் மகளின் வாழ்க்கையை அல்லவா வீணாக்குகிறீர்கள்? இப்பொழுது நிலைமை கொஞ்சமாக மாறியிருக்கலாம், அதாவது பெண்ணை படிக்க வைப்பதற்கு மட்டும். ஆனால், வேலைக்கு போக வேண்டுமென்றோ,அவள் தனது காலில் நிற்க வேண்டுமென்றோ எத்தனை அப்பாக்கள் நினைக்கிறார்கள்? 

கற்பகத்தின் அப்பா, ஊருக்கு போகும்போதும் வரும்போதும் கல்லூரிக்கு வந்து அழைத்துச் செல்வார். அல்லது, துணைக்கு யாரையாவது அனுப்புவார். கணவன் தன்னை வெளிநாட்டில் அடித்து கொடுமைபடுத்துகிறான் எனும்போதுகூட அவளது பயமெல்லாம்,  டிக்கெட் புக் செய்தால் எப்படி தனியாக வருவது, பயமாக இருக்கிறது, கூட யாராவது வந்தால் பரவால்லை' என்பதுதான். 'கூடவே வந்து, கூடவே அழைத்துப் போய், கூடவே இருந்து எல்லாம் செய்து நீங்கள் வாரிக்கொண்டதுதான் என்ன? திருமணத்தை, வேறு ஒரு ஆடவனை நம்பும் நீங்கள் ஏன் உங்கள் பெண்ணை நம்ப மறுக்கிறீர்கள்?'
என்றெல்லாம் அவளது அப்பாவிடம் நறுக்கென்று கேட்க வேண்டும்போல இருந்தது. அவரிருந்தால் கேட்டிருக்கலாம்,ஒருவேளை! இப்பொழுது அவளுக்கு ஆறுதலைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாதிருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் பார்த்தேன். பேஸ்புக்கில் யாரோ பகிர்ந்திருந்தார்கள். ஆகோ ஓகோவென்று எல்லாரும் ஒரே புகழாரம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியலின் விளம்பரம் அது. உடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி, தலையை இடித்துக்கொள்ளாமல் தான் கீழே போட்ட துண்டை எடுக்க மனைவை பாதுகாக்கும் கணவன் முதல்,  அப்பாவுக்கு அடுத்து பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று சொல்வதுவரை!! (இதில், ரொம்ப முரணானது, கீழே போட்ட துண்டை எடுக்கும் காட்சிதான்... அவ்வளவு அக்கறை இருந்தால் துண்டை அதற்குரிய இடத்தில் போட வேண்டியதுதானே! ;‍)) அதை பார்த்ததிலிருந்து இன்னும் உரக்க கத்த வேண்டும் போலிருக்கிறது, 'இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறதை எப்பதாண்டா விடப்போறீங்க?'!!
 





இந்த விளம்பரம், மறுபக்கத்தில் எங்களை/பெண்களை கேலி செய்வது போலிருக்கிறது.பாதுகாக்க கூட ஒரு ஆண் இருந்தே ஆக வேண்டும் என்பதுபோல! ஆண் இல்லாமல் உங்களால் இந்த உலகில் தனித்து பாதுகாப்பாக வாழ இயலாது என்ற எண்ணத்தை கட்டமைக்கிறது. ஆண் துணையில்லாமல் குழந்தைகளை வளர்க்கும் பெண்களையும் சேர்த்தே இது தாக்குகிறது.அவர்களது உழைப்பை, தன்னம்பிக்கையை,வெற்றியை கணக்கில்கொள்ளாமல் ஆண் == பாதுகாப்பு என்று எல்லார் மனதிலும் விதைக்கிறது!இந்த விளம்பரத்தை, ரேணுகாவின் சார்பாக‌,கற்பகத்தின் சார்பாக‌, ஆண் துணையில்லாமல் ஆணும் பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை படிக்க வைத்த ஆயாவின் சார்பாக கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

Thursday, April 04, 2013

ஆதிச்சநல்லூரில் தாழிகளைத் தேடி ஒரு பயணம்


இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கினோம். என்பிடியின் 'எலும்பு கல்லான கதை'. 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்தான் இது;" 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்புதான் இது;"

 "ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்பின் மீது மூடிய மண்தான் இது; "

என்று எலும்பின் மீது மூடிய மண், மண் மீது படிந்த ஆற்று மணல், மணலின் மீது ஓடும் ஆறு , அந்த ஆற்றின் நீரில் விளையாடும் சிறுமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்காக ,புதைந்து போன  டிரைசெரடாப்பின் படிமத்தை கண்டுபிடிப்பதாக அந்த கதை செல்லும். 

பப்புவுக்கும் அது போல தானும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை. அதோடு, சில அருங்காட்சியங்களில் கண்ட  தங்க,வெள்ளி நாணயங்கள், அரிக்க மேடு மணிகள்/நாணயங்கள், சாலர் ஜங்கின் விதவிதமான வாட்கள் என்று எல்லாமும் சேர்ந்து  பண்டைய காலத்தின் மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.

கடந்த வாரம் தூத்துக்குடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆதிச்சநல்லூர்,சமீபத்தில் ஹெரிடேஜ் சைட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டோம். 

தூத்துக்குடியிலிருந்து திருவைகுண்டம் சென்றோம். அங்கிருந்து ஆதிச்ச நல்லூர் ஐந்து கி மீ தூரம்.  அந்த வழி முழுவதும் ஒரே  திருத்தலங்கள். நவதிருப்பதியாம். அங்கிருந்து ஆதிச்சநல்லூர் வந்தடைந்தோம்.  பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு இடத்தில் இடதுபுறம் சாலை திரும்பியது. அந்த வழியில் பயணித்தால், ஒரே  தெரு.  இருபுறமும் வீடுகள். அதோடு சாலை முடிவுற்றது. இதற்குபின் எங்கு செல்வது, அல்லது அந்த அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்ட இடம் எங்கு இருக்கிறது என்ற எந்த விபரங்கும் தெரியவில்லை. ஊரிலோ ஈ காக்கை கிடையாது. 

வழியில் தென்பட்ட ஒருவர் ஓட்டுநருக்கு  வழி சொன்னார்.
நாங்கள் வந்த வழியிலேயே திரும்பி, இன்னும் சற்று முன்னால் போனால், வலது புறம் கோயில் வரும். அதற்கு எதிரில் திரும்பினால் ரயில்வே டிராக் வரும். அதுதான் இடம்.   கோயிலை பார்த்துவிட்டோம். அதற்கு எதிரில் இருந்த சாலையில் சென்றோம்.  வலதுபுறம் ஒரே மண்மேடு - முட்செடிகள். இடதுபுறம் ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.அருகில் ரயில்வே டிராக். ரயில்வே டிராக் தாண்டி இருபுறம் புளிய மரங்கள். 

இதற்கு மேல் எங்கு செல்வது என்று தெரியவில்லை. தாழிகள் இல்லாவிட்டாலும் ஹெரிடேஜ் சைட் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறு அறை/தகவல் பலகையையாவது எதிர்பார்த்திருந்தோம். எதுவுமில்லாமல், எந்த பக்கம் செல்வது என்றும் புரியாமல் அந்த மண்மேட்டில் நடக்கத் துவங்கினோம்.  மண்மேடு பரந்துவிரிந்தது. ஆங்காங்கே சிறு சிறு செடிகள். தொலைதூரத்தில் ஆடுகள் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. அருகில் மேய்ப்பர் முக்காடிட்டு நின்றுக்கொண்டிருந்தார்.  



வெயில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் ஏதேனும் ஏ எஸ் ஐ போர்ட் தென்படுகிறதா என்று தேடின. சற்று தூரம் நடந்தோம். ஒரு சில இடங்கள் பாறைகள் புதைந்திருந்தன. தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதையும் நாங்கள் காணவில்லை. ஆதிச்சநல்லூர் கிட்டதட்ட  கி மு பத்தாயிரத்துக்கும் முன்பாக காலகட்டத்தை சொல்கிறார்கள். கற்காலத்துக்கும் நியோலித்திக் காலகட்டத்துக்கும் இடைபட்டது. தாமிரபரணியின் ஆற்றங்கரையில் வளர்ந்த நாகரீகம். 

இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் மக்கள் என்ன செய்திருப்பார்கள், எப்படி  வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணியபோது  அந்த எளிமையான   மண்மேடு வெறுமையாகக் காட்சியளிக்கவில்லை.  மனித குலத்தின் வரலாறாகவே தோன்றியது.இது இறந்தவர்களை புதைக்கும் இடம் எனில், அவர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும் என்று அந்த கரடு முரடான நிலத்தில் யோசித்தபடி நடந்தோம். 

அங்கு கண்டெடுக்கப்பட்ட தாழிகளில், மனித எலும்புகளும், சமையல் பாத்திரங்களும்,  உலோகங்களும் இருந்ததாக சொல்கிறார்கள். தாழிகள் இரண்டு அடுக்குகளாக , ஒன்றை மூடி வைக்க இன்னொரு தாழியாக இருந்திருக்கிறது. அந்த தாழிகளின் மீது பல டிசைன்கள் வரையப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் தளத்தில் பார்த்திருந்தேன்.  இருந்தாலும், இவற்றுள்,  கூர்மையான சிறு சிறு ஆயுதங்கள்தான் ஹைலைட். அவை மிசோலித்திக் காலத்தை சேர்ந்தவை. சென்னைக்கருகில் இருக்கும் குடியம் குகைகள் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இவை அதற்கும் முன்பாக, எனும்போது காலத்தை தாண்டிச் செல்லும் உணர்வு ஏற்பட்டது.

எதிர்பார்த்து வந்ததை, பப்புவுக்கு  காண்பிக்க முடியவில்லை . ஏமாற்றத்துடன்  கார் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தோம்.  எதிரில் இருந்த வயலில் ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. அருகில் இருந்த இளைஞனிடம், விசாரித்தார் ஓட்டுநர். அதற்குள், எங்கிருந்தோ ஒருவர் வந்து சேர்ந்தார்.  தாழிகளை  தான் காட்டுவதாக அழைத்துச் சென்றார். நாங்கள் நடந்த இடத்துக்கு சற்று தொலைவிலேதான்.



கீழே பார்த்தால், புதையுண்ட தாழிகள். அவற்றுக்கு அருகிலேயே இன்னும் சில. அவற்றை தொல்லியல் துறையினர் இன்னும் தோண்டவில்லையாம்.



 ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்த பகுதியில்தான் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதாகவும் அனைத்தையும் சென்னைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார். எங்களைப்போல் தேடி வருபவர்களுக்கு இந்த தாழிகளையும் தான் காட்டுவதாகவும் கூறினார். 


"அந்த காலத்தில் இறந்து போக மாட்டாங்கல்ல, குறுகிதான் போய்டுவாங்க, அவங்களை உள்ளே வைச்சு அவங்களுக்கு புடிச்சதை வைச்சு மூடிடுவாங்க"

அதற்குள் மேலும் சிலர் வந்து  விட்டனர். இவ்வளவு நேரம் எங்கிருந்தார்களோ தெரியவில்லை.

 
இந்த படங்களில் ஒரு கோடு போல புதையுண்ட பானைகளின் விளிம்பைக் காணலாம். உள்ளே எந்த பாட்டி அல்லது தாத்தா உறங்கிக்கொண்டிருக்கிறாரோ, தெரியவில்லை.



"இங்கனதான் போர்டு வைச்சிருந்தாங்க, மழையில விழுந்துடுச்சு" என்றார். அவர் காட்டிய இடத்தில் மற்றுமொரு தாழியின் உடைந்த பாகம் வெளித்தெரிந்தது. கம்பி மட்டும் கீழே கிடந்தது. 

 அதே மழைதான், இந்த தாழிகளையும் வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும், ரோம் மக்களோடு வாணிபம் செய்த அரிக்கமேட்டின்  மணிகளைm மண்ணிலிருந்து வெளியே கொண்டு வருவதுபோல! மழைதான் புதைந்துபோனவற்றை எப்படி மீட்டுக் கொண்டுவருகிறது, மண்ணிலிப்பவற்றையும் , மனதிலிருப்பவற்றையும்!!  

""உள்ளேருந்து நெறைய எடுத்தாங்க. நகையெல்லாம் இருந்துச்சு. தங்கக்காசு கூட இருந்துச்சு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க" என்றார். (மிசோலித்திக்கில் நாணங்கள் இருந்தனவா அல்லது அவை பிற்காலகட்டத்தில் சேர்ந்தவையா?)

"இங்கதான் ஒரு வாட்ச்மேன் இருப்பார். இப்ப எங்கியோ போயிருப்பார் போலுக்கு,கவர்மென்டுலேருந்து ஆள் போட்டிருக்காங்க" என்றார், மேலும். 


நாங்கள், சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். சில பாறைக் கற்களுக்கிடையில் உடைந்த பானைத்துண்டுகள் கிடந்தன. பப்புவுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். உடைந்த பானைத்துண்டை நெடுநேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். வந்தவர்கள் வந்ததுபோலவே, சட்டென்று வயல்களுக்குள் மறைந்து போனார்கள். மனித வரலாற்றின் கரையிலிருந்து, பிரமிப்பு அகலாமல் திரும்பினோம்.


Wednesday, April 03, 2013

டன் டிக்கிட்டு போய்ட்டா?

மெர்மெய்ட் என்றால் பப்புவுக்கு மிகவும் இஷ்டம். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசை கரைத்து தந்தேன். அதி உற்சாகமாகிவிட்டாள். அவற்றை மோல்டில் ஊற்றினாள். ஊற்றியவுடனே அசைத்து அசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். "இதை தொட்டு பார்த்துக்கிட்டிருந்தா சரியா வராது, நைட் ஃபுல்லா இங்கியே இருக்கட்டும், அப்பதான் நல்லா காயும்" என்றேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்று பப்புவுக்கு பயம்/சந்தேகம் வந்துவிட்டது.

"பால்கனியில் விட்டுவைத்தால் திருடன் வந்து எடுத்துக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது?"

 அவள் செய்வது முக்கியமானது என்ற அவளது எண்ணத்தை கலைக்கவிரும்பாமல், 'நமக்கு முக்கியமானது எல்லாருக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது' என்பதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று எண்ணியபடி லைட்டாக ஆரம்பித்தேன்.

"திருடங்க எல்லாம் ஏன் திருடறாங்க? அவங்ககிட்ட என்ன இல்லையோ  அதைத்தானே திருடறாங்க?"

உடனே இடைமறித்துக் கேட்டாள்,

"அப்போ, அவங்க இந்த மெர்மெய்டை திருடிட்டா நாம தப்பா எடுத்துக்கக்கூடாதுன்னு சொல்றியா?!!


அவ்வ்வ்வ்!!!

தலைப்பு: பப்புவுக்கு இந்த கதை ரொம்ப ஃபேவரிட். அதான்!

Thursday, March 21, 2013

பட்டர்பிளையில் சூரியனை பார்க்க ஒரு பயணம்

" ஒரு தேவதை வந்தது.அந்த தேவதைக்கு வயசாயிடுச்சுன்னு எனக்கு எல்லா மேஜிக்கும் கத்துக்குடுக்கறேன்னு கூப்பிட்டு போச்சு.ஒரு பெரிய ஜய்ஜாண்டிக் பட்டர்பிளை. அதுமேல நானும் தேவதையும் உட்கார்ந்துக்கிட்டோம்.  சூரியனுக்கு போலாம்னு சொன்னேன். பறந்து போய்க்கிட்டே இருக்கோம். தேவதைக்கு பசி வந்துடுச்சு. என்கிட்டேயும் எதுவும் இல்ல. அந்த தேவதை ஐஸ் மட்டும்தான் சாப்பிடும். அதுதான் அதோட ஃபுட். எங்க போறது ஐஸ்க்கு? பார்த்தா பட்டர்பிளை, ஒரு ஃபிரிட்ஜ் எடுத்துக்கிட்டு வந்திருக்கு. அதுல பார்த்தா ஐஸ் ட்ரேதான் இருக்கு. ஐஸ் க்யூப்ஸ் இல்ல. ஒரு பாட்டில்ல, ஐஸ் வாட்டர் இருக்கு. அதை தேவதை கையில ஊத்தினா அது ஐசா மாறிடுச்சு. தேவதை சாப்பிட்டுட்டு தூங்கிடுச்சு. நானும் பட்டர்பிளை மேல படுத்துக்கிட்டேன். அப்புறம் பார்த்தா சூரியன்னுக்குள்ள போயிட்டோம். அங்க ஒரே குளிர். ரொம்ப ஐஸா இருக்கு. பார்த்தா அது நெப்ட்யூன்!! நெப்ட்யூன்லதானே ஒரே ஐஸா இருக்கும்?! நெப்ட்யுனை சுத்தி பத்து நிலா....ஒன்னு க்ரீன், ஒன்னு பர்ப்பிள். ரெண்டு நிலாதான் நான் பார்த்தேன். 'வேணாம், நீ எர்த்துக்கு போ'னு பட்டர்பிளைக்கிட்டே சொன்னா அது பக்கத்துல இருக்க ஜூபிடருக்கு போயிடுச்சு."

அதுக்குள்ள ஸ்கூல் வந்துடுச்சி...ஈவினிங் சொல்றேன்னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டா பப்பு.


காலை எழுந்ததிலிருந்து 'கனவை சொல்கிறேன் கனவை சொல்கிறேன்' என்று ஒரே டயலாக். அதோடு 'நீ கேட்டா, உனக்கே ஆசையா இருக்கும்' என்று வேறு மார்க்கெட்டிங். 'ஸ்கூல் போறப்போ வழியில சொல்லு, இப்ப கிளம்பு" என்று அவளை கிளப்பியதில், இவ்வளவுதான் கேட்க முடிந்தது. மாலையில், மறந்திருப்பாள்.

சூரியனுக்கு உள்ளே போய் பார்க்க வேண்டும் என்றும், அதற்கேற்றாற்போல எரிந்துபோகாத உடையை சயிண்டிஸ்ட் ஆகி கண்டுபிடிக்கப்போவதாகவும் அவ்வப்போது சொல்லுவாள்.

அதோடு, சமீபமாக அவளது கனவில் அடிக்கடி ஒரு தேவதை வந்து உனக்கு 3 வரங்கள் தருகிறேன் என்று சொல்லும். அந்த தேவதை நேரில் வந்தால் கேட்பதற்கு, 3 விஷஸ் வைத்திருக்கிறாள்.

1. ஒரு மேஜிக் ஸ்டிக்
2.  எங்க பெரிய ஆயா திரும்ப உயிரோட வந்துவிட வேண்டும்.
3.எங்க ஃபேமிலில யாரும் இறந்தே போகக்கூடாது..எல்லோரும் அன்கவுண்டபிள் இயர்ஸ் வாழணும்!! 


அடிக்கடி இந்த விஷசை என்னிடம் சொல்லுவாள்.
இவை எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய கனவாக மலர்ந்துவிட்டதோ என்னவோ?!

Tuesday, March 19, 2013

ஆத்தா நான் பாசாயிட்டேன்!

மார்ச் ஏப்ரல் வந்துவிட்டால் போதும். சின்ன வயதில்தான் அந்த கேள்விக்கு பதில் சொன்னேன் என்றால், இப்போதும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக நான் எதிர்கொள்ளும் "எக்ஸாம் எப்போ" அல்லது "எக்சாம் முடிஞ்சுடுச்சா" என்ற கேள்விதான். பப்புவின் பள்ளியில் தேர்வுகளே கிடையாது. பெரும்பாலான  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்றுதான் சொல்கிறார்கள், ஆனால் அப்படி தெரியவில்லை. (போன‌ ஜெனரேஷனுக்குஎக்சாம் இல்லையென்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லையோ?!)

முதல்முறை, பப்பு "எக்சாம்னா என்ன ஆச்சி" என்றாள்.(ஆம்பூரில், ஒருமுறை  "மார்க்ன்னா என்ன" என்று கேள்விகேட்டவரை அதிர்ச்சிக்குள்ளா க்கியதெல்லாம் வரலாறு.)கேள்வி கேட்பவருக்கு பதில் சொல்வதா, பப்புவுக்கு பதில் சொல்வதா என்று முழித்து ஒருவழியாக சமாளித்தேன். எக்சாம் இல்லையென்றால் ஒரு சிறு அதிர்ச்சி/புருவ உயர்த்தல். இப்போதாவது பரவாயில்லை, பப்புவுக்கு தமிழ் டிக்டேஷன் கொடுத்து பழகுவதால் அவளுக்கு 'எக்சாம்' என்பது பற்றி ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது எழுதிக் கொண்டேயிருப்பது என்பது போல.  சென்ற வருடம் ரொம்ப கஷ்டம்.(அவ்வ்வ்வ்வ்)எக்சாமுக்கு மார்க்,அதற்கு ரேங்க், அதிலும் அதிக மார்க்....எனக்கும் அதையெல்லாம் சொல்லி ஆப்போசிட் ரியாக்சன் ஆகிவிடபோகிறது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 'இந்த பள்ளிக்கூடம் முடித்து வேறு பெரிய பள்ளிக்கூடம் போகவேண்டும் என்றால் ஒரு பரிட்சை வைப்பார்கள். அதில் கேள்விகள் இருக்கும். அதை படித்து ஒரு பேப்பரில் எழுத வேண்டும்' என்று மட்டும் அவ்வப்போது சொல்லி வைப்பேன்..  உடனே, "ஆச்சி, அது  டேபிள்/சேர் போட்ட ஸ்கூலா ஆச்சி, அது வேணாம்" என்றாள். (அவ்வ்வ்வ்)

இந்த வருடமும், வீட்டுக்கு வந்தவர்கள்,நாங்கள் சந்தித்தவர்களிடமிருந்து அதே கேள்வியை எதிர்கொண்டோம். சென்ற வருடம் போலில்லை, பழகிவிட்டது.(ஹிஹி!) நேற்று ஏதோ கேள்வி கேட்டு விளையாடிக் கொண்டிருந்தாள் பப்பு. அவள் என்னிடம் ஒரு கேள்வியை கேட்பாள்.சத்தியமாக,பெரும்பாலும் அதற்கான பதில்கள் தெரியாது. 'புக்ல பார்த்து படிச்சுட்டு சொல்றேன்,பப்பு' என்பேன். "இப்போ, நீ என்னை கேளு" என்பாள். அதே கேள்வியை அவளை கேட்பேன்.
அவள் பதில் சொல்லுவாள்.(ஜூபிடர் சுத்தி இருக்க ரிங்ஸ் ஐஸும், தூசியும்தானாமே!!)

அதில், திடீரென்று, 'எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?" என்றாள்.

'சரி, அவளுக்கு புரியற மாதிரி சொல்லணும்' என்று எண்ணியபடி ஆயத்தமானேன். 'ப்ளான் பண்ண்ண்ணி சொல்ல‌ ஆரம்பிக்கணும்' என்று தயார்ப்படுத்திக்கொள்ள.....


"நீ என்னை கேளு"


"உங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்ல?"


"இப்போ எக்சாம்ல மார்க் வரும் இல்ல, அப்போ என்னாகும்? நெறைய மார்க் வேணும்ம்னு க்ரீடியாகிடுவோம் இல்ல. அதுக்குதான். அதுக்குதான் எங்களுக்கு எக்சாம்ஸ் இல்ல!"


......


"பவன் ஆன்ட்டியை கேட்டான், எங்களுக்கு ஏன் எக்சாம்ஸ் இல்லன்னு. ஆன்ட்டி சொன்னாங்க, இப்போ நீங்க எல்லாரும் இருக்கீங்க. ஒருத்தர் நெறைய மார்க் வாங்கறீங்க.அப்போ மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? எல்லாரும் ஆக்ட்விட்டி நல்லாதானே பண்றீங்க. அப்போ, ஒருத்தவங்களுக்கு மட்டும் கைதட்டினா ஹவ் வில் யூ ஃபீல்? க்ரீடி ரைட்? அதுக்குதான் எக்சாம்ஸ் இல்ல. புரிஞ்சுதா?"


Sunday, March 17, 2013

'கோயிங்....கோயிங்....கான்'

 கோவளம் கடற்கரை. ஒவ்வொருநாளும் சுமார் ஐந்தரைமணிக்கு  மக்கள் அங்கு கூடுகிறார்கள். கூட்டம் பலதரப்பட்டதாக இருக்கிறது. பெரும்பாலும் வடஇந்திய முகங்கள். தலைப்பாகைகளோடு, காந்தி தொப்பிகளோடு மற்றும்  சேலை தலைப்பால் முக்காடிட்ட முகங்கள். இது கன்னியாகுமரியின் கோவளம் கடற்கரை. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அறிவிப்புப் பலகை நம்மை வரவேற்கிறது.

கடற்கரைக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிரம்பிவிடுகின்றன. வாகனங்களிலிருந்து, விரைந்து இறங்கி கடற்கரைக்குச் அவசரம் அவசரமாக செல்ல முற்படுகிறார்கள், சிலர். 'கைய பிடி,' என்றும் 'ஓடாதே' என்றும் 'நில்லு நில்லு' என்றும் பொருள் தரக்கூடிய வார்த்தைகள் பல பாஷைகளில் கேட்கிறது.

'முத்து மாலை பார்க்கறீங்களா? ஒரிஜினல், மேடம். கிஃப்ட் குடுக்கலாம்' என்று கைகளில் மாலைகளுடன் சிலர் ஒவ்வொருவரையாக அணுகத் தொடங்குகிறார்கள். டாலர்களுடன் சில மாலைகள், டாலர்கள் இல்லாமல் சில என்று விதவிதமான வண்ணங்களில்,வகைகளில் மாலைகள் வாங்கத் தூண்டுகின்றன.

ஒவ்வொருவராக தத்தமது கூட்டத்துடன், குடும்பத்துடன் பாறைகளில் இடம் பார்த்து அமர்கிறார்கள். கால் நனைப்பவர்கள் கடலின் ஓரமாக சென்று நனைத்துவிட்டு திரும்புகிறார்கள். சிலர், பாறைகளின் நுனிக்குச் சென்று அடிக்கும் அலையின் சாரலை ரசிக்கிறார்கள். எதிர்பாராத நேரத்தில் உயரமான அலை அவர்களை நனைத்ததும் "ஓ" என்ற கூச்சல் எழும்புகிறது.

முக்காடிட்ட பெண், சற்று முதிர்ந்த வயதுடையவர். உடன் வந்த பெண்ணோடு கையை பிடித்தபடி, உயரம் குறைந்த ஒரு பாறையில் அமர்கிறார். அவருடன் வந்த ஆண்கள் ஜீன்சை மேலே உயர்த்தி,  அலைகளில்  விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது திரும்பி  இந்த பெண்களைப் பார்த்துக் கொள்கிறார்கள்.  வயதான பெண்மணியின் கணவர், சற்று தள்ளி நின்று கடலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று, அந்த ஆண்கள் இருவருடம் ஏதோ நினைவு வந்தவராய் குனிகிறார்கள். ஈர மணலைக் கூட்டி கட்டுகிறார்கள். அந்த இளம்பெண் தாயிடம் ஏதோ சொல்கிறார். அதற்குள்ளாக, அவர்களே தங்கள் தாயை கூப்பிட்டுக் காட்டுகிறார்கள். அவரும் சரி என்பதாக ஒரு தலையசைப்பைக் காட்டுகிறார். தனது கணவரை நோக்கி, "ஷிவ்லிங்க் பனாவோ" என்கிறார். அலை "ஷிவ்லிங்க்"கை  பாதியாக கரைத்திருக்கிறது.  கடற்கரையில், அடிக்கும் அலையின் அருகே சிவலிங்கம் அமைப்பது ஒரு சம்பிரதாயம் போல! 



இதற்குள்ளாக சூரியனின் உக்கிரம் கொஞ்சமாக குறைந்திருக்கிறது. ஐந்தரையிலிருந்து ஆறு மணி என்பது இவ்வளவு நேரமா என்று மலைப்பாக இருக்கிறது.  இப்போதும் சிலர் வேகவேகமாக வந்துபடி இருந்தனர், தாம்  எதையோ இழந்து விரும்பாதவர்களாக‌.  அன்றைய நாளின் வருகையாளர்கள் அனைவருக்காகவும் காத்திருப்பது போல ஒரே இடத்தில் அமைதியாக இருக்கிறது, சூரியன். இடையில்,ஒரு சிறு மேகக் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விடுகிறது. இதற்குள், அலைகளில் ஆடிக்கொண்டிருந்த அனைவரும் ஆங்காங்கே அமர்ந்துவிட்டிருக்கின்றனர். படகுகளில், சற்றுத்தள்ளி இருந்த படிகளில், உயரமான பாறைகளில் நின்றபடி என்று மக்கள் கூட்டம் சட்டென்று அமைதியாகி விடுகிறது. வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை பார்க்கப்போகிறோம் என்பதுபோல எல்லா முகங்களும் சூரியனையே நோக்கியிருக்கின்றன.


கூட்டம் அமைதியடைந்ததும் தொடங்கும் நாடகம் போல, பொன்னிறம் சூழத் தொடங்குகிறது. அந்த மேகக்கூட்டத்திலிருந்து விடுபட்ட சூரியன், நம் கண்ணுக் கெட்டிய கடலின் ஓரத்தை எட்டித் தொடுகிறது.கூட்டத்தில் சிறு உற்சாகம். இந்த உற்சாகத்தைக் கண்டுக்கொண்டது போல, மெல்ல கடலில் மூழ்கத்தொடங்குகிறது சூரியன். பெரும்பாறை ஒன்றில் அமர்ந்திருந்தவர்கள், "கோயிங் கோயிங்" என்று கத்தத்தொடங்குகிறார்கள். இதில், எந்த வயது வித்தியாசமுமில்லை. அவர்களது உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. ஆனாலும், யாரும் அவர்களை திரும்பிப்பார்க்கவில்லை. ஒரு சிறு அசைவைக்கூட  பார்க்காமல் விட்டுவிடக்கூடாது என்பதுபோல கண்கள் அனைத்தும் சூரியன் மீதே இருக்கின்றன. 'இதோ பிடிக்க வரேன் பாரு' என்றதும் ஓடி ஒளியும் குழந்தையின் கண்ணாமூச்சியை நினைவுபடுத்துகிறது, இந்த 'கோயிங் கோயிங்' கோரஸ் குரல்களும், அதற்கேற்ப மறையும் சூரியனும்.


சூரியனையும், கடலையும் பார்க்க,  ஒரு கோன் ஐஸ்கிரீமை பார்ப்பது போல இருக்கிறது என்றாள் பப்பு,என்னிடம். கண்ணுக்குத் தெரியாத கோன் கடலுக்குக் கீழேயும், முக்கால் பாகம் வெளியே தெரியும் சூரியனும் செவ்வண்ண ஐஸ்க்ரீமை நினைவுபடுத்தின போலும். சூரியன் நம் கண்முன் மறையும் ஒவ்வொரு விநாடியும் உண்மையில் பூமியின் சுழற்சியே என்கிறேன் அவளிடம். சூரியனிலிருந்து திரும்பிய பப்பு, இப்போது பூமியிலிருந்து  சூரியனை நோக்கத் தொடங்குகிறாள். கோன் ஐஸ்க்ரீம் இப்போது தலைக்கீழாகி விட்டதுபோல இருந்தது,எனக்கு. சூரியனின் கால்வாசியே கடலுக்கு வெளியே. கிரகணத்தின்போது தெரியும் மோதிரத்தின் கல்லாக பளிச்சிடுகிறது சூரியன்,இப்போது.



"கோயிங் கோயிங்" போய் "கான்" என்று கத்துகிறார்கள்,அவர்கள். உடனே ஒரு கவுண்ட்டவுன் தொடங்குகிறது. "டென்...நைன்" என்ற இளைஞர்களின் ஒருமித்த குரல் சூரியனுக்கு கேட்டிருக்க வேண்டும். ஒன் என்று முடிக்கும் போது, சூரியனின் சின்னஞ்சிறு விள்ளலும் கடைசியாக கடலுக்குள் மறைகிறது. கூட்டத்தில் ஆங்காங்கே கைத்தட்டல்.   'ஆம், எல்லாம் ஒழுங்காக நடைபெற்றது' என்பது போல! தத்தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்துக்கொள்கிறார்கள், ஒரு மிகச்சிறந்த பர்ஃபார்மென்ஸை பார்த்ததுபோல‌. கைத்தட்டல், பாராட்டுகளோடு  சூரியன் ,உலகின் மறுமுனையில் ஏதோ ஒரு மலையின் உச்சியிலோ அல்லது பாலத்தில் மீதோ அல்லது வேறு கடலின் மற்றொரு கரையிலோ காத்திருக்கும் முகங்களைக் இதே நேரத்தில் கண்டிருக்கும்.  

 உலகின் மறுமுனையில் உதயமாவதைக் காண, இந்த சூரியனோடு கூடவே சென்றால் என்ன  என்று ஆசையாக இருந்தது.ஆனால், ஒரு இரவு பொறுத்தால் 'இதே சூரியன் இதே கடலில்' உதயமாவதை காணலாம்.சூரியன் மறைவதை கோவாவின் கடற்கரைகளில், கேரளாவின் ஏரியில்  கண்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவ்வளவு பெரிய கோளமாகக்  கண்டதில்லை. ஒரு மாபெரும் சூரியபந்து, தெளிவாக‌ ஒவ்வொரு கோடாக  கடைசிச் சுற்று வரை மறைவது இங்குதான். பப்புவால்  பூமி சுற்றுவதை உணர முடிந்ததாம்.  அப்போது, தலையும் லேசாக சுற்றுவது போல உணர்ந்தாளாம்.

கூட்டம் பாதியாக குறையத் தொடங்கியது. இன்னமும் வெளிச்சமாகத்தான் இருந்தது. ஆனால், இவ்வளவு நேரமும் 'சாலை' என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்தது. ஹாரன் ஒலிகளும், வாகனங்களை உயிர்ப்பிக்கும் ஒலிகளும் 'நாம் திரும்பிச் செல்ல வேண்டும்' என்பதை உணர்த்தின. நடப்பவர்களுக்கு இடமே இல்லாமல் வாகனங்கள் வரிசையாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. கடலையும், செஞ்சாந்து தீட்டப்பட்ட வானத்தையும்  பார்த்துக்கொண்டே மெதுவாக நடக்கத்துவங்கினோம். அவ்வப்போது திரும்பிப்பார்த்துக்கொண்டோம். நெருப்பூட்டப்பட்ட பஞ்சு போல காட்சியளித்தது மேகம், இப்போது.



காலையில், நாங்கள் சூரிய உதயத்தை இதே கடலில் கண்டிருந்தோம். மாலையில், இதே கடலில் சூரியன் மறைவதையும் கண்ட பப்புவுக்கு இது எத்தனையாவது நாள் என்ற குழப்பம் வந்திருக்க வேண்டும். ஏனெனில், சூரிய உதயத்தை அல்லது சூரியன் மறைவதைத்தான் கண்டிருக்கிறாள். இரண்டையும், ஒரே நாளில் ஒரே கடலில்/இடத்தில் பார்ப்பது இங்குதான். அவளது சந்தேகத்தை என்னால் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. 

"புரியலை, இன்னொரு தடவை சொல்லு?" என்றேன்,அவளிடம்.

ஏற்கெனவே இரண்டு முறை சொல்லியும் எனக்கு புரியாததால் அலுத்துப்போன பப்பு, சொன்னாள் "உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்"

:‍-)  


இடம்:

சன்செட் பாயிண்ட்
பே வாட்ச் மியூசியத்துக்கு அருகில்
கன்னியாகுமரி பஸ் நிறுத்தத்துக்கு அருகிலிருந்து 2 கிமீ தொலைவில்
தமிழக அரசு சுற்றுலாத்துறையின் அறிவிப்பு பலகையை காணலாம்.
இந்த குறிப்பிட்ட இடத்தில் சன் செட் மிக அருமையாக தெளிவாக இருக்கிறது. அருகில் அமைந்த சாலையின் வழியே சென்றால் கண்ணுக்கினிய கடற்கரைகள்,மீனவ கிராமங்கள் இருக்கின்றன.

Saturday, March 16, 2013

பப்பு டைம்ஸ்





                                                        பப்புவோட நாட்டுப்பற்று ;‍)


சோபாவில் இதைப்பார்த்ததும், எது அவளை தூண்டியிருக்கும் என்று அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தது. மூன்று கலர்களை பார்த்ததுமா அல்லது வெள்ளையின் நடுவில் இருக்கும் அந்த முத்திரையா என்று! ஆனால், கேட்கவில்லை. அவளுக்குத் தெரியாமல் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டேன்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



முன்பெல்லாம், பள்ளியில் என்ன நடந்தது என்று வாயே திறப்பதில்லையே என்று கவலைப்படுவேன். இப்பொழுதெல்லாம், திறந்த வாய் மூடுவதில்லை. வகுப்பறையில் நடந்தது, சாப்பிடும் போது நடந்தது, க்ரௌண்டில் நடந்தது, ஃப்ரெண்ட்ஸ்கிடையிலான சண்டைகள் (ஸ்ஸ்ஸ்....என்னா பாலிடிக்ஸ்!!), யார் யாருக்கு ஃப்ரெண்ட் என்பதெல்லாம் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஏதோ ஒரு தருணத்தில், விலாசினி குட்டி பொண்ணுதானே, இப்போதானே   சீனியருக்கு வந்தா என்று சொல்லிவிட்டேன்.  'பச்சமொளகா'வுக்கு சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!

"விலாசினியை சின்னப்பொண்ணுன்னு நினைக்காதே ஆச்சி, அவளுக்கு "பார்ட்ஸ் ஆஃப் எலபண்ட்'ஏ தெரியும்!! "


அவ்வ்வ்வ்வ்!!    :-))) 'பெரியவர்கள் என்பதற்கு என்னவெல்லாம் தெரியவேண்டியிருக்கு' என்றெண்ணி எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அவளது எதிரில் சிரித்தால் இன்னும் சுர்ர்ர்ர்ர்ர் ஆகி விடுவாள் என்பதால் சிரிக்கவில்லை!! 



குறிப்பு: பப்பு இப்பொழுது வளர்ந்துவிட்டாள். என்றாலும் அவள் இன்னும் சிறுமிதான். ஆனால், குட்டிப்பெண்ணாக இருக்கும்போது 'பெரியமனுசத்தனமாக' பேசினால் புன்னகைப்பேன். ஆச்சரியப்படுவேன். இப்பொழுது, வளர்ந்தபின்னால், குட்டிப்பெண்ணின் அறியாமையோடு பேசினால் சிரிப்பு வருகிறது!! என்னே, காலம் செய்த கோலம்!! (ஹிஹி...எல்லாம் ஒரு ஃபீலிங்ஸ்தான்!!)

Friday, March 15, 2013

"what for you?"

சாப்பிட சொன்னால் கண்டுக்கொள்ளாமல் அவள் இஷ்டத்துக்கு அங்கு செல்வதும் இங்கு செல்வதுமாக இருந்தாள். சற்று குரலை உயர்த்தி, இப்போ சாப்பிட வரலைன்னா அடிதான் என்றேன்.

கொஞ்சம் லேசாக மிரட்டினாலே பப்புவின் தன்மானம் பாதிக்கப்பட்டுவிடும்.சுர்ரென்று கோபம்.

நானும் விடாமல் 'இப்போ வரப்போறியா,இல்ல அடி குடுக்கட்டுமா' என்றேன்.

'நான் சாப்பிடமாட்டேன்.உனக்கென்ன?' - பப்பு

'உனக்கென்ன எனக்கென்னன்னுல்லாம் பேச கூடாது.பேட் மேனர்ஸ்.' - அடியேன்

'நான் பேட் மேனர்ஸா இருந்தா உனக்கென்ன? - பப்பு

'இன்னொரு வாட்டி உனக்கென்னன்னு வாயில் வரக்கூடாது.' என்றேன் கண்டிப்ப்பான குரலில்.

'what for you?' - பப்பு,என் குரலுக்கு சரியாக,சுவற்றிலடித்த பந்துபோல.

'ம்ம்..ஓகே..கடகடன்னு சாப்பிடு.' _ அவள் ஏதோ சொல்கிறாள் என்று நினைத்துக்கொண்டு,நான்.

'What for you?'

அப்புறம் தான் பல்பு பளிச்!பளிச்!!

உனக்கென்ன வோட இங்கிலீஷ் வெர்சன் தான் அதுவென்று!

Tuesday, March 12, 2013

"நான் அம்மாவாக போறேன்"

காலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்றுகொண்டிருந்தோம். (இப்போல்லாம் அப்டிதான் ஆகிடுச்சு, பப்புவுக்கு முன்னாடி நான் ரெடியாகி பப்புவோட லஞ்ச் பேகும் கையுமா முன்னாடி நிக்கிறது நாந்தான்!!!)


பின்னால் அமர்ந்துக்கொண்டிருந்த பப்புவிடமிருந்து ஒரு குரல்.

"எனக்கு அம்மா வேணும்"

(அவ்வ்வ்...சிலநாட்கள் முன்பு இந்த தேவதைகள் கதைகளை கண்ட/படித்த பாதிப்பில், "நீ என் ரியல் அம்மா இல்ல, நிஜ அம்மாகிட்டே கொண்டு போய்விடு" என்று சீரியசாக சொல்ல ஆரம்பித்து, பின்னர் கிண்டலுக்காக சொல்லுவாள். கொஞ்சநாட்களாக அதுவும் மறந்துபோயிருந்தது. 'சரி, அதுமாதிரிதான் போல,  ஆனால் இப்போது என்ன?  அவளை எதுவும் திட்டவோ கண்டிக்கவோ இல்லையே' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, திரும்பவும்,"

"ஆச்சி, எனக்கு அம்மா வேணும்"

"சரி, போய் தேடி கண்டுபிடிக்கலாம்" என்றேன்.

"இல்ல, எனக்கு ஜெயலலிதா அம்மா வேணும்"

(அவ்வ்வ்வ்வ்.....என்னா வில்லத்தனம்!!)

"சரி, செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போலாம். "

"ஆச்சி, நான் அம்மாவாக போறேன்!!"

(ஆவ்வ்வ்வ்வ்...இதுக்கெல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணனும் யூசர் மானுவல் இருந்தா பரவால்லையே என்று நினைக்குபோதே)

"நான் ஜெயலலிதா அம்மாவாக போறேன். நானும் கலெக்ஷ‌ன்ல்ல நின்னு.."

ஏதாவது தவறாக சொல்லிவிட்டால் குரல் மெலிதாக ஆகிவிடும்.

"அது கலெக்சன் இல்ல....எலக்ஷன்"

"ஹேய்ய்ய்...நான் எலக்சன்னுதான் சொன்னேன். உன் காதுதான்...டப்பி காது. நீ காதுல பட்ஸ் விட்டு நோண்டறே இல்ல,அதான் உனக்கு கேக்கலை"

(அவ்வ்வ்வ் எனக்கு தேவைதான்!!)

"நான் எலக்ஷன்லே நின்னு சீஃப் மினிஸ்டராக போறேன்.அப்ப நாந்தானே அம்மா"

('அப்பா,என் வயித்தில பாலை வார்த்தே' என்று என் டயலாக் இருக்க வேண்டுமோ?!!) :‍)))

பப்புவுக்கு பெரிதாக ஆகி என்னவாக ஆவோம் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை. ஏதாவது ஒன்றாகத்தான் ஆக முடியும் என்பதையும் அவளால் ஒப்புக்கொள்ளவே முடியாது. 'ஒரே நேரத்துல எப்படி எல்லாமாக ஆவது' என்பதுதான் அவளது ஒரே கவலை அல்லது சவால். அவளுக்கு "ஆன்ட்டி"யாக மாறி பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். பின்னர், டெய்லராக ஆக வேண்டும். அதே சமயம், பெட்ரோலும் போட வேண்டும்('அவங்க கைலதானே காசு நிறைய இருக்கு' எனபது அதற்கான காரணம். ஏன்னா,பெட்ரோல் போட்டதும் அவர்கள் கையில்தானே எல்லாரும் காசு கொடுக்கிறோம்...ஹிஹி)அதே சமயம், ஸ்பேஸ் சயிண்டிஸ்ட் ஆகி ராக்கெட்டில் செல்ல வேண்டும்.புளூட்டோவையும் நெப்டியூனையும் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அப்புறம், சுனாமி வராமல் இருக்க கண்டுபிடிக்க வேண்டும்.அப்புறம், 'உன்னை மாதிரி சாப்ஃட் எஞ்சினியர் ஆகணும்". இந்த நெவர் என்டிங் வாலில் கடைசியாக சேர்ந்திருப்பது,  'ஜெயலலிதா அம்மாவாக வேண்டும்....'

Saturday, March 09, 2013

"நான் முக்கியமா, காசு முக்கியமா?"

"ஆச்சி, உனக்கு நான் முக்கியமா இல்ல மில்லியன் லாக்ஸ் முக்கியமா?"-  பப்பு

பப்புவின் அகராதியில், அன்கவுண்டபிளுக்குப் அடுத்தபடியான அதிக மதிப்புகொண்ட எண் இந்த 'மில்லியன் லாக்ஸ்'.

 ஏன் திடீரென்று இந்த கேள்வி, எது பப்புவை இப்படி கேட்க வைத்ததென்று 

யோசித்தப்படியே....

"நீதான் முக்கியம்"

"ம்ம் கரெக்ட்!!" - பப்பு

"ஏன் கேட்டே?" (ஹப்பாடா! நான் பாஸ்ஸ்!!யே!!!)

"நீ கரெக்ட்டா திங்க் பண்றியா. ஹவ் யூ கேன் திங்க் குட்ன்னு பாக்கிறதுக்கு" - பப்பு

"ஓ...உன்னை கேட்டா நீ என்ன சொல்லியிருப்ப?"

உடனே ரோல் ப்ளே ஆரம்பமாகிவிட்டது.

"நீ பப்புவா இரு, நாந்தான் ஆச்சி. இப்ப நீ என்னை கேளு..." - பப்பு

"ஆச்சி, உனக்கு நான் உனக்கு முக்கியமா இல்ல மில்லியன் லாக்ஸ் முக்கியமா?" - நானேதான்!

"நீ தான் முக்கியம் பப்பு. ஏன் சொல்லு? நம்ம காசு போயிட்டா போலீஸ்கிட்ட சொல்லலாம். பப்பு போயிட்டா?! தோண்டிதானே எடுக்க முடியும்." -  பப்பு

"தோண்டி எடுக்க முடியுமா? அப்படின்னா?"

"இங்க பாரு, எனக்கு ஹார்ட் இருக்கு. காசுக்கு ஹார்ட் இருக்கா? எனக்கு சதை எல்லாம் இருக்கு. காசுக்கு அது எல்லாம் இருக்கா?  நான் செத்துட்டேன்னு வைச்சுக்கோ, எனக்கு உயிர் வைக்க முடியுமா? " - பப்பு

'ஒருவேளை நானும் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டுமோ' என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே இப்படியெல்லாம் சொல்கிறாளே எனறு திடுக். 


எனது முகத்தில் தெரிந்த கிலியை புரிந்துக்கொண்டவள் போல மேலும் விளக்குகிறாள். (ஏற்கெனவே, 'உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது, உனக்கு புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்' என்றெல்லாம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன்.இப்போ, இதுவேற!)

"இப்ப,ஆயா இருக்காங்க...இல்ல, பெரியாயா இருக்காங்க.ஓகே! பக்கத்துல காசு இருக்கு, நெறைய! அப்ப, காசு திருடன் எடுத்துக்கிட்டு போயிடறான். பெரியாயா இறந்துட்டாங்க இல்ல, அவங்களை நாம எங்க வைச்சிருக்கோம்? கீழதானே புதைச்சிருக்கோம். அவங்களை தோண்டி எடுக்க முடியுமா?ஆனா, போலீஸ் திருடனை புடிச்சு காசு கண்டுபிடிப்பாங்க இல்ல, அதான்." - பப்பு


பெரியாயாவின் இழ(ற‌)ப்பு பப்புவை படுத்தி எடுக்கிறது,போலும்!

Thursday, February 28, 2013

Innocence


Sandy Arabian sea shore
   friendly waves
    unmindful fishermen
       scattered sea shells
          of various sizes,
              different hues
                lovely patterns


Myself and my grand daughter
  walked hand in hand
    Now and then
        she shouted
'see here, what a lovely shell!'
'See there,another shell!'
and collected in a small bag
   soon filled the bag
"I want to show it to my
               great granny"
 who passed away recently,
  who loved her deeply,
    who lived her last days
         only for her
A big lump in my throat.

"Oh! She has become a star"

"Alright,I'll take it to the open terrace of our house
  and keep it there.

She will see my lovely collection from there"


I stunned.
  Her Love,
     innocence
        openness

Let them live long in her.

குறிப்பு: பெரிம்மா எழுதியது. சேமிப்புக்காக இங்கு.
 

Monday, January 28, 2013

"மை" "மை"

பப்புவுக்கு படித்த கதைகளை எனாக்ட் செய்வது மிகவும் விருப்பம். சிறுவயதிலிருந்தே இந்த பழக்கம் தொடர்கிறது என்றாலும் பெரும்பாலும் மற்றவர்களை நாடாமல், அவளாகவே விளையாடுவாள். பொம்மைகள்தான் அவளுக்கு விளையாட்டு நண்பர்கள்.அதோடு, மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்றும் எண்ணுவாள் போல. பார்ப்பது தெரிந்துவிட்டால்  கோபம் வந்துவிடும். அதனாலேயே, கண்டும் காணாமல் இருந்துவிடுவோம்.

 

அவ்வப்போது என்னைத்தான் போட்டு படுத்துவாள். அவள் சொல்வதற் கெல்லாம்  தலையாட்டுவதுதான் காரணம். , ' ஓடில்லாம் வர மாட்டேன்,இங்கியேதான் படுத்திருப்பேன்' என்ற எனது நிபந்தனை களுக்குட்பட்டு விளையாட்டை அமைத்துக்கொள்வாள். அதுவும், இந்த கதை நாடகம் ஒவ்வொரு சீசனுக்கும் மாறும், அவள் கேட்கும்/பார்க்கும் கதைகளைப் பொறுத்து.  மேலும் சொந்த சரக்கும் சில நேரங்களில்.


சில சமயங்களில், ராணி கதைகளில் நான் தான் பிரின்சஸ்.  ஒரே ராணி. அது அவள்தான். 'எனக்கு பர்தே டே பார்ட்டி' என்றும்,  என்னை பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு அவள் 'ஆபீஸ் செல்லும் விளையாட்டு' (அந்த விளையாட்டில் நான் அழவேண்டும், அவள் "பை" "பை" என்று சந்தோஷமாக ஆபீஸ் செல்வாள், அவளை தொடர்ந்து வரும் என்னை விட்டுவிட்டு.) என்னை போர்வை அல்லது பெரிய துண்டு போட்டு மூடி அலங்கரித்து என்று ஒரு களேபரம் செய்வாள். "ஆச்சி, இப்போ என்ன விளையாடப் போறோம்?பிரின்சசசசசஸ்" என்று அவள் சொன்னாலே படுக்கையை விட்டு எழுந்து ஓடிப்போய் எங்காவது ஒளிந்துக்கொள்வேன். அந்த அளவுக்கு பிரின்சஸ் விளையாட்டு என்னை பயமுறுத்திவிட்டது. ஆனாலும், சளைக்காமல், அவள் பிரின்சஸ் விளையாட்டுக்கு மார்க்கெட்டிங் செய்வாள். 'இந்த கேம்ல, அது இருக்கும், இது இருக்கு, அடுத்த பார்ட்ல மாடில பிரண்ட்ஸ்...' பார்ட் 1 பார்ட் 2 என்றாலே கிலி!!


இந்த‌ பொம்மை கட்டப்பட்டிருக்கும் துப்பட்டாவின் மறுமுனை பப்புவின் தலையில் கட்டப்பட்டிருந்தது. நீளமான தலைமுடியாம். கட்டிலின் மேல் தலைமாட்டுக்கருகில் நின்றுக்கொண்டு அவளது நீண்ட தலைமுடியில் மறுமுனையை கீழே விட்டு விட்டு இழுத்துக்கொண்டிருந்தாள். ஓ!! பப்புதான்   ரப்புன்சல். கூந்தலில் மறுமுனையில் கட்டப்பட்டிருப்பது அவளது அம்மா!!

சில சமயங்களில், ஜங்கிள் அனிமல் விளையாட்டு. அதுவும் புலி/சிங்கம், குருவி கதை.  தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தின் மீது குருவி விளையாடி எழுப்பி விடும். கோபம் வந்த குருவி அதன் பிடியிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிவிடும். இதுதான் கதை. நான் தான் தூங்கிக்கொண்டிருக்கும் புலி/சிங்கம். என்மேல் வந்து விழுந்து விளையாடும் குருவி துரத்தி மிரட்ட வேண்டும். அதற்கு அவள் பயந்து ஓட வேண்டும்.  ஸ்ஸ்ப்பா!!


கொஞ்ச(ரொம்ப!!) நாட்களாக காணாமல் போயிருந்த இந்த விளையாட்டு நேற்று நினைவுக்கு வந்துவிட்டது,பப்புவுக்கு. திடீரென்று இந்த சதிவலையில் மாட்டிக்கொண்டேன். தூங்கவிடாமல், மேலே விழுந்து விழுந்து "கா" "கா" என்று கத்திக்கொண்டிருந்தாள் . 'ஹேய், அது காக்காவா? " என்று நான் சிரித்ததும், "இல்ல நான் மைனா..." என்று சொல்லிவிட்டு "மை மை " என்று கத்த ஆரம்பித்தாள். நான் சிரிப்பதை பார்த்ததும்   அவளுக்கும் புரிந்துவிட்டது போல..சிரிப்பில் சேர்ந்துக்கொண்டாள். அப்புறம், பெரிம்மாவிடம் சென்று, 'ஆயா, மைனா எப்படி கத்தும்" என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.  :-)))

Monday, January 21, 2013

A promise to keep....

"இப்ப குளிக்க போகப்போறியா இல்லையா" என்று பப்புவை தேடிக்கொண்டிருந்தேன். பேனாக்களும்(!) நோட்டும் இருந்தால் போதும். ஏதாவது எழுதிக்கொண்டிருப்பாள்.பாத்ரூமில் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்க இங்கே உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தாள். செம கோவம். "அடி வாங்காம போக மாட்டேன்னு நினைக்கிறேன்" என்றபடி அருகில் சென்றேன். "வெயிட் பண்ணு வெயிட் பண்ணு" என்று இந்த பக்கத்தை கையில் கொடுத்தாள். "நீ தவுசண்ட் இயர்ஸ் இருக்கணும்" என்று என்னிடம் ப்ராமிஸ் வாங்கிய இரவோ அல்லது அதற்கு மறுநாளோதான் இதை எழுதியிருக்க வேண்டும். 


"I like you mom very much my dear
thank you mom. you are my real mom ocay (ஸ்ஸ்....சின்ட்ரெல்லாக்களும் ரப்புன்சல்களும் எனக்குக் கொடுத்த பேறு(ரு) இது! சண்டை போடும்போது "நீ என் ரியல் மாம் இல்ல" என்பாள். இப்போது பாச மிகுதியில் ரியல் மாம் ஆகிவிட்டேன்!) you shood not become star are (or) moon.
realy not ly(lie) are (or) story. I like you very much realy okay. it is a trooth (ஹிஹி...நம்பறேன் மகளே?!)"


Thursday, December 13, 2012

உள்ளே-யா வெளியே-யா?

"ஆச்சி, இன்னைக்கு  அவுட்டர் பியூட்டி பாத்து ஆசைப்படாதே குறிஞ்சி ந்னாங்கப்பா ஆன்ட்டி."

"ம்ம்ம்..."

"ஏம்ப்பா அவுட்டர் பியூட்டி பாத்து ஆசைப்படக்கூடாது?"

"அவுட்டர்பியூட்டின்னா கொஞ்சநாள்ள போயிடும். இன்னர்பியூட்டி எப்பவும் இருக்கும். அதுக்குதான் சொல்லியிருப்பாங்க‌. ஆயா எப்படி இருந்தாங்க? ஸ்கின்னெல்லாம் சுருங்கி இருந்துச்சு இல்ல. ஆனா, ஆயாவுக்கு உன் மேல எவ்ளோ ஆசை.உழைக்கும் மக்கள் - வீடு கட்டுறாங்க இல்ல, அவங்க வேலை செஞ்சு செஞ்சு ஸ்கின் ரஃபா இருக்கும். அதுக்காக அவங்களுக்கு இன்னர் பியூட்டி இல்லன்னு அர்த்தமா? இல்லைல்ல...அதுமாதிரிதான்!."

"இன்னர்பியூட்டி வைச்சு என்ன பிரயோஜனம்?"

(அவ்வ்வ்வ்)"இன்னர்பியூட்டிதான் முக்கியம். இப்போ யாராவது ரொம்ப கஷ்டப்பட்டா ஹெல்ப் பண்றது, தண்ணி கேட்டா குடுக்கிறது, யாருக்காவது தூக்க முடியலைன்னா ஓடிப்போய் தூக்கிவிடறது..."

"ம்ம்ம்...இதான் இன்னர்பியூட்டியா?"


"இதான்னு இல்ல, மத்தவங்களுக்கு நல்லது பண்ணனும்னு நினைக்கிறது... "


"அப்போ எனக்கு அவுட்டர்பியூட்டி வேணாம்ன்றியா?"

இல்ல, இன்னர்பியூட்டி இருந்தாலே அவுட்டர்பியூட்டி தானா வந்துடும்..(அவ்வ்வ்வ்வ்...நான் ஏன் இப்படி ஆகிட்டேன்? அப்படி பாத்தா அவுட்டர்பியூட்டி இருக்கிறவங்களுக்கு இன்னர்பியூட்டி இருக்கணும்தானேன்னு கேட்டு மாட்டிக்க போறேன்னு நிறுத்திக்கிட்டேன்.)

ஆனா, பப்பு அவ்வளவு சீக்கிரம் விடலையே!?!

"இன்னர்பியூட்டிதான் ஆசைப்படணும், அவுட்டர் பியூட்டி ஆசைப்படக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்காப்பா?"

"இல்ல, ஏன் கேக்கறே? ரூல்ஸ் இருந்தாதான் ஆசைப்படுவியா?"

"ரூல்ஸ் இருக்கு அப்படின்னு சொன்னாதான் நம்புவேன்."

இன்னும் நெறைய லெக்சர்....இல்லல்ல...பேசிக்கிட்டே இருந்தோம்.

ஏன்னா, இன்னைக்கு பள்ளிக்கூடத்துல, தாட் ஃபார் த டே "இன்னர் பியூட்டி:அவுட்டர் பியூட்டி"தான் பேசினாங்களாம். ஒவ்வொருத்தரையும் அது பத்தி சொல்ல சொன்னப்போ பப்பு சொன்னதா சொன்னது இது:

innerbeauty is very importanat. outerbeauty is very waste. becoz they has smooth skin. and we have rough skin. when we grown up we will have a smooth skin. but they grown up, they become very rough skin. but we need two beauties. what beauties?  what beauties we want?  inner beauty and outer beauty.

when the rain comes the boy peacock will dance. but the girl peacock can not dance. the boy peacock is beautiful, we can not say. the girl peacock can not worry. the boy peacock has wings to dance.  the boy peacock asked the girl peaccock, what means, i am very beautiful. that you are not jealous about me? Buuuuut, the girl peacock says the peacock has out beatuy. the girl peacock has in beauty. in beauty means what? in beauty means the peacock has beautiful brains, the girl peacock helps others. that means the in beauty.

the girl peacock says, your mother is very dirty too. (avvvv..ஏன்ன்ன்ன்ன்....நல்லாதானே போயிட்டிருந்துச்சு?!) but, we are the beauty. The very must beauty is inner beauty.  


அநேகமா மேல இருக்கிற அந்த  பாராதான் மேடமே சொன்னதா இருக்கும். மீதியெல்லாம் நாங்க பேசினதுக்க்கு அப்புறம் வந்த பிற்சேர்க்கைகள்ன்னு நினைக்கிறேன்! ;‍-)

Tuesday, December 04, 2012

மசாலா தோசையும்,குற்றவுணர்ச்சியும்....

ஊரிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம்.

இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என்ற யோசனை. எப்போதும் 'கை கொடுக்கும் கை'யான இட்லி மாவும் இல்லை. சமையலறையில் புகுந்து உப்புமா கிண்டுமளவுக்கும் தெம்பில்லை. சரி, வழியில் எங்காவது ரெஸ்டாரண்டில் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவாகியது.

பல இடங்களிலும் கடைகளை வியாபித்திருக்கும் ஒரு பவனின் கிளையில் நுழைந்தேன். ஞாயிறு மாலை. கூட்டம்....கூட்டம்..எங்கு நோக்கினும் கூட்டம்.  ஒரு வழியாக பார்சலுக்கு பில் வாங்கிக்கொண்டு சாப்பாடு கவுண்டரின் வரிசையில் இடம் பிடித்தேன்.

இட்லி காலி. இடியாப்பமும் இல்லை.

மசாலா தோசைக்கு சொல்லிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன்.

கவுண்டரிலோ , பரபரவென்று ஆட்கள் இங்குமங்கும் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள். இட்லியை கட்டுவதும், தட்டுகளில் சட்னி,சாம்பாரை நிரப்புவதுமாக - ஒரு நொடி கூட யோசிக்காமல்..வேறு யோசனை இல்லாமல் எதிரிலிருப்பவர்களின் ரசீதை பார்ப்பதும், அதற்கேற்றவாறு குரல் கொடுத்தவாறு தட்டுகளை கொடுப்பதுமாக. 'கொஞ்சம் சீக்கிரம் கொடுங்க' குரல்களுக்கும் பதில் கொடுத்தவாறு!

இதில் இரண்டு முகங்களைத் தவிர, மற்றவையெல்லாம் வட இந்திய/வடகிழக்கு இந்திய முகங்கள். 'இவர்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் இருக்கும்? நின்று நின்று வேலை செய்தால் இரவில் கால்கள் வலி பின்னுமே? இளவயதாக இருப்பதால், இப்போது தெரியாமல் இருக்கலாம். ஆனால்,  சில ஆண்டுகள் போனால்?  'என்றெல்லாம் எனக்குள் ஓட ஆரம்பித்திருந்தது. பார்வையை இந்தப்பக்கமாக திருப்பினேன்.

டேபிள்கள் எல்லாம் நிறைந்து இருந்தன. குழந்தைகளோடு குடும்பமாக சாப்பிட வந்தவர்கள், நண்பர்களோடு சாப்பிட வந்தவர்கள், பார்ட்டி கொடுக்க வந்தவர்கள்....இதனிடையே, அருகிலிருந்த பார்ட்டி ஹாலில் ஒரு குழந்தையின் இரண்டாம் பிறந்தநாள் விழா.  குர்தா,ஜிப்பாவுடன் அப்பாவானவர் பவ்யமாக நடை பயின்றுக்கொண்டிருந்தார்.

இதன் நடுவே ஒரு இளைஞர் பட்டாளம். ஆர்டர் தூள் பறந்துக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில், ஆர்டர் எதுவும் இல்லாமல், எல்லாரும் கவுண்டரில் நின்றனர் அவர்களுக்குள்ளாக சிரிப்பும் கும்மாளமும் லேசான குற்றவுணர்ச்சியுமாக. வேலையில்லாமல் சும்மா நின்றால் சூப்பர்வைசரின் பார்வைக்கு உள்ளாவோமோ என்ற குற்றவுணர்ச்சியாக இருக்கலாம் அது.

அதற்கேற்றவாறு, ஒரு சூப்பர்வைசர் ஒருவர் வந்து ஒருவரை அழைத்தார். 
'நீ இங்க வந்து நில்லு. வெளில பாத்துக்கோன்னா நிக்காம இங்க வந்து இருக்க இல்ல. இந்த டெலிவரிய பாரு. மூணு பிளேட் இட்லி கட்டு" என்றார். அந்த குறிப்பிட்ட இளைஞன் வெட்கமும் மாட்டிக்கொண்ட உணர்ச்சியோடும் அவர் சொன்ன  இடத்தில்  வந்து நின்று தட்டுகளை நிரப்பத்தொடங்கினான். 'நீங்கள்லாம் ஏன் சும்மா நிக்கிறீங்க, சட்னி, சாம்பாரை கட்டி வைங்க' என்றார் சூப்பர்வைசர். ஓரிருவர் பாலித்தீன் பைகளை எடுத்து நிரப்பத்தொடங்கினர்.

இதன் நடுவில், எனக்குரிய மசாலா தோசை வந்தது. வாங்கிக்கொண்டு  திரும்பினேன். டேபிள்கள் நிறைய பிளேட்டுகள் வழிய குடும்பங்கள் சிரிப்பும், கூச்சலுமாக உண்டுக்கொண்டிருந்தனர்.

ஆப்பத்துக்கு தனி கவுண்டர்.

ரசீதை பார்த்ததும், ஓரமாக நின்றிருந்த இளைஞன் அடுப்புக்கருகில் வந்தான்.  ஆப்பம் என்பது என்னை பொறுத்தவரை ஆயாக்கள்/வயதானவர்களோடு அசோசியேட்டட். அதாவது அவர்களுக்குத்தான் பொறுமையாக பக்குவமாக வரும் என்பதோடு அவர்கள் சுட்டுத்தான் கண்டிருக்கிறேன்.இங்கு வடகிழக்கு இளைஞனொருவன் வாணலியில் துணியால் நெய்யைத்தடவி மாவை ஊற்றி
லாவகமாக‌ சுற்றி, அடுப்பில் வைத்து இட்லி பானை மூடியால் மூடினான். 
பிளாஸ்டிக் தட்டை எடுத்து குருமாவை ஊற்றினான். ஒரு பாலித்தீன் பையில் தேங்காய் பாலை ஊற்றிக் கட்டினான். இட்லி மூடியை எடுத்துப்பார்த்துவிட்டு வாணலை சற்று சாய்த்து வைத்தான். சில நொடிகளில், வெந்துவிட்ட ஆப்பத்தை கையாலேயே சுழற்றி எடுத்து தட்டில் வைத்து மூடினான். பார்சல் ரெடி.

வீட்டுக்கு வந்து நெடுநேரம் ஆகியும், மனம், அந்த பவனின் பரபரப்பான இளைஞர் பட்டாளத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது.  நான் மட்டுமல்ல, அந்த டேபிளில் அமர்ந்திருந்த‌ குடும்பங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பது  வாங்கிய இட்லி - தோசையை மட்டுமல்ல, எங்கிருந்தோ வந்த அந்த இளைஞர்களின் உழைப்பையும்தான்!  கவுண்டருக்கு இந்தப்பக்கமாக பளபளக்கும் வாட்சும், மொபைலும், லீவைஸ் ஜீன்சுமாக நின்றுக்கொண்டிருப்பது வெறும் திறமையினால் மட்டுமல்ல‌, அந்த இளைஞர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பையும் சேர்த்துத்தான்!!  இந்த குற்றவுணர்ச்சியின்றி அந்த மசாலா தோசையை அன்றிரவு என்னால் உண்ண‌ முடியவில்லை.

Sunday, November 18, 2012

பப்பு டைம்ஸ் (அவ்வ்வ் டூ பவ்வ்வ்)



"ஆச்சி, அந்தமான் எப்போ போலாம்?" - பப்பு

"ம்ம்..நீ இன்னும் பெரிய பொண்ணானதும்."

"அந்தமானோட கேபிடல் என்னா தெரியுமா? போர்ட் ப்லேர். " - பப்பு

"வாவ்! எப்படி தெரியும்?" (இப்போ கொஞ்ச நாளா எல்லா மாநிலங்களையும் கற்றுக்கொண்டிருப்பது தெரியும். இருந்தாலும் ஒரு என்கரேஜ்மென்டுக்காக...இந்த வாவ்!)

"எனக்கு தெரியும் ஆச்சி.அதெல்லாம் யூனின் டெரிட்டரி. யூனின் டெரிட்டரின்னா என்னன்னு சொல்லு? அதுக்கு கேபிடலே கிடையாது. பாண்டிச்சேரி, டெல்லி, கோவா..அதுக்கெல்லாம் கேபிடல் இருக்கா? அதுக்கெல்லாம் அதேதான் கேபிடலு!" - பப்பு

"டாய்! கோவாக்கு பனாஜிதானே கேபிடல். அந்தமான்கு போர்ட் ப்லேர்ன்னு நீதானே இப்ப சொன்னே." (ஹிஹி...:‍))

"ஹை ஆமா, கரெக்ட். டெல்லிக்கு இருக்கா? இல்லைல்ல. எனக்கு தெரியும்,ஆச்சி. நான் படிச்சு பெரிய பொண்ணாயிடுவேன். யூ டோண்ட் வொர்ரி. ஐ வில் பி ஃபைன்!" (இப்போதான் லைட்டா பயம் வருது!!)





புதிதாக பிறந்த ஒரு புதுவரவைக் காண மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வரும்வழியில், பப்புவுக்கு சிசேரியனைப் பற்றி ஒரே கவலை. எப்படி ஆபரேஷன் செய்திருப்பார்கள், அவருக்கு வலித்திருக்குமா? வயிறு திரும்ப சரியாகிவிடுமா? என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். அடுத்த நாள் மாலை நடந்த உரையாடல்: பள்ளியில், அர்ஷித்திடம் ஆபரேஷன் எப்படி செய்வார்கள் என்று கேட்டாளாம்.

'ஆபரேஷன் செஞ்சு அந்த வயிறை தூக்கி டஸ்ட் பின்லே போட்டுட்டு வேற வயிறு வைப்பாங்க' என்றானாம்.

"உனக்குதான் தெரியும் இல்ல, நீ ஏன் அர்ஷித்கிட்டே கேட்டே?' என்றேன்.

"எனக்கு தெரியும், ஆனா அர்ஷித்துக்கு தெரியுமானு செக் பண்ணேன். மேமல்ஸ் படிச்சிருக்கோம் இல்ல, அதுக்கூட அவனுக்கு தெரியல..."

அவ்வ்வ்வ்வ்வ் என்று இருந்தது எனக்கு.

'நீ எப்படி பொறந்தேன்னு தெரியுமா? நீ முட்டையிலிருந்துதான் வந்தே' என்று (கிண்டலுக்குத்தான்!) சொல்லிவிட்டேன். ரொம்ப கோவம் வந்துவிட்டது.



"நீ ஆபிஸ் படிக்கறே, இதுகூட உனக்கு தெரியலையா? முட்டையிலேருந்து நாம வரமாட்டோம்." என்று முகத்தை திருப்பிக்கொண்டாள். 'பச்சைமிளகாய்' என்றுதான் கூப்பிடுகிறோம். அவ்வளவு கோபம் வருகிறது, இப்போதெல்லாம்.








எதற்கோ பெரிம்மாவுடன் ஒரே அடம்.சண்டை.

பெரிம்மா டூ பப்பு: you are a kid. I am an adult.

பப்பு: I am an adult too.

பெரிம்மா: I am an elder.

பப்பு: No, I am 'adulter' than you!

மீ பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Wednesday, July 25, 2012

தமிழ் சினிமா பாடல்களும், மலரும் நினைவுகளும்

"80களின் தமிழ் திரைப்பட பாடல்கள்" என்ற நீயா நானாவுக்குப் பிறகு பேஸ்புக்கில் பலருக்கும் 80களின் தமிழ் பாடல் நினைவுக்கு வந்துவிட்டது போலும். பாடல் மேல் பாடலாக ஒரே ஷேரிங்ங்ங்ங்!!எனக்கும் ஏதாவது தமிழ் பாடல்கள் நினைவுக்கு வருகிறதா என்று யோசித்தேன்...ம்ஹூம்!! மங்கலாக, "வந்தாய் கோபாலனே" என்ற பாடலும்,"மாமிக்கு மயிலாப்பூருதான்" பாடலும் நினைவுக்கு வந்தன. அப்புறம், "ஹேய்....இளமை இதோ...இதோ" பாடலும். அதற்கு பிறகு, எவ்வளவுதான் மூளையை கசக்கினாலும்...போன ஜென்மத்து நினைவு கூட எட்டிப்பார்த்துவிடும் போலிருக்கிறது, தமிழ்பாடல்கள் எதுவும் நினைவிலில்லை!!

அதற்குள், அம்னீஷியா என்றெல்லாம் முடிவு கட்டிவிடாதீர்கள், வேறு ஒரு காரணமிருக்கிறது, மேலே குறிப்பிட்ட அந்த ஒரு சில தமிழ்பாடல்கள் எல்லாம் ஐந்து அல்லது ஆறு வயதில் கேட்டது - அறியாத வயதில்,புரியாத பருவத்தில்!!  அதற்கு பிறகு, வீட்டில் தமிழ் திரைப்பட பாடல்கள் சுவடே இல்லாமல் ஆகிவிட்டது. வெயிட்...வெயிட்...நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அக்மார்க் சுத்தமான தமிழ்ப்பெண்தான். ஆனால், ஏனோ  வீட்டில் தமிழ் பாடல்களுக்கெல்லாம் தடா!

அந்த 'ஏனோ'வில் இருக்கிறது எல்லாம்! தமிழ் திரைப்பட பாடல்களைக் கேட்கும் வழக்கமே இருந்ததில்லை. முதலில் பாடல்களே இருந்ததில்லை. எல்லாம், "உனக்கு நான்;எனக்கு நீ" என்று காதல் பித்து பிடித்து ஆட்டுவதே காரணம்.  இந்த மாதிரி பாடலைக் கேட்டு எங்கே பிள்ளைகள்(ஹிஹி நான் தான்) மனசு கெட்டுவிடுமோ என்ற ஆயாவின் பயமும் முக்கிய காரணி.
முக்கியமாக, பெரிம்மா உட்கார்ந்து தமிழ் திரைப்படப் பாடல்களை கேட்டதாக நினைவே இல்லை.  அதோடு, நாங்கள் பாடல்களை பார்த்ததுக் கூட‌ இல்லை. 'ஒளியும் ஒலியும்' மட்டும் விதிவிலக்கு. ஏனெனில், அதில் எல்லாம் சிவாஜி/எம்ஜிஆர் பாடல்கள்தான், பெரும்பாலும்! நாங்கள் அதைப்பார்த்து(!) என்ன பாதிப்புக்குள்ளாகப் போகிறோம்?!!அதிலும், கடைசி பாடலாக ஒரு புதிய பாடலைப் போடுவார்கள். அப்போதுதான், எல்லாருக்கும் தண்ணீர் தாகம் எடுக்கும் அல்லது கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அடியேந்தான் அதற்கு பலியாடு!

எல்லாரும் சொல்வது போல, எங்கள் வீட்டிலும் ஒரு ட்ரான்சிஸ்டர் இருந்தது.
அதில் சென்னை வானொலியும் பிபிசியும்தான் வரும். அதில் தமிழ்பாடல்கள் என்றால், "ராஜா வாடா சிங்ககுட்டி" டைப் பாடல்கள்தான்.  அதைத்தாண்டி, தமிழ்பாடல்கள், என் காதில் ஒலித்திருக்கும் என்றால் ,அதற்கு  நாங்கள் வசித்த பகுதியிலிருந்த கோயிலுக்கோ/ திருமண மண்டபத்துக்கோத்தான்   நன்றி சொல்ல வேண்டும். அங்குதான், ஸ்பீக்கரில் பாட்டு போட்டு விடுவார்கள்.

ஆனால், பள்ளியிலோ எல்லாம் தலைகீழ். என்னைத்தவிர, எல்லாரும் இந்த‌ ஜிகேவில் கெட்டிக்காரர்கள். பாட்டுப்புத்தகங்களை எல்லாம் வைத்து கெமிஸ்ட்ரி க்ளாசில் மனப்பாடம் செய்வார்கள். (அதில் பாடல்வரிகளை பார்த்தால் நிஜமாகவே அருவருப்பாக இருக்கும்.) புதிய பாடல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். நான் மட்டும் அவர்கள் வாயை பார்த்துக் கொண்டிருப்பேன். நல்லவேளையாக பாட்டு பாடும் விபரீத ஆசையெல்லாம் இல்லாமல் போயிற்று.  ("மணிக்குயில் இசைக்குதடி" என்ற பாடலை குணசுந்தரி பாடக்கேட்டு அதுதான் ஒரிஜினல் என்று நம்பி அதற்கு விசிறியாக இருந்தது, தனிக்கதை!)

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், எல்லாரும் அம்மா, அப்பா, அண்ணா/ அக்காவோடு இந்த சினிமாக்களை பார்த்திருப்பார்கள். அவர்களது அப்பாக்கள் பாடல் கேசட்டுகளை வாங்கித்தருவார்கள். பாடல்களை குடும்பத்தினருடன் கேட்பார்கள். இப்படி ஒரு பழக்கம் எங்கள் வீட்டில் இருந்ததேயில்லை. அதாவது, தமிழ் திரைப்பட பாடல்களை ஒலிக்க விட்டு கேட்பது! இது  நிஜமாகவே எனக்கு அன்றும் இன்றும் ஆச்சரியமே!

ஏனெனில்,   கிட்டதட்ட எல்லா பாடல்களுமே, பெண்ணின்  உடல் உறுப்புகளையே வர்ணிப்பது, "காதலுக்கு முன் எல்லாம் தூசு" ,
ஆணுக்காக ஒரு பெண் ஏங்கி கிடப்பது, 'எனக்கு நீ  உனக்கு நான்  ' டைப்   தலைவன் - தலைவி பாட்டுகள், முக்கியமாக எல்லா பாடல்களும் சுற்றி சுற்றி கட்டிலிலேயே வந்து முடிவது  -  இவையெல்லாம் எனக்கு ஒவ்வாதிருந்தன‌!

இந்த பாடல்களை எல்லாம்  கேட்காமல் "நீதான் மிஸ் பண்ணிட்டே" என்றால் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படி கேட்காமலிருந்து(படித்து வேலைக்குப் போகும்வரை எதிலும் சிக்கிக்கொள்ளாமலிருக்க வேண்டும் என்ற கடிவாளத்துடன் வளர்க்கப்பட்டு), எனக்கே ஒரு கட்டத்தில், இந்த பாடல்கள் மீது, ஒருவித அசூயை வந்துவிட்டிருந்தது. அதாவது,   
( வெற்றியடைந்த பெரும்பாலான‌ பாடல்கள்) எல்லாமே ஏன் தலைவன் - தலைவி அல்லது ஹீரோயின் உடலமைப்பை வைத்து வம்பிழுப்பது, 'எப்போது உன்னைத் தருவாய், என்னைத் தருவேன்' என்றே இருக்கிறது,  இதைத்தாண்டி எதுவுமேயில்லையா என்றெல்லாம்  யோசிக்கத் துவங்கியிருந்தேன்.

பெரும்பாலான தமிழ்பாடல்களை கல்லூரி சென்றுதான் முதன்முறையாக கேட்டிருக்கிறேன். ("மயங்கினேன் சொல்ல தயங்கினேன்", "நிவேதா", "ஊரு சனம் " அப்புறம் "இவள் மேகம் ஆக யாரோ காரணம்" என்ற வரி உள்ள பாட்டு போன்றவை(இதுக்கு ப்ரியா மெனக்கெட்டு விளக்கம் சொன்னதால மறக்க முடியலை! :‍))) அப்பொழுதும் பெரிதாக ஈர்ப்பொன்றும் ஏற்படவில்லை.
'இவங்களுக்கு எப்படி இவ்ளோ பாட்டு தெரிஞ்சுருக்கு' என்ற ஆச்சரியமே மேலோங்கியது! கல்லூரிக்குச் சென்றிருந்ததால், கொஞ்சூண்டு சுதந்திரம் கிடைத்திருந்தது. அப்போதோ, எனக்கே தமிழ்பாடல்களை வீட்டில் ஒலிக்க விட்டு கேட்க சங்கோஜமாக இருந்தது. அது இன்று வரை தொடர்கிறது. இன்றும் கூட, என் குடும்பத்தினர் முக்கியமாக பெரிம்மா/ஆயா  முன்னால் டிவியில் தமிழ் திரைப்பட பாடல்களை பார்க்க முடிந்ததில்லை.

திருமணத்துக்குப் பின், இதுவே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. காலையில், அதுவும் எழுந்தவுடனே டீவியை ஆன் செய்யும் பழக்கம் இருந்ததேயில்லை. ஆனால், அடுத்தப்பக்கமோ அப்படி இல்லை. அங்கு அவர்கள் அனைவரும் காலையிலேயே காபி குடிப்பதுபோல, டீவி அதுவும் ஏதாவது பாடல் சேனலை வைத்துவிடுவார்கள். என்னால், இதற்கு அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளவே முடிந்ததில்லை. காலை நேரத்தை, ஒரு கன்றாவி டீவி பாடலால் வீணாக்கிக்கொள்வதை அனுமதிக்கவே முடிந்ததில்லை. டீவி என்பது ஓய்வு நேரத்தில் மட்டுமே என்ற கட்டுப்பாடுடன் வளர்க்கப் பட்டிருந்ததாலோ என்னவோ, தனியாக இருந்தால் கூட காலை நேரத்தில் டீவி பார்த்ததில்லை.  சரி, அது போகட்டும், பாடலுக்கு வருவோம்....

இந்த தமிழ்பாடல்கள் எத்தனை லட்சக்கணக்கில் இருந்தாலும் அவை எல்லாம் ஒரு பெண்ணை கட்டிலில் வீழ்த்துவதையே ஏன் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன? கருப்பு வெள்ளைப்படங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இந்த 80கள் பாடல் முதல்....இன்று வரை!?! 

குடும்பத்தோடு  பார்க்க அபத்தமானவற்றை/அருவருப்பானவற்றை/இரட்டை அர்த்த வரிகளை எப்படி நாம்  குழந்தைகள் முதல் அனைவரும் கூச்சமின்றி கேட்கிறோம் /பார்க்கறோம் என்பது புரிந்ததேயில்லை. இதனாலேயே, இந்தபாடல்கள்தான் ஏதோ ஒரு 'கலாச்சாரம்' என்றோ 'மறுமலர்ச்சி' என்றோ சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அவற்றை என்னால் கொண்டாடவும் முடிந்ததில்லை. ஆனால், இது நிச்சயமாக என்னுடைய லிமிட்டேசன் மட்டும் இல்லை.


பிகு: இந்த பதிவு இளையராஜாவுக்கு எதிரானதில்லை என்றும்  நான் வளர்ந்த காலகட்டத்தில் வெளியான, பொதுவான‌ தமிழ் திரைப்பட பாடல்கள் பற்றி என்றும்  புரிந்துக்கொள்ளவும்.

Monday, July 23, 2012

நியூஸ் ரீல்


பப்புவுக்கு சீனியர் சென்றதிலிருந்து தினமும் நியூஸ் பேப்பர் கட்டிங் எடுத்து வர வேண்டும். அன்றைய அல்லது முந்தின செய்தித்தாளிலிருந்து ஒரு செய்தியை வாசித்து, வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும். (ஸ்கூலில் சேர்க்கச் சென்றபோது, பிரின்சிபால் மாண்டிசோரி முறையை விளக்கிவிட்டு பள்ளியின் அருமை பெருமைகளை விவரித்தார். அப்போது, "ஐந்தரை வயதில் எங்க பிள்ளைகள் நியூஸ் பேப்பர் படிக்கும்" என்ற போது புளகாங்கிதமடைந்து விட்டேன். கடைசியில், அது எனக்கே ஆப்பாக வந்து முடியும் என்றா நினைத்தேன்?! பின்னே, நாந்தான் அவளை நியூஸ் படிக்க வைக்க பின்னால் ஓட வேண்டியிருக்கிறது?!!)சரி, அது போகட்டும்,

சமீபத்தில், 'கடவுள் துகள்' பற்றிய செய்தியை வாசித்தாள். விவரித்துச் சொன்னதும் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டாள். என்னவாம்?

 "ச்சே, இதைத்தான் நான் சயின்டிஸ்டாகி கண்டுபிடிக்கலாம்னு நினைச்சிருந்தேன். இவங்க கண்டுபிடிச்சுட்டாங்க! திருட்டுப் பசங்க!!" என்றாள்.


தூக்கிவாரிப்போட்டது!!

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, "சரிப்பா, நான் வேற கண்டுபிடிக்கறேன். அனிமல்ஸ்ல்லாம் பேசும் இல்ல, அது என்ன பேசுதுன்னு நமக்கு தெரியுமா? இல்லல்ல, அதுக்கு ஒரு மெஷின் கண்டுபிடிக்கப் போறேன். அதை காதுல மாட்டிக்கிட்டு நாம காட்டுல போனா, பேர்ட்ஸ் என்ன பேசுது,சிங்கம் என்ன பேசுதுன்னு நமக்கு தெரியும். அது எவ்ளோ தெரியுமா? அஞ்சு ரூபான்னு வைக்கப் போறேன். ஏன்னா, எல்லா மக்களும் வாங்கணும் இல்ல. உழைக்கும் மக்கள் என்ன பண்ணுவாங்க,அப்புறம்?அதுக்குத்தான்"

 பப்புவின் ஒரிஜினல் ஆசை சயின்டிஸ்டாக வேண்டும், என்றாலும் டெய்லராகவும் ஆக வேண்டும் என்றும் ஆசையாம்!

Sunday, July 22, 2012

முகங்கள்...முகங்கள்...சுவர் முழுக்க முகங்கள்!!

 திடீரென்று வீட்டில் எங்கு திரும்பினாலும் முகங்கள். சுவரில்,பேப்பர்களில் என்று எங்கு பார்த்தாலும் முகங்கள்..முகங்கள்!! 

பப்புவுக்கு ஒன்று சரியாக வரும்வரை திரும்ப திரும்ப செய்துக்கொண்டிருப்பாள்.  புதிதாக வாங்கிய பொம்மையிலிருக்கும் ஸ்க்ருக்களை கழற்ற வேண்டுமோ, பேட்டரியிலிருக்கும் ஒயர்களை பார்க்க வேண்டுமோ அல்லது புக் மார்க்குகள் செய்ய வேண்டுமோ எதுவாயினும், அதில் வெற்றியடையும் வரை/அவளுக்கு திருப்தி ஏற்படும் வரை  திரும்ப திரும்பச் செய்துக்கொண்டிருப்பாள். 
பொதுவாக, வரையச் சொல்லித்தரும் புத்தகங்களை வாங்கியதில்லை. புத்தகத்தினால், அவளது, க்ரியேட்டிவிட்டி பாதிக்கக்கூடாது என்று.


இந்த நேரத்தில், Ed Emberley-யின்  புத்தகங்களைக் காண நேர்ந்தது.  அதில் ஒரு டைட்டில், முகங்கள் - ’Ed Emberley's Drawing Book of Faces’!  வித்தியாசமாக இருக்கவே, வாங்கினேன். 



அந்த நேரம் பப்புவுக்கு டெர்ம் விடுமுறை.    விடுமுறைக்கு ஆம்பூருக்குச் சென்றிருந்தோம். டீவி பார்க்க பழகி விடுவாளோ என்று பயமாயிருந்தது. (2.5  வருடங்களாக வீட்டில் டீவி இல்லை!)  நல்லவேளை, ed emberley-யின் புண்ணியத்தில், முகங்களை வரைந்து தள்ளிவிட்டாள்!! 




கடந்த டிசம்பரிலிருந்து இந்த போஸ்ட் டிராஃப்டிலிருக்கிறது. இன்று கொஞ்சம் வெட்டியாக இருந்ததால், தூசு தட்டி போஸ்ட் செய்திருக்கிறேன். :-)

Saturday, July 21, 2012

1 முதல் .......

ஆரம்பத்தில் அது இப்படி இருந்தது. விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது.


1 2 3 4 5

கொஞ்ச நாளைக்குப் பிறகு,

1 2 3 4 5 6 7 8 9 10 என்றானது.

சிறிது நாட்களுக்குள்ளாக‌,

0 1 3 4 5 6 7 8 9 10  என்று மாறியது.

அதற்கு கொஞ்ச நாளைக்குப் பிறகு,

10 20 30 40 50 60 70 80 90 100

அதற்குப் பிறகு,

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ....

அதற்குப் பிறகு,

2 4 6 8 10 12 14 16 18 20.....

அதன் நடுவில், அவ்வப்போது

1 3 5 7 9 11 13 15...

அதைத் தொடர்ந்து,
ஒன்று, இரண்டு, மூன்று,நான்கு,.........பத்து.

என்றும் மாறியது. அதோடு, ஏக் தோ தீன் கூட‌!

அதற்கு கொஞ்சநாளைக்குப் பிறகு,

100 200 300 400 500 600 700 800 900 1000

அதைத்தாண்டி,

101 102 103 104 105 106 107 108 109 110 ,,,,

பிறகு அது இப்படி ஆயிற்று,

1000,2000,3000,4000........மில்லியன்,பில்லியன்,ட்ரில்லியன்..

அதைத் தொடர்ந்து,

20+20=40, 40+40=80,80+80=160, 160+160=.......

கொஞ்ச நாள் கழித்து,

100,99,98....... என்றும் அவ்வப்போது,

10,9,8..... என்றும் ஆன‌து.

அதற்குப் பிறகு, திடீரென்று ஒருநாள்

1+10=, 2+9=, 3+8=,4+7=ன்னு சொல்லு என்றாகியது.

"என்ன, எல்லாமே '11 ' வருதா, நானே கண்டுபிடிச்சது" என்றாய்.

'எப்படியோ, வேலை முடிந்தால் போதும்' என்று என்று ஓடிக்கொண்டேயிருக்கும் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருப்பேன்.

"ஆச்சி, நம்பர்ல்லாம் எப்படி நிக்காம ஓடிக்கிட்டே இருக்கும் இல்ல, அது மாதிரி உனக்கு,ஆயாவுக்கு, நம்ம ஃபேமிலிக்கு, தோழர்களுக்கு எல்லாம் வயசு ஓடிக்கிட்டே இருக்கணும். 100 இயர்ஸ் ஆனாலும் யாரும் செக்கவே கூடாதுன்னு  நினைக்கறேன்" என்கிறாய்.

எப்படியோ, பள்ளி சேர்ந்து மூன்றரை வருடங்கள் ஆனாலும், காலையில் ஏழு மணிக்கு உன் கையில் ஒரு டம்ளர் பாலைக்கொடுத்துவிட்டு,  நீ குடிக்கும்வரை ( or vice versa) உன் முன்னால் நின்றுக்கொண்டு இந்த நம்பர்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது மட்டும் எப்போது நிற்கும்(!) என்று  நினைத்துக்கொள்கிறேன் நான்.


Anyway, தொடர்ந்து வளர்ந்துக்கொண்டே இருக்கும் இந்த எண்களைப்போல, நீயும் வளர வாழ்த்துகள்,பப்பு! இந்த வருடமும், நிறைய கற்றுக்கொள்ளவும், அறிந்துக்கொள்ளவும் நண்பர்களைப் பெறவும் வாழ்த்துகள்!! :-)

Friday, June 15, 2012

Bat Talk

"நைட் தூங்கலன்னா ரைனோ வரும்"
.
.
"கூர்க்கா சத்தம் கேட்டதும் லைட் ஆஃப் பண்ணிடனும், இல்லன்னா நைட்ல நாய்ல்லாம் பறந்து பறந்து ஜன்னல்கிட்டே வரும்"
.
.
"கிச்சு கிச்சு பண்ணா கொம்பு முளைக்கும்"
.
.
.
"துணியை/கர்ச்சீப்பை வாயில வைச்சா வால் முளைக்கும்"


'இதெல்லாம் இனிமே நான் நம்ப மாட்டேன் ஆச்சி, பொய் சொல்லியா என்னை ஏமாத்திக்கிட்டிருக்கே!!' ‍‍என்ற கண்டுபிடிப்புக்குப் பிறகு, இவையெல்லாம் காலாவதியாகிவிட்ட நிலையில் (அவ்வ்வ்...)

"நைட் ல அழறவங்க மேல  பேட்  வந்து ஒட்டிக்கும்" என்று (ஒரே தடவைதான்!அதுவும், இரவு 12 மணிக்கு படம் பார்க்கணும் என்று அழுதபோதுதான்) சொல்லிவிட்டேன்.

இப்போது இரவானால் பேட்டை நினைத்து நாந்தான் பயந்துபோகிறேன்.


"ஆச்சி, பேட் (வவ்வால்) எப்படி நம்ம மேல ஒட்டிக்கும்?கம் இருக்குமா? ஏன் அது நைட்ல நம்மளை தேடி தேடி வரும்? "

"ம்ம்..அது வந்து நம்ம கைல  தொங்கும்."

"ஆச்சி, அது தலைகீழதான தொங்கும். ஆயா சொன்னாங்க."

"ஆமாம்"

"ஆச்சி, அது தலைகீழா தொங்கினா அதுக்கு 'குடலேத்தம்' வராதா?"

"ம்ஹூம்....அது நேச்சரே அப்படிதான்."

"ஓ..அப்போ நேரா தொங்கினாதான் அதுக்குல்லாம் 'குடலேத்தம்' வருமா,ஆச்சி?"

!!!

(அவ்வ்வ்வ்....எகொச‌!!) இதோடு மட்டும் முடிஞ்சா பரவாயில்லையே!!

"ஆமா ஆச்சி, பேட்‍லாம் பகல்லதான தூங்கும். எங்க தூங்கும்?"

" நாம காட்டுக்கு போகும் போது வாயை திறந்து தூங்கிட்டிருந்தா பேட் என்ன பண்ணும்?"

" பேட்‍டோட குழந்தை தலைகீழ நடக்க கத்துக்கும்போது விழுந்துட்டா அவங்க அம்மா என்ன பண்ணுவங்க?"

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Monday, June 04, 2012

Travelogue by Pappu - I


 சமீபத்தில் சென்று வந்த டூரைப் பற்றி எழுதச் சொன்னேன். ஆரம்பித்துவிட்டு, 'நிறைய இருக்கு,எழுத முடியாது' என்றாள். ’சரி, நீ சொல்லு, நான் உனக்காக எழுதித்தரேன்’ என்றேன். அதுதான் இது:

 We go by taxi to chennai railway station. And, we go to the train.  Our train was not ready. we sit 5 minutes. And, the train was ready.  We go to the train. And, the train go slowly.



And everything was beautiful.(இது அடுத்த நாள் காலையில எழுந்தப்புறம், ஜன்னல்
வழியா வேடிக்கை பார்த்ததை சொல்றாங்க, மேடம்.
). I asked my mother  this is China or Japan? Mother said this is Karnataka.  (அவ்வ்வ்..பசுமையா, வயல்,ஆறு எல்லாம் சைனா/ஜப்பான் படத்துல மட்டும்தானே பார்த்துருக்காங்க.) We got a new house. (அவ்வ்வ்வ்..அந்த காட்டேஜ் வாடகைக்கும்மா) And I play. I saw orange leaves.Every trees are  beautiful. I play swing and shuttle.

First Day:

Next day morning we go to the Dubare Forest. We go by taxi. We got the ticket for boating. And the boat color was yellow.  We go to the other shore. I saw all the people are bathing elephants. Baby elephant  was playing in the water.And we go to buy ticket for bathing the  elephant. I bathed and bathed and bathed the elephant. It was jolly  and it was fun. I felt so happy and I liked the place.


And ,I go to buy food for the elephants. You know, what I give  for the elephant?
A watermelon. And, elephant has showed his hand and I keep watermelon in his hand. He ate beautifully.


And, we go to buy tickets for going elephant ride. It was crowded  and long queue.And, we go to the tree house.We climbed on the  elephant's howdah. I feel so happy and so so jolly. I liked to go  elephant ride. But, my grandmother did not come elephant ride. my mother and I go to the elephant ride.



I liked bathing elephant, give food to the elephant and the ride also.

Again we go by boat. I was rowing the boat. I row fastly(!!) but everyone rowing slowly(!!). (கண்ணு,  நாம ரோ பண்ணதாலல்லாம் போட் போகலம்மா...அவ்வ்வ்)
And, we reached the other shore and left Dubare Forest.
I did not have mind to go out of dubare. But, my mother takes me from there. (ஹ்ம்ம்...எனக்கும் விட்டுட்டு வந்துரணும்னுதான் ஆசை..ஹிஹி)

விரைவில் அடுத்த பாகம்....