Wednesday, October 26, 2011

மூவ் மற்றும் வோலினி அறிந்த வலிகள்...

மதியம் 3 மணி வாக்கில் சென்னை சாலைகளில் சென்றிருக்கிறீர்களா? பல்வேறு வகை யூன்ஃபார்ம்களில் பள்ளி சிறார்கள் சைக்கிள்களில், வேன்களில், ஆட்டோக்களில் சிட்டாக பறப்பதைக்காணலாம். அதோடு இன்னொரு காட்சியையும் கவனித்திருக்கலாம். டூ-வீலரில் முன்னால் பைகளை வைத்தபடி, பின்னால் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அல்லது முன்னால் ஒரு குழந்தை, பின்னால் ஒரு குழந்தையோடு பைகளையும் சமாளித்தபடி அல்லது பையை முதுகில் மாட்டிக்கொண்டு குழந்தையின்கையை பிடித்தபடி நடக்கும் தாய்கள்....

பார்க்கும்போது, இவ்வளவு பெண்கள் டூவீலர் ஓட்டுகிறார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. (ஒருவேளை நான் பார்த்த சாலை முழுக்க பெண்களே தென்பட்டதும் காரணமாக இருக்கலாம்.) பெண்கள் டூவீலர் ஓட்டுவதைப் பற்றியது அல்ல இந்த இடுகை. காலையில் எழுந்து சமைத்து, உண்வை பேக் செய்து கொடுத்து, வீட்டைத் துடைத்து, துணி துவைத்து குடும்பத்தை பராமரிக்கும் பெண்களின் சம்பளமற்ற உழைப்பைப் பற்றியது.

குடும்பத்தைப் பராமரிக்கும், இந்த வேலைகளுக்கென்று, எந்த அங்கீகாரமும் இல்லை. அதற்கென்று ஊதியமோ, வரையறைகளோ இல்லை. (மூன்று வேளைச் சாப்பாடும், பண்டிகைகளின்போது துணிமணிகள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.) அதைத்தாண்டி, இந்த வேலைகள் ஒரு உழைப்பாகவே எண்ணப்படுவதில்லை என்பதுதான் இதில் வேதனையான உண்மை. அதனினும் உண்மை, பெண் என்பதனாலேயே இந்த வேலைகள் அவர்கள் தலைமேல் கட்டப்படுவதும், கட்டாயம் அவர்கள் இதனை செய்தாகவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும்.

இதைப்பற்றி பேசினால், வீட்டுவேலை என்ன பெரிய கஷ்டமா? எல்லாத்துக்கும் மெஷின் இருக்கு, அந்த காலத்து மாதிரி எல்லாத்தையும் கையிலேவா செய்றாங்க? துணி துவைக்க மெஷின் இருக்கு, அதை எடுத்து காயப்போட்டு எடுத்து வைக்கணும், மாவு அரைக்க கிரைண்டர் இருக்கு, முன்னாடி மாதிரி கல்லுலயா அரைக்கறாங்கஎன்று இந்த காலத்து ஆண்களும் சரி,அந்த காலத்து பெண்களும் அலுத்துக்கொள்வார்கள். முன்பை விட மெஷின்களும் வேலை நேரத்தை, உழைப்பைக் குறைத்திருப்பது உண்மைதான். ஆனால்,வேலைக்கும் சென்று, பிறகு வீட்டையும் கவனித்துக்கொள்ளவே இம்மெஷின்கள் உதவுகின்றவேயன்றி அதனாலெல்லாம் பெண்களின் கடமைகள் சற்றும் குறைந்துவிடவில்லை.

வெளியில் துணி துவைக்க அல்லது அயர்ன் செய்ய கொடுத்தால் நான்கு ரூபாய் முதல் 10 ரூபாய், கால்கிலோ இட்லி மாவு பதினான்கு ரூபாய்... வீட்டிலோ இவையெல்லாம் எந்த செலவுமின்றி நடந்தேறிவிடும்.

முன்பு போல இல்லாமல், ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்குகொள்கிறார்கள் என்றாலும் பெண்களின் உழைப்பை பார்க்கும்போது அது மிகவும் சொற்பமே. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் பங்களிப்பே அதிகம். அலுப்பூட்டும், இயந்திர கதியிலான வீட்டு வேலைகளை பெண்கள் கவனித்துக்கொண்டிருந்தால், ஆண்கள், கிரிக்கெட் பார்த்துக்கொண்டோ /ஓய்வெடுத்துக்கொண்டோதான் இருக்கிறார்கள். வெளியில் வேலைக்குச் செல்பவர்களுக்கு, வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது விடுமுறை இருக்கிறது. ஆனால், வீட்டுவேலைகளுக்கு?

அதிலும், இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்துவிட்டால் பெண்ணுக்குத்தான் அதிக வேலை. அலுவலகத்தில் செய்வதோடு அல்லாது, வீட்டுப்பாரமும் அவள்மீதுதான் சுமத்தப்படுகிறது.

ஆனால், வீட்டில் உழைப்பதை யாரும் உழைப்பாகவே அதாவது மதிப்பிற்குரியதாகவே எண்ணுவதில்லை. ஏன், அந்த பெண்களே கூட அப்படி நினைப்பதில்லை. வெளியில் சென்று உழைத்தால்தான்உழைப்புஎன்றுதான் எல்லார் மனதில் பதிந்திருக்கிறது. ஏனெனில் அதன் அந்த உழைப்பின் மதிப்பிற்கு ஒரு சம்பளம் கிடைக்கிறது இல்லையா? ஆனால், வீட்டுவேலையை சம்பளத்துக்குரியதொன்றாக ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரு சாதாரண பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். (இல்லத்தரசி, ஹவுஸ் வொய்ஃப் அல்லது ஹோம்மேக்கர் என்று என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். இதனாலெல்லாம், அவரது வேலையின் தன்மை மாறிவிடப் போவதில்லை.) காலையில் டிபனுக்கு என்ன செய்வதிலிருந்து, அதற்கு முன் கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்வதிலிருந்து, அன்றைய சமையல், குழந்தை வளர்ப்பு, துணி துவைத்தல், சாமான்கள் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல் என்று எத்தனை வேலைகளை ஒருநாளில் செய்யவேண்டியிருக்கிறது. இதற்கு ஏதாவது பெறுமதி இருக்கிறதா?

இதுவே, வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வது என்றால், சமையலுக்கு 1000ரூபாய், மீதி வேலைகளுக்கு 250 ரூ என்றே வைத்துக்கொள்ளுங்கள். (இது மிகவும் குறைந்த பட்சம்தான்) ஆனால், வீட்டிலோ இவையனைத்தும் மலிவாக கிடைத்துவிடுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு இரட்டை சுமையாக இருந்தாலும் குறைந்தபட்சம் வீட்டுவேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளும் வசதியாவது நடுத்தர வர்க்கப் பெண்களுக்கிருக்கிறது. ஆனால், உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு இந்த தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இல்ல. இல்லத்தரசிகளுக்கு வீட்ல சும்மாதானே இருக்கஎன்ற பேச்சோடு, இந்தக் கடமைகளும் சேர்ந்துவிடுகிறது. எனில், வீட்டு வேலை செய்யும் பெண்ணின் உழைப்பை எப்படி மதிப்பிடுவது?

அதனாலேயே, வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களுக்கென்று எந்த பணிமதிப்பும் இருப்பதில்லை. இருப்பதிலேயே, அதிக பணிச்சுமையும் மிகவும் குறைந்தபட்ச ஊதியமும் பெறுபவர்கள் இவர்களாகத்தான் இருக்கிறார்கள். வீட்டு பணிப்பெண்களின் வேலைகளை/உழைப்பைப் பார்க்கும்போது இவர்கள் பெறும் சம்பளம் மிகவும் சொற்பம். இந்த பணிக்கென்று எந்த சம்பள வரையறையும் கிடையாது. இதுவே பலவகை சுரண்டல்கள் – உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கும் வழிவகுக்கிறது. விகடன் போன்ற பத்திரிக்கைகள், பணிப்பெண்களைப் பற்றிய கீழ்த்தரமான ஜோக்குகளை அள்ளித் தெளிப்பதில் காட்டும் ஆர்வத்தை அவர்களின் வாழ்க்கையை அறிந்துக்கொள்வதில் காட்டுவதில்லை. நடுத்தர வர்க்க பெண்களுக்குக் கிடைக்கும் பெயரளவிலான சுதந்திரம் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இவர்களது வீட்டுவேலைகளையும் குழந்தை வளர்ப்பையும் இவர்களேதான் செய்தாகவேண்டும்.

இப்படி, குடும்பத்துக்காக செய்வதை எல்லாவற்றையும் பணத்தோடு சம்பந்தப்படுத்திதான் காணவேண்டுமா என்று கேட்கலாம். அல்லது அப்படி குடும்பத்துக்காக செய்வதில்தான் எவ்வளவு தியாகம்,அர்ப்பணிப்பு இருக்கிறது என்றும் கூறலாம். (அதற்காக, அந்த உழைப்பு மதிப்பிடற்கரியது என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.)எனில், நம் குடும்ப அமைப்பில் பணம் சம்பந்தப்படாமலா இருக்கிறது? அல்லது எல்லாம் தியாக உணர்விலா நடக்கிறது?

குடும்பத்தினரின் நடவடிக்கைகள் அனைத்தையும் பொருளாதாரம்தானே முடிவு செய்கிறது. உணவு, உடை முதற்கொண்டு பிள்ளைகளின் பள்ளி வரை தீர்மானிப்பது பொருளாதாரம்தான். ஒரு பெண் எந்த குடும்பத்துக்குச் மருமகளாகச் செல்ல வேண்டுமென்று தீர்மானிப்பது கூட பொருளாதாரம்தான். அதே போல், வீட்டு வேலைகளை அல்லது குழந்தை வளர்ப்பை தியாகத்துடன் ,அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வதாக சொல்ல முடியுமா? அதை தீர்மானிப்பதற்கான வாய்ப்பின்றிதான், பல பெண்கள் குடும்ப அமைப்புக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது விருப்புவெறுப்புக்கு இடமின்றி, இந்த வேலைகள் அவர்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் நிதரிசனம்.

மேலும், திருமணம் செய்யும் போது அதே தியாக உணர்வுடன் அல்லது அர்ப்பணிப்பு உணர்வுடன், வரதட்சிணை இல்லாமலா நடக்கிறது? அந்த தியாக அல்லது அர்ப்பணிப்பு உணர்வு ஏன் பெண்களிடம் மட்டும் எதிர்ப்பார்க்கப் படுகிறது என்பது புரியாத புதிர்.

திருமணத்தன்று உடுத்திக்கொள்ளும் புடவையிலிருந்து, மருமகளாகச் சென்றாலும் அவளுக்கென்று புழங்க சாமான்கள்,வரதட்சிணை என்று ஒரு பெண் இன்றும் பெற்றோருக்கு செலவாகத்தானே பார்க்கப்படுகிறாள். இன்ஷ்யூரன்ஸ் விளம்பரங்கள் இதற்கு தக்க சான்று. பெண் குழந்தையின் திருமணத்துக்கென்றே சேமிப்பு திட்டங்கள் இருப்பதை எப்படி பார்க்க?

குழந்தையை பார்த்துக்கொள்ள யாராவது ஒருவர் வேலையை விட வேண்டுமென்ற நிலை வந்தால் வேலையை விடுவது பெண்ணாகத்தான் இருக்கும். “நான் வேலையை விட ரெடிஎன்று ஆண்கள் பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லாலாம். ஆனால், யதார்த்தத்தில் அப்படி நடப்பதில்லை. இன்று மாறி வரும் சூழலிலும் பெண்கள் ஆணுக்கிணையாக வேலைக்குச் செல்லும் சூழலிலும் இப்படி நடக்கக் காரணம் - பெண்ணை விட ஆண் இரண்டு வயதாவது அதிகமாக இருக்க வேண்டும் என்ற நமது feudal culture. எனில், பெண்ணை விட ஆணின் சம்பளம்தானே அதிகமாக இருக்கும்?

குழந்தைக்காக தற்காலிகமாக வேலையை விட்டுவிட்டு பிறகு வேலைக்குச் சேரும் பெண்கள் நிலை மிகவும் பரிதாபம். பிரமோஷன்கள் மறுக்கப்படும். குறைவான சம்பளத்தில்தான் வேலை கிடைக்கும். வேலையைவிட்டுவிட்டு மீண்டும் தொடர்வது என்பது நடைமுறையில் சிக்கலானது.

மேலும், எப்படி வீட்டில் இருந்து குழந்தையை குடும்பத்தை கவனித்துக் கொள்வது அர்ப்பணிப்பும், தியாகமும் ஆகிறதோ அதே போல் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களையும் தான் குழந்தைகளுக்கு/குடும்பத்துக்கு சரியாக கவனிக்கவில்லையோ என்ற குற்றவுணர்ச்சி கொல்கிறது. அந்த தியாகத்தின் மறுபக்கம்தான் இந்த குற்றவுணர்ச்சி. பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் குழந்தைபேறுக்கு விடுப்புக்காலம் 3 மாதங்களுக்குக் குறைவுதான். முதலாளித்துவம், தன் குழந்தையையும் கவனிக்க விடாமல் ஒரு பெண்ணை வேலைக்கு துரத்துவது போலவே அவர்களை கூலியற்ற குடும்ப உழைப்பாலும் சுரண்டுகிறது.

அதேசமயம், பெண், குடும்பத்தை கவனித்துக்கொள்வதும் ஆண் குடும்பச்செலவுகளுக்காக சம்பாரிப்பதும் இன்று பெருமளவு மாறியிருக்கிறது. இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் பெண்கள் இன்று ஆணுக்கிணையாக வேலைக்குச் செல்கிறார்கள். ஊதியம் பெறுகிறார்கள். என்றாலும், இங்கும் பெண்களின் உழைப்பு இரண்டாம்பட்சமாகத்தான் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், பார்த்த விளம்பரம் இது - ஒரு ரெடிமேட் கடையில் தொங்கிய விளம்பரப்பலகை - ”வேலைக்கு பெண்கள் தேவை”! ஏன் வேலைக்கு ஆட்கள் தேவை என்று இருக்கவில்லை? குறைந்த ஊதியத்துக்கு பெண்கள் வேலைக்கு வருவார்கள். விவசாய வேலைக்கோ அல்லது கட்டிட வேலைக்கோ சென்றால், ஆண்களுக்கு ஒரு கூலியும் பெண்களுக்கு ஒரு கூலியும் இருக்கிறது. இப்படி ஆரம்பிக்கும் இந்த பாரபட்சம் சகல மட்டங்களிலும் வியாபித்திருக்கிறது. பெண்கள், வேறு கம்பெனிக்கு சுலபமாக மாறமாட்டார்கள் என்று பெண்களின் ஊதிய உயர்வு கணிக்கப்படுவதை யாரும் மறுக்கமுடியாது. முதலாளித்துவம், இதில்தான் உயிர்வாழ்கிறது. கூலி உழைப்பை சுரண்டுவது போலவே கூலியற்ற உழைப்பையும் முதலாளித்துவம் சுரண்டுகிறது.

ஒரு தொழிலாளி கூலி உயர்வுக்காக, போனசுக்காக வேலை நிறுத்தம் செய்யலாம். ஆனால், குடும்பத்தில் ஊதியமற்ற தொழிலாளி வேலை நிறுத்தத்தைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது.

நம் குடும்ப அமைப்பில் - பெண் படித்திருந்தாலும், வேலைக்குச் சென்றாலும் குடும்பத்தை கவனித்துக்கொள்வது என்பது அவளது இன்றியமையாத கடமையாக இருக்கிறது. அதாவது, செலவு செய்து, கேட்ட வரதட்சிணையைக் கொடுத்தாவது பெண்ணை, இன்னொரு குடும்பத்துக்கு சம்பளமற்ற வேலைக்காரியாக அனுப்பலாமேயென்றுதான் சமூகம் நினைக்கிறது. அவளை அடுத்த வீட்டுக்குச் செல்லவேண்டியவளாக, தன் கடமையாக எண்ணும் போக்கும் இந்த அடிமைத்தனத்தை அதிகரிக்கிறது.மருமகனுக்கு வேலை வாங்கிக்கொடுத்தாவது மகளை மணம் செய்து அனுப்பலாமென்று எண்ணும் பெற்றோர்களை பார்த்திருக்கலாம். எந்த கஷ்டம் வந்தாலும் கணவனை சார்ந்து அனுசரித்து வாழவேண்டுமென்று சொல்லும் போக்கு இது. இதற்கு படித்த/படிக்காத பெண்கள் என்றெல்லாம் விதிவிலக்குகள் இல்லை. மாமியார்களுக்கும்/மருமகளுக்குமான நீயா-நானாவில் கூட இதனைப் பார்த்திருக்கலாம். பெண் படித்து என்ன வேலையிலிருந்தாலும் வீட்டுக்கு வந்து சமையல் செய்ய வேண்டுமென்றுதான் முடிகிறது. இதனை வெறும் மாமியார்-மருமகள் பிரச்சினையாக மட்டும் பார்த்துவிட முடியாது. நமது குடும்ப அமைப்பின் உற்பத்தி முறை மாறிவிட்டது.

இன்னும் எத்தனை காலம் நம் பெண்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யக்கூட நேரமின்றி, குழந்தை வளர்ப்பிலும், சமையலிலும், சுத்தம் செய்வதிலும் அவர்களின் உழைப்பை உறிஞ்சப்போகிறோம்? எரிச்சலூட்டும், ஒரே விதமான வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவது எப்போது? ஓயாது இயங்கும் குடும்ப அமைப்பிலிருந்து உழைக்கும் வர்க்கப்பெண்களுக்கும்,இல்லத்தரசிகளுக்கும் ஓய்வு எப்போது?

பெண், தன்னைச்சார்ந்து – வாழ்க்கையைத் தன் வேலையைச் சார்ந்து அமைத்துக்கொள்வது எப்போது? கணவனைச் சார்ந்தோ அல்லது பெற்றோரைச் சார்ந்தோ அல்லாமல் வாழ்வது எப்போது? தந்தைக்குப் பின், மூன்றுவேளைச் சாப்பாட்டுக்காக திருமணம் செய்துக்கொள்ளாமல் சுதந்திரமான, தோழமையுடனான வாழ்க்கைக்காக திருமணம் செய்து வாழ்வது எப்போது?

Wednesday, October 19, 2011

பப்புவும் ஜெயலலிதாவும்

பப்புவுக்கு அவ்வப்போது “சாமி இல்லை” என்று சொல்லி ஓரளவுக்கு புரிய வைத்தாகிவிட்டது. ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. பள்ளியிலும், உறவினர்களும் பப்புவுக்கு சாமி கும்பிட சொல்லிக்கொடுப்பார்கள். உறவினர்கள் வந்தால் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். தெரியாமல் அழைத்துச் செல்லும்போது அதனை தடுக்கமுடிவதில்லை. வீட்டிலோ, அதெல்லாம் இல்லையென்றும், நம்மிடம் இருந்து காசு வாங்கத்தான் இதெல்லாம் இருக்கு என்றும் நான் சொல்லுவேன்.

இரவு தூங்கும்போது, இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்து கேள்விகளாக கேட்டுத் தள்ளுவாள்.


’கோயிலுக்கு போனப்போ சாமி உன்கிட்டே பேசுச்சா?’, ’சாமியை எதனால செஞ்சிருக்காங்க?’, ‘ நம்ம வீட்டுல சாப்பாடு யார் செய்றாங்க? ’, ‘அரிசி வாங்க காசு எப்படி வருது?சாமியா குடுக்குது?’ ”உண்டியில, தட்டுல எல்லாம் காசு போடச்சொல்றாங்க இல்ல?” என்றெல்லாம் அவளை திருப்பி கேள்விகளை கேட்க, ஒரு கட்டத்தில் ’சாமிக்கு எல்லாம் தெரியும், சாமியே சமைச்சு கொடுக்கும்’ என்ற அளவுக்கு வந்துவிட்டாள். பிறகு, கொஞ்சநாட்கள் கழித்து, ”ஆமா ஆச்சி, சாமி பேசாது, அது கல்லுமண்ணுதான்(களிமண்ணு)” என்று கட்சி மாறுவாள். வெள்ளிக்கிழமைகளில், சாயிபாபா படத்தை வைத்துக்கொண்டு பக்திபாடல்கள் ஒலிக்க ஒரு வண்டி வரும். அதைப்பார்த்ததிலிருந்து, சாமின்னு சொல்லி காசு வாங்கி ஏமாத்தறாங்க என்று ஏற்றுக்கொண்டாள்.

ஆயா மீது நாங்கள் அக்கறை காண்பித்தால் பப்புவுக்கு சமயங்களில் பிடிக்காது. அப்போது, ஆயா மீது ஒரே கம்பெள்ய்ன்டுகளாக வரும். ’தனக்குக் கொடுத்த மாத்திரைகளை ஆயா சாப்பிடவில்லை, படுத்துக்கிட்டே சாப்பிடறாங்க’ என்று இஷ்டத்துக்கு... அதாவது,நாங்கள் எதையெல்லாம் ஆயாவை செய்யச் சொல்லுகிறோமோ அதையெல்லாம் அவர் செய்யாததாக கற்பனையை கலந்துகட்டி சொல்லுவாள். அதில், ஆயா, பப்புவை சாமி கும்பிடச் சொன்னதாகவும், இந்த உலகமே சாமிதான் செஞ்சுது என்றும் சொன்னதாகவும் சொல்லுவாள்.

பிறகு, அவளே “உலகத்தை யாராவது செய்யமுடியுமா? அது வெடிச்சு உலகம் வந்துச்சி...” என்று கவுண்டரும் கொடுப்பாள்.
ஆனாலும், அவளுக்குள் சாமி இருக்கா, இல்லையா என்ற கேள்விகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன என்றெண்ணுகிறேன்.

இது நடுவில், பிள்ளையார் சதுர்த்தி வந்தது. பள்ளியில், “புள்ளையார் பர்த் டே” என்று சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அதற்காக, பிள்ளைகளின் கையில் களிமண் உருண்டையைக்கொடுத்து பிள்ளையார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அநேகமாக, அதுதான் பப்புவின் யுரேகா மொமெண்ட் என்று நினைக்கிறேன். அதாவது, ”சாமி கல்லுமண்ணுதான், அதை நாமதான் (மனுசங்கதான்) செய்றோம் “.

கீரை,காய்கறிகள் கொடுக்க ஒருவர் வீட்டுக்கு வருவார். பப்பு என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவரிடம், “சாமி பொய்னு சொன்னேன் இல்ல, இது பாருங்க, பொம்மைதான், நீங்க கூம்பிடாதீங்க (கும்பிடுவதை பப்பு அப்படிதான் சொல்கிறாள்.)” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவரும் ”சாமி கும்பிடமாட்டேன்,பாப்பா” என்றார்.

ஆயுத பூஜையன்று அவர் வரமாட்டேனென்று சொன்னதும் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள். “ஆண்ட்டி, சாமி கூம்பிடக்கூடாது, அதெல்லாம் பொய்” என்று அவரிடம் திரும்பச் திரும்பச் சொல்லவும் அவரும் டென்சனாகிவிட்டார்.

” பாப்பா, நீங்க ஸ்கூல்ல பிரேயர்ல என்ன பண்ணுவீங்க?”

“ஜனகனமண.....” (இதைக்கேட்டால், இந்த பாடலை பாடுவோம் என்று மட்டும் சொல்லிவிட்டு விடாமல் முழுவதுமாக பாடுவாள். நமக்குதான், அவ்வ்வ்வ்...)

” அப்புறம்?”

”நீராரும் கடலுடுத்த நிலமடந்தை...”

”அப்புறம்?”

ஏதோ ஒரு ஆங்கிலப்பாட்டு பாடினாள்.

” அப்புறம் என்ன பண்ணுவீங்க?”

“ அயிகிரி நந்தினி....”

”பாத்தீங்களா, ஸ்கூல்ல சாமிப்பாட்டுதான பாடுறீங்க, அதுமாதிரி நானும் வீட்டுல பாட்டுபாடணும்” என்றார் அவர்.

ஆனாலும், பப்புவால் அதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை. அவளது க்ளோஸ் பிரண்டுகளுக்கெல்லாம் சாமியெல்லாம் கும்பிடக்கூடாது, அது வெறும் கல்லுமண்ணுதான்,தெரியாதவங்கதான் சாமி கும்பிடுவாங்க என்று சொல்லியிருப்பதாகவும், அவர்களும் கும்பிடமாட்டென்று சொல்லி யிருப்பதாகவும் ஆண்ட்டிக்கு கான்வாசிங் நடந்தது. (அநேகமாக, இதுதான் பப்புவின் கருத்துமுதல்வாதம் Vs பொருள்முதல்வாதம் விவாதமாக இருக்கக்கூடும்!)

இது நடந்து சிலநாட்கள் இருக்கும். அப்போது ஒரு கதை வாசித்திருந்தோம். ராஜா ஒருவர், சோசியத்தில் நம்பிக்கைக்கொண்டிருப்பார். ஆறு மாதங்களில் இறந்துவிடுவதாக சோசியர் சொன்னதை நினைத்து எதிலும் ஆர்வமற்றும் சோகமா இருப்பார்.இதைக் கண்டுக்கொண்ட மந்திரி சோசியரிடம், அவர் எவ்வளவு நாட்கள் உயிருடன் இருப்பார் என்று கேட்க சோசியர் 100 வருடங்கள் என்பார். உடனே அவர் தலையை வெட்டிவிட்டு, சோசியம் பொய் என்று ராஜாவுக்கு உணர்த்துவார், மந்திரி.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக,பப்பு , ஆண்ட்டியிடம் இந்தக்கதையை சொல்லி ஜோசியக்காரங்களை நம்பக்கூடாது என்று வகுப்பெடுத்திருக்கிறாள். அவரும் ”சரி பாப்பா” என்றிருக்கிறார்.

இன்று காலையில், பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த பப்புவுக்கு திடீரென்று சந்தேகம்.

”ஜெயலலிதா சாமி கும்பிடமாட்டாங்க இல்ல?”

“இல்ல, அவங்க கும்பிடுவாங்க”

“பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும்?”

“இல்ல, அவங்க சாமி இருக்குன்னு நம்புவாங்க.”

“சாமி கும்பிடுவாங்க, பட், அவங்களுக்கு சாமி இல்லேன்னு தெரியும் இல்ல?”

“இல்ல பப்பு, இல்லன்றதை அவங்க நம்பமாட்டாங்க”

அவளால் ஜெயலலிதா சாமி கும்பிடுவார் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. உறவினர்கள், தெரிந்தவர்கள் சாமி கும்பிடுவதை ஏற்றுக் கொள்ளும் பப்புவால், நம்மை ஆளும் சீஃப் மினிஸ்டர் சாமி கும்பிடுவதை, அவளுக்கு தெரிந்த அந்த உண்மை தமிழ்நாட்டின் சீஃப் மினிஸ்டருக்கு தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. :-(

Wednesday, September 28, 2011

வேளச்சேரி டைம்ஸ் : பார்வதி அம்மாவின் காய்கறி கடை

அய்யாவானாலும் சரி, அம்மாவானாலும் சரி, வறுமையில் வாழும் குடும்பங்களுக்காக இலவசங்களை வழங்குகிறார்கள். 79 வயதானாலும் கடமை தவறாமல் நாட்டு மக்களையும் அவர்களின் நலனையும் பற்றி சிந்தித்து சிந்தித்து - வெளிநாட்டிலிருந்து கடன் வாங்கியாவது- அவர்களை முன்னேற்றிவிட துடித்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் அவர்கள். இப்படி, நாட்டை பூந்தோட்டமாக மாற்றி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள் நம்மை ஆள்பவர்கள்...கோடி கோடியாய் செலவிட்டு எப்படியாவது வறுமையைதுரத்திவிட வேண்டுமென்று சபதமேற்கிறார்கள். அல்லும்பகலும் அதைப்பற்றியே சிந்திக்கிறார்கள். இதையெல்லாம் செய்த பின்னாலும் நாம் காணக்கிடைக்கும் முன்னேற்றம் மிகுந்த வியப்பையே தருகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருந்ததோ அப்படியே கூட இல்லாமல். அதைவிட மிகவும் இழிந்த நிலையையே அடைந்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும்மாறியிருக்கின்றனர். இருப்பதும் பறிக்கப்பட்டு விவசாயி கிராமத்தைவிட்டு துரத்தப்பட்டநிலையில் பண்ணையார்களும், பிரசிடெண்டுகளும் காண்டிராக்டர்களாக மாறி லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். 32ரூ கொண்டு ஒரு நாளை தாராளமாக ஓட்டமுடியும் என்றும் வறுமையின் கீழ் அவர்கள் வருவதில்லையென்று அறிக்கைகள் கூறினாலும் நாட்டில் பாதிப்பேர் அந்த ஏழ்மைவாழ்க்கையைதான் வாழ்கின்றனர். பார்வதி அம்மா அந்த பாதிப்பேர்களில் ஒருவர்.




இந்த நிலைக்கெல்லாம் மேலே சொல்லப்பட்ட ஆட்சியாளர்கள்தான் காரணமென்று சொன்னால் பார்வதி அம்மா கேட்க மாட்டார். தனது இந்த நிலைக்கும் வாழ்க்கைக்கும் காரணம் பகவானே என்றுதான் நம்புவாரே தவிர ஆட்சியாளர்கள் காரணம் என்று அவருக்கு தெரியாது. பாவம், எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டார். நம்பவும் மாட்டார். அந்த அளவுக்கு ஆட்சியாளர்கள் பார்வதி அம்மாவை வைத்துள்ளார்கள் என்ற விபரம் நம்மில் பலருக்கும் தெரியாது.


இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும், எழுதிக்கொண்டிருக்கும் எனக்கும் ஒரு கூரையின் கீழ் அமர்ந்து செய்யக்கூடிய வேலை இருக்கிறது.
சென்ற வருடத்தைவிட இந்த வருடம் சம்பளம் கூடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அமர்ந்திருக்கும் சேருக்குப் பக்கத்தில் சாக்கடை ஓடாது. ஆனால், பார்வதி அம்மாவின் வேலையிடம் அப்படி அல்ல. இருபத்து நான்கு வருடங்களாக வேலை செய்தாலும் வருமானம் வருடா வருடம் கூடுவதில்லை. ஆனால், செலவுகள் மட்டும் கூடிக்கொண்டேயிருக்கின்றன. இருபது வருடங்களாக தலையில் கூடை சுமந்து காய்கறிகள் விற்றிருக்கிறார். கடந்த நான்கு வருடங்களாகத்தான் நிலையாக ஒரு இடத்தில், சாக்கடை ஓடும் பிளாட்பாரத்திற்கு அருகில் அமர்ந்து பூ,படம், காய்கறிகள் விற்கிறார். பார்வதி அம்மாவுக்கு தற்போது 68 வயது. ஒரு ரூமில்தான் குடித்தனம் - மகள் மற்றும் பேத்தியுடன்.

“காய்கறிங்க அதிகம் போவாது, பூ,பழம், கீரைதான் ஓரளவுக்கு போவும்” என்கிறார். என்னா வித்தாலும் விக்காட்டியும் பைனான்ஸ்காரங்களுக்கு ஒரு நாளைக்கு 40ரூ குடுத்துடணும். இப்போகூட குடுத்தேனே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி - இன்னைக்கு. மூணு பைசா வட்டி. ஐயாயிரம் வாங்குனா, வட்டி மூணு மாசத்துக்கு என்னா ஆச்சு? 500ஐ புடிச்சுக்கிட்டு மீதி 4500 தருவாங்க. அதுல, தெனம் 40ரூ கட்டிக்கிட்டு வரணும். கரெக்டா கட்டிக்குட்டு வரணே...என்னா இப்போ பூஜை வருது,கொஞ்சம் வியாபாரம் ஆவும், ஒரு 2 ரூ இருந்தா நல்லாருக்கு, இதை கட்டாம மேல கேட்டா தரமாட்டாங்க” என்கிற பார்வதி அம்மாவின் முன் கத்தரிக்காய், வாழைக்காய், ஒருகூடை நிறைய எலுமிச்சைபழம், ஒரு சில கீரைக்கட்டுகள், ஜாதிமல்லி, உதிரி மல்லி, சாமந்தி பூக்கள்...சூடம், அகர்பத்தி, வாழைப்பழம்..


பார்வதி அம்மா ஆந்திராவிலிருந்து வந்தவர். அவரது கணவர் சிம்சனில் வாட்ச்மேனாக வேலை செய்துவந்தார். ஏதோ மனஸ்தாபத்தில் வேலை வேண்டாமென்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டார். அதன்பிறகு அவர் வேலைக்குச் செல்லவில்லை. அதிலிருந்து காய்கறி விற்க கூடை தூக்கியவர்தான். பார்வதி அம்மா, கணவர் இறக்கும் வரை அதை இறக்கவேயில்லை.

”என்னா பண்றது, கட்டுனவராச்சே, அப்படியே உட்டுட முடியுமா, இப்போ பொண்ணை காப்பத்தலியா..நம்ம வயித்துல பொறந்துடுச்சுன்னு,
அது மாதிரிதான்...இப்போ நாலு வருசமாதான் இங்க கடை போட்டிருக்கேன். முன்னமாதிரி நாப்பது அம்பது கிலோ சொமந்துக்கிட்டு நடக்கமுடியலை” என்றார் நீட்டிய கால்களை நீவிவிட்டுக்கொண்டு. "பூ கட்டறது, காய்கறி வாங்கியாறதுன்னு எல்லா வேலையும் நானே செஞ்சுடறதாலே அதுதான் லாபம்னு நினைச்சுக்கணும்..இல்லன்னா அதுக்கு ஆள் வைச்சா ஒரு நாளைக்கு ரூ100 கொடுக்கனும்..அதுக்கு எங்க போக..பகவான் கை கால் நல்லா வைச்சிருக்கானே நெனைச்சிக்கறேன்"

முதியோர் இல்லத்துக்கான ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். மனதை உருக்கும் விளம்பரம் - அதில் சொல்லப்பட்டது போலவே. ஒரு இளம்பெண் புறாக்களுக்கு உணவிட்டுக்கொண்டிருப்பார். அவர் கையில் ஒரு பொட்டலம் இருக்கும். சற்று தூரத்தில் பெஞ்சில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பார். அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவராக இருந்திருக்கக் கூடும். அந்த இளம்பெண்ணின் அருகில் வருவார். முதியவரின் கையில் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு புறாக்களுக்கு உணவிட்டுக்கொண்டிருப்பார் அப்பெண். கைகளில் தீனி தீர்ந்ததும் திரும்பிப்பார்ப்பார் அந்த முதியவர் தொலைவில் மறைந்திருப்பார் - பொட்டலத்தை எடுத்துக்கொண்டு. அந்த பெண் அப்படியே உறைய, அடுத்த காட்சியில் ஒரு தூணுக்கு பின் மறைந்தபடி அம்முதியவர் அந்த உணவை எடுத்து உண்பார். முதியோர் இல்லத்துக்கான வாசகத்துடனோ அல்லது முதியவர்கள் பராமரிப்புக்கான வாசகத்துடனோ அவ்விளம்பரம் முடியும்.

”ஒருத்தங்க ஃபீரியா கொடுத்தா கூட நான் வாங்க மாட்டன். என்னை மாதிரிதான அவங்களும் கஷ்டத்துல சம்பாரிச்சுருப்பாங்க. இன்னைக்கு ஒருத்தரு ரூ100 குடுக்கறாருன்னா அடுத்த நாளும் யாருனா அதுமாதிரி குடுக்க மாட்டாங்களான்னு மனோபாவம் வந்துடும் பாரு, அப்புறம், உழைக்கவே வராம சோம்பேறியா பூடுவேன்...கைகால் நல்லாருக்க வரைக்கும் ஏதோ என் பொண்ண பாக்க போறேன்...அவ புருசன் சரியில்ல...விட்டுட்டு போய்ட்டான்...என் பேத்தி காலேஜ் படிக்கிறா...அதுக்கு வருசத்துக்கு 15000 கட்டணும்...அதுக்குதான் இப்டி லோல்பட்டுனு கெடக்கறேன்... எங்களுக்கே செலவு ஒரு நாளுக்கு 100 ரூபா ஆகிடுது...நாங்க என்னா, நெய்யும் பாலுமா சாப்பிடபோறோம், காலயில், கொஞ்சம் சோத்தை எடுத்து தண்ணிவுட்டு மோர் ஊத்தி கரைச்சு குடிச்சுட்டு கோயம்பேடு போனன்னா காய் எடுத்துகிட்டு வருவேன். பஸ், லெக்கேஜ் சார்சே 40ரூபா ஆகுது.. அப்புறம்,. ராத்திரி வீட்டுக்கு போனா ரெண்டு தோசை. மத்தியானம், ஒரு டீ குடிச்சாலே 5ரூபா ஆகிடுது. அதுல என் பேத்திக்கு ஒருநாளைக்கு 20ரூபா வேணும்...இது இல்லாம பைனான்ஸ் காரங்களுக்கு தெனம் குடுத்துடணும், அப்பதான் அடுத்தவாட்டி கேட்டா தருவாங்க. பகவான் மேல பாரத்த போட்டுட்டு ஒக்கார்ந்திருக்கேன். மனோதைரியம்தான் வேணும்..இப்படி வித்துதான் ரெண்டு பொண்ணை கட்டுக்குடுத்தேன்..ஒன்ன்னு நல்லாருக்கு, இன்னொன்னுக்காகத்தான் இந்த பாடு.... அரிசி ரேஷன்ல வாங்கிக்குவோம்..காய்கறி இதோ இதுலயே நாலை எடுத்துப்போட்டு சாம்பார் வைச்சுக்கவேண்டியது. நான் வெஜ்லாம் நாங்க அதிகம் சாப்பிடறதுல்ல... இதுல என்னாத்த சேத்து வைக்கிறது...நான் செத்தா கார்ப்பரேஷன்காரந்தான் தூக்கி போடணும்”

பேத்திக்கு காலேஜ் பீஸ் கட்டதான் அவர் அலையாக அலைந்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவரது பேத்தி ஒருமுறை தேர்வில்
தோற்றதில்லையாம். நன்றாக படிப்பாராம். பணம் கட்டமுடியாதவர்களுக்கு உதவி செய்யும் சில அமைப்புகளைப் பார்த்து நடை விரயமானதுதான் மிச்சமாம். வெறுத்து போய் விட்டுவிட்டாராம். அதோடு இந்த தொழிலில் பல பிரச்சினைகள் வேறு. கடன் தொல்லைகள். பகவான் நேர்மையாக இருப்பவர்களைத்தான் குறி வைத்து சோதிப்பாராம்.

தொழில்னா லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். நஷ்டமாயிடுச்சுன்னு ஒக்காந்துடவா முடியும்...நாம நெனைக்கிறதெல்லாமா நடந்துடுது? நாம ஒண்ணு நெனைப்போம்.அது ஒண்ணு நடக்கும். நாம நெனைக்கிறது நடக்கவே நடக்காது. பகவான் மேல பாரத்தை போட்டுட்டு இருக்கேன். நேர்மையா இருக்கிற வங்களைதான் பகவான் சோதிப்பான். இதுல கொசுவுக்கு கைகால்ல மருந்து தடவுனா இங்க ஒக்காந்திருக்கவே முடியும். காய்கறி வாங்கியாந்துட்டன்னா, அது விக்கிறவரைக்கும் மனசு இருக்காது. வித்து அதை காசாக்கினாதான்.... அதுவரைக்கும் மனசு ஒரு நெலையில இருக்காது. இல்லன்னா அடுத்த நாளைக்கு என்னா பண்ரது? ”

கற்பனைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்காது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், வாங்கிய காய்கறி விற்கவில்லை யென்றால் அடுத்தநாள் தனக்கானதாக இருக்காது என்ற பார்வதி அம்மாவின் பயம் உண்மை.

அந்த பயம் - வாழ்வின் மீதான பயம்.


அவரது பயம் தெளிவது எப்போது?


அனைவரையும் போல பயமின்றி மனநிம்மதியோடு பார்வதி அம்மா வாழ்வது எப்போது?

Thursday, September 15, 2011

பப்பு சொன்ன கதைகள் - II

ஒருநாள் ஒரு மயில் குளத்துக்கு போச்சு. அங்க ஒரு கொக்கு இருந்துச்சு. அதுக்கிட்டே போய் ”என் தோகையை பாரு, என்னை பாரு, நான் எவ்ளோ அழகா கலர்ஃபுல்லா இருக்கேன். உன்னால உயரமாவே பறக்க முடியாதுன்னு” சொல்லுச்சாம். அப்போ கொக்கு வானத்தை நோக்கி பறந்துச்சாம். பறந்து பறந்து மேகத்தை தாண்டி போய்டுச்சாம். கடைசில பார்த்தா சூரியன்கிட்டேயே போய்டுச்சாம். திரும்பி வந்துச்சாம் பாரு, அது பீக்-ல சூரியன். அது சூரியனையே பீக்-ல எடுத்துட்டு வந்துடுச்சு.

மயிலுக்கு கொஞ்சம் உயரத்துக்கு மேல பறக்கவே முடியலை.

இதுக்குதான் நான் அழகா இருக்கேன், நான் கலர்கலரா இருக்கேன்னு சொல்லக்கூடாது.


**********************************

ஒரு ராணி இருந்தாங்க. அந்த ராணி ஒருநாள் அனிமல்ஸ் எல்லாத்தையும் வர சொன்னாங்க.

“வாங்க, இன்னைக்கு நான் உங்களுக்கு ப்ரைஸ் தரப்போறேன்”ன்னு சொன்னாங்க. எல்லா அனிமல்ஸும் குட்டிகளையும் தூக்கிட்டு வந்துச்சுங்க. ஒரு குரங்கும் அதோட குட்டியை தூக்கிட்டு வந்துச்சு.

குரங்கு குட்டியை பார்த்துட்டு ராணி “அய்யே, இது அசிங்கமா இருக்கு, உனக்கு பிரைஸ் கிடையாது”ன்னு சொல்லிட்டாங்க.

குரங்கு, குட்டிக்கிட்டே சொல்லுச்சு“ அது வேணாம், பரவால்ல,நீ எனக்கே பிரைசா இருந்துக்கோ” .

இதுக்குதான் யாரையும் அசிங்கமா இருக்கேன்னு சொல்லக்கூடாது.

*******************************
த்ரிஷா காட்டுக்கு போன கதை கூட சொல்லியிருந்தாங்க மேடம். தூக்கக்கலக்கத்துல நாந்தான் மறந்துட்டேன். :-))

Tuesday, September 13, 2011

chaska maska

பப்பு கையில் மணிகளாலான ஒரு பிரேஸ்லெட்டை அணிந்திருந்தாள். குளிப்பதற்காக அதை கழட்டும்போது அதிலிருந்த தொங்கல்கள் அவளது கையை கீறிவிட்டன (லேசாகத்தான்!).

“நீ ஒரு அம்மா மாதிரியா நடந்துக்கறே, குழந்தையை பத்திரமா பாத்துப்போம்னு இல்லாம...நீ உண்மையான அம்மாவே இல்ல!!”

இது நடந்து ஓரிரு நாட்கள் இருக்கும். தூங்குமுன்பு பேசிக்கொண்டிருந்த போது,

”அபிஷேக் என்னை இன்னைக்கு கிரௌண்ட்ல புஷ் பண்ணிட்டான் ஆச்சி, நான் விழுற மாதிரி போயிட்டேன்...அவன் ஏன் என்னை புஷ் பண்ணான்?”


”தள்ளிவிட்டானா?கீழே விழுந்தியா?”


”இல்ல ஆச்சி, நாங்க ஓடிபுடிச்சு விளையாடினோம்...அவன் என்னை வந்து வந்து தள்ளி விடறான். ”

“நீ உடனே ஆண்ட்டிகிட்டே சொல்ல வேண்டியதுதானே? ஏன் சும்மா இருந்தே?
தள்ளிவிடாம விளையாடணும்னு சொல்றது?”

“அபிஷேக் என் ஃபிரண்டு. பிரண்டையெல்லாம் ஆண்ட்டிக்கிட்டே மாட்டிவிடலாமா?”

:-) -தா :-( -தா என்று தெரியாமல் :-|

Sunday, September 11, 2011

பப்பு சொன்ன கதைகள்

ஒருநாள் ஒரு கோல்டிலாக்ஸுனு ஒரு பொண்ணு இருந்தா. அவங்கம்மா ஒரு நாள் சூப் செஞ்சாங்க. சூப் குடிக்கமாட்டேன், எனக்கு பிடிக்காதுன்னு சொன்னா.

நோ நோ நீ சூப் குடிக்கணும்னு அவங்கம்மா சொன்னாங்க.

சூப் குடிச்சா காரம். தண்ணி குடிச்சா கூட காரம் போகவேல்ல. அப்டியே தூங்கிட்டா. அப்போ ஒரு எலி வந்து அவளை கடிச்சுடுச்சு.
எலி-யை பிடிச்சு அடிச்சு பூனைக்கு போட்டாங்க. பூனை சாப்பிட்டுடுச்சு. அப்புறம் பூனை சுட்டுட்டாங்க.

"சுட்டுட்டாங்களா? ஏன் சுட்டாங்க?"

"ஏன்னா, பூனை வீட்டுக்கு உள்ள வந்துடும் இல்ல, இன்னும் எலி இருக்கும்னு,அதுக்குதான்."

"ம்ம்...அப்புறம்..."

அப்புறம். அந்த எலியோட குட்டி எலி வந்து கோல்டிலாக்சை கடிச்சு நெறைய ரத்தம் வர வைச்சுடுச்சு. டாக்டர்கிட்டே கூட்டிட்டு போனாங்க. கோல்டிலாக்ஸுக்கு எலி ஊசி போட்டாங்க. எலிக்கும் ஊசி போட்டாங்க.
அப்புறம் எலி செத்து போய்டுச்சு.

இதுல என்னா புரிஞ்சுது?

....

எலி இருந்தாலும் நல்லதுதான். எலி இல்லன்னாலும் நல்லதுதான்!


*****************************

ஒரு நாள் ஒரு பொண்ணு கோழி வளத்துச்சு. அது ஒரு நாள் கோல்ட் முட்டை போட்டுச்சு.

உடனே அந்த பொண்ணு ”ஆ, நான் கொஞ்சம் சாப்பாடு கொடுத்ததாலதான் ஒரு முட்டை போடறே...இந்தா நெறைய சாப்பாடு”-ன்னு நெறைய நெறைய சாப்பாடு போட்டா! கோழிக்கு மூச்சே விட முடியல...மூச்சு விட முடியாம கோழி செத்து போச்சு...



இதுக்குதான் பேராசை கொள்ள கூடாது!


********************************

ஒருநாள் ஒரு அங்கிள் இளநீ குடிக்க கடைக்கு போனாரு. கடையில ஃபைவ் ரூபீஸ் சொன்னாங்க.

”நோ நோ ஐ வில் கிவ் ஃபோர் ரூபீஸ்” ந்னு சொன்னார் அங்கிள்.

”யூ கோ தேர் ஃபார் ஃபோர் ரூபிஸ்ன்னு சொன்னார் கடைக்கார்


அந்த கடைக்கு போனா ஃபோர் ரூபீஸ் சொன்னாங்க.


”நோ நோ ஐ வில் கிவ் த்ரீ ரூபீஸ்” ந்னு சொன்னார் அங்கிள்.



அந்த கடைக்கு போங்கன்னு சொன்னாங்க. அந்த கடைக்கு போனார் அங்கிள். அங்க போய் ”நோ நோ ஐ வில் கிவ் டூ ரூபீஸ்” ந்னு சொன்னார் அங்கிள்.

அந்த கடைக்கு போங்கன்னு சொன்னார் கடைக்கார். அந்த கடைக்கு போனார். அந்த கடைக்கார் ஃபைவ் ரூபீஸ் சொன்னார்.

”நோ நோ ஐ வில் கிவ் ஒன் ரூபின்னு” சொன்னார் அங்கிள்.


அவர்கிட்டே ஃபைவ் ரூபீஸ் இருந்தது,. அவர் பொய் சொன்னார். அப்போ கடைக்கார் சொன்னார், அதோ அந்த மரத்துல ஏறுங்க அங்கதான் ஒன் ரூபின்னு சொன்னதும் அங்கிள் மரத்துல ஏறுனார் பாரு....

இளநீ பறிச்சுட்டு தொப்புன்னு விழுந்துட்டார்.

இதுக்கும்தான் பேராசை கொள்ளக்கூடாது.

************************


குறிப்பு: கொஞ்சம் சற்றே பெரிய கதைகள் வாசிக்க ஆரம்பித்திருக்கிறோம். Going someplace special/The magic locket/சிறுவர்மணி கதைகள் - மாதிரி. அவளது வயதுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும் அவள் என்ன நினைத்து வைத்திருக்கிறாள் என்றும் புரிந்துக்கொள்ள அவ்வப்போது ”இதுல என்ன புரிஞ்சுது” என்று அவளை கேட்பதுண்டு. அது இப்படி பூமராங்காக வரும் என்று நினைக்கவில்லை! (இன்னும் கூட சில கதைகள் இருக்கிறது. மறக்குமுன்பு எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். )

Thursday, September 08, 2011

Dr.Seuss junior

cat and mat
mat on cat
cat playing with the mat
mat fighting cat


impact: Fox in socks/The cat in the Hat




Wednesday, September 07, 2011

காலை நேர பல்பு

”பப்பு, இன்னைக்கு நீயே எல்லா வேலையும் செஞ்சுடு, என்னை சொல்ல வைக்காம...”

......

“சொல்லி சொல்லி எனக்குதான் டென்சன் ஆகுது....டென்சன் ஆனா பிபி வந்துடும்...பிபி வந்தா என்ன ஆகும்..”


“சாயங்காலத்துலேருந்து காலைல வரைக்கும் கண் தெரியாம போய்டுமா,ஆச்சி?”

!!!

Wednesday, July 06, 2011

mspaint saga - II

புள்ளி வைத்த கோலம்




கடல்,அலை, சூரியன் மேலே நட்சத்திரங்கள்


Monday, July 04, 2011

பப்பு டைம்ஸ்

பப்பு இப்போதெல்லாம் ஒரு போதும் முடியாத, நீள நீளமான கதைகளைச் சொல்கிறாள். அம்மா, பெரிம்மாவெல்லாம் ஊருக்குப் போனபிறகு கதைக்கேட்க அவளுக்கு கிடைத்திருப்பது நாந்தான். ஆனால், கதையைக்கேட்டுக்கொண்டு பாதியிலேயே நான் தூங்கிவிடுகிறேன்.

சில மறக்க முடியாத கதைகள் :

ஒரு ஆண்டி - அவங்களுக்கு மழையில நனைஞ்சா பிடிக்காதாம். குடை எடுத்துட்டு போவாங்களாம். அவங்க வீட்டுல ஒரு செடி இருந்துச்சாம். அதுக்கு தண்ணியே ஊத்தமாட்டாங்களாம். ஒருநாள் மண்புழு வந்து, நாந்தான் பாம்பு னு அவங்களை பயமுறுத்துச்சாம். ஆ,பாம்புன்னு அவங்க் கத்துனாங்களாம். அந்த அங்கிள் வந்தாராம். அவங்களையும் பயமுறுத்துச்சாம். அங்கிள் சொன்னாராம், அது பாம்பு இல்ல, மண்புழுதான் நீ செடிக்கு தண்ணி ஊத்தலைன்னா
இப்டிதான் வரும்னு சொன்னாராம். ஆண்ட்டி தண்ணி ஊத்துனாங்களாம். செடி வானத்தை தாண்டி வளந்துடுச்சாம். ஆண்ட்டி செடியில சுண்டைக்காய் பறிக்கபோனாங்களாம். போய் போய் மேலே போய்ட்டாங்களாம். எறங்கி வரவே தெரியலையாம். அங்கிளும் ஏணி வைச்சு பாத்தாங்களாம் அவங்களால எறங்கவே முடியலையாம். அங்கிளும் மேலே மேலெ போய்ட்டாங்கலாம்.

ரெண்டு பேருக்கும் இப்போ எறங்க முடியலையாம். ரெண்டு பேரும் எப்டிடா இறங்குறதுன்னு அழுதுக்கிட்டு இருந்தாங்களாம். அப்போ ஒரு ஈகிள் வந்து அவங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டு போய் அதோட கூட்டுல விட்டுச்சாம். பாம்பு ஏதாவது வந்தா சொல்லுங்க, எனக்கு அதுதான சாப்பாடுன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சாம். அப்போ ஆண்ட்டிக்கு ஒரு ராக்கெட் கெடைச்சுச்சாம்.

அது என்னா ராக்கெட்ட்டு? ஓட்டை ராக்கெட்டு. ஓட்டை ராக்கெட்டுல ஏறி பறந்தாங்க பாரு, ஆத்துல விழுந்துட்டாங்க. ஆத்துல எதுமேல விழுந்தாங்க? முதலை முதுகு மேல. முதலை அவங்களை சாப்பிட வந்தப்போ ஆண்ட்டி என்ன்னா சொன்னாங்க, அதோ கரையில ஒரு மான் நிக்குது பாரு, அதை சாப்பிட்டா டேஸ்டியா இருக்கும், நீ என்னை கரையில விடு, நான் புடிச்சு தரேன்னு சொன்னாங்க.

முதலை அவங்களை கரைக்குத் தூக்கிட்டு வந்தது. கரையில் ஜம்ப் பண்ணிட்டு ஆண்ட்டி என்னா பண்ணாங்க, மானை பிடிக்க போனாங்க. மான் என்னா பண்ணுச்சு, சிங்கத்தை கூப்பிட்டுச்சு....சிங்கம் புலியை கூப்பிட்டுச்சு, புலி நரியை கூப்பிட்டுச்சு, நரி யானையை கூப்பிட்டுச்சு, யானை கரடியை கூப்பிட்டுச்சு....


அதுக்குள்ள நான் zzzzzzzz....மீதி கதை என்னாச்சுனு தெரியலை.




ஒருவீட்டுல கோழி, ஆடு,மாடு இருந்துச்சு. அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க. அப்போ அவங்க என்னா பண்ணாங்க, நாம் நாளைக்கு கோழியை சிக்கன் பண்ணி கொடுக்கலாம்னு பேசிக்கிட்டாங்க. அதை கோழி கேட்டுட்டு ஓடி போய்டுச்சு.
அப்புறம், சரி, நாம் ஆடு காலை வைச்சு நாளைக்கு சிக்கன் (மட்டன் லெக் பீஸ்!!) பண்ணலாம்னு பேசிக்கிட்டாங்க. ஆடு அதைக் கேட்டுட்டு ஓடிடுச்சு.
ஆடு ஓடினதும் என்னா பண்ணாங்க, சரி, மாடை நாளைக்கு நாம சிக்கன் பண்னலாம்னு பேசிக்கிட்டாங்க. மாடும் அதைக்கேட்டுட்டு ஓடிடுச்சு.

அப்புறம் மாடு என்னா பண்ணுச்சு, மூணு வீடு கட்டுச்சு, ஒரு வீடு மாடுக்கு, இன்னொன்னு ஆடுக்கும் கோழிக்கும். ஆடு என்னா சொல்லுச்சு, சொல்லு?
(தெரியலையே!) ரெண்டு வீட்டுலயும் நானே இருந்துக்கறேன்னு சொல்லுச்சு.மாடு, ஒரு வீடுதான் உனக்கு, இன்னொன்னு கோழிக்குன்னு சொல்லிச்சு.மூணு பேரும் மூணு வீட்டுல இருந்தாங்க. அப்போ பெரிய காத்து வந்துச்சு.

இது இப்போதைக்கு முடியாதுன்னு நெனைச்சுக்கிட்டே, நான் zzzzzzzzzzzzzzzz




I'm sorry என்று ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தோம். இரு நண்பர்களுக்கிடையே சண்டை வருகிறது. பேசாமல் இருக்கிறார்கள். அப்புறம், சாரி சொல்லிவிட்டு ஒன்றாக ஆகிவிடுகிறார்கள். கதையை சொல்லிவிட்டு, ’சண்டை போட்டா சாரி சொல்லணும்’ என்று உணர்த்த விரும்பினேன்.

“எப்போல்லாம் நீ சாரி சொல்லுவே”

“யாரையாவது ஹர்ட் பண்ணா, அவங்களுக்கு புடிக்காதது பண்ணா சாரி
சொல்லுவேன்” - பப்பு

”உன் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் யாரு?”

“வர்ஷினி, வெண்மதி, அபிஷேக்” - பப்பு

”அவங்களோட சண்டை போடுவியா”

“ஓ, வேன்ல சண்டை போடுவோம். ஆனா வாரத்துக்கு ஒரு தடவைதான் ஆச்சி” - பப்பு

”அப்புறம் என்ன பண்ணுவ”

”சண்டை போட்டா ஆண்ட்டிக்கிட்டே போய் சொல்லிடுவோம்!” - பப்பு

Thursday, June 30, 2011

பல் பல் புதுப்பல்

பப்புவின் கீழ்வரிசை முன்பற்களிடையில் ஒரு பள்ளத்தாக்கு உருவாகியிருந்ததை இன்று காலையில்தான் கவனித்தேன். சந்தேகத்துடன் முன்பற்களை தொட்டபோது லேசாக ஆடியது.:-) யெஸ், பப்புவிற்கு கீழ்வரிசையின் முன்பல் இரண்டும் விழப்போகின்றன! அநேகமாக அவைதான் முதலில் முளைத்த பற்களாக இருக்க வேண்டும். பப்புவுக்கு, பற்கள் முளைத்தபோது அவற்றை தடவிப்பார்த்ததும், பற்கள் முளைக்கும் தறுவாயில் என் விரல்களை, முகத்தைக் கடிக்க முற்பட்டபோது தடுக்காமல் இருந்ததும் நினைவுக்கு வருகின்றன. இரண்டு பற்கள் ஒன்றாக ஆடியதும், எங்காவது இடித்துக்கொண்டாளோ அல்லது சர்க்கஸ் செய்கிறேன் என்று தலைகீழாக தொங்கும்போது கீழே விழுந்துவிட்டாளோ என்று துருவிதுருவி கேட்டேன். இல்லையென்றதும், ஆடுகின்ற பற்களுக்கு பின்னால் ஈறில் தொட்டுப் பார்த்தேன். புதுப்பற்கள் தென்பட்டன. பிறகே நிம்மதியாக இருந்தது.

ஏழு வயதில் இந்த பற்கள் விழுந்து புதுப்பல் முளைக்கும் என்று அவளுக்கு சொல்லியிருந்தோம். இப்போதே பல் ஆடுவதால், ஒருவேளை, தான் இரவில் பல் விளக்காமல் உறங்கியதால்தான் பாக்டீரியாக்கள் சென்று பற்களை கொட்ட வைக்கின்றனவோ என்று பப்பு எண்ணிக்கொண்டிருக்கிறாள். :-)

Thursday, June 16, 2011

(கோல்ட்) கம்மல் ரிட்டர்ன்ஸ்

ரொம்ப நாட்களாக இல்லாமலிருந்த கம்மல் புராணம் லீவில் திரும்ப வந்துவிட்டது. சரியாக சொல்லவேண்டுமென்றால், அம்மா ஊரிலிருந்து வந்த பிறகுதான் ஆரம்பித்தது. சின்ன வயதில் நான் ஏதாவது கேட்டால் பெரிம்மா உடனே மறுத்து எதுவும் சொல்லமாட்டார். கொஞ்சம் ஆறப்போட்டு, அது எப்படி நமக்கு அவசியமில்லாதது என்று சொல்வார். (அதற்குள் வேறு எதன்மீதாவது எனக்கு ஆர்வம்வந்திருக்கும்.) அதே லாஜிக்கை இங்கு அப்ளை செய்தேன்.

”சரி, குத்தலாம், நீதான் கம்மல் போட்டா காது வலிக்கும், நான் பெரிய பொண்ணாயிட்டுதான் குத்திப்பேன்னு சொல்லியிருந்தே” என்றேன்.

”பரவால்ல, வலிக்கட்டும், என் காதுதான” என்றாள்.

”பாய்ஸ்ல்லாம் கம்மல் போடறாங்களா, ஏன் கேர்ல்ஸ் மட்டும் கம்மல் போட்டுக்கணும், பப்பு” என்றேன்.

”ஏய், பாய்ஸ்ல்லாம் கம்மல் போடமாட்டாங்க. கேர்ல்ஸ்தான் கம்மல் குத்திக்கணும்” என்றாள்.

என்னடா, இது 2011-க்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டேன். சமீபகாலமாக, கம்மலைவிட அவளுக்கு தங்கத்தின் மீது அளவு கடந்த ஆசை.
எந்த விளையாட்டு விளையாடினாலும் கோல்டு, சில்வர் என்பதாகத்தானே பாயிண்டுகளும் வருகின்றன. டாங்கில்டு படத்தில் அவளது ஜொலிக்கும் கிரீடம்! (டாங்கில்டு விடாமல் ஓடி சாதனை படைத்தது அநேகமாக எங்க வீட்டில்தான்
என்று நினைக்கிறேன்.) சாகச படங்களில் தங்கத்தைத் தேடி பயணம் செல்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து, தங்கக்கோடரி என்று கதைகளிலும் தங்கம்தான்.

எப்படி தங்கம் வருகிறது என்று கேட்டுக்கொண்டிருப்பாள். பூமிக்கு அடியிலிருந்து எடுக்கிறார்களென்று மட்டும் தெரியும்.ஆனால் எப்படி அது டிசைன் டிசைனாக வருகிறது என்று ஆச்சரியம்.அவள் கேட்கும்போது மட்டும், யூ ட்யூபில் தேட வேண்டுமென்று நினைப்பேன். பிறகு மறந்துவிடும்.

வீட்டில் ஒரு படம் இருந்தது, ரொம்ப நாட்களாக பார்க்காமல்.
"With a girl of Black soil"- சுரங்கத்தில் வேலை செய்யும் தந்தை மற்றும் சிறுமி, அவளது தம்பியின் கதை. மண்ணை தோண்டி அள்ளி எடுப்பது, சுரங்கவேலைகள் முதலியன. பாதிவரை அதைப்பார்த்தோம். அன்றிரவு முழுக்க பப்புவுக்கு ஏன் அந்த சிறுமியின் அப்பா பூமிக்கு அடியில் தோண்டுகிறார், சுரங்கத்தில் எப்படி மூச்சு விடுவார்கள், வேர்க்குமே என்றெல்லாம் கேள்விகள்.

பளிச்! பல்பு எரிந்தது.

”நாமல்லாம் கோல்ட் வேணும்னு கேக்கறோம் இல்ல. அதான் அவங்க போய் கஷ்டப்படறாங்க. நாம கோல்டு போட்டுக்காம இருந்தா அவங்களும் போக வேண்டாம். நாம கடையில் போய் கோல்டு வாங்கினா, கடைக்காரங்க ’இன்னும் போய் கோல்டு எடுத்துட்டு வாங்க, குழந்தைங்க கம்மல் கேக்கறாங்க’ன்னு அவங்ககிட்டே சொல்லுவாங்க. அப்புறம், அதை நெருப்புல போட்டு உருக்கி டிசைன் செய்வாங்க. ” என்றதும் ”மண் அவங்க மேலல்லாம் விழுந்துச்சுன்னா பாவம் இல்ல, கம்மல் செய்யும்போது அவங்க கையை சுட்டுடும் இல்ல ஆச்சி”, என்று விட்டால் அழுதுவிடும் நிலைக்கு வந்துவிட்டாள்.

”அதுக்குத்தான் நாம கோல்டு போட்டுக்க வேணாம், பப்பு,நாம கோல்டு வேணாம்னு சொல்லிட்டா யாரும் அவங்களை போய் மண்ணை தோண்டி பூமிக்குள்ள போய் கோல்டு எடுக்கச் சொல்லமாட்டாங்க. என்று ஒரு குட்டி லெக்சர் கொடுத்தேன்.

”நான் கோல்டு வேணும்னு நினைக்கல ஆச்சி, வடலூர் ஆயாதான் கம்மல் குத்தனும்னு சொன்னாங்க” என்றாள். (டயனோசர் வெளியே வந்துவிட்டது!)

அதற்குப்பின் கோல்டு பற்றியோ அல்லது கம்மல் குத்து என்றோ வாயைத் திறக்கவில்லை. :-)

குறிப்பு: சுரங்கம் பற்றிய வீடியோ அல்லது டாக்குமெண்ட்ரி இருந்தால்/தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும், ப்ளீஸ்!

Monday, June 13, 2011

தினம் ஒரு ப(/பா)டம்

ப்ராக் பிரின்சசுக்கு முன்:

பாலெல்லாம் எனக்கு வேணாம். கவ்-வோடதெல்லாம் யாராவது குடிப்பாங்களா...கவ்-வோடது, சிங்கத்தோடதுல்லாம் எனக்கு தராதே.


ப்ராக் பிரின்சசுக்குப் பின்:

யப்பா, நான் குடிச்சுடுறேன்ப்பா, மாடு என்னை வந்து முட்டுறதுக்கா,ஏன் பால் குடிக்கலைன்னு!

Friday, June 10, 2011

killer timepass - பப்பு விடு(ம்)கதைகள்

1. செடியிருக்கும். ஆனால் இலையிருக்காது. அது என்ன?

பே!!

”கருப்பாக இருப்பான்”

பே அகெய்ன்!


.
.
.
.
விடை: தலைமுடி

2. ரொம்ப பெரிதாக இருக்கும். அதுக்குள் நிறைய குட்டி குட்டி மனுசங்கள் ஓடிக்கிட்டு இருப்பார்கள். அது என்ன?


”பட்டாணி”

”இல்ல”

மாதுளம்பழம்?

”இல்ல”

”வேர்க்கடலை??”

”தெரியல, நீயே சொல்லு...........”


விடை: உலகமும், உலகத்துக்குள் இருக்கும் மனுஷங்களும்

Wednesday, June 08, 2011

mspaint saga - I




மலைக்கு பக்கத்தில் வீடு





நிறைய கதவுகளுடன் வீடு



ரோஜா

tangled/up/how to train your dragon பார்த்த நேரம் போக பப்பு வரைந்தவை. zoom செய்து வரைவதுதான் அவளுக்கு மிகவும் பிடித்தம். அதனால் சிலபடங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சேமித்தோம். save as சொல்லிக்கொடுத்திருந்தேன். அவளோ, சேவ் செய்து ஏற்கெனவே இருக்கும் பெயரில் சேவ் செய்து சிலவற்றை replace செய்துவிட்டாள். :-)