Monday, June 01, 2015

'பிகு'வும் ஃப்ளாஷ்பேக்கும்

படம் பார்க்க பார்க்க, அமிதாப்பும் தீபிகாவும் மறைந்து நானும் ஆயாவுமே திரைக்குள் தெரிவது போல ஒரு உணர்வு. ஆயா, பத்து வருடங்கள் என்னோடு இருந்தார்கள். ஆனால்,நான் ஆயோவோடிருந்தது பதினேழு வருடங்கள்.

சிறுவயதில்,எனது ஒன்றரை வயதில் என்னை கையில் வாங்கிக்கொண்ட ஆயா...

பள்ளிக்காலம் வரை ஆயாவின் கையைப் பிடித்தே நான் வளர்ந்தேன். பதின்மத்தில் எதிரியாக தோன்றிய ஆயா, திருமணமான காலகட்டத்தில் ஒரு தோழியைப் போல அல்லது  வாகனங்களின் ஸஸ்பென்ஷனை போலவே எனக்கு இருந்தார்கள்.

எப்போதென்று தெரியவில்லை. ஒரு மருத்துவமனையில் காத்திருந்தபோது, இரண்டு பெண்மணிகள் எனக்கு பின் வரிசையில் பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக் கதைகள்தான். அதில் ஒரு பெண் சொன்னது இப்போது வரை மறக்கமுடியாது.

'இந்த வயசானதுகள்ளாம் எப்படிதான் கத்துண்டுடறதோ தெரியலை... வாழைப்பழம் சாப்டாதான் ஆகும்னு..தினம் வாழைப்பழம் வேணும்னு மைன்ட்செட்'

ஆயா செய்த ரகளைகள் சொல்லி மாளாது.

 தினமும் மாலையில் ஆயா, தன் இரு மகள்களுடன் போனில் பேசுவார். மெயின் டாபிக் இதுவாகத்தான் இருக்கும்.  ஏதோ இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை கணக்கா 'போன் போட்டு குடு' 'போன் போட்டு குடு' என்று என்னை தொணப்பிவிட்டு...

போனில் என்னதான் டிப்ஸ் கொடுத்தாலும், ஆயா தான் செய்வதைத்தான் செய்வார். அதாவது, ஏதோ தேவாமிர்தம் கணக்காக அந்த பிங்க் கலர் மருந்தை அநாயசமாக இரண்டு மூன்று கப்கள் குடிப்பார். டாக்டர் சொன்னதென்னவோ ஒரு டீஸ்பூனாகத்தான் இருக்கும். இவர் குடிப்பதோ சில பல‌ டேபிள்ஸ்பூன்களாக‌ இருக்கும்.

விளைவு, அடுத்தநாள் காலையிலேயே ஆம்பூருக்கு போன் பறக்கும். அரரூட் கஞ்சியோ, ஜவ்வரிசி கஞ்சியோதான் அடுத்த வேளைக்கு. கடும் காப்பி மாதிரி கடும் டீ, ஒரு மஞ்சள் நிற மாத்திரி சகிதம் ஆயா உட்கார்ந்திருப்பதை பார்க்க பாவமாக இருந்தாலும், பெரும்பாலும் 'சொன்னா கேக்கலைல்ல' என்று தோன்றும்..

அன்று மாலை, மகள்களுடனான‌ போனில் -  இதற்கு பரிகாரமும், 'ஏம்மா இப்படி பண்ணீங்க..எல்லா ப்ரொட்டீனும் போயிருக்குமே' என்ற கதறலும் கேட்கும்.

ஆயாவுக்கான மருந்து மாத்திரைகளாஇ, அலுவலகத்திலிருந்து வரும் வழியில் நானே வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். வழக்கமாக, மருந்து வாங்கும் கடையில் ,சமயத்தில் ஒன்றிரண்டு மாத்திரைகள் கிடைக்காது.அதனால், வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கடையில் மாற்று ஏற்பாடு செய்திருந்தேன்.

வாரயிறுதியில், யாரோ கதவை தட்ட திறந்தால், அந்த மருந்துக்கடைக்காரர். கையில், மருந்துகளுக்காக செய்யப்படும் ப்ரொவுன் நிற பை. பையில், நான்கைந்து மருந்து குப்பிகளின் தலை.

புரியாமல் விழிக்க, 'பாட்டிம்மாதான் போன்லே சொன்னாங்க' என்றார் அவர்.

 என்னவென்று நினைக்கிறீர்கள்?

அத்தனையும் க்ரிமாஃபின் குப்பிகள்.

இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு, வாரத்துக்கு இரண்டு வாங்கி அலுத்துப்போன ஆயா, மருந்துக் கடைக்காரருக்கு செய்த பரோபகாரம்தான் இது.

'எதுக்கு அடிக்கடி வந்துக்கிட்டு..அதான் ஆறு பாட்டில் கொண்டுவர சொன்னேன்.'

அவரெதிரில் என்ன சொல்ல முடியும். மொத்தமாக காசு கொடுத்து அனுப்பிவிட்டு, ஒன்றை மட்டும் ஆயாவிடம் கொடுத்துவிட்டு, மீதி அனைத்தையும், எனது அறையில் வைத்துகொண்டேன்.

அதிலிருந்து, இரவுணவுக்குப் பின் க்ரிமாஃபின் கொடுப்பது எனது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆயா, கெஞ்சுவதை பார்த்தால் பாவமாக இருக்கும். அதை பார்த்தால் முடியுமா?

ஒரு டீஸ்பூனுன் கொடுத்தால் ஆயாவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி இரண்டை வாங்கி குடித்துவிடுவார்.

'அதிகமாக குடித்தால் நல்லா போகும்னு யார் சொன்னது உங்களுக்கு? எத்தனை வாட்டி படுறீங்க? நீங்கதானே கஷ்டப்படறீங்க?'

ம்ஹூம்..இதெல்லாம் காதில் விழவே விழாது.வயதானால் எப்படிதான் இந்த அடம் வந்துவிடுமோ...பிகுவில், இந்த அடத்தை மிக அழகாக படம் பிடித்திருந்தார்கள்.

இந்த விஷயத்துக்காக, போனில் பஞ்சாயத்து. எப்படிதான் கறாராக இருந்தாலும், ஒரு வாரத்துக்கு ஒரு பாட்டிலை காலியாக்கி விடுவார்.

அமிதாப்பிற்கு,  'என்னால் முடியும். நானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்' என்ற ஈகோ அதிகம் இருப்பதாக காட்டியிருப்பார்கள். ஒருவேளை தாத்தாக்களுக்கு இருக்குமோ என்னவோ...ஆயாவிடம் அது இல்லை. மாறாக, அதீத தன்னம்பிக்கை உண்டு. நிறைய முறை, நிறைய வடிவத்தில் அனுபவப்பட்டிருக்கிறேன்.

மருத்துவமனையில் இவரை பார்த்ததும், 'ச்சேர் எடுத்துட்டுவரட்டுமா' என்று- வீல் சேர் கொண்டுவர‌ - ஓடும் பகதூரை ஒரு கையாலே அடக்கிவிடுவார். சிரமப்பட்டு அவர் ஏறுவதை பார்ப்பவர்கள், ஏதோ என்னை கல்நெஞ்சக்காரி போல எண்ணிக்கொள்வார்கள்.

ஒருமுறை, லங்க்ஸில் டீபி வந்து மிகுந்த சிரமப்பட்டார். தானாக‌ நடக்கக்கூட முடியவில்லை. நாம் கை பிடித்தால் விட்டுவிட்டு,  ஊனிக்கொண்டு எழுவார்.
அவராகத்தான், நம் கையை பிடித்துக்கொள்வார். அவர்தான், நம் கையை பிடித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் யாரும் இல்லாத வேளையில், ஆயா தனியாக இருக்கும்போது, நடக்க உபயோகமாக இருக்குமே என்று ஊன்றுகோல் வாங்கியிருந்தோம். அதனை சீண்டக்கூட இல்லை. வலிய, எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று டெமோ காட்ட, வாங்கியதற்காக, இரண்டொரு முறை அதனை எடுத்துக்கொண்டு நடந்தார். ஆம், அதனை ஊன்றாமல், கைகளில் தூக்கிக்கொண்டு நடந்தார்.

பழக்கமில்லாததால் இப்படி இருக்குமோ, சில நாட்களில் பழகிவிடும் என்று நினைத்த நாங்கள்தான் ஏமாளிகளானோம்.  இறுதிவரை, அதனை ஊன்றி ஆயா நடக்கவேயில்லை. அவர் இறுதியாக மருத்துவமனைக்கு சேரும் நாளுக்கு முன்பு கூட, எனது கைகளை பிடித்துக்கொண்டுதான் படுக்கைகயறைக்குச் சென்றார்.

அவருக்காக, நானும் பப்புவும், எங்களது படுக்கையை ஆயாவின் அறைக்கே மாற்றிக்கொண்டோம், . நடுஇரவில், அவர் விழித்துக்கொண்டால் எனக்கு விழிப்பு வந்துவிடும். பாத்ரூமுக்குச் சென்று திரும்புவரை 'பக்பக்'தான்.
இதற்கே இப்படியென்றால், அவரை விட்டுவிட்டு ஊருக்கு போவதைப்பற்றி சொல்லவே வேண்டாம். பல இரவுகள், அவரது வயிறு சீராக ஏறி இறங்குவதை பார்த்தபின்புதான் நிம்மதியாக எனக்கு தூக்கம் வரும்.

எந்த கோழி கூவுகிறதோ இல்லையோ, காலையில் டாணென்று  'ஐந்து மணிக்கு' எழுந்துவிடுவார். எங்கள் தலைகளுக்கு மேலாக நடந்து சென்று ஹாலில் லைட் போட்டு கதவுகளை திறந்து வைத்து அமர்ந்துக்கொள்வார். ஒரே பதில்.

'முழிப்பு வந்துடுச்சு'தான்.

 வெயில் காலத்தில் ஓகே. பனிக்காலத்திலும்...சளி வந்து திரும்ப டாக்டரிடம் ஓடு!

'ஏன் ஆயா, காலையிலே அப்படி கேட் வாக் செஞ்சு ஹால்லே உட்கார்ந்துக்க‌லைன்னாதான் என்ன? முழுச்சிட்டீங்கன்னா கண்ணை மூடிக்கிட்டு படுத்திருங்களேன்' என்றால், 'நாளைக்கு பார்க்கறேன்' என்பார்.

அந்த நாளை கடைசி வரை வரவேயில்லை. (கடைசி மாதங்களில், மருந்துகளாலோ அல்லது மருத்துவமனையிலிருந்து வந்த அயர்வாலோ சில நாட்கள் தூங்கியிருக்கிறார். )

 வீட்டில் தனக்கு தெரியாமல் எந்த விஷயங்களும் நடந்துவிடக்கூடாது என்ற உணர்வு எப்படிதான் எல்லா வயதானவர்களுக்கும் வருமோ!அவரது அறை இருந்தாலும், ஹாலில் சரியாக  நடுவில் அமர்ந்துக்கொள்வார். அவரைத்தாண்டி, யாரும், எதுவும் அந்த பக்கம் இந்த பக்கம் சென்றுவிட முடியாது.

மதியம் ஒரே ஒரு மாத்திரை தவிர, காலையும் மாலையும் கணிசமான மாத்திரைகள் இருந்தது, ஆயாவுக்கு. ஒவ்வொருநாளிரவும், கைகளில் வண்ண வண்ண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, 'இவ்வளோவும் சாப்பிடணுமா?கொஞ்சம் கம்மியா தரக்கூடதா, அந்த டாக்டர்' என்பார்.

"ஆயா, சந்தோஷப்படுங்க...இந்த மாத்திரையெல்லாம் கிடைக்குதேன்னு.. நம்மாள இந்த மாத்திரையெல்லாம் வாங்க முடியுதேன்னு. நீங்க இல்லேன்னா பப்புவை யார் பார்த்துக்குவாங்க...நீங்க ரொம்ப நாள் எங்ககூட இருக்கணும். அதுக்காகவாவது, இந்த மருந்தெல்லாம் சாப்பிடுங்க‌' என்று ஒவ்வொரு நாளிரவும் நானும் அவரை சமாதானப்படுத்த வேண்டும்.அமிதாப், மருந்துப்பெட்டியும் கையுமாக இருக்குபோதெல்லாம் இதுதான் நினைவுக்கு வந்தது.

வயதானவர்களுக்கு வரும் எல்லா குணங்களையும் - பிறத்தியார் மீது சந்தேகம்,அடம், சுயநலம்-  இதெல்லாம் காட்டினாலும், 'பிகு' காட்டாத முக்கிய விஷயம் ஒன்று உண்டு. அது மறதி.

கடந்தகால நினைவுகளெல்லாம் பல பசுமையாக இருக்க, சமீபத்தில் நடந்த அல்லது அன்றாட முக்கியமான‌ விஷயங்கள் மறந்துவிடுவது இருக்கிறதே!! க்ர்ர்ர்ர்ர்ர்....

மண்டேலா எப்போது விடுதலையானார், நீல் சிலை அகற்றியது எப்போது, பிரேமதாசா செத்துப்போனது எப்போது, கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவை வழிநடத்தி சென்றது யார் என்பதெல்லாம் சரியாக நினைவிருக்க, வீட்டை உள்ளுக்குள் பூட்டிகொண்டு சாவியை எங்கே வைத்தோமென்று மறந்துவிடும்.

இத்தனைக்கும், அவருக்கெதிரே இருக்கும் சிறுமேஜையில்தான் இருக்கும். புத்தகத்தை படித்துவிட்டு, அதன் மேலே வைத்துவிட்டு, சாவி மாட்டும் இடத்தில் தேடிக்கொண்டிருப்பார்.

ஒருமுறை, அலுவலகத்திலிருக்கும்போது போன்.

பப்புவும், பப்புவை பார்த்துகொள்ள வருபவரும் வெளியில் இருக்க ஆயா, சாவியை மறந்துவிட்டு நெடுநேரமாக தேடிகொண்டிருக்கிறார் என்று. ஆயாவுக்கு போனடித்தாலோ, 'நீ வர்றியாமா' என்கிறார்.

வெளியிலோ, அந்த அம்மாவுக்கு பதட்டம்.  தட்டுத்தடுமாறி ஆயாவே எப்படியோ தேடி எடுத்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் சோபாவுக்கு கீழே கிடந்திருக்கிறது சாவி. மேஜையிலிருந்து எப்படியோ சாவி சோபாவுக்கு கீழே விழுந்திருக்கிறது.

ஒருவழியாக எல்லோரும் சேர்ந்து அதனை தேடியெடுப்பதற்குள், என்னை ஒரு வழி செய்துவிட்டார்கள். அவர்கள் அங்கு அனுபவித்த அத்தனை பதட்டத்தையும், இங்கே அலுவலகத்தில் அமர்ந்தபடி நானும் அனுபவித்திருந்தேன்.

இன்னொரு முறை.

 +2 முடித்துவிட்டு விடுமுறைக்கு வந்திருந்தார் உறவுக்கார பெண். பப்பு ஏதோ கேட்டாளென்று கடைக்கு இருவரும் போக, சற்று நேரமாகிவிட்டிருக்கிறது. அந்த பெண்ணுக்கு புதிய ஊர். திரும்பி வரும் வழி தெரியவில்லையோ என்னவோ... இருவரையும்,காணவில்லை. பத்துநிமிடத்தில் எனக்கு போன். 'இருவரையும் காணவில்லை'

'வந்துடுவாங்க, ஆயா' என்ற எனது பதிலுக்கு ஆயா சமாதானமாகவில்லை.

'இப்போவரைக்கும் வரலை. உடனே புறப்பட்டு வா. '

எப்படி வண்டிஓட்டிக்கொண்டு வீடு சேர்ந்தேன் என்பது இன்றுவரை எனக்கு புரிந்ததில்லை. நான் போகவும், அவர்கள் வரவும் சரியாக இருந்தது. கொஞ்ச நேரம் ஆகிவிட்டது உண்மைதான்.

பப்புவை அப்போது கவனித்துக்கொண்ட 'சகுந்தலா அம்மா'வின் வீடு எனக்கு தெரியும் என்றாளாம் பப்பு. அங்கே போய்விட்டு வந்தார்களாம். என்னத்த சொல்ல!!

'ஆச்சி வராம‌ எங்கியும் நீங்க போகக்கூடாது' என்று  இருவருக்கும் வீட்டுக்காவல்.

அந்த நேரம் கோபமாக இருக்கும். ஒன்றும் சொல்லவும் முடியாது. சமயங்களில், கடுமையாக நடந்துக்கொள்வேன். சொல்லிவிட்டாலும், நம்மால் நிம்மதியாக இருக்கமுடியாது. இந்த மனதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?! என்ன சொன்னாலும், அமைதியாக வேறு இருப்பார். அந்த கண்களில் தெரியும் ஏதோ ஒன்று, என்னை போட்டு கொன்றெடுக்கும். கோபித்துக்கொள்ளவே முடியாது.

என் சிறுவயதில், அவர் என் கைகளை கெட்டியாக பிடித்தவாறு பயணித்தது நினைவிலாடும். பென்ஷன் வாங்க சென்றாலும் சரி, உறவினர் வீட்டுக்குச் சென்றாலும் சரி, நெய்வேலியோ, திருவண்ணாமலையோ, கடலூரோ....  வேலூர் பஸ்ஸ்டாண்டில் அவருக்கு செய்தித்தாளும், இதழ்களும் வாங்கிக்கொண்டு எனக்கு கோகுலம் வாங்கிகொடுத்துவிட்டு விடுவிடென்று நடக்கும் ஆயா....ஒரு கையில் என்னையும், இன்னொரு கையில் குடையும் பிடித்துக்கொண்டு நடக்கும் ஆயா...

'பிகு'வில் அவள் கடைசியாக அந்த மருந்துப்பெட்டியோடு இருக்கும் சில நிமிடங்கள்...

கொடுமையான வலி அது. எல்லாமும் இருக்கும்... அவர்களுக்கான மருந்து, மாத்திரை, உபகரணங்கள்,படுக்கை, வாசிக்க இதழ்கள்,காலண்டர், கடிகாரம், அழைப்புமணி,பிளாஸ்க்... ஆனால்,  அவர்கள் மட்டும் இல்லாத, அவரது இழப்பை,வெறுமையை உணரும் தருணங்கள் இருக்கிறதே...

அதை விட்டு இன்று வரை என்னால் கடந்துவர இயலவில்லை. தூரத்திலிருப்பவர்களை விட, கூடவே இருந்து பார்த்துக்கொண்டவர்களில் வலியும், இழப்பும் அதிகம். எங்களால், இன்னமும் எங்களது அறைக்கு மீண்டு வரமுடியவில்லை.

அவரில்லாமல், நாங்கள் கடந்த முதல் மாதம். சமையல்  சிலிண்டர் வந்திருக்கிறது. கையில் காசில்லை. ஏடிஎம் சென்று எடுத்து வருமளவுக்கு அந்த பையன் காத்திருக்க மாட்டான்.  ஒவ்வொரு மாதமும், சிலிண்டர் வந்த தேதியை ஆயா குறித்து வைப்பார். அடுத்த சிலிண்டர் வருவதற்கு, உடனடியாக என்னிடம், காசு வாங்கி புத்தகத்தில் வைத்துவிடுவார். புத்தகத்தையும், காசையும் எடுத்து அந்த பையனிடம் கொடுக்க வேண்டியதுதான். அவன் முன்னால், பர்சை தேடி தடவ வேண்டியதில்லை. ஆயாவின் இழப்பை, கூர்மையாக எனக்கு உணர்த்திய சம்பவம் இது. பர்ஃபெக்ஷன் என்றால் ஆயா!

ஆயாவுக்கு எதிரில் எப்போதும் ஒரு காலன்டர் இருக்க வேண்டும். அவருக்காக மாட்டிய அந்த காலன்டரை இப்போது வரை அவிழ்க்க மனமில்லாமல் வைத்திருக்கிறேன்.  சுத்தப்படுத்தும்போதெல்லாம், அதை மட்டும் கண்டும் காணாமல் போகிறேன்.

அவரது அலமாரி கதவுகள், காற்றில் திறக்கும்போதெல்லாம், 'இன்டர்ஸ்டெல்லாரை' நினைவு கொள்கிறேன். பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும், அந்த நினைவு ஒரு ஆசுவாசத்தை, நிம்மதியை, மெல்லிய புன்னகையை தருவதை உணர்கிறேன்.

நான்தான் இப்படியென்றால், பப்பு அதற்கு மேல்.
இசபெல்லா மருத்துவமனையை ஒருமுறை கடந்து செல்லும்போது, ஆயா ஏதோ அங்கேயே இருப்பதுபோல், இப்போது போய் அழைத்துவந்துவிடலாம் போல தோன்றியது. மனதுள் தோன்றிய அதே நிமிடம், பப்பு 'ஆயா உள்ளே இருப்பாங்களா ஆச்சி? ' என்றாள்.

ஆயா சென்று நீண்ட நாட்களுக்குப் பின் நடந்தது இது. ஆயாவின் அறையில்தான் அப்போதும் தூக்கம்.ஆனாலும், ஆயாவின் பாத்ரூமை அவர் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, தவிர வேறுயாரும் உபயோகப்படுத்துவதில்லை.

கரண்ட் கட்டான ஒரு நள்ளிரவில், அவளை ஆயாவின் அறையிலிருக்கும் பாத்ரூமையே உபயோகப்படுத்துக்கொள்ள சொன்னேன். கதவை திறந்து உள்ளே சென்ற சில நிமிடங்களில், அவள் சொன்னது இது.

"ஆயா, எனக்கு தெரியும், நீங்க இங்கேதான் எங்கியோ இருக்கீங்க'.

:-)

4 comments:

Kalaivani said...

You have been lucky enough to spend more time with your granny. We only visit her often.

Anonymous said...

:) :( wonderful wrtie up...got mixed feeling...happy and sad...keep it up Mullai!!

Shamee S said...

உங்கள் ப்ளாக்கை கொஞ்ச நாட்களாக தான் வாசிக்கிறேன்.மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள்.
இந்த பதிவை பார்த்ததும் என் பாட்டியுடன் கழித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன..

முகவை மைந்தன் said...

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற்பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே அல்லனோ யானே பொலந்தார்த்
தேரவண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே