நீண்ட புரட்சி (எட்கர் ஸ்நோ), மா சே துங் மேற்கோள்கள் புத்தகங்களை வாசித்தேன். வாசித்ததும் மறந்துவிடாமலிருக்க, எனக்காக எடுத்த சில குறிப்புகளை இங்கு சேமிக்கிறேன்.
மார்க்சிய லெனினியத்தின் புதிய படிநிலையின் வளர்ச்சிக்கு சீனப்புரட்சியின் அனுபவங்கள் தகுந்த களமாக அமைந்தது. அதனை வளப்படுத்தி முன்னெடுத்ததில் தோழர் மாவோவின் வரலாற்று பாத்திரம் மகத்தானது. அவரது பங்களிப்பு, தனியே சீனத்தேசத்துக்கு மட்டும் உரியதன்று. உலகப்பாட்டாளி வர்க்கத்துக்கும், சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கத்துக்கும் பெருமதிப்பு மிக்க பொக்கிசமாக அமைந்தது அது. ரஷ்ய புரட்சியின் ஊடாக உலகில் புகுந்த மார்க்சிய-லெனினியத்தை கையில் ஏற்று பாதுகாத்து, அதனை சீன நாட்டின் விசேஷ தன்மைக்கேற்ப பிரயோகித்து நடைமுறையில் வெற்றி கண்டவர் மாவோ. அந்த தத்துவார்த்த அரசியல் வழிகாட்டுதல்கள் நம் நாடு போன்ற வளரும் உலக நாடுகளுக்கு வழிகாட்டி.
மக்களுக்கு தொண்டு செய்க:
இதில் மக்களுக்காக பணியாற்றுவது குறித்து சொல்லப்படுகிறது. அடக்கமும்,விவேகமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இறுமாப்பு, அவசரபுத்தியிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொண்டு உடல், பொருள், ஆவி மூன்றாலும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிறார். எதை செய்தாலும் மக்களின் நலன்களிலிருந்துதான் தொடங்க வேண்டும். சிறு குழுவின் நலன்களிலிருந்து அல்லது சுயநலன்களுக்காக தொடங்காமலிருக்க வேண்டும். தோழர் பெத்யூன் போல சுயநலமற்ற உணர்வு கொண்டு பணியாற்ற வேண்டும். அந்த உணர்வை கற்றுக்கொள்ள வேண்டும். திறமை பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கலாம், ஆனால், இந்த உணர்வு கொண்டிருந்தால் மக்களுக்கு பயனுள்ள மனிதராக இருப்பார். அதாவது, ஊழியர்கள் அனைவரும், எந்த அந்தஸ்து உடையவராக இருந்தாலும் அவர்கள் செய்வதெல்லாம் மக்களுக்குத் தொண்டு செய்வதாகும்.
மக்களுக்காக பணியாற்றுவது குறித்து நீண்ட புரட்சி புத்தகத்திலிருந்து ஒரு காட்சியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மஞ்சூரியாவில், வியாவோனிஸ் மாகாணத்தில் ”காது கேளாத, வாய் பேசாத” குழந்தைகளுக்கான பள்ளி இருக்கிறது. அந்த பள்ளி யாரால் நடத்தப்படுகிறது என்றால், அக்யூபஞ்சர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற விடுதலை படையின் மருத்துவ மற்றும் பரப்புரை குழுவின் ஐந்து நிபுணர்களால் நடத்தப்படுகிறது. இங்கு வரும் மாணவர்கள் பேசவோ அல்லது கேட்கவோ முடியாதவர்களாக இருக்கிறார்கள். அது பிறவிகுறைபாடினால் இல்லாமல், தட்டம்மை, தொற்றுநோய் போன்றவற்றின் விளைவுகளால் அந்த திறனை இழந்தவர்கள்.
1966யில் லட்சகணக்கிலான கலக்கார செம்படை காவலர்களை தலைவர் மாவோ அழைத்தபோது, இந்த பள்ளியிலிருந்தும் ஒரு குழு பீகிங்குக்கு சென்றது. மாணவர்கள் மாவோவை கண்டபோது மகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தனர். ஆனால், மற்றவர்களுடன் சேர்ந்து அவர்களால் குரலெழுப்ப முடியவில்லை. அவர்களால், தங்களுடைய கால்களால் குதித்து ஆர்ப்பரிக்க மட்டுமே முடிந்தது. ”சீன மருத்துவம் என்பது மாபெரும் கருவூலப் பெட்டகம்” என்ற மாவோவின் கட்டளையின் மீது கவனம் செலுத்தி மக்களுக்கு பணியாற்றுமாறு தளபதிகள் அந்த மருத்துவர்களிடம் கூறினர். மருத்துவ உதவி செய்பவர்கள் அந்த தொழிலாளர்கள். அவர்கள் அக்யூபஞ்சர் முறை கொண்டு காது கேளாமை குணப்படுத்த்வது குறித்து ஏற்கெனவே சோதனை நடத்தியிருக்கிறார்கள். மேலும், அவர்களின் மீதே, அதாவது தடை செய்யப்பட்ட அளவுக்கு அவர்கள் மீதே ஊசிகளை செலுத்தி தீவிரமான சோதனையை தொடங்கினார்கள்.
அதோடு, மற்ற ஊழியர்களுடைய ஆதரவை பெறுகிறார்கள். அந்த தொழில்நுட்பங்களை பயிற்றுவிக்கிறார்கள். குறுகிய காலத்தில் பல மாணவர்களால் பேசவும் கேட்கவும் முடிந்தது. சிகிச்சையளித்த் 582 மாணவர்களில் 98 சதவீதம் பேருக்கு கேட்கவும், பேசவும் முடிந்தது. இதற்கு முன்பு அவர்கள் குறியீட்டு மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். இப்போது குறியீட்டு மொழியை காண இயலாது போயிற்று.
மக்கள் படை என்ற ஒன்று சீனாவில் இருந்தது. மக்கள் படை என்பது, இருபத்தைந்து வயது உள்ளவர்களுக்கான அடிப்படை ஆயுதங்கள் கொண்ட மக்கள் படை. இதன் உறுப்பினர்கள் ஆயுதங்களை தேக்கி வைத்து பராமரிப்பவர்கள்.
அடுத்ததாக, குடிமக்கள் படை – இது, சேமப்படைகள் மற்றும் சிறப்புபிரிவுகள் உள்ளிட்ட இருபத்தைந்து வயது முதல் ஐம்பது வயது வரை உள்ளவர்களைக் கொண்டது. இலகுரக ஆயுதங்களும் அருகாமையிலுள்ள பகுதியில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன.
ராணுவமும், மக்களும் எப்படி இருந்தது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். சீருடை தரித்தவர்கள் எங்கும் காணப்படுகிறார்கள். ஆனால், ராணுவத்தினர் மக்களிடையே செல்லும்போது ஆயுதம் இல்லாமல்தான் செல்கிறார்கள். அவர்களுடைய பொது நடத்தை போற்றுதலுக்குரியதாக இருக்கிறது. ஆயுதப்படைகள் மக்களின் நன்னடத்தையை பெற்றதாகவும் இருப்பதை எந்த வெளிநாட்டினரும் கண்டுக்கொள்ள முடியும். பொதுப்பள்ளிகளில், இளம் செம்படை வீரர்கள் நிறைந்திருந்தனர். ஒவ்வொரு குடும்பத்திலும், தமது பிள்ளைகள் மக்கள் விடுதலை படையில் சேர்வதை விரும்பினர்.அரசாங்க நிறுவனங்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடிக்க வேண்டும். அவை மக்கள் திரளை சார்ந்திருக்க வேண்டும் என்கிறார் மாவோ. அவற்றின் ஊழியர்கள் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். மரணம் என்பது தியாகம், அந்த தியாகத்தையும் தகுதியானதாக இருக்க வேண்டும். அதாவது பெரும்பான்மையினரின் துன்ப துயரங்களை மனதில் கொண்டு உயிர் விடுவது என்பது மலையை விட மேலானது. உயர்மதிப்பு கொண்டது. ஆனால், பாசிசத்துக்கு உயிர் விடுவது என்பது இறகிலும் லேசானது. இதற்கு சமச்சீர் கல்வியை எடுத்துக்கொள்ளலாம். அரசாங்கம் இதில் ஜனநாயக மத்தியத்துவத்தைக் கடைபிடிக்காமல், ஒரு சாராரின் நலனுக்காக மட்டும் சமச்சீர் கல்வியை மறுத்து வந்தது. மக்களின் திரளின் நன்மை சார்ந்ததாக இருந்தால், சமச்சீர் கல்வியை அமுல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தனியார்பள்ளி முதலாளிகளின் நலன்களை கருத்தில் கொண்டு, பொதுக்கல்வியை மறுத்து உச்சநீதிமன்றம் வரை சென்றது பாசிச ஜெயா அரசு. இதில், நாம் போராட்டத்தில் எந்த பக்கம் இருக்கிறோம் என்பது நமது தியாகத்தின் தகுதியை தீர்மானிக்கிறது.
புரட்சிகர வீர சாசனம்
இது, எதிரியை துணிவுடன் எதிர்த்து போராடும் போர் நடையை பற்றி கோமிங்தாங் அரசின் காலத்தில் ஒரு இருள் சீன அரசு மூடினாலும், கம்யூனிஸ்டுகளும் மக்களும் தாமாகவே எழுந்து போர்களத்துக்குப் புறப்பட்டனர். மக்கள் பரந்து விரிந்த சினாவில் அரசாங்கத்தை நிறுவினர். அதோடு, ஒரு போதும் எதிரிக்கு அடிபணிய மாட்டார்கள். துணிவு, தியாகம், களைப்பு, சோர்வு என்று எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராட்டத்துக்கு சென்றவர்கள். இது அரசியல் ரீதியான போராட்டத்தில் மட்டுமில்லை, பொருளாதார உற்பத்தி போராட்டத்திலும், இதில் சீன மக்கள் முன்னுதாரணமாக இருப்பதாகச் சொல்கிறார் மாவோ. மேலும், கடைசி சொட்டு ரத்தம் இருக்கும், நமது சுய சார்புடன் சொந்த கால்களில் நின்று இழந்த நமது பிரதேசத்தை மீட்கும் உறுதி உண்டு.
விவசாயிகள் தங்கள் ஏழ்மை காரணமாக நிலப்பிரபுக்கள், மற்றும் கொடூரம்மிக்க அதிகாரிகளின் அடக்கு முறைக்கு உள்ளான காலகட்டம். அந்த காலகட்டத்தில், செம்படையின் வரவை ஒவ்வொரு கிராமமும் ஆவலுடன் எதிர்பார்த்தது., செம்படையின் வீர தீர செயல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. ஏழைகள் மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில், இத்துருப்புகள் ஏழைகளுக்கு உதவி செய்தன. ஏனெனில், கம்யூனிஸ்டு கட்சி அல்லது செம்படையினர் என்றழைக்கப்படும் இவர்கள், செல்வந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.
நீண்டபயணத்தில் ஒரு இடத்தில் வரும் காட்சியை சொல்லுகிறேன். 1935ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தாடு ஆற்றைக் கடந்து ஜியாஜின் மலையடிவார்த்தை அடைந்தது நீண்டபயணத்தின் மக்கள் திரள் படை. ஜூன் மாதம் வெப்பமாக இருந்தாலும் பெரும் பனி இருந்தது.
ஜியாஜின் மலைச்சிகரத்தை ஏறத்தொடங்கினார்கள். மலைச்சிகரம் மின்னும் கத்தி போல பளபளத்தது. அந்த பாதை முழுதும் கடுங்குளிராக இருக்கும்,. பனிமேகங்களும் மலையைச் சூழந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பனி விழுவது அதிகரித்தது. ஒரு தவறான அடி கூட நம்மை பின்னுக்குத் தள்ளிவிடும். பின், அதிலிருந்து மீண்டு வருவது பல மணிநேரங்களை எடுத்துக்கொண்டு விடும், மேலும், பனிக்கட்டிகள் வழுக்கி விடும். ஓரடி முன்னேறினால், மூன்றடி பின்னுக்கு தள்ளபடுவீர்கள். மலையில் பாதி தூரம் சென்றபோது, திடீரென்று பலத்த காற்று வீசியது. அடர்ந்த கருமேகங்கள் சூழந்தன.காற்றால் பனிக்கட்டிகள் வெடித்து மக்களைச் சுற்றி பரவி படர்ந்தன.
ஒரு பெரும்பனிக்கட்டி உடைந்து விழுவது போலத் தோன்றியது. பனிக்கட்டிகள் முட்டையின் அளவில் உடைந்து விழத்துவங்கியது. குடைகளால் இதை தடுக்க முடியவில்லை. அந்த சமயத்தில், திடீரென்று மக்களின் கூச்சலும்,, இடி போன்ற முழக்கங்கள், குதிரைகள் கனைக்கும் ஒலி – அங்கிருந்து யாரையும் பார்க்க முடியவில்லை, ஆனால், “தோழர்களே, உறுதியாக இருங்கள்! தளர்ந்து விடாதீர்கள், எதிர்த்து நிற்பதே வெற்றிதான்”. என்று குரல் கேட்டது. செங்கொடிகள் பாதையின் மேற்பகுதியில் பறந்துக்கொண்டிருந்தன.
அவர்கள், யாரெனில், பிரச்சார குழுவின் தோழர்கள். அசைக்க முடியாத நெஞ்சுரத்தைக் கொண்டவர்கள். செம்படைகளின் வரவை யாராலும் முன்னறிந்துக்கொள்ள முடியாது. (’நீண்ட பயணத்தில் தலைவர் மாவோவுடன்’ என்ற நூலிலிருந்து)
செம்படைகள் முதலில், பீகிங் பல்கலைகழகத்தில் தோன்றின. ஆனால், அவை உடனடியாக, லியூவால் நசுக்கப்பட்டன. மிக நுட்பமாக யார் அதை தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் மாவோ அவற்றின் உள்ளார்ந்த ஆற்றலை புரிந்துக்கொண்டார். ஊக்கமளிக்கப்பட்ட செம்படைகள் பெய்டாவில் மீண்டும் போர்க்கொடி உயர்த்தி இன்னும் பல இடங்களுக்கு பரவினர். ஆனாலும், அவர்கள் மீண்டும் நசுக்கப்பட்டனர். போராட்டம் மாறி மாறி ஊசலாடுகின்ற ஒன்றாக தொடர்ந்தது. பின்னர், மாவோ “ செம்படையினர் சிறந்தவர்களே” என்று அறிவித்தார். அதன் பிறகு சீன தேசம் செம்படையின் எரிமலையைக் கண்டது.
(தொடரும்)




0 comments:
Post a Comment