தற்போதுள்ள பற்பல எதிர்கட்சிகள் குறித்து கம்யூனிஸ்டுகளின் நிலை :
இதுதான் மிகவும் சுருக்கமான பகுதி. அதே சமயம், பிரச்சினையை முன்வைக்கும் விதத்தில் பொதுவானது. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு போராட்ட காலகட்டங்களில், தொழிலாளர் இயக்கத்தின் வளர்சிக்கு ஏற்ப வகுக்கவேண்டிய போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரம் பற்றி கூறுகின்றனர். இந்த அம்சங்கள்தான், ஒரு நாட்டின் கம்யூனிஸ்டுக்கட்சியின் நடைமுறை அரசியல் நடவடிக்கைகளுக்கு இது தேவைதான். ஆனால், அதைவிட முக்கியமானவை, அந்த நாட்டின் வரலாற்றுச் சூழல்கள்தான். வரலாற்று சூழலே இந்த நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன.
கம்யூனிஸ்டுகளின் நடைமுறை அரசியல் தந்திரம் மற்றும் மற்ற கட்சிகளோடு இவர்களின் நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் ஜெர்மனி,பிரான்ஸ், ஸ்விஸ்,போலந்து பற்றி குறிப்பிடுகிறார்கள். அதோடு, தம் போதனையை மாற்ற இயலாத மாதிரியாக பயன்படுத்தக்கூடாது என்று மார்க்சும், எங்கெல்சும் கூறி வந்தார்கள்.ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் நிலவரம் பல்வேறு காரணங்களை பொறுத்து மாறும். அரசியல் ரீதியாக இயக்கவியல் சிந்தனையையும் சரியாக மதிப்பிடல் வேண்டும்.ஆனால், விஞ்ஞான கம்யூனிச தத்துவத்தின் முக்கியமான கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை உருவாக்கும் திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.
இவையெல்லாம் எந்த நாடாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் கடைபிடிக்க வேண்டிய பொதுவான கோட்பாடுகள். கம்யூனிஸ்டுகள், பாட்டாளி வர்க்கத்தின் உடனடி நோக்கங்களை, நலன்களை நிறைவேற்ற போராடுகிறார்கள். அதே சமயம், அது இறுதி லட்சியத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடாது. தடையாக இருக்கக்கூடாது. அப்படியில்லாவிடில், அந்த வெற்றிகள் எல்லாம் தற்காலிகமானவையாக இருக்கக்கூடும்.இந்த சமுதாய உறவுகளை, தனிச்சொத்துடைமையை அடிப்படையில் மாற்றி அமைத்தால்தான் தொழிலாளி வர்க்கம் சுதந்திரமாக வாழ தேவையான சூழ்நிலை உருவாகும்.
முதலாளித்துவ ஜனநாயக போராட்டத்தில், தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து புரட்சி செய்கிறது. நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ உறவுகளுக்கான போராட்டத்தில், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக போராட்டம் செய்கிறது. இந்த போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் துணையின்றி முதலாளித்துவம் செயல்பட முடியாது. இந்த போராட்டத்துக்குப் பின்னர் முதலாளித்துவம். தொழிலாளர் வர்க்கத்துக்கு ஜனநாயக உரிமைகளை வழங்கியிருக்கவேண்டும். ஆனால், இந்த வெற்றியும் உறவும் தற்காலிகமானது என்பதை தொழிலாளர் வர்க்கம் உணர்ந்துக் கொள்கிறது. எதிரி முதலாளித்துவம்தான் என்பதையும் உணர்ந்துக் கொள்கிறது. இதனை கண்டுகொண்ட முதலாளி வர்க்கம், தொழிலாளர் வர்க்கத்தை நசுக்குகிறது. அதன் அரசியல் உரிமைகளை பிடுங்குகிறது.
இந்த சமயத்தில், தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளுக்காக பாடுபடவேண்டும். முதலாளித்துவம் இன்னும் அதிகமாக, முன்னைக் காட்டிலும் அதிகமாக சுரண்டலையும் ஒடுக்குமுறையும் பிரயோகிக்கிறது. அதனால்தான், கம்யூனிஸ்டு கட்சி, “முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள தீராப் பகைமை குறித்து” தொழிலாளர்களுக்கு உணர்வூட்ட வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தொழிலாளர் வர்க்க நலன்களுக்காக இடையறாது போராடுபவர்கள். சமூக, அரசியல் அமைப்பு முறையை எதிர்த்து நடைபெறும் புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிப்பவர்கள் ஆவர்.”இந்த போராட்டத்தின் இறுதி லட்சியத்தை ஒரு நிமிடம் கூட மறக்காமல் இருப்பதால்தான், “சொத்துடைமை பிரச்சினையை தலையாயப் பிரச்சினையாக எல்லா இடங்களிலும் முன்னுக்குக் கொண்டு வருகிறார்கள்” – அதாவது சொத்துடைமை உறவுகளை மாற்றி பொதுவுடைமையை உறுதிபடுத்துவதுதான் உண்மையான விடுதலை மற்றும் சமத்துவம் என்பதை தோற்றுவிக்க முடியும்.
”அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள், கம்யூனிசப்புரட்சி வருகுதென்று, பாட்டாளிகள் தமது அடிமை சங்கிலியை தவிர இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கோ அனைத்து உலகும் இருக்கிறது” என்ற புரட்சிகர உத்வேகத்துடனும் லட்சியத்துடனும் அறிக்கை முடிவடைகிறது.
வேலையில்லா திண்டாட்டத்தின் அதிகரிப்பு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தின் தீர்க்கவியலா பிரச்சினையாக இருக்கிறது. பத்தில் ஒரு பங்கு மக்களிடம் மட்டுமே தனிச்சொத்து இருக்கக் காரணம் “பத்தில் ஒன்பது பங்கோனாரிடத்து அது இல்லாததுதான்”.
உலகத்தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!! என்ற அறைகூவலுடன் அறிக்கை முடிவடைகிறது. இந்த சிறு பிரசுரம் மிகப்பெரிய நூல் தொகுதிகளுக்கு சமமானது” என்று லெனின் சொல்கிறார். அப்படி அவர் சொல்வதற்கு எல்லா விதமான கூறுகளும், இந்த அறிக்கையில் இருக்கின்றன.




0 comments:
Post a Comment