Thursday, February 25, 2010

பப்பு டைம்ஸ்

(வீட்டுக்கருகில் இருந்த பஸ் ஸ்டாப் வரை சென்றபின் ஸ்கூட்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம்.)

ஆச்சி, என்னை இங்கேயே விட்டுடு, நானே நடந்து வீட்டுக்கு வந்துடுவேன், தனியா.

ரோட்-லாம் க்ராஸ் பண்ணனும். நீ பெரிய பொண்ணானதும் தனியா போலாம். இப்போ அம்மாக்கூடத்தான் போணும்.

நீ தூங்கும்போது நான் தனியா போலாமா?

சொல்லிட்டுதான் போணும். தூங்கிட்டு இருந்தாலும் எங்கே போறேன்னு சொல்லிட்டு போணும். செகண்ட் ஸ்டாண்டர்டு வந்தாதான் நீ தனியா போலாம். இப்போ அம்மாகூடதான் போணும்.

நீ தூங்கிட்டு இருக்கும்போது வடலூர் ஆயாக்கூட போலாமா?

ம்.வடலூர் ஆயாகூட போலாம். பெரியவங்க கூடல்லாம் போலாம்.

வடலூர் ஆயா மெதுவா நடப்பாங்களே. நீ தூங்கும்போது நானே கதவை திறந்துக்கிட்டு தனியா போலாமா?!

(வேணாம் பப்பு, வலிக்குது, அழுதுடுவேன்..அவ்வ்வ்வ்)

தனியா போனாலும் அம்மாக்கிட்டே சொல்லிட்டுதான் போணும். போய் கேட்டை தெறந்துவிடு. (நல்லவேளையா வீடு வந்துடுச்சு....)

பப்பு ஆயாவின் மருநது டப்பாவை தரமறுக்க நாலு திட்டு வாங்கிவிட்டு அழத் தொடங்கியிருந்தாள். “ஒரே அட்டகாசம், மருந்துலெல்லாம் விளையாடலாமா...#$#%#$ “ என்று நானும் பொறுப்பிஸ்ட் அவதாரம் எடுத்திருந்தேன். அழுகையை நிறுத்திவிட்டு சொன்னாள்,

அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?சில ?கள் :

ஏன் கல்யாணம் நடக்குது? ஏன் பாய்க்கும் கேர்லுக்கும் கல்யாணம் நடக்குது?

ஓல்ட் மெக்டோனால்டு ஃபார்ம்லே பாத்ரூம் இருக்குமா? (ரொம்ப முக்கியம்!!)

எனக்கு ஏன் றெக்கை இல்ல?

நம்ம உடம்புல எதை வெட்டினா வளரும்? (வீட்டுக்கருகில் இருந்த மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார்கள். கிளைகள் திரும்ப வளரும் என்ற சொல்லப்போக, இந்த கேள்வி முளைத்தது!)

Tuesday, February 23, 2010

இது முனிரத்தினத்தின் கதை (முத்துலெட்சுமியின் கதையும் தான்)

ராத்திரி மணி பத்தாகபோகுது....கதவு நாதாங்கியை தடதடன்னு தட்டுற சத்தம் கேக்குதே. 'யாரு'ன்னு சிஸ்டர் கேக்கறாங்களே. ஆமா, தினமும் சிஸ்டர் கேப்பாங்க. 'நாந்தான் சிஸ்டர்' -ன்னு குரல் வந்ததும், 'நாந்தான்னா யாருடி'-ன்னு கேக்கறாங்க. தினமும் கேக்கறதுதான். ' நாந்தான் சிஸ்டர் முனிரத்தினம்'-ன்னு சொல்றாங்களே..அவங்கதான் முனி அக்கா.இந்த ஹாஸ்டல்லேயே பத்துவருஷத்துக்கு மேலே இருக்கற ரொம்ப ரொம்ப சீனியர். நானும், லதாவும் இந்த ஹாஸ்டலுக்கு வந்து ஒரு மாசம் ஆகுது. இந்த ஹாஸ்டல் சின்னமலையில் இருக்கிற சிஸ்டர் கான்வெண்ட். ராத்திரி ஏழுமணிக்கு மேலே இரும்பு கேட்டை இழுத்து பூட்டிடுவாங்க. அதுக்கு அப்புறம் வர்றவங்க மேலே சொல்லியிருக்கற மாதிரி கதவை தட்டிக்கிட்டு சிஸ்டரைக் கூப்பிட்டுக்கிட்டு நிக்கணும். சிஸ்டர் பொறுமையா டிவி பார்க்கறதை நிறுத்திட்டு கொஞ்சநேரம் தட்டவிட்டுட்டு, சாவியை எடுத்துக்கிட்டு வந்து,இதோ இப்போ முனு அக்காவை கேட்ட மாதிரி, 'யாரு'ன்னு கேட்டப்புறம் நாலு திட்டு திட்டிட்டு திறப்பாங்க.


”என்னடி, தினமும் லேட்டு?”


“சாரி சிஸ்டர், ஆடிட்டிங்”


“என்னடி தினமும்...ஆடிட்டிங்..ஆடாதடிங்-ன்னுகிட்டு..உனக்கு என்னைக்குத்தான் ஆடிட்டிங் இல்லை?”
கையை பிசைஞ்சுக்கிட்டு முனி அக்கா பல்லைகாட்டிக்கிட்டு நிக்கறாங்க. மன்னித்த பாவத்துடன் சிஸ்டர், ‘ஓடு, சாப்பாடு எடுத்து வச்சிருக்காளா' என்றதும் ‘ம் சிஸ்டர்' ன்னு சொல்லிட்டு வேகமாக ரூமுக்கு போறாங்க.


முனி அக்கா எனக்கு எதிர் ரூம்லே இருக்காங்க. எனக்கும் லதாவுக்கும் ஒரே ரூம் கிடைக்கலை. பக்கத்து பக்கத்து ரூம். எதிர் ரூம்லே இருக்கற விஜி கூட அப்போதான் நாங்க ஃப்ரெண்ட் ஆகி இருந்தோம். அவங்க ரூம்லே பேசிக்கிட்டு இருந்தப்போ அங்கேருந்த கட்டில்லே உட்கார போனேன். உடனே விஜி, ‘ஐயோ அது முனி அக்கா பெட், அதுலே வேணாம், இதுதான் என் பெட், இதுலே உட்காருங்க'ன்னு சொன்னாங்க. ஏன், உக்காந்தா என்னன்னு கேட்டதும், 'அவங்களுக்கு எப்போ கோவம் வரும்னே சொல்ல முடியாது, டக்னு திட்டிடுவாங்க, அப்புறம் சண்டை போட்டு கத்திவுட்டுடுவாங்க' -ன்னு சொன்னாங்க. இந்த ஹாஸ்டலுக்கு வர்றவங்கல்லாம் பாஸிங் க்ளவுட்ஸ் மாதிரிதான். மிஞ்சி போனா ஒரு வருஷம்...அதுக்குள்ளே இன்னும் சில ப்ரெண்ட்ஸ் கூட சேந்து வீடு வாடகைக்கு பார்த்து போய்டுவாங்க..இல்லேன்னா கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுவாங்க. ரொம்ப நாளா இருக்கறவங்கன்னா ரெண்டு மூணு பேருதான்...லவ் பண்ணிட்டு வீட்டுலே சம்மதத்துக்காக அடம் பிடிச்சுக்கிட்டிருக்கவங்க இல்லேன்னா கல்யாணத்துக்காக காத்துக்கிட்டிருக்கவங்க. அதுலே ரெண்டாவது கேட்டகிரியாம் முனி அக்கா.முனி அக்கா எனக்கு சீக்கிரம் ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. ஒருநாள் மழை வந்தப்போ அவங்க புடவையை எடுத்து வச்சிருந்தேன், நனையாம. அப்புறம், ஒருநாள், அவங்களுக்கு ராத்திரி சாப்பாடு எடுத்து வைக்க அவங்க ரூம்லே யாருமில்லாதப்போ நானும் லதாவும் சாப்பாடு எடுத்து வைச்சிருந்தோம். அதுலேருந்து ஆபிஸுக்கு போகும்போது எங்களுக்கு ‘பை' சொல்லிட்டு போவாங்க. எனக்கு போன் வந்தா ஓடி வந்து கூப்பிடுவாங்க. ஆஃபிஸிலே வெள்ளிக்கிழமை பூஜையிருந்தா பழமும், தின்பண்டங்களும் கொண்டு வந்து தருவாங்க. எப்படின்னு தெரியலை, ஹெப்ஸியும், நானும் முனி அக்காவிற்கு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். ஆனா முனி அக்கா கொஞ்சம் சிடுசிடுதான். கோவம் எப்போ வரும்னு சொல்ல முடியாது. திடீர்னு யாரையாவது திட்டிடுவாங்க...சில்லி ரீசனாத்தான் இருக்கும். ஆனா யாரும் பதிலுக்கு முனி அக்காக்கிட்டே சண்டை போட மாட்டாங்க. ‘முனி அக்கா இப்படித்தான்' ன்னு எல்லோரும் ஏத்துக்கிட்ட மாதிரி அமைதியா போய்டுவாங்க. அதுவும் பாதிபேர் முனி அக்காக்கிட்டே இப்படி பயந்துக்கிட்டு பேசவே மாட்டாங்க.முனி அக்கா, எத்திராஜ்-லேயோ ஸ்டெல்லாமேரிஸ்-லேயோ பிகாம் படிச்சாங்களாம். இருபத்தியொரு வயசுலே வேலைக்காக வந்தாங்களாம். இந்த ஹாஸ்டல்லே பனிரெண்டு வருஷமா இருக்காங்களாம். ஆரம்பத்துலே சில சிட் பண்டு கம்பெனிகளில் சேர்ந்து தம்பியை படிக்க வைச்சு, அம்மா-
அப்பாவுக்கு பணம் அனுப்பி குடும்பத்தை கவனிச்சிருக்காங்க. ஒன்பது வருஷமா ஒரே ஆஃபிசுலே வேலை செய்றாங்களாம். பத்தாயிரத்துக்கிட்ட்டே சம்பளம் வருதாம். கல்யாணத்திற்கு பார்த்து எதுவும் சரியா அமையலை. தம்பி லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டாராம். அம்மா அப்பாவும் ரொம்ப வயசானவாங்களாம். எதையும் முயற்சி எடுத்து செய்ய யாரும் இல்லை, ஊர்லே இருக்கற சொந்தக்காரங்களும் பெரிசா உதவலை.


கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பமாக வாழணும்னு அக்காவுக்கு ஆசைதான். ஆனா, கல்யாணத்துக்கு அவங்ககிட்டே இருந்த வசதிகள் மட்டும் பத்தலை. அக்கா கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்சிருந்த பதினைஞ்சு பவுன் நகைங்களும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு திருப்தியாயில்ல. சரி, இன்னும் கொஞ்சம் சம்பாரிச்சுட்டு பார்த்துக்கலாம்னு வந்த ஒன்னு ரெண்டு மாப்பிள்ளைங்களையும்
தட்டிக்கழிச்சுட்டாங்களாம். அப்புறமா தேடினப்போ வந்தவங்கள்ளாம் ரெண்டாம்தாரத்துக்குத்தான் கேட்டாங்களாம். அக்காவுக்கு இஷ்டமில்லாததால் 'வேண்டாம்'னதும் , சொந்தக்காரங்க எந்த முயற்சியும் எடுக்கலை.முனி அக்காவும் அப்படியே ஹாஸ்டல்லேயே தங்கிட்டாங்க. இவங்களுக்கு அப்புறம் எத்தனையோ பேட்ச் பொண்ணுங்கல்லாம் வந்து, வேலை தேடி, பத்திரிக்கை கொடுத்து கல்யாணமாகி போயிருக்காங்க. ஹாஸ்டல்லே ஒரு வழக்கம். கல்யாணமானதும், ஜோடியா வந்து நட்புகளை கண்வருக்கு அறிமுகப்படுத்திட்டு சிஸ்டருக்கும், எல்லா ரூம்லே இருக்கறவங்களுக்கும் ஸ்வீட் கொடுத்துட்டு போறது. முனி அக்கா இதையெல்லாம் பார்க்க மட்டுமே செய்திருக்கிறார். முனி அக்காக்கிட்டே கல்யாணப் பத்திரிக்கை கொடுக்கறதுக்கு மட்டும் எல்லோருக்கும் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும். ஆனா முனி அக்கா அதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க. 'கண்டிப்பா வரேம்ப்பா' ன்னு சொல்லி வாங்கிக்குவாங்க. ஆனா போக மாட்டாங்க.

மாசம் ஒருதடவை ஊருக்கு போவாங்க. நார்த் மெட்ராஸ் தாண்டி ஏதோ ஒரு கிராமம். பஸ்ஸுலே இரண்டு மணிநேர பயணம். தம்பி குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் அல்லது துணிகள் வாங்கிச் செல்வார். வந்தபின், குழந்தைகள் இவரிடம் சொன்னதை விளையாடியதை சொல்லிக்கொண்டிருப்பார். முனி அக்காவிற்கு ரத்னா -ன்னு ஒரு ஃப்ரெண்ட். அந்த ஃப்ரெண்டோட அத்தை சைதாப்பேட்டையில் இருந்தாங்க. அவங்க ரிடையர்டு ஆன டீச்சர். அவங்க இப்போ தனியா இருந்ததால், முனி அக்காதான் அவங்களுக்கு துணை. அவங்களை டாக்டர்கிட்டே கூட்டிட்டு போறது, அவங்ககூட கடைக்குப் போறதுன்னு. முனி அக்காவிற்கு சென்னையில் இருந்த ஒரே உறவு அந்த டீச்சர் மட்டுமே. காலையிலே எட்டு மணிக்கு ஆபிஸ்...அதை விட்டால் ஹாஸ்டல்...சனிக்கிழமைதான் அக்காவுக்கு லீவு...லீவுவிட்டா அந்த டீச்சரின் வீடு. இதுதான் முனி அக்காவோட உலகம்.


எப்பவாவது, சுயஇரக்கமும், தனிமையும், எதிர்காலத்தைப் பத்தின பயஉணர்வும் மேலோங்கறப்ப ராத்திரி நேரங்கள்ல மட்டும் முனி அக்கா விரக்தியா தன்னோட மனநிலைய எங்ககிட்ட பகிர்ந்துப்பாங்க. அதுல 'நீங்களும் சீக்கிரம் கல்யாணமாகி போகப்போறவங்கதான்... நான் இதே ஹாஸ்டல்ல இப்ப மாதிரியே கிடந்து உழல போறேன்'னு ஒரு ஏமாற்றத் தொனி இருக்கும். நானும், ஹெப்ஸியும் சும்மா இருக்காம, 'பேப்பர்லே விளம்பரம் கொடுக்கலாம்க்கா,யாராவது உங்களுக்கேத்த மாதிரி இருப்பாங்க' -ன்னு முனி அக்காவை சம்மதிக்க வச்சு, 'தினமணி' - 'ஞாயிறுமணி'ல இலவச விளம்பர பகுதிக்கு எழுதி போட்டோம். அதைப் பார்த்துட்டு நாலு பதில்கள் வந்துச்சு.
அதுல ஒருத்தர் கோவைலேந்து - வயது 45 இருக்கும். வேலை எதுவும் இல்லை. கல்யாணத்துக்கு அப்புறமா வேலைக்கு முயற்சிப்பாறாம். ஆனா, அக்கா கண்டிப்பா வேலைக்கு போகணுமாம். ரெண்டாவது ஆளு - செங்கல்பட்டுலேந்து - அவருக்கு கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்க. மனைவி இல்ல. வயசு 50க்கு மேல. மூணாவது - நாமக்கல். வயசு 49. இவருக்கும் அக்கா ரெண்டாம் தாரமம வேணுமாம். வேலை ம்ஹும். கல்யாணத்துக்கு அப்புறமா சென்னைக்கு வந்துடறாராம். நாலாவதும் இந்த மாதிரியே ஒருத்தர். சரியா நினைவுல இல்ல...


முனி அக்காவுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு. அவசரகதில ஓடிட்டு இருக்கற தன்னோட வாழ்க்கைல ஒரு மாற்றம் வேணும்னுதான் அக்கா கல்யாணத்துக்கே சம்மதிச்சாங்க.
' இதையெல்லாம் நம்பி எப்படி கல்யாணம் பண்ணிக்கறது' னு தூக்கிபோட்டுட்டாங்க. இப்பதான் ஒரு திருமணத்துக்கு திருமண ஏற்பாட்டாளர்கள் அப்படீங்கற தொழில் செய்யறவங்களோட அவசியம் புரிஞ்சுது. அது அதிர்ச்சியாவும் இருந்தது. அதைவிட பேரதிர்ச்சி, பதிலளிச்சவங்க எல்லாருமே முனி அக்காவோட வேலைய முன்வைசே காயை நகர்த்தியிருந்தது. இதுக்கு அப்புறம் கொஞ்ச நாள்ல ஹாஸ்டல் புதுப்பித்தல் காரணமா ஆளுக்கொரு பக்கம் பறந்துட்டோம். என்னைக்காவது முனி அக்கா தொலைபேசுவதோட சரி.இப்பவும், முனி அக்கா அதே ஹாஸ்டல்ல அதே ரூம்லதான் வசிக்கிறாங்க. அந்த டீச்சருக்கு கேன்சர் வந்து ஆபரேஷன் நடந்திருக்கு. லீவு நாட்கள்ல அவங்களுக்கு துணையாக அக்கா இருக்காங்க.


அக்காவ பத்தி நினைக்கறப்ப எல்லாம், 78 வயசுல தன் வயசுல பாதி இருக்கறவங்களை கல்யாணம் செஞ்சுகிட்டு வாழ்ந்து, மறைஞ்சு போன ஜெமினி கணேசன் ஏனோ நினைவுக்கு வந்துகிட்டே இருக்காரு.


இடுகையின் கடைசியில் பேச்சு வழக்குக்கு மாற்றி தந்த பைத்தியக்காரன் அவர்களுக்கு நன்றிகள்!


Monday, February 22, 2010

Going Bananas

அருவியின் தளத்தை பராமரிக்கும் உமா மகேஸ்வரன் அவர்கள் அருவியின் குழந்தைகளுக்கான வீட்டுக்கல்வி புத்தகங்கள் இடுகையின் வாயிலாக தொடர்பு கொண்டார். அவரிடம் அருவியின் முதல் ("நாய் வால்") மற்றும் இரண்டாம் நிலை ("முயல்குட்டியும் போலீசுகாரரும்") மெல்லக் கற்போம் புத்தகங்களின் சில பிரதிகள் உள்ளன.

அருவி புத்தகங்களைப் பெற அவரது மின்னஞ்சல் முகவரி aruvibooks@gmail.com.
அவரது, பெங்களூர் முகவரியை அருவியின் இந்தப் பக்கத்திலும் காணலாம்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் மூன்றாம் ("சுண்டெலிக் கதைகள்") மற்றும் நான்காம் ("முதலைக் கதைகள்") நிலை புத்தகங்களும் அவரிடம் கிடைக்கப் பெறலாம்.
"கீழே பாரு"

பார்த்தேன்.

"மேலே பாரு"

பார்த்தேன்

"அந்த சைட் பாரு"

பார்த்தேன்.

"இந்த சைட் பாரு"

பாத்தேன்.

"தலையை சொறி."

சொறிந்தேன்.

"நீ மங்க்கி"!

பப்பு புதிதாக பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்திருக்கும் விளையாட்டு.
தலை சொறிவதைத் தொடர்ந்து, பனானா சாப்பிடு, மரத்துலே ஏறு என்று கட்டளைகள் பெற்று
'மங்க்கி'யாக மாறிக் கொண்டிருந்தேன்.


'இப்போ நீ என்னை சொல்லு' என்று சொன்னதைத் தொடர்ந்து நானும் 'பனானா சாப்பிடு' என்று சொன்னதும் 'நான் உன் ஃப்ரெண்டு இருக்க மாட்டேன்." என்று மிகவும் கோபித்துக்கொண்டாள். (எந்த ஜோதிட சிகாமணியாலும் அறிய முடியாத ரகசியம் - பப்பு எதற்கெல்லாம் எப்போதெல்லாம் என் ப்ரெண்டாக இருக்க மாட்டாள் என்பதும் 'நான் எப்போவும் உன் ப்ரெண்டே இருப்பேன், யார் ஃப்ரெண்டும் இருக்க மாட்டேன்' என்பதும்!

அவளை 'கேரட் சாப்பிடு' என்றும் 'தும்பிக்கையாலே தண்ணி குடி' என்றும் சொன்ன பிறகே சமாதானமானாள்.

G(r)oing Bananas!

Sunday, February 21, 2010

ஐ ஃபார் ...

...ஐடிகார்ட்!

ஸ்கூல்லே காலேஜ்லே கொடுப்பார்களே - லாமினேட் பண்ணின ஐடிகார்டு. அது இல்லீங்க...இது வேற! பட்டையா இல்லேன்னா உருண்டையாக பஞ்சு மாதிரி கயிறுலே கம்பெனி பேரு எழுதி கழுத்திலே போட்டிருப்பாங்களே..அந்த ஐடி கார்ட்!

கொஞ்சம் பட்டையான கயிறு, அதில் எழுத்துகள் அழிஞ்ச மாதிரி எழுதி இருந்தா - டிசிஎஸ். உருட்டிய கயிறாக இருந்தால் அது சிடிஎஸ். கொஞ்சம் பெரிய பட்டையாக இருந்தால் பொலாரிசிஸ். இப்படி எழுத்துகள் சரியா தெரியாவிட்டாலும், ஐடி கார்டு தொங்கும் கழுத்துகளை பார்த்தே கண்டு பிடித்துக்கொண்டிருப்போம் , நானும் லதாவும். எங்கே? பஸ் ஸ்டாப்பிலேதான்.

இந்த ஐடி கார்டு போட்டவர்கள் பஸ் ஸ்டாப்பை விட்டு தள்ளி நிப்பார்கள், அவர்கள் கம்பெனி பஸ்ஸுக்காக. கையிலே டப்பர்வேர். சிலர் கையில் ஃபைல் இல்லேன்னா டோராவோட பேக்பேக். 'காக்கா வாயிலே வடை ' கண்ட நரியாக நாங்களும் ஐடி கார்டையும் வால்வோ பஸ்ஸையும் பார்ப்போம். ஆனால், ரெசஷனில் கிடைத்ததோ சென்ட்ரல் கவர்ன்மெட் ப்ராஜக்ட் அசிசிஸ்டெண்ட் வேலை. அதில் கிடைத்த ஐடி கார்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு பர்ஸுக்குள் வைத்துக்கொண்டோம். அதுவோ, ஸ்கூல் பசங்க ஐடி கார்டே பரவாயில்லை என்பது போல இருந்தது! எங்கள் ஸ்டாம்ப் சைஸ் ஃபோட்டோவை ஒட்டி அதில் எந்த டிபார்ட்மெண்ட், சயிண்டிஸ்ட். இன்.சார்ஜ் கையெழுத்து/கைட் கையெழுத்து, அப்புறம் அட்மின் பொறுப்பாளரின் ஐடிகார்டு, பத்தாததற்கு எங்களின் கையெழுத்து! இதை யாருக்காவது கழுத்தில் மாட்டிக்கொள்ள ஆசை வருமா?! (அப்படிப்பட்ட ஐடி கார்ட் சுமந்து இண்ட்டெலிஜென்ட் சிஸ்டம் கோட் அடிச்சத்து தனிக் காவியம்! )

காலேஜுலே கான்வெகேஷனுக்கு வந்த சீனியர்ஸ் நிறைய கதை சொல்லி போயிருந்தார்கள். அடுத்த மாசம் நான் யூஎஸ் போறேன், எங்க ப்ராஜக்ட் அப்படி, இப்படி -ன்னு. மறக்காம சொல்றது, 'ப்ராஜக்ட்க்கு வரும்போது உன்னோட ரெஸ்யூம் அனுப்பு'ன்னு விசிட்டிங் கார்டு கொடுப்பாங்க. அப்படி கொடுக்கும்போது அவங்க பையிலே இருக்கற ஐடி கார்டும் எங்க கண்லே படும். அதையும் ஒரு பார்வை பார்த்துட்டு, எப்படியும் நாமளும் யூ எஸ் போகப்போறோம்னு இமெயில் ஐடி கூட நாங்க usa.net லே வைச்சிருந்தேன். எங்க பிசிஏ பேட்சே அப்புறம் usa.net க்கு மாறினது பொறுக்காம அந்த சர்வரே படுத்துடுச்சு, கொஞ்ச நாள்லே.

அதை விடுங்க, ஐடி கார்டு விஷயத்துக்கு வருவோம். எப்படியாவது, ஒரு ஐடி கார்டு பாக்கியம் கிடைக்கணும்னு சென்னையிலே இருக்கற ஒரு கம்பெனி விடாம நாங்க ரெஸ்யூம் கொடுத்து முடிச்சிருந்தோம். ரொம்ப காலத்துக்கு முன்னாடி ஒரு மெயில் பார்வர்டு இருந்தது - excel ஃபைல்லே சகட்டுமேனிக்கு எல்லா கம்பெனிகளின் HR மெயில் ஐடி, கன்சடல்ன்ஸி ஐடி எல்லாம் இருக்கும். அது வழிவ்ழியா சுத்தி எப்படியாவது ப்ரெஷர்ஸ் கையிலே கண்டிப்பா மாட்டிக்கும். அப்போ ஃப்ரெஷ்ர்ஸுக்கு உதவ சேத்தனாஸ் -ன்னு ஒரு க்ரூப்பே இருந்தது. சேத்தனா - அவங்க எத்தனை பேரு லைஃப்லே ட்யூப்லைட்
போட்டு பொட்டு வைச்சிருக்காங்கன்னு தெரியாது...ஆனா, தினமும் சேத்தனாக்கு நன்றி சொல்லி மெயில் வந்துக்கிட்டிருக்கும். தினமும், எங்கே வேலை காலி, ஃப்ரெஷ்ர்ஸ் எங்கே தேவைன்னு அருமையா கடமையா அனுப்புவாங்க. இப்படி சேத்தனா புண்ணியத்துலே எங்க ரெஸ்யூம் எல்லா கம்பெனி டேட்டாபேஸிலேயும் இருந்தது. ஆனா, யாரும் கூப்பிடத்தான் இல்லை.

ஒரு சில ஐடிக்கு CV அனுப்பினதும் உடனே ரிப்ளை வரும். அது தானியங்கி மறுமொழிதான். ஆனா அதுக்கே அன்னைக்கு ராத்திரி கலர் கலர் கனவா வரும். ஐடி கார்டை மாட்டிக்கிட்டு டப்பர்வேர் வச்சிக்கிட்டு பஸ்ஸுக்கு நிக்கற மாதிரி எல்லாம்! ஆனா , அந்த தானியங்கி மறுமொழிக்கு அப்புறம் எந்த மெயிலும் வராது. குறைஞ்சது - 2+ வருட முன் அனுபவம் இருக்கணுமாமே! ஆறு மாசம் எக்ஸ்பிரியன்ஸ் வைச்சிருக்க நாங்க எங்கே....

அப்போ வொர்க்கிங் உமன்ஸ் விடுதியிலே தங்கியிருந்தோம். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை நானும் லதாவும் அழுக்குத் துணியை மூட்டை கட்டிக்கிட்டு ஆம்பூருக்கு போய்டுவோம். 'வரோம்'னு பெரிம்மாவுக்கு மெசேஜ் அனுப்பினா போதும் (மறக்க முடியுமா....Nokia 3210) . சப்பாத்தியும் சிக்கன் க்ரேவியும் செஞ்சு வைச்சுக்கிட்டு பெரிம்மா காத்துக்கிட்டு இருப்பாங்க. ம்ம்ம்ம்....ஓக்கே என்ன சொல்ல வந்தேன்...சென்னை டூ ஜோலார்பேட்டுக்கு லிங்க்-ன்னு ஒரு ட்ரெயின் இருக்கும். சென்னையிலேருந்து சாயங்காலம் 5.50 க்கு கிளம்பி 9.45 க்கு எங்க ஊரிலே நிக்கும். துரித கட்டை வண்டி.

அதுலே எங்க கண்லே படறவங்க எல்லாம் கழுத்துலே இந்த ஐடி கார்டோடவே வந்திருப்பாங்க. என்னவோ அதை கழட்டத்தான் நேரம் இல்லாத மாதிரி. ' ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலே நாங்களும் சேருவோம். அப்போ ஐடியோடவே நாங்களும் வீட்டுக்கு போய் இது மாதிரி சீன் போடல... எங்க பேரை...யானைக்கு தும்பிக்கைன்னா மனுஷனுக்கு நம்பிக்கை' அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சுப்போம். ட்ரெயின்லே ஏறி உட்கார்ந்தபின்னும் அதை கழட்ட மாட்டாங்க. ஆனா, அதுலேயும் ஒரு நல்லது இருந்தது. ஏன்னா, நாங்க போய் அவங்க வசிக்கற ப்லாட்பார்ம், ஏரியா (domain) வெல்லாம் விசாரிக்கறதுலே அவங்க விசிட்டிங் கார்டை (அதை பிசினஸ் கார்டுன்னு சொல்லனுமாம்) கொடுத்து சிவி அனுப்ப சொல்லுவாங்க. திங்கட்கிழமை அவங்க ஆபிஸ்லே போய் நிக்கறாங்களோ இல்லையோ..அதுக்கு முன்னாடி அவங்க மெயில் பாக்ஸை எங்க சிவி போய் தட்டிக்கிட்டிருக்கும். பலனென்னவோ பூஜ்யம்தான்.

கடைசிலே, நந்தனத்துலே இருந்த ஒரு சாஃப்ட்வேர் கம்பெனிலே நானும் அடையாரிலே லதாவும் செட்டில் ஆனோம். ஐடிகார்டும் கைக்கு வந்தாச்சு.நேவி ஃப்லூ கயிறு. அதுலே என்னோட ஃபோட்டோ போட்டு எம்ப்லாயி கோட் , ப்ளட் க்ரூப் எல்லாம் இருந்தது. தாலிக்கு தமிழ்சினிமாவிலே கொடுக்கற மரியாதைதான்..கண்ணுலே ஒத்திக்காத குறை. கூடவே வந்தது - விசிட்டிங் கார்டு..ச்சே..பிசின்ஸ் கார்டு. ஆனா, அதை எங்கே கொடுக்கறதுன்னு தெரியாம (கடைசிலே ஏதோ லோன் வாங்கதான் யூஸ் ஆச்சு!) முழிச்சுக்கிட்டு இருந்தப்போ பெரிம்மாவும், அம்மாவும் ஆளுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிட்டாங்க. மீதி இருந்ததை ஸ்டெல்லா( ஜூனியர்) எடுத்துக்கிட்டா. அநேகமா எல்லா ஜூனியர்ஸ் கைக்கும் போயிருக்கும். ஒரு மாசத்துலே இன்னொரு பேட்ச் பிசினஸ் கார்டு அப்ளை பண்ணது நானாத்தான் இருப்பேன். HR -ஏ ஆடிப்போய்ட்டாங்க! பெரிம்மாஅதை எங்க ஸ்கூல்லே போய் என்னோட டீச்சர்ஸ்கிட்டே காட்டி என் அருமை பெருமையை ரெண்டு இன்ச் உயர்த்தினாங்க. அவங்க பையிலே எப்போவும் அவரசத்துக்கு உதவும் ரேஞ்சுலே ஒரு பதினைஞ்சு கார்டு இருக்கும்னா பார்த்துக்கோங்களேன்.

அந்த கம்பெனியை விட்டு வரும்போது ஆக்சஸ் கார்டை மட்டும் கொடுத்துட்டு, அந்த ஐடிகார்டை HR - கிட்டே கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்.

'எந்த கம்பெனியிலேயும் ரெண்டு வருசத்துக்கு மேலே இருக்கக் கூடாது, தாவிக்கிட்டே இருக்கணும்' - ன்னு ஒரு உன்னத நோக்கத்தோடதான் வேலைக்கு போகவே ஆரம்பிச்சோம். ' ஏன்னா அப்போதான் ஸ்டேக்னண்ட் ஆக மாட்டோம்'னு ஒரு காரணம் வேற. அதன்படி - அடுத்த ரெண்டாவது வருசத்துலே பெங்களூர் தாவல். அங்கேயும் ஒரு ஐடி கார்டு - போன தடவை இருந்த பரவசம் இங்கே மிஸ்ஸிங். ஆனா ஏதோ கலெக்‌ஷன் மாதிரி அந்த விசிட்டிங் கார்ட் மட்டும் சேர்ந்துகிட்டு இருந்தது. அதுலே ஒரு செட்டை என் தம்பி சீட்டு கட்டாவும், பப்பு இப்போ ஏபிசிடி விளையாடவும் எடுத்துகிட்டாங்க.

பெங்களூர்லே ஆட்டோக்காரங்க கடமைன்னா காட்பாடியா இருப்பாங்க.சாயங்காலம் ஆறுமணிக்கு மேலே ஐந்து நிமிஷம் ஆகி இருந்தாலும் ஒன் அண்ட் அ ஹாஃப்-ன்னு சொல்லுவாங்க. அதாவது ஒன்றரை பங்கு சார்ஜ். அதனாலே நானும் கலைவாணியும் ஐடி கார்டை கழட்டி பைக்குள்ளே வச்சிக்கிட்டு ஆட்டோக்காரர்கிட்டே பேரம் பேசுவோம். அப்போதான் ஐடிகார்டு மேலே இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமா குறைந்திருக்கணும்னு நினைக்கறேன். சரி, பெங்களுரை நாம முன்னேத்தினது போதும், இனி சிங்காரச் சென்னைக்குத்தான் என் சேவைன்னு முடிவு செஞ்சு இங்கே வந்து சேர்ந்தப்புறம் - கொஞ்ச நாள் வரைக்கும் ஐடி கார்டை மேலே மோகம் இருந்துக்கிட்டு தான் இருந்தது. ஆனா, ஆட்டோவிலே போகணும்னா மட்டும் அதை மறைச்சு பைக்குள்ளே வச்சிக்கிறதுன்னு போய்ட்டு இருந்தப்போதான் ஒரு நாள் ஹெச் ஆர்கிட்டே இருந்து மெயில் ஒன்னு வந்தது - அதாகப்பட்டது, ஐடி கார்டு தொலைந்தால் ரூபாய் 250 கொடுத்தால் புதிது வாங்கிக்கணும்! அதுக்கு ரெண்டு நாள் முன்னேதான் கிளிப்லேருந்து என்னோட ஐடிகார்டு கழண்டு நல்ல வேளையா ஸ்கூட்டிலேயே விழுந்திருந்தது. 'எதுக்குடா வம்புன்னு' அப்போ கைப்பைக்குள்ளே போட்டதுதான்.

க்ளிப் டைப் ஐடி கார்டு வந்தப்பறம் பழைய ஐடி கார்டோட மகிமை இல்லை. ஆனாலும், ஐடி கார்டு மாட்டின கழுத்தை எங்கேயாவது பார்க்க நேர்ந்தா மட்டும் லேசான கொசுவத்தி மட்டும். ஏன்னா, ‘ஐடி கார்டைவிட ஏடிஎம் கார்டுதான் முக்கியம்'னு லைஃப் உணர்த்தினதாலே கூட இருக்கலாம். (நல்லாத்தானே போய்கிட்டிருந்தது எதுக்கு இந்த பஞ்ச் -ன்னு கேக்கறீங்களா...ஹிஹி..எல்லாம் நெஞ்சை பஞ்சாக்கி பஞ்சை பஞ்சராக்கும் கலைதான்!)

பைதிவே, நேத்து ஒரு கால். என்னோட பிசினஸ் கார்டை வாங்கின அதே ஸ்டெல்லா-கிட்டேருந்து.... 'ஹேய், முல்லை எனக்கு ஒரு வேலை வாங்கித்தாயேன்னு'! (இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது!!)

“பையனுக்கு ஐஞ்சு வயசாகிடுச்சு..வீட்டுலே இருந்து பார்த்துக்க வேணாம். எல்லோரும் வேலைக்கு போறத பார்த்தா எனக்கும் ஆசையா இருக்கு, ப்லீஸ், ஒரு வேலை வாங்கி கொடு முல்லை-ன்னு ஒரே அழுகை! அதுலே சுத்த ஆரம்பிச்ச கொசுவத்திதான்! என்ன பண்றது...நானும் ஐ ஃபார் ஐம்பது காசு, ஐ லவ் யூ, ஐஸ் ஐஸ்-ன்னு சிலபல க்ளிசரின் முயற்சியை வச்சிருந்தேன். என்னையும் மீறி இந்த பஞ்சராக்கும் இடுகை வந்துடுச்சு...நண்பர்களே மன்னிப்பீர்களாக! :-)

Friday, February 19, 2010

மணநாள் வாழ்த்துகள் மைஃபிரண்ட்!!


இன்று மணவிழா காணும் மணமக்கள் "மை ஃபிரண்ட் அனு & விஜயகுமார்" அவர்களுக்கு வாழ்த்துகள்!!


மை ஃபிரண்ட்-க்காக சிறப்பு கவிதை!


நீயோ மை ஃபிரண்ட்!
நாங்கள் உன் ஃப்ரண்ட்!!
நினைச்சு பார்த்தா
எல்லோரும் ஃபிரண்ட்!!!
வாழ்த்துகிறோம்
வாழ்க்கை எப்போதும்

உன்
பெஸ்ட் ஃபிரண்ட்!!!!

Thursday, February 18, 2010

ஜூரம் வந்த குட்டீசை கவனித்துக் கொள்ள 101 வழிகள்

மூக்கு ஒழுக ஆரம்பிக்கும்போது கண்டுக்கொள்ளக் கூடாது.

அடுத்தநாள், தூதுவளை கொடுத்துவிட்டு 'சரியா போய்டும்' என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.

சளியிலிருந்து க்ரோசின் கொடுக்க வேண்டிய அளவு உடல் சூடாகும். இரண்டு முறை க்ரோசின் கொடுக்க வேண்டும் - நான்கு மணிநேர இடைவெளிகளில்!

'தண்ணியிலே ஏன் விளையாட விடறே..." என்றும்
'மிட்டாய், க்ரீம் பிஸ்கெட் வாங்கி கொடுக்காம இருக்கறது' என்றும் சண்டையிட வேண்டும்.

'கை கழுவாம எதையும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா' என்றும்
'ஸ்கூல்ல உன் பாட்டில்ல இருக்கற தண்ணியைதான் குடிக்கணும், சரியா' என்று மிரட்ட வேண்டும்.

'சாயங்காலமானா கதவை சாத்த வேண்டியதுதானே' என்று மாறி மாறி (கொசுவாக) கடித்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட சண்டை அனைத்தும் ஹாஸ்பிடலில் டாக்டருக்கு காத்திருக்கும்போது நிகழ்த்த வேண்டும்.

அரை-அரை நாளாக விடுப்பு எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் லீவு எடுக்க முடியாத நிலை வரும்போது - பொறுப்பான, சுயமரியாதை உள்ள, தன்னம்பிக்கையான, நார்மல் மனநிலை கொண்டவர் எப்படி நடந்துக் கொள்வாரோ அப்படி நடந்துக் கொள்ள வேண்டும்!

"பெரிம்மா, எப்போ வர்றீங்க? நாலு நாளா பப்புவுக்கு உடம்பு சரியில்லை,ஜூரம்"

"அம்மா, எப்போ வர்றீங்க?நாலு நாளா பப்புவுக்கு உடம்பு சரியில்லை,ஜூரம்"

- என்று போனுக்கு மறுமுனையில் இருப்பவர்களை கிறுகிறுக்க வைக்க வேண்டும்.

அப்புறம், அவர்கள் அடுத்த பஸ்ஸை பிடித்து வந்திறங்கியதும், அலுவலகம் வந்து ப்லாக் அடிக்க வேண்டும்.

Wednesday, February 17, 2010

Alternative Schools 'n' Mainstream Schools

பப்புவின் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு சென்றிருந்தோம். அருகில் அமர்ந்தவர்களிடம் 'யாருடைய பெற்றோர்' என்ற அறிமுகத்திற்குப் பிறகு சகஜமாக பேசிக்கொண்டிருந்தோம். விழா ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்தன. எங்களுக்கு பின்னாலிருந்த வரிசையில் அமர்ந்திருந்தவர்களும் அதே அலைவரிசையை தொடர்ந்தார்கள். அப்போது சும்மா இருந்த என் காதை அங்கே விட்டு வைத்தேன். அதிலொருவர் சொன்னார்,

"நான் அடுத்த வருஷத்து அட்மிஷன் போட்டுட்டேன்,சார். வேளச்சேரியில் இருக்கே...XYZ. அந்த ரெயில்வே ஸ்டேஷன் இருக்கு இல்லீங்களா..அதே ரோடுலேதான் இருக்கு. இப்போ ரெண்டு வருஷமாதான் ஆரம்பிச்சிருக்காங்க...ஆனா என்ன, போகட்டும்னு போட்டுட்டேன் சார். ஆறு மாசமா என் பையன் (ஏதோ சொன்னார், புரியவில்லை) அதையே தான் படிச்சிட்டிருக்கான்” என்றார். அவர் சொன்ன பள்ளிக்கு நகரெங்கும் கிளைகள் இருக்கிறது. சொல்லப்போனால், நானும் கூட அடுத்த வருடம் அங்கு போட்டுவிடலாமென்று எண்ணித்தான் பப்புவை சென்ற வருடம் ப்ரீ-கேஜி சேர்த்தேன். ஆனால், பப்புவுக்கு இந்த பள்ளி பிடித்திருக்கிறதென்பதால் - நாங்களும் பள்ளியின் பாடங்கற்பிக்கும் முறையில் - செயல்பாடுகளில் திருப்தியடைந்திருப்பதால் - தற்போதைய பள்ளியிலேயே தொடர முடிவு செய்திருக்கிறோம். மேலும் மற்ற பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதமும் கலக்கமுற செய்தது.

ஆனால், எங்களுக்குள்ளும் கேள்விகள் வராமலில்லை.பப்புவின் படிப்பு குறித்து கேட்கும் யாவரும் என்னிடம் எழுப்பும் கேள்வி இது. "இப்போ ஓக்கே,மெயின்ஸ்ட்ரீம்லே வரும்போது ஓக்கேவா? அந்த சிலபஸ்லேர்ந்து மேல்படிப்புக்கு வரும்போது இது சரியா இருக்குமா, காம்பீட் பண்ண முடியுமா?


ஏனெனில், எந்த பாடப்பிரிவில் படித்தாலும், உயர்கல்விக்கு செல்லும்போது பெரும்பாலும் ஸ்டேட்போர்ட்க்கே மாற வேண்டி உள்ளது. நாம் அரசு பள்ளிகளிலும் மாநகராட்சி பள்ளிகளிலும் படித்து வந்திருந்தாலும் எத்தனை பேர் நமது பிள்ளைகளை அங்கு சேர்ப்போம். ( கண்டிப்பாக அங்கே சேர்ப்பதில்லை என்பதில் தனிகவனம் எடுத்துக் கொள்கிறோம். ) பெரும்பாலும், தனியார் பள்ளிகளில்தானே சேர்க்கிறோம். மெட்ரிக் பள்ளிகளை விரும்புமளவு அரசு பள்ளிகளை யாரும் விரும்புவதில்லை. (அரசு பள்ளிகளில் முதலில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதே ஒரு தனி டாபிக்!)

பக்கத்துவீட்டு மோனேஷ். ஐந்து வயதாகிறது. ஐந்து வயதுக்கு அவன் எவ்வளவு விளையாடவேண்டும். என்ன ஆட்டம் போட வேண்டும். கற்பனைகளும் கிண்டல்களும் கொப்பளிக்கும் அவனிடம். எந்த கேட் அல்லது சுவராக இருந்தாலும் நொடியில் ஏறி நிற்பான். பள்ளியிலிருந்து நான்கு மணிக்கு வந்தால் படுத்து தூங்கிவிட்டு ஆறு அல்லது ஏழு மணிக்கு எழுத ஆரம்பிப்பான். எழுதுவான்...எழுதிக்கொண்டே இருப்பான். பின்னர், கதைகளை மனப்பாடம் செய்வான். சனி-ஞாயிறுகளில் இந்தி ட்யூஷன். என்றைக்காவது ஞாயிறு மாலைவேளைகளில் கால்பந்துடன் அவனை காணலாம். ஐந்து வயது சிறுவன் - என்ன எழுதுகிறானென்றே தெரியாமல், டீச்சர் திட்டுவார் அல்லது முட்டியில் அடிப்பாரென்று பயத்தில் எழுதுவது என்ன கல்விமுறை? வகுப்பில் எழுந்து சொல்ல வேண்டுமென்று கதையை ‘ஸ்டோரி டெல்லிங்” என்ற பெயரில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது - மனப்பாடம் செய்யும் ஆற்றலை வேண்டுமானால் வளர்க்கலாம். ஆனால், யோசிக்கும் திறனை...கற்பனையை...தனித்துவத்தை வளர்த்தெடுப்பதில்? மேலும் பள்ளிகள் உருவாக்கும் மன அழுத்தங்கள்!!

மெட்ரிக்கும் ஸ்டேட் போர்டும் படித்து நீ உயரவில்லையா என்றும் கேட்கலாம். ஆனால், நாங்கள் கற்ற அந்தக் கல்வி - புதிதாக எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்ததை உபயோகிக்கக் கூடிய அறிவை மட்டுமே தந்திருக்கிறது.மனப்பாடம் செய்தோ அல்லது ஆசிரியர் குறித்து தரும் பகுதிகளை மட்டுமே படித்தோ அல்லது இந்த கேள்விகளுக்கான விடைகளை மட்டுமே படித்தால் போதுமென்ற கல்விமுறையை விட யோசிக்க வைக்க்கும் அல்லது தேடலுக்கான உத்வேகத்தை தரும் கல்விமுறை எத்தனை பேருக்கு வாய்க்கிறது? ஐம்பது பேருக்கு ஒரு ஆசிரியர் என்பதே இப்போது நடைமுறையில் இருக்கிறது. . மாணவரை புரிந்துக்கொண்டு அவருக்கேற்ற கல்வியை தரும், மாணவரை நன்கு புரிந்துக்கொண்டு மதிப்பிடும் முறை, மாணவர்-ஆசிரியர் உறவு எத்தனை பள்ளிகளில் இருக்கிறது? கீதாவால் இத்தனை மதிப்பெண் எடுக்க முடிந்தால் உன்னாலும் அதே மதிப்பெண்ணும் எடுக்க முடிய வேண்டுமே என்றுதான் சொல்லப்படுகிறதேயொழிய ஏன் அதே போல் எனக்கும் எடுக்க முடியவில்லை என்பது பற்றி எவரும் கவலை கொள்வதில்லை. கீதாவுக்கு பிடித்திருக்கும் பாடம் எனக்கும் பிடித்திருக்க வேண்டுமென்றுதானே எதிர்பார்க்கிறது நமது கல்விமுறை. இதற்கு, முதலில் சொல்லியிருக்கும் அந்த பெற்றோரின் கண்ணோட்டத்தையே எடுத்துக்காட்டாக காணலாம். விரைவில் தனது பிள்ளை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதானே எதிர்பார்க்கிறார்.

ஸ்டேட் போர்ட் சிலபஸ் - இது மிகவும் எளிது. எல்லா அரசு பள்ளிகளும் பின்பற்றுவது.

மெட்ரிக் - ஸ்டேட் போர்டை விட கொஞ்சம் கடினம், ஆனால் CBSE படித்துவிட்டு வருபவர்களுக்கு மிக எளிது

CBSE - செண்ட்ரல் போர்ட் சிலபஸ்.மெட்ரிக்கைவிட கடினம். மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் பின்பற்றுவது. (இதுலே படிச்சா, 'ஐஐடி
எண்ட்ரன்ஸ் ஈசி' என்பது வரையே எனது புரிதல்)


ICSE - இண்டர்நேஷனல் சிலபஸ். (இவை NRI -களையே மனதில் வைத்து ஆரம்பிக்கப்படுகின்றன என்பது போல தோன்றும்.)

இவை தவிர, ஹோம் ஸ்கூலிங். ஆனால் எத்தனை பேர் அதில் படிக்கிறார்களென்று தெரியவில்லை. படிப்பை பாதியில் நிறுத்தியிருந்தாலும் நேரடியாக எட்டாம் வகுப்பு எழுதிவிட்டு, மேற்படிப்புக்கு திறந்தவெளி பல்கலையில் சேரலாம். எட்டாம் வகுப்பு படித்தவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக +2 எழுதிவிட்டு கல்லூரிகளில்
சேரவும் வாய்ப்புள்ளது.

இவை தவிர, மாண்ட்டிசோரி பள்ளியும் அல்லது மாற்றுக்கல்வி நிறுவனங்களும் உள்ளன.

இந்த மாற்றுகல்வி நிறுவனங்கள்/மாண்ட்டிசோரி பள்ளிகள் ICSE திட்டத்தை பின்பற்றுகின்றன. மாற்றுகல்வி நிறுவனமாக சென்னையின் கிருஷ்ணமூர்த்தியின் The School- சொல்லலாம். அப்புறம் புகழ்பெற்ற ரிஷிவேலி.
பின்னர் நினைவுக்கு வருவது பில்லபாங்க்,அபாகஸ். பாண்டிச்சேரியின் ஆரோவில்லே. வேறு கல்விநிறுவனங்கள் இருந்தால் சொல்லுங்கள்.
ஆனால்,இந்த மாற்றுக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதும் பெருங்கஷ்டம். அப்படியே கிடைத்தாலும் கட்டணம் - நடுத்தர மக்களின் வசதிக்கு எட்டுவதாக இல்லை.


மாண்ட்டிசோரி/மாற்றுக்கல்வியில் அதற்கே உரித்தான நன்மைகளும் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரும்பாலும், இந்த பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் 1:20 என்ற விகிதத்திலேயே இருக்கிறார்கள். வகுப்பறையில் பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படித்த நண்பர் ஒருவர் எனக்குண்டு. அவர் சொல்லுவார், எந்த மனஅழுத்தங்களுமே இருக்காது, நமக்கு எது பிடித்தமோ அதை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளலாம். யோகா,நீச்சல், ஸ்கீயிங்,நுண்கலைகள் முதலியன் இதில் அடங்கும். வீட்டுப்பாட டென்ஷன்கள் எனபது அறவே இல்லை. இயற்கையோடு இணைந்த சுற்றுபுற சூழல்.எல்லாவற்றுக்கும் மேல் மற்றவர்களுடன் போட்டி என்பதே இல்லை.நேற்று நான் என்ன செய்தேனோ இன்று அதைவிட நன்றாக செய்ய வேண்டும்..என்னையே நான் வென்றெடுக்க வேண்டியிருந்ததே தவிர புற அழுத்தங்கள் எதுவும் இல்லை.

அதற்காக மாற்று பள்ளிகளில் படித்தவர்கள் எல்லோரும் அறிவாளிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தார்கள் என்று சொல்லிவிடமுடியாதுதான். ஆனால், தனித்தன்மையுடனும், நல்ல ஆளுமையுடனும் வளர்கிறார்கள். ஆனால், மற்ற பாடத்திட்டத்தில் முதன்மையாக வர வேண்டும் என்ற டென்ஷனே வாழ்க்கையை ஆள்கிறது. தனக்கு எது சரியான பாதை என்பதை தேர்ந்தெடுக்க தடுமாற வேண்டியிருக்கிறது.

இவை நடுவில், தேர்வுகளை மாற்றியமைப்பது மட்டுமே தீர்வாகிவிடாது.பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதென்பதோ அல்லது நுழைவுத் தேர்வுகளை
ரத்து செய்வதென்பதோ அல்லது எல்லா கல்விதிட்டத்தினருக்கும் ஒரே நுழைவு தேர்வென்பதோ நிச்சயம் பலனளிக்காது. தேர்வுகளும் மதிப்பீடுகளும் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தேர்வைக் குறித்து பெற்றோரும் ஆசிரியரும் புறக்காரணிகளும் கொடுக்கும் அழுத்தங்கள் தடுக்கப்பட வேண்டும். எல்லோருக்கும் சமமான கல்வி என்பதை அளிக்காமல் எல்லோருக்குமான தேர்வுகளை எப்படி சமமாக்க முடியும்?

Monday, February 15, 2010

திலகு டான்ஸ்!

பப்பு, நீ என்ன டான்ஸ் ஆடப்போறே?

”திலகு டான்ஸ்! ”


கடந்த ஐந்தாம் தேதியன்று பப்புவின் பள்ளியில் ஆனுவல் டே. ராணி சீதை ஹாலில் நடந்தது. அண்ணா பல்கலை மற்றும் ஐ.ஐ.டி யிலிருந்து இரு விரைவுரையாளர்கள் தலைமை தாங்கவும், சிறப்புரை ஆற்றவும் வந்திருந்தார்கள். பாடல்கள், இந்திய கலாச்சார நடனங்கள்(பரதநாட்டியம், மோகினியாட்டம், பஞ்சாபி, குஜராத்தி, தெலுகு, அருணாச்சல பிரதேச நடனம்) மற்றும் வன பாதுகாப்பு நாடகம்.


'திலகு' டான்ஸ் வீடியோ - (திருட்டுத்தனமா ) கொஞ்சம்தான் ரெக்கார்ட் பண்ண முடிஞ்சுது! - தலையில் ஜிட்டு போட்டிருக்கறதுதான் பப்பு.


ஆஷிர்வாத் விளம்பரத்துலே சினேகா சப்பாத்தி செஞ்சு கொடுப்பாங்க...அப்புறம் அந்த குட்டி பொண்ணு நல்லா டான்ஸ் ஆடுவாங்க.....அதேமாதிரி, பப்புவும் திலகு டான்ஸ் நல்லா ஆடட்டுமேன்னுதான் சினேகாவை சப்பாத்தி செஞ்சு கொடுக்க கூப்பிட்டேன்!

வாழ்த்திய, பின்னூட்டமிட்ட, மடலிட்ட அனைவருக்கும் நன்றிகள்!

Friday, February 12, 2010

பப்பு டைம்ஸ்

பொதுவாக இதுவரை வீட்டில் சாமி கும்பிடுவதோ படைத்ததோ இல்லை. அம்மா வந்தால் அது நல்லநாளாக (!) இருந்தால் இலை போட்டு படைப்பார். பப்பு பார்க்க இலை போட்டு படைத்தது கடந்த பொங்கலின் போதுதான். எல்லாவற்றையும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த பப்பு, இலையில் சாப்பாடு போட்டதும் சாமி நிஜமாகவே அலமாரியிலிருந்து வந்து சாப்பிடப் போகிறார் என்று நினைத்துக் கொண்டாள். படைத்து முடித்த பின்னும் நெடுநேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தாள். பப்புவின் அத்தை சாப்பிட அழைத்துக்கொண்டேயிருந்தார்.
‘நாம் போய் சாப்பிட்டு வந்துடலாம், அதுக்குள்ளே சாமியும் சாப்பிட்டிருக்கும்' என்ற அத்தையிடம், 'ஏன் சாமி நாம போனப்புறம் சாப்பிடும்' என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அத்தை அவளது கையை பிடித்து அழைத்த போது, அலமாரியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஒரு விரலை உயர்த்தியபடி சொல்லிச் சென்றாள்,

”சாமி, ஃபுல்லா சாப்பிட்டிருக்கணும் சாமி, இல்லேன்னா அடி விழும் சாமி”
புத்தகத்தை மிதித்து விட்ட பப்புவிடம் 'சாமி, தொட்டு கும்பிடு' என்றார் அம்மா.
'ஏன் ஏன்' என்று கேட்டுக்கொண்டிருந்த பப்புவிடம் அம்மா விளையாட்டுக்காக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். பப்பு கேட்டாள்,

‘ஏன், சாமி பாவமா?'படம் பார்த்து வித்தியாசங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தோம். இரண்டு படங்களிலும் இருந்த ஹெலிகாப்டரைப் பார்த்து சொன்னாள்,

இதுலே ஸ்பீடா சுத்துது...இதுலே ஸ்பீடா சுத்தல!
இதோட தமிழ் ட்ரான்ஸ்லேஷனை சொல்றீங்களா, ப்ளீஸ்?!

i smallgirl that time come one doras no...this time y not come?

Wednesday, February 10, 2010

அருவியின் குழந்தைகளுக்கான வீட்டுக்கல்வி புத்தகங்கள்

அருவி பதிப்பகத்தின் வீட்டுக்கல்வி இயக்கத்தின் கீழ் வெளியிட்டிருக்கும் நூல்களை புத்தகச் சந்தையில் வாங்கியிருந்தோம். முதல் நிலை நூல், பப்புவின் வயதுக்குக் கீழ் இருந்தது. மிக எளிதான கதைகள். முன்பு, கோலின்ஸ் சீரிசில் வாங்கியது நினைவுக்கு வரவே இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை புத்தகங்களை வாங்கினோம்.


டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்..டப்டுப்
முயல்குட்டியும் போலீசுக்காரரும் - இது இரண்டாம் நிலை புத்தகம்.

விலங்குகள் கதைகள் ஓசைக்கு முக்கியத்துவம் கொடுத்து விவரிக்கப் பட்டுள்ளன. எளிய வாக்கியங்கள் - விதவிதமான ஓசைகள் - முயல் காரட்டை சாப்பிடும்போது ஏற்படுத்தும் சப்தம் - போலிசுக்காரர் பூட்ஸு காலால் நடக்கும்போது வரும் சப்தம் - ஆடுகள் பாலத்தின் மீது நடக்கும் சப்தம் - இவை குழந்தைகளின் கவனத்தையும், கதை கேட்டு தொடர் சம்பவங்களாக நினைவு
வைத்துக்கொள்வதையும் மேம்படுத்துகிறது.


இதில் முயல்குட்டியும் போலிசுக்காரரும் என்ற கதையை வாசித்தோம். ஒரு குட்டி முயல் தோட்டத்திற்கு சென்று காரட் சாப்பிடுகிறது. அப்போது டப்டுப் லப்டுப் என்ற சப்தத்தை கேட்கிறது.போலிசுக்காரர் என்று நினைத்து ஓடி ஒளிகிறது. அது ஒளியும் ஒவ்வொரு இடத்திலும் புதிய விலங்கொன்றை சந்திக்கிறது. கடைசியில் அந்த டப்டுப் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அறிந்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு ஓடுகிறது.


எளிய கதை, ஆனால் பப்புவை பால் குடிக்கவும் மருந்து குடிக்கவும் வைத்தது!

புத்தகத்திற்கு பின்னட்டையில் அம்மாஅப்பாக்களுக்கும்...பாட்டிதாத்தாக்களுக்கும்... அப்புத்தகத்தை குறித்து எழுதப்பட்டுள்ளது. அதனை அருவியின் இந்த பக்கத்தில் காணலாம்.


அடுத்தது,
சுண்டெலிக் கதைகள் - இது மூன்றாம் நிலை புத்தகம்.
எல்லாக் கதைகளிலும் சுண்டெலிதான் ஹீரோ. சுண்டெலி சூப் குடிக்கிறது...சிங்கத்தைக் காப்பாற்றுகிறது..பூனையோடு உரையாடுகிறது.
...பப்புவோடு பொழுது போக்குகிறது!

இக்கதைகள் பிள்ளைகளுக்கு சொல்வதற்கானவை...வாசிப்பதற்கானவை அல்ல” என்று அட்டையில் போட்டிருந்தாலும் பப்பு நான் வாசிப்பதையே விரும்புகிறாள்! (எனது கதை சொல்லும் திறமை அப்படி!)

முதல் கதையும் , மூன்றாம் கதையின் பாதியையும் இப்போது திரும்ப திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

புலி ஒன்று சூப் வைக்கும். தேங்காய், மாங்காய் எல்லாம் போட்டு சுவையாக வைத்திருக்கும். சூப் சுவையால் கவரப்பட்ட சுண்டெலி புலியை நைச்சியமாக பேசி குளிக்க அழைத்துச் செல்லும். புலி நீந்திக் கொண்டிருக்க எலி வந்து சூப்பை குடித்து விடும். போகுமுன், மரத்தின் மேலிக்கும் குரங்குகளிடம் ஒர் பாடலை கற்றுக் கொடுக்கும்.

தேங்கா மாங்கா சூப்பு
தெகட்டாத சூப்பு
புலி வச்ச சூப்பு
குடிச்சு பாரு டாப்பு

எங்கே பாடுங்கள் பார்ப்போம்? (சும்மா கிண்டலுக்கு... :-)) )

ஒரே ஒரு விமர்சனம் : சுண்டெலிக் கதைகளில், சுண்டெலியை யானை கிண்டல் செய்யும். ‘கடலில் குதித்து செத்து போகலாம் என்று நினைத்தது' என்று ஒரு வரி வரும். கிண்டல் செய்தால் பதில் கிண்டல் அல்லது வேறு மாதிரி கொடுத்திருக்கலாம். இதை கண்டிப்பாக பப்புவுக்கு நான் வாசிக்க மாட்டேன். நான் வாசிக்காததால் பப்புவுக்கு இது தெரியாமல் போகப் போவது இல்லை. ஆனால், இந்த வயதில் (3-7 வயதினருக்கான) புத்தகத்தில் இப்படி வருவதை தவிர்த்திருக்கலாம்.

இது ஒன்றைத் தவிர, மிகவும் ரசித்து வாசிக்கூடிய குழந்தைகள் விரும்பக்கூடிய புத்தகங்கள் - மெல்ல கற்போம் நூல்கள்!

Monday, February 08, 2010

கண்களுக்கு புலப்படாத புர்காக்கள்

மார்ச் - ஏப்ரல் மாதங்களில், ப்ளஸ் டூ பரீட்சைகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிக்கு பெரிம்மாவுக்கு அழைப்பு வந்துவிடும். வேலூர், திருப்பத்தூர் அல்லது சென்னைக்கு இல்லாவிட்டால் ஹோசூருக்கு போகவேண்டும். நானும் குட்டியும் அவுத்து விட்ட கழுதைகள்தான். குறைந்தது இருபது நாட்கள் - வீட்டின் அனைத்து சட்டங்களும் மீறப்படும். (டீச்சர் பசங்களுக்கு இதன் அர்த்தம் இன்னும் நன்றாக புரியும்.) டீச்சர் வீடுகளில் ஒரு சொல்லப்படாத ஒழுங்கு மறைந்திருக்கும். காலையில் டிவி பார்ப்பது என்பது பெரும்குற்றம். வீட்டுக்கு கெஸ்ட் வந்தா உடனே விளையாடக் கிளம்பக்கூடாது,ரூம்லே போய் நடிக்கணும்...சாரி படிக்கணும். ஆறு மணிக்கு மேலே தெருவிலே விளையாடக் கூடாது. (பப்ளிக் எக்சாம் வருதுன்னாதான் கரண்ட் கட் பண்ணுவாங்க) அப்படி கரண்ட் கட்டாச்சுன்னா, உடனே குதிச்சுக்கிட்டு தெருவுக்கு ஓடக்கூடாது.(அப்படியே போனாலும் திரும்ப கரண்ட் வந்ததும் ‘ஹே'ன்னு கத்தக்கூடாது) கரண்ட் வந்ததும் ஒழுங்கா வீட்டுக்கு வந்துடணும்...இன்னபிற. இவையெல்லாவற்றிற்கும் இந்த இருபது நாட்களில் விலக்கு அளிக்கப்படும். ஆயாவை, நானும் தம்பியும் கூட்டு சேர்ந்து ஏமாற்றுமளவிற்கு கொஞ்சம் வளர்ந்திருந்தோம். மேலும், 'ஒற்றுமையே பலமெ'ன்று அறிந்துமிருந்தோம்.

கைருன்னிசா ஆன்ட்டி - இதேபோன்ற ஏதோவொரு ஏப்ரல் மாத்தில்தான் எங்களுக்கு அறிமுகமானார். ப்ளஸ் டூ தேர்வுகள் நடக்கும் சமயம்,'இந்த வருஷம் எங்கே போடப்போறானோ' என்று பேசிக்கொள்வார்கள். பெரிம்மா, கைருன்னிசா ஆன்ட்டி,அன்னி - எல்லோருக்கும் விடைத்தாள் திருத்துவதற்கு ஒன்றாகவே அழைப்பு வரும். அருகிலிருக்கும் ஊர் என்றால் தினமும் அனைஅவ்ரும் ட்ரெயினிலோ அல்லது பஸ்ஸிலோ போய் வந்துவிடுவார்கள்.
கடைசி நாளில் எல்லோரும் சேர்ந்து பாட் லக் செய்வார்கள். அல்லது ஹோசூர்,சென்னை மாதிரியான ஊர்களில், பள்ளி வளாகத்திலோ அல்லது டீச்சர்ஸ் ஹோமிலோ தங்கி விடுவார்கள். ஒன்றாக ஷாப்பிங் செய்வது,, சினிமாவுக்கு போவதுமாகவும், ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடுவதுமாக... அவர்களது கல்லூரி நாட்களை உயிர்ப்பித்துக்கொள்வார்கள். வீடெனும் கூடை மறக்கவும் முடியாமல் கழட்டவும் முடியாமல் சனி- ஞாயிறுகளில் வருவார்கள் அல்லது போன் செய்வார்கள். எனக்கும் தம்பிக்கும் உண்மையில் அப்போது ஜாலியாகத்தான் இருக்கும். ஆயாவுக்குத்தான் பெருங்கஷ்டம். ஆனால், பெரிம்மா வரும்போதும் ஜாலி. ஏனெனில், வரும்போது விளையாட்டுச் சாமான்கள்/துணிமணிகள் வாங்கி வருவார். கைருன்னிசா ஆன்ட்டியின் வீடு ஹவுசிங்போர்ட்க்கு வெளியே பி-கஸ்பா செல்லும் வழியில் இருந்தது. ஒரு பையன் மற்றும் ஒரு பெண். கைருன்னிசா ஆண்ட்டிக்கு சொந்த ஊர் ஊட்டி. எப்படியும் மாதமொரு முறை வீட்டுக்கு வந்துவிடுவார்கள், குடும்பமாக. அப்ரார் என் தம்பி வயதும், ரேஷ்மா அவனைவிட இரு வயது சிறியவளாகவும் இருந்தாள். அதனால் நாங்கள் ரூமுக்கு போய் படிக்கவேண்டிய அவசியம் இருக்க வில்லை. எங்கள் விளையாட்டு சப்தம் கேட்டதும் உமாவும் ஸ்ரீதரும் வந்துவிடுவார்கள். பின்பு மெதுவாக ஆஃப்ரினும் சேர்ந்துக்கொள்வாள். கீழே நாங்கள் விளையாடிக்கொண்டிருக்க பெரியவர்கள் பேசிக்கொண்டிருபபர்கள்.

ஆன்ட்டி வேலை செய்தது பெண்கள் மட்டும் படிக்கும் முஸ்லீம் பள்ளிக்கூடம். அங்கிளுக்கு ஆம்பூரிலேயே இருந்த ஆண்களுக்கு மட்டுமான முஸ்லீம் பள்ளியில் பணி. தலைமையாசிரியராதலால், ஊரில் அவருக்கு நல்ல மதிப்பிருந்தது.இருவருக்கும் சனிக்கிழமைகளில் பள்ளியிருந்தால் அப்ராரும், ரேஷ்மாவும் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். நாங்கள் ஒன்றாக விளையாடுவோம். சாயங்காலமானால் நானும் குட்டியும் அவர்களை கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு வருவோம். ரம்ஜானன்று ஆன்ட்டி பிரியாணி கொடுத்துவிடுவார்கள். பொங்கலன்று நாங்களும் பொங்கல், கரும்பு, வடை இத்யாதிகள். நான் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தபிறகு இதெல்லாம் குறைந்து போயிற்று. எப்போதும் மூன்று ட்யூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் - அப்புறம் தம்பி செஸ் காம்படிஷன் - அப்ரார் ஒன்பதாம் வகுப்பு என்று அவரவரும் தத்தமது வாழ்க்கையில் அவரவருக்கான ஏணிகளில் தொங்கிக்கொண்டிஒருந்தோம். பெரிம்மா, ‘பேப்பர் வேல்யூவேஷன் போகணும்' என்று சொல்லும்போது மட்டும் 'என்ன உங்க ப்ரெண்ஸ் கேங்க் கூட ஆரம்பிச்சுட்டீங்களா, இந்தவாட்டி என்ன சினிமா' என்று வம்பிழுப்பதோடு நின்றுவிட்டது கல்லூரி விடுதிக்குச் சென்றபின்.


ஒரு முறை லீவுக்கு வந்தபோது புத்தக அலமாரியில் புதிதாக ஏதோ துருத்திக்கொண்டிருந்தது. இழுத்துப்பார்த்தபோது ஒரு வாழ்த்தட்டை போன்று இருந்தது. “பெரிம்மா, என்னது இது? உருதுலே எழுதியிருக்கு....இது எங்கே கொடுத்தாங்க” என்ற போது பெரிம்மா, ”அங்கியே வை..கைருன்னிசா ஆன்ட்டிது ”என்றார். “அவங்களுது ஏன் இங்கே வந்திருக்கு? நல்லாசிரியர் விருதா என்ன? ஏன், அவங்ககிட்டேயிருந்து வாங்கி வச்சிருக்கீங்க..உங்களுக்கு குடுக்கமாட்டாங்கன்னு முடிவு பண்ணீட்டீங்களா” - என்று பெரிம்மாவை கேலி செய்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக, நான் வம்பிழுக்கும் சமயங்களில் சிரிக்கும் பெரிம்மா சிரிக்கவில்லை. ஆனால், சாப்பிடும்போது சொன்னார், 'அது அவங்க கல்யாணத்துக்கு யாரோ கொடுத்ததாம். அவங்க வீட்டுக்காரர் ஆண்ட்டியை டிச் பண்ணிட்டாரு..ப்ராப்ளம் நடந்து நடு ராத்திரிலே இங்கே வந்தாங்க. கேஸ் போடப்போறேன்னு என்னமோ சொன்னாங்க. மேரேஜ் ஆனதுக்கான ஆதாரம் ஒன்னுமில்லே. இது ஒண்ணுதான் மங்கை இருக்குன்னு, ஏதாவது கேஸ் போடணும்னா தேவைப்படும்னு இங்கே கொடுத்திருக்காங்க'. ஒரு வாரம் இங்கேதான் இருந்தாங்க. அப்புறம், ஊட்டிக்கு போயிட்டாங்க'. அப்போது அப்ரார் கர்நாடகாவில் டாக்டர்க்கு படித்துக்கொண்டிருந்தான்.


'ஆனா, ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க, அழறாங்க.'பாவம்,அவங்களாலே அந்த துரோகத்தைத்தான் தாங்க முடியல. எப்படி மங்கை,எனக்கு தெரியாம இந்த ஆளு..இவ்வளோ நாளா..எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே வரலையே'- ன்னு அழறாங்க. ரொம்ப கஷ்டமா இருந்தது. 'எப்படின்னே தெரியல...துத்திபேட்லே அந்த வீடு இருக்காம். அது ஒரு பெருக்கற லேடி..முஸ்லிம் லேடிதானாம். ஆனா அவங்களுக்குத்தான் அது சாதாரணம் இல்ல...அதனாலே யாராலேயும் ஒன்னும் சொல்ல முடியல...எங்க அக்கா வீட்டுக்காரங்கல்லாம் தானே இருக்காங்க...யாருமே இப்படி இல்லையே மங்கை...ன்னு அழுறாங்க. என்ன சொல்றது? அவரோட அண்ணாங்கள்ளாம் வேலூரிலேதான் இருக்காங்க. ஆனா, யாராலேயும் ஒண்ணும் கேக்க முடியலை. கேட்டாலும், குர்ரான்லேயே சொல்லியிருக்குன்னு சொல்றாங்களாம்' என்றார். ‘நான் உன்கூட வந்து இருக்கேன், மங்கைன்னு சொல்றாங்க. அப்ரார் இருக்கான், பொண்ணு ஸ்கூல் பைனல். அவங்களுக்காகவாவது நீ கூட இருக்கணும்னு சொல்லியிருக்கேன். அவனுக்கு ஒரு வருஷத்துக்கு ஆறு லட்சம் கட்டனும். இது தனியா வந்துட்டா பசங்க பாவம்', என்றார் மேலும்.

அந்த அங்கிளைக் கடைசியாக பார்த்தபோது நரைத்துபோயிருந்த அவரது தலைமுடிதான் நினைவுக்கு வந்தது. நல்ல உயரமான தோற்றம். தடிப்பான குரல்.அவரை அப்படி என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அதுவும் ஒருவரை பற்றி நாம் மரியாதையாக, ரொம்ப நல்லவிதமா மனதில் பதித்துவிட்டு அவரைப் பற்றி வேறுமாதிரி கேள்விபட்டால் நம்பமுடியாமல் ஜீரணிக்க முடியாமல் இருக்குமே...அதுபோல உறுத்திக்கொண்டிருந்தது. அதன்பிறகு வேற எதுவும் கேட்கவில்லை.ஆனால், இஸ்லாம் முறைப்படி 'தலாக்'என்று மூன்று முறை சொல்லிவிட்டால் விவாகரத்தாகிவிடுமென்று மட்டும் கேள்விப்பட்டிருக்கேன். விடுதிக்கு வந்து மசூதாவிடம் கேட்டபோது ‘அப்படி உடனே சொல்ல முடியாது, ஆனா சாட்சி வைச்சு சொல்லணும்' என்றாள்.

அதற்கு அடுத்த லீவுக்கு வந்தப்போது ஆன்ட்டியும் அங்கிளும் ஒன்றாக இருப்பதாகவும், மூன்று அடுக்கு மாடி வீட்டை விற்றுவிட்டு வேற ஒரு வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும், மேலும் அங்கிள் விஆரெஸ் வாங்கி விட்டதாவும் தெரிய வந்தது. அதோடு ஆண்ட்டியின் நகை, வீஆரெஸ் காசு எல்லாம் அந்த பொம்பளைக்கே கொடுத்துட்டாதா ஆண்ட்டி புலம்பினாங்களாம். 'இவங்க சம்பாத்தியத்துலேதான் குடும்பம்.பசங்க படிப்பு செலவு மட்டும் அவர் கொடுப்பாராம். ஆனா பேருக்கு ஹஸ்பெண்ட்டா வீட்டுலே இருக்கார்ன்னும் சொன்னாங்க'என்றார் பெரிம்மா. 'ரேஷ்மாவுக்கும் அதே மெடிக்கல் காலேஜ்லே சீட் கிடைச்சுடுச்சு. அவதான் பெரிய சப்போர்ட்டா இருக்காளாம், அப்பாகிட்டே சண்டை போட்டு கண்டிஷன்ல்லாம் போடுதாம். அப்புறம், கைருன்னிசாகிட்டே, எனக்கு ஹாஸ்டல் போகும்போது பொட்டி தூக்கவாவது அந்தாள் கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இரும்மான்னு சொல்லுது, மங்கை' என்று ஆன்ட்டி சொன்னதாகவும் சொன்னார் பெரிம்மா.


இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் புதுக்கல்லூரியின் தர்ஹாவில் அப்ராருக்கு நிக்காஹ் நடந்தது. நானும் பெரிம்மாவும் சென்றிருந்தோம். ஆண்ட்டியின் அக்காக்கள், அண்ணிகள் எல்லோரும் ஓடி வந்து பெரிம்மாவின் கையை பிடித்துக்கொண்டார்கள். ஆண்ட்டியின் அக்காக்கள் அனைவருக்கும் பெரிம்மாவை நன்றாகத் தெரிந்திருந்தது. போனில் முன்பு பேசியிருப்பதாக பெரிம்மாவும் சொல்லியிருக்கிறார். ஒரு அக்கா அடிக்கடி ஆண்ட்டியின் வீட்டிற்கு வந்து போவார். ஆண்ட்டியின் அக்காக்கள் அனைவருமே டீச்சர்கள் என்றார் பெரிம்மா.ஒரு பாட்டி எங்களை விசாரித்தபோது, 'இவங்க மங்கை டீச்சர். அக்கா ப்ராப்ளம்லே இருந்தப்போ பலம் கொடுத்தவங்க',என்று அந்த அக்காக்களிலொருவர் சொன்னது காதில் விழுந்தது.அப்புறம் எல்லாம் சாப்பிட போய்விட்டோம். ஆன்ட்டி மிகவும் பிசியாக இருந்தார். மணப்பெண் உமராபாத்தை சேர்ந்தவர். அபரார் வேலை செஞ்ச ஹாஸ்பிடல் ஓனரின் பெண்ணாம். அவரே வந்து விசாரித்துவிட்டு திருமண ஏற்பாடுகள் செய்தாராம்.

நிக்காஹ்-வின்போது பெண்கள் அனைவரும் ஒரு மண்டபத்தில் குழுமியிருப்பார்கள். மைக்கில் உருதுவில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். வருபவர்கள் அனைவரும் மணப்பெண்ணிடம் சென்று முக்காட்டை உயர்த்திவிட்டு நலம் விசாரிப்பார்கள். கழுத்தில் ஆபரணங்களை தூக்கிப் பார்ப்பார்கள். அனைவரின் உடைகளும் சூப்பராக கலர்புல்லாக இருக்கும்.சம்க்கி புடவைகள், எம்ப்ராய்ர்டரி புடவைகளென்றும், கை முழுக்க மெஹ்ந்தி வைத்தும் ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தின் பாடல் காட்சி நினைவுக்கு வரும். அங்கே இருக்கும் ஒரே ஒரு ஆண், கேபிளை கையில் சுற்றியபடி சுற்றி வரும் வீடியோ கவரேஜ்காரர் மட்டும்தான். போட்டோவெல்லாம் ஒரு உறவுக்காரபெண் எடுத்துக்கொண்டிருந்தார். திருமணம் முடிந்துவிட்டதென்று மைக்கில் ஏதோ சொன்னதும் உணர்ந்துக்கொள்வார்கள். பிறகு, நேராக பிரியாணிதான்.


உணவுக்குப் பிறகு, மணமகன் உறவினர்களை சந்திக்க வருவார் போல. காத்திருந்த போது, 'எங்க உங்க மாப்பிள்ளையை காணோமெ'ன்று ஆன்ட்டியிடம் கேட்டார் ஒருவர். அங்கிளின் அண்ணாவாம். வேலூரில், கல்வித்துறையில் இருக்கிறாராம். 'நீங்கள்ளாம்தான் போய் தேடி கூப்பிட்டு வரணும், அவ்ரை எதுவும் கேக்க மாட்டேங்கறீங்க' என்று ஆதங்கத்தை கொட்டினார் ஆன்ட்டி. அப்ரார் வந்ததும் ஆண்ட்டி அவனை தழுவிக்கொண்டார்.ஆன்ட்டி, அப்ராரைக் குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். கூடவே ரேஷ்மாவைக் குறித்தும். ரேஷ்மாதான் வயதுக்கு மீறிய பக்குவத்துடன் நடந்துக்கொள்வதாகவும், அப்பாவை உருட்டி மிரட்டி வேலை வாங்குவதாகவும், ' என்ன கேட்டாலும் அந்த ஆளுக்கு உறைக்க மாட்டேங்குதே' என்று அங்கிளைக் குறித்தும் சொல்லிவிட்டு பிசியானார். திரும்பி வரும்போது, ஆன்ட்டியின் முகத்தில் ஒரு வித வலியிருந்ததென்று பெரிம்மா சொன்னார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு ரேஷ்மாவின் நிக்காஹ்-வின் போது ஆன்ட்டியைப் பார்த்தேன். வெளியில் காரில் அங்கிள் அமர்ந்திருந்தார்,உள்ளே நடப்பதற்கும் தனக்கும் ஒன்றும் சம்பந்தமில்லை என்பது போல. பெரிம்மா பார்த்ததும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக்கொண்டார்கள். நாங்கள் செல்வதற்குள் நிக்காஹ் முடிந்திருந்தது. ரேஷ்மா கூட படித்தவனாம். ஒன்றாக ட்ரெயினில் வரப்போக காதலும் வந்திருக்கிறது. 'ஆன்ட்டி, ஆன்ட்டி' என்று கைருன்னிசா ஆன்ட்டியிடம் போனில் பேசுவானாம். பின்னர்
அவனது குடும்பத்தைச் சந்தித்து நிக்காஹ் வரை வந்திருக்கிறது. இந்தத் திருமணத்திலும் அங்கிளின் பங்களிப்பு ஒன்றும் இல்லை. அப்ரார், குழந்தை -குடும்பம் -ப்ராக்டிஸ்- ஷேர் மார்க்கெட் என்று பிசியாகி விட்டான். கல்யாணத்திற்கு பிறகு அவனது பேச்சுக் கூட மாறிவிட்டதாக சொன்னாராம் ஆன்ட்டி. 'ஒழுங்கா டாக்டர் வேலையை பார்க்காம ஏன் ஷேர் மார்க்கெட்லேலாம் போகணும் 'என்று பெரிம்மாவை வேறு பஞ்சாயத்துக்கு அழைத்திருக்கிறார்.

லிஃப்டிற்காக காத்திருந்த நேரத்தில், எதிரில் வந்த அப்ரார் தன் உடையைக் குறித்துக் ஆன்ட்டியிடம் கேட்க, ‘எவ்ளோ செஞ்சாலும் நன்றி இருக்கணும்..அது இருக்க மாட்டேங்குது' என்று முணுமுணுத்தார்.

ஆன்ட்டி வாங்கிக் கொடுத்த உடையாம் அது. வீட்டிற்கு திரும்பி வரும்போது பெரிம்மா சொன்னார், ‘அப்ரார் அவங்கப்பாக்கு சப்போர்ட் செஞ்சு பேசறானாம். அவர் செய்றது சரிதான், குர்ரான்லேயே சொல்லியிருக்கு, உனக்குத் தெரியாதா...நீதான் அக்செப்ட் பண்ணி போகணும்னு சொல்றானாம். படிக்கற வரைக்கும், 'அம்மி அம்மின்னு' சொல்லிக்கிட்டு இப்போ என்ன சொல்றான் பாரு, எனக்கே புத்தி சொல்றான்னு கைருன்னிசாக்கு ரொம்ப மனசு கஷ்டம்' .

இளந்தாடியும் குழந்தை முகம் மாறாத அப்ரார்..., என்னிடம் சைக்கிள் பழகிக்கொண்ட அப்ரார்...,
ரேஷ்மாவின் கைப்பிடித்து எங்கள் வீட்டுக்கு வரும் அப்ரார்....
துரோகமிழைக்கப்பட்டதை தாங்கிக்கொண்ட தருணத்தைவிட இதைத்தாங்கிக்கொள்ளவே ஆண்ட்டி அதிக சிரமப்பட்டிருப்பாரென்று எனக்குத் தோன்றியது. ஆனால் அப்படி இல்லை, துரோகங்களை தாங்கிக்கொள்ள அவர் பழக்கப்பட்டுவிட்டார் என்பதே உண்மை .

காந்தா அத்தைக்கும், கைருன்னிசா ஆன்ட்டிக்கும் அதிக வேறுபாடுகள் இல்லைதான்.
காந்தா அத்தையாவது தண்டனை கொடுப்பதாக எண்ணி விலக்கிவிட்டு விலகியும் இருந்தார்.
ஆனால், இருவரும் சமூக அழுத்தங்களுக்காக, அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக வாழ்ந்து தீர்த்தவர்கள்.


ஒரு நிமிடம் அவர்களிடத்தில் என்னை வைத்து யோசிக்கிறேன்.

சமூக அழுத்தங்களுக்காக...குடும்பத்துக்காக...குழந்தைக்காக...காம்ப்ரமைஸ்?


சில புர்காக்கள் கண்களுக்கு தெரிகின்றன...சில புர்காக்கள் கண்களுக்கு தெரிவதில்லை!


ஜமாலன் அவர்களின்
இந்த இடுகையை வாசித்தேன். அதனோடு நூல் பிடித்த நினைவுதான் இது! இன்னும் கதிரவன் ஆன்ட்டியும், தூக்கு மாட்டிக்கொண்ட தஸ்தகீரின் ம்னைவியும், ஜரினாவும், மசுதாவும், ஃபாத்திமாவும், தற்கொலை செய்துக்கொண்ட அர்ஷியா(வாக மாறிய வித்யா) அக்காவும் நினைவிலாடியபடி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் விரைவில் பகிர்கிறேன்.

Saturday, February 06, 2010

A page from my teenage diary

இன்னைக்கும் யாரோ என்னோட சைக்கிள்லே ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருந்தாங்க. ஆட்டின் ஸ்டிக்கரும் க்யூபிட் ஸ்டிக்கரும். அன்னைக்கு மாதிரியே லேடீஸ் பார்லேயும் ஹாண்டில் பார்லேயும் . போன வாரம் வெள்ளிக்கிழமை ஒரு பேப்பரை செருகி இருந்தது. அதுலேயும் இந்தே ஹாட்டின்தான்.நல்லவேளை,யாரும் பாக்கறதுக்கு முன்னாடி எடுத்து போட்டுட்டேன். வீட்டுலே சொல்லலமா வேணாமான்னு வேற தெரியல. ஏற்கெனவே ஆயா வேற என்னை சந்தேகப்படற மாதிரி தெரியுது. அன்னைக்கு ஜூனைத், பிரபு, ரேணு, சபீனா-லாம் வீட்டுக்கு வந்துட்டு போனப்போ வேற, ஒரு மாதிரி சொன்னாங்க. 'எதுக்கு உனக்கு படிக்கற வயசுலே இவ்ளோ ஃப்ரேண்ட்ஸ்'- ன்னு. எனக்கு ஸ்கூல் ஃபுல்லா ப்ரெண்ட்ஸ் இருக்காங்க..அப்புறம் ட்யூஷன். அதுவும் அன்னைக்கு பார்த்து மேத்ஸ் ட்யூஷன் சீக்கிரம் முடிஞ்சுடுச்சு. 'எங்க வீட்டுக்கு வாங்க'ன்னு நாந்தானே கூப்பிட்டேன். அதுவுமில்லாம,'உன் ப்ரெண்ட்ஸ் யாரை வேணா வீட்டுக்கு கூப்ட்டு வா'ன்னு தானே பெரிம்மா சொல்லியிருக்காங்க.

ஆனா, ஆயா கொஞ்சம் மாறிட்ட மாதிரி தெரியுது. நான் கிச்சன் பால்கனிலே உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிட்டு இருந்தா, (சுண்டலா இருந்தா காக்கா-க்கு போடறதுக்கு)
இல்லன்னா தெரு பால்கனிலே தலை ஆத்திக்கிட்டிருந்தா பின்னாடியே வந்து நிக்கறாங்க. முதல்ல நான், அயர்ன்காரம்மாவைக் கூப்பிடறதுக்குதான் நிக்கறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன், அவங்க எட்டி எட்டி பாக்கறதைப் பார்த்து. ஆனா, அப்புறம்தான் புரிஞ்சது...அவங்களை தேடறதுக்கு இல்லன்னு. அன்னைக்கும் ஜன்னல்கிட்டே இருக்கற பெட்லே உட்கார்ந்து கதை படிச்சுக்கிட்டிருந்தப்போ ஆயா பக்கத்துலே வந்து ஏன் ஜன்னலை சார்த்திட்டு போனாங்க..இவங்க பண்றதெல்லாம் புதுசா இருக்கு...அன்னைக்கு நான் பாத்ரூம்லேருந்து ரூம்க்கு வந்தப்போ ஆயா என்னோட நோட்டெல்லாம் புரட்டி பார்த்துக்கிட்டு இருந்தாங்க. செக் பண்றாங்களா?! எனக்கு கோவம் கோவமா வந்துச்சி..ச்சே..இவங்க ஏந்தான் இப்படி இருக்காங்களோ!அப்புறம் இந்த சைக்கிள்லே லெட்டர் இருக்கறதை சொன்னா அவ்வளவுதான்! என்னை என்ன நினைச்சுப்பாங்க..பேசாம கண்டுக்காம விட்டுடலாம். சந்திரா கூட சொல்லியிருக்கா,அம்மால்லாம் ஃப்ரீயா விட்டாகூட ஆயாங்கதான் இப்படி டார்ச்சர் பண்ணுவாங்கனு. ஆனா, அனு,ரேணுகாக்குல்லாம் தெரிஞ்சா ரொம்ப கிண்டல் பண்ணுவாங்களே...ஏற்கெனவே எல்லோரும், யார் யாருக்கு ஆள் இருக்குன்னு வேற கிண்டல் அடிக்கறாங்க. ம்ம்..நான் தான் யாரைய்ம் லவ் பண்ணலையே..சே..அது எப்படி வரும்..நான் எங்க வீட்டைத்தான் லவ் பண்றேம்ப்பா...முதல்ல லவ் எப்படி வரும்...படிக்கற பசங்களுக்கெல்லாம் லவ் வராதுன்னு கெஜா அம்மா, சுஜா ஆன்ட்டி, ஆயால்லாம் பேசும்போது சொல்லிக்கிட்டாங்களே. கெஜா இந்த வருஷம் பப்ளிக்.

ஆனா, இந்த பேப்பர் எப்போ வைக்கறாங்கன்னுதான் தெரியலை..யாராயிருக்கும்?ஜெயஸ்ரீ, அனு, 'பல்லு' கவிதா - நாங்கல்லாம் ப்ரேயர் முடிஞ்சு க்ளாசுக்கு போறப்போ பேசிப்போம்.அப்போ என்ன சொன்னா? ஜெயஸ்ரீயை சைக்கிள்லே யாரோ ஃபாலோ பண்றாஙக்ன்னு வீட்டுலே சொன்னதுக்கு அப்புறம் அவங்கம்மா அவளை ரொம்ப கண்காணிக்கறா மாதிரி ஃபீல் பண்றான்னுதானே. அதுவும் கதவை சாத்திக்கிட்டு படிச்சா அப்போப்போ வந்து திறந்து பார்க்கிறாங்களாம். அவ திட்டுனப்புறம் அவங்கம்மா கதவை திறக்கறது இல்லேயாம். ஜன்னலேர்ந்து மட்டும் எட்டி பாக்கறாங்களாம். அப்போ அவ சொன்னதுதான் - செம ஃபன்! 'அவங்க எபட்டி பாக்கறப்போ, நான் வேற ஏதாவது பண்ணிக்கிட்டிருந்தா...ஒரு வேளை ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டிருந்தா' அப்படின்னு! ஆனா, அவ சொல்றதும் சரிதானே...ஆயாவும் என்னை சந்தேகப்படற மாதிரி...கண்காணிக்கற மாதிரிதான் தெரியுது...ஆனா,பெரிம்மா இருக்கறதாலே தப்பிச்சேன். சங்கீதாவை அவங்கம்மா சந்தேகமே படமாட்டாங்களாம். ஏன்னா, அவ எல்லாத்தையும் போய் அவங்கம்மாக்கிட்டே சொல்லிடுவாளாம்,ஒன்னுவிடாம. அதனலே அவங்கம்மா அவளை கண்காணிக்கவே மாட்டாங்களாம்.

நானும் ஆயாக்கிட்டே அப்படி சொல்லத்தான் டிரை பண்ணேன். எக்சாம் நடந்தப்போ ஒரு பையன் டெய்லி என்னை ஃபாலோ பண்ணான். நித்யா சொன்னா, ஒருத்தன் உன்னை ஃபாலோ பண்றானான்னு தெரிஞ்சுக்கணும்னா, நீ போகும்போது அங்கங்கே நில்லு, நீ நிக்கறப்போல்லாம் அவனும் நின்னான்னா அவன் உன்னைதான் ஃபாலோ பண்றான்னு. நானும் அன்னைக்கு அப்படி பண்ணேன். அப்புறம் டெலிபோன் எக்ஸ்சேஞ் கிட்டே நின்னப்போதான் திடீர்னு ஐடியா வந்தது. அதுக்கு நேரா ஒரு போலிஸ் ஸ்டேஷன் இருந்துச்சு. என்னை ஃபாலோ பண்றியான்னு கேட்டேன், அவன்கிட்டே. ஸ்கூல்லே பார்த்து இருக்கேன், அந்த மூஞ்சியை. ஆமான்னு சொன்னான். போலீஸ் ஸ்டேஷ்ன்லே சொல்லிடுவேன்னு சொன்னதும் சைக்கிள்லே டெலிபோன் எக்ஸ்சேஞ் சந்துக்குள்ளே போய்ட்டான். இத்தனைக்கும் அது ரூரல் போலிஸ் ஸ்டேஷன். எங்க மேல் வீட்டுத் தாத்தா அங்கே தான் வேலை செய்றார். எனக்கு ரொம்ப சிரிப்பா வேற வந்துது...ஆனா, அப்படி கேக்க எப்படி தைரியம் வந்துதுன்னு தெரியலை! ஆனா, இதை நான் ஆயாகிட்டே சொன்னதும் அவங்க என்னை பாராட்டிதானே இருக்கணும். ஆனா, என்மேலே இன்னும் சந்தேகம் பட்ட மாதிரிதான் தெரிஞ்சது. அதனாலே, நான் ஏன் ஆயாகிட்டே சொல்லனும்? என் ப்ரெண்ட்ஸ் கிட்டே நான் என்ன வேணா பேசிப்பேன்.

அன்னைக்கு பெரிம்மா பேங்க்குக்கு போய் டிடி எடுத்துட்டு வரசொன்னப்போ கேஷியர் அண்ணா என்னை பார்த்து சிரிச்சாரே...அவர் எங்க தெருவிலேதான் இருக்கார். அவரை நான் நிறைய வாட்டி பார்த்துருக்கேன்,ஷட்டில் விளையாடும்போது. அவங்க கோர்ட்லே விழுந்துடுச்சுன்னா எடுத்து போடுவார். அவர் எஸ்பிஐலேதான் வேலை செய்றார்ன்னு அப்போதான் தெரிஞ்சது. போஸ்ட் ஆபிஸ் போயிருந்தப்போ ஒரு ஆன்ட்டி என்னை பார்த்து சிரிச்சாங்க. நீதானே சந்தனமுல்லைன்னு கேட்டாங்க. 'டிவிலே பார்த்தேன்'ன்னு சொன்னாங்க. எனக்குதான் யாருன்னு தெரியலை.. வீட்டுலே ஷ்யாமும் பவானியும் பேசிக்கிட்டிருப்பாங்கன்னு.சொன்னாங்க. அப்போதான் தெரிஞ்சது -ஷ்யாமோட அம்மான்னு. பவானி ஷ்யாமோட தங்கச்சி.ஸ்கூல் ஆனுவல் டேலே நான் பேசினதை பார்த்தாங்களாம். அதை கேபிள்லே போட்டாங்க போல. அவங்கம்மா டாக்டர். நல்லா பேசினாங்க. ஆனா நான் வீட்டுலே சொல்லல..ஆயா திட்டுவாங்க..தெரியாதவங்க கூட என்ன பேச்சுன்னு!


ஷ்வேதா சொல்றா..ஆயாவை எல்லாம் கூட சமாளிச்சுடலாம்ப்பா...ஆனா அண்ணாங்கதான் ரொம்ப பயமாம். ஷ்வேதாவும் கவிதாவும் ஒரே ஸ்கூல். என் ட்யூஷன் ப்ரெண்ட்ஸ். ஷ்வேதா, ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சுட்டு கவிதா வீட்டுக்கு வந்துட்டு போனாளாம். வீட்டுக்கு போய் தண்ணி குடிக்க தம்ளரை எடுக்கும்போது அவங்க அண்ணா வந்து கையை பிடிச்சுக்கிட்டு 'எங்கே போனேன்னு சொல்லுன்னு'. 'குடிச்சுட்டு சொல்றேன், விடுண்ணா''ன்னு சொன்னாக்கூட விடலையாம்.'சொல்லிட்டு குடி'ன்னு கையை விடவே இல்லையாம். 'தண்ணி தாகம் எடுக்குது..குடிச்சுட்டு சொல்றேன்'னு சண்டை போட்டுக்கிட்டுருந்தப்போ அவங்கம்மா வந்ததும்தான் விட்டாங்களாம். கவிதா வீட்டுக்கு தான் போய்ட்டு வரேன்னு சொன்னப்புறம்தான் விட்டாங்களாம். நல்லவேளை எனக்கு அண்ணாங்க யாரும் இல்ல.ஆனா ஆயாதான்! ச்சே..நான் வேற வீட்டுலே பொறந்து இருக்கலாம். ஐரின் ஆண்ட்டி அமெரிக்கா போய்ட்டு வந்தாங்க இல்லே. அவங்க வீட்டுக்கு வந்தப்போ சொன்னாங்களே...'அமெரிக்காலேல்லாம் அம்மா அப்பா பசங்களை கண்டுக்கவே மாட்டாங்களாம்'. அவங்க இஷ்டத்துக்கு இருப்பாங்களாம். அப்புறம் பதினாறு வயசானா தனியா வீடெடுத்து போய்டுவாங்களாம். எனக்குக்கூட ஆசையா இருக்கு....


நானும் நல்லா படிச்சு தனியா எங்கியாவது வேலைக்கு போவேன்...அப்போ எனக்கும் நிறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க. ஜாலியா இருக்கும். இவங்க யாருக்குமே அட்ரஸ் தரவே மாட்டேன். நான் மட்டும் போன் பண்ணி பேசுவேன், ஆனா என் அட்ரசை சொல்லவே மாட்டேன். அப்போ, இவங்க எல்லோரும் என்னை தேடி பீல் பண்ணனும்...

குறிப்பு 1 : உண்மையில், இது ஒரு பக்கமல்ல...(எனது 14-15 வயதிருக்கும்போது என் வசமிருந்த) டயரியின் ஒரு சில பக்கங்களின் தொகுப்பு. 90களில் டீனேஜராக இருந்தால் பொதுவாக இந்த அனுபவங்கள்/ஃப்லீங்ஸ் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இப்போல்லாம் அம்மாக்கள்/ஆயாக்கள்/அண்ணாக்கள் மாறியிருக்கிறார்களாவென தெரியவில்லை - டீனேஜர்களும்தான்!

குறிப்பு 2
:
முத்துலெட்சுமி, அம்பிகா அக்கா, ஷ்ரேயா, சின்ன அம்மிணி - இவர்களின் டீனேஜ் டயரியின் ஒரு சில பக்கங்களை (விருப்பமிருந்தால் ) பகிர அழைக்கிறேன்.

Thursday, February 04, 2010

சினேகாவை ...

அனுப்பி வைக்கறீங்களா.... எங்க வீட்டுக்கு ஆஷிர்வாத் ஆட்டாவோட, ப்ளீஸ்?!

Tuesday, February 02, 2010

இ...இந்தியா, இண்டிபெண்டன்ஸ்..

இது குடியரசு தினத்தன்று பப்பு வரைந்தது. மாடலுக்கு எதையும் கொடுக்கவில்லை. முதலில் வெர்டிக்கலாக ஆரஞ்சை தீட்டிவிட்டு இப்படிதானே இருக்கும் என்று கேட்டாள். விட்டால் இத்தாலி கொடியை வரைந்துவிடுவாளோ என்று படத்தைக் காட்டியதும் மீதியை தீட்டினாள். அப்புறம் சக்கரத்திற்கு இடமில்லாததால் தனியாக உருண்டுக் கொண்டிருக்கிறது. காந்தி தாத்தா....மன்னிச்சுடுங்க!i எழுத்தில் இ இந்தியா, இண்டிபெண்டன்ஸ், இக்லூ, ஐஸ்க்ரீம், இன்செக்ட்ஸ் என்றாள்.
ஐஸ்க்ரீம் கோன் முதலில் ரஃபாக வரைய சொன்னேன். பின்னர் அதையே பெரிதாக இந்தத் தாளில் வரைந்து 'டிசைன்' செய்தாள். ஐஸ்க்ரீமிற்கு முதலில் பஞ்சு ஒட்டுவதாக நினைத்தோம். அவளுக்கு இந்த பொடி மேலே ஒரு கண். ஒட்டிவிட்டி தட்டுவதிலேயே விருப்பமாக இருந்தாள்.இது இக்லூ. புத்தகத்தை பார்த்து வரைந்தது. அதன்மேலேயே பஞ்சை எடுத்து ஒட்டினாள்.

Monday, February 01, 2010

பொண்ணு வளர்க்கறதுக்கும் பையன் வளர்க்கறதுக்கும்....

மூன்று வயதில் எனக்கு விளையாடக்
கிடைத்தன சிக்-சா படப்புதிர்கள்.
தம்பிக்கு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள்.
வாட்டர் கலர், பெயிண்டிங் புக், க்யூப் -களோடு பொழுது கழிந்தது
ஐந்து வயது வரை.
பேட்டரி கார், ரேஸ் கார்,பஸ், ட்ரக் -களோடு தூங்கினான்
தம்பி.
பிறந்தநாள்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தந்துவிட்டு போயின
ஃபேரி டேல் புத்தகங்கள்,
நீண்ட தலைமுடி கொண்ட பொம்மைகள்
மற்றும்
மட்பாண்டங்களோடு கேஸ் அடுப்பு.
தம்பியின் பிறந்தநாள்கள் கொண்டு வந்தன
ரிமோட் கார்கள், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் மற்றும் பைக்குகள்.
எனக்கு ரிங்பால் வாங்கியபோது
அவனுக்குரியதாயிற்று மட்டைபந்தும் கால்பந்துகளும்.
கண்காட்சிகளில்
கலைடாஸ்கோப்பும், அலுமினிய சமையல்செட்டும்
என்னை வந்தடைய
இரட்டைகுழல் துப்பாக்கியும், காமிராவும்
அவனுக்குரியனவையாகின.

இவை தவிர,
ஒன்றாய் விளையாட செஸ்ஸும் கேரமும் இருந்தாலும்
'நான் சொல்றா மாதிரி அடிக்கணும்' என்ற கண்டிஷனோடே
அமைந்தது கூட்டணி.
டூத்பிரஷ்களோ பென்சில் பாக்ஸ்களோ
வாங்கி வந்தது எதுவாயினும்
இளஞ்சிவப்பு நிறமே என்னுடையதாயிற்று.
இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்தது அவனுக்குரியது.
ஆண்டு விழாக்களில்
பாரதியார் வேடமும் கண்ணன் வேடமும்

அவனுக்குக் கிட்ட
பாரதமாதாவும் ஔவையார் வேடமும்
நான் தாங்கினேன்.

‘ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர்,
பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்'

அலுத்துக்கொண்ட கீழ்வீட்டு ஹரிஷ் அம்மாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தார் அம்மா
'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும்
நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!