Monday, April 12, 2010

சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம், மேனி நுடங்காது ...”

”நாடினேன்..நாடி ஓடினேன்...கண்டுகொண்டேன் நாராயணா என்னும் ...”


”பாலும் தெளிதேனும்...”

”அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை...”

வரிசையாக ஏழு குட்டீஸ் வயதுவாரியாக கையைக் கூப்பியபடி நின்றுக் கொண்டிருந்தோம். பெரிய அத்தை ஒவ்வொரு வரியாகச் சொல்லச் சொல்ல பின்னாலேயே சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தோம்.மாமா பித்தளை தீபாராதனை தட்டில் கற்பூரத்தை ஏற்றி எல்லா சாமிபடங்களுக்கும் காட்டி கீழே வைப்பார். பின்னர், தம்ளரிலிருக்கும் தண்ணீரை மூன்று தடவை தட்டிற்கு அரை வட்டமாக விரலாலேயே பாத்தி கட்டுவார். கற்பூரம் எரிந்துக் கொண்டிருக்கும். கொஞ்சம் உயரமாக எரிந்து நெருப்பின் சீற்றம் குறைந்து, கீழே தட்டுக்கும் மேலே எரிவதற்கும் நடுவில் ஒரு கருப்பான வெற்றிடத்தைக் காட்டியபடி லேசாக ஒரு நளின நடனம் ஆடி அடங்கும். தம்ளரிலிருக்கும் துளசி இலைகள் எல்லோர் கையிலும் கொடுப்பார் மாமா. வலது கையில் வாங்கி எச்சில் படாமல் தூக்கி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். கையில் ஒட்டியிருக்கும் தண்ணீரை தலையில் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு விபூதி - குங்குமம். பெரியவர்களுக்கு கையிலும், சிறியவர்களுக்கு நெற்றியிலும், கழுத்திலும் பூசி விடுவார். நெற்றியிலிருந்து கழுத்துக்கு பூச வரும்போது வாயை லேசாக திறந்தால் ஒரு சிட்டிகை வாயிலும் விழும். பெண்களாக இருந்தால் விபூதிக்குப் பிறகு குங்குமமும் வைத்துவிடுவார். தாத்தாவிற்கும்,இளங்கோ மாமாவிற்கும் தனிப்படையல். அப்போது மட்டும் ஆயா வந்து நிற்பார்.

வீட்டில் எதிர்பாராத இரண்டு பெரிய இழப்புகள்,அதைத் தொடர்ந்து ஒரு திருமணம், பிரச்சினைகள் என்று அடுத்தடுத்து நடந்ததன் காரணமாக ‘சாமி இருந்தா இப்படி நடந்திருக்குமா...சாமியே இல்லே'என்று வெறுத்துப் போயிருந்த வீட்டில் அத்தைகளும், குழந்தைகளும் வந்தபின்பு நடந்த முக்கிய மாற்றமிது. அதன் பக்க விளைவுகள்தான் இந்த 'வாக்குண்டாம்'.....அத்தைகளின் பெருமுயற்சிகளுக்குப் பிறகு மாமாக்கள் கொஞ்சமாக கொஞ்சமாக் மாறிக்கொண்டிருந்தார்கள்.அத்தைகள் கில்லாடிகள்தான். “எனக்கு நோம்பு கயிறு கிடைச்சிருக்கு, தீபாவளிக்கு நோன்பு வைக்கணும்” என்று பெரிய அத்தையும், ”கிழக்காலே வயல் மூலையிலே கிடைச்ச சிலை, விடாம வச்சிப் படைக்கணும்” என்று சின்ன அத்தையும் ஆரம்பித்து, வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகள், சனிக்கிழமைகள், நினைவுதினங்கள், சதுர்த்திகள்,அமாவாசைகள், தீபாவளி , பாம்பு பஞ்சாங்கத்திலிருக்கும் இன்னபிறவெல்லாம் பரபரப்பாக கொண்டாடப்பட்டன. எங்களுக்கு கேட்கவா வேண்டும், கும்மாளமும் கொண்டாட்டமும்தான்.

நடுவில் எதையோ விட்டுவிட்டேனே..ஆமாம், பாட்டுல்லாம் பாடி முடிந்ததும் கற்பூரம் எரியும்போது மாமா,அத்தை,அம்மா எல்லோரும் கண்மூடி கை கூப்பி நிற்பார்கள். நாம் முழித்து பார்த்துக்கொண்டிருந்தோமானல் சைகையாலேயே கண்ணை மூடி கையை கூப்பச் சொல்லுவார்கள்.ஆனால் என்ன வேண்டிக் கொள்ளணுமென்றுதான் தெரியாதே...”சாமி நான் நல்லா படிக்கணும், எனக்கு நல்ல புத்திக் கொடுங்க”என்று வேண்டிக்கொள்ள சொல்லிக்கொடுத்தார்கள். நானும் போகிற கோயில்களிலெல்லாம் சத்தம் போட்டு (லைப்ரரிலே படிச்சனே அந்தக் கதைதான்!)வேண்டிக்கொண்டு நிற்பேன். அநேகமாக அது முதல் வகுப்பென்று நினைவு. அதுதான் சாமியிடம் கண்மூடி சிரத்தையாக வேண்டிக்கொண்டது. அப்போதும் சாமி என்பவர் பெரியவர்.. கோயிலுக்குள் இருப்பார். நாம் கேட்டதைக் கொடுப்பார்.அப்புறம் நான் நல்லா படிக்கணும்..நல்ல புத்தி கிடைக்கணும். மனதில் பதிந்தது அவ்வளவுதான்...இப்படி சாமி எனக்கு அறிமுகமானது வடலூரில்தான்.

ஒருமுறை, விளையாட்டில் சண்டை வந்தபோது நானும் சுஜாக்காவும் ப்ரெண்ட்சாகி விஜிக் கூடவும் சசி கூடவும் டூ விட்டோம். அப்போது நாங்களிருவரும் 'விஜிக்கு ஜூரம் வரணும்' என்று வேண்டிக்கொண்டதுதான் சாமி எனக்குக் கொடுத்த நல்ல புத்தி. மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் புலப்பட்டதும் அப்போதுதான். நல்லவேளையாக விஜிக்கு ஜூரமெல்லாம் வரவில்லை. சாமி ஒரு உண்மையான பக்தையை இழந்துவிட்டார்.இதெல்லாம் வடலூரில் விடுமுறை நாட்களில்தான்.


பெரியப்பாவின் நினைவுதினத்துக்காக, திருவண்ணாமலை ரமணாசிரமம் போகிற பழக்கம் இருந்தது.ஆசிரமத்திற்கு எதிரில் அவர்களது காட்டேஜில் நான்கு நாட்கள் வாசம். ஒரு மாதத்திற்கு முன்பே லெட்டர் போட்டால் நமது பெயரில் புக் செய்துவிடுவார்கள். அப்போதெல்லாம் ரமணாஷ்ரமம் அவ்வளவாக பிரசித்தி அடையவில்லை. இளையராஜால்லாம் அங்கே போக ஆரம்பிக்காத நேரம். நினைவு நாள் அன்று அன்னதானம் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருப்பார்கள். அங்கு ஆன்மீகத் தேடலைவிட எங்களுக்கு ஆங்கிலப் புலமையையும் இந்திப் புலமையையும் காட்டி வெள்ளைக்காரர்களை நண்பர்கள் பிடிப்பதே பொழுதுபோக்கு. அம்மா, பெரிம்மா, ஆயா, சாந்தா அத்தை எல்லாரும் தியான மண்டபத்திற்கும் பஜனையிலும் நூலகத்திலுமாக இருக்க நாங்கள்
வெள்ளைக்காரர்களையும், குஜராத்திக்காரர்களையும் ராமலிங்க சாமி ஜோதியாக மறைந்ததையும், அவர் ரகசிய சுரங்கப்பாதை வழி நடந்தே திருச்சிற்றம்பலத்திற்கு சென்றதையும், ஒரே நேரத்தில் சென்னையிலும் கருங்குழியிலுமாக காட்சி தந்ததையும் சொல்லி தனிச்சானல் ஓட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஏதோ ராமலிங்கசாமியையே நேரில் கண்டு விட்டவர்களாகவே நினைத்துக்கொண்டு மரியாதையாக நடத்துவார்கள். அவர்களது நண்பர்களிடம் அறிமுகப்படுத்துவார்கள். அதுவும் போரடித்தால், தியான மண்டபத்திற்கு அருகாமையில் இருக்கும் குளத்தில் கல்லெறிந்துக் கொண்டோ, அங்கே உலவும் மயில்கள் எப்போது தோகை போடுமென்றோ அல்லது லஷ்மி பசுவின் சமாதியைத் தாண்டி இருக்கும் மலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டோ பொழுதைக் கழிப்போம்.


ஆம்பூரில் எல்லா சாமிக்கும் தடா. சாமி படங்களோ சம்பிரதாயங்களோ கிடையாது. எல்லா நாளும் நல்ல நாளே..எல்லா நேரமும் நல்ல நேரமே. சாமியும் கிடையாது, பூதமும் கிடையாது என்பதே நம்பிக்கை.அந்த நம்பிக்கையை யாரும் எங்கள் மேல் திணித்தது இல்லை. சாமி இருக்கிறாரென்ற நம்பிக்கையையும் யாரும் எங்கள் மேல் திணிக்கவும் இல்லை. எப்போதும் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் இருந்தது. யாராவது என்னையும் தம்பியையும் கோயிலுக்கு கூட்டிப் போகிறேன் என்று சொன்னால் அனுமதி கிடைத்திருக்கிறது. சாந்தா அத்தை அல்லது குணா அத்தையோடு துணைக்குக் கோயிலுக்கு சென்று அவர்களோடு நவக்கிரகங்களை சுற்றியிருக்கிறேன்.

பெரியப்பாவின் நண்பர் மூலம் வீட்டுக்கு வந்த “இயேசு அழைக்கிறாரை” ஒரு இதழ் விடாமல் படித்திருக்கிறேன். எதிர் வீட்டுக் கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டுக்குச் சென்று ஜெபங்கள் செய்திருக்கிறேன். அவர்களைப் போல கண்ணீர் விட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவர் என் பேரையும் ஜெபத்தில் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். 'இயேசு அழைக்கிறார்' நின்று போனபின் அவர்கள் வீட்டிலிருந்து பைபிள் வாங்கி வாசித்திருக்கிறேன். கொஞ்ச நாட்கள் யோகா கற்றுக்கொண்டபோது தியானமெல்லாம் செய்து ஒரு ஞானி தோற்றமெல்லாம் கொடுத்திருக்கிறேன். கணக்கு பரீட்சைக்கு எந்த கேள்வி வர வேண்டுமென்று தியானித்திருக்கிறேன். எல்லாம் கொஞ்ச நாட்கள்தான்.

சாமி இல்லையென்று வாதிட முடியாதது போன்று இருக்கிறாரென்று நம்பவும் முடியவில்லை. ஆனால், சிலை வடிவத்திலோ அல்லது எட்டு கை,நாலு தலை கொண்டோ இருக்குமென்றும் நம்ப முடியவில்லை.மேலும் வீட்டிலிருந்த தி.க புத்தகங்களையும் 'உண்மை' இதழையும் படித்து கடவுளர்கள் மேலேயும் இந்து மதத்தின் மேலேயேயும் எனக்கு வெறுப்பு வந்திருந்தது. (அதுவும் ‘கடவுளர்கள் பிறந்த கதை”ன்னு ஒரு புக் இருக்கும்..செம ROTFL புக்.)

மேலும்,எப்போதும் எனக்கு மற்றவர்களை வித்தியாசமாக இருக்கப் பிடிக்கும். அதனால், எல்லோரும் விழுந்து விழுந்து சாமி கும்பிடும்போது வித்தியாசத்திற்காக சாமி கும்பிடாமல் இருக்கப் பிடித்திருந்தது. டீனேஜ் வந்தபோது எல்லாவற்றும் rebelliousஆன குணம் வந்திருந்தது.அடையாளங்கள் எதுவும் இல்லாத அடையாளத்தையே விரும்பியிருக்கிறேன்.” ஒரு மதத்தை பின்பற்றித்தான் நல்ல விஷயங்களை கத்துக்கணும்னோ இல்லே அந்த மதத்தைச் சார்ந்து இருந்தாத்தான் நல்லவங்களா இருக்கமுடியும்னோ இல்லே, எங்கேயிருந்தாலும் அதை எடுத்துக்கலாம், முடிவா மனுஷங்களா இருக்கணும்” என்று எங்களை வளர்த்தது பெரிம்மாதான். சடங்குகள், அதனைக் குறித்தான அலட்டல்கள் பற்றியும் லேசான தெளிவு இருந்தது.


Happy Go lucky girl-ஆக இருந்த எனக்குள்ளும் தேடல்கள்,பயங்கள், தயக்கங்கள், உள்மனப் போராட்டங்கள், வெளிப்போராட்டங்கள், மனக்குழப்பங்கள், சுற்றியிருந்தவர்களுடன் பிரச்சினைகள்...சண்டைகள் குறிப்பாக - டீனேஜில் இல்லையென்று சொன்னால் நான் பொய் சொன்னவளாவேன். பெற்றோரிடம் , எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிடுவீர்களா தெரியவில்லை.. என்னால் முடியாது. சொல்லியிருந்தாலும் என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடியவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் இருந்துக்கொண்டே இருந்தாலும், அவர்கள் யாராலும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது.


எதிர்காலம் குறித்தும், ”எப்படி இருக்கும், நான் நல்லா இருப்பேனா” என்று கலக்கம் வந்திருக்கிறது. தேவையற்ற கவலைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். சில சமயங்களில் ஸ்தம்பித்திருக்கிறேன்..சமயங்களில் சோர்ந்து முடங்கி அமர்ந்திருக்கிறேன்.. ”டோண்ட் கிவ் அப், டோண்ட் கிவ் அப்” என்று முற்றிலும் எல்லாவற்றையும் அறிந்த யாராவது என்னிடம் சொல்லமாட்டார்களா என்று எண்ணியிருக்கிறேன். ”ஆச்சி, யூ ஆர் கோயிங் டு லிவ் அ க்லோரியஸ் லைஃப்” - என்றும் ”நான் இருக்கேன், நீ பயப்படாம இரு” என்று உத்திரவாதம் கொடுத்து பொறுப்பெடுத்துக்கொள்பவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று உள்ளுக்குள் தேடியிருக்கிறேன். பிரச்சினைகளின்போது, 'Things are gonna be alright'...'everything is gonna be fine here'..என்று என்னை அமைதிப்படுத்த ஆற்றுப்படுத்த மனிதர்களைத் தாண்டி யாரையோ எதையோ எதிர்பார்த்திருக்கிறேன்.

உண்மையில், எனக்குள் இருந்த பயங்களை நானேதான் தின்று செரிக்க வேண்டியிருந்தது. என்னை நானேதான் ஆற்றுப்படுத்திகொள்ள வேண்டியிருந்தது. எனது தோல்விகளை, அவமானங்களை நானேதான் கடந்து வர வேண்டியிருந்தது. வாழ்க்கையின் குறுக்குரோட்டில் நின்றபோது எனக்கான திசைகளை நானேதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. நான் செய்வது சரியா, சரியாகச் செய்கிறேனா என்றெல்லாம் குழப்பங்கள் வந்தபோது நானேதான் பட்டுத் தெளிய வேண்டியிருந்தது. உண்மையில் யாரும் யாருடனும் இல்லை, இருக்கவும் முடியாது என்று நானாகவே உணர வேண்டியிருந்தது. என் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டியது நானேதான் என்ற முடிவுக்கும் வந்திருந்தேன்.

அந்த சமயத்தில்தான் எனக்குக் கிடைத்தது, எம் எஸ் உதயமூர்த்தியின் ”எண்ணங்கள்” புத்தகமும், அதைத் தொடர்ந்து ராபர்ட் ஷெல்லர் மற்றும் நார்மன் பீலே புத்தகங்களும். எல்லாம் தன்னம்பிக்கை டானிக்குகள்தான். பாசிடிவ் அப்ரோச்சை பைபிளின் மூலாதாரத்தைக் கொண்டு எழுதப்பட்டவை. இந்து மதமே பிடிக்காமல் இந்து மத அடையாளங்களையே வெறுத்த எனக்கு இது பிடித்திருந்தது.

முகிலுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால், என்னை வற்புறுத்தியது இல்லை. I juz love the way he understands me. முகில் என்னை புரிந்துக்கொண்டதைப் போல வேறு யாராவதாக இருந்தால் புரிந்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. இப்போதும், நான் ஆம்பூரிலிருந்ததைப் போலத்தான் இருக்கிறேன். இன் லாஸ்-களின் விருப்பத்திற்காக இருவரும் ஒருமுறை திருப்பதி சென்றதுண்டு. அதைத் தாண்டி, ஒன்றாகக் கோயிலுக்கெல்லாம் சென்றது இல்லை. ஊருக்குச் சென்றால் கண்டிப்பாகக் குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்வது வழக்கம். மாமியாரை புண்படுத்திவிடாமலிருக்க அங்கே சில காம்ப்ரமைஸ்களை செய்வதுண்டு. ( அவர் வைத்துவிடும் குங்குமத்தையும், பூஜைக்குப் பின் துப்பட்டாவில் வாங்கிக்கொள்ளச் சொல்லும் பூ,தேங்காய்,பழம்...முதலியன.)

நாங்கள் வாழும் வீட்டிலோ அல்லது வாழ்க்கைமுறையிலோ எந்த அடையாளங்களும், சம்பிரதாயங்களும் இல்லை. எந்த சம்பிரதாயங்களோ நம்பிக்கைகளாலோ கட்டிப்போட்டுக்கொள்ளாமல் ஃப்ரீயாக இருக்கப் பிடித்திருக்கிறது. இதே மனநிலை எப்போதும் வாய்க்கவே விரும்புகிறேன்.எல்லா நாட்களும் ஒன்று போலவேதான் விடிகிறது எங்களுக்கு. அம்மா அல்லது மாமியார் வந்தால் மட்டுமே பூஜை அலமாரி தூசு தட்டப்படும்.பப்புவும் அவர்களுடன் சேர்ந்துக்கொள்வாள். சொல்லப்போனால், ஒரு ரெகுலரான பூஜையை பப்பு இதுவரை பார்த்ததே இல்லை,நானும்தான். ஏன், சாமியின் பெயர் கூட அவளுக்கு இதுவரை தெரியாது. அம்மாவுடன் சேர்ந்து பாடல்கள் ('வாக்குண்டாம்....LoL') பாடுவாள். மாமனார் வந்தால் பப்புவை கோயிலுக்கு அழைத்துச் செல்வார். விபூதி /குங்குமத்தைப் பார்த்தால் வைத்துக்கொள்கிறாள். எதையும் நாங்கள் தடுப்பதுமில்லை. ஊக்கப்படுத்துவதுமில்லை. 'சாமி கண்ணு குத்திடும்' என்று சாமியை வைத்தும் பயமுறுத்தியதில்லை. என்னையே யாரும் அப்படி செய்யாதபோது நான் என் மகளுக்குச் செய்வேனா?ஒரு அவியல் ஃபேமிலியில் வளர்ந்த எனக்கும் எப்போதாவது கேள்விகள்/ குழப்பங்கள் எழுந்திருக்கிறது. (ஒருவேளை இதுதான் ஆன்மீகத் தேடலோ?) ' நான் ஏன் இந்த வீட்டுலே பொறந்தேன்' (ச்சே, பேசாம நாம் வேற வீட்டுலே பொறந்திருக்கலாம்டா, குட்டி!!)...'நிஜமா மறுபிறவி இருக்கா'...'இறந்த பிற்கு என்ன ஆவேன்' ..' எதுக்காக நான் பிறந்தேன்'... 'மனசு உண்மையா'..'மூளை உண்மையா'..'ரெண்டும் ஒண்ணா'..இல்லே 'உணர்வுகள்தான் நானா'... 'இந்த உணர்வுகள், நினைவுகள் மட்டும்தான் நானா'... 'ஏன் ஒரு சிலருக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா இருக்கு..ஒரு சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினையா இருக்கு' - ஆனா இதுக்காக ரொம்பவெல்லாம் மெனக்கெட்டது இல்லே. வாழ்க்கையை புரிஞ்சுக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?

ஆயாவின் ஐந்து பிள்ளைகளுள் என் அம்மாதான் கடைசி. அம்மாவை உண்டான போது, ‘இது வேண்டாமெ'ன்று ஆயா மருந்து சாப்பிட்டாலும் மீறி பிறந்திருக்கிறார் அம்மா. (அதுதான் எங்கம்மா கலர் கம்மியானதுக்கு காரணமாம். LoL)

அப்படி பிறந்த அம்மா, என்னை பெற்றபோது “பொண்ணா” என்று என்னைப் பார்க்காமலேயே நிராகரித்து ஹாஸ்பிடல் வார்டைத் தாண்டிச் சென்றவர் என் அப்பாவழி தாத்தா.

25 வருடங்கள் கழித்து, அவர் என்னைப் பார்க்க வந்தபோது அவரை நான் நிராகரித்தேன்.

அப்பா இறந்தபிறகு, 'சொத்துகளில் பாத்தியதைக் கொண்டாட மாட்டேனெ'ன்று கையெழுத்து கேட்க வந்தவரை நிராகரித்து, 'கையெழுத்து போடமாட்டேன், ஆனால் அதே சமயம் சொத்துகளில் பங்கு கேட்கவும் மாட்டேனெ'ன்று சொல்லி அனுப்பினேன்.

'எவரும் எவருடைய வாழ்க்கையையும் தீர்மானித்துவிட முடியாது' என்றபடி தன்போக்கில் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

”குத்துவிளக்காக,குலவிளக்காக” என்று முன்பு எழுதிய இடுகையில் 'வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன்', அதைப்பத்தி அப்புறம் பார்ப்போம்ன்னு எழுதியிருந்தேன். அதனை ஒட்டி எழுத வாய்ப்பளித்த தீபாவிற்கு நன்றிகள்! தொடர்வதற்கு நான் அழைக்கவிரும்புவது,

'ஆன்மீகச் செம்மல்' ஆயில்ஸ்
'அம்மன் எஃபெக்ட்' அமித்து அம்மா
நோயாளிகளின் பிணி தீர்க்கும் பூங்குழலி
என் செல்ல G3
சாமியாடிய சின்ன அம்மிணி
பதிவில் கண்ணாமூச்சு விளையாடும் தீஷுக்குட்டி

34 comments:

Rithu`s Dad said...

வாழ்த்துக்கள் முல்லை. அருமையாக பதிவுகிறீர்கள்...

சுவாரசிய மற்றும் தெளிவான பதிவுகளால் அடுத்த தளத்திற்க்கும் சென்றுவிட்டீர்கள்..

இனியும் சும்மா யாரும் வந்து வெரும் ஸ்மைலியும் .. மீ த பர்ஸ்ட்டே வும் மட்டும் கமொண்ட் இட முடியாது..

உங்கள் பதிவுகள் படிப்பவர்களும் இனி அடுத்த தளத்திற்க்கு மேலேறீனாலே பின்னுட்டமும் இட முடியும்.. :)

உங்களை அறிந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்..

தமிழ் பிரியன் said...

Nice post!

தமிழ் பிரியன் said...

Intro for ayilman... :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

nice to read mullai

அம்மன் எஃபெக்ட் :) செம்ம டைட்டில்... நல்லாவே சிரிச்சேன்.

உங்க பதிவு கொஞ்சம் சிந்திக்கவும் வைத்தது, உடல்நிலை ஒத்துழைத்தால் கட்டாயம் எழுதுகிறேன்.

குறிப்பு: ரித்தூஸ் டேட் அவர்களின் பின்னூட்டத்தையும் வழிமொழிகிறேன். சமீபத்திய உங்கள் பதிவுகளில் தெரியும் முதிர்ச்சி, தட்ஸ் லைக் தட் படித்துவிட்டு போகாமல்
கொஞ்சம் யோசிக்கவும் செய்கிறது. ஹாட்ஸ் ஆஃப்.

Uma said...

//முகிலுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால், என்னை வற்புறுத்தியது இல்லை. I juz love the way he understands me. முகில் என்னை புரிந்துக்கொண்டதைப் போல வேறு யாராவதாக இருந்தால் புரிந்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே.// I am very happy for you.
//'எவரும் எவருடைய வாழ்க்கையையும் தீர்மானித்துவிட முடியாது' என்றபடி தன்போக்கில் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை!//
Very well written! Thanks Again.

சின்ன அம்மிணி said...

நல்ல டாபிக். சீக்கிரமே எழுதறேன் :)

ஆயில்யன் said...

//உங்கள் பதிவுகள் படிப்பவர்களும் இனி அடுத்த தளத்திற்க்கு மேலேறீனாலே பின்னுட்டமும் இட முடியும்.. :)//

மீ த டிரை டூ ஏறியிங்க்தட் படி

[அப்ப நானெல்லாம் இனி ஆச்சி பதிவுக்கு வரவேமுடியாதா...?]

சொல்லொண்ணா துயரத்துடன் [ஸ்பெல்லிங்க் கரீக்டா?]
ஆயில்யன்

ஆயில்யன் said...

//ஆச்சி, யூ ஆர் கோயிங் டு லிவ் அ க்லோரியஸ் லைஃப்” - என்றும்//

எனக்கும் சின்னவயசுல -சாமி கும்பிடாம இருக்கிறப்ப சொல்லிக்கிடுவேன் பட் அர்த்தம் புரியாதா? இங்கிலீசு தெரியாதுல்ல!! உடனே “ஓ”ன்னு அழுதுடுவேனாம் கொஞ்சம் கொஞ்சமா இங்கீலிசு கத்துக்கிட்டப்ப சாமி கும்பிடவும் ஆரம்பிச்சிட்டேனா இப்பவெல்லாம் அழறதே இல்ல ! அர்த்தமும் புரியுது!

ஆயில்யன் said...

டூ மிஸ்டர் தமிழ்பிரியன்

ராசா நான் நோ ப்ராபள்ம் எப்பிடி திட்டினாலும் ஏத்துகுவேன் எனக்கு அடுத்த வரியில ஒரு டெரர் இருக்காங்க பாரு அவுங்க..!

பாவம் ஆச்சி :))))))))))))))))

ராமலக்ஷ்மி said...

உங்கள் வழியில் நீங்கள் தெளிவாய் இருப்பது பிடித்திருக்கிறது முல்லை.

கண்ணகி said...

முல்லை..உங்கள் மனமும் அறிவும் கேட்கும் கேள்விகளை அழகாய் ஆழமாஇ பதிவு செஞ்சுருக்கீங்க..

ராஜன் said...

மன்னிச்சுருங்க தெரியாம வந்துட்டேன் ! அவ்வ்வ்வவ்

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா... கொஞ்சம் பெரிசா இருந்தாலும் நல்ல பதிவு பாஸ்

பின்னோக்கி said...

கடவுள் உங்களுக்கு அருள் பாலிக்கட்டும். வாழ்த்துக்கள்.

செல்வநாயகி said...

நல்ல பதிவு.

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...
//உங்கள் பதிவுகள் படிப்பவர்களும் இனி அடுத்த தளத்திற்க்கு மேலேறீனாலே பின்னுட்டமும் இட முடியும்.. :)//

மீ த டிரை டூ ஏறியிங்க்தட் படி

[அப்ப நானெல்லாம் இனி ஆச்சி பதிவுக்கு வரவேமுடியாதா...?]

சொல்லொண்ணா துயரத்துடன் [ஸ்பெல்லிங்க் கரீக்டா?]

/

Repeatttuuuuu...

G3 said...

Sollitteenga illa.. ezhudhiruvom :))))

அம்பிகா said...

நல்ல இடுகை முல்லை.
உங்கள் கருத்துக்களை தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள், முல்லை
\\எதிர்காலம் குறித்தும், ”எப்படி இருக்கும், நான் நல்லா இருப்பேனா” என்று கலக்கம் வந்திருக்கிறது. தேவையற்ற கவலைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். சில சமயங்களில் ஸ்தம்பித்திருக்கிறேன்..சமயங்களில் சோர்ந்து முடங்கி அமர்ந்திருக்கிறேன்..\\
எல்லோருக்குமே இப்படியான சூழ்நிலைகள் அமையும் போல.
நானேதான் பட்டுத் தெளிய வேண்டியிருந்தது. உண்மையில் யாரும் யாருடனும் இல்லை, இருக்கவும் முடியாது என்று நானாகவே உணர வேண்டியிருந்தது.

\\நானேதான் பட்டுத் தெளிய வேண்டியிருந்தது. உண்மையில் யாரும் யாருடனும் இல்லை, இருக்கவும் முடியாது என்று நானாகவே உணர வேண்டியிருந்தது.\\

அருமை முல்லை.

அமைதிச்சாரல் said...

//மனசு உண்மையா'..'மூளை உண்மையா'..'ரெண்டும் ஒண்ணா'..இல்லே 'உணர்வுகள்தான் நானா'... 'இந்த உணர்வுகள், நினைவுகள் மட்டும்தான் நானா'... 'ஏன் ஒரு சிலருக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா இருக்கு..ஒரு சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினையா இருக்கு//

ஆச்சி, இதெல்லாம் நீங்க...நீங்களே யோசிச்சீங்களா!!!!

சிங்கை நாதன்/SingaiNathan said...

அவ்வ்வ்வ் .......... எங்கே எனது கவிதை சே... பின்னூட்டம்???

@ஆயில்யன் இதத்தான்யா நானும் மொதல்லியே சொன்னேன் ..

அப்பொ நீங்க , நிஜமா நல்லவரு அப்புறம் ஜமால் எல்லாரயும் நெனச்சுகிட்டேன்.நல்லவரும் ரிபீட்டிட்டாரு.ஜமால் எங்கே ??

அன்புடன்
சிங்கை நாதன்

Deepa said...

நன்றி முல்லை! நான் மொக்கையா ஆரம்பிச்சு வைச்ச பதிவை இவ்வளவு சுவாரசியமா மாத்தினதுக்கு.

//அப்போது நாங்களிருவரும் 'விஜிக்கு ஜூரம் வரணும்' என்று வேண்டிக்கொண்டதுதான் சாமி எனக்குக் கொடுத்த நல்ல புத்தி.//
இது, இது, இது தான் முல்லை! :))))))

//எதிர் வீட்டுக் கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டுக்குச் சென்று ஜெபங்கள் செய்திருக்கிறேன். அவர்களைப் போல கண்ணீர் விட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவர் என் பேரையும் ஜெபத்தில் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும்.// அழ‌கு! சின்ன‌ச் சின்ன‌ விஷ‌ய‌ங்க‌ள். நினைவு வைத்துக் கோர்க்கும் போது எவ்வ‌ள‌வு அழ‌காக‌ இருக்கிற‌து.

//உண்மையில், எனக்குள் இருந்த பயங்களை நானேதான் தின்று செரிக்க வேண்டியிருந்தது. என்னை நானேதான் ஆற்றுப்படுத்திகொள்ள வேண்டியிருந்தது. எனது தோல்விகளை, அவமானங்களை நானேதான் கடந்து வர வேண்டியிருந்தது.//Hats Off Ma'am!

பூங்குழலி said...

அப்போது நாங்களிருவரும் 'விஜிக்கு ஜூரம் வரணும்' என்று வேண்டிக்கொண்டதுதான் சாமி எனக்குக் கொடுத்த நல்ல புத்தி. மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் புலப்பட்டதும் அப்போதுதான். நல்லவேளையாக விஜிக்கு ஜூரமெல்லாம் வரவில்லை. சாமி ஒரு உண்மையான பக்தையை இழந்துவிட்டார்.


ரொம்ப தெளிவான பதிவு .அழகான கதம்பம் போலிருக்கிறது

அமுதா said...

ரொம்ப தெளிவான பதிவு. நன்றாக எழுதி உள்ளீர்கள்

அகஆழ் said...

அருமையான பதிவு...பார்த்துப் பழகிய ஒரு சிந்தனைக்கு எதிரான ஒன்றை நாம் பற்றிக்கொள்வது தான் நமக்குள் நாம் நடத்தும் மிகப் பெரிய போராட்டம்.

இதே நிலையில் நானும் இருந்ததால் மேலும் அதை உணரமுடிகிறது.

The Analyst said...

Cool Post! Very nicely written.

வானமே எல்லை said...

The writing, interweaving of info & concepts, candid views, clear narration, Even the caption - Very Nice Comrade, Hats off to you,

Ullam Ketkuthe More.

பைத்தியக்காரன் said...

அன்பின் ஆச்சி,

கடவுளை என்னவாக நாம் பார்க்கிறோம் என்பது ஒருவகை. கடவுள் என்னவாக நமக்கு காட்சியளிக்கிறார் அல்லது உணர்த்துகிறார் அல்லது வாழ்க்கையில் வருகிறார் என்பது 2வது வகை. நீங்கள் இரண்டாவது வகையை தொட்டிருக்கிறீர்கள். அதனாலேயே இடுகையின் பகுதிகள் உங்கள் உள்ளுணர்வை பிரதிபலிக்கின்றன.

முகிலை குறித்து நீங்கள் விவரித்திருக்கும் விதம் - நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை அவர் ஏற்றிருக்கும் விதம் - அழகு. மேட் ஃபார் ஈச் அதர் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

இரசிகை said...

nallaayirukkunga......mullai!

அரசூரான் said...

அருமை, நல்ல பகிர்வு.

நாதன், ஜமால் தமிழகம் சென்றிருக்கிறார் என நினைக்கிறேன்.

கலை said...

நல்லா எழுதியிருக்கிறீங்க. இங்கே பல விசயங்கள் என்னோட எண்ணங்களை பிரதிபலிச்சிருக்கு.

(அட, அந்த குட்டீஸ் விடயம், மறந்தே போனேன். பார்க்கணும் :) )

ஊரான் said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

தோழமையுடன்

ஊரான்.

ஆமினா said...

தமிழ்மண விருது நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

தமிழ்நதி said...

நன்றாக எழுதுகிறீர்கள் சந்தனமுல்லை. இயல்பான, பாசாங்குகள் அற்ற எழுத்து... உங்களை புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன் என்று நினைக்கிறேன். வழக்கம்போலவே தயக்கம்... வந்து பேசவில்லை.

தமிழ்மணத்தில் இரண்டு பிரிவுகளில் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள் தோழி.

Samudra said...

வாழ்த்துக்கள்